எண்ணற்ற சமூக சீர்திருத்த மற்றும் மத ரீதியான அமைப்புகள் ஏகாதிபத்தியத்தால் ஊக்கம் கொடுக்கப்பட்டன. நில உடமை மற்றும் தரகு முதலாளிய வர்க்கத்திலிருந்து உதித்து வந்த ராஜாராம் மோகன்ராய், ராமகிருஷ்ண பரமஹம்சர், பங்கிம் சந்திர சட்டர்ஜி, சையத் அகமது அலி, அமீர் அலி போன்றோரின் தலைமையிலான சீர்திருத்த அமைப்புகள் இவர்களுக்குப் போதுமானதாக இல்லை. "அரசியல் நிறுவனம்' என்ற வெற்றிடம் நிரப்பப்பட வேண்டிய ஒன்றாக இருந்தது.
1838இல் வங்கத்தில் தோன்றிய வங்க நில உடைமையாளர் சங்கமும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிட்டிஷ் இந்தியச் சங்கமும், "அரசியல் நிறுவனம்' என்ற வரையறுப்புக்கு உட்பட்டவை எனலாம். வெள்ளையனின் முதல் விசுவாச அமைப்புக்களாகத் தோன்றிய இவ்வமைப்புக்கள் 1851இல் ஒன்றாக இணைந்தன. இதே போன்ற சங்கங்கள் சென்னை, பம்பாய் போன்ற பல்வேறு நகரங்களில் நிறுவப்பட்டன. ஆட்சியாளர்கள் மீது நல்லெண்ணம், நீதியுணர்வு, விசுவாசம் ஆகியவற்றை மக்கள் கொள்வது, "மாட்சிமை பொருந்திய' வைசிராய், கவர்னர்கள் போன்றோரிடம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் குறைகளைத் தெரிவிப்பதற்கு மக்களுக்குக் கற்றுக் கொடுப்பது இச்சங்கங்களின் நோக்கம். அப்போது கலெக்டராக இருந்தவரும், பிற்காலத்தில் காங்கிரசுத் தலைவருமான தாதாபாய் நவ்ரோஜி பம்பாய்ச் சங்கத்தில் உறுப்பினர்.
அரசியல் தேவையை நிறைவு செய்ய உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் வெள்ளையர்கள் எதிர்பார்த்தவாறு செயலாற்ற முடியவில்லை. அதேசமயம் கோரிக்கை மனு கொடுத்துத் தங்கள் வாழ்வை முன்னேற்றிக் கொள்ள மக்களும் தயாராக இல்லை. இதே கால கட்டத்தில் பயங்கரப் பஞ்சமாக உருவெடுத்த பொருளாதாரத் துயரங்கள் மக்கள் கலகங்களாய் வடிöவடுத்தன. இந்த மக்கள் கலகங்கள் எப்படியிருக்கும், அதன் தன்மை என்ன என்பதை அப்போது நாடு முழுவதும் இருந்து வந்த முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட நிருபர்களின் தகவல்களை குறிப்புக்களை வெட்டர்பர்ன் ஆதாரமாகக் கூறுகிறான்:
"இப்போது உள்ள நிலைமையில் நிராசையுற்ற இந்த ஏழை மக்கள் பட்டினி கிடந்து சாக வேண்டியதாகும் என்று திகில் கொண்டு "ஏதாவது' செய்ய வேண்டும் என விழைவதையே அக்குறிப்புகள் எல்லாம் காட்டின... அந்த "ஏதாவது' என்பது "வன்முறையே'! பழைய வாள்களையும், ஈட்டிகளையும், தீக்குச்சி, வெடித் துப்பாக்கிகளும் ரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததையும், தேவைப்படும்போது தயாராக இருக்கும் என்பதையும் எண்ணற்ற குறிப்புக்கள் காட்டின.''(மேற்படி புத்தகம், பக்: 80)
நெருக்கடியான இந்நேரத்தில்தான் ஹியூமும், அவனுடைய இந்திய ஆலோசகர்களும் ஊக்கமாக இவ்விசயங்களில் தலையிட்டனர். எதிர்வரும் ஆபத்தின் தன்மையைத் துல்லியமாக ஹியூம் உணர்ந்திருந்தான். "மிகப் பயங்கரமானதொரு புரட்சியின் பெருத்த அபாயத்தில் நாம் உண்மையாகவே இருக்கிறோம் என்பதைப் பற்றி அப்போதோ அல்லது இப்போதோ எனக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட்டதில்லை'' என ஆட்சியாளர்களை எச்சரித்த ஹியூம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் மிகத் தெளிவாகக் கூறினான்.
"இந்திய மக்களிடையே அதிருப்தியுற்றவர்கள் 1857ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திரப் போரினைக் காட்டிலும் தீவிரமான ஒரு எழுச்சியில் பிரிட்டனுக்கு எதிராகக் கிளர்ந்தெழுவார்கள் என, எனக்கு நம்பகமான தகவல் கிடைத்துள்ளது. இது பிரிட்டிஷ் ஆட்சி இந்தியாவில் நீடிப்பதற்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாகும். இப்படிப்பட்ட சூழ்நிலையை இல்லாதொழிக்க வேண்டுமானால் பிரிட்டனுக்குப் பாதுகாப்பு வால்வைப் (குச்ஞூஞுtதூ ஙச்டூதிஞு) போல செயல்படக்கூடிய இந்திய மேல் தட்டு வர்க்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை உருவாக்குவது மிகமிக அவசியம்.''
தன் திட்டத்தைச் செயல்படுத்த ஹியூம், தேர்ந்த அரசியல்வாதியான வைசிராய் டப்பரின் பிரபுவைச் சந்தித்தான். இவர்கள் சந்திப்பின் எதிரொலியாய்ப் பிறப்பெடுத்த காங்கிரசின் கதையை அதன் முதல் தலைவன் டபிள்யூ.சி. பானர்ஜி தன்னுடைய "இந்திய அரசியலின் அறிமுகம்'' என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்:
"டப்பரின் பிரபு இவ்விசயத்தில் மிகுந்த அக்கறை காட்டினார். சிறிது காலம் சிந்தித்த பிறகு அவர் ஹியூமை அழைத்தார். ஹியூமின் திட்டத்தால் பயனேதும் இராது என்பதே தம் கருத்து என்று கூறினார். இங்கிலாந்தில் அரசியின் எதிர்க்கட்சி ஆற்றும் பணியை இந்நாட்டில் ஆற்றக் கூடிய குழுக்கள் ஏதுமில்லை... இந்திய அரசியல்வாதிகள் வருடத்துக்கொரு முறை கூடி, "நிர்வாகத்தில் எவ்விதக் குறைகள் உள்ளன; அவற்றைத் திருத்த வழி என்ன' என்பதைக் குறிப்பிட வேண்டும் என்ற அவர், தம் கருத்துப்படி கூடுகிற கூட்டத்திற்கு அங்குள்ள கவர்னர்கள் தலைமை வகிக்கக் கூடாது என்றும், ஏனெனில் கவர்னருக்கு முன்னிலையில் மக்கள் மனம்விட்டுப் பேசமாட்டார்கள் என்றும் உரைத்தார். டப்பரின் பிரபுவின் யோசனை
திரு. ஹியூமுக்கும் திருப்தி தந்தது....''
ஏகாதிபத்திய எஜமானர்களிடம் சோரம் போய்ப் பெற்றெடுக்கப்பட்ட காங்கிரசு இவ்வாறுதான் இந்திய அரசியல் மேடையில் அரங்கேறியது. தாராள குணம் படைத்த ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியக் கொள்கை இங்கே தெளிவாகிறதல்லவா? "வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகர நிலைமைக்கு' எதிரான ஒரு கருவியாக "தேசிய' காங்கிரசு செயல்பட வேண்டும். அதிகார வட்டத்தின் இந்நோக்கம் ஏதோ பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று அல்ல; ஏகாதிபத்தியத்தின் தொடக்க காலத்திலேயே ஏற்பட்ட ஒன்று. கீழ்கண்ட மேற்கோள் இதை மிகத் தெளிவாக நிரூபிக்கின்றது:
"1857க்குப் பின், அதாவது காங்கிரசுத் தோற்றத்துக்கு முந்தைய சில ஆண்டுகள் மிக மிக அபாயகரமானவை. வரவிருந்த அபாயத்தை உணர்ந்து அதை தடுக்க முயன்றவர் ஆங்கில அதிகாரிகளில் ஒருவரான ஹியூம்... ஒரு அகில இந்திய அமைப்புக்கான காலம் முற்றிலும் கனிந்திருந்தது. ஒரு விவசாய எழுச்சி படித்த வகுப்பாரின் அனுதாபத்தையும், ஆதரவையும் பெற்றிருக்கலாம். அதனிடத்தில் புதிய பாரதத்தைப் படைப்பதற்குப் புதிதாய்த் தோன்றிய வகுப்பினருக்கு அது ஒரு தேசிய மேடையை அளித்தது. வன்முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு புரட்சிகரமான நிலைமை மீண்டும் தோற்றுவிக்கப்படுவதைக் காலப் போக்கில் தடுத்தது என்பதால் எல்லாம் நன்மைக்கே எனக் கொள்ளவேண்டும்.''(ஆண்ட்ரூஸ், முகர்ஜி; "இந்தியாவில் காங்கிரசுத் தோற்றமும், வளர்ச்சியும்' பக். 1289)
1885ஆம் ஆண்டு டிசம்பர் 28ம் நாள் சரியாகப் பன்னிரண்டு மணிக்கு ஹியூமால் துவக்கி வைக்கப்பட்ட காங்கிரசு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கியெறியும் வன்முறையை அடிப்படையாக கொண்ட சூழ்நிலையைத் தடுக்கும் கேடயமாகவும், விவசாயப் புரட்சியை ஒழித்துக் கட்டும் வாளாகவும் செயல்படத் துவங்கியது என்பதே உண்மை. தாதாபாய் நவ்ரோஜி, திலகர், கோகலே, காந்தி, நேரு, சுபாஷ்போஸ் எவருடைய தலைமையின் கீழும் காங்கிரசு மக்கள் போராட்டங்களைத் தடுத்து ஏகாதிபத்திய எஜமானர்களுக்குச் சேவை செய்யும் நாயாகவே செயல்பட்டுள்ளது. மக்களைச் சாதி, மத அடிப்படையில் பிரித்து மோதவிட்டுத் தன் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள வேறு சில அடிவருடிக் கட்சிகளும் தேவைப்பட்டன. 1901இல் முசுலீம் லீக்கும் 1918ல் இந்து மகாசபையும் தோற்றுவிக்கப்பட்டன.