07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மனிதத் தேவையை மறுக்கும் உற்பத்திக் கொள்கை

 மனிதனின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்யும் உணவு முதல் அனைத்துப் பொருட்களையும் மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. அத்துடன் ஒரு உற்பத்தியில் காணப்படும் இயற்கையின் பன்மையை அழித்து, ஒருமையான, ஒற்றை உற்பத்தியை நோக்கி மாற்றி அமைக்கின்றனர். ஒரு பொருளின் பன்மையான கூறுகள் சார்ந்த இயற்கைத் தெரிவை, மற்றவன் உபயோகிக்கக் கூடாது என்ற தனிமனித நலன் சார்ந்து இயற்கையிலேயே இருந்து ஒழித்துக் கட்டப்படுகின்றது. 1995இல் 15 பன்னாட்டு நிறுவனங்கள் உலகளவில் மனிதத் தேவையைப் பூர்த்தி செய்த 20 முக்கியமான அடிப்படை பொருளில், பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தின. இப்படிக் கட்டுப்படுத்திய சில பொருட்களையும், அதன் அளவையும் நாம் பார்ப்போம்


கோதுமை                 90 சதவீதம் 
அரிசி                          70 சதவீதம்
தேயிலை, காபி      80 சதவீதம்
மரம்                            90 சதவீதம்
செம்பு                         80 சதவீதம்
எண்ணெய்               60 சதவீதம்
இரும்புத்தாது        90 சதவீதம்
அன்னாசிப்பழம்  90 சதவீதம்


 இதே போன்று 1989யை அடிப்படையாக கொண்டு சில உற்பத்திகளை பார்த்தால், 3 முதல் 6 பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் கீழ் உள்ள உற்பத்தியைக் கட்டுப்படுத்தின.


கோதுமை                                85 - 90 சதவீதம்
சர்க்கரை                                           60 சதவீதம்
காபி 85                                               90 சதவீதம்
கொக்கோ                                         85 சதவீதம்
தேயிலை                                          80 சதவீதம்
வாழைப்பழம்                        70  - 75 சதவீதம்
அன்னாசிப்பழம்                             90 சதவீதம்
வன உற்பத்தி பொருட்கள்      90 சதவீதம்
பருத்தி                                       85 -  90 சதவீதம்
சணல்                                         85 -  90 சதவீதம்


 மனிதனின் பிரதான உணவை ஒரு சில நிறுவனங்கள் 15 வருடங்களுக்கு முன்பாகவே பெரும் பகுதியை தமது சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தன. இந்த நிறுவனங்களின் லாப நலனுக்கு உகந்த உணவே மனித உணவாகிவிட்டது. இவை ஒரே நாளில் உருவாகிவிடவில்லை. 1980களில் ஒரு சில பன்னாட்டு நிறுவனங்கள் உலகச்சந்தையை பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தின. உதாரணமாக 60 சதவீதமான சர்க்கரை (சீனி) மற்றும் பாஸ்போட்டையும், 70 முதல் 75 சதவீதமான அரிசி, வாழைப்பழம், இயற்கை ரப்பர், எண்ணெய் மற்றும் ரின்னையும், 80 முதல் 90 சதவீதமான கோதுமை, காபி, சோளம், கொக்கோ, மூங்கில், பருத்தி, சணல், புகையிலை, செப்பு, இரும்புத்தாது மற்றும் பாக்சைட்  போன்றவற்றைக் கட்டுப்படுத்தியிருந்தன. சர்வதேச ரீதியாக இயற்கை மீதான ஆதிக்கத்தை சில பன்னாட்டு நிறுவனங்கள் பெறுவதன் மூலம், மக்களின் மேலான தமது உற்பத்தி சர்வாதிகாரத்தை நிறுவுகின்றன. மனிதன் எதை எப்படி உண்ண வேண்டும் என்பதை, தனது லாப நட்ட கணக்குள்ளாக்கி சர்வாதிகாரமாகவே உலகெங்கும் திணிக்கின்றான். மக்களின் அடிப்படைத் தேவைகளை எந்தளவில் எதை எப்படி வழங்குவது என்ற முடிவு, சில நிறுவனத்தின் குறித்த நலன் சார்ந்த விடையமாகி விட்டது. மனித உழைப்பை எங்கு, எப்போது, எதனால், எப்படி, எந்த நிபந்தனையில் வழங்க வேண்டும் என்ற விரிந்த தளத்தில் ஒரு பாசிச சர்வாதிகாரத்தை பொருளாதாரத் துறையில் உருவாக்கி அதுவே ஆட்சிவடிவமாக்கி விடுகின்றனர்.


 இப்படி மனித வாழ்வு சார்ந்த பொருட்களை உலகளவில் சில நிறுவனங்கள் பெருமெடுப்பில் கட்டுப்படுத்தத் தொடங்கியுள்ளன. இதை 100 சதவீதமாக கட்டுப்படுத்தவும், பன்மையான உற்பத்திக் கூறுகளை அழித்து ஒரேவிதமான உற்பத்தியை உருவாக்குவதே, உலகமயமாதல் திட்டத்தின் இணைபிரியாத ஒரு அங்கமாகும்.  எத்தனையோ பன்மையான இனங்களாக உள்ள இயற்கையை, வக்கிரமாகவே அழிக்கப்படுவதையே சுதந்திரம், ஜனநாயகம் என்று இன்று போற்றப்படுகின்றது. இதுவே இன்றைய உலகமயமாதலின் உலகளாவிய சமூக ஒழுக்கமாகிவிட்டது. சூறையாடுவதும், அழிப்பதும், திணிப்பதும் ஜனநாயகமாகிவிட்ட நிலையில், இதையே சுதந்திரமானதாக காட்டுவதே மயிர்பிளக்கும் ஒரு சமூக விவகாரமாகியுள்ளது.


 கனடாவைச் சேர்ந்த "கார்க்கில்' என்ற பன்னாட்டு நிறுவனம், உலகளாவிய தானிய வர்த்தகத்தில் 60 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இதன் மொத்த வர்த்தகமோ பாகிஸ்தானின் தேசிய வருமானத்தையும் தாண்டியது. உலகளாவிய மனிதத் தேவையினைப் பூர்த்தி செய்யும் தானியத்தில் 60 சதவீதத்தை ஒரே நிறுவனம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இப்படிக் கட்டுப்படுத்தி வைத்திருக்கும் உரிமையைத் தான் சுதந்திரம், ஜனநாயகம் என்கின்றனர். இங்கு மொத்த சமூகத்துக்கு எதிரான தனிமனித உரிமைதான், சுதந்திரமாகவும் ஜனநாயகமாகவும் வக்கரித்துக் கிடக்கின்றது. இந்த நிறுவனம் இது மட்டுமின்றி தானிய உற்பத்திக்கான விதைகளையும் கூட பெருமெடுப்பில் கட்டுப்படுத்துகின்றது. இயற்கையில் மனிதன் உருவானது முதல் ஏற்பட்ட பரிணாம வளர்ச்சியில், மனிதன் கண்டறிந்த அறிவுகள், தனிப்பட்ட ஒரு வர்த்தக நிறுவனத்தின் தனிப்பட்ட சொத்தாகி வருவதையே ஜனநாயகம் என்கின்றோம். பல அறிவியல் கூறுகள் இரவோடு இரவாகவே அழிக்கப் படுவதையும் நாங்கள் சுதந்திரம் எனப் போற்றுகின்றோம். உலகின் முதன்மையான சரக்குகளின் சந்தையை, ஆறு வர்த்தகர்கள் கட்டுப்படுத்துகின்றனர். இதில் ஒன்று தான் கார்க்கில். இந்த நிறுவனம் பருப்பு வர்த்தகத்தில் 60 சதவீதத்தைக் கட்டுப்படுத்து கின்றது. இந்த நிறுவனம் விற்கும் காபியின் அளவுக்கு, இந்த நிறுவனத்துக்கு காபியை வழங்கும் எந்த ஆப்பிரிக்க நாட்டினதும் தேசிய வருமானம் அதிகமானது அல்ல.


பி.இரயாகரன் - சமர்