பாட்டாளி வர்க்கம் தனது சொந்த வர்க்கப்போராட்டத்தை நடத்த, முன்னெடுக்க, சமூகத்தில் உள்ள எல்லாப்பிரச்சனையையும் கவனத்தில் எடுக்கின்றது . ஒரு பிரச்சனையில் பாட்டாளி வர்க்கம் தலையிடுகிறது என்றால், அது வர்க்கப் புரட்சிக்காக மட்டுமே தான் என்பதை ஒரு நிமிடம் கூட மறந்துவிடக் கூடாது. இதை நாம் மறந்து போகும் ஒவ்வொரு நிமிடமும் தன்னெழுச்சியின் பின், சுரண்டும் வர்க்க கனவுகளின் பின் இழுபட்டு, பாட்டாளி வர்க்கத்துக்கு துரோகம் செய்பவர்களாக இருப்போம்.

 

இந்த வகையில் தேசிய இனப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கம் கவனத்தில் எடுக்கின்றது எனின், அது பாட்டாளி வர்க்கப் புரட்சிக்காகவே ஒழிய, வேறு எந்தக் காரணத்துக்காகவும் அல்ல.


இது தொடர்பாக லெனின் 'எந்த ஒரு தேசியக்கோரிக்கையையும் ஒரு தேசியப்பிரிவினையையும் தொழிலாளர் வர்க்கப் போராட்டம் என்ற கோணத்திலிருந்து மதிப்பிடுகின்றது." - லெனின்- தே.இ.சு.க (பக்-33-)


உலகளவில் எழுப்பப்படும் தேசிய இனக் கோரிக்கைகள், போராட்டங்கள் , பிரஞ்சு முதலாளித்துவ புரட்சிக்கு முன்னிருந்து இன்று வரை தொடரும் ஒரு பிரச்சனையாக உள்ளது . இது உலகளவில் கம்யூனிச சமூகம் உருவாகும் வரை நீடிக்கப் போகும் பிரச்சனையாகவும் உள்ளது.

 

நாம் பாட்டாளி வர்க்க போராட்ட சகாப்தத்தில் வாழும் ஒரு புரட்சிகர சமூகத்தில் உள்ளவர்கள் என்ற வகையில், இப் பிரச்சனை மீது தலையிடவும், போராடவும் கற்றுக்கொள்வது அவசியமானதாக உள்ளது.

 

தேசியக்கோரிக்கை என்பது, திட்டவட்டமாக பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரானது என்பதை ஆழமாக கவனத்தில் கொண்டு, தேசியக் கோரிக்கையின் பின் எழும்பும், ஜனநாயகக் கோரிக்கைகளை ஆதரித்தும், அதற்காக போராடியும், தேசியக் கோரிக்கையை தகர்த்து எறிய வேண்டும். இதை லெனின் வார்த்தையில் பார்ப்போம்.

 

'பூர்ஷ்வா தேசியவாதமும் பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதமும் இணக்கம் காண முடியாத பகைமை கொண்ட இருவேறு கோசங்களாகும். இவை முதலாளித்துவ உலக முழுமையிலும் நிலவும் மாபெரும் இருவேறு வர்க்க முகாம்களுக்கு ஏற்ப அமைந்து தேசிய இனப்பிரச்சனையில் இருவேறு கொள்கைகளில் (மேலும் இருவேறு உலகக் கண்ணோட்டங்களின் ) வெளிப்பாடுகளாக விளங்குகிறவை. '
-லெனின்- -21, தேசிய இனப்பிரச்சனை பற்றிய விமர்சனக் குறிப்புகள்-

 

தேசிய இனப்பிரச்சனையில் எழும் எல்லா ஜனநாயக கோரிக்கையை ஆதரிப்பதும், போராடுவதும் பாட்டாளிகளின் கடமையாகும். அதே நேரம் அனைத்து தனிச்சலுகைக் கோரிக்கையையும் எதிர்த்துப் போராட வேண்டும்.

 

தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக வெளிவரும் எல்லா கோரிக்கையையும் மிக நுணுக்கமாக அணுகுவதும், அதன் பின் மறைந்துள்ள சுரண்டும் வர்க்க நலன்களை இனம் கண்டு கொள்வதும் அவசியமாகும்.

 

இன்று மார்க்சியம் பேசியபடியும், பல்வேறு கோட்பாட்டுத்தளத்திலும் முன்வைக்கப்படும் தேசியக்கோரிக்கையை பாட்டாளிவர்க்கம் அணுகும்போது பாட்டாளிவர்க்க நலனுக்கு எதிரான ஜனநாயகக் கோரிக்கையல்லாத எல்லாக் கோரிக்கையையும் நிராகரிக்கவேண்டும். எதிர்த்துப் போராடவேண்டும்.


மார்க்சியம் இதை நுணுக்கமாக ஆராய்ந்து வழங்கிய ஒரு கோட்பாடு தான் சுயநிர்ணயக் கோட்பாடாகும். யார் சுயநிர்ணயக் கோட்பாட்டை தேசிய இனப்பிரச்சனையில் கையாளத் தவறுகின்றனரோ, அவர்கள் உண்மையில் முதலாளித்துவ தேசியத்தைத்தான் பிரதிபலிக்கின்றனர் என்பதை வேறு எந்த விளக்கமும் இன்றிப் புரிந்து கொள்ளமுடியும்.

 

சுயநிர்ணயக் கோட்பாடு மீது இன்று பல்வேறு விளக்கங்களை வழங்குவதில், முதலாளித்துவ தேசியவாதிகள், திரிபுவாதிகள், ஏகாதிபத்திய கோட்பாட்டாளர்கள் வேறுபாடு இன்றி முனைப்பாய் உள்ளனர்.

 

தேசிய இனப்பிரச்சனை மீதான சுயநிர்ணயக் கோரிக்கை என்பது, ஒடுக்கும் இனத்தின் உரிமை தொடர்பான, அவர்களுக்கே உரித்தான பிரச்சனைக்கான தீர்வாகும்.

 

சுயநிர்ணயம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் பிரிந்து வாழ்வதா? சேர்ந்து வாழ்வதா? என்ற தேர்வை செய்து கொள்ளும் உரிமையை வழங்கும், அதி கூடிய ஜனநாயக உரிமையாகும். இதைத் தாண்டிய ஒரு தீர்வை யாரும் வழங்க முடியாது.

 

சுயநிர்ணயத்தை பயன்படுத்தும் உரிமை ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்கு மட்டும் உரித்தானது. இதன் மீது விளக்கம் சொல்ல, கட்டுப்படுத்த ஒடுக்கும் தேசிய இனத்துக்கு எந்த உரிமையும் கிடையாது.

 

சுயநிர்ணயக் கோட்பாடு மீதான திரிபு பின்வரும் வகையில் பொதுவாக உள்ளது.


1. பிரிந்து போவதை மறுத்தல்
2. ஐக்கியமாக மட்டும் இருத்தல்.
3. சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவது மட்டும் தான்
4. ஐக்கியமாகப் போவதை மறுத்தல்
5. சுயநிர்ணயம் என்பது எதுவுமற்றது.


பொதுவாக இந்த ஐந்து வகைக்குள் கருத்துக் கூறியபடி தான், தேசிய போராட்டமும் தேசிய ஒடுக்குமுறையும் கட்டியமைக்கப்படுகின்றன.

 

சுயநிர்ணயம் என்றால் என்ன? ஒரு தேசிய இனம் தனியரசாகப் பிரிந்து போவதற்கான ஜனநாயகக் கோரிக்கையை கொண்டது தான். இன்னுமொரு இனத்துடன் ஒன்றாக வாழ்வது, வாழமுடியாத தெரிவை வழங்கும் ஒரு ஜனநாயகக் கோரிக்கைதான். இதைத் தாண்டியது அல்ல சுயநிர்ணயக் கோட்பாடு. இதை லெனினை விட வேறு யாரும் விளக்கமாக விளக்கி விடவில்லை. லெனின் என்ன சொல்கிறார் எனச் சுருக்கமாகப் பார்ப்போம்.

 

இது தொடர்பாக லெனின் 'எந்த தேசிய இனத்துக்கும் எந்த மொழிக்கும் எல்லாவிதமான தனியுரிமைகளும் இல்லவே இல்லை. தேசிய இனங்களது அரசியல் சுயநிர்ணயப் பிரச்சனை , அதாவது அவை அரசுகளாகப் பிரிந்து செல்லும் பிரச்சனை, முழுஅளவுக்குச் சுதந்திரமான ஜனநாயக வழியில் தீர்க்கப்படுதல், எந்த ஒரு தேசிய இனத்துக்கும் எந்த விதமான சிறப்புரிமையும் அளிப்பதாகவோ, தேசிய இனங்களது சமத்துவத்துக்கு அல்லது தேசிய இனச் சிறுபான்மையினரது உரிமைக்கு ஊறு செய்வதாகவோ ............. ' இருக்க முடியாது என்கின்றார்.-லெனின்- தே.வி.ப.கு. (ப-14)


'எல்லாத்தேசிய இனங்களுக்கும் பிரிந்து போகிற உரிமையை ஒப்புக்கொள்வது, பிரிந்துபோகின்ற பிரச்சனை எழுகின்ற போது எல்லா ஏற்றத்தாழ்வுகளையும், எல்லா விசேச உரிமைகளையும் எல்லாத் தனித்துவப்போக்கையும் நீக்கும் நோக்கத்துடன் அதை அணுகிச் சீர்தூக்கிப்பார்ப்பது' மட்டும் தான் பாட்டாளிகளின் சர்வதேசக் கண்ணோட்டமாகும். -லெனின்- தே.இ.சு.உ.(ப-35)

 

'நமது அரசியல் கிளர்ச்சியில் பிரிந்து போகும் உரிமை பற்றிய கோஷத்தை முன்வைத்து ஆதரித்து பேசத் தவறினால் நாம் பூர்சுவாக்களின் நோக்கத்துக்கே உதவுவோம் என்பது மட்டுமல்ல , ஒடுக்கின்ற தேசிய இனத்தின் நிலப் பிரபுகளின், அதன் வரம்பிலா ஆட்சியின் நோக்கத்துக்கே கூட உதவுவோம்' என லெனின் ஒடுக்கும் இனப்பாட்டாளியின் கடமையை தெளிவாக்குகின்றார்.
-லெனின்-தே.இ.சு.உ (ப -34)

 

லெனின் மேலும் 'ஒடுக்கும் நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களைச் சர்வதேசியவாத உணர்வில் பயிற்றுவிக்கும் பொழுது ஒடுக்கப்படும் நாடுகளுக்குப் பிரிந்து போகும் சுதந்திரமளிக்க வேண்டும் என்பதை அவர்கள் ஆதரித்து, அதற்காகப் போராடவேண்டும் என்பதை வலியுறுத்த வேண்டும். இது இல்லாமல் சர்வதேசியவாதம் என்பது இருக்க முடியாது. ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த சமூக-ஜனநாயகவாதி அத்தகைய பிரச்சாரத்தைச் செய்யத் தவறினால் அவ்வாறு தவறியவர் ஒவ்வொருவரையும் ஏகாதிபத்தியவாதி என்றும் கயவர் என்றும் கருதுவது நமது உரிமையும் கடமையுமாகும்.' என்கின்றார். (அடிக்கோடு லெனின் )-லெனின்- தே.வி.பா.ச -(ப.245)


மேலும் லெனின் 'சிறிய தேசிய இனத்தைச் சேர்ந்த ஒரு சமூக ஜனநாயகவாதி தமது கிளர்ச்சி முறையில் நமது பொதுச்சூத்திரத்தின் இரண்டாவது சொல்லை - 'தேசிய இனங்களின் மனப்பூர்வமான ஐக்கியம் ' என்பதை வலியுறுத்த வேண்டும். ------. அவர் எல்லாச் சமயங்களிலும் குறகிய தேசிய இன மனப்பான்மை, தனித்திருத்தல், ஒதுங்கி வாழுதல், ஆகியவற்றுக்கு எதிராக போராட வேண்டும். முழுமையையும் பொதுமையையும் ஏற்றுக் கொள்வதற்காகப் போராட வேண்டும். பொது அம்சத்தின் நலன்களுக்குத் தனி அம்சத்தின் நலன்கள் கீழ்ப்பட்டவை என்பதற்காகப் போராட வேண்டும். ' என்றார் லெனின். -லெனின்-தே.வி.பா.ச(-ப 246)

 

சுயநிர்ணயக் கோட்பாடு என்ன நிலையில் என்ன தளத்தில், எந்த வர்க்க கண்ணோட்டத்தில். இயங்குகிறது என்பதை, லெனின் மேற்கோள்கள் தெளிவாக்குகின்றன.

 

தமிழ் ஈழ தேசிய விடுதலைப் போராட்டத்தில், இன்று ஏற்பட்டுள்ள மார்க்சிய கலைப்பு வாதத்தில் சுயநிர்ணய உரிமை என்பது பந்தாடப்படுகின்றது. ஒரு புறம் ஐக்கிய இலங்கை என்றும், மறுபுறம் தமிழ் ஈழம் என்ற ஒரு நிலைக்குள் அணிகள் அணிவகுக்கின்றன. இன்னுமொரு புறம் பெரும்பான்மையினப்பிரிவு பிரிவினைக் கோரிக்கையை மறுக்கின்றது. இன்னுமொரு மார்க்சிய திரிபுக்கு உட்பட்ட பல்வேறு கோட்பாட்டைப் பெற்று தேசியத்தைக் கற்பிதமாகப் பார்த்து ஏகாதிபத்தியத்துக்கு சேவை செய்கின்றது.

 

சுயநிர்ணயக் கோட்பாடு மார்க்சிய கலைப்புவாதத்துடன் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக செயல் தளம் இடப்படுகின்றது.

 

இந்தியாவில் இன்று தமிழ் நாட்டு தனிநாட்டுக்கோரிக்கை முன்வைத்து பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக செயல்தளம் இடப்படுகின்றது. இதற்கு லெனினைத் திரித்தும் மறுபுறம் மார்க்சிய திரிபுவாதம் ஊடாகவும் அடிக்கல் இடப்படுகின்றது.

 

ஒடுக்கப்பட்ட பாட்டாளி ஏன் ஐக்கியப்பட முடியாது என்ற கேள்விக்கு பதிலளிக்காது, நகரும் இந்தப் புதிய பிரிவுகள் இயல்பில் ஏகாதிபத்தியத்துக்கு மறைமுகமாக சேவகம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

 

உலகளவில் மக்கள் தமக்கு இடையில் உள்ள இடைவெளிகளைக் கடந்து செல்லும் முயற்சிக்கு போராடுவது, பாட்டாளிகளின் இன்றைய சர்வதேசிய கடமையாகும்.

இன்று உலகமயமாதல் இரண்டு போக்குகளில் நடக்கின்றது.


1. ஒடுக்கப்படும் மக்கள் கீழிருந்து தமக்குள் வன்முறையின்றி ஐக்கியப்படும் போக்கு மிகவேகம் பெறுகின்றது.


2. சுரண்டும் பிரிவுகள் தமக்குள் மேலிருந்து ஐக்கியப்படும் போக்கின் ஊடாக சுரண்ட மிக வேகமாக முனைப்புப் பெற்றுள்ளனர்.


இந்த இரு போக்கும் உலக இடைவெளியை கடக்கும் வழியில் தொழிற்படுகின்றது. ஆனால் இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஒட்ட முடியாத நேர் எதிர் பண்பை அனைத்துத் துறையிலும் கொண்டு உள்ளது.

 

சர்வ தேசியக் கண்ணோட்டத்துடன் உலகில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்துக்காக எந்தவிதமான விட்டுக் கொடுப்பும் இன்றி போராட வேண்டும். அதே நேரம் மக்களை சூறையாட ஒன்றிணைந்த உலக மயமாதல் சுரண்டலை எதிர்த்து ஈவு இரக்கமின்றிப் போராட வேண்டும்.

 

உலகு இன்று இரண்டு பாதைகளுக்குள் மட்டும் நகர்கின்றது. இதற்கு வெளியில் ஒரு பாதை உண்டெனக் கூறுவது, உண்மையில் சுரண்டல் பிரிவை மறைக்கத்தான். இதன் மூலம் சுரண்டலைத் தீவிரமாக்கத்தான். இந்த வகையில் தான் தேசியக் கோரிக்கையும் உள்ளது.


ஒரு ஒடுக்கும் இனத்தின் ஜனநாயகக் கோரிக்கையை முன்னெடுப்பதற்கு பதில், முன்வைக்கும் தேசியக் கோரிக்கை அடிப்படையில் தனிச்சலுகையைக் கோருவதுடன், சுரண்டலை நீடிக்க வைப்பதுமாகும். ஐனநாயகக் கோரிக்கையை சரியாக முன்னெடுக்கும் எந்தப் பிரிவும், அதை சுயநிர்ணய அடிப்படையில் சர்வதேசிய கண்ணோட்டத்துக்குள் தான் எடுக்க முடியும் என்ற ஆழமான உண்மையை புரிந்து கொள்வது எம்முன் உள்ள கடமையாகும்.