முழு எதிர்காலத்துக்கும் மிகப் பொருட்செறிவுள்ள நிகழ்ச்சி, பெஷாவரில் நடந்த கார்வாலிப் படைவீரர்களின் கலகமாகும். களத்திலிருந்த தலைவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஆத்திரமுற்ற மக்களின் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு இராணுவம் அனுப்பப்பட்டது; ஒரு இராணுவ ஆயுத வண்டி எரிக்கப்பட்டது; அதில் இருந்தவர்கள் தப்பிவிட்டார்கள். அதன் பேரில், கண்மூடித்தனமாகக் கூட்டத்தின் மீது இராணுவம் சுட்டது; நூற்றுக்கணக்கானோர் இறந்தனர். பதினெட்டாவது அரசு கார் வாலித் துப்பாக்கிப் படையின் இரண்டாம் அணியின் ஒரு பிரிவினர் எல்லோரும் இந்துக்கள், கூட்டத்தினர் முசுலீம்கள் ஆணையை மீறிச் சுட மறுத்துவிட்டனர். அணியிலிருந்து விலகிக் கூட்டத்தாரோடு சேர்ந்து கொண்டனர். சிலர் தங்கள் ஆயுதங்களையும் கொடுத்து விட்டனர். உடனே அங்கிருந்த இராணுவமும் போலீசும் முற்றிலும் பின் வாங்கப்பட்டன. ஏப்ரல் 25 முதல் மே 4 வரை பெஷாவர் நகர், மக்கள் வசம் இருந்தது; பின் மிகப்பெரிய பிரிட்டிஷ் படையையும், விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலையும் கொண்டு அந்நகரம் அரசினால் பின்னர் கைப்பற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை ஒட்டி "அகிம்சாமூர்த்தி' காந்தியார் கூறிய கருத்துக்கள் அவருடைய அகிம்சைத் தத்துவத்தின் உண்மைச் சொரூபத்தை உலகுக்கு நன்கு அம்பலப்படுத்தியுள்ளது. தீரமிக்க கார்வாலிப் படைவீரர்கள் மக்களைச் சுடமறுத்த "அகிம்சை'ச் செயலுக்காக கார்வாலிப் படை வீரர்களை காந்தியார் கண்டித்தார்.
"சுடுமாறு ஆணையிடப்பட்ட படைவீரன் அதற்குக் கீழ்ப்படிந்து நடக்க மறுத்தால், அவன் தான் செய்த பிரமாணத்துக்கு எதிராக நடப்பதோடு, கீழ்ப்பணிய மறுத்த பெரும் குற்றமும் செய்தவனாவான். அதிகாரிகளையும், வீரர்களையும் கீழ்ப் பணிய மறுக்குமாறு நான் ஒருபோதும் கூறமாட்டேன். ஏனெனில், நான் அதிகாரத்தில் இருக்கையில் அதே அதிகாரிகளையும் படைவீரர்களையும் பயன்படுத்திக் கொள்ள நேரலாம். கீழ்ப்படிந்து நடக்க மறுக்குமாறு நான் அவர்களுக்குக் கற்பித்தால், அதே மாதிரி நான் அதிகாரத்தில் இருக்கும் போதும் செய்யக்கூடும் என அஞ்சுகிறேன்.''
(பிரெஞ்சுப் பத்திரிகையாளர் சார்லஸ் பெட்ராஷ், கார்வாலிப் படைவீரர்களைப் பற்றிக் கேட்ட கேள்விக்கு காந்தியின் பதில்; மாண்ட், பிப்ரவரி 20, 1932)
இரண்டாம் உலகப் போரின் போது அட்டூழியங்கள் புரிந்த நாஜிகள் மீது நியூரம்பர்க் எனுமிடத்தில் சர்வதேச நீதிமன்றம் விசாரணை நடத்தியபோது நாஜிகள் சாராம்சத்தில் காந்தியின் வாதத்தைத்தான் முன்னிறுத்தினர். "நாங்கள் குற்றவாளிகள் அல்ல. ஏனெனில் மேலதிகாரிகள் உத்தரவைத்தான் நாங்கள் நிறைவேற்றினோம். அவர்கள் போடும் உத்தரவை நிறைவேற்றுவோம் என்று சபதம் ஏற்றிருக்கிறோம்'' என்றனர். காந்தியின் வார்த்தைப்படி நிச்சயமாக இவர்கள் குற்றவாளிகளல்ல. ஆனால் சர்வதேச நீதிமன்றம் அவர்களுடைய வாதத்தை நிராகரித்து விட்டது. மேலதிகாரிகள் போடும் அக்கிரமமான, அநியாயமான, சட்ட விரோதமான உத்தரவுகளைச் சிப்பாய்கள் நிறைவேற்ற வேண்டியதில்லை. அது மட்டுமல்ல, அதை நிறைவேற்றுவதும் ஒரு குற்றமாகும் எனத் தீர்ப்புக் கூறியுள்ளது.
நியூரம்பர்க் நீதிமன்றத் தீர்ப்பையும் காந்தியின் தீர்ப்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் காந்தியின் நயவஞ்சகத் துரோகம் அப்பட்டமாகத் தெளிவாகிறதல்லவா?
"அரசாங்கத்தைத் தொல்லைப்படுத்த ஒரு சத்தியாக்கிரகி ஒருக்காலும் முயலமாட்டான்'' எனக் கூறிய காந்தி, பஞ்சாப்பில் நடைபெற்ற ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது தான் ஒரு மக்கள் விரோதி என்பதை அம்மணமாகக் காட்டிக் கொண்டார். ஜாலியன் வாலாபாக் எனுமிடத்தில் 20,000க்கும் மேலாகக் கூடிய அமைதியான மக்கள் கூட்டத்தின் மீது ஜெனரல் டயர் என்பவன் வெறிகொண்டு 1600 முறை சுட்டான். மொத்தம் 379 பேர் இறந்தனர். படுகாயமுற்ற 1200 பேர் இரவு முழுவதும் கவனிப்பாரற்று மைதானத்திலேயே கிடந்தனர். "கூட்டத்தில் இருந்தோருக்கு மட்டுமல்ல, குறிப்பாக பஞ்சாப் மக்கள் அனைவருக்கும் இடையில் ஒரு பயஉணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற இராணுவக் கண்ணோட்டத்தோடு'' தான் சுட்டதாகக் கூறிய டயர் "ரவைகள் மட்டும் தீர்ந்திராவிடில் இன்னும் மக்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பேன்'' எனக் கொக்கரித்தான்.
மிருகத்தனமாக மக்களைச் சுட்டுப் பொசுக்கிய ஜெனரல் டயரை காந்தி ஒருபோதும் கண்டிக்கவில்லை. ஆனால் இந்தப் படுகொலை நடப்பதற்குச் சில நாட்கள் முன்பாக மக்கள் ஒரு சில ஐரோப்பியரைக் கொன்றதையும் நேஷனல் பாங்க் கட்டிடத்திற்குத் தீ வைத்ததையும் கடுமையாகச் சாடினார். அமிர்தசரசு மாநாட்டில் பஞ்சாப் மக்களின் கோபாவேசத்தைக் கண்டித்து தீர்மானம் கொண்டு வந்தார். ஆலோசனைக் கமிட்டி இதை ஏற்க மறுத்தது. ஏமாற்றமடைந்த காந்தி "மகாஜனங்கள் பாஞ்சால நாட்டில் கோபாவேசத்தில் செய்யப் புகுந்த அதிக்கிரமங்களைக் கண்டிக்க காங்கிரசு மகாசபை இணங்காவிடில் நான் மகாசபையை விட்டு வெளியேறி விடப் போவதாக'' மிரட்டினார். "கோபட்டப்பட்ட பாஞ்சால ஜனங்கள் செய்த அதிக்கிரமங்களுக்காக மகாசபை மிகுந்த வருத்தமுறுவதாக''த் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது "இந்த மகாசபை முன் கொணரப்பட்ட தீர்மானங்களனைத்திலும் இதுவே தலைசிறந்தது'' என அகமகிழ்ந்து போனார்.
இதுமட்டுமின்றி காந்தியார் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்திவைத்து அவசர கதியில் வெளியிட்ட அறிக்கையில் இப்படிக் கூறினார்: "நான் சர்க்காரைப் பாராட்டு கிறேன். மேலும் சர்க்கார் பாஞ்சால விசாரணைக்காக ஒரு கமிசன் நியமனமாகிக் கொண்டிருக்கிறது என அறிவிக்கிறார்கள். சர்க்கார் இவ்வளவு நல்ல மனப்பான்மையுடன் இருக்கும்போது நான் அவர்கள் எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் காரியத்தில் இறங்குவது தவறு... சாத்வீகப் போரில் ஈடுபட்டவன் சர்க்காரைச் சங்கடத்துக்கு உள்ளாக்க மாட்டான்.''
அகிம்சை என்பதின் மெய்ப்பொருள் இங்கே அப்பட்டமாகப் புலப்படுகிறதல்லவா? ஏகாதிபத்தியத்திற்குப் பயன்படுவதாயிருந்தால் துப்பாக்கி சாத்வீகமானது, தூய்மையானது; ஆனால் அதுவே மக்களின் கையில் பயன்பட்டால் அது வன்முறை; அராசகம். இதுதான் காந்தியின் அகிம்சைத் தத்துவம். தரகு முதலாளிகள், நிலப்பிரபுக்களின் அரசியல் பிரதிநிதி வேறு எப்படிக் கூறுவார்?