இயற்கைக்குப் புறம்பாக மனித வரலாற்றில் எதை சக மனிதனுக்கு மறுக்கின்றனரோ, அதுவே வர்த்தகமாகின்றது. மற்றொரு மனிதனுடன் தனது சொந்த உழைப்பிலான உற்பத்தியை பகிர்ந்து கொண்ட சமூக நிகழ்வை மறுப்பதே, இன்றைய நாகரீகமாகும். இதுவே வர்த்தகமாகும். எல்லாவிதமான இன்றைய சிந்தனைகளும், செயல்களும் இதற்குள் தான் கட்டமைக்கப்படுகின்றன. மற்றைய மனிதனுடன் தனது சொந்த உழைப்பை பகிர்ந்து கொள்வதை, இன்றைய ஜனநாயகமும் சுதந்திரமும் காட்டுமிராண்டித்தனமாகக் காண்கின்றது. இதையே ஜனநாயக மறுப்பாகவும், சுதந்திரமின்மையாகவும் கூட சித்தரிக்கின்றது. இதுவே அனைத்து அரசுக் கட்டமைப்பினதும் சித்தாந்த உள்ளடக்கமாகும்.
இதனடிப்படையில் மற்றவனின் உழைப்பை பறித்தெடுத்தலையே, இன்றைய ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் அதியுன்னதமான கோட்பாடாகிவிட்டது. அதாவது மனித நாகரீகம் என்பதும், அது கூறும் ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்பது, மற்றவனின் உழைப்பைத் திருடுவதை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பாகக் காணப்படுகின்றது. மற்றவன் உழைப்பை எந்தளவுக்கு நாகரீகமாக அதிகம் திருட முடியுமோ, அதுவே உன்னதமான சமூக ஒழுக்கமாக உலகமயமாதல் கருதுகின்றது. இன்றைய சிந்தனைகள் செயல்கள் அனைத்தும் இதற்கு ஆதரவாக அல்லது எதிராகவே சமூகத்தில் கட்டமைக்கப்படுகின்றது.
இந்த நிலையில் சமூக உணர்வுடன் மற்றவன் மீதான கொடூரமான சுரண்டலை கண்டு கொதித்து எழுவது, அநாகரீகமானதாக கருதும் மனித உணர்வுகளே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதைப் பயங்கரவாதமாகவும், பிழைக்கத் தெரியாத ஒன்றாகவும், காட்டும் நாகரீகமே வக்கிரமாகி சமூக ஒழுக்கமாகின்றது. மற்றவனின் உழைப்பைச் சுரண்டுவதை எதிர்ப்பது, சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் விரோதிகளாகவும், பயங்கரவாதச் செயலாக முத்திரை குத்தப்படுகின்றது. மனித உழைப்பைச் சுரண்டி, அதை மற்றவனுக்கு ஏமாற்றி விற்றுப் பிழைக்கும் உறவுதான் வர்த்தகம். மற்றவனுக்கு ஒரு உற்பத்தியை விற்கும் வர்த்தக உறவின் போது, அந்த உற்பத்தி மீதான உழைப்பை வழங்கியவனை உயிருடன் படிப்படியாக கொன்றுவிடுவது வர்த்தகப் பண்பாடாகும். இந்த நிகழ்ச்சிப் போக்கு இன்று உலகம் தழுவியதாகவேயுள்ளது. முன்னைய மனித வரலாறுகளில் இந்த வர்த்தகம் என்பது, நாடுகளுக்கு இடையில் கூட ஒரு சமச்சீரான போக்கு இருந்தது. உழைப்பாளிகளின் எண்ணிக்கைக்கு இசைவாகவே சர்வதேச நாடுகளிடையே ஏற்றத்தாழ்வு குறைந்த ஒரு வர்த்தகமாக இருந்தது. ஆனால் இன்று அப்படி அல்ல. மாறாக வர்த்தகம் சிலரின் கையில் குவிந்து கிடக்கின்றது. அதாவது உலகில் உள்ள மனிதர்களின் உழைப்பை, ஒரு சிலர் தமது தனிப்பட்ட சொத்தாக சொந்தம் கொண்டாடிக் கொண்டு உலகையே ஆள்கின்றனர். இதை நியாயப்படுத்தும் சமூக அமைப்பு தான் இன்றைய ஜனநாயகம். இதை உருவாக்கும் உரிமைதான் சுதந்திரமாகும். இந்த சர்வதேச வர்த்தகச் சூதாட்டம் பல இடைவெளிகள் ஊடாக மாறிவந்த வரலாற்றை நாம் தெரிந்து கொள்வோம்.