Language Selection

நூல்கள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times


காந்தியும் நேருவும் ஜின்னாவும் பிரிட்டிஷாருக்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுத்தனர். காங்கிரசுக் கட்சிக்குள்ளேயே இருந்த ஒரு பிரிவு சுபாஷ் போஸ் தலைமையில் பாசிச ஜெர்மானிய ஜப்பானிய முகாமை ஆதரித்து பிரிட்டிஷாரை எதிர்த்தது. தனது முழு ஆதரவையும் பிரிட்டனுக்குத் தெரிவிக்க காந்தி வைசிராயைச் சந்தித்தார். பின்னர் அதைப்பற்றிப் பின்வருமாறு எழுதினார்: "நான் அவருக்கு (வைசிராய்க்கு) பிரிட்டிஷ் பாராளுமன்றமும் அமைச்சரவைத் தலைமையகமும் அழிக்கப்படக் கூடிய வாய்ப்பு பற்றிய சித்திரத்தை விளக்கிய போது நான் நெஞ்சுருகிப் போனேன்.'' (செப்.5, 1939)


எப்படிப் பாருங்கள்! யுத்தத்தின் காரணமாக இந்திய மக்கள் கொடூரமாக அடக்கி ஒடுக்கிச் சுரண்டப்படுவதைக் காட்டிலும் இங்கிலாந்து நாட்டின் பாராளுமன்றம் அழிந்து போய்விடலாம் என்பதைப் பற்றி நினைத்துப் பார்க்கையிலே அழுதுவிட்டாராம்! காந்தியின் இதயத்தில் பிரிட்டன் கட்டிடங்கள் பெற்ற இடத்தைக் கூட இந்திய நாட்டு மக்கள் பெறவில்லைதான்!


இந்தக் காலகட்டங்களில் காங்கிரசு கட்சி யுத்தத்தை எதிர்த்தோ அல்லது சுதந்திரத்திற்காகவோ ஒரு துரும்பைக்கூட எடுத்துப் போடவில்லை. "பிரிட்டன் ஜீவமரணப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது அதை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தைத் துவக்குவது இந்தியாவின் கௌரவத்திற்கே இழிவு ஏற்படுத்தும் செயலாகும்.'' "மனிதருள் மாணிக்கம்' நேருவின் "மனித நேயத்தை' எடுத்துக் காட்டும் சொற்கள்தான் இவை. இதே நேரத்தில் காந்தி "நாங்கள் பிரிட்டனுடைய அழிவிலிருந்து எங்களது சுதந்திரத்தைத் தேடவில்லை'' என்று அறிவித்தார். அதுமட்டுமின்றி பிரிட்டன் ஒரு நியாயமான லட்சியத்திற்காகப் போராடுவதாகவும், அதற்கு இந்தியா நிபந்தனையற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் எனவும் அறிவித்தார்.


"ஆகையால் நான் இப்போது இந்தியாவின் விடுதலையைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கவில்லை. அது கட்டாயம் வரும். ஆனால் இங்கிலாந்தும், பிரான்சும் வீழ்ந்துவிட்டால் என்ன ஆகும்?'' (ஹரிஜன், செப்.9, 1939)


காந்தியாரின் ஏகாதிபத்திய அடிவருடித்தனத்துக்கு இதைவிடத் தெளிவான எடுத்துக்காட்டு தேவையா? காந்தியும் காங்கிரசும் பிரிட்டிஷ் அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு நல்கியபோதிலும் யுத்தத்தின் போக்கு இவர்களை யோசிக்க வைத்தது; திடீரென "வெள்ளையனே வெளியேறு' என்று முழங்குமளவு தூண்டியது. இந்த முழக்கத்தைக் கொண்டு காந்தியாரை தேச பக்தன் என்று எவராவது கூறினால் அது ஒன்று, அவரது அறியாமையாக இருக்க வேண்டும்; இல்லையெனில் நம்மை ஏமாற்றக் கூறப்பட்டவையாக இருக்க வேண்டும்.


ஏன்? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அழிவைக் கண்டஞ்சி கண்ணீர் சிந்திய தேசத் தந்தை, உலகப் போரின் ஒரு கட்டத்தில் பாசிச ஜெர்மானிய ஜப்பானிய முகாமின் விரைவான வெற்றியைக் கண்டு இந்திய நாடு அவர்களின் கைக்கு மாறிவிடும் எனக் கணித்தார். ஒருவரோடு ஒருவர் முரண்பட்டு நின்ற காந்தியும் சுபாஸ் போசும் இப்போது ஒருவரையொருவர் புகழ்பாடத் தொடங்கினர். பாசிஸ்டுகளை ஆதரிக்கும் நோக்கில் "வெள்ளையனே வெளியேறு' இயக்கம் துவக்கப்பட்டது. அதேசமயம் நேரு, ராஜாஜி, ஆசாத் போன்றோர் பிரிட்டனே இறுதியில் வெல்லும் எனக் கணித்தனர்.


இந்த ஏகாதிபத்திய நாட்டுப்பற்றாளர்களின் நடவடிக்கைகள் எதை எடுத்துக் காட்டுகின்றன? யார் வெற்றி பெறுவர் என்ற கணிப்பில்தான் அவர்களிடையே கருத்து வேற்றுமையிருந்தது. ஆனால் வெற்றி பெறும் முகாமோடு இந்தியா இருக்க வேண்டுமென்பதில் கருத்து ஒற்றுமை இருந்தது. சத்தியத்தை நாடும் உத்தமர் பிரிட்டனைக் கைவிட்டதற்குக் காரணம் அது அநீதியான போரில் ஈடுபட்டது என்ற காரணத்தினால் அல்ல. அது தோல்வியைத் தழுவும் என்று எண்ணியதால்தான். "பாசிசத்தின் மாபெரும் எதிர்ப்பாளன்' நேரு பிரிட்டனை ஆதரித்தார். காரணம், பாசிசத்தைத் தோற்கடிக்க வேண்டும் என்ற மகத்தான கொள்கையின் உந்துதலால் அல்ல. பாசிசம் நிச்சயம் தோல்வியைத் தழுவும் என்று அவர் கருதியதால்தான்.


போரின் இறுதியில் பிரிட்டன் வெற்றியும், ஜெர்மன் தோல்வியையும் தழுவியபோது முரண்பட்டு நின்ற காங்கிரசுத் தலைமை அடுத்த வினாடியே பிரிட்டனை விசுவாசமாக ஆதரித்து நின்றது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கும் தங்களுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை எனப் பத்தினி வேஷம் போட்டனர். காங்கிரசு செப். 21, 1945இல் வெளியிட்ட அறிக்கையில், "அகில இந்தியக் காங்கிரசு கமிட்டியாலோ, காந்திஜியாலோ எந்த இயக்கமும் அதிகாரபூர்வமாய்த் தொடங்கப்படவில்லை'' எனத் தெளிவாகக் கூறியது.


போர் முடிவடையும் தறுவாயில் உலகம் எங்கும் மக்கள் விடுதலையை நோக்கி வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால் காட்டிக் கொடுப்பதையே தொழிலாகக் கொண்டு பிழைப்பு நடத்திய காங்கிரசுத் துரோகிகளின் செய்கைகளால் போரின் தொடக்க காலத்தில் இருந்தது போலவே இந்தியா ஒரு அடிமை நாடாகவே போரிலிருந்து விடுபட்டது.


தெலுங்கானா விவசாயிகளின் புரட்சிகர எழுச்சி, 1946 ஜனவரியில் நடந்த விமானப்படை எழுச்சி, கப்பற்படை எழுச்சி, ஜபல்பூர் இராணுவ முகாமில் ­மூண்டெழுந்த படைவீரர்கள் கலகம் என ஏகாதிபத்தியத்தைத் தனது பலத்தின் இறுதிவரை சந்தித்த எந்தவொரு எழுச்சியும் காங்கிரசுக் கருங்காலிக் கூட்டத்தின் கயமைத்தனத்தினால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.