நாம் வர்ணித்து காட்டுவோம் என்பதற்காக
வந்து போகவில்லை நிலவு,
விண்மீன்கள்சிணுங்கும் இரவோடு சிற்றினம் சேராமல்
சுயநலத்தில் ஒதுங்கும் போக்கோடு
ஓரிடத்தில் உறையாமல்
பொதுவில் உலகுக்கு முகம் காட்டும்
தன்னைப் போல உன்னையும் எதிர்பார்த்தே
ஒவ்வொரு நாளும் வருகிறது நிலவு!
வர்ணித்துக் காட்டாதே! வாழ்ந்து காட்டு!
கண்களால் காணும் கனவுகளை விடவும்
நீங்கள் கவிதைகளால் கண்ட கனவு தகுதியானது
ஏன் தெரியுமா?
கனவுகளில் நாம் சிந்திப்பதில்லை.
அனுபவிக்கிறோம்,
உங்கள் கவிதைகளில் (அனுபவிக்க மட்டுமல்ல)
சிந்திக்கிறோம்!
உறக்கத்தில் அமைதியாகக் கண்ட கனவையே
பலருக்கு, ஒழுங்காகச் சொல்லத் தெரிவதில்லை.
இதில் உறங்காத கனவுகளை
இந்த ஊரே சொல்லும்படி
என்னமாய்ச் சொன்னீர்கள்! நன்றி கவிஞர்களே!
உறக்கம் கிடக்கட்டும்
சிலர் விழித்துக் கொண்டிருக்கும்போதே
எதையும் விளங்கிக் கொள்வதில்லை!
பாக்கி கடன் அடைக்க முடியாமல்
குடும்பத்துடன் விவசாயி
பாலிடால் குடித்து சாவதைப் பார்த்தபிறகும்
நோக்கியா வந்ததனால்
நாடு முன்னேறிவிட்டது, என்று யாராவது சொன்னால்
ஆமாம், ஆமாம் என்று
வேகமாய் தலையாட்டும்
சில விளங்காத ஜென்மங்கள்.
இப்படியொரு சூழ்நிலையில்...
உறங்காத கனவுகளின் உணர்ச்சிகளை
நம் நரம்புகளில் ஊட்டிவிட்ட
மனிதக் கவிதைகளை
மனதாரப் பாராட்டுவோம்!
இது நிலா முற்றம்
குழந்தை தாய்க்கு சோ×ட்டுதல் போல
இங்கே குறைகளும் கூட அழகாகும்.
சிதறிய பருக்கையில் உணர்ச்சியின் பசிகள்
பவுர்ணமி முகத்தில் ஒப்பனை எதற்கு?
பசப்பாத உணர்ச்சிகளுக்கு பஜனை எதற்கு?
பொய்நேர்த்தி காட்டாத
உங்கள் செய்நேர்த்திக் கனவுகளோடு
சேர்ந்து கொள்கிறேன், நானும்...
படுத்தால் கனவு பிடுங்குதென்று
பலர் சொல்லக் கேட்டதுண்டு
படுத்துத் தூங்கினால்
விழுந்து பாம்பு புடுங்குது
விழித்து எழுந்தால்
ப.சிதம்பரம் போட்ட பட்ஜெட் புடுங்குது
பாதை தேடி, பலர் விழிகள் நடுங்குது.
சிலர் விழித்திருந்தாலோ! வில்லங்கம்
கனவு கண்டாலோ விபரீதம்
காந்தி சுதந்திரமாய் விழித்திருந்தபோது
ஆட்டுப் பால் காலியானது
அவர் கனவுகண்ட சுதந்திரத்தால்
சாணிப்பால் நம் வாயில் போனது
அம்பானிகள் கண்ட கனவில்
பி.எஸ்.என்.எல்.லின் விழிகள் பிதுங்குது
களவாடிய அரசுப் பணத்தை
கனவிலேயே கழித்துக் கொள்ளச் சொல்லி
"ரிலையன்சின் ரிங்டோன்'
தேசத்துக்கே பழுப்புக் காட்டுது.
வால்மார்ட்டின் வர்த்தகக் கனவில்
இந்தியச் சில்லறை வணிகம் செத்து மிதக்குது.
கோக்பெப்சியின் கனவு
பல குரல் வளையெங்கும் ஓடுது.
எங்கள் பட்டுப்போன வாய்க்கால் கனவு
எலி செத்து நாறுது!
கனவுகளில் வரும் அபத்தங்களைவிடவும்
சிலர் நினைவுகளில் செய்யும் அபத்தங்கள்
நீடித்த வியப்பளிக்கும்!
இரவு உணவின்றி படுக்கப் போவோர்
இந்தியாவில் இருபது சதவீதம்!
பிறப்பது பெண்பால் என்றால்
கருவினை கருக்கிடும் கள்ளிப்பால்.
மீறிப் பிறந்தாலும் ஊறாது தாய்ப்பால்.
ஊட்டச்சத்தின்றி உயிர்ப்பலிகள்.
உறுப்புகள் விற்று... பொறுப்புகள் சுமக்கும் குடும்பங்கள்.
இவ்வளவு பிணங்களும்... கண்களை மறைக்க
இதோ... இந்தியா வல்லரசாகப் போகிறது என்று
சிலர் பீதியூட்டும் அபத்தங்களை
கனவிலும் யாராவது காண முடியுமா?
கனவான்களே! கலாம்களே!
காலந்தோறும் நீங்கள் கண்ட கனவால்
கடைசியில் எங்கள் கிட்னியும்
கழண்டு போனது.
இதயமும் வறண்டு போனது.
இரவுகள் பொதுவாய் இல்லாத நாட்டில்
கனவுகள் பொதுவாய் எப்படி இருக்கும்?
ஐந்து நட்சத்திர விடுதிகளுக்கும்
பிட்சா கார்னர்களுக்கும்
இரவு சம்பாதித்துக் கொடுக்கிறது.
நடைபாதை இரவுகளோ
சில்லிடும் பனியின் கொலைக்கரத்தால்
சில ஏழைகளின் உயிரையும்
செலவு செய்து விடுகிறது.
இழவு வீட்டுக்குச் சென்று வரும் வழியில்
குளத்தின் பனிக்குள்
உறையும் நிலவைப் பார்த்து, நீரைத் தொட்டு
நடுக்கும் நடுத்தர வர்க்க இரவு
அறுக்கும் வயலின்
கொதிக்கும் சுனையுடன், உடல் சுடச் சுட
உழவன் குளத்தில் இறங்கும் வேகத்தில்
பனிக்கும் குளிர்விட்டுப் போகும்
நீரைப் பழிக்கும் உழைப்பின் வியர்வை இரவு!
தங்க நாற்கரச் சாலையில்
தடம் குலுங்காமல் விரைகின்றன.
பன்னாட்டுக் கம்பெனிகளின் கனவுகள்
கண்ட்டெய்னர், கண்ட்டெய்னராக...
எங்களூர் கப்பிச் சாலையில் கால் இடறி
தயிர் விற்பவள் தடம் புரண்டு
மண்பானைக் கனவுகள்... மண்ணாய் போகுது!
தரையும் தாரை வார்க்கப்படும் நாட்டில்
புவியீர்ப்பு விசை கூட
பொதுவாய் இருக்குமா என்ன?
இனி கனவுகள் கூட
உனக்கு உரிமை இல்லை.
கண்டமெல்லாம் அமெரிக்காவின் வசம்
வெறும் "காண்டம்' மட்டுமே
இந்திய இளமைக்கு கைவசம்.
நீ ஒரு மாணவனா?
உனது கல்விக்கான மானியத்தை
வெட்டச் சொல்லுது
உலகவங்கியின் கவுச்சிக் கனவு.
அறிவார்ந்த நம் தொழில்நுட்பக் கனவுகளை
தனது காலடியில் போடச் சொல்லி
விழிகளை உருட்டுது அமெரிக்கத் தினவு.
நீ ஒரு விவசாயியா?
உனக்கான இலவச மின்சாரம், நீர்
அனைத்தையும் நிறுத்தச் சொல்லி
உனது கண்களை பறிக்கிறது
உலக வர்த்தகக் கழகத்தின் கனவு!
மண்ணை அகழ்ந்து
நாம் புதைத்து வைத்த இரத்தக் கனவுகளை
அன்னிய டப்பா உணவில்
அடைக்கப் பார்க்குது
இனி நம் அன்னையின் கருவிலும்
அன்னிய மூலதனம்!
பழுப்பு நிலக்கரி கனவுகளுக்காக
பாதாளத்தில் மண் சரிந்து
மூடிய விழிகள் எத்தனை? எத்தனை?
வழுக்கும் கிரானைட் வார்த்து எடுக்க
உயிர் வழுக்கிச் சிதைந்த முகங்கள் எத்தனை?
பரந்து கிடக்கும் மின்சாரம், தொலைபேசி இழைகளுக்குள்ளே
இறந்து துடிக்கும் தொழிலாளர் உயிரணுக்கள்
ஒன்றா? இரண்டா?
மயங்கி விழும் உனக்கு ஒரு சோடா கொடுக்க
மைல் கணக்கில் இயங்கிடும் மிதிவண்டியே
இரும்புக் குரலில் என்னைவிட்டுவிடு
போதும் எனக் கதற
உயிர் மூச்சுக் கொடுத்து தொழிலாளி
உருவாக்கிய சந்தைகள் எத்தனை?
சத்தமில்லாமல் அத்தனையையும்
தட்டிப் பறிக்க வரும் மறுகாலனி ஆதிக்கத்தை
உங்கள் உறங்காத கனவுகள்
ஒழிக்காமல் விடுமா என்ன?
நீங்கள் மண்ணைக் கிளப்பிடும் காற்று
எதிரிகளின்
கண்ணை உறுத்தட்டும் உங்கள் கனவுகள்!
மாறாக!
இரண்டு ரூபாய் அரிசியில் கிறங்கி...
இலவச டி.வி.யில் மயங்கி...
இழிவுகளோடு உறங்கி..னால்
என்ன கனவு வரும்?
""கூட்டணி வைத்து பல பாம்புகள் துரத்தும்
நாயும் கூட கேவலம் பேசும்
பன்றிகள் பக்கத்தில் நிற்க அருவருத்து ஓடும்,
எதிர்ப்புணர்வே இல்லாததைப் பார்த்து
எறும்புகள் மண்ணை வாரித் தூற்றும்...''
இனியாவது அடிமைக்கனவைக் கலைப்போம்
விடுதலைக் கனவுகள் விதைப்போம்
கனவு காணும் மனிதர்களாக மட்டுமல்ல
கனவுகள் நம்மை காணத் துடிக்கும்...
மனிதர்களாக இருப்போம்!
துரை சண்முகம்
(1.2.2007 அன்று தஞ்சாவூர் பாரத் அறிவியல் நிர்வாகவியல் கல்லூரியில் நடைபெற்ற ""கவிதை முற்றம்'' எனும் நிகழ்ச்சியில் "உறங்காத கனவுகள்'' எனும் தலைப்பில் தலைமை தாங்கி வாசித்த கவிதை)