07042022தி
Last updateபு, 02 மார் 2022 7pm

மனித உழைப்பு சீனாவில் உயர் வீதத்தில் சுரண்டப்படுவதால், உலகளாவிய மூலதனத்தையே அதிர்வுக்குள்ளாக்குகின்றது.

சீ ன உற்பத்திகள் உலகமயமாதலில் ஒரு அதிர்வை  உருவாக்குகின்றன. ஏகாதிபத்திய மூலதனங்களை அங்கும்  இங்குமாக ஓடவைக்கின்றன. இன்றைய நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த உலகச் சந்தையின் விலையையும், பல நிறுவனங்களின் திவாலையும் தீர்மானிக்கும் நாடாக சீனா மாறி விட்டது. உலக உற்பத்தி மற்றும் விற்பனைச் சந்தையின் விலைகள் பலவற்றை, சீன உற்பத்திகளே தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. சீன உற்பத்திகள் உலகச் சந்தையில் பல அதிர்வுகளை, தொடர்ச்சியாகவே நாள் தோறும் ஏற்படுத்துகின்றன. எதிர்மறையில் ஏகாதிபத்திய மூலதனங்கள், அதிக இலாபவெறி தலைக்கேற, போட்டி போட்டுக் கொண்டு சீனாவில் தனது மூலதனத்தைக் குவித்தது, குவித்து வருகின்றது. இதன் மூலம் மலிந்த கூலியில் அதிக நவீன உற்பத்தியும், உற்பத்திகளில் அராஜகத்தையும் உலகெங்கும் உருவாக்கியுள்ளது.

 இதனால் உலகச் சந்தை கடுமையான தொடர் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. நவீன தொழில்நுட்பமும், நவீன உபகரணங்களும் கூட முழுக்க முழுக்க சீனாவில் உற்பத்தியாகி வருகின்றது. அதிக லாப வெறிகொண்ட உற்பத்திகள் தவிர்க்க முடியாது, சீனாவில் ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்கியது, உருவாக்குகின்றது. இன்னுமொரு பக்கத்தில் சீனாவின் தேசிய சொத்துக்களை விற்பதன் மூலமும் கூட, ஒரு மூலதனத் திரட்சி உருவாகின்றது. மறுபக்கத்தில் சீனா அரசு மக்கள் நலத் திட்டங்களை கைவிட்டுவருவதன் மூலம், ஒரு மூலதனத் திரட்சியை உருவாக்குகின்றது. இவற்றை அடிப்படையாக கொண்டு உருவாகும் மூலதனத்தைக் கொண்டு, சீனா ஒரு போட்டி ஏகாதிபத்தியமாக மாறி வருகின்றது.

 

 2003இல் உலகளவில் அன்னிய மூலதனத்தை அதிகம் இட்ட நாடாக சீனா மாறியது. அமெரிக்காவில் பெரும் நிதி மூலதனத்தை சீனா முதலிட்டு உள்ளது. அமெரிக்காவின் கடனில் சீனாவின் நிதி மூலதனம் கணிசமானது. சீன உற்பத்திகள், அமெரிக்காவின் வர்த்தகத்தில் பற்றாக்குறையை உருவாக்கியுள்ளது. ஈராக் எண்ணெய் வயல் முதல் சூடான் எண்ணெய் வயல் வரை சீன மூலதனத்தின் ஊடுருவல் அதிகரித்துள்ளது. இன்று அனைத்து துறைகளிலும் சீன மூலதனம் ஊடுருவுகின்றது. இவைகளுக்கு எதிராகவே அமெரிக்காவின் இராணுவ ஆக்கிரமிப்புகள் அரங்கேறும் நிலைக்கு, உலகம் சென்றுவிடுகின்றது. சீனா உலகில் பல துறைகளில், விரிவாகத் தலையிடத் தொடங்கியுள்ளது. மிகப் பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையை எதிர்வுகூறும் அளவுக்கு, முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் அங்கலாய்க்கின்றனர். சீனா உலகின் முதன்மையான தேசிய வருவாயைப் பெற்று பலம் பொருந்திய ஒரு நாடாக மாறும் என்ற எச்சரிக்கையை, முதலாளித்துவ அறிக்கைகள் வெளியிட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் அதிக லாபவெறி, கணிசமாக மூலதனத்தின் இருப்பிடத்தையே இடமாற்றுகின்றது. மேற்கில் சீனப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமிக்கும் போது, மேற்கின் பணம் கணிசமாக சீனாவுக்குள் சென்றுவிடுகின்றது. இது மலிவான கூலியை உடைய சீனாவில், பெரும் மூலதனமாகி உலங்கெங்கும் தனது காலை அகலவைத்து உலக மூலதனத்தையே தன்னை நோக்கிக் கவர்ந்திழுக்கின்றது.


 1973இல் உலக ஏற்றுமதி அளவில் ஒரு சதவீதத்தையே சீனா கொண்டு இருந்தது. இது 1987இல் 1.6 சதவீதமாகியது. 2000இல் ஹாங்காங் உள்ளடங்க 2.9 சதவீதமாகியது. இது 2002இல் 4.5 சதவீதமாக அதிகரித்தது. இது என்றுமில்லாத வேகத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. இந்த அளவீடு டாலரின் பெறுமதியின் அடிப்படையிலானது. உள்நாட்டு பெறுமதியின் அடிப்படையில் இது பிரமாண்டமான ஒன்றாகியது. உண்மையில் இதன் விளைவாக உலகில் கடல் மூலமான ஏற்றுமதி வர்த்தகத்தையே சீனா கைப்பற்றி முதலிடத்தை வகிக்கின்றது. 2004இல் 245 கோடி டன் பொருட்களை சீனா துறைமுகங்கள் ஊடாக நடத்தியது. இது 1993யை விட 25 சதவீதம் அதிகமாகும். சீனாவின் 8 துறைமுகங்கள் குறைந்தபட்சம் 10 கோடி டன்னுக்கு மேலாக பொருட்களை நகர்த்தியுள்ளது. 1999இல் இப்படி இரண்டு துறைமுகங்களே சீனாவில் இருந்தன. நிலைமை எப்படி அதிரடியாகவே மாறியது என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது.


 சீனாவின் உலக வர்த்தகம் 2003இல் 7.5 சதவீதத்தால் அதிகரித்த போது, உலகளாவிய ஏற்றுமதியில் சீனாவின் பங்கு 5.85 சதவீதமாகியது. 2000ஆம் ஆண்டில் சீன ஏற்றுமதி 4200 கோடி டாலர் மட்டுமே. இது உலகில் 9வது இடத்தில் காணப்பட்டது. 2002இல் சீனா ஏற்றுமதி 32,350 (ஹாங்காங் உள்ளடக்கப்படவில்லை) கோடி டாலராக இருந்த அதேநேரம், உலகின் ஐந்தாவது ஏற்றுமதியாளனாக மாறியது. 2003இல் ஏற்றுமதி 43,840 கோடி டாலராக மாறியதுடன், உலகில் நான்காவது மிகப் பெரிய ஏற்றுமதியாளனாகவே சீனா மாறியது. அதாவது சீன ஏற்றுமதிகள், 2000ஆம் ஆண்டுக்குப் பிந்திய நான்கு வருடங்களில் பத்து மடங்கு மேலாக அதிகரித்துள்ளது. அத்துடன் உலக ஏற்றுமதி வரிசையில் 9வது இடத்தில் இருந்து 4வது இடத்துக்கு வந்துள்ளது. மறுபக்கம் சீனாவில் அதிக லாபத்தை பெற்றுத்தரும் ஏகாதிபத்திய உற்பத்திகள், அவர்களுக்கு எதிரான வகையில் எதிர்மறையில் வளர்ச்சியுறுகின்றது. மூலதன முரண்பாடுகளின் ஒரு சிறப்பான எடுப்பான வடிவமே இது. உண்மையில் மிகப் பெரிய நாடுகளுக்குள், விதிவிலக்கான ஒன்றாகவே சீனா உள்ளது.


 சீனாவில் உற்பத்திக்கான மனிதக் கூலி உலகளவில் மிகக் குறைவானது. இதனால் மலிவு உற்பத்திகள் மூலதனத் திரட்சிக்கான ஒரு சூழலை உருவாக்கி விடுகின்றது. சீனாவின் கம்யூனிசத்தை அடிப்படையாக கொண்ட பொருளாதாரக் கட்டமைப்பை முதலாளித்துவமாக மாற்றிய போது, மிகப் பெரிய தேசிய சொத்துகள் அரசின் கையில் குவிந்து கிடந்தது. இந்த நிலையை, உலகில் வேறு எந்த நாடும் கொண்டிருக்கவில்லை. இதை தனியார் மயமாக்கத் தொடங்கிய போது, பெரும் மூலதனங்கள் குவிவது தவிர்க்க முடியாததாகியது. மறுபக்கத்தில் தேசிய வருமானத்தை மக்களின் வாழ்வாதாரங்களுக்கு பயன்படுத்திய முந்திய நிலையை சீன அரசு கைவிட்டதன் மூலமும், முந்திய சமூக நலத் திட்டங்களையும் முழுமையாக வெட்டியது. இதன் மூலம் பெரும் மூலதனங்கள் திடீரென திரளத் தொடங்கியது. இந்த பெரும் மூலதனத்தைக் கொண்ட ஒரு மக்கள் விரோதக் கும்பல் உதித்தெழுவதை துரிதமாக்கியது. இதைவிட மிக குறைவான கூலியைக் கொண்ட, பெரும் நவீன தொழில் நுட்பத்தைக் கையாளும் திறனைக் கொண்ட அடிப்படை கல்வி தகுதியுள்ள தொழிலாளி வர்க்கம், அன்னிய மூலதனத்தை உள்ளிழுத்தது. இதன் மூலம் ஒரு பகுதியை அரசுக்கு பெற்றுக் கொடுத்தது. உதாரணமாக சீனாவில் முதலீடு செய்யும் ஒவ்வொரு அமெரிக்க கம்பெனியும் 42 சதவீத இலாபத்தை பெறுகின்றது. இந்த லாபவெறியே சீனாவில் மூலதனத்தின் நகர்வை வேகப்படுத்தியது. சீனாவினுள் அன்னிய மூலதனத்தின் பெரும் படையெடுப்பு, சர்வதேச ஏற்றுமதிச் சந்தையில் பெரும் வீச்சில் புகுந்து கொள்வதை துரிதமாக்கியது. இதை ஏகாதிபத்திய மூலதனமே தனது சந்தைக் கட்டமைப்பில் நின்று ஊக்குவித்தது. சீனப் பொருளதாரம் அன்னிய மூலதனக் கட்டமைப்புக்குள் பெரு வீக்கத்தைக் கண்டது. சீனாவின் மூலதனத்தின் திரட்சி, ஏகாதிபத்திய கனவுகளுடன் எல்லை கடந்து மற்றைய நாடுகளை ஊடுருவிச் செல்லத் தொடங்கியுள்ளது.


சீனா மற்றும் ஹாங்காங்கின் மொத்த அன்னிய மூதலீடுகள்


ஆண்டு                   சீனா                                                  ஹாங்காங்
 1989                   300 கோடி டாலர்                             தெரியாது
 1996                4,018 கோடி டாலர்                             தெரியாது
 1997                4,423 கோடி டாலர்                  1,899 கோடி டாலர்
 1998                4,375 கோடி டாலர்                  2,885 கோடி டாலர்
 1999               3,875 கோடி டாலர்                   2,459 கோடி டாலர்
 2000               4,077 கோடி டாலர்                  6,193 கோடி டாலர்
 2001               4,800 கோடி டாலர்                  2,284 கோடி டாலர்
 2002               5,270 கோடி டாலர்                             தெரியாது
 2003               5,350 கோடி டாலர்                            தெரியாது


 சீனாவின் அன்னிய மொத்த முதலீடு 2004 முடிய 55,900 கோடி டாலராகியுள்ளது. சீன அரசு அனுமதித்த மொத்த அன்னிய மூதலீடுகள் மூலம் உலகளவில் 5,12,504 உற்பத்தித் துறைகளை உருவாக்கியுள்ளது. 2004இல் 43,664 அன்னிய மூதலீட்டுக்கு சீன அரசு அனுமதி வழங்கியது. இது 2003இல் 41,081 ஆக இருந்தது. உண்மையில் சீனாவின் அன்னிய மூதலீடுகள் உலகெங்கும் ஏகாதிபத்தியத்துக்கு நிகராகவே நகரத் தொடங்கியுள்ளது. அன்னிய முதலீட்டை அதிகம் வெளியில் நகர்த்தும் நாடாக சீனா இருக்கும் அதேநேரம், அன்னிய மூலதனத்தை  உள்ளிழுக்கும் நாடாகவும் சீனா உள்ளது. இது உலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்துகின்றது. இவற்றை விரிவாக நாம் ஆராய்வோம். 


 2002இல் அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடுகளை எடுத்தால்,


சீனா                       5,270 கோடி டாலர்
பிரான்ஸ்             4,820 கோடி டாலர்
ஜெர்மனி             3,810 கோடி டாலர்
அமெரிக்கா        3,010 கோடி டாலர்
நெதர்லாந்து      2,920 கோடி டாலர்
பிரித்தானியா    2,500 கோடி டாலர்


 2002இல் உலகளாவிய அன்னிய முதலீட்டை அதிகமிட்ட நாடாக சீனா மாறியது. சீனா கம்யூனிசத்தை கைவிட்ட பின்பாக, 2004 நடுப்பகுதியில் அன்னிய நாடுகளில் சீனா இட்டுள்ள மூதலீடு 50,000 கோடி டாலரைத் தண்டியுள்ளது. இதைவிட ஹாங்காங் மூலதனம் தனியாக உள்ளது. 2004 தை முதல் ஐப்பசி வரையிலான காலத்தில் சீனா அன்னிய முதலீடு 23.5 சதவீதத்தால் அதிகரித்தது. இந்த அதிகரிப்பு 5,378 கோடி டாலராக இருந்தது. 2004 ஐப்பசி முதல் 2005 தை வரையிலான காலத்தில் 35,202 கோடி டாலரை அன்னிய முதலீடாக நடத்தியது. இது சென்ற வருடத்தை விடவும் 7.66 சதவீதம் அதிகமாகும். வரலாற்று ரீதியாக காலங்காலமாக உலக ஆதிக்கத்தை தக்க வைத்து இருந்த ஏகாதிபத்திய உலக ஒழுங்கு மாறாக, சீனா புதிய ஏகாதிபத்திய போட்டியாளனாக வளர்ச்சியுற்று வருவதை இது தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. முதலில் சீனாவினுள் அன்னிய மூலதனம் பெருமெடுப்பில் பாய்ந்தது. பின்னால் சீனா மூலதனம் வெளிச் செல்லத் தொடங்கியது.


 உண்மையில் அன்னிய மூலதனம் சீனாவினுள் ஊடுருவிப் பாய்ந்த வேகம் மலைக்க வைக்க கூடியது. 1999-2002க்கும் இடையில் மொத்தமாக உலகளாவிய அதிக அன்னிய முதலீடுகள் இடைப்பட்ட நாடுகளை எடுத்தால், சீனாவுக்குள் தான் அதிகம் ஊடுருவிப்  பாய்ந்தது.


சீனா                           38,400 கோடி டாலர்  (1982-2002க்கு இடையில் 44,800 கோடி டாலர்)
பிரேசில்                   15,800 கோடி டாலர்
அர்ஜென்டினா         6,500 கோடி டாலர்
போலந்து                  5,100 கோடி டாலர்
ரசியா                         2,600 கோடி டாலர்


 ஒப்பீட்டளவில் சீனாவில் குவிந்த அன்னிய மூலதனம் மிகப் பிரம்மாண்டமானது. 19821998க்கும் இடையில், அதாவது சீனா முதலாளித்துவ மீட்சிக்கு பிந்திய 17 வருடத்தில், அதாவது 1998 வரை சீனாவில் ஊடுருவிய அன்னிய மூலதனம் 6,400 கோடி டாலர் மட்டும் தான். அதற்குப் பிந்திய காலத்தில் அதாவது உலகமயமாதல் வேகநடை போடத் தொடங்கியதன் பின்பாக 1999க்கும் 2002க்கும் இடைப்பட்ட நான்கு வருடத்தில் 38,400 கோடி டாலர் அன்னிய மூலதனம் சீனாவில் வெள்ளமாகப் புகுந்தது. 2003இல் சீனாவில் வெளிநாட்டு முதலீடு 50,000 கோடி டாலரையும் தாண்டியுள்ளது.


 அதிக இலாபம் பெறும் நினைவுடன் சீனாவை விட்டோடிய முன்னைய கம்யூனிச விரோதிகளே முதலில் சீனாவில் முதலிடத் தொடங்கினர். அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் பெரும் மூலதனங்களை நகர்த்தினர். ஆரம்பத்தில் இது 4,500 கோடி டாலரை சீனாவில் முதலிடும் அளவுக்குச் சென்றது. இது சீனாவின் ஏகாதிபத்திய நலன்களுக்கு இசைவானதாக மாறியது. இது சீனா மூலதனத்தின் சுயேட்சைத் தன்மையை, மற்றைய ஏகாதிபத்தியத்தக்கு எதிராக பறைசாற்றியது. ஹாங்காங் சீனாவுடன் இணைந்த போது, அது சீனாவின் பலத்தை அதிகரிக்க வைத்தது. ஹாங்காங் பொருளாதாரம் பலம் பொருந்திய சீனப் பொருளாதாரத்துடன் கூடிய நிலையில், மூலதனம் சதிராட்டம் போடத் தொடங்கியது.


 இப்படி சீனாவை நோக்கி ஓடிவந்த, ஓடிவரும் அன்னிய மூலதனங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவை எனப் பார்ப்போம். சீனாவில் உள்ள அன்னிய முதலீடுகள் 2002 செப்டம்பரில்


ஹாங்காங்                     19,984 கோடி டாலர்                  45.96 சதவீதம்
அமெரிக்கா                     3,842 கோடி டாலர்                    8.84 சதவீதம்
ஜப்பான்                             3,535 கோடி டாலர்                    8.13 சதவீதம்
தாய்வான்                        3,197 கோடி டாலர்                     7.35 சதவீதம்
வேர்ஜிதீவுகள்               2,276 கோடி டாலர்                   5.23 சதவீதம்
சிங்கப்பூர்                         2,097 கோடி டாலர்                   4.82 சதவீதம்
பிரான்ஸ்                             545 கோடி டாலர்                   1.25 சதவீதம்
மற்றவை                         8,009 கோடி டாலர்                  18.42 சதவீதம்
மொத்தம்                     43,478 கோடி டாலர்                    100 சதவீதம்


 சீனாவில் முதலில் அதிகம் ஊடுருவியது ஹாங்காங் மூலதனமே. ஹாங்காங் உள்ளே உள்ள பெருமளவிலான மூலதனங்கள் அன்னிய மூலதனம் தான். அன்னிய மூலதனம் ஹாங்காங் வழியாகவே அதிகளவில் சீனாவில் ஊடுருவியுள்ளது. இன்று ஹாங்காங் சீனாவுடன் இணைந்த ஒரே நாடாகவும் உள்ளது. (ஒருநாடு இரண்டு அமைப்பு முறை எனக் கூறிக் கொள்கின்றது) இதற்கு வெளியில் நேரடியாக ஏகாதிபத்தியம் முதல் அயல்நாடுகளும் அதிக அன்னிய முதலீட்டை நடத்தியுள்ளனர். தாய்வானின் 80 சதவீதமான உற்பத்தி வெளிநாட்டில் செய்யப்படுகின்றது. உதாரணமாக சீனாவுடான இணைவு சம்பந்தமாக மக்களை ஏமாற்றி பிழைக்கும் தாய்வான் அரசியல் விளையாட்டைத் தாண்டி, சீனாவில் 30,000 தாய்வான் நிறுவனங்கள் முதலிட்டுள்ளன. 5 முதல் 10 லட்சம் தாய்வான் மக்கள் சீனாவில் வேலை செய்கின்றனர். தாய்வான் உள்ளடக்க ரீதியாக சீனப் பொருளாதாரக் கூறில் இணைக்கப்பட்டுவிட்டது. அரசியல் ரீதியாக முரண்பட்ட கட்சிகள், குறுகிய நலனுக்காக மட்டும் தான் சீனாவுக்கு எதிராக பூச்சாண்டி காட்டுகின்றனர். இங்கு தாய்வான் வழியாகவும் கூட ஏகாதிபத்தியம் கணிசமாகப் புகுந்துள்ளது.


 உண்மையில் இந்த முதலீடுகள் சீனாவுக்குள் ஓடிவரும் காரணங்கள் பற்பலவாக இருந்தாலும், உற்பத்திக்கான குறைந்த கூலி விகிதம் ஒரு முக்கியமான அம்சமாகும். 1995இல் ஒரு தொழிலாளியின் ஒரு மணி நேரக்கூலி  ஜெர்மனியில் 32 டாலராகவும், ஜப்பானில் 24 டாலராகவும், அமெரிக்காவில் 17 டாலராகவும் இருந்தது. இதற்கு மாறாக இந்தியாவிலும் சீனாவிலும் ஒரு மணி நேரக் கூலி 0.25 டாலராகும். ஜெர்மனியில் ஒரு தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியைக் கொண்டு 128 இந்தியரையோ, சீனரையோ கூலிக்கு அமர்த்த முடியும். இது இலாப வீதத்தின் உயர்ந்தபட்ச எல்லையை பெற்றுத் தருவனவாக உள்ளது. ஒரு இந்தியரை விட சீனரை ஏகாதிபத்திய மூலதனம் காதலிப்பதற்குப் பற்பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானதும் அடிப்படையானதும் பரந்த கல்வியின் உயர்ந்த தரமாகும். நவீனத் தொழில் நுட்பத்தை இயக்கவல்ல, மிக மலிவான கூலிகளைப் பெற முடியும் என்பது மிக முக்கியமான காரணங்களில் ஒன்று. அத்துடன் மூலதனத்தை எதிர்த்த உழைக்கும் மக்களின் போராட்ட பலத்தை போலி கம்யூனிஸ்ட் கட்சியின் துரோகத்தால் நலமடித்த நிலையில், மூலதனம் சுயாதீனமாக உயர்ந்தபட்ச சூறையாடலுக்குள் இயங்க முடிகின்றது. இதைவிட மேற்கில் சுற்றுச்சூழல் போன்ற பல தடைகள், சீனாவில் உள்ள முதலீட்டுக்கு எதுவும் கிடையாது. அத்துடன் எல்லாவற்றையும் கையாளக் கூடிய மாஃபிய அமைப்பு முறை, அரசின் ஆதரவுடன் கொடிகட்டிப் பறக்கின்றது.


பி.இரயாகரன் - சமர்