Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

தேசங்களின் சுயேச்சையான வாழ்வு என்பது எங்கும்  எப்போதும், மக்களின் சொந்த உற்பத்தியில் தங்கிநிற்பதில்  சார்ந்துள்ளது. மக்களின் அடிப்படையான சமூகத் தேவையை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் போதே, தேசத்தின் உட்கூறுகள் நீடித்து நிலைத்து நிற்கமுடியும். இதுவே தேசியப் பண்பாடுகளையும், தேசியக் கலாச்சாரத்தையும், தேசத்தின் தனித்துவத்தையும் பாதுகாக்கத் தேவையான அடிப்படையாகும். சொந்த தேசிய பலத்தில், எந்த நெருக்கடியையும் எதிர்கொள்ளும் பலத்தை இது தேசங்களுக்கு வழங்குகின்றது. அனைத்து வகையான காலனிய வடிவங்களும் இந்தக் கூறுகள் வளர்ச்சியுறுவதை தடுத்து நிறுத்தியிருந்தன. மாறாக ஏகாதிபத்தியத்தின் தொங்கு சதை நாடகவும், ஏகாதிபத்தியத்தின் தேவைகளை உற்பத்தி செய்து வழங்கும் ஒரு இழிநிலை நாடுகளாக காலனிகள் நீடித்திருந்தன.


 சோவியத் புரட்சியும் அதை தொடர்ந்து தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தை சோவியத் நிறுவியதைத் தொடர்ந்து, காலனிய நாடுகள் தமது சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தில் உத்வேகம் பெற்று போராடத் தொடங்கின. இதன் விளைவாக முதலாம், இரண்டாம் உலக யுத்த முடிவில், உலகில் பல காலனிகள் நேரடிக் காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றன. இதை தொடர்ந்து தேசிய பொருளாதாரத்தின் மீதான கவனம் குறிப்பானதாக மாறியதால், சுயேட்சையான நாடுகள் தேசிய பலத்தைப் பெறத் தொடங்கின. ஏகாதிபத்தியத்தை சார்ந்து நிற்றல் என்பதைத் தவிர்த்து, சொந்தக் காலில் நிற்க முனைந்தன. இதற்கு சோவியத் மற்றும் சீனப் புரட்சிகள் அக்கம்பக்கமாகவே ஊக்கம் அளித்தன. பரஸ்பர பொருளாதார உதவிகள், இதை மேலும் வளப்படுத்தின.


 இந்த புதிய சர்வதேசப் போக்கை ஏகாதிபத்தியம் சகித்துக் கொள்ளவில்லை. திட்டமிட்டே தேசியக் கூறுகளை அழிக்கும் வகையில், உற்பத்தி மீதான சீரழிவுகளை திட்டமிட்டே உருவாக்கினர். நவீன உற்பத்தி என்ற பெயரில், இயற்கைக்கு மாறான உற்பத்தி முறைமைகளைத் திணித்தனர். உதாரணமாக விவசாயத்தில் இயற்கை உற்பத்தி முறைமை என்ற பொதுவான உற்பத்தி முறைமையை, முற்றாகவே மாற்றி அமைத்தனர். உரங்கள், கிருமிநாசினிகள், சில விதைகளை கொண்ட பெரு உற்பத்தி என்று தொடங்கிய விவசாயம், தேசங்களின் சுயேச்சைப் போக்கை முற்றாகவே அழித்துவிட்டது. இன்று விதையைக் கூட, ஏகாதிபத்தியம் தந்தால் தான் விதைக்க முடியும் என்ற நிலைமை உருவாகி வருகின்றது. இப்படி தேசியக் கூறுகளின் மேலான ஏகாதிபத்திய ஆதிக்கத்தை, திட்டமிட்ட வகையில் பெறத் தொடங்கியது. அதேநேரம் தேசத்தின் அடிப்படையான தேசியக் கூறுகளை, சுவடுகள் கூடத் தெரியாத வகையில் அழித்தொழித்து வருகின்றனர்.


 இப்படித் தொடங்கிய தேசிய அழித்தொழிப்புக் கொள்கை மூலம், தேசங்களின் சுயேட்சைப் பண்புகள் சிதைக்கப்பட்டு வருகின்றது. முன்பு காலனிகள் ஏகாதிபத்தியங்களுக்கான தேவைகளை உற்பத்தி செய்யும் ஒரு உறுப்பாகவே இருந்தது. அதையே இன்று வேறுவடிவில் மாற்றிவிட்டனர். இன்று ஏகாதிபத்தியத்தின் தேவையை பூர்த்தி செய்யும் பன்மைக் கூறில் ஒன்றை மட்டும் உற்பத்தி செய்யும் வகையில், தேச உற்பத்திகளையே முழுமையாக மாற்றிவிட்டனர். குறித்த உற்பத்தியை சந்தையில் ஏகாதிபத்தியம் தான் விரும்பிய விலையில் வாங்குவதுடன், நாடுகளின் திவாலை பிரகடனம் செய்யும் உரிமையை கத்தி விளிம்பில் நிறுத்தி விடுகின்றனர். இவற்றை நாம் விரிவாக ஆராய்வோம்.


 நேரடி காலனித்துவத்தில் இருந்து விடுதலை பெற்றதைத் தொடர்ந்து, தேசிய உற்பத்திகள் நாட்டின் பிரதான போக்காக இருந்தது. தவிர்க்க முடியாது அரசின் தேசிய முதலீடுகள் பெருகின. தேசிய தனியார் முதலீடுகளும் பெருகின. உதாரணமாக பின்தங்கிய நாடுகளின் உள்நாட்டு உற்பத்தி 19501985க்கும் இடையிலான 35 வருடங்களில் 5.4 மடங்காக உயர்ந்தது. பின்தங்கிய நாடுகளின் ஏற்றுமதியின் பங்கு 4.7 சதவீதத்தில் இருந்து 12.7 சதவீதமாக அதிகரித்தது. இந்தப் போக்கை ஏகாதிபத்தியம் தொடர்ந்து அனுமதிக்கத் தயாராக இருக்கவில்லை. ஏகாதிபத்தியம் வர்த்தக காப்புத் தடையை முன்வைத்தன் மூலம், திட்டமிட்டவகையில் ஏற்றுமதியை வீழ்ச்சி காணவைத்தது. ஏற்றுமதி அதிகரிப்பு வீதம் 1970 இல் 13 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 8 சதவீதமாக வீழ்ச்சி கண்டது. மூன்றாம் உலக உற்பத்தி மீதான விலையை குறைத்தது. அதேநேரம் ஏகாதிபத்தியம் தனது சொந்த உற்பத்தி மீதான விலையை உயர்த்தியது. 1979ஆம் ஆண்டுடன் 1988ஆம் ஆண்டை ஒப்பிடும் போது, ஆலை உற்பத்தி பொருட்களின் விலை 33 சதவீதம் உயர்ந்த அதேநேரம், பின்தங்கிய நாடுகளின் ஆதாரப் பொருட்களின் விலை 2.7 சதவீதமே உயர்ந்தது.


 ஏகாதிபத்திய ஆலைகளுக்கு மூன்றாம் உலக நாடு வழங்கிய மூலப் பொருட்களின் விலையை உயரவிடாது தடுத்துநிறுத்திய ஏகாதிபத்தியம், தனது உற்பத்திக்கான விலையை உயர்த்தியது. இப்படிச் சர்வதேச உற்பத்தியில் ஒரு நெருக்கடியை உருவாக்கியதன் மூலம், பின்தங்கிய நாடுகள் பற்றாக்குறையில் சிக்கிக் கொண்டது. இதன் மூலம் தன்னிடமே கடன் வாங்க நிர்ப்பந்தித்தனர். 1980க்கும் 1990க்கும் இடையில் உலகில் முக்கிய 10 பொருட்களின் ஏற்றுமதி விலை, 25 சதவீதத்தால் குறைந்து போனது. 1980களில் சர்வதேச நிலைமை முற்றாகவே ஏகாதிபத்தியத்துக்கு சார்பாக மாறத் தொடங்கியது. பின்தங்கிய நாடுகளின் மூலப்பொருட்கள் சந்தையில் தொடர்ந்து விலைச் சரிவை சந்தித்த அதேநேரம், ஏகாதிபத்திய உற்பத்திகள் விலை அதிகரித்துச் சென்றது. மூன்றாம் உலக நாடுகளின் மூலப்பொருட்களை ஆதாரமாக கொண்டு ஏகாதிபத்தியம் உற்பத்தி செய்த பொருட்களின் விலை அதிகரித்ததால், ஏகாதிபத்திய லாப வீகிதம் என்றுமில்லாத அளவில் அதிகரித்தது. இந்த லாப அதிகரிப்பே, பின்தங்கிய நாடுகளை அடிமைப்படுத்திய கடனாக மீளச் சென்றது. உண்மையில் மூன்றாம் உலக நாடுகளுக்கு சேர வேண்டிய தொகையையே, ஏகாதிபத்தியம் சர்வதேச வர்த்தக மோசடிகள் மூலம் அபகரித்து, அந்த நிதியைக் கொண்டே பின்தங்கிய மூன்றாம் உலக நாடுகளை மீளமுடியாது அடிமைப்படுத்தியுள்ளனர்.


 ஏகாதிபத்தியத்தின் வர்த்தக மோசடிகள், தேசங்களின் ஏற்றுமதி என்ற குறிக்கோளைக் கொண்ட தேசிய உற்பத்தி முறைமையையே, சடுதியான நெருக்கடியில் சிக்கவைத்தனர். உற்பத்தி விலைக்கும் விற்பனை விலைக்கும் இடையில் உள்ள இடைவெளி அகன்று சென்றது. உற்பத்திக்கான செலவைக் கூட மீட்க முடியாது போன நிலைமை, தேசிய உற்பத்திகளை கைவிடுதலை துரிதமாக்கியது. இது தேசிய உற்பத்தியாளனின் கடனை உயர்த்தியது. ஏகாதிபத்திய உற்பத்திகள் உள்ளூர்ச் சந்தையை கைப்பற்றத் தொடங்கியது. தரகு முதலாளித்துவம் முழு வீச்சில் ஆதிக்கம் பெறத் தொடங்கியது. சர்வதேச ரீதியாக ஏகாதிபத்தியம் தனது வர்த்தக ஆதிக்க உரிமையை முழுமையாக தீர்மானிக்கும் வகையில் தேசங்களின் சுயேச்சை கூறுகளையே அழித்தொழித்தது. மறுபக்கத்தில் பொருட்களை ஏற்றியிறக்கும் சர்வதேச கடல் போக்குவரத்து மீதான ஆதிக்கத்தை ஏகாதிபத்தியம் வைத்திருந்ததன் மூலம், மூன்றாம் உலக நாடுகள் தமது பொருட்களை சர்வதேச சந்தையில் விற்கவே, கையேந்த வேண்டிய நிலை உருவானது. சரக்கை ஏற்றியிறக்க அதிக கட்டணத்தை ஏகாதிபத்தியம் கோரின. இதன் மூலம் மேலும் தேசிய உற்பத்திகள் கடுமையான நெருக்கடியில் சிக்கி சிதையத் தொடங்கின.


 1979இல் உலக முழுவதும் இருந்த சரக்குக்கப்பலில் ஒன்பது சதவீதம் மட்டுமே மூன்றாம் உலக நாடுகளுக்கு சொந்தமாக இருந்தது. இதே நேரம் 1978இல் ஏகாதிபத்தியம் இறக்குமதி ஏற்றுமதிக் கட்டணமாக 2700 கோடி டாலரை மூன்றாம் உலக நாடுகளிடம் அறவிட்டது. இது இறக்குமதியின் மொத்த மதிப்பில் 9 சதவீதமாக இருந்தது. இதைவிட காப்பீடு, சிப்பம் கட்டுதல், விற்பனை ஏற்பாடு என்று ஒரு தொகை ஏகாதிபத்தியத்துக்குச் சுற்று வழியாக சென்றது. ஒரு பொருளின் மதிப்பில், பெரும் பகுதி பொருட்களைக் கொண்டு செல்லுதல் மற்றும் இடைத்தரகர்களுக்கு மூன்றாம் உலக நாடுகள் வழங்க நிர்பந்திக்கப்பட்டது. தேசியப் பொருளாதாரத்தைச் சொந்த மக்களின் நலனுக்குப் புறம்பாக, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்டு திட்டமிட்ட போக்கு, கடுமையான சர்வதேச வர்த்தக நிபந்தனைக்குள் சிக்கி நெருக்கடிக்குள்ளாகியது. படிப்படியாக உலகளாவிய வகையில் தேசிய உற்பத்திகள் மேல் ஏகாதிபத்திய நிர்ப்பந்தங்களை உருவாக்கியது. பல உற்பத்திகளின் சந்தை அடிப்படைகளையே இல்லாதாக்கியது. தேசிய உற்பத்திகளுக்குப் போட்டியாக, ஏகாதிபத்திய உற்பத்திகளை சந்தையில் கொண்டு வந்து குவிக்கத் தொடங்கினர். தரகு முதலாளித்துவ வர்த்தகம் தேசிய உற்பத்திகளின் கழுத்தில் பிடித்தே தூக்கி நெரித்தது. ஏகாதிபத்திய பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்தது மட்டுமின்றி, தேசிய உற்பத்திகளை அழித்து விழுங்குவது அன்றாட நிகழ்ச்சி நிரலாகியது.