மனித அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் பிரதான உற்பத்திகளை ஒரு சில நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் போது, அவை பெரும்பாலான நாடுகள் மேலான ஆதிக்கத்தைப் பெற்று விடுகின்றன. குறித்த நாட்டின் பிரதான வருவாயாக குறித்த ஒரு பொருள் உள்ள போது, அதை அன்னிய ஒரு நிறுவனம் அல்லது ஒரு சில நிறுவனம் கட்டுப்படுத்தும் போது, நாடே குறித்த நிறுவனத்தின் அடிமையாகி விடுகின்றது. இதனடிப்படையில் தான் பன்மையான பொருளாதார உற்பத்திக் கூறுகளை அழித்து, ஒற்றைப் பொருளாதாரத்தில் தங்கி நிற்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் திணிக்கின்றது. குறித்த ஒரு பொருளின் ஏற்றுமதியே, நாட்டின் அனைத்துத் தேவைக்குமான இறக்குமதிக்கான வளத்தை வளங்கும் நிலைமையை ஏகாதிபத்தியம் உருவாக்கின்றது. ஒரு நாட்டின் திவாலை எப்படி அறிவிப்பது என்பதையே, ஏகாதிபத்தியமும் இறுதியாகப் பன்னாட்டு நிறுவனங்களும் தனது கையில் எடுத்துக் கொள்கின்றன. இந்தவகையில் பல நாடுகளின் ஒட்டுமொத்த ஏற்றுமதியே ஒற்றைப் பொருளாதாரமாகியதுடன், அது ஏகாதிபத்திய சந்தைத் தேவைகளை பூர்த்தி செய்வதாக மாறியுள்ளது. உதாரணமாக பார்ப்போம்.
சிம்பாவே 71 சதவீதமான செப்பு
புரண்டி 73 சதவீதமான காபி
கினி பசோ 74 சதவீதமான கறுப்பு காயூ
யேமன் (மத்திய தரைக்கடல்) 84 சதவீதமான பெட்ரோல்
இப்படி ஒற்றைப் பொருளாதாரத்தில் தேசிய வருமானத்தையுடைய வகையில், உலகில் பலநாடுகள் உருவாக்கப்பட்டுவிட்டது, உருவாக்கப்படுகின்றது. குறிப்பாக இப்படி உருவாகியுள்ள 22 நாடுகளின் தேசிய வருமானத்தை விட, அந்த நாடுகளின் கடனின் தொகை அதிகமாகும். பன்மையான பொருளாதார வளங்களை அழித்து உருவாக்கப்படும் ஒற்றைப் பொருள் சார்ந்த உற்பத்தி முறைமை ஏகாதிபத்தியம் என்ற இயந்திரத்தின் ஒரு கூறாகவே நாட்டை மாற்றி விடுகின்றது. ஒற்றைப் பொருளாதார உற்பத்திகளை நம்பி நாடுகள் இருக்கும் போது, நாடுகளின் தலைவிதியை ஏகாதிபத்தியம் தனது கையில் எடுத்துக் கொள்கின்றது. இந்த வகையில் ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையை, ஏகாதிபத்தியம் சுயேட்சையாகவே கட்டுப்படுத்துகின்றது. இதைப் பயன்படுத்தி மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையை, என்றுமில்லாத வகையில் சர்வதேச சந்தையில் திடீர் சரிவை உருவாக்கினர், உருவாக்குகின்றனர். இதன் மூலம் மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியதுடன், விலைச் சரிவு மூலம் உயர்ந்த தரத்திலான, அதிகளவிலான நுகர்வை மேற்கு பெற்றுக்கொண்டது, பெற்றுக் கொள்கின்றது. மறுபக்கத்தில் மேற்கின் நலனையே பூர்த்தி செய்யும், நவீன அடிமைகளை உருவாக்கி விடுகின்றது. 1980க்கும் 1990க்கும் இடையில், உலகில் மிக முக்கிய 10 பொருட்களின் ஏற்றுமதி விலை 25 சதவீதத்தால் குறைந்து போனது. 1980க்கும் 1989க்கும் இடையில் மூன்றாம் உலக நாடுகளின் பிரதான ஏற்றுமதிப் பொருட்களின் சர்வதேச விலை தொடர் வீழ்ச்சியைக் கண்டது. இந்த விலை வீழ்ச்சியை சதவீதத்தில் பார்ப்போம்.
கோதுமை -17 சதவீதத்தால் விலை குறைந்தது
பருத்தி பஞ்சு - 32 சதவீதத்தால் விலை குறைந்தது
காபி - 30 சதவீதத்தால் விலை குறைந்தது
சீனி - 64 சதவீதத்தால் விலை குறைந்தது
வெள்ளீயம் - 57 சதவீதத்தால் விலை குறைந்தது
ஈயம் - 28 சதவீதத்தால் விலை குறைந்தது
பெட்ரோல் - 53 சதவீதத்தால் விலை குறைந்தது
இரும்பு -17 சதவீதத்தால் விலை குறைந்தது
இப்படி சர்வதேசச் சந்தையில் மனிதத் தேவையின் ஆதாரப் பொருட்களின் விலையை ஏகாதிபத்தியம் சரிய வைத்ததன் மூலம், மூன்றாம் உலக நாடுகளின் ஏற்றுமதி வருவாய் பாதாளத்தை நோக்கிச் சென்றது. இதன் மூலம் அந்த நாடுகளின் அடிமைத்தனத்தையும் சரணடைவையும் நிபந்தனை இன்றிப் பெறும் உரிமையை மேற்கு பெற்றுக் கொண்டது. உண்மையில் பொருட்களின் விலைச்சரிவு, மூன்றாம் உலக நாடுகளின் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை. சந்தையில் பொருட்களாகவே நுகரப்படும் போது, விலைச் சரிவை அது கொண்டு இருக்கவில்லை. மாறாக விலை அதிகரிப்பே காணப்பட்டது. மறுபக்கத்தில் ஏற்றுமதி மூலமான விலை வீழ்ச்சியும், உற்பத்தி பின்னான நுகர்வில் விலை அதிகாரிப்புக்கும் இடையில், சந்தை விலையைக் கட்டுப்படுத்தியதன் மூலம், மூலதனத்தின் பெரும் கொள்ளையாக இது மாறியது. இன்னுமொரு பக்கத்தில் விலைச்சரிவு மூன்றாம் உலக நாடுகளின் உற்பத்திக்கான மனிதக் கூலியை குறைக்க நிர்ப்பந்தித்தது. இதிலும் கூட ஒரு வரைமுறையற்ற கொள்ளை படிந்து காணப்படுகின்றது. மனித உழைப்பைச் சூறையாடும் வடிவங்கள், பாசிச வழிகளில் தன்னை புடமிட்டுக் கொண்டது. சர்வதேச ரீதியாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள், மூன்றாம் உலக நாடுகளில் விலை அதிகரிப்பையே எதிர்மறையில் கொடுத்தது. அக்கம் பக்கமாக விலை குறைவு, கூலி குறைப்பை உருவாக்கியது. இதனால் மூன்றாம் உலக நாடுகளில் நுகர்வின் அளவு குறைந்ததுடன், உள்ளூர்ச் சந்தையில் இந்தப் பொருட்களின் தட்டுப்பாடு உருவாகியது. கடன் மற்றும் வட்டிக்காக அதிக ஏற்றுமதியை செய்யக் கோரும் நிபந்தனைகள், உற்பத்தியாளனின் தேவைக்கு பொருட்களை இல்லாததாக்கியது. மனிதனுக்கு சக்தியை வழங்கிய உணவு மீதான ஆதிக்கத்தை, சில நிறுவனங்கள் பெற்றுக் கொண்டது.
உலகில் மனிதனுக்கு எந்த உணவுகள் அதிக சக்தியை வழங்குகின்றது எனப் பார்ப்போம்.
அரிசி 26 சதவீதம்
கோதுமை 23 சதவீதம்
சீனி 9 சதவீதம்
சோளம் 7 சதவீதம்
தானியங்கள் மற்றும் மப்புச் சோளம் 4 சதவீதம்
உருளைக் கிழங்கு 4 சதவீதம்
சோயா எண்ணெய் 3 சதவீதம்
மற்றைய எண்ணெய் மற்றும் மரக்கறி 6 சதவீதம்
மற்றவை 18 சதவீதம்
இவைதான் மனிதனின் உடல் வலுவுக்கு ஆதாரமான சக்தியை உலகளவில் வழங்குகின்றது. இதில் ஒரு உண்மை வெளிப்படுவதை நாம் காணமுடியும். மனிதனுக்கு சக்தி வழங்கும் பொருட்களின் எண்ணிக்கை குறைந்து போயுள்ளதை இது காட்டுகின்றது. விரல் விட்டு எண்ணக் கூடிய சில பொருட்கள் மட்டுமே, மனித உணவின் ஆதாரமாகியுள்ளது. பன்மையாகவே மனிதனுக்கு சக்தியை வழங்கி வந்த உணவுப் பொருட்கள் காணாமல் போயுள்ளது. கிடைக்கும் இந்த உணவுப் பொருட்கள் விலைச் சரிவையே நாம் மேலே பார்த்தோம். இந்தப் பொருட்கள் ஏகாதிபத்திய நாடுகளில் விலை குறைந்து செல்லுகின்றது. ஆனால் இவை மூன்றாம் உலக நாடுகளில் தொடர்ச்சியாகவே விலை அதிகரித்துச் செல்லுகின்றது. உண்மையில் மேற்கில் ஒரு சீரான போக்கு காணப்பட்டது. உண்மையில் உற்பத்திக்கும் விற்பனைக்கும் இடையில் உள்ள இடைத்தரகர்களின் இலாப வீதமே என்றுமில்லாத அளவில் அதிகரித்தது. உதாரணமாக வாழைப்பழத்தைக் கட்டுப்படுத்தும் பன்னாட்டு நிறுவனங்கள், அதை நுகர்வோருக்கு விற்கும் விலையில் 11.5 சதவீதத்தை மட்டுமே உற்பத்தியாளருக்கு வழங்குகின்றது. உற்பத்தியாளன் இந்த தொகையில் இருந்து தான், மனித உழைப்புக்கு கூலியை வழங்குகின்றான். ஒட்டுமொத்தத்தில் இடையில் உற்பத்தியாளனுக்கும் நுகர்வுக்கும் இடையில் 88.5 சதவீதம் இடைத்தரகர்களே பெறுகின்றனர். இந்த இடைத்தரகரை அடிப்படையாகக் கொண்ட சமூக விரோத வர்க்கம் தான், உலகின் செல்வங்களின் அதிபதிகளாகி வருகின்றனர்.