எதிர்மறையில் சீனச் சந்தை ஒரு மணி கூலி அடிப்படையில், ஜெர்மனியில் 128 பேரின் வேலையின்மையை உருவாக்குகின்றது. சம்பள விகிதங்களின் அடிப்படையில் வேலை இன்மையை உற்பத்தி செய்கின்றது. 128 பேரின் வேலைக்குரிய ஒரு ஜெர்மனிய தொழில்துறை தனது வேலை ஆட்களை நீக்கிவிட்டு சீனாவுக்குள் ஓடிவிடுவதையே விரும்பும். ஒரு ஜெர்மனியரின் கூலியைக் கொண்டு, சீனாவில் 128 பேரை வேலைக்கு அமர்த்த முடியும். அதாவது ஜெர்மனியில் 128 தொழிலாளிக்கு கொடுத்த கூலி மூலம் 16,384 சீனத் தொழிலாளர்களை கூலிக்கு அமர்த்த முடியும்.
இங்கு உற்பத்தியாகும் பொருட்கள் மேற்கில் அதியுயர் லாபவீதத்தில் சந்தைப்படுத்தப்படுகின்றது. இதன் மூலம் ஒரு கூலியினால் கிடைக்கும் மேலதிக லாபம் 128 மடங்காக இருக்கும். அதாவது 128 பேரின் கூலி ஒரு மணித்தியாலத்துக்கு ஒப்பீட்டளவில் 4,070 டாலருக்கு மேலதிகமாக லாபத்தை ஜெர்மனியில் செய்வதைவிட பெற்றுத் தருகின்றது. இது மாதம் 7.8 லட்சம் டாலரையும், வருடம் 94 லட்சம் டாலரையும் மீதமாக பெற்றுத் தருகின்றது. இது ஒரு ஜெர்மனிய தொழிலாளிக்குப் பதிலாக அமர்த்தும் 128 சீனத் தொழிலாளர்களால் கிடைக்கின்றது. 128 ஜெர்மனியத் தொழிலாளர்களின் கூலியைக் கொண்ட கூலிக்கு அமர்த்தக் கூடிய 16,384 சீனத் தொழிலாளர்களின் உற்பத்திக்கு வித்திடப்படின் லாப விகிதம் ஜெர்மனிய உற்பத்தியை விட மணிக்கு 5.24 லட்சம் டாலர் அதிகமாகக் கிடைக்கும்.
இது மாதத்துக்கு 10 கோடி டாலராக இருக்கும். இது வருடம் 120 கோடி டாலராகும். (இவை 8 மணிநேரம் வேலையை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்பட்டது) இதைவிட இதே போல் மலிவான மூலப்பொருட்கள், வரிச் சலுகைகள் என்று மூலதனம் குதூகலிக்கும் வகையில், உலகமயமாதல் நவீன அற்புதமான கொடையாக உள்ளது.
சீன உற்பத்திகள் சீனாவில் பெருமளவில் சந்தைப்படுத்தப் படுவதில்லை. மாறாக அவை பெருமளவில் ஏகாதிபத்தியத்திலும், பிரதானமாக மூன்றாம் உலக நகரம் சார்ந்த சந்தைகளில் குவிகின்றது. 2003இல் சீனாவின் சர்வதேச வர்த்தகம் 37 சதவீதத்தால் அதிகரித்தது. சீனாவில் உள்ள அன்னிய நாட்டுக் கம்பெனிகளின் உற்பத்தியில் 56 சதவீதம் ஏற்றுமதியாகியது. சீனாவில் அன்னிய நாடுகளின் உற்பத்திகள் அதிகரிக்கும் அதேநேரம், அவை பெருமளவில் ஏற்றுமதியாகிச் செல்லுகின்றது. இதில் முக்கியமானதாக இருப்பது நவீனத் தொழில் நுட்ப உற்பத்திகளே. நவீனத் தொழில் நுட்பம் சார்ந்த உற்பத்திகள், பெருமளவில் சீனா உற்பத்தியாகியுள்ளது. உதாரணமாக உலகளவிய நவீன உற்பத்தியில் சிலவற்றில் சீனாவின் பங்கைப் பார்ப்போம்.
உழவுஇயந்திரம் 83 சதவீதம்
மணிக்கூடு, மோட்டர் 75 சதவீதம்
விளையாட்டுச் சமான்கள் 70 சதவீதம்
புகைப்படக்கருவி 55 சதவீதம்
தொலைபேசி 50 சதவீதம்
தொலைக்காட்சிப் பெட்டி 40 சதவீதம்
உடுப்பு தோய்க்கும் மெசின் 25 சதவீதம்
வீட்டு தளவாடங்கள் 16 சதவீதம்
உருக்கு 15 சதவீதம்
உலக உற்பத்தியில் சீன உற்பத்திகளே பெருமளவில் சில பெரும் வர்த்தகத் துறைகளை ஆக்கிரமித்துள்ளது. 2002இல் சீனா ஒரே வருடத்தில் இலத்திரனியல் (எலக்ட்ரானிக்) உற்பத்தியை 30,000 கோடி டாலராக அதிகரித்தது. நவீன இலத்திரனியல் மேலான முதலீடும், உற்பத்தியும் மிகப் பிரம்மாண்டமானது. நவீன தொழில்துறை சார்ந்து 2002இல் ஜப்பான் மற்றும் தாய்வான் சீனாவில் இட்ட முதலீடு 5200 கோடி டாலராகும். 1980க்கு பிந்திய 20 வருடத்தில் தொழில்துறையை நவீனப்படுத்த இட்ட முதலீடு 60,000 கோடி டாலராகும். மிக வேடிக்கை என்னவென்றால், 1985இல் சீனாவில் இருந்த அன்னியநாட்டுக் கம்பெனிகளின் ஏற்றுமதி 30 கோடி டாலராக மட்டுமே இருந்தது. இது 2001இல் 13,300 கோடி டாலராகியது. அதாவது 16 வருடத்தில் 443 மடங்கு மேலானதாக அதிகரித்தது. அமெரிக்காவுக்கான தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் ரேடியோ ஏற்றுமதியை, 1998க்கும் 2001க்கும் இடையில் சீனா இரட்டிப்பாக்கியது. இதன் மொத்த பெறுமானம் 600 கோடி டாலராகியது. உலகமயமாதல் உருவாக்கிய நவீன உற்பத்திகளின் உற்பத்தி மையமாக, சீனா மாறிக் கொண்டிருக்கின்றது.
சீனாவின் துணி உற்பத்தியை எடுத்தால் மிகப் பிரம்மாண்டமானதாக மாறி வருகின்றது. பல ஏழை நாடுகளின் திவாலை மட்டுமல்ல, ஏகாதிபத்திய துணி உற்பத்தியின் திவாலையும் கூட இது ஏற்படுத்துகின்றது.
ஏற்றுமதி இறக்குமதி
1999 4127 கோடி டாலர் 1392 கோடி டாலர்
2000 4938 கோடி டாலர் 1656 கோடி டாலர்
2001 4983 கோடி டாலர் 1626 கோடி டாலர்
2002 5785 கோடி டாலர் 1699 கோடி டாலர்
2003 7335 கோடி டாலர் 1929 கோடி டாலர்
உலகளவில் ஐந்து வருடங்களில் சீனாவின் துணி ஏற்றுமதி அண்ணளவாக இரண்டு மடங்காகியுள்ளது. இதேநேரம் இந்தியத் துணி ஏற்றுமதி 1086 கோடி டாலர் மட்டுமே. துணி ஏற்றுமதி செய்த பல நாடுகள், தமது சொந்த ஏற்றுமதியை சீனாவினால் இழந்து வருகின்றன. இது எப்படி ஏற்படுகின்றது எனப் பார்ப்போம்.
மேற்கு நோக்கிய உலகளாவிய துணி வர்த்தகம்
ஐரோப்பா ஐரோப்பா அமெரிக்கா அமெரிக்கா
2002 2004 2002 2004
சீனா 18 சதவீதம் 26 சதவீதம் 16 சதவீதம் 50 சதவீதம்
இந்தியா 6 சதவீதம் 9 சதவீதம் 4 சதவீதம் 15 சதவீதம்
ஹாங்காங் 6 சதவீதம் 6 சதவீதம் 9 சதவீதம் 6 சதவீதம்
அமெரிக்க நாடுகள் - - 16 சதவீதம் 5 சதவீதம்
மெக்சிக்கோ - - 10 சதவீதம் 3 சதவீதம்
தாய்லாந்து - - - 3 சதவீதம்
பிலிப்பைன்ஸ் - - 4 சதவீதம் 2 சதவீதம்
இந்தோனேசிய 3 சதவீதம் 3 சதவீதம் 4 சதவீதம் 2 சதவீதம்
பங்களாதேசம் 3 சதவீதம் 4 சதவீதம் 4 சதவீதம் 2 சதவீதம்
இலங்கை - - - 2 சதவீதம்
ஐரோப்பா 9 சதவீதம் 6 சதவீதம் 5 சதவீதம் 0 சதவீதம்
தாய்வான் - - - 4 சதவீதம்
துணி வர்த்தகத்தில் சீனாவும், இந்தியாவும் மற்றைய நாடுகளையே திவாலாக்கி வருகின்றன. இதில் சீனா மிகப் பிரம்மாண்டமான வகையில் காணப்படுகின்றது. இது இந்தியாவைக் கூட சந்தையில் இருந்து அகற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆடைத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் ஒரு அமெரிக்கத் தொழிலாளிக்கு கூலியாக 9.56 டாலரே ஒரு மணிநேரத்துக்கு வழங்கப்படுகின்றது. தென் அமெரிக்க எல்சால்வடோரில் அதே தொழிலாளி பெறும் கூலி 1.65 டாலர். சீனத் தொழிலாளி பெறுவதோ 0.68 டாலர் மட்டுமே. மூலதனம் சீனாவை நோக்கி ஒடுவதும், சீனா உற்பத்திகள் உலகச் சந்தையை ஆக்கிரமிக்கும் உலக எதார்த்தம், சீனாவின் மிகக் குறைந்த கூலி வீதம் மிக முக்கிய காரணங்களில் ஒன்று.
இதனால் உலகச் சந்தை திடீர் அதிர்வுகளைச் சந்திக்கின்றது. உலகமயமாதலில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கம், மேற்கின் சந்தைகளையே திடீர் திடீரென திவாலாக்குகின்றது. உதாரணமாக 2005 தை முதல் சித்திரை வரையான காலத்தில் சீனக் காலணி (சாப்பத்து) ஏற்றுமதி ஐரோப்பாவுக்கு 681 சதவீதமாக அதிகரித்துள்ளது. முதல் 4 மாதத்தில் 16.1 கோடி காலணிகளை ஐரோப்பாவுக்கு சீனா ஏற்றுமதி செய்தது. இது 2004இல் 2.37 கோடியாக மட்டுமே இருந்தது. இதனால் காலணிகளின் விலை 28 சதவீதத்தால் திடீர் வீழ்ச்சி கண்டது. இதனால் ஐரோப்பியக் காலணி உற்பத்தியாளர்கள் நெருக்கடியைச் சந்தித்ததுடன், தமது உற்பத்திகளை நிறுத்தி, தமது தொழிற்சாலைகளையே சீனா போன்ற நாடுகளை நோக்கி நகர்த்துகின்றனர். இது பொதுவாகவே அனைத்து துறையிலும் நடக்கின்றது. பெருமளவில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவில் மூலதனத்தை இடுவதுடன் உற்பத்தியை குவிக்கின்றது. இது பல்துறை சார்ந்தது. அமெரிக்காவில் மட்டும் இன்று ஏறக்குறைய 40,000 சீன உணவகங்கள் உள்ளன. இது மெக்டொனால்ட், பர்கர் கிங், கே.எஃப்.சி போன்ற பிரபல அமெரிக்க பன்னாட்டு உணவகங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும் அதிகமானதாக உள்ளது.
பன்னாட்டு நிறுவனங்கள் உலகச் சந்தையைக் கைப்பற்ற நடத்தும் போட்டி, சீன உற்பத்தியால் உலகளவில் நெருக்கடிக்குள்ளாகின்றது. பொருட்களின் தேக்கம் மட்டுமின்றி, உற்பத்தியாகும் பொருளின் உள்ளடக்கத்தை மாற்றிய புதியதொழில் நுட்பத்தைப் புகுத்துவதால் முன்னைய உற்பத்திகள் திடீரென தனது பயன்பாட்டுத் தன்மையை இழக்கின்றது. மிகக் குறுகிய காலத்தில், உற்பத்திகள் உற்பத்தி மையங்களை விட்டு சந்தைக்கு செல்லு முன்பே, அதற்கு எதிராக மற்றைய புதிய உற்பத்திகள் போட்டியாக வருகின்றது. இதனால் உற்பத்தி தனது பயன்பாட்டுத் தன்மை இழந்து கழிவாவது உலகமயமாதலில் அன்றாட நிகழ்வாகிவிட்டது. உலகம் கழிவுகளின் கூடாரமாகும் அதேநேரம், இயற்கை நாசமாக்கப்படுகின்றது. பொருட்களின் தேக்கம், பொருட்களின் உயர் தொழில்நுட்ப அன்றாடம் புகுத்தல், உற்பத்திக்கான மிகக் குறைந்த கூலி, பொருட்களின் விலைகளில் கடுமையான சரிவை ஏற்படுத்துகின்றது. சீன உற்பத்திகளால் உலக பொருட்களின் விலை 1998க்கும் 2001க்கும் இடையில் வருடத்துக்கு 15 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. மிகவும் ஆடம்பரமானதும், அடிப்படைத் தேவைக்குள் உள்ளடங்காத பொருட்களில் சந்தை கவர்ச்சி காட்டுவதால், மக்களின் அடிப்படை தேவைகளுக்காக செலவு செய்வது குறைந்து வருகின்றது. கவர்ச்சியான ஆடம்பரமான வக்கிரம் மூலம், மக்களின் ஆரோக்கியமான வாழ்வு பந்தாடப்படுகின்றது. நுகர்வுவெறி பொதுவான சமூகப் பண்பாடாகக் கட்டமைக்கப்படுகின்றது. இது ஏகாதிபத்திய நாடுகளின் திவாலையே பறைசாற்றி விடுகின்றது. உதாரணமாக உலகின் மிகப் பெரிய பொருளாதார பலம் கொண்ட அமெரிக்காவின் குரல்வளையிலேயே இது கையை வைக்கின்றது.
2004இல் அமெரிக்காவின் இறக்குமதி 18 சதவீதமாக அதிகரித்து இது 1,76,400 கோடி டாலராக இருந்தது. ஏற்றுமதி 13 சதவீதமாக அதிகரித்து 1,14,600 கோடி டாலராக மாறியது. அமெரிக்காவின் வர்த்தகப் பற்றாக்குறை 2004இல் 61,770 கோடி டாலராகியது. இதில் ஜப்பானுக்கு 7,520 கோடி டாலரும், ஐரோப்பாவுக்கு 11,000 கோடி டாலரும், சீனாவுக்கு 16,200 கோடி டாலரும். கனடாவுக்கு 6,600 கோடி டாலரும், எண்ணெய் வள நாடுகளுக்கு 7,200 கோடி டாலருமாகும் 2003இல் அமெரிக்காவின் பற்றாக்குறை 49,650 கோடி டாலர் மட்டுமே.
உதாரணமாக அமெரிக்கா சீனா வர்த்தகத்தில், அமெரிக்காவுக்கு ஏற்படும் பற்றாக்குறையால் உருவாகும் நெருக்கடியைப் பார்ப்போம்.
1985 60 கோடி டாலர்
1990 1 043 கோடி டாலர்
1993 2 277 கோடி டாலர்
1995 3 378 கோடி டாலர்
1997 4 968 கோடி டாலர்
1999 6 867 கோடி டாலர்
2000 8 383 கோடி டாலர்
2001 8 309 கோடி டாலர்
2002 10 306 கோடி டாலர்
2003 12 370 கோடி டாலர்
2004 16 200 கோடி டாலர்
வருடாந்தம் இறக்குமதிக்கான சீன நிலுவைகளைச் செலுத்த முடியாது, அமெரிக்கப் பொருளாதாரம் ஆட்டம் காண்கின்றது. அமெரிக்கா சீனாவுக்குச் செலுத்த வேண்டிய இறக்குமதிக்கான நிலுவை, அமெரிக்காவின் பொருளாதாரக் கட்டமைப்புக்குள் உட்புகுந்து விடுகின்றது. இது அமெரிக்காவின் கடனில் ஒரு பகுதியாகவும், அமெரிக்கப் பங்குச் சந்தையிலும், பங்கு பத்திரத்திலும் உட்புகுந்து நிதி மூலதனமாக மாறிவிடுகின்றது. அமெரிக்க கடனில் சீனாவின் பங்கு கணிசமானதாக மாறிவிட்டது. கடனுக்கான வட்டியை அமெரிக்காவிடம் பெறும் நிலைக்கு, சீன நிதி மூலதனம் பெருமெடுப்பில் உட்புகுகின்றது. அதேநேரம் தொடர்ந்தும் சீனாவின் ஏற்றுமதியில் பெரும்பகுதி, அமெரிக்காவுக்குள் செல்லுகின்றது.
அமெரிக்காவுக்குள் உட்புகும் நிதி மூலதனத்தில் ஜப்பானுக்கு அடுத்த இடத்தில் சீனா உள்ளது. அதாவது அமெரிக்காவின் நிதி மூலதனத்தில் 8.8 சதவிகிதத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இதே போல் அமெரிக்காவின் பங்கு பத்திரத்திலும் சீனாவே அதிக நிதி மூலதனத்தை முதலிட்டுள்ளது. இது 2001இல் 8,200 கோடி டாலராக இருந்தது. 2002இல் 11900 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதே போன்று அமெரிக்க முதலீட்டிலும் சீனா புகுந்துள்ளது. சீனாவில் உட்புகுந்த அன்னிய மூலதனத்தின் அளவுக்கு, சீனா அன்னிய நாடுகளில் முதலீட்டை நடத்தி உள்ளது. இது ஒரு வியக்கத்தக்க மூலதனத்தின் முரண்பண்பையே காட்டுகின்றது. மறுபக்கம் பெரும் நிதி பரிமாற்றத்தை சீனப் பொருளாதாரம் உள்ளிழுக்கின்றது. 2003ஆம் ஆண்டில் சீனாவின் நிதிப் பரிமாற்றம்
ஐரோப்பா 13,430 கோடி டாலர்
அமெரிக்கா 12,660 கோடி டாலர்
ரசியா மற்றும் ஸ்கன்டினேவிய நாடுகள் 3,060 கோடி டாலர்
லத்தீன் அமெரிக்கா 2,660 கோடி டாலர்
தென்கொரியா 6,320 கோடி டாலர்
ஜப்பான் 13,360 கோடி டாலர்
தாய்வான் 5,840 கோடி டாலர்
ஆப்பிரிக்கா 1,850 கோடி டாலர்
மத்தியகிழக்கு 2,770 கோடி டாலர்
ஆசியா 10,920 கோடி டாலர்
மிகுதி 2,510 கோடி டாலர்
பல கோடி பெறுமதியான நிதிப்பரிமாற்றம் சீனப் பொருளாதாரத்தின் ஊடாக நடக்கத் தொடங்கியுள்ளது. இது நிதியின் இருப்பிடத்தை மாற்றியமைக்கின்றது. சீனாவை நோக்கி நிதிகள் கூட நகர்வதை துரிதமாக்குகின்றது. நிதி மூலதனத்தின் தங்குமிடமாக சீனா மாறத் தொடங்கி விடுகின்றது. இது வழமையான மேற்கு சார்ந்த வங்கிகள் என்ற உலகளவிய கட்டமைப்பில் ஒரு வெடிப்பாகவே இது மாறுகின்றது.
சில மாற்றங்கள் மிகப் பிரம்மாண்டமான அளவில் நடக்கின்றது. 2004இல் சீன வர்த்தக உபரி 3200 கோடி டாலராகியது. இது 2003யை விட 25.6 சதவீதம் அதிகமாகும். அத்துடன் நிதிப் பரிமாற்றம் 30 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது மொத்தமாக 1,00,000 கோடி டாலராகியது. இதில் அதிகமானவை வர்த்தக பேரங்களாகவே இருந்தது. 2003இல் உள்நாட்டு வருமானம் 9.1 சதவீதமாக அதிகரித்த அதேநேரம், 2004இல் இது 9 சதவீதமாக மேலும் அதிகரித்தது. 2004இல் ஏற்றுமதி 35.4 சதவீதமாக அதாவது 59,340 கோடி டாலராக அதிகரித்தது. அதேநேரம் இறக்குமதி 36 சதவீதமாக அதிகரித்தது. அதாவது 56,140 கோடி டாலராக அதிகரித்தது. இதன் மூலம் மேலதிகமாக 3,200 கோடி டாலரை வர்த்தக மீதமாகப் பெற்றனர். இது 2003இல் 2,092 கோடி டாலராக இருந்தது. சீனாவின் உள்நாட்டு வரி வரத்து 25 சதவீதமாக அதிகரித்து. இது 31,080 கோடி டாலராகியது. உள்நாட்டு முதலீடு 2003ஐ விட 25 சதவீதமாக அதிகரித்தது. உலகில் எந்தப் பகுதியிலும் இப்படி நடக்கவில்லை. உலகமயமாதலின் ஏகாதிபத்திய முரண்பாடு சீனாவூடாகவே அரங்கு வரத் துடிக்கின்றது. இதை நிதிக் கையிருப்பே தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. உலகளவில் 2003இல் நிதிக் கையிருப்பு
ஜப்பான் 65,280 கோடி டாலர்
சீனா 40,330 கோடி டாலர்
தாய்வான் 20,630 கோடி டாலர்
ஈரோ நாடுகள் 18,800 கோடி டாலர்
தென்கொரிய 15,450 கோடி டாலர்
ஹாங்காங் 11,860 கோடி டாலர்
இந்தியா 9,760 கோடி டாலர்
மெச்சிக்கோ 5,770 கோடி டாலர்
பிரேசில் 4,910 கோடி டாலர்
நிதிக் கையிருப்பில் ஜப்பானுக்கு அடுத்த நிலையை சீனா எட்டியுள்ளது. எந்த மேற்கு நாடுகளிடமும் கூட இந்தளவு நிதிக் கையிருப்பு கிடையாது. 2004இல் சீனாவின் நிதிக் கையிருப்பு 60,900 கோடி டாலராகியது. உலகத்தின் ஆதிக்கத்தை நோக்கி சீனப் பொருளாதாரம் வெகு வேகமாகவே நகருகின்றது. உலகளவில் இது மிகப் பெரிய அதிர்வுகளை உருவாக்கவுள்ளது. கடந்த 200 வருட மேற்கத்திய ஆதிக்கத்தையும், மேற்கின் பொருளாதார வல்லமைக்கு எதிரான கடும் சவாலை இது ஏற்படுத்த உள்ளது.
சீனா ஏகாதிபத்தியமயமாதல் என்பது அனைத்து துறைகளிலும் வேகமாகப் படர்ந்து வருகின்றது. 2007இல் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி 2,00,000 கோடி டாலராக மாறிவிடும் என்ற எதிர்வு கூறல்களை, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்களே அதிர்வுடன் அறிவித்துள்ளனர். இது உலக வர்த்தகத்தில் 13.7 சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் அறிவித்துள்ளனர். எங்கும் சீனா ஆக்கிரமிப்பு தொடங்கியுள்ளது.
சந்தையும், வர்த்தகமும் மக்களை ஏமாற்றும் விளம்பரத்தில் தான் உயிர் வாழ்கின்றது. மக்களை முட்டாளாக்கி அதில் தான் நவீனத்துவம் வக்கரிக்கின்றது. இன்று விளம்பரத்துக்காக உலகில் மூன்றாவதாக அதிகம் செலவளிக்கும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 2003இல் 1980 கோடி டாலராகியது. இக்காலத்தில் அமெரிக்கா 14,700 கோடி டாலரையும், ஜப்பான் 3,540 கோடி டாலரையும் விளம்பரத்துக்காக செலவு செய்தது. உலகில் மக்களை ஏமாற்ற செய்யும் விளம்பரத்துக்கான மொத்தச் செலவு 33,100 கோடி டாலராகும். இதில் சீனாவின் பங்கு 5.98 சதவீதமாகும். இது 2000இல் 3.58 சதவீதமாக இருந்தது. 2003க்கும் 2004க்கும் இடையில் சீனா விளம்பரத்துக்கான செலவை 11.11 சதவீதத்தால் அதிகரித்தது. ஆனால் உலகளவிலான அதிகரிப்பு 4.8 சதவீதம் மட்டுமே. சீனாவின் விளம்பரச் செலவு 2000க்கு பிந்திய மூன்று ஆண்டுகளில் இரட்டிப்பாகியது. உண்மையில் 2000இல் 1100 கோடி டாலராக மட்டும் இருந்தது. இது 2004இல் 2,200 கோடி டாலராகியது. உண்மையில் சீனாவின் விற்பனை பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனியின் மொத்த வர்த்தகத்தையும் கூட தாண்டியுள்ளது. உலகில் சீனா ஏற்படுத்தும் தாக்கம் பிரமாண்டமானது. இதனால் உலகில் புதிய பதற்றங்கள் அதிகரிக்கின்றது. இதை ஈடுகட்ட சீனா இராணுவ ரீதியாகவும் தன்னைப் பலப்படுத்துகின்றது. உலகில் மூன்றாவது அதிகம் இராணுவச் செலவு செய்யும் நாடாக 2001இல் சீனா மாறியது. 2005இல் தேசிய வருமானத்தில் உலகிலேயே அதிகம் இராணுவத்துக்குச் செலவு செய்யும் நாடாக சீனா மாறியுள்ளது. இது 4.3 சதவீதமாகியுள்ளது. அதாவது 2004யை விட 2005இல் 12.6 சதவீதத்தால் இது அதிகரித்துள்ளது. மொத்த இராணுவச் செலவு 2,950 கோடி டாலராகியுள்ளது. இதே நேரம் அமெரிக்கா தனது தேசிய வருமானத்தில் 3.3 சதவீதத்தையே இராணுவத்துக்கு ஒதுக்கியுள்ளது.
2001இல் உலகில் அதிகூடிய இராணுவச் செலவு
அமெரிக்கா 39,610 கோடி டாலர்
ரசியா 6,000 கோடி டாலர்
சீனா 4,200 கோடி டாலர்
ஜப்பான் 4,040 கோடி டாலர்
பிரித்தானியா 3,400 கோடி டாலர்
சவூதி அரேபியா 2,720 கோடி டாலர்
பிரான்ஸ் 2,530 கோடி டாலர்
ஜெர்மனி 2,100 கோடி டாலர்
பிரேசில் 1,790 கோடி டாலர்
இந்தியா 1,560 கோடி டாலர்
சீனா ஒரு ஏகாதிபத்தியமாக மாறும் போது, உலகை மீளவும் பங்கிடுவதால் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாடுகள் கூர்மையடைகின்றது. இந்த வகையில் தான் சூடான், ஈராக் எண்ணெய் வயல்களைக் கைப்பற்றும் சீன மூலதனத்தைத் தடுக்கவும், அமெரிக்கா நேரடியாகவே இராணுவரீதியாகத் தலையிட்டது. இவைகளை எதிர்கொள்ள, இராணுவரீதியாகவே சீனா தன்னைப் பலப்படுத்தத் தொடங்கியுள்ளது. உலகின் முன்னணி இராணுவமாகவும், பலம் பொருந்திய ஒன்றாகவும், சீனா தனது இராணுவத்தை மாற்றியமைக்கின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய நெருக்கடிகளை எதிர்கொள்ளும் திறனை பெற முயல்கின்றது. இதுபோன்று சீனா பல துறைகளில் தன்னை திட்டமிட்டே பலப்படுத்துகின்றது. நவீனத் தொழில் நுட்பம் ஆட்சி செய்யும் உலகில், அதுவே மூலதனத்தின் நெம்புகோலாகவும் உள்ளது. இதன் அடிப்படையில் சீனா அறிவியல் கண்டுபிடிப்புகளுக்காக பெரும் தொகை நிதியை ஒதுக்குகின்றது. இது 2001இல் 3,070 கோடி டாலராக மாறியது. இதே காலத்தில் அமெரிக்கா 25,290 கோடி டாலரையும், ஜப்பான் 9,650 கோடி டாலரையும் ஒதுக்கியிருந்தது.
இப்படி சீனாவின் ஏகாதிபத்தியமயமாதல் என்பது பல்வேறு துறைகளில் நகர்ச்சியுறுகின்றது. மறுபக்கத்தில் இது சொந்த நாட்டில் ஏற்றத்தாழ்வை வீங்கி வெம்ப வைக்கின்றது. கிராமப்புறத்தில் தனிநபர் சராசரி வருமானம் 263 ஈரோவாக இருக்க, நகரங்களில் அது 864 ஈரோவாகியுள்ளது. சீனாவில் ஒரு பணக்காரக் கும்பல் வளர்ச்சியுறுகின்றது. ஏழைகள் பெருக்கெடுப்பது சீனாவின் உள்நாட்டு விதியாகிவிட்டது. பணக்காரக் கும்பலின் நலன்கள் சீனா அரசின் நலன்களாகிவிட்டது. இதை நாம் சீனா வீதிகளில் ஒடும் தனியார் வாகனங்களில் காணமுடியும்.
சீனாவின் போக்குவரத்து
சைக்கிள் அரசுத்துறை கார் வாடகைக்கார் மற்றவை
1986 58 சதவீதம் 32 சதவீதம் 5 சதவீதம் 1 சதவீதம் 4 சதவீதம்
2000 38 சதவீதம் 27 சதவீதம் 23 சதவீதம் 9 சதவீதம் 3 சதவீதம்
சீனாவில் போக்குவரத்து எப்படி தனியார் சொத்துரிமையுடன் மாறி வருகின்றது என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. இயற்கை சார்ந்த சுற்றுசூழல் முதல் அனைத்தும் எப்படி சிதைக்கப்படுகின்றது என்பதையே இது அம்பலப்படுத்துகின்றது. 2020இல் 14 கோடி தனியார் கார் சீனாவில் ஓடுமாம். 2025இல் வாகனச் சந்தை அமெரிக்காவை விட சீனாவில் மிகப் பெரிதாக இருக்கும் என்று ஜெனரல் மோட்டார்ஸ் கூறுகின்றது. அதாவது 7.5 கோடி சீனர்கள் கார் வாங்கும் வசதியை பெற்றிருப்பர் என்கின்றது. இதை நோக்கி ஏகாதிபத்திய கார் கம்பெனிகள் அங்கு அலைபாய்கின்றனர். மக்கள் பலாத்காரமாகவே குடியெழுப்பப் பட்டு வீதிகள் அகன்றதாகப் போடப்படுகின்றன. இன்று சீனாவில் 640 பேர் வீதி விபத்தில், நாளொன்றுக்கு கொல்லப்படுகின்றனர். இவையெல்லாம் முதலாளித்துவ மீட்சியின் விளைவு. சீன வீதிகளில் தனியார் வாகனங்களின் அதிகரிப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது, சீனாவில் 25 மடங்கு அதிகமாகும். இதனால் சீனப் பெட்ரோல் இறக்குமதியை ஒரு வருடத்தில் 30 சதவீதத்தால் அதிகரிக்க வைத்தது. சீனா பெட்ரோல் வாங்கு வீதம் 20032004இல் 14.3 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு வட அமெரிக்காவில் 2.1ஆக அதிகரித்த போது, ஐரோப்பாவில் 1.5 சதவீதமே அதிகரித்தது. ஆனால் ஆசியாவில் 5 சதவீதத்தால் அதிகரித்தது. சீனாவில் பணக்காரக் கும்பலின் தனிமனித நலன்கள் அதிகரித்துச் செல்வதையே, இது தெளிவாக உறுதி செய்கின்றது. இது உலகில் எண்ணெய் வர்த்தகம் மீதான நெருக்கடியை அதிகரிக்க வைக்கின்றது. என்றுமில்லாத எண்ணெய்த் தேவையை உலகம் கோருகின்றது. உலகின் எந்த நிலையையும் எதிர்கொள்ள, 2004இல் சீனா உலகில் அதிகளவில் பெட்ரோலை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. மொத்தமாக இது 280 கோடி டன் பெட்ரோலைச் சேகரித்துள்ளது. இவை எல்லாம் சீன மக்களுக்கு எதிராக, அவர்களின் வாழ்வை அழித்து உருவாக்கும் பணக்காரக் கும்பலின் நலனே சீன அரசின் நலனாகிவிட்டது.