(இக்கட்டுரை எழுதி முடித்து வெளியிட இருந்த அன்று, பிரஞ்சு அரசு தான் கொண்டு வந்த மக்கள் விரோதச் சட்டத்தை மீளப் பெற்று இருந்தது. இதனால் இதன் ஒரு பகுதி நிகழ்காலத்தில் இருந்து இறந்த காலத்துக்கு திருத்தப்பட்டுள்ளது.)
'அடிமைகளுக்கான ஒப்பந்தம்" ( Contrat Pour Esclaves) என்று மாணவர்களால் சரியாகவே வருணிக்கப்பட்டு, இதற்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம் பிரஞ்சு சமூகத்தையே விழிப்புற வைத்தது.
பிராஞ்சு மாணவர்களின் இந்த போராட்டம் அரசியல் மயப்படுத்தப்படாத போதும் கூட, அது உக்கிரமான அரசியல் கோரிக்கைகளுடன் கொழுந்துவிட்டு எரிந்தது. 30 லட்சம் மாணவர்களும் மக்களும் வீதியில் இறங்கி மீண்டும் மீண்டும் ஆர்ப்பாட்டம் செய்ததன் மூலம், தமது போராட்டத்தின் உறுதியை வெளிப்படுத்தினர். அமைதியான ஆர்ப்பாட்டம் என்ற அரசியல் நடைமுறை படிப்படியாக, இயல்பான போர்குணாம்சம் பெறத் தொடங்கியது. அரச இயந்திரத்தை முடக்கும் வகையில் திடீர் நடவடிக்கைகளாகவே அவை வளர்ச்சி பெற்றன. போராட்டம் போர்க்குணாம்சம் பெற்ற நிலையில், ஒரு சில ஆயிரம் பேர் (அண்ணளவாக 3000 மேற்பட்டோர்) கைது செய்யப்பட்டனர். மாணவர்களின் போராட்டங்களை முடக்கும் வகையில், பொலிசாரை வன்முறைக்கு தயாரான தயாரிப்புடன் போராட்ட களங்களில் குவித்தனர். மறுபக்கத்திலோ பல்கலைக்கழகங்களை மாணவர்கள் தமது சொந்தக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். ஒரு சிலவற்றை பொலிசார் வன்முறைகள் மூலம், ஒரு மோதலின் பின்பே கைப்பற்றினர். பொலிசார் நுழைந்து கைப்பற்றுவார்கள் எனக் கருதிய இடங்களில், அதை தடுத்த நிறுத்த தடுப்பு அரண்கள் நிறுவப்பட்டன. இவை போராட்டத்தின் சட்டபூர்வ உரிமைக்குள், போர்க்குணாம்சம் மிக்க நடவடிக்கையாகவே மாற்றம் பெற்றன.
போராட்டம் நீடித்து சென்ற நிலையில், உற்சாகம் குன்றாத நிலையில் போராட்ட வடிவங்களும் மாற்றம் அடைந்தன. அரசை முடக்கும் திடீர் நடவடிக்கைகள், எந்த அறிவுப்புமின்றி ஆங்காங்கே தொடங்கியது. சர்வதேச போக்குவரத்துகளை தடை செய்யும் வகையில், விமானநிலையத்தின் ஒடுபாதையில் புகுந்து குறுகிய நேரத்துக்கு அதை முடக்குகினர். சர்வதேச புகையிரத சேவைகளை முடக்கும் வகையில் பெருமளவு மாணவர்கள் புகையிரத வீதிகளில் திரன புகுந்து, குறுகிய நேரம் போரட்டங்களை நடத்தினர். அரசின் முக்கிய தலைவர்கள் இது தொடர்பான முக்கிய அறிவிப்பை தொலைக்காட்சியல் நிகழ்த்தும் போது, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீடிர் ஆர்ப்பாட்டங்களையும், திடீர் கூட்டங்கள் மூலமும் கூட்டாகவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கினர். திடீர் போராட்டங்கள் மூலம் வீதிப் போக்குவரத்துகளை முடக்கத் தொடங்கினர். உதாரணமாக ஜனாதிபதி இது தொடர்பாக தொலைக்காட்சியில் தோன்றி இதில் சில திருத்தத்துடன் அமுல் செய்வதாக கூறிய உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அவரின் உரை முடிந்தவுடன் பிரான்சின் பல பாகத்தில் ஆர்ப்பாட்டங்களும், கூட்டங்களும் நடத்தி மாணவர்கள், உடனடியாகவே தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பாரிசில் நடந்த ஊர்வலம் ஜனாதிபதி மாளிகையை நோக்கி நகர்ந்தது. இது இரவு 4 மணிவரை ஒரு மோதலூடாகவே, சில மைல் தூரம் நகர்ந்து சென்றது. இதன் போது ஆளும் கட்சி அலுவலகங்கள் அடித்து நொருக்கப்பட்டன.
இப்படியான போராட்டங்கள் ஜரோப்பிய நாடுகளுக்கான பாதைகளை முடக்குவது முதல் மூலதனச் செயல்பாட்டுக்கான விநியோகங்கங்களை (supply) குறுகிய நேரம் அதிரடியாக முடக்குவது என்று பல போராட்டங்கள் தொடர்ச்சியாக திடீர் தீடிரென நடத்தப்பட்டன. ஒரு பலமான ஒன்றிணைந்த திகதியிடப்பட்ட போராட்டத்துக்கு, இடைப்பட்ட காலத்தில் குறுகிய பல போராட்டங்கள் அங்காங்கே திடீரென்று திட்டமிட்டு நடத்தப்பட்டது. போராட்ட வடிவம் மாறுகின்ற நிலைமைகளில் பொலிஸ் தலையீடு, மோதல்கள், கைதுகளின்றி அவை தானாக நிறுத்தப்படவில்லை.
இதன் மறுபக்கத்தில் மாணவர்கள் சமூகம், புதியதொரு கல்வியை தமது வாழ்வில் முதல முறையாகவே கற்கத் தொடங்கினர். மாணவர்கள் தமது போராட்டத்துக்கு பொதுமக்களின் ஆதரவை திரட்ட தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கினர். மக்கள் பற்றியும், கடந்தகாலத்தில் மூலதனத்தினால் ஏற்பட்டுவரும் சமூக அவலங்களைப் பற்றியும் கூட, கருசனையுடன் தமது சொந்தக் கவனத்தை திருப்பினர். பல உரையாடல்களை, விவாதங்கள், கூட்டு நடவடிக்கைளை நடைமுறைப்படுத்தினர். பொது வேலை நிறுத்ததை தொடங்கத் தடையாக உள்ள, கடந்தகால காட்டிக்கொடுப்புகள் ஏற்படுத்திய மக்களின் அரசியல் உணர்வு மட்டத்தை மாற்ற, மாணவர்கள் தீவிரமாக முனைந்தனர். இதன் ஒரு அம்சமாகவே தொழிற்சாலைகளை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கினர். இந்தளவுக்கும் மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்று இதில் ஈடுபடவில்லை. எதார்த்த நிலைமை வலுக்கட்டாயமாக அவர்களை அதற்கு இட்டுச் சென்றது. தொழிலாளர்களின் கடந்தகால நிகழ்கால பிரச்சனைகள் மீது, ஒரு கரிசனைமிக்க இயல்பான ஒரு அரசியல் உரையாடலை நடத்தினர். இதன் முதற்படியாகவே மாணவர்கள் தொழிலாளர்கள் இணைந்த திடீர் நடவடிக்கைகள் படிப்படியாக வளர்ச்சி காணத் தொடங்கியது.
இதன் போது வீதிகளை மறித்து வாகனத்தில் செல்வோருக்கு தமது நிலை விளக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கி ஆதரவை கோரினர். மாணவ தலைவர்கள் தொழிற்சங்க தலைமை முதல், தொழிலாளர்களின் அடிமட்டம் வரை அடிக்கடி கூடிக் கதைத்தனர். பொதுப்போராட்டங்களை நடத்துவதிலும், ஒருகிணைந்த உணர்வை வெளிப்படுத்துவதிலும்; கருசனை எடுத்தனர். வேலையில்லாத அலுவலகங்களைக் கைப்பற்றி, வேலையில்லாதவர்களை ஒருங்கிணைத்த கூட்டங்களையும் கலந்துரையாடல்களையும் நடத்தினர்.
பொதுவாக சமூகத்தை கீழ் இருந்து மேலே பார்க்கும் அணுகுமுறையைத் தொடங்கினர். வாழ்க்கை என்றால் என்ன? உழைப்பு என்றால் என்ன? ஜனநாயகம் என்றால் என்ன? என்று அனைத்து சமூக மதிப்பீடுகள் மீதுமான சுயபரிசீலனை, கூட்டு விவாதங்கள், கூட்டு முடிவுகள் என பலதளத்தில் நடத்தினர். இது தன்னியல்பாகவும், ஏன் திட்டமிட்டும் கூட நடத்தப்பட்டன. தன்னியல்பாக தொடங்கிய இந்தப் போராட்டம், படிப்படியாகவே அரசியல் மயமாகத் தொடங்கியது. இதன் விளைவாக அரசு சட்டத்தை மீளப் பெற்ற பின்பும் கூட, போராட்டத்தைக் கைவிட ஒரு பகுதி மாணவர்கள் தீவிரமாக மறுத்தனர். பல்கலைக்கழக செயற்பாட்டை முடக்கியதுடன், வீதி ஆர்ப்பாட்டத்தையும் நடத்தினர். கடந்தகாலத்தில் மாணவர்களுக்கு எதிராக கொண்டுவந்த அனைத்து சட்டங்களையும் மீளப் பெறும் வகையில், போராட்டம் அரசியல் கோரிக்கையாக மாறி நிற்கின்றது.
உண்மையில் இந்த போராட்டம் தொடங்கிய போது மிகவும் பலவீனமான ஒரு நிலையில் தொடங்கியது. இதுவே படிப்படியாக பலம்பொருந்திய ஒன்றாக மாறியது. போராட்டம் தொடங்கிய போது அரசியல் எதுவுமற்ற ஒன்றாக, தன்னியல்பான ஒன்றாகவே இருந்தது. இது படிப்படியாக அரசியல் மயமாகும் முதல் படியைத் தொட்டது. சமூகம் பற்றி ஒரு அரசியல் கல்வியை இது முன்னிலைப்படுத்தி, எதிர்கால சமூதாயத்தின் ஒரு அரசியல் மயமாக்கலை நோக்கி நகர்வதற்கான படிமுறையில் இது தன்னை வெளிப்படுத்தியது. பிரான்சில் நடப்பனவற்றைக் கண்டு, உலகிலுள்ள மக்களும்; மாணவர்கள் புதுமையானதாகவும் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர். மாணவர்கள் என்ன கோருகின்றனர் என்று தெரியாது மூக்கை சொறிகின்றனர்.
மறுபக்கம் சமூக ரீதியாகவே, சமூகத்துகாக போராடுபவர்கள் மகிழ்ச்சியால் உந்தப்படுகின்றனர். போராட்டமின்றி மனித வாழ்வில்லை. ஆம் மனித போராட்ட வரலாறு என்பது மக்களின் சொந்த அதிகாரத்தை நோக்கிப் போராடுதல் என்பதையே, பிரஞ்சு மாணவர்கள் அவர்கள் தாமே அறியாது மீண்டும் உலகுக்கு உணர்த்திவிட்டனர். இதை தடுத்து நிறுத்த மூலதனத்தால் முடியாது என்பதையே, மாணவர் போராட்டம் மீண்டும் ஒரு முறை உலகுக்கு உணர்த்தி நிற்கின்றது.
மாணவர்களின் போர்க்குணாம்சமான இந்த நிலைமையையிட்டு யார் கவலைப்படுகின்றனர். பிரஞ்சு முதலாளிகளும் அவர்களின் அரசியல் பொருளாதார எடுபிடிகளுமே. உலக முதலாளிகளும் அவர்களின் தொங்கு சதைகளும் மிரண்டு போய் நிற்கின்றனர். எலும்புகளை கவ்வும் ஒரு கூட்டம், இதையிட்டு தனக்குள் தானே நெழிகின்றது. நாசியக் கட்சிகள் பாசிச வெறியுடன் மாணவர்கள் வீதியில் இறங்குவதை தடுக்கும்படி கூக்கூரல் இடுகின்றனர். இவர்கள் எல்லோரும் ஜயோ ஜனநாயகத்துக்காக இந்தக் கேடா என்று புலம்பினர். வன்முறை மூலம் இதை அடக்கும்படி கோரினர். இதற்கு எதிரான சிறுபான்மையினரின் ஜனநாயகத்தை, பெரும்பான்மை வீதியில் இறங்கி தடுப்பதாகக் கூறினர். மூலதனம் உருவாக்கிய தனது ஜனநாயக சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்தியே, இதை தடைசெய்யக் கோரினர்.
சமூக விரோத முதலாளித்துவ ஆதரவு சிறுபான்மையினரின் ஜனநாயக உரிமையே முதன்மையானது என்கின்றனர். இதற்கு எதிரான மாணவர்களின் ஜனநாயகம், வன்முறை கொண்டது என்றனர். ஜனநாயக பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தை திரும்ப பெறக் கோருவது, ஜனநாயக விரோதம் என்;றனர். பெரும்பான்மை மக்கள் தமக்கு வாக்களித்துவிட்டதாக கூறி, மக்களுக்கு எதிராகவே சட்டம் கொண்டுவர தமக்கு உரிமை உண்டு என்று கூறி கூக்குரல் இட்டனர். இதைத்தான் ஜனநாயகம் என்று கூறி, ஜனநாயகத்தின் உண்மை முகத்தை தம்மையறியாமலேயே தோலுரிக்கவும் கூட அவர்கள் தயங்கவில்லை.
ஜனநாயகம் பற்றிய கேள்விகள் மாணவர்களிடையே ஒரு விவாதப் பொருளாகிவிட்டது. இதில் அவர்கள் அரசியல் கல்வி கற்று பட்டம் பெற்றுவருகின்றனர். பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை மீறிய, பெரும்பான்மை பாராளுமன்ற உறுப்பினர்களின் ஜனநாயகம் பற்றிய கேள்வி, வீதியில் மாணவர்களால் நிறுத்தி வைத்தே கேட்கப்பட்டது. மக்களுக்கு எதிரான அரசையே ராஜினாமாச் செய்யக் கோரினர்.
முதலாளிகளுக்காகவே உள்ள ஜனநாயகம், முதலாளிகளுக்காகவே சேவை செய்யும் பொலிஸ் என்ற வன்முறை கொண்ட அடக்குமுறை இயந்திரத்தை, மாணவர்கள் தமது சொந்தப் போராட்டத்தின் மூலமே இனம் கண்டனர். இதை பாதுகாக்கும் அரசு இயந்திரங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராக ஏன் செயல்படுகின்றன என்ற கேள்வி, ஜனநாயகம் பற்றிய பிரமை கொண்ட மாணவர்களிடையே மக்களிடையே ஒரு தெளிவை உருவாக்கி வருகின்றது. ஜனநாயகம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதனத்துக்கு சார்பானது. சட்டம் என்பது முதலாளிக்கு அதாவது மூலதன பெருக்கத்துக்கு சார்பானது. அரசு என்பது மூலதனத்தை வைத்துள்ளவர்களை பாதுகாக்க உருவானதே. இது ஒரு வன்முறை கொண்ட சர்வாதிகார அமைப்பாகும்.
இந்த ஜனநாயகத்தை நம்பி அரசியல் செய்யும் கட்சிகளும், அதை சொல்லி தொழிற்சங்கம் நடத்திப் பிழைக்கும் கும்பலும் கூட, ஜனநாயகத்தை பாதுகாக்க களத்தில் மாணவர் சார்பு நிலையை எடுத்தனர். இந்த விசித்திரமான அடிப்படையான உண்மை மட்டும், இதில் அம்பலமாகாது பொயத்;துவிடுகின்றது. மாணவர்கள் இந்த ஜனநாயக அமைப்பில் நம்பிக்கையை இழந்துவிடாது தடுக்கவும், ஒரு புரட்சிகரமான மக்கள் அதிகாரத்தை கோரும் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது தடுக்கவும், இந்த ஜனநாயகவாதிகள் விரும்பினர். அவர்கள் மாணவர்களின் பக்கத்தில் தாம் நிற்பது போல் நின்று, மாணவர்களின் விருப்பத்தை தமது கோரிக்கைக்குள் சரணடைய வைக்க முனைந்தனர்.
பேசித் தீர்த்தல், முன் கூட்டியே சட்டத்தை விவாதிக்க கோருதல், தாம் ஆட்சிக்கு வந்தால் இதை நீக்குவதாக கூறுதல், இது போன்ற சட்டங்களை உங்களுடன் பேசி முடிவு எடுப்பதாக கூறுதல், போராட்டம் சிதையும் வண்ணம் காலத்தை நீட்டியடித்தல், போராட்டத்தை சிதைக்கும் வண்ணம் சீர்திருத்தத்தை புகுத்துதல், பொது வேலை நிறுத்ததை இழுத்தடித்து பிற் போடுதல், தனித்தனியாக அரசுடன் பேசுதல், கூட்டுத் தலைமைக்கு புறம்பாக பேச முற்பட்டு போராட்டத்தை உடைத்தல், தொழிற் சங்கத்தை மாணவர்களில் இருந்து பிரித்து செயல்படுத்தல் போன்ற எண்ணற்ற இழிந்த வடிவங்களை இவர்கள் கையாண்டனர். உண்மையில் மாணவர்களின் கோரிக்கையை மழுங்கடிக்க, அதை சிதைக்க பலர் குறுக்குவழியில் இதற்குள் புகுந்து செயல்படுத்த முனைந்தனர்.
ஒரு அரசியல் மயப்படாத சமூகத்தில், இது போன்ற குறுக்குவழி அரசியல் நடைமுறைகள் பல சறுக்கல்களையும் தோல்விகளையும் வழிகாட்டத்தான் செய்தன. ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கையை, இவர்களால் மறுதலிக்க முடியாமையால் ஜனநாயகத்தின் குறுக்குவழி அரசியலால் திசைதிருப்ப முடியவில்லை. இதனால் போராட்டம் தொடர்ச்சியாகவும் சோர்வின்றியும் சவால்விட்டு நிமிர்ந்து நின்றது.
பிரங்சுப் பிரதமரோ தனது கருத்தில் போராட்டத்துக்கு பயந்து மூலதனத்துக்கு சார்பான இச் 'சட்டம் திரும்பப் பெற்றுக் கொண்டால், நாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சீர்திருத்தம் என்பதை மறந்துவிட வேண்டும். இது ஆபத்தான அடையாளமாகும்." என்றார். எனவே 'அரசாங்கம் விவாதத்திற்கிடமின்றி கஷ்டத்தில் இருக்கின்றது. நாம் ஒன்றுபடவேண்டும்," என்று அரசு, தனது வலதுசாரிய அதிர்ப்;தியாளர்களிடம் கூறினர். மறுபக்கத்தில் மாணவர்களின் உறுதியான நிலையை முறியடிக்க சட்டத்தில் திருத்தம் செய்வதாக அறிவித்தனர். இரண்டு வருட காலத்தை ஒரு வருடமாக குறைப்பதாக் கூறி, ஒரு பகுதி மாணவர்களை உடைத்துவிட முனைந்தனர். மாணவர்களின் உறுதியான எதிர்ப்பால் இது தோல்வி பெற்ற போது, புதிதாக மீண்டும் இதை நடைமுறைப்படுத்தும் காலத்தை ஆறு அல்லது ஒரு வருடத்துக்கு பிற் போடுவதாக அறிவித்தனர். இதுவும் தோல்வி பெற்றது. மாணவர்களின் பரீட்சை நெருங்கி வருவதைக்காட்டி, ஒரு உளவியல் விவாதத்தையே நடத்தி, மாணவர்களின் உணர்வுகளை சிதைக்க முனைந்தனர். இப்படிப் போராட்டத்தை நீந்து போகச் செய்யும் சதிகளையே அரசு ஜனநாயகமாக்கினர். ஆனால் மாணவர்களின் நியாயமான கோரிக்கைகள், இதை முறியடித்து தனது பலத்தை நிறுவிக்காட்டியதுடன், சமூக விரோதச் சட்டத்தை மீளப் பெற வைத்தனர்.
மூலதனத்தை பாதுகாக்கும் ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்தைக் கண்டு, எதிர்கட்சிகள் பீதியில் உறைந்து நின்றனர். இந்த சட்டத்தை ஒட்டி 'இது எதில் போய் முடியுமோ என்ற கவலையில் நாங்கள் அனைவரும் உள்ளோம்" என்று சோசலிஸ்ட் கட்சியினர் கூறினர். அரசின் கடும்போக்கை கண்டு, ஐயோ ஜனநாயகத்துக்கு ஆபத்து அதிகரிப்பதாக கீச்சிட்டனர். புதிய அரசியல் மாற்று வழிகளை இது உருவாக்குவதாகவும், இது ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழக்க இச்சட்டம் வழிவகுப்பதாக கூறியே, இந்த சட்டத்தை வாபஸ் வாங்கும்படி கோரினரேயொழிய மாறாக மாணவர்களின் நியாயமான கோரிக்கையின் மீதல்ல.
இந்த நிலையில் இருந்து தப்பிப்பிழைக்கவும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு வெல்ல விரும்புகின்ற, இனவாதியும் நாசியுமான உள்துறை அமைச்சர் சாக்கோசி, அரசின் சார்பாக இதைக் கையாளத் தொடங்கினார். அவர் தான் இந்தச் சட்டத்தின் அமுலாக்கத்தை 6 முதல் 12 மாதம் பிற் போடுதல் என்ற புதிய அரசியல் சூதாட்டத்தை அறிவித்தார். இதன் மூலம் தான் தேர்தலில் வெல்லும்வரை இதைப் பிற்போடுதல், இல்லையென்றால் இந்த நெருக்கடியை புதிய ஆட்சியிடம் தள்ளிவிடுதல் என்ற அரசியல் ஜனநாயக சூழ்ச்சியை முன்னிறுத்தினார். இந்த அரசியல் சூழ்ச்சியையும் மாணவர்கள் தெளிவாக நிராகித்தனர். உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டத்தை வாபஸ் வாங்கக் கோரினர்.
அவர்கள் இதற்கு எதிராக 'இளைஞர்களை தூக்கியெறிவதை நிறுத்து", 'கசக்கப்பட்ட எலுமிச்சம் காய்களாக எத்தனை காலம் இருப்பது?", 'க்ளீனெக்ஸ் ஒப்பந்தம் வேண்டாம்", 'பின்புற வழியாக அடிமை உழைப்பு", 'ஒப்பந்த வேலையை தூக்கி எறியுங்கள்;" 'உங்கள் இளமையை தூக்கி எறியாதீர்கள்!" இது 'அடிமக்களுக்கான ஒப்பந்தம்" என்று பல பத்து கோசங்களுடன் மாணவர்கள், அரசை எதிர்த்து வீதியில் மீண்டும் மீண்டும் இறங்கினர்.
இப்படித் தான் ஜனநாயகம் ஒரு அரசியல் நெருக்கடியில் சிக்கியது என்றால், அந்த மாணவர் போராட்டத்தின் அடிப்படையை புரிந்து கொள்வது அவசியம்;. இந்த சட்டம் இரண்டு விடையங்களை உள்ளாக்கியது. முதல் வேலை ஒப்பந்தம்(CPE என்பது Contrat première embauche ) என்ற சட்டம், 26 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு எதிராக சிறப்பாக கொண்டு வரப்பட்டுள்ளது. இரண்டாவது சட்டம் முதியவர்களுக்கானது. குறுகிய கால ஒப்பந்தம் (Short-tem Contract for Seniors) என்பது, 57 வயதிற்கு மேற்பட்ட தொழிலாளர்களுக்கான ஒரு சட்டம். இதுவும் மாணவர்களுக்கு எதிரானது.
முதல் வேலை ஒப்பந்தம் 26 வயதுக்கு உட்பட்டவர்களை ஒரு முதலாளி விரும்பிய நேரத்தில், விரும்பியவாறு இரண்டு வருடத்துக்குள் வேலை நீக்கம் செய்யும் சட்டமாகும். இதற்கு எதிராக சட்டப்படி வழக்கு தொடுக்க முடியாது. இதுவரை இருந்த உழைக்கும் அனைத்து தொழிலாளியையும் நீக்க வகை செய்யும் பொதுச்சட்டத்தை நீக்கியுள்ளது. அதற்கு பதிலாக 26 வயதுக்குட்பட்டவர்களை ஒரு சிறப்புச் சட்டத்தின் மூலம், அவர்களை விரும்பியவாறு முதலாளி கையாள அனுமதிக்கின்றது.
முதியர்களுக்கான குறுகியகால ஒப்பந்தம், தான் பெறும் சம்பளத்தின் ஒரு பகுதியை மட்டும் பெற்றுக் கொண்டு, உழைப்பில் தொடர்ந்து இருக்க வழிவகை செய்யும் சட்டம். இதன் மூலம் முதிய உழைப்பாளிகளின் சம்பளத்தைக் குறைக்க சட்டம் இயல்பாக வழிவகுக்கின்றது. முதுமைக்கு ஒய்வூதியம் என்பதை இது மறுக்கின்றது. மறுபக்கத்தில் ஒய்வூதியத்தை குறைத்த கடந்தகாலச் சட்டங்கள், இயல்பாக ஒய்வூதியத்தை விட சற்று அதிகமான கூலியை பெற்று தொடர்ந்தும் உழைக்க கோருகின்றது. ஒய்வூதியம் பெறாது தொழிலில் நீடிக்க சட்டம் கோருகின்றது. குறைந்த ஒய்வூதியத்தில் வாழமுடியாத நிலையில், வலுக்கட்டாயமாக அதை விட சற்று அதிகமான ஒரு எழும்பை போடுவதன் மூலம் ஒய்வூதிய வயதை அதிகரிக்கவைக்கின்றனர். இதன் மூலம் முதலாளி ஒய்வ+திய நிதியை கொடுக்க வேண்டியதில்லை. மிகச் சிறந்த அனுபவமுள்ள உழைப்பாளியின் உழைப்பை, மிக மலிவாக சுரண்ட இச் சட்டம் வழிவகுத்தது. இதன் எதிர்வினையில் இதுவே இளைஞர்களின் புதிய வேலை வாய்ப்பைத் தடுக்கின்றது. இதை உறுதி செய்யவே மற்றய சட்டம் உதவுகின்றது.
உண்மையில் 26 வயதுக்குட்பட்டவர்களின் வேலையின்மையை நிரந்தரமாக உருவாக்குகின்ற திட்டமிட்ட சதியாகும். ஒரு சேமிப்படையாக வைத்துக் கொண்டு பயன்படுத்திவிட்டு, துப்பிவிடும் மூலதனத்தின் முயற்சியாகும்;. 26 வயதுக்கு உட்பட்டவர்களை பெற்றோரில் தங்கிவாழ வைப்பதன் மூலம், முதலாளிகளின் மூலதனத்தை அதிகரிக்க வைக்கும் சட்டமாகும். 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு பிரான்சில் எந்த சமூக உதவியும் வழங்கப்படுவதில்லை. அதாவது 18 வயதுக்கு கூடிய ஒருவன் சமூகத்தின் முடிவெடுக்கும் அதிகாரத்தை கொண்ட பொதுவான சட்ட நடைமுறைகள் இருந்தபோதும் கூட, அவன் உழைத்துத்தான் வாழ வேண்டிய ஒரு நிலையிலும் கூட, அவன் 26 வயது வரை எந்த சமூக உதவியும் பெறமுடியாது. அதாவது பிரான்சில் 26 வயதுக்கு கூடிய ஒருவன் வேலையில்லை என்றால், அதிகுறைந்த சமூக உதவியைப் பெறமுடியும். அது 26 வயதுக்குட்பட்ட ஒருவனுக்கு கிடையாது. இது இயல்பில் பெற்றோரில் தங்கிவாழ வைக்கின்றது அல்லது சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழக் கோருகின்றது. இது முலதனத்துக்கு சார்பான ஒரு சட்டமாகவுள்ளது.
அதேநேரம் கல்வி கற்போருக்கென கட்டாயமான இலவசமான உழைப்பு முறை ஒன்று அமுலில் உள்ளது. 15 வயதுக்கு மேல் கல்வி கற்போர் கற்கும் காலத்தில், முதலாளிக்காக இலவசமாக உழைக்க வேண்டும். இதற்கு கூலி கிடையாது. இப்படி பல கோடி மணித்தியாலங்களை முதலாளிகள் கூலியின்றி பெறுகின்றனர். பல 100 கோடி ஈரோக்களை ஒவ்வொரு வருடமும் இலவசமாக கூலியின்றி முதலாளி பெறுகின்றான். இப்படி கூலியின்றி உழைக்கும் நேரத்தை, மாணவர்களின் ஒழுக்கத்தின் பெயரில் படிப்படியாக அரசு அதிகரித்து வருகின்றது. இப்படி ஒரு அப்பட்டமான சட்டப+ர்வமான கொள்ளையே, இந்த ஜனநாயக சட்டவாக்கத்தின் பின் ஆழச் செறிந்து காணப்படுகின்றது.
முதல் வேலை ஒப்பந்தம் நடைமுறையில் வந்து இருந்தால், குறிப்பாக வெளிநாட்டு இளைஞர்கள் அதிகளவில் நேரடியாக பாதிக்கப்படுவர். இன்று அதிகளவில் உள்ள வெளிநாட்டவர் வேலையின்மை (குறிப்பாக இது பிரதேசத்துக்கு பிரதேசம் 25 சதவீகிதம் முதல் 50 சதவீகிதமாக காணப்படுகின்றது.) இயல்பாகவே அதிகரிக்கும். இருக்கும் சட்டங்களே கணிசமாக வேலையைவிட்டு துரத்துபவர்களைக் கட்டுப்படுத்துகின்றது. இதை இல்லாதாக்கும் போது, வெளிநாட்டு இளைஞர்களை விரைவாகவே, வேலையில் இருந்து துரத்திவிடுவது அதிகரித்திருக்கும்.
பொதுவாக இச்சட்டம் 26 வயதுக்குட்பட்டவர்களை உளவியல் ரீதியாக அடிமைப்படுத்துவதையே கோருகின்றது. இதில் பெண்களை பாலியல் ரீதியாக, அதிகாரம் கொண்ட மூலதனம் நுகர்வதை கேள்விக்குள்ளாக்காத வகையில், பெண் இணங்கிப் போவதையே கோரியது. 26 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகத்தின் அனைத்துவிதமான சமூகக் கொடூமைக்கும் தானாக இணங்கிப் போவதை வரைமுறையின்றி இச்சட்டம் இணங்கவைக்க முனைந்தது. ஒரு தொழிற்சங்க செயல்பாட்டில் இருந்து, சமூக செயற்பாட்டில் இருந்த இளைஞர்களுக்கேயுரிய தீவிர உணர்வை இது கட்டுப்படுத்தி, மூலதனத்துக்கு அடங்கி இணங்கி இருக்கக் கோரியது. இளைஞர் சமூதாயம் அடங்கியொடுங்கி ஒழுக்கமாக, அதையே பண்பாக கொண்டு மூலதனத்துக்கு சேவை செய்வதை இது கோரியது. மக்கள் நலன், சமூக நலன் என எதையும் முன்னிறுத்தாத, மூலதன நலனுக்கு இணங்கிப் போகும் ஒரு வாழ்க்கை முறையையே, இச்சட்டத்தின் மூலம் நடைமுறையில் கோரியது. 26 வயதின் பின் இதுவே ஒரு வாழ்க்கை முறையாக தன்னைத் தான் மாற்றக் கோரும் ஒரு பயிற்சி காலமாக, 26 வயதுக்குட்பட்ட இளைஞர் இளையிகளின் வாழ்வு மீதான பயத்தை தனக்கு சார்பாக மாற்ற முனைந்தது. இதன் மூலம் மூலதனம் இளைஞர் யுவதிகளின்; உழைப்பின் திறனை, அதிகளவில் உயர்ந்தபட்சம் உறுஞ்சுவதையே இச்சட்டம் உறுதி செய்ய முனைந்தது. அதாவது 26 வயதுக்கு உட்பட்டவர்கள் கடுமையாக உழைப்பதன் மூலம், நாயாக வாழ்வதன் மூலம், தனது தொழிலைப் பாதுகாக்க முடியும் என்ற நப்பாசையையே இச்சட்டம் ஒரு பண்பாகவும் நடைமுறையாகவும் கோரியது.
மூலதனத்தின் அனைத்து அசைவுக்கும் இணங்கி அடிமைப்பட்டு அடங்கியொடுங்கி வாழ்வதையே இச்சட்டம், ஒவ்வொரு 26 வயதுக்குட்பட்டவனிடமும் கோரியது. இல்லையென்றால் அவர்கள் வலதுகுறைந்தவர்களாக மாறி, வாழ்வதற்காக பெற்றோரை தங்கியிருக்க கோரியது. இதுவுமில்லை என்றால் சமூகவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வாழும் லும்பன்களாகவே இருக்கக் கோரியது. இந்தவகையில் இச் சட்டம் மேலும் ஒரு சமூக இழிவைப் புகுத்தவே முனைந்தது. மூலதனத்தின் அடிமையாக, சுதந்திரமான உணர்வுகளை இழந்து இழிந்து இருத்தலைத் தான் ஜனநாயகம் என்றது. உளவியல் ரீதியாகவே அனைத்தையும் இழந்து சிதைந்து போன, சுயலாற்றல் அற்ற நிலையில் வாழ்வதே நாகரிகம் என்று இச்சட்டம் மூலம் புகட்ட முனைந்தனர்.
இன்று பிரான்சில் அண்ணளவாக 10 சதவீகிதம் பேர் வேலையின்றி இருப்பதாக அரசு அறிவிக்கின்றது. இதில் 26 வயதுக்குட்பட்டோரின் வேலையின்மை அண்ணளவாக 23 சதவீதமாகவுள்ளது. இந்த நிலைமை என்பது, 26 க்கு குறைந்த, உழைப்பில் அதிதிறன் ஆற்றல் உள்ள உழைக்கும் மனிதர்களின் இழிநிலையே இது. இதை மேலும் அதிகரிக்கும் வண்ணம், இச் சட்டம் வக்கிரமாகவே அவர்கள் மேல் ஈவிரக்கமின்றி பாய்ந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டவர்களில் வேலை செய்தவர்களில் 58 சதவீகிதம் பேர் மட்டும் தான், நிரந்தரமான ஒரு வேலையைப் பெற்றனர். மிகுதிப் பேர் நிரந்தரமற்ற ஒரு நிலையில் காணப்பட்டனர். இச்சட்டம் இதை மேலும் அதிகரிக்க கோரியது. முதலாளிகள் தாம் நிரந்தரமாக வைத்திருக்க வேண்டிய தேவையை மறுக்கின்ற ஒரு சட்டத்தைத்தான் கோரினர். மாணவர்கள் இதன் எதிர் நிலையில் நின்று போராடினர்.
உண்மையில் இந்த சட்டத்தின் முன்பே நிலைமை மோசமானதாகவே இருந்தது. 2003 இல்; 21 சதவீகிதத்தினர் தங்கள் படிப்பு முடித்து ஒன்பது மாதங்களுக்கு பின்னரும் கூட, வேலை தேடிக் கொண்டிருந்தனர். இன்றைய ஒரு நிலையில் ஒரு இளைஞன் நிரந்தரமான ஒரு வேலை கிடைக்க 8 முதல் 11 ஆண்டுகள் செல்லுகின்றது. புதிய சட்டம் இதை மேலும் பல ஆண்டாக அதிகரிப்பதையே முன்வைத்தது. 70 சதவீகிதமான இளைஞர்கள் குறுகிய கால ஒப்பந்தம் மற்றும் தற்காலிகமான வேலைக்கே செல்லுகின்ற இன்றைய மனித அவலத்தை, இச் சட்டம் முழுமையான வாழ்க்கை முறையாக்க முனைந்தது. 2003 இல் 26 வயதுக்கு உட்பட்டோரில் வேலை செய்தவர்களில் 40 சதவீதம் பேர், அடுத்த வருடம் தமது வேலையை இழந்து இருந்தனர். இதை இச்சட்டம் இதை 100 சதவீகிதமாக்க முனைந்தது.
இதை ஆநுனுநுகு என்ற பிரெஞ்சு முதலாளிகளின் சங்கம் 'ஒழுங்குபடுத்தப்படாத குப்பைக்கூழம்" என்று கூறி, ஒழுங்குபடுத்தும் இச்சட்டம் தேவை என்றனர். தனது தேவைக்கு ஏற்ப ஒழுங்குபடுத்த இந்தச் சட்டம் உதவுகின்றது என்றனர். குப்பைகளான இளைஞர்களை வடிகட்டி, தூக்கியெறிய இச்சட்டம் உதவும் என்;றனர்.
சரி இந்த ஜனநாயக சட்டத்தை அரசு கொண்டு வந்த விதமே நரித்தனமானது. மாணவர்களின் விடுமுறையின் போது தான் இச்சட்டத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்தனர். நாள் பார்த்தும், சூனியம் செய்தும், மாணவர்கள் போராடாது இருக்கவும், தமது எதிhப்பை தெரிவிக்காத ஒரு நாளாக பார்த்தே நாட்களை தெரிவு செய்து இந்த சட்டத்தைக் கொண்டு வந்தனர். தை 28 ம் திகதி இச்சட்ட மூலம் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. மாசி 4 முதல் இரண்டு கிழமை தொடரும் விடுமுறைக்குள் எதிர்ப்புகள் விவாதங்கள் நீந்து போகச் செய்யும் வகையில், சமூகத்துக்கு எதிரான சட்டம் நயவஞ்சகமாகவே புகுத்தப்பட்டது.
பங்குனி 8 திகதி அதாவது பெண்கள் தினத்தன்று இச்சட்டம் சட்டவாக்கம் பெற்றது. பெண்களுக்கு எதிரான ஒரு புதிய சட்டம் தான். மனித உரிமையை கோரிப் போராடும் ஒரு நாளில் தான், இந்த மனித இழிவு சமூகத்தில் சட்டபூர்வமாக புகுத்தப்பட்டது. ஆனால் மாணவர்கள் இதை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றது என்பது, எம்முன்னுள்ள சரியான வரலாற்றுப் பணியை உற்சாகத்துடன் வழிகாட்டுகின்றது. வரலாறு மக்களுக்கானது. போராடினால் தான் மனித வாழ்வு உண்டு. இதின்றி மனித உரிமை என எதுவுமில்லை.
பி.இரயாகரன்
13.04.2006