முதலாம் உலக யுத்தத்தைத் தொடர்ந்து சோவியத்தின் உருவாக்கம், உலகளவில் ஒரு அதிர்வை சர்வதேச வர்த்தகத்தில் ஏற்படுத்தியது. காலனிகளில் இருந்து செல்வங்களை அபகரித்து வந்த மேற்கின் நலன்களில், இது ஒரு அதிர்வை உருவாக்கியது. சோவியத் உலகில் மிகவும் தனித்துவமான, சுரண்டலுக்கு எதிரான, உழைக்கும் வர்க்கத்தின் அதிகாரத்தில் இருந்தமையால், மேற்கின் காலனிகள் எங்கும் கடுமையான கொந்தளிப்பான சர்வதேச நிலைக்கு சென்றது. காலனிய மக்கள் தமது சொந்த விடுதலையில் புதிய நம்பிக்கைகளை பெற்று, போராடத் தொடங்கினர். உழைக்கும் மக்களின் சொந்த அதிகாரத்தை கோரும் சர்வதேச நிலைமை, உழைப்பையே சுரண்டி வாழ்ந்த மேற்கின் நவீன போக்கு பலத்த அடியாக இருந்தது.
இதேநேரம், மேற்கின் உள்ளும் கடுமையான வர்க்கப் போராட்டங்களை மூலதனம் எதிர்கொண்டது. மேற்கு மக்கள் தமது உழைப்பின் மீதான உரிமையைக் கோரியதுடன், தமது சொந்த அதிகாரத்துக்காகவும் போராடினர். மற்றைய நாடுகளை சுரண்டுவதையும், காலனிகளை வைத்திருப்பதையும் கூட எதிர்த்தனர். இந்த சர்வதேச பொது நிலைமை, இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் பல காலனிகள் மேற்கில் இருந்து விடுதலை பெறுவதற்கு வழிவகுத்தது. மறுபக்கத்தில் காலனிகளை தமது பொம்மை ஆட்சிகள் மூலம் கைமாற்றிவிட்டு செல்ல வேண்டிய நிலைமை மேற்கு மூலதனத்துக்கு ஏற்பட்டது. காலனிகளைத் தக்கவைக்க சில நாடுகளில் கடுமையான யுத்தத்தில் மேற்கு ஈடுபட்டது. ஒரு கொந்தளிப்பான சர்வதேச நிலைமையை சோவியத்தின் உருவாக்கம், மூலதனத்துக்கு ஏற்படுத்தியது. பரந்துபட்ட ரீதியில் உழைக்கும் மக்கள், இந்த நிலைமையால் கொஞ்சம் மூச்சுவிட்டு, தம்மை ஆசுவாசப்படுத்தினர். இதனால் மேற்கின் ஆதிக்கத்தில் இருந்த சர்வதேச வர்த்தகத்தில் ஒரு கடுமையான நெருக்கடி உருவானது. மேற்கு தொடர்ச்சியான பல இழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தேசங்களின் தேசிய உற்பத்திகளை முன்னிலைப்படுத்திய உற்பத்திகள், சர்வதேச வர்த்தகத்திலும் எதிர்நீச்சலிட்டது. மேற்கு சார்ந்த சர்வதேச வர்த்தகப் போக்கை மறுதலிக்கும் போக்கு, பொதுவாக உற்பத்தி சார்ந்து எழுந்தது. உலகளவில் ஏற்பட்ட நெருக்கடி உள்நாட்டிலும் பிரதிபலித்தது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் முதலீட்டு மூலதனத்துக்கு லாப வீதங்கள் 1966 இல் 13.4 சதவீதமாக இருந்தது. இது 1976இல் 9.2 சதவீதமாக குறைந்து போனது. அமெரிக்காவின் நிதி மூலதனம் அல்லாத மூலதனத்தின் இலாபவீதம் 196366இல் 15.5 சதவீதமாக இருந்தது. இது 196770இல் 12.7 சதவீதமாகவும், 197174இல் 10 சதவீதமாகவும், 1978இல் 9.7 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டது. 1965இல் லாப வீதங்கள் தேசிய வருமானத்தில் 14 சதவீதமாகவும், 1970 இல் 8.8 சதவீதமாகவும், 1980இல் 8.2 சதவீதமாகவும், 1982 இல் 6.7 சதவீதமாகவும் வீழ்ச்சி கண்டது. ஏகாதிபத்திய மூலதனத்துக்கு சர்வதேச ரீதியாகவும், உள்நாட்டிலும் கூட ஒரு தொடர் நெருக்கடி உருவானது.
இதன் விளைவாக உலகளவில் சில மாற்றங்கள் நிகழ்ந்தன. ஏகாதிபத்தியத்தின் சர்வதேச ஆதிக்கத்தில் சில கீறல்கள் வீழ்ந்தன. உதாரணமாக 1960இல் உலக பொருள் உற்பத்தியில் மேற்கு நாடுகளின் பங்கு 71 சதவீதமாக இருந்தது. இது 1980இல் 60 சதவீதமாக குறைந்தது. இது 1985இல் 50 சதவீதமாக மாறியது. காலனிகளில் இருந்து விடுதலையும், நேரடி காலனிக்கு பதில் உருவான பொம்மை ஆட்சிகளும் தேசிய உற்பத்தியில் மேற்கின் பங்கை குறைத்தது. ஆனால் இது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. சர்வதேச ரீதியாக உழைக்கும் மக்களின் அதிகாரம் தகர்ந்து மறுபடியும் ஏற்பட்ட முதலாளித்துவ மீட்சி, மேற்கத்திய மூலதனத்துக்குக் குதூகலிப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியாகவே உழைக்கும் மக்களின் நாளாந்த போராட்டங்களில், முதலாளித்துவ சித்தாந்தம் நுழைந்ததன் மூலம் நிலைமை மேற்கு மூலதனத்துக்கு சார்பாக மாறியது. அதேநேரம் காலனிகளை பொம்மை ஆட்சிகள் மூலம் கைவிட்ட மூலதனம், சும்மா இருக்கவில்லை. நவகாலனித்துவ, அரைக்காலனித்துவ வழிகளில் உற்பத்தி மீதான ஆதிக்கத்தை மீளப் பெறத் தொடங்கியது. உற்பத்தியை தேசங்கடந்த நிறுவனங்கள் மூலம் நகர்த்தி, உற்பத்தி மீதான ஆதிக்கத்தைப் மீளப் பெறத் தொடங்கினர்.
சம காலத்தில் அதாவது 19601982 இடையிலான காலத்தில் சீனா உள்ளடங்கிய ஆசிய மற்றும் பசிபிக் நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.8 சதவீதத்தில் இருந்து 16.4 சதவீதமாக அதிகரித்தது. இதை அமெரிக்காவின் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 18 சதவீதத்தில் இருந்து 53 சதவீதமாக அதிகரித்தது. உலக ஏற்றுமதியில் 7.5 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக அதிகரித்தது. உண்மையில் இது நமக்கு எதைக் காட்டுகின்றது என்றால், நேரடி காலனித்துவத்தில் இருந்து நாடுகள் விடுவிக்கப்பட்ட போது, தேசிய உற்பத்திகள் முன்னிலைக்கு வந்ததை உறுதி செய்கின்றது. ஆனால் இவை எல்லாம் குறுகிய காலத்திலேயே தலைகீழாகியது. 1960இல் சோவியத்தில் நடந்த முதலாளித்துவ மீட்சியும், 1980இல் சீனாவில் நடந்த முதலாளித்துவ மீட்சியும், உலகளவில் தேசிய உணர்வு சார்ந்த சர்வதேசப் போக்கையே தலைகீழாக்கியது. உழைக்கும் மக்களின் கைகளில் இருந்த உற்பத்திகள் மீதான கட்டுப்பாடுகளை இழந்த சர்வதேசப் போக்கு, தேசிய உற்பத்தி மீதான சிதைவை துரிதமாக்கியது. நேரடி காலனிகள் பெற்ற பெயரளவிலான சுதந்திரம், நவகாலனியாகவும் அரைக்காலனியாகவும் ஆழமாக சிதைந்து, ஏகாதிபத்திய தரகு அரசுகளாக வெளிப்படும் போக்கு மூடுமந்திரமின்றி மிக ஆழமாகவே அதிகரித்தது. தேசிய உற்பத்திகளை கைவிடுவது, அதை அழிப்பது, அரசுகளின் தேசிய கொள்கையாக மாறியது. இதையே நவீன தேசியமாக வேறு வரைவிலக்கணம் செய்கின்றனர். 1950களில் ஏகாதிபத்தியம் இழந்த ஆதிக்கம் படிப்படியாக மீள நிறுவப்பட்டதுடன், தேசியக் கூறுகள் அனைத்தும், சுவடுகள் கூட தெரியாத வகையில் அழித்தொழிக்கப்படுகின்றது. இதுவே இன்று நவீன உலகமயமாதலின் அடிப்படையான கொள்கையாகும்.
இதை அவர்கள் ஒரே நாளில் செய்துவிடவில்லை. தேசங்களின் தேசிய அடிப்படைக்கு நஞ்சிடுவதை படிப்படியாக மிகவும் திட்டமிட்ட வகையில் தொடர்ச்சியாக, நவீனமாகச் செய்தனர். அதிஉயர் தொழில்நுட்பத்தை இதற்காகவே உற்பத்தி செய்தனர். இதன்போது உற்பத்தி மீதான கட்டுப்பாட்டையும், வரி அறவிடுவதையும் தடுக்கும் சட்டவிதிகளை தேசங்களின் மீது ஏகாதிபத்தியம் திணித்தனர். உழைக்கும் வர்க்கத்தை உயர்ந்த பட்சம் சுரண்ட அனுமதிக்கும் வகையில், சட்டதிட்டங்கள் மாற்றியமைக் கப்பட்டன. இந்த உயாந்தபட்ச நிபந்தனைகளுடன் சுதந்திரமான ஏற்றுமதி மையங்களை 1980இல் உலகின் பல பாகத்திலும் நிறுவப் பட்டது. சுங்கவரிக்கு உட்படாத ஒரு பிரதேசத்தை உருவாக்கி, அன்னிய நாட்டில் இருந்து வரும் பொருட்களுக்கு மதிப்பேற்றி (குறைந்தது ஒரு மாறுதலுடன்) மீள ஏற்றுமதி செய்தல் இந்த பிரதேசத்தின் குறிப்பான நடவடிக்கையாகும். இப்படி 1981இல் ஆசியாவில் 24 ஏற்றுமதி மையங்களும், மத்திய கிழக்கு மற்றும் மத்திய தரைக்கடலில் 10ம், ஆப்பிரிக்காவில் 4ம், லத்தீன் அமெரிக்காவில் 15ம், கரிபியன் பிராந்தியத்தில் 4ம் நிறுவப்பட்டது. இங்கு மனித உழைப்பு வரைமுறையின்றி சூறையாடப்பட்டதுடன், உற்பத்திக்கு வரிவிலக்கு உள்ளாகியது. இப்படி தொடங்கிய நவீன சூறையாடலே, இன்று குறித்த பிரதேசங்களை கடந்து வரைமுறையற்ற சூறையாடலுக்கு மொத்த தேசமே ஏற்றுமதி மையங்களாகிவிட்டது. தேசங்களின் உற்பத்தி ஆற்றலை நலமடித்து, சில பணக்கார நாடுகள் உற்பத்தி ஆற்றலை கட்டுப்படுத்துகின்றன. அதாவது விதையில் மலட்டுத்தனத்தை உருவாக்கி விதை மீதான கட்டுப்பாட்டை கைப்பற்றி வரும் ஏகாதிபத்தியங்களின் ஆதிக்கம் போல், தேசங்களின் உற்பத்தி ஆற்றலை மலடாக்குகின்றனர். தேசங்களையே வெறும் உற்பத்தி கருவியாக மாற்றுகின்றனர். உற்பத்தி மீதான ஆற்றலை ஏகாதிபத்தியங்கள் தமதாக்கிவிடுகின்றனர்.
உண்மையில் உற்பத்தி மட்டுமின்றி சர்வதேச வர்த்தகமும் ஏகாதிபத்தியமயமாகியதுடன், தேசங்களின் சுயேட்சைத் தன்மை மலடாக்கப்படுகின்றது. 1980இல் உலகளவில் வணிகத்தில் ஈடுபட்ட நாடுகள் 28 சதவீதமாக இருந்தது. இது 1986இல் 19 சதவீதமாக குறைந்து போனது. எங்கும் ஒரு வர்த்தக அராஜகத்தை ஏகாதிபத்தியம் உருவாக்கியது. தேசங்களின், தேசிய உற்பத்திகளின் பன்மைத் தன்மையை அழித்து வருவதுடன், ஒற்றைப் பொருளாதாரத்தை திணித்து தேசியத்தின் அடிப்படையான பலத்தையே சிதைத்தனர், சிதைக்கின்றனர். ஒற்றைப் பொருளாதாரத்தைக் கொண்ட தேசங்களின் தேசிய தலைவிதியை, சர்வதேச சந்தையில் முட்டி மோதப் பண்ணுவதுடன், நாட்டையே அடைமானமாக எழுதி கைநாட்டு போடவைத்து வாங்குகின்றனர்.
தேசங்களின் தலைவிதியை தற்கொலை செய்யத் தூண்டும் வகையில், சர்வதேச வர்த்தகம் என்பது இன்று மிகப் பெரிய ஒன்றாக மாற்றிவிட்டது. அதாவது அடிநிலையில் உள்ள மனிதர்களின் தேவைகளை மறுக்கும் அதிகாரம் தான் வர்த்தகம். இதற்கு வேறு விளக்கம் கிடையாது. பகிர்ந்து உண்ட மனிதன், இன்று ஒருவனையொருவன் குழிபறித்தே உண்கின்றான். இந்த நாகரிகத்தின் பெயர்தான் வர்த்தகம். இதைத்தான் சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் என்று, இன்று அரசியல் பொருளாதாரம் விளக்குகின்றது. நவீன சிந்தனைகள் அனைத்தும் இதற்குள் தான், தம்மைதாம் மலடாக்கி சந்தைப்படுத்துகின்றன. நவீன சிந்தனைகள் என்று உற்பத்தியாகும் தத்துவங்கள், மனித உழைப்பைச் சுரண்டுவதை எதிர்ப்பதில்லை. மாறாக அதன் மேல் தான் பரிணமிக்கின்றது.
மனித உழைப்பைச் சுரண்டி உருவாகும் சர்வதேச வர்த்தகம், மிகப்பெரிய ஒரு பூதமாகவே அடைக்கப்பட்ட போத்தலில் இருந்து வெளிக் கிளம்புகின்றது. 1990இல் அன்னியச் செலாவணி வர்த்தகம் ஒரு நாளைக்கு 15,00,000 (15 லட்சம்) கோடி டாலராக இருந்தது. இது 1986 உடன் ஒப்பிடும் போது எட்டு மடங்கு அதிகமாகியது. அதாவது 1.87 லட்சம் கோடி டாலராக 1986இல் காணப்பட்டது. வாங்கி விற்கும் தரகுச் சந்தை மிகப் பிரமாண்டமான ஒன்றாக மாறியது. அத்துடன் வர்த்தகத்தின் மற்றொரு உண்மை பளிச்சென்று வெளி வருவதை தடுத்து நிறுத்தமுடியது. 1995இல் உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பகுதி பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையில் நடைபெற்றது. இது தொடர்ந்து மூன்று வருடமாக உறுதியான நிலையைப் பேணியது. ஐ.நா அறிக்கை ஒன்றின் படி 1990இல் பொருட்கள் மற்றும் சேவைத்துறை வர்த்தகம் 3.3 டிரில்லியன் (3,30,000 கோடி) டாலராகும். இதில் 1.1 டிரில்லியன் (1,10,000 கோடி) டாலர் உள்சுற்று தரகு வியாபாரமாகும். தரகு வர்த்தகம் என்னும் உள்சுற்றில் மிகப்பெரும் வர்த்தகக் கொள்ளை அடிக்கப்படுகின்றது. உற்பத்திகள் நேரடியாக மக்களைச் சென்று அடைவதில்லை. இங்கு இடைத் தரகரிடம் பல தரம் அவை கைமாறுகின்றன. இதன் மூலம் பொருட்களின் விலை பல மடங்கால் அதிகரிக்கின்றது. விற்பனைக்கும் உழைப்பற்கும் இடையில், ஒரு சங்கிலித் தொடராகவே கொள்ளை அடிக்கப்படுகின்றது. உழைப்பவனின் கூலிக்கும் விற்பனைக்கும் இடையில் இடைத்தரகர்களால் ஏற்படும் இடைவெளி, உழைப்பவனின் நுகர்வையே இல்லாது ஒழிக்கின்றது. அதாவது உற்பத்தி செய்தவன், அதைத் தானே நுகர்வது என்ற அடிப்படையான இயற்கை விதியில், சேர்க்கையாக இடையில் ஒரு பெரும் கொள்ளைக் கூட்டம் புகுந்து கொள்கின்றது. உழைப்பவனிடம் இருந்து உற்பத்தியை அபகரித்து, பல இடைத்தரகர்கள் மூலம் மீண்டும் உற்பத்தி செய்தவனுக்கே விற்றுக் கொள்ளையடிப்பவனின் ஒழுக்கமே வர்த்தகமாகின்றது.
இந்த வர்த்தக ஒழுக்கத்தை மார்க்ஸ் புல்லுருவிக் கூட்டம் என்றார். மூலதனத்தில் மார்க்ஸ் ""செய்பண்டவுற்பத்தி செய்முறையில் மூலதனமானது உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது.'' அதாவது உழைப்பாற்றல் செயல் ஈடுபாட்டின் மீது அல்லது பாட்டாளி மீதே ஆதிக்கம் செலுத்துகின்றது. மூலதனம் ஆள்வடிவம் பெற்ற முதலாளி, பாட்டாளி ஒழுங்காக வேலை செய்கின்றானா, போதிய அளவு ஆற்றல் செறிவுடன் வேலை செய்கின்றானா என்பதைக் கவனித்துக் கொள்கின்றது. இப்படி உழைப்பின் மீது மூலதனம் என்ற முதலாளி என்னும் ஆள்வடிவம் பெற்று உழைப்பவனை கட்டுப்படுத்தியது. உழைப்பவனின் உற்பத்தியை முதலாளி எடுத்துக் கொண்டு, அதை வர்த்தகமாக சந்தையில் பல இடைத்தரகர்கள் மூலம் சந்தைப்படுத்தும் போது, பெருமெடுப்பில் ஒரு புல்லுருவிக் கூட்டம் உழைப்பின் மீதான ஆதிக்கத்தையும், சுரண்டலையும் கூட நடத்திவிடுகின்றது.
மார்க்ஸ் மூலதனத்தில் இதை தெளிவுபடவே விளக்கிக் காட்டுகின்றார். ""விற்பவர் வாங்குபவர் இடையே மரத்தின் சாரத்தை உறிஞ்சிக் கொள்ளும் புல்லுருவிபோல், வணிகர் புகுந்து இரு திறத்தாரும் உற்பத்தி செய்த மதிப்புகளை உறிந்து கொண்டனர். ... போர் என்பது வழிப்பறிக் கொள்ளை; வணிகம் என்பது பொதுவாக ஏமாற்றும் மோசடி'' என்று அழகுபடவே எதார்த்தத்தை நிர்வாணப்படுத்தி விடுகின்றார். உழைப்பை வழங்கியவனும், உற்பத்தியை அவன் மீள வாங்கும் போது கூட பல அடுக்கில் சுரண்டும் வடிவம் வர்த்தகமாக உள்ளது.
இந்த வர்த்தகமே உலகமயமாகியுள்ளது. 1997இல் நாளொன்றிற்கான ஏற்றுமதி 2500 கோடியாக, அதாவது வருடம் 6,60,000 கோடி டாலராக காணப்பட்டது. மக்கள் உழைப்பைச் சூறையாடி, தேவைகளையே நுகரும் ஆற்றலை இல்லாதாக்கும் போதே ஏற்றுமதிச் சந்தை வெம்பிவிடுகின்றது. இப்படித்தான் உலக ஏற்றுமதி சந்தை கொடிகட்டிப் பறக்கின்றது. இந்த ஏற்றுமதிச் சந்தை மீது மிகப் பெரிய வர்த்தகக் கட்டுப்பாட்டைக் கொண்ட அமெரிக்க அரசு 1969இல் நாளாந்தம் 100 கோடி டாலருக்கு அந்நியச் செலாவணி வியாபாரத்தை செய்தது. இது 1983இல் 3,400 கோடியாகியது. இது உலக ரீதியில் 7,500 கோடியில் இருந்து 20,000 கோடி டாலராகியது. சர்வதேச ரீதியாக வளர்ச்சியுறும் வர்த்தகத்துக்கான உற்பத்திகளை யாரோ இழந்தேயாக வேண்டும். உண்மையில் உலகளவில் பரந்துபட்ட நிலையில், அடிநிலையில் வாழும் மக்கள் இழந்து உற்பத்தியையும், உழைப்பையும் மற்றவனிடம் விடுவதன் தொடர்ச்சியில் தான் இவை வளர்ச்சியுறுகின்றது.
பிரமிப்பூட்டும் சர்வதேச வர்த்தக ஆக்கிரமிப்புகள், தேசங்களின் மூச்சுகளையே நிறுத்தி வைக்கின்றது. எங்கும் சர்வதேச ரீதியான ஆதிக்கத்தை சில நிறுவனங்கள் கைப்பற்றும் நிலைக்கு, உலகம் மாற்றி அமைக்கப்படுகின்றது. உலகின் உழைக்கும் மக்கள் தமது சொந்த உழைப்பின் மீதான உரிமையை இழக்கும் போது, சர்வதேச ரீதியான பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் உலகமயமாகிவிடுகின்றது. 1986இல் 866 பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய உற்பத்தி துறையில் 76 சதவீதத்தை கட்டுப்படுத்தின. பன்னாட்டு நிறுவனத்துக்குள்ளேயான சர்வதேச வர்த்தகம் 30 சதவீதமாக இருந்தது. இதன் தொடாச்சியாக 1989இல் உலகம் தழுவிய தேசங்கடந்த நிறுவனங்களிடையே இணைப்புள்ளவைகளின் விற்பனை 44,00,000 (44 லட்சம்) கோடி டாலராகியது. இவற்றின் உலகளாவிய ஏற்றுமதியை எடுப்பின் 25,00,000 கோடி டாலராகியது. வரலாறு காணாத மனித அவலங்களின் மேல் ஒரு உலகம் கட்டமைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் மக்களின் இழப்பு என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாதவை. உலகம் தழுவிய அளவில் அடிநிலையில் உள்ள பரந்துபட்ட மக்களின் நுகர்வின் அளவு, மிக ஆழமாக வீழ்ச்சி கண்டு வருகின்றது. 1948யுடன் ஒப்பிடும் போது, சனத்தொகை, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அளவு, எப்படி மக்களுக்கு எதிராக உள்ளது என்பதைப் பார்ப்போம்.
1950 சதவீதத்தில் 1998 சதவீதத்தில்
சனத்தொகை அதிகரிப்பு 2 142
உற்பத்தி அதிகரிப்பு 9 602
ஏற்றுமதி அதிகரிப்பு 24 1769
மக்கள் தொகை அதிகரிப்பு 1948உடன் ஒப்பிடும் போது 1950இல் 2 சதவீதத்தாலும், 1998இல் 142 சதவீதத்தாலும் அதிகரித்தது. ஆனால் உற்பத்தி 9 சதவீதத்தாலும் 602 சதவீதத்தாலும் அதிகரித்தது. ஏற்றுமதி 24 சதவீதத்தாலும் 1769 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. இவை சில உண்மைகளை நிர்வாணமாக்கி விடுகின்றது. உற்பத்தி அதிகரிப்பு சிலரிடம் குவிவதையும், நுகர்வு சில பிரிவினருக்கு மட்டும் அதிகரித்துச் சென்றதையும் காட்டுகின்றது. மக்கள் உற்பத்தி மீதான கட்டுப்பாட்டை இழப்பதுடன், நுகர்வின் அளவை இழப்பதையும் ஏற்றுமதி தெளிவாக்கி விடுகின்றது. வறுமைக்கு மக்கள் தொகை அதிகரிப்பே காரணம் என்று கூறும் அறிவின் புரட்டலுக்கு, இது நேரடியாகவே சவால் விடுகின்றது. 1948 உடன் 1998யை ஒப்பிடும் போது சனத்தொகை 142 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் உற்பத்தி 602 சதவீதத்தால், ஏற்றுமதி 1769 சதவீதத்தாலும் அதிகரித்த இக்காலத்தில், வறுமை எதிர்நிலை அதிகரித்துள்ளது. வறுமைக்கான காரணம் சனத்தொகை அல்ல. மாறாக உற்பத்தி மீதான கட்டுப்பாட்டை மக்கள் இழப்பதும், மக்களின் நுகர்வு ஏற்றுமதியாவதுமே அடிப்படையான சமூகக் காரணமாகும். மேலைநாட்டினர் பயன்படுத்தும் 12000 பொருட்களில் 8,000 வெப்பமண்டல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்பவையாக உள்ளது. செல்வத்தை சிலர் குவிப்பது மட்டுமல்ல, அதை முழுமையாக சிலர் நுகர்வதும் கூட உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். இந்த உள்ளடக்கத்தை ஆழமாக உலகமயமாக்குவதே, சுதந்திரம் மட்டுமின்றி ஜனநாயகமாகவும் உள்ளது.
இந்த ஏற்றுமதி, நுகர்வும் எப்படி மக்களிடம் இருந்து சூறையாடப்படுகின்றது என்பதை உலகின் மிகவறிய நாடுகள் ஊடாகப் பார்ப்போம். ஜினேபசு (கிழக்காப்பிரிக்க நாடு) என்ற நாட்டின் தேசிய வருமானத்துடன் ஒப்பிடும் போது அவர்களின் கடன் 417 சதவீதமாக இருந்தது. மாட்டினிக்கின் (கரிபியன் தீவு) கடன் 240 சதவீதமாகவும், லாவோஸ்சின் (ஃணிச்ண்) கடன் 205 சதவீதமாகவும் இருந்தது. இப்படி மிக அதிகக் கடன் உள்ளதும், அதிக வறுமையில் உழலும் 49 நாடுகள் உலகில் இருந்தன. ஆனால் 2000 ஆண்டில் உலகளவிலான மொத்த முதலீடு 1,10,000 கோடி டாலராக இருந்த அதேநேரம், 520 கோடி டாலர் மட்டுமே (0.5 சதவீதம் மட்டுமே) இந்த நாட்டில் முதலிடப்பட்டது. ஆனால் இந்த 49 நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 50 சதவீதம் கனடா, அமெரிக்கா, ஜப்பனுக்குச் செல்ல மிகுதி ஐரோப்பாவுக்குச் செல்லுகின்றது. நாட்டின் கடன் சொந்த தேசிய வருமானத்தையும் தாண்டிச் சென்றுள்ள நிலையில், வட்டி மற்றும் மீள்கொடுப்பனவுக்காக மக்களிடம் அடிப்படைத் தேவைகளைப் பிடுங்கி (பறித்து) ஏற்றுமதியாகின்றது. அதை நுகர்பவர்கள் மேற்கத்தியவராக இருப்பது மட்டுமின்றி, இந்த ஏற்றுமதி வர்த்தகத்தை சிலர் கட்டுப்படுத்தி அதன் மூலம் செல்வத்தைக் குவிப்பவர்களும் மேற்கத்தியவரே. இதன் மூலம் இந்த நாடுகளில் வறுமை பெருக்கெடுக்கின்றது. மக்களின் நுகர்வின் அளவு ஏற்றுமதிக்காக அன்றாடம் குறைந்து செல்லுகின்றது.
இதன் மூலம் உழைப்பின் மீதும், உற்பத்தி மீதான கட்டுப்பாடுகளும் மேற்கின் கைகளில் குவிந்து செல்லுகின்றது. உதாரணமாக 19952002கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்கா உலக பொருளாதாரத்தின் பங்கு 323 சதவீதமாக அதிகரித்தது. அதேநேரம் உலகெங்கும் இருந்து உள்நாட்டில் உற்பத்தியின் குவிப்பு அமெரிக்காவில் 96 சதவீதமாக அதிகரித்தது. எங்கும் ஒரு அராஜகத்தை உருவாக்குவது, உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். மேற்கு வெளியில் உள்ள நாடுகளின் வீழ்ச்சி துரிதகதியில் நடக்கின்றது. உலகில் தனிமனித வருமானம் 900 டாலருக்கு குறைந்த நாடுகளின் எண்ணிக்கையை 1971 உடன் ஒப்பிடும் போது, 2001இல் இரண்டு மடங்கு அதிகமாகியது. இந்த நாடுகளின் கடனோ 15,000 கோடி டாலராகும். ஆகக்குறைந்த நடுத்தர தனிநபர் வருமானம் 278 டாலராகும். அதேநேரம் பணக்கார நாடுகளின் தனிநபர் வருமானம் 25,000 டாலரை விட அதிகமாகும். இந்த நாடுகளில் 74 சதவீதமான மக்களுக்கும் மருத்துவ வசதி கிடையாது. 50 சதவீதமான மக்களுக்கு பாடசாலை வசதி கிடையாது. 43 சதவீதமான மக்களுக்கு குடிக்கும் தண்ணீர் வசதி கிடையாது. இந்த மக்களின் சராசரி ஆயுள் 51 வயதாகும். இப்படி மக்களின் பணங்களின் மேல்தான் உலகமயமாதல் தன்னை செழுமைப்படுத்துகின்றது. இந்த உலகமயமாதல் உலகில் 10 சதவீதமான மக்கள் உலக வருமானத்தில் ஒரு சதவீதத்தைக் கொண்டு, சுதந்திரம் பெற்றுக் கொடுத்த ஜனநாயகத்தில் வறுமையை அனுபவிக்கின்றனர்.