இவ்வொப்பந்தப்படி "சுயராச்சியம்' சம்பந்தமான சில சரத்துக்களையும், "இந்தியாவின் நலன்களுக்குப் பாதுகாப்பான ஒதுக்கீடுகள்' எனச் சில்லறைச் சீர்திருத்த ஒப்பந்தங்களும், காந்தியை பின்பற்றிச் சிறை சென்றவர்களுக்குப் பொது மன்னிப்பும் வழங்கப்பட்டது. ஆனால் புரட்சியாளர்கள் ஒருவர் கூட விடுதலை செய்யப்படவில்லை.
இந்த ஒப்பந்தம் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை பற்றி மௌனம் சாதித்தது. மாறாக, பலாத்காரக் குற்றங்களுக்காகவும், பலாத்காரத்தைத் தூண்டிய குற்றத்திற்காகவும் தண்டிக்கப்பட்டவர்கள் யாரும் விடுதலை செய்யப்பட மாட்டார்கள் என ஒப்பந்தம் திட்டவட்டமாகக் கூறியது. அது மட்டுமின்றி பெசாவரில் மக்களைச் சுட மறுத்ததற்காக ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த கூர்க்காப் படையினர் எந்த பலாத்காரத்திலும் இறங்கவில்லை. அவர்கள் காந்தி கூறிய அகிம்சைத் தத்துவத்தைத்தான் கடைப்பிடித்தனர். அவர்களுடைய விடுதலைக்கு இந்த ஒப்பந்தத்தில் இடமில்லை. காந்தி இதுபற்றிய கோரிக்கை கூட எழுப்பவில்லை.
பகத்சிங் மற்றும் தோழர்கள் தூக்கிலிடப்படுவதற்குச் சில தினங்களுக்கு முன்பு காந்தி வெளிநாட்டு நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். "பகத்சிங் மீதும் இதரர் மீதும் விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுமா?'' என ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு "என்னை இக்கேள்வி கேட்காதிருப்பதே மேல். இதற்குமேல் நான் ஒன்றும் கூறமுடியாது'' எனக் கூறிய காந்தி அந்த ஒப்பந்தம் போடப்பட்ட முறையைப் பற்றி ரொம்பவும் சிலாகித்துப் பேசினார். "முதலாவதாக, வைசிராயின் விசேசப் பொறுமையும், அளத்தற்கரிய உழைப்பும், சிறந்த குணமும் இன்றி இவ்வொப்பந்தம் முடிந்திருக்க மாட்டாதென நான் கூறவிரும்புகிறேன்... இதுபோன்ற ஒப்பந்தத்தைப் பற்றிய வரையில் வெற்றியடைந்த கட்சி எதுவெனக் கூறவும் முடியாது; கூறுவதும் சிறந்ததன்று. ஏதாவது வெற்றி இருக்குமாயின் அது இருவரையும் சார்ந்ததே. காங்கிரசு ஒருபோதும் வெற்றியை நினைத்ததில்லை.'' ஆம்; பிரிட்டிஷ் நலனோடு சாராத வெற்றியை இவர்கள் ஒருபோதும் நினைத்ததில்லைதான்!
காந்தி இர்வின் காகித ஒப்பந்தங்களின் சரத்துக்களைக் கண்ட பஞ்சாப் மக்களும், ஏனைய இந்திய மக்களும் கொதிப்படைந்திருந்தனர். கராச்சியில் காங்கிரசு மாநாடு கூடும் அதேநாளில் பகத்சிங் லாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார். ஆத்திரமுற்ற மக்கள் திரளிடமிருந்து காந்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள் கிளர்ந்தெழுந்தன. ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். "பலர் அதன் தவறான அம்சங்களைக் கண்டித்தனர். மேலும் தனிநபர் பயங்கரவாதத்தைக் கொண்டு காந்தியை அச்சுறுத்தினர்'' என இர்வினுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் குறிப்பிடுகிறார். பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் மரண தண்டனை விசயத்தில் காந்தியாரின் பங்கை மக்கள் நன்றாகவே அறிந்திருந்தனர். "மக்கள் காந்தியை உடனடியாக ஒழித்துக் கட்ட, பலாத்காரமாக நசுக்க ஆயத்தமாயிருந்தனர்'' என இர்வின் குறிப்பிட்டுள்ளார் arl of Birhenhead P.305)
மக்களுடைய அறியாமையைப் பயன்படுத்தி அதன்மேல் சவாரி செய்து கொண்டிருந்த காந்தியை அதே மக்கள் பலாத்காரமாக நசுக்கி எறியும் அளவுக்குச் சென்றுள்ளார்கள் என்றால் காந்தி எத்தகைய துரோகியாக இருந்திருக்க வேண்டும். 1922 ஒத்துழையாமை இயக்கம், 1931 காந்தி இர்வின் ஒப்பந்தம் இதன் மூலம் செய்த துரோகத்தைக் காட்டிலும், பின் நாட்களில் காந்தி செய்த துரோகம் என்றென்றும் ஏகாதிபத்திய அடிமை நாடாய் இந்தியா இருப்பதற்குப் பலமான கால்கோளாய் அமைந்து விட்டன.