Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 ஏற்றுமதிச் சந்தையைக் கட்டுப்படுத்திய ஏகாதிபத்தியம், மூன்றாம் உலக நாடுகளின் தலைவிதியை பலதுறையில் முடமாக்கியது. சர்வதேச சந்தையில் வர்த்தகப் பொருட்களுக்குத் தேவையான ஆதாரப் பொருட்கள், 1979இல் 40.5 சதவீதமாக இருந்து. இது 1987இல் 28.4 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. அதாவது மூலப் பொருட்களின் விலை வீழ்ந்து, அதனிடத்தில் விலை அதிகம் கொண்ட உற்பத்திப் பொருட்கள் ஆக்கிரமித்துக் கொண்டன. 1980க்கும் 1986க்கும் இடையில் ஆதாரப் பொருட்களின் விலை 30 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டது. சில மூலாதாரப் பொருட்களின் விலை கடந்த 50 ஆண்டுகளுக்கு முந்திய அடிமட்ட விலைக்கு வீழ்ச்சி கண்டது. இரண்டாம் உலக யுத்தத்தின் பின்பான தேசங்களின் வளர்ச்சியை, இதன் மூலம் ஏகாதிபத்தியம் பல்வேறு வழிகளில் தடுத்து நிறுத்தின. சொந்த மக்களைப் பற்றி அக்கறைப்படாத சந்தைப் பொருளாதாரம் என்ற தேசிய கூக்கூரலை, குரல் வளையில் நெறிக்கப்பட்ட நிலையில் ஏகாதிபத்தியங்களால் சிலுவையில் அறைப்பட்டன. உயிர்த்தெழும் அனைத்து வாய்ப்புகளையும், இந்தச் சமூக அமைப்பில் இல்லாது ஒழித்தன.

 

 

 மூன்றாம் உலக நாடுகளின் மொத்த தலைவிதி படுபாதாளத்தில் வீழ்ந்தது. உண்மையில் 1984இல் 130 பின்தங்கிய நாடுகளின் மொத்த தொழிலுற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியில் கூட, 73 சதவீதத்தை எட்டு பின்தங்கிய நாடுகளே கைப்பற்றியிருந்தன. இந்த எட்டு நாடுகளும் பிரேசில், மெக்சிகோ, அர்ஜென்டினா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர், ஹாங்காங், தாய்வான் ஆகியனவாகும். பின்தங்கிய 130 நாடுகளில் 15 சதவீதத்தினர் வாழும் நாடுகள், மொத்த இந்த நாடுகளின் உற்பத்தியில் 53 சதவீதத்தைக் கட்டுப்படுத்தினர். 59 சதவீத மக்கள் வாழும் நாடுகள், மொத்த பின்தங்கிய நாடுகளின் உற்பத்தியில் 17 சதவீதத்தையே கொண்டிருந்தனர். 19811985க்கு இடையில் இந்த 130 நாடுகளின் தேசிய உற்பத்தியின் சராசரி வளர்ச்சி வீதம் 1.4 சதவீதமாக இருந்தது. ஆனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் வளர்ச்சி வீதம் 3.6 சதவீதமாக இருந்தது. உண்மையில் பின்தங்கிய நாடுகளுக்கிடையிலேயே கடுமையான ஏற்றத்தாழ்வு காணப்பட்டது.


 அதாவது மூன்றாம் உலக நாடுகளிலும் ஏற்றத்தாழ்வான சமூக இருப்பை ஏகாதிபத்தியம் திணித்தது. ஆழமாக ஏகாதிபத்தியம் புகமுடிந்த பிரதேசங்களில், வளர்ச்சி விகிதம் கூடுதலாக காணப்பட்டது. ஆனால் இதில் உள்ள உண்மை என்னவென்றால், அவை சொந்த தேசிய உற்பத்தியைச் சார்ந்ததாக இருக்கவில்லை. மாறாக அன்னிய மூலதனத்தின் ஊடுருவல் அதிகரிப்பும், அது சார்ந்த உற்பத்தி அதிகரிப்புமே வளர்ச்சியாகக் காட்டப்பட்டது. மூன்றாம் உலக நாடுகளின் தேசிய எல்லைக்குள்ளான தேசிய உற்பத்திகள், கடுமையான நெருக்கடிக்குள் சிக்கிச் சிதைந்தன. புதிதாக நவீனத் தொழில் நுட்பத்தின் வருகை, மரபான இயற்கை சார்ந்த இலகுவாக எல்லோராலும் உற்பத்தி செய்யக்கூடிய தொழில் நுட்பத்தை இல்லாது ஒழித்தது. உற்பத்தி மீதான கட்டுப்பாட்டை தேசிய மக்கள் படிப்படியாக இழப்பதை, இந்த நவீனத் தொழில் நுட்பம் துரிதமாக்கியது. ஏகாதிபத்தியத்தின் நவீனத் தொழில் நுட்பம், சந்தையை கட்டுப்படுத்தும் புதிய ஆயுதமாகியது. உற்பத்தித் துறையில் தொடங்கி இது அனைத்துத் துறையிலும் புகுந்து கொண்டது. குறிப்பாக இயற்கை சார்ந்த பரந்த உற்பத்தி வடிவத்தையே முற்றாக மறுதலித்தது. இயற்கை சார்ந்த மனித வாழ்வியல், தொழில் நுட்பம் சார்ந்த எல்லைக்குள் நுட்பமான ஒரு அடிமைக் கருவியானான். மனிதஇனம் மீதான ஏகாதிபத்தியத்தின் மிகக் கொடூரமானதும் வக்கிரமானதுமான இயற்கை விரோதப் போக்காக இது உள்ளது.


 மனிதன் வெறுமனே தொழில்நுட்பத்தின் ஒரு உறுப்பாகி, சந்தையில் செல்லாக்காசாகி விட்டான். தொழில்நுட்பச் சந்தை உலகை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. இதை அடிமையாக கிடக்கும் மூன்றாம் உலக நாடுகள் நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலையில், சந்தை தனது சொந்தப் புதிருடன் மற்றொரு போக்கில் காணப்படுகின்றது. 1993இல் பன்னாட்டு நிறுவனங்கள் இலத்திரனியல் துறையில் உள்ள தொழில்நுட்பத்தில்  80 சதவீதத்தை, உலகளாவிய ரீதியில் கட்டுப்படுத்தியது. எல்லா ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் 70 முதல் 80 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. பொதுவான தொழில்நுட்பத்தை 80 முதல் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இது எதைத்தான் நமக்கு வழிகாட்டுகின்றது. அறிவியல் துறையும், தொழில்நுட்பமும் உலகளவில் கட்டுப்படுத்தும் உலகமயமாதல் என்ற அமைப்பின் சுதந்திரம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றால், மக்கள் வெறும் வளர்ப்பு மந்தைகள் தான் என்பதை சொல்லாமல் சொல்லி விடுகின்றது. அதாவது மனிதனின் இயற்கையான அறிவியல் தெரிவை மறுத்து, அறிவியல் சூனியத்தையே உலகமயமாக்குவது முதன்மைப் பொருளாகியுள்ளது. அறிவியல் உற்பத்தியை விரிவாக்கும் என்பதால், அறிவியலை பரந்துபட்ட மக்களுக்கு மறுப்பது உலகமயமாதலின் அடிப்டையான விதி. அறிவியலை தனது வர்த்தகம் சார்ந்த உற்பத்திக்கு மட்டும் என்ற எல்லைக்குள் மட்டும்தான் உலகமயமாதல் அறிவை அனுமதிக்கின்றது. மற்றவை அனைத்தும் இருந்த இடம் தெரியாது அழிக்கப்படுகின்றது.


 இது போன்று பொது அறிவில் கூட இதே நிலை பேணப்படுகின்றது. 1993இல் ஐ.நா வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கல்விக்காக உலகில் தனிநபருக்கு வருடம் செலவு செய்வது 207 டாலராகும். இதில் மேற்கு அல்லாத வறிய நாடுகளில் 33 டாலரே செலவு செய்யப்பட்டது. மிக வறிய நாடுகளில் இந்த செலவு புறக்கணிக்கத்தக்க அளவில் மிகச் சிறிதாகவே உள்ளது. உண்மையில் வறிய நாடுகள் 33 டாலரை செலவு செய்ய, மிகுதி மேற்கு நாடுகளில் பங்கிடப்படுகின்றது. பொதுவான அடிப்படையான அறிவின் விருத்தி கூட, வறிய நாடுகளுக்கு அவசியமற்ற பொருளாகிவிட்டது. வறிய நாடுகளின் அறிவும், தொழில் நுட்பமும் திட்டமிட்டே, அடிப்படைக் கல்வி மூலமே மறுக்கப்படும் போது, மேற்கில் இது பன்னாட்டு நிறுவனத்தின் எல்லைக்குள் வக்கிரப்படுகின்றது. லாபம் தரும் சந்தையின் எல்லைதான், அறிவின் வளர்ச்சி விதியாகி விடுகின்றது. இது மூன்றாம் உலக நாடுகளின் நவீன அடிமைத் தனத்துக்கு கம்பளமிட்டுவிடுகின்றது. 

 

 அறிவின் மீதான சூறையாடலும், அழிப்பும், திணிப்பும், உலகின் சுதந்திரமான அனைத்து தெரிவையும் மறுக்கின்றது. மறுபக்கம் நவீன அறிவை சில நிறுவனங்கள் தமது தனிப்பட்ட சொத்தாக்கி விடுகின்றனர். 1995இல் ஐந்து பன்னாட்டு நிறுவனங்கள், இயந்திர வர்த்தகத்தில் 50 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. இதன் மூலம் குறிப்பாக நவீன தொழில் நுட்பத்தை ஏகபோகமாக்கி உள்ளனர். இதன் மூலம் 1993இல் நவீன தொழில் நுட்பம் சார்ந்த உலக வர்த்தகத்தில் பெரும் பகுதியை ஐந்து பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தின. உதாரணமாக


பாவனைப் பொருட்கள்                                                                 70 சதவீதம் 
கார் மற்றும் சரக்குகள்                                                                58 சதவீதம் 
விமானம்                                                                                             58 சதவீதம் 
வான்வெளிப் பொருட்கள்                                                           55 சதவீதம் 
இலத்திரனியல் பொருட்கள் மற்றும் உதிரிப்பாகம்     53 சதவீதம் 
ஒயில், தனிப்பட்ட கம்ப்யூட்டர், தகவல் உற்பத்தி          50 சதவீதம்
உருக்கு                                                                                                 50 சதவீதம்


 சர்வதேச சந்தையில் 1993இல் நவீனத் தொழில் நுட்பம் சார்ந்த உற்பத்திகளை சில நிறுவனங்களே கட்டுப்படுத்தின. இந்த நிலையில் உலகளவில் தேசங்களின் தனித்துவமான தேசியப் பண்புகள் அனைத்தும், இருந்த இடம் தெரியாது போய்விடுகின்றது. உண்மையில் உற்பத்தி சார்ந்த வளர்ச்சிக்கான தொழில் நுட்பமும் மற்றும் அடிப்படையான மூலவளங்கள் என அனைத்தையும் தேச எல்லைகளைக் கடந்த ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த சில பன்னாட்டு நிறுவனங்களே கட்டுப்படுத்தின. சுயமான தெரிவும், அது சார்ந்த உற்பத்தியும் உலகளவில் மறுக்கப்பட்டு விட்டன. மக்களின் அடைப்படைத் தேவைகள் புறக்கணிக்கப்படுகின்றது. மாறாக சந்தைப் பொருளாதாரம் என்ற எல்லைக்குள், உலகளவில் உற்பத்திகள் திட்டமிடப்படுகின்றன. பொருட்களை வாங்கும் திறனை எந்த வர்க்கம் கொண்டுள்ளதோ, அவர்களின் தேவை சார்ந்த பொருள் உற்பத்தி என்ற எல்லைக்குள் உலகப் பொருளாதாரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. பொருளை வாங்கும் திறனற்ற மக்களின் தேவை சார்ந்த உற்பத்தியை மறுப்பதை, உலகமயமாதல் தனது சொந்த நிபந்தனையாகவே கொண்டுள்ளது. உலகமயமாதல் கோட்பாட்டை உருவாக்கிய விரல்விட்டு எண்ணக் கூடிய சில பன்னாட்டு நிறுவனங்கள் பொருளாதாரம், அடிமட்ட மக்களின் தேவையை உற்பத்தி செய்வதில்லை. அவர்களுக்கான உற்பத்திகளையும் அங்கீகரிப்பதில்லை. இப்படி அடிநிலையில் எதையும் வாங்க முடியாத மக்கள் தொகை, மொத்த உலக சனத் தொகையில் அரைவாசிக்கு மேலாக உள்ளது. அடிமட்ட மக்களின் தேவையை மறுப்பவர்களுக்கு, சுதந்திரமான சந்தை விதிகளைக் கூட அனுமதிப்பதில்லை. மாறாக உலகச் சந்தையில் வாங்கத் திறனற்ற மக்களிடம் அடிப்படையாக எஞ்சிக் கிடக்கும் உற்பத்திகளையும், வளங்களையும், கைப்பற்றுவதே உலகமயமாதலின் அடிப்படையான செயல் திட்டமாகும். இதையே இன்று உலகமயமாக்குகின்றனர். இதை விட்டு வேறு எந்த விளக்கமும் உலகமயமாதலுக்கு கிடையாது. இப்படி உருவாகி வரும் உலகம் மீதான ஆதிக்கம் மிகப்பிரம்மாண்டமானது.


 2000 ஆண்டில் முதல் மிகப் பெரிய 500 நிறுவனங்களும் அவற்றின் முதலீடுகளும்


கம்ப்யூட்டர், தொலைபேசி               54 நிறுவனங்கள்                   347,100 கோடி டாலர்
தொலைபேசி சேவைத்துறை         51 நிறுவனங்கள்                 3,46,100 கோடி டாலர்
வங்கி                                                          65 நிறுவனங்கள்                 1,98,000 கோடி டாலர்
கம்யூட்டர் தரவுகள் (அடிப்படைதரவுகள்)
கம்யூட்டர் சேவைத் துறையும்    42 நிறுவனங்கள்                 1,92,100 கோடி டாலர்
மருந்து உற்பத்தி                                 21 நிறுவனங்கள்                 1,46,700 கோடி டாலர்
பெட்ரோல், வாயு                                   13 நிறுவனங்கள்                 1,01,900 கோடி டாலர்
மின்சாரம், இலத்திரனியல்              17 நிறுவனங்கள்                   97,700 கோடி டாலர்
பொருட்கள் செய்தி அமைப்பு       32 நிறுவனங்கள்                    70,700 கோடி டாலர்
பெரிய விற்பனையகங்கள்             15 நிறுவனங்கள்                    70,500 கோடி டாலர்
காப்புறுதி                                                  14 நிறுவனங்கள்                    66300 கோடி டாலர்


 இப்படி நவீனத் தொழில் நுட்பம் சார்ந்த 500 பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் பெரும் ஆதிக்கம் வகிக்கின்றன. சில தனி நிறுவனங்களே பல தேசங்களின் தேசிய வருமானத்தையும் கடந்து ஆதிக்கம் வகிக்கின்றன. இதன் வர்த்தக ஆதிக்கம் என்பது மிகப் பிரம்மாண்டமானது. இது ஒரு புள்ளியை நோக்கிக் குவிகின்றது. எல்லாவற்றையும் சில நிறுவனங்கள் தமதாக்குகின்றன. அத்துடன் ஒரு சில பொருட்கள் என்ற எல்லைக்குள் மனிதனின் நுகர்வைக் கட்டுப்படுத்தி, இயற்கையின் பன்மைக் கூறுகளையே இந்த நிறுவனங்கள் அழிக்கின்றன. சில பொருட்கள் சார்ந்த நுகர்வு என்ற மந்தைத் தனத்தை உலகமயமாக்குகின்றனர்.


 உதாரணமாக 1999இல் முதல்தரமான மார்க்காக இருந்த 20 பொருட்களில் 14 அமெரிக்காவுடையது. முதல் பத்தும் அமெரிக்காவுக்குச் சொந்தமாக இருந்தது. இதே போல் 4 ஐரோப்பாவினுடையதாகவும், 2 ஜப்பானுக்கு சொந்தமாக இருந்தது. இந்தப் பொருட்களின் நுகர்வு சார்ந்த சந்தைப் பண்பாடு, உலகமயமாதலில் வீறுகொண்டு வளர்ச்சியுறுகின்றது. பெருமெடுப்பில் உருவாகும் மனித மந்தைகளைச் சார்ந்த மார்க் நுகர்வே, இன்றைய நவீன சந்தைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உதாரணமாகச் சிலவற்றைப் பார்ப்போம். நவீன சந்தையில் உலகளவில் 13 இடத்தில் தரநிர்ணயம் செய்யப்பட்ட கொக்கோகோலாவின் சொத்து 4560 கோடி டாலராகும். உலகமயமாக்கும் உலகில், கொக்கோகோலா 200 நாடுகளிலில் 400 விதமான பொருட்களை சந்தைப்படுத்துகின்றது. உலகில் 10 இடத்தில் தரநிர்ணயம் செய்யப்பட்ட பெப்சிக் கோலாவின் சொத்து 5610 கோடி டாலராகும். அமெரிக்க குடிபான விற்பனையில் மூன்றில் ஒன்றை இது கைப்பற்றியுள்ளது. சந்தை வர்த்தகத்தில் மொத்தமாக 8680 கோடி டாலராக உள்ளது. இப்படி அமெரிக்காவில் தொடங்கி உலகெங்கும் தனது ஆதிக்கத்தால் இறுக்கி  விரிகின்றது. உலகின் குடிபானம் இவைகள் மட்டுமே என்ற நிலை மாறி வருகின்றது. உண்மையில் வளர்ப்பு மந்தை நிலையில், ஒரே குடிபானம் என்ற நிலைக்கு மனிதனை மூலதனம் மாற்றி வருகின்றது. அற்கோல் அல்லாத குடிபான உற்பத்தியில் 41 சதவீதத்தை கொக்கோகோலா, பெப்சிக்கோலா, நெஸ்ரில், டான் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றியுள்ளன. அதாவது 2002இல் மொத்தமாக உலகில் விற்பனைக்கு 65,000 கோடி லிட்டர் குடிபானம் விற்கப்பட்டது. இதில் 26,650 கோடி லிட்டரை இந்த நான்கு நிறுவனங்களுமே சந்தைப்படுத்தின. 65,000 கோடி லிட்டர் குடிபானத்தை உலகளவில் நுகர்வோரில் மேற்கு ஐரோப்பியர் தலா வருடம் 105 லிட்டரும், வடஅமெரிக்கர் 68 லிட்டரும், தென்அமெரிக்கர் 44 லிட்டரும், கிழக்கு ஐரோப்பியர் 20 லிட்டரும், மத்திய ஆப்பிரிக்கர் 11 லிட்டரும், ஆசியா மற்றும் பசிபிக் நாடுகள் 6 லிட்டர் வீதமாக இருந்தது. மந்தைப்புத்தி கொண்ட மார்க் நுகர்வு மேற்கில் அதிகமாகவும், பின்தங்கிய நாடுகளில் குறைவாகக் காணப்படுகின்றது. தேசிய உணவு மற்றும் குடிபானப் பண்பாடுகள் அன்னிய குடிபான ஊடுருவலை மட்டுப்படுத்தி எதிர் நீச்சலடிக்கவே முனைகின்றது. ஆனால் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் தேசியக் குடிபான உற்பத்திகளைக் கட்டுப்படுத்த பலவிதமான குறுக்குவழி சூழ்ச்சிகளை ஆதாரமாகக் கொள்கின்றது. ஆட்சி அமைப்பையும் சட்டதிட்டங்களையும் தனக்கு இசைவாக மாற்றி, சந்தையில் தேசியக் குடிபானங்களை இல்லாது ஒழிப்பதே அவர்களின் முதல் பணியாக உள்ளது. சந்தையை முற்றாக ஆக்கிரமிப்பது இந்த நிறுவனங்களின் சுதந்திரமான பணியாக உள்ளது.


 இதற்கு தனது மிகப் பெரிய உலக வர்த்தக ஆதிக்கத்தையே பயன்படுத்துகின்றது. இந்தியாவை எடுத்தால் ஆயிரக்கணக்கான தேசிய குளிர்பான உற்பத்திகள், மிகக் குறுகிய காலத்திலேயே அழிக்கப்பட்டது. உலகில் மிகப் பெரிய குடிபான உற்பத்தி சார்ந்த மூலதனம் இதற்கு துணையாக இருந்தது. கொக்கோகோலாவின் மொத்த விற்பனை 2002இல் 1680 கோடி ஈரோவாக இருந்தது. இதன் நிகர லாபம் மட்டும் 260 கோடி ஈரோவாக இருந்தது. இந்த நிறுவனம் தண்ணீர் விற்பனையில் உலகளவில் 6 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இதே நேரம் பெப்சிக்கோலா 2002 மொத்த விற்பனை 2700 கோடி ஈரோவாக இருந்தது. இதன் நிகர லாபம் 360 கோடி ஈரோவாகும். உலகளவில் நீர் விற்பனையில் 4 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. 1996இல் உலகில் மிகப் பெரிய குடிபானத்தை தயாரித்த பெப்சிக்கோலா நிறுவனம் உலகில் 500 தொழிற்சாலைகளை உருவாக்கி இருந்தது. இந்த உற்பத்தியில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 3.35 லட்சம் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கியது. இப்படி குடிபான உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனங்கள் எதை உற்பத்தி செய்கின்றதோ, அதையே மக்கள் குடிக்க வேண்டிய நிலை உருவாகிவிட்டது. இங்கு தெரிவு மற்றும் சுதந்திரம் என எதுவும் சிந்திக்கும் மனிதனுக்கு கிடையாது. இதே போல் தான் உணவும். அடைக்கப்பட்ட உணவுகளை பெருமளவில் தயாரிக்கும் நெஸ்ரில் 126 நாடுகளில் 2 லட்சம் தொழிலாளர்களுடன் இயங்குகின்றது. குடிபானம் முதல் உணவுப் பொருட்கள் வரை சில நிறுவனங்கள் தனதாக்குகின்றன. அத்துடன் இந்த நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்களே அன்றாட மனித உணவாக்கப்படுகின்றன. இதற்கு வெளியிலான மாற்று மற்றும் சுதந்திரத் தெரிவை மறுப்பதே உலகமயமாதல். உதாரணமாக மக்டொனால் என்ற உணவக உணவு 1955இல் ஒரேயொரு நாட்டில் சிலரால் மட்டும் உண்ணப்பட்டது. ஆனால் 1975இல் 20க்கு உட்பட்ட நாடுகளில் இந்த உணவு உண்ணும் நிலை உருவானது. ஆனால் 1999இல் 109 நாடுகளில் அன்றாட உணவாகியுள்ளது. மனிதன், உழைப்பும் அதனால் உருவாகும் பண்பாடு சார்ந்து வெளிப்பட்ட, பன்மை சார்ந்த உணவுக் கலாச்சாரம், எப்படி அழிந்து வருகின்றது என்பதையே இது எடுத்துக்காட்டுகின்றது. மாறாக மந்தைக்குரிய பண்பாடு சார்ந்த உணவைப் பெறும் வழிகளில், சந்தை மனிதப் பண்பாட்டையே மாற்றுகின்றது.


 மூன்றாம் உலகில் அடிநிலையில் வாழும் மக்கள் இந்த உலகச் சந்தையில், இந்த உணவை வாங்கி உண்ண முடியாது. இதனால் பாரம்பரியமான சில உணவு பழக்கங்கள் தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் அதேநேரம் தனது அன்றாட உணவுக்கான உற்பத்திகளை இழந்துவிடுகின்ற பரிதாபம் நடக்கின்றது. உற்பத்திகள் கூட ஏற்றுமதியாகி விடுகின்றன. மக்கள் தமது உற்பத்தி முறைமைகளை இழப்பது மட்டுமின்றி, பன்மையான பண்பாட்டு கலாச்சாரங்களையும் இழக்கின்றனர். ஒட்டு மொத்தமாக நுகர்வின் முறைமை மாறுகின்றது. பண்ணையில் மந்தைகள் எப்படி வாழ்கின்றனவோ, அப்படி மக்கள் சில நிறுவனங்களின் உற்பத்தி சார்ந்த அடிமையாக வாழக் கோருவதே உலகமயமாதல்.