உ லகமயமாதல் எப்படி மனித குலத்துக்கு எதிராகச் செயல்படுகின்றது என்பதையே மேலே பார்த்தோம். மனித வாழ்விற்கான சகல அடிப்படைக் கூறுகளையும், மனிதன் ஒரு சமூகக் கூறாக நெருங்க முடியாத வகையில், நலமடிப்பதே உலகமயமாதலின் அடிப்படை குறிக்கோளாகவே உள்ளது. இயங்கியலின் போக்கையே இது மறுதலிக்கின்றது. இயற்கையின் உள்ளடக்கத்தை, மனிதன் தனது சமூக இருப்பின் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்திய இயங்கியல் போக்கில் இருந்து, அவனைத் துண்டிக்கும் பணியை மூலதனம் செய்கின்றது. அதாவது மனிதர்களின் மிகப் பெரும் பகுதியை மந்தைக்குரிய நிலைக்குத் தரம் தாழ்த்தி, அடைத்து வளர்க்கும் ஒரு மந்தையின் பண்பின் நிலைக்கு இட்டுச் செல்வதே உலகமயமாதலாகும்.
மனித உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டவும், அவனின் தேவையை வெறும் மந்தைக்குரிய நிலையில் தான் கொடுப்பதை மட்டும் நுகரப் பண்ணுவதன் மூலம், உலகை ஒரு குடையின் கீழ் சொத்துடைய சிலர் அடக்கியாள நினைப்பதே இன்றைய உலகமயமாதலாகும். மனிதனுக்கு நிகழும் இந்த அவலநிலையை முழுமையாக புரிந்து கொள்ளும் வகையில், இதையொட்டிய பல கட்டுரைகள் உள்ளடங்கிய வேறு சில நூல்கள் மிக விரைவில் வெளிவரவுள்ளது. உலகளாவிய கடன், சுற்றுச்சூழல், தண்ணீர், அகதிகள், போர்கள், கடல் வளம், நிலவளம், இயற்கை, மரபணு மாற்றங்கள், தன்னார்வக் குழுக்கள் என பற்பல விடையங்களை எனது இந்த நூல் உள்ளடக்கவில்லை.
மனித இரத்தத்தை உறிந்து வெறியாட்டம் போடும் மூலதனத்தின் அடங்காவெறியுடன் உலகம் சூறையாடப்படுகின்ற இன்றைய நிலையில், அவற்றை சுயமாகப் புரிந்து கொள்வதற்கு இந்த நூல் சுயாதீனதமாகவே உங்களை அழைத்துச் செல்கின்றது. ஒவ்வொரு தரவும் இந்த உலகமயமாதலின் கோரத்தை எடுத்துக் காட்டுவனவாக இருப்பதை இது உறுதி செய்கின்றது.
பொருட்களே மனித சிந்தனையினை உருவாக்குகின்றது என்ற உள்ளடக்கத்தை, மூலதனம் மிகச் சரியாக உள்வாங்கியபடி, மனிதனின் உணர்வை நுகர்வுக் கண்ணோட்டத்தில் உலகமயமாக்கிச் சிதைக்கின்றது. இதன் மூலம் பொருட்களின் மீதான நுகர்வு வெறியூட்டப்பட்டு, மனிதனை மந்தப்புத்தி உள்ள ஒருவனாகவே உருவாக்குகின்றது. அதாவது உலகமயமாதலில் ஊடகவியல் இப்படித்தான், இதற்குள் தான் இயங்குகின்றது. பொருளாதார ரீதியாக ஆதிக்கம் பெற்ற வர்க்கங்கள், முதலில் இந்த நுகர்வு வெறி பண்பாட்டுக்குள் பலியாகின்றனர். இது விதிவிலக்கின்றி உலகின் மூலைமுடுக்கெங்கும் பரவிச்செல்லுகின்றது.
சாதாரண ஏழைக் குடும்பங்களில் கூட, உழைப்பில் இருந்து அன்னியமாகும் குழந்தை கூட தனது அற்பக் கூலியைக் கொண்டு ஆடம்பரமான நுகர்வை அடையத் துடிக்கும் வகையில், சிந்தனைத் தளம் மிக மோசமாகவே சமுதாயத்தில் ஒரு நஞ்சாக ஊடுருவிப் பாய்கின்றது.
மக்கள் தமது உழைப்பையும், சொத்துக்களையும் மூலதனத்திடம் வரைமுறையின்றி இழந்து வரும் இன்றைய நிலையில், வறுமையும் இயலாமையும் உலகத்தின் நியதியாகி விடுகின்றது. இதுவே சுதந்திரம், இதுவே மனித ஜனநாயகம் என்ற விளக்கமே உலகின் பொதுவாக அங்கீகாரம் பெற்ற ஒன்றாகவும் அடிப்படைக் கோட்பாடாகவும் உள்ளது. சிலர் உண்டு வாழும் வாழ்க்கையே, எதார்த்த உலகின் உன்னதமான ஜனநாயகமாகவும், சுதந்திரமாகவும் புனையப்பட்டுள்ளது. இந்த வாழ்க்கை வாழ்பவனின் இருப்பை ஏற்றுக் கொள்வதே, ஜனநாயகமாகவும் சுதந்திரமாகவும் அங்கீகரிக்கும் சித்தாந்தம் மிக நுட்பமாகவே மனித சிந்தனையில் புகுத்தப்படுகின்றது.
உழைக்கும் மக்கள் தமது உழைப்பை விற்றபின், அவர்கள் வாழவழியற்ற நிலையில் இட்டுச் செல்கின்றது உலகம். உழைப்பை வாங்கியவன் செல்வங்களின் உச்சியில் ஏறியமர்ந்து கொண்டு, உலகை தனக்கு இசைவாக வழிகாட்ட முனைகின்றான். தனக்கு உலக மக்கள் சேவை செய்வதன் மூலமே, மக்கள் சந்தோசமாக வாழமுடியும் என்ற மனிதவிரோத உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்ட, உலகளவில் மிகப் பெரிய பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்வதே இன்று மிகப் பெரிய சேவைத்துறையாக திரிபடைந்து விட்டது.
இந்த உலகமயமாதலின் கோரமுகத்தை நாம் புரிந்து கொள்ள, ஒவ்வொரு சின்ன விடையங்களையும் நுணுகிப் புரிந்து கொள்வது மனிதனின் இன்றைய அறிவியல் தேவையாகும். இதை நாம் செய்யும் போது நாம் காண்பது, மிகப் பிரம்மாண்டமான அழிவில் மனித இனம் நின்று கொண்டிருப்பதைத்தான். ஒரு அடிமையாய், தெருவோர நாயாய், மனிதன் மாற்றப்பட்டதைப் புரிந்து கொள்ள முடியும். இந்த உலகமயமாதல் இதைத் தான் மனித சமூகத்துக்கு வழிகாட்ட முனைகின்றது என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும். மனிதன், தனக்காக, தான் போராட வேண்டிய அவசியத்தை இது வழிகாட்டுகின்றது.