06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழ் மக்களையே குதறித் தின்னும் குள்ளநரி

எல்லாம் வெளிச்சத்துக்கு வருகின்றன. ஏகாதிபத்தியதுடனும் பேரினவாதத்துடன் சேர்ந்து தமிழ் மக்களின் ஜனநாயகத்தை மீட்கப் புறப்பட்ட ஆனந்தசங்கரி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் குள்ளநரியாகி தமிழ் மக்களையே குதற ஆரம்பித்துள்ளார்.

 

 

இந்தக் குள்ளநரி பாசிசப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும், பேரினவாத பேய்களுக்கு தலைமை தாங்கும் மகிந்தவுக்கும் நாலு கடிதம் எழுதியதன் மூலம், புலியெதிர்ப்புக் கும்பல் மூலம் தனக்கு விளம்பரத்தைத் தேடிக்கொண்டவர் தான். நல்ல ஏகாதிபத்திய விசுவாசியாக இருந்ததால், பிசாசுகள் அந்த விசுவாசத்தைப் போற்றி ஒரு கோடி ரூபா பணத்தைப் பரிசாக வழங்கியது. அந்தப் பொதுப் பணத்துக்கு என்ன நடந்தது என்று கேட்டு, நாலு கடிதத்தை ஆனந்தசங்கரியை நோக்கி எழுத வேண்டியது தான் பாக்கி. தமிழ் பேசும் மக்களின் கதியோ, போக்கிரிகளின் பின்னால் நாறுகின்றது.

 

ஏகாதிபத்திய பிசாசுகள் ஆனந்தசங்கரியின் கடிதத்தை வைத்து 'அகிம்சை மற்றும் சகிப்புக்கு" ஒரு கோடி ரூபா பரிசுத் தொகையை யுனெஸ்கோ ஊடாக வழங்கியது. ஏகாதிபத்திய சேவைக்கு தான் என்ற போதும், தமிழ் மக்களின் பெயரிலான ஒரு நோக்கத்தை அடிப்படையாக கொண்ட பொதுப் பணம் தான் இது. இந்த பணத்துக்கு என்ன நடந்தது?

 

அதை அவர் தமிழ் சமூகத்துக்காக பயன்படுத்தவில்லை. ஜனநாயகத்தை மீட்பதற்கான ஒரு அறக்கட்டளையாகவோ, ஒரு பொது நிதியாகவோ அப் பணத்தை வைப்பிலிடவில்லை. தமிழ் மக்களின் துயரத்தைச் சொல்லி கிடைத்த பணத்தை, தனது தனிப்பட்ட பணமாக மாற்றிவிட்டார். இப்படிப்பட்டவர்கள் கடைந்தெடுத்த மக்கள் விரோதிகள் தான். இந்தப் பணத்தை சொந்த பந்தங்களுக்குள் முடக்கியதுடன், ஆடம்பரமாக உலகம் சுத்தும் வாலிபனாகித் திரிகின்றார்.

 

புலிகள் மட்டும் தமிழ் மக்களை ஏமாற்றி அவர்களின் பணத்தில் வாழவில்லை. புலியைச் சொல்லி புலியெதிர்ப்பு ஜனநாயகத்தின் பெயரில் பெற்ற பணத்தையும் கூட, பொறுக்கித் தின்னும் கூட்டம் இன்றும் அலை மோதுகின்றது. இந்த வகையில் ஆனந்தசங்கரி என்ற குள்ளநரியும் வெட்கமானமின்றி மக்களின் பெயரில் பொறுக்கித் தின்னுகின்றது.

 

இந்தப் பணம் விடுபட்டு போன உறவுகளை, பணம் சார்ந்து மீள உறவாட வைத்துள்ளது. நாற்றம் பிடித்த ஆனந்தசங்கரியின் அரசியல் ஒழுக்கக்கேட்டின் மீது, புதிய உறவுகள் கொசுக்கள் போல் மொய்க்கின்றன. சொந்த பந்தங்களினதும் குடும்பத்தினதும் வாழ்வை உயர்த்த, ஆனந்தசங்கரிக்கோ புலிகளின் பாசிசம் உதவி வருகின்றது. தமிழ் மக்கள் பாவம். அவர்களின் பெயரில் வாழ்கின்ற ஓட்டுண்ணிக் கூட்டம், ஏகாதிபத்திய ஆசியுடன் மக்களையே உறிஞ்சி வீரியமாகி வளருகின்றது.

 

இந்த குள்ளநரியனுக்கோ, இந்த பொதுச் சொத்தை அபகரித்தது போதவில்லை. பொதுப் பணத்தைத் திருட, புதிய முயற்சியில் இந்த குள்ளநரி மறுபடியும் இறங்கியுள்ளது. கூட்டணியின் சொத்தாக முடங்கியுள்ள 12 கோடி ரூபா பெறுமதியான சொத்தைத் திருட, இந்த குள்ளநரி புறப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் முடங்கியுள்ள இந்தச் சொத்தை அனுபவிக்க, கூட்டணியை இயங்குவதாக காட்டவேண்டும். இதற்கு கூட்டணி என்ற ஒரு போலி அமைப்பு அவருக்கு தேவைப்படுகின்றது.

 

இந்தக் குள்ளநரி வஞ்சகன் புலியின் பாசிசத்தில் உயிர் வாழும் புலி எதிர்ப்புக் கும்பலைக் கொண்டு அதனை உருவாக்கியுள்ளது. இது ஒரு மட்டத்தில் அம்பலமான போது, பணத்தை கூட்டமைப்புக்கு ஊடாக புலிகள் பெற்றுவிடுவார்கள் என்று சொந்த சுய புலியெதிர்ப்பு விளக்கத்தை வழங்குகின்றது. செய்வதோ கயவாளித்தனமான இரகசிய திருட்டு. அது அம்பலமாகும் போது அதற்கு புலியொழிப்பு அரசியல் முலாம். புலிகளுக்கு செல்லவிடாது தடுக்க, ஒரு புலியெதிர்ப்பு அமைப்பு. நல்ல அரசியல் வித்தைகள், நல்ல அரசியல் வேடிக்கை. பாவம் தமிழ் மக்கள், இப்படிப்பட்ட மீட்பாளர்களை நம்பினால், இருக்கின்ற கோவணத்தையும் பறிகொடுப்பதைத் தவிர வேறு வழி தமிழ் மக்களுக்கு கிடையாது.

 

பணத்தைக் கைப்பற்ற கூட்டணிக் கிளையானது, முன் கூட்டியே திட்டமிட்ட நபர்களைக் கொண்டு லண்டனில் உருவாக்கப்பட்டது. பிசாசுடன் கூடி விபச்சாரம் செய்யும் புலியெதிர்ப்பு சித்தாந்தி சிவலிங்கம் உள்ளிட்ட ஒரு திருட்டுக் குழு உருவாக்கப்பட்டது.. தமழ் மக்களின் பெயரில், கிடைத்த ஒரு கோடியை தனது தனிப்பட்ட நலனுக்காக பயன்படுத்தும் ஒழுக்கக் கேட்டை அரசியலாக கொண்ட இந்த பேர்வழிகள், புலிகளின் பெயரில் திருடுவதும் வாழ்வதும் அம்பலமாகின்றது.

 

மண்ணில் ஒரு கூட்டணிக் கிiளையை உருவாக்கி திருடும் பலம், புலியின் பாசிசத்தின் முன்னால் இவர்களுக்கு கிடையாது. ஆனந்தசங்கரி மகிந்த சிந்தனை என்ற போற்றும் குடும்ப சர்வாதிகாரம், இந்த திருட்டுக்கு சட்டப்படி உதவத் தயாராகவே உள்ளது. இந்தத் திருட்டை மூடிமறைக்க, ஒரு சம்பிரதாயம் தேவைப்படுகின்றது. இதனால் தான் இந்த குள்ளநரி, வெளிநாட்டில் கிளைகளை அமைக்க முனைகின்றது.

 

லண்டனின் திடீர் கிளை, புலியெதிர்ப்பு பன்னாடைகளை மையப்படுத்தி காய் நகர்த்தி தனது சதியை ஆரம்பித்துள்ளது. இது போன்று பாரிஸ், ஜெர்மனி என்று எங்கும், கூட்டணியின் பணத்தைத் திருட தொழில்முறை திருட்டுக் கிளைகளை அமைக்கின்றனர். ஜெர்மனியில் ஆனந்தசங்கரியின் கடிதத் தலைப்பை கொண்டு, அகதிகளிடம் பணம் வாங்கி கொழுத்த ஜெகநாதன் (ரீ.பி.சி புலியெதிர்ப்பு ஆய்வாளர்களில் ஒருவர்) உள்ளிட்டு தேனீ இணையம் வரை, இந்த கொள்ளைக்கு உடந்தையாக அக்கம்பக்கமாக செயல்படுகின்றது.

 

குள்ளநரியன் ஆனந்தசங்கரி அரசின் பாதுகாப்பில், அவர்களின் பணத்தில் பேரினவாதத்துக்காக குலைப்பதற்கு அப்பால் எந்த அரசியலும் கிடையாது. இந்த குள்ளநரியனின் பேரினவாத சார்பு கடிதங்களை, மகிந்த சிந்தனை தொகுத்து உலகெங்கும் பேரினவாத அரசே விநியோகம் செய்கின்றது. இப்படிப்பட்ட தமிழ் விரோதி, தனது பொறுக்கித்தனத்தைக் கொண்டு தமிழ் மக்களின் சார்பில் பெற்ற பரிசுத் தொகையை சுருட்டிக்கட்டியது. இதற்கு புலியெதிர்ப்பு கும்பல் ஆலவட்டம் பிடித்து உதவுகின்றனர். அதில் தமது பங்கு என்ன என்பது, அடுத்த கட்ட குழு மோதலுக்கு போதுமான அளவுக்கு, புலியெதிர்ப்புக் கும்பலின் உள்ளான பிளவுகளாக அரங்கேறி வருகின்றது.

 

மறுபக்கத்தில் மகிந்த சிந்தனையை பாராட்டும் ஆனந்தசங்கரி, அதன் எடுபிடியாக அதிலும் நக்கிப் பிழைக்கின்றார். மகிந்த சிந்தனை என்பது குடும்ப ஆட்சியும், பாசிச பயங்கரவாத சர்வாதிகாரமுமாகும். இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக செயல்பட்டு, நாட்டை விற்றலாகும். இதற்கு உறுதுணையாக நின்று, இதில் ஒட்டிக்கொண்டு பிழைக்கும் கும்பலில் ஆனந்தசங்கரியும் ஒருவர். தமிழ் மக்களை வேட்டையாடும் மகிந்த சிந்தனையினால் லாபம் பெறும் தீவிர பக்தர்களில் ஆனந்தசங்கரியும் ஒருவர்.

 

இந்த பொறுக்கி தான், தன்னை ஜனநாயகவாதி என்கின்றது. 'அகிம்சை மற்றும் சகிப்பு" க்காக பணம் வாங்கி சுருட்டிய இந்த குள்ளநரி, லண்டனில் நடந்த அமிர்தலிங்கம் நினைவுரைக் கூட்டத்தில் புழுப்போல் நெளிந்தது ஏன்? அங்கு ஒருவரின் மாற்றுக் கருத்தை சகித்துக் கொள்ளமுடியாது கொதித்துப் போன ஆனந்தசங்கரி, அதை அடக்கி ஒடுக்கி பேசவிடாது தடுத்தார். ஆனந்தசங்கரியின் 'அகிம்சை மற்றும் சகிப்பு" சார்ந்த இந்த ஜனநாயகத்தின் பரிசுகேடு என்பது, மகிந்த சிந்தனையாலானது. இப்படி புலியெதிர்ப்பு புல்லுருவித்தனம் அங்கும் அம்பலமானது.

பி.இரயாகரன்
12.09.2007


பி.இரயாகரன் - சமர்