மூலதனங்கள் உலகை முழுவீச்சில் சூறையாடவும், மூலதனங்கள் தமக்கு இடையிலான மோதலை தள்ளிப் போடவும், தமக்கிடையில் ஒன்று சேருகின்றன. இது பிரமாண்டமான ஒப்பந்தத் திருமணமாக அரங்கேறுகின்றது. மனித இனம் தனித்தனி மனிதர்களாகப் பிளவுபடுத்தப்படும், ஒற்றைத் துருவங்களாக வெம்பவைக்கும் ஒரு சமூக அமைப்பில் தான், மூலதனங்கள் தமக்கு இடையில் ஒன்று சேர்வது ஒரு முரணான போக்காக உள்ளது. தனிமனிதர்களாக வெம்பவைத்துச் சிதைக்கும் மூலதனம், தமக்கு இடையில் இதற்காக ஒன்று சேர்கின்ற போக்கு உலகமயமாதல் நிகழ்ச்சிப் போக்கில் குறிப்பான மூலதனச் செயல்பாடாக உள்ளது. ஆனால் இணைவுகள் பிரதான ஏகாதிபத்திய, சர்வதேசப் போட்டி மூலதனத்துடன் நடப்பதில்லை. இதனால் இதற்கிடையில் முரண்பாடுகள் உண்டு.
ஏகாதிபத்தியம் சார்ந்த தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையேயான முரண்பாடு, ஏகாதிபத்தியம் சார்ந்த தேசிய உணர்வு பெற்றே நிற்கின்றது. இதனடிப்படையில் ஏகாதிபத்தியங்கள் நாடுகள் ரீதியாகவும் தமக்கிடையில் ஒன்று சேர்கின்றன. அதேபோல் ஏகாதிபத்தியங்கள் தம்முடன் நாடுகளை இணைக்கின்றன. ஏகாதிபத்திய முகாம்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பிரதான போட்டி முகாம்களாக ஒன்று இணைந்து பிளவுறுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே சர்வதேச ரீதியாகப் போட்டியிடக் கூடிய, புதிய சர்வதேச நாணயமாக ஈரோவை உருவாக்கியது. இதன் மூலம் ஏகாதிபத்திய முரண்பாடுகள் மேலும் நுட்பமாகி ஆழமாகவே கூர்மையடைகின்றன. இதன் ஒரு அங்கமாகவே, இதற்குச் சமாந்தரமாகவே மறுதளத்தில் பெரும் ஏகபோக தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமக்கு இடையில் ஒன்று இணைந்து பிளவுகளை ஆழமாக்குகின்றனர். இந்த இணைவுகள் கூட ஏகாதிபத்திய தேசிய உணர்வு பெற்று, தமக்கு இடையில் அரங்கேற்றுகின்றன. உலகமயமாதலில் இந்தப் போக்கு கூர்மையாகி வருகின்றது. இந்தச் சர்வதேச இணைவும் அதன் வீச்சும் உலகமயமாதல் போக்குடன் ஆழமாகி அகலமாகி வருவதைப் புள்ளிவிபர ரீதியாகப் பார்ப்போம். இணையும் மூலதனத்தின் இணைப்புகளோ பிரமாண்டமானவை.
1988 11200 கோடி டாலர்
1989 12400 கோடி டாலர்
1990 11600 கோடி டாலர்
1991 4900 கோடி டாலர்
1992 7400 கோடி டாலர்
1993 6700 கோடி டாலர்
1994 10900 கோடி டாலர்
1995 14100 கோடி டாலர்
1996 16300 கோடி டாலர்
1997 23600 கோடி டாலர்
1998 41100 கோடி டாலர்
இப்படி அதிகரித்து வந்த மூலதன இணைப்புகள், உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் வேகம் பெறுகின்றது. பன்னாட்டு நிறுவனங்களின் இணைப்புகள் 1999இல் 5,000த்திற்கும் மேற்பட்டதாக இருந்தது. இதில் மொத்தமாக 80,000 கோடி டாலர் பெறுமதியான சொத்துக்களை இணைப்பாக கொண்டிருந்தது. இது 2000ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதத்தில் 3000 இணைப்புகள் நடந்தது. இதன் மொத்த பெறுமானம் 65,000 கோடி டாலராக இருந்தது. இதைவிட மிகப் பெரிய 16 பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பில் மொத்தமாக 1,00,800 கோடி டாலர் கொண்டதாக இருந்தது.
உலகைக் கொள்ளை அடிப்பவர்களுக்கு இடையிலான ஒரு நெருக்கமான பிணைப்பை இது ஏற்படுத்தி விடுகின்றது. இது மூலதனத்தின் கூட்டுக் கொள்ளையை உறுதி செய்கின்றது. சுரண்டலை ஆழமாக்குகின்றது. பன்மைத் தன்மையை இல்லாதொழிக்கின்றது. ஏகாதிபத்திய முரண்பாட்டை குறிப்பாக்கி, ஒரு சர்வதேச நெருக்கடியை உருவாக்குகின்றது. ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் புதிய ஒருங்கிணைவுகளையும் பிளவுகளையும் உருவாக்குகின்றன. மக்களுக்கு எதிரான திட்டமிட்ட சதிப்பாணியிலான திட்டங்களை, இவர்கள் முன்கூட்டியே கூடி நடத்தி விடுகின்றனர். உதாரணமாக 1978இல் அமெரிக்க செனட் 130 தொழில்துறை தொடர்பான ஒரு விசாரணையை நடத்தியது. இதில் ஒரு உண்மை அம்பலமானது. 530 தொழில்துறை தலைவர்கள் மற்றைய தொழில் துறை தலைமையகத்தில் திட்டமிடுபவர்களாக இருப்பது தெரியவந்தது. இதைக் கடந்து மூன்றாவது தொழில்துறை கூட்டத்தில் கலந்து கொள்ளுதல், வருடாந்திரத்தில் 13,000மாக இருந்தது. மூலதனத்தின் கூட்டுக் கொள்ளையை, முன் கூட்டியே திட்டமிடுவதை இது அம்பலப்படுத்தியது. சந்தைக்கு வரும் பொருட்கள், திட்டமிட்ட கூட்டுச் சதி மூலமே மக்களின் மூளையில் ஒற்றைப் பரிணாமத்தில் திணித்து விடுகின்றனர். இதுவே இன்று மூலதனத்தின் இணைப்பாக மாறிவிடுகின்றது.
இதனால் பல சிறு உற்பத்திகள் இதில் அழிந்து பட்டுப் போகின்றன. உதாரணமாக 1980 முதல் பிரிட்டனில் சிறிய கம்பனிகள், மூன்றுக்கு ஒன்று என்ற ரீதியில் மூடப்பட்டது அல்லது பன்னாட்டு நிறுவனங்களால் விழுங்கப்பட்டன. இது உலகளாவிய விதியாகியுள்ளது. வெறும் மூன்றாம் உலக நாடுகளில் மட்டுமல்ல ஏகாதிபத்திய நாடுகளில் கூட சிறு உற்பத்திகள் புணரப்பட்டு அழிக்கப்படுகின்றன. இதன் மூலம் அனைத்து உற்பத்திகளையும் பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தத் தொடங்குகின்றன. அழிப்பு, இணைப்பு என்று உலகமயமாதலின் சுதந்திரமான ஜனநாயகச் செயல்பாடு, மனிதனின் இயற்கைக் கூறுகளின் விளைவுகளை எல்லாம் நலமடிக்கின்றது.
இதுபோல் அமெரிக்க நிறுவனங்களுக்கு இடையிலான இணைப்பு பிரம்மாண்டமான அளவில் வளர்ச்சிகண்டது. 1980க்கு முன் 100 கோடி டொலர் பெறுமதியான 12 இணைப்புகளே நிகழ்ந்தன. 1980க்கும் 1985க்கும் இடையில் இது 45 ஆக இருந்தது. இதுவே 1985இல் 23 இணைப்பும், 1986இல் 33 இணைப்பும் நடைபெற்றது. அதேநேரம் உற்பத்தியில் ஈடுபட்ட தொழிலாளி வர்க்கத்தின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஒருவழியாக, தொழில் நுட்பத்தை புகுத்தல் ஒரு பெரும் வீச்சில் நடைபெற்றது. இதே காலத்தில் 4,000 நிறுவனங்கள் இதற்காக 20,000 கோடி டாலரை செலவு செய்தது. அதேநேரம் 198387க்கு இடையில் 49,000 கோடி டாலர் மதிப்புடைய 12,200 நிறுவனங்கள் கைமாறின. இதன் மூலம் ஏகபோக நிறுவனங்களின் ஆதிக்கம் உச்சத்தை எட்டியது. இவை சொந்த நாட்டையே கடந்து சென்றன. உதாரணமாக முதலாளித்துவ மீட்சி வெளிப்படையாகப் பிரகடனம் செய்து அரங்கேறிய 19851986ஆம் ஆண்டில், ரசியாவுக்குள் ஏகாதிபத்திய மூலதனம் நேரடியாகவே புகத் தொடங்கியது. 19851986 ஆண்டுகளில் 250 கூட்டுத் தொழில் நிறுவனங்களை ஏகாதிபத்திய மூலதனங்கள் ரசியாவில் உருவாக்கின. 1400 கூட்டுத் தொழிலுக்கான ஒப்பந்தத்தை 1990க்கு முன்பே கையெழுத்திட்டது. இதில் அமெரிக்காவே முன்னிலை வகித்தது. இந்தப் போக்கு உலகம் தழுவிய அளவில் வளர்ச்சியுற்றது. அதே நேரம் சிறிய மூலதனங்களை விழுங்கி ஏப்பமிடுதல், மறுபக்கத்தில் முழு வீச்சில் அரங்கேறியது. உதாரணமாக 1991இல் உலகில் இருந்த 40,000 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள், உலகளவில் 2,50,000 உற்பத்தி நிறுவனங்களை விழுங்கி ஏப்பமிட்டன. மூலதனத்தின் கொழுப்பேறுதல், வரைமுறையின்றி, எல்லா தளங்களிலும் அரங்கேறியது. இதில் மூலதனத்துக்கு இடையிலான இணைப்பும் ஒன்று அவ்வளவே. மனித இனம் இதன் காலடியில் நசிந்து கருகிப் போகின்றது.
இப்படி மூலதனத்துக்கு இடையில் நடக்கும் இணைப்புகள், போட்டி ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையில் நடப்பதில்லை. மாறாக நட்பு ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலும், சொந்த நாட்டு பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையிலேயே இணைப்புகள் நடக்கின்றன. தேச எல்லைகளைக் கொண்ட நாடுகளுக்கு இடையில் எப்படி இணைப்புகள் நடக்கின்றனவோ, அதனடிப்படையிலேயே மூலதன இணைப்பும் நடக்கின்றது. இந்த இணைப்பு இன்று அதிகரித்து வருவதையே மேலுள்ள புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றன. இதன் மூலம் உலகைக் கைப்பற்றும் போட்டியானது மேலும் ஆழமாகி கூர்மையாக்கப்படுகின்றது. சந்தைப் போட்டியில் தற்காலிகமான சமரசத்தை இது ஏற்படுத்தினாலும், அடுத்தடுத்து கூர்மையான போராட்டம் ஏகாதிபத்தியங்களுக்கு இடையில் தொடங்கி விடுகின்றன. இதனால் தேச எல்லைகளைக் கடந்த முதலீடுகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றது.