06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

நிதி மூலதனம் சமூக சாரத்தையே உறிஞ்சுகின்றது

கடன், எங்கும் கடன், மனித இனத்தின் மீதே கடன். மனித இனம் மீளமுடியாத வகையில், அங்குப்பிடியாகவே கடன் உலகெங்கும் மாறிவிட்டது. இந்த கடனோ நாடுகளையே திவõலாக்கி வருகின்றது. மக்கள் கடனைக் கட்டுவதுடன், வாழ்க்கை பூராவும் வட்டியைக் கட்டும் கொத்தடிமைகள் ஆக்கப்பட்டுள்ளனர். கடனில் இருந்து மீள முடியாத நிபந்தனைகள். வேடிக்கை என்வென்றால் கடனை வாங்குவது கூட, அவசியமான அடிப்படை நிபந்தனைகளில் ஒன்றாகிவிட்டது. உதவி என்ற பெயரில், நிபந்தனைகளுடன் கூடிய கடன் வாரி வழங்கப்படுகின்றது. இந்தக் கடன், மனிதனின் சமூக சாரத்தையே உறிஞ்சி அழிக்கின்றது.

மனித உழைப்பையே இது ஒட்ட உறிஞ்சுகின்றது. மனித வாழ்வை அழிக்கும் இந்தக் கடனை யார் வழங்குகின்றனர்? எங்கிருந்து எப்படி கடனுக்கான நிதி கிடைக்கின்றது? யார் எப்படி இதனால் இலாபம் அடைகின்றனர்? இந்தக் கடனால் யார் எதை எப்படி இழக்கின்றனர்? இந்த கடன் என்ற சூக்குமத்தையும், அது ஏற்படுத்தும் மனித அவலத்தை நாம் புரிந்து கொள்ள முனைவோம்.

இன்று நிதி மூலதனம் உலகின் மூலைமுடுக்கெங்கும் ஊடுருவியுள்ளது. மனித இனத்தையே மூலதனத்துக்கு அடிமைப்படுத்த விரும்பும் உலகமயமாதல், உலகம் தழுவிய போக்கில் இயங்குகின்றது. இப்படி நிதி மூலதனம் அதன் முதன்மையான இழிவான சமூகப் பாத்திரத்தை, மனித சமூகம் மீது செலுத்துகின்றது. இது எந்த (சமூக) உற்பத்தியிலும் ஈடுபடாமல், (சமூக) உற்பத்தியில் இருந்து அதன் சமூக சாரத்தையே உறிந்தெடுத்து விடுகின்றது. மனிதகுலத்தின் அவலமோ, இப்படி கழிப்பூட்டும் ஒரு நவீனத்துவமாகவே பூத்துக் குலுங்குகின்றது. பரந்துபட்ட மனிதர்களின் சமூக அவலம், தனிமனித ஜனநாயகத்தைக் கோரும் சமூகவிரோதிகளின் மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக பரிணமிக்கின்றது. செல்வத்தை வைத்திருப்பவனின் சுதந்திரமே, செல்வம் இல்லாதவனின் அடிமைத்தனத்தை உருவாக்குகின்றது. செல்வம் உள்ளவன் இல்லாதவனை பாய்ந்து கடித்துக் குதறும் சுதந்திரமே, ஒரு உலக ஒழுங்காகி அதுவே ஜனநாயகமாகி விடுகின்றது.

உலகின் செல்வத்தைத் தன்னகத்தே குவித்து வைத்திருப்பவன் சமூகத்தைப் பற்றி ஒருவிதமாகவும், செல்வம் இல்லாதவன் மற்றொரு விதமாகவும் உலகை காண்கின்றான். செல்வம் உள்ளவன் அதைப் பெருக்குவதைப் பற்றியே, சதாகாலமும் சிந்தித்த வண்ணம், நனவுப்பூர்வமாக ஒரு பேயாக பிசõசாகவே வாழ்கின்றான். தனது வாழ்வை காட்டுமிராண்டித்தனமான உணர்வுடன் கூடிய மிருகவெறியுடன், சமூகத்தைக் கடித்துக் குதறுவதில் தனது காலத்தை ஓய்வின்றி ஓட்டுகின்றான். இந்தச் சமூக இழிபிறவிகளே, நவீன நாகரிக கனவான்களாக பகட்டு உடையணிந்து கொண்டுள்ளது. உலகெங்கும் பன்றிகள் போல், சதா பவனி வருகின்றவர்கள் இவர்களே, உலக மனிதனின் வாழ்வியல் நடைமுறைகளை தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இவர்களின் பின் நக்கித் தின்னும் ஒரு பொறுக்கிகள் கூட்டம், எப்போதும் சலசலத்து அலைமோதுகின்றது.

பணத்தை தலைக்கு மேலாக குவித்து வைத்திருப்பவன், பணத்தை மேலும் மேலும் பல மடங்காக பெருக்க பிசாசாகி அலைகிறான். இதற்குத் தடையாக உள்ள அனைத்து சமூகக் கூறுகளையும் ஈவிரக்கமின்றி அழித்தொழிப்பதில், தனது முழுமையான இழிவான வக்கிரமான சமூகப் பாத்திரத்தை கையாள்கின்றான். இந்த நோக்கில் தனது செல்வத்தை பயன்படுத்துகின்றான். இதைத்தான் இன்று, மனித இனத்தின் சுதந்திரமாகக் காட்டி புனையப்படுகிறது. இதுதான் ஜனநாயகமாக முலாமிடப்படுகின்றது.

இப்படிப்பட்ட நிதி மூலதனம்தான் கொழுக்கின்ற போது, அது உற்பத்தியில் ஈடுபடுவதில்லை. அதாவது உழைப்பிலான உற்பத்தியில் ஈடுபடாது, செல்வத்தை அதில் இருந்து உறிஞ்சிப் பெருக்குகின்றது. அது தனக்கு கீழ், உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளியை வைத்து சுரண்டுவதில்லை. உழைப்பிலான செல்வத்தை உழைப்பில் ஈடுபடாமல் கொள்ளையிடுவதற்கான சூழலை உருவாக்கி, அதன் மூலம் கொழுக்கின்றது.

வெற்றுப் பேப்பரில் அச்சடிக்கப்பட்ட பணம் குட்டி போடுவதில்லை. பணத்தைக் கொண்டு பணம் பெருக்கப்படுகின்றது என்றால், அது சூக்குமமான வழிகளில் இயங்குகின்றது. கோடான கோடி உழைக்கும் மக்களின் உழைப்பைத்தான், அது சுற்றிவளைத்து திருடுகின்றது. பணம் வைத்திருப்பவன் உற்பத்தியல் ஈடுபடும் முதலாளியை இடைத்தரகராக மாற்றி, முதலாளி சுரண்டுவதில் ஒரு பகுதியையும் உழைப்பாளியின் கூலியின் ஒரு பகுதியையும் திருடுகின்றது. அரசுகளை இடைத்தரகராகக் கொண்டு வரியை அளவிட்டு, அதைச் சுருட்டுவதன் மூலம் தான் நிதி மூலதனம் கொழுப்பேறி கொழுக்கின்றது. இந்தக் கடைந்தெடுத்த சூறையாடலை கடன், நன்கொடை என்று விதவிதமாக அதற்கு பெயரிட்டு நடத்துகின்றனர். உலகமயமாதலின் உயிர் இதற்குள் தான் இயங்குகின்றது.

இப்படி சமூக உழைப்பிலான அனைத்துச் செல்வத்தையும் கவர்ந்து சூறையாடுகின்றவன், தனது செல்வத்தைப் பாதுகாக்க, அரசையும் அரசியல் சட்ட அமைப்புகளையும் தனக்கு இசைவாக உருவாக்கினான், உருவாக்குகின்றான். மனிதனை சூறையாடும் சட்ட அமைப்புகளை, மேலும் மேலும் தனக்கு இசைவாக மாற்றும் வகையில், உலகளாவிய சட்டங்களையே தனக்காக மாற்றுகின்றான். இந்த சமூக விரோத தனிமனித வக்கிரம் என்பது, தனிமனித நலன் சார்ந்த லும்பன் குணாம்சங்களானது. இவையே எங்கும் முழு பரிணாமம் பெற்று, முழு மக்களுக்குமான ஒரு சட்டமாகின்றது.

இப்படி மனிதவிரோத, சமூக விரோத சட்டங்களையே, அன்றாடம் சமூகத்துக்கு எதிராக உருவாக்கி வருகின்றனர். இதை கார்ல் மார்க்ஸ் அன்றே, அவர் வாழ்ந்த சமூக அமைப்பில் இனம் கண்டு கூறியது என்பது, இந்த மனிதவிரோதத்தை புரிந்துகொள்வதை மேலும் துல்லியமானதாக்குகின்றது. பிரான்சின் வர்க்கப் போராட்டம் என்ற தனது நூலில் கார்ல் மாக்ஸ் நிதி ஆதிக்க மேற்குடியினர் சட்டங்களை இயற்றியதால், அரசு நிர்வாகத்திற்கு தலைமை வகிக்கிறது. அரசாங்க அதிகாரங்கள் அனைத்தையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றது. பத்திரிகை மூலமும் மற்றும் உண்மையான அரச விவகாரங்கள் மூலமும் பொதுக் கருத்தை மாற்றுவதற்கு அதிகாரம் படைத்திருக்கின்றது. அதே விபச்சாரம், அதே வெட்கங்கெட்ட மோசடி, அதே பணக்காரன் ஆக வேண்டும் என்ற அரிப்பு, ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு அரங்கத்திலும் தொடர்ந்து எதிரொலித்து வருகின்றது... உற்பத்தி மூலம் செல்வந்தன் ஆக வேண்டும் என்று நினைக்கவில்லை, மாறாக ஏற்öகனவே உற்பத்தி செய்து பிறர் வைத்திருக்கும் சொத்தைக் களவாடி தன் பையில் போட்டுக் கொள்வதன் அடிப்படையில், செல்வந்தனாக எண்ணுகின்றனர். அடிப்படையில் எப்போதுமே முதலாளித்துவ சட்டங்களோடு மோதிக் கொண்டும், ஆரோக்கியமற்ற மிருக வெறி உணர்வோடு முதலாளித்துவ சமுதாயத்தின் மேல்தட்டு மக்கள் செயல்படுவர்... நிதி ஆதிக்க சக்திகள் பணம் திரட்டுவதிலும் வாழ்வை அனுபவிப்பதிலும் முதலாளித்துவ சமுதாயத்தின் உச்சத்தில் மீண்டும் லும்பன் சமுதாயம் தோன்றுவதைக் குறிக்கின்றது மிகச் சரியாக, மிகத் தெளிவாக கார்ல்மார்க்ஸ் எடுத்துக்காட்டுகின்றார். இன்று இதுவே உலகமயமாகி முதிர்ந்துவரும் வடிவத்தையும், அதன் லும்பன்தனமான அராஜகத்தையும் காண்கின்றோம்.

உலகளாவிய அரசு கட்டமைப்புகள் முழுமையாகவே, இன்று நிதிக் கும்பல்களால் ஆட்டிப் படைக்கப்படுகின்றது. சகல பொருளாதாரச் செயல்பாடுகளும் முழுமையாகவே நிதிக்கும்பலின் சூறையாடலுக்கு ஏற்ற வகையில் புனையப்பட்டு, அவை தீர்மானிக்கப்படுகிறது. உற்பத்தி மீதான சுரண்டலை மிஞ்சி, நிதி மூலமான சூறையாடலே முதன்மையான ஒன்றாகியுள்ளது. கஞ்சிக்கே வழியற்ற ஏழை எளியதுகளின் கோவணத்தையும் உருவும் நிதிக் கொள்கை, உலகெங்கும் மக்களை தனது காலில் போட்டு மிதிக்கின்றது. நிதி மூலதனம் மூலமான சூறையாடல், பல வழிப்பட்டதாக, பல்துறை சார்ந்தாக மாறிவருகின்றது. மக்கள் மூச்சு விட்டால், அதற்கும் கூட வரிகட்ட வேண்டிய மனித அவலம். இதுவே உலகமயமாதல் என்ற அமைப்பின், உன்னதமான இலட்சிய இலக்காக உள்ளது.

இயற்கையின் எல்லாக் கூறுகளும், பணம் சம்பாதிப்பதற்காகவே என்ற விதி கையாளப்படுகின்றது. இதனடிப்படையில் தான் விரும்பிய விலையில் அனைத்தும் விற்கப்படுதல் என்பதே, உலகமயமாதலின் உயரிய இலட்சியமாகும். பணம் இல்லாதவன் வாழக் கூடாது என்பதும், இதன் கொள்கையாகும். உழைப்பு உற்பத்தி செய்யும் பணம், மற்றவனிடம் இருக்கக் கூடாது என்பது நிதி மூலதனத்திலான சமூக ஒழுக்கமாகும். இதை கடைபிடிக்க சாமபேதம் எதுவுமின்றி செயல்படுகின்றது. இது உருவாக்கும் சமூக அவலங்கள் எதையும் கண்டு கொள்வதில்லை. இதன் விளைவால் மனித மரணங்களையே வீரியமாக உற்பத்தி செய்கின்றது. அதைக் கூட ரசிக்கின்ற நாகரிகமே, உலக ஒழுங்காகின்றது. இந்த வர்க்கம், பணத்துக்காக பாய்விரித்து விபச்சாரம் செய்வதே இதன் அரசியல் பொருளாதார நிதிக் கொள்கையாகும்.

எங்கும் எதிலும் ஈவிரக்கமற்ற சூறையாடல், இதுவே உன்னதமான இலட்சியமாக, உலகமயமாதலாக விரிந்து நிற்கின்றது. இதைத்தான் (பின்) நவீனத்துவம் என்கின்றனர். மக்களின் (சமூக) வாழ்வுக்குள் என்னதான் நடக்கின்றது. 1987இல் மிக வறுமையில் சிக்கி இருந்த 95 நாடுகளை எடுத்தால், மருத்துவத்திற்கு அவர்கள் தமது சொந்த தேசிய வருமானத்தில் 1.1 சதவிகிதத்தையே பயன்படுத்தினர். கல்விக்கு 2.5 சதவிகித்தையே பயன்படுத்தினர். ஆனால் கடனுக்கான வட்டி மற்றும் அது சார்ந்த கொடுப்பனவு (அதாவது சேவிஸ்) 4.5 சதவிகிதத்தை கொடுத்தனர். இது 1980க்கு முன் இல்லாத, ஒரு புதிய நிதிச் சூறையாடல். ஒரு நாடு தனது சொந்த தேசிய வருமானத்தில் ஒரு பகுதியை, அன்னியனுக்கு இப்படி இழக்கின்ற சமூக (மனித) அவலம். இதன் விளைவு என்பது வறுமையின் பெருக்கமே, இதன் உள்ளார்ந்த சமூக விதியாகின்றது. சமூகத்தின் வறுமை பல சமூக சீரழிவுகளையும், மக்கள் கூட்டத்தின் மொத்தமான மரணத்தையும் கூட வித்திடுகின்றது.

இன்று வருடாந்தம் 10 கோடி மக்கள் இந்த சீரழிவான உலகமயமாதல் ஜனநாயகத்தில், அதன் சுதந்திரத்தின் விளைவால் மரணித்துப் போகின்றனர். இது அதிகார பூர்வமான புள்ளிவிபரங்களின் மொத்தத் தொகையாகும். மனிதனின் அடிப்படை தேவையை மறுக்கின்ற இந்த உலகமயமாதலின் விளைவால், 10 கோடி மனித மரணம் என்ற உண்மை வெறும் புள்ளி விபரமாகிப் போகின்றது. நாகரிக மனிதன் முன் அவை அற்பத்தனமாகி, புறக்கணிப்பாகின்றது. இதற்காக மனம் வருந்துவது கூட, சுதந்திரமான உணர்வை நஞ்சாக்கிவிடும் என்ற பகட்டு வாழ்க்கை முறை வாழப்படுகிறது.

இப்படி மனித அழிவில் செருக்குடன் ஆதிக்கம் புரிகின்றது நிதி மூலதனம். கடனுக்கான கொடுப்பனவை விட, வட்டி மற்றும் நிதியை மீள அளவிடுதல் முதல் பற்பல நிதிச் சூறையாடலை நடத்துகின்றது. நாம் இதை விரிவாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதன் மூலம், இந்த உலகமயமாதல் எப்படிப்பட்ட இழிந்த சமூகப் பாத்திரத்தை வகிக்கின்றது என்பதையும், எப்படி மனிதனுக்கு எதிரானது என்பதையும் நாம் காணமுடியும்.


பி.இரயாகரன் - சமர்