மக்களின் பெயரில் மாவீரர் உரை. அதற்கு பல பொழிப்புரைகள். ஊரையும் உலகத்தையும் புலித் தேசியத்தின் பெயரில் ஏமாற்றி அவர்களையே கொள்ளையிட்டு வாழும் புலிகள், அனைத்து மக்கள் விரோத கேடித்தனத்தையும் மூடிமறைக்க படுகொலையையே தேசியமாக பிரகடனம் செய்து நிற்கின்றனர்.
புலித் தேசியத்தின் பெயரில் கொல்லப்பட்ட ஓரு பகுதியினரின் உற்றார் உறவினரின் கண்ணீரை விளம்பரம் செய்து அதையே ஊரறிய வியாபாரமாக்குகின்றனர். புலிகளின் அரசியலுக்கும் வருமானத்துக்கும் பிணங்களே உதவுகின்றது. மரணித்தவரின் உற்றார் உறவினரின் கண்ணீரும், அதன் மேலான பொதுவான சமூக அனுதாபமும் என்ற அளவுக்குள், புலி தேசியம் குட்டிச்சுவராகிவிட்டது. பாசிசத்தையே அனைத்துமாக, அதையே வாழ்வாக கொண்ட புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் பேரினவாதத்தின் துணையில் ஒரு செய்தியை வெளியிடுகின்றனர்.
புலியெதிர்ப்புக் கும்பல் இதே போன்று புலிகளின் துணையில் எப்படி அவர்களால் கருத்துரைத்து அரசியலில் நீடித்து வாழ முடிகின்றதோ, அதேயொத்த வகையில் புலிகளும் புலித் தலைவரும் பேரினவாதத்தின் துணையில் வாழமுடிகின்றது. இதற்கு வெளியில் இவர்களுக்கு என்ற தனித்துமான மக்கள் அரசியல் எதுவும் கிடையாது.
பாவம் மக்கள். வாய் திறந்து எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாது. அவர்களின் பெயரில், ஒரு அரசியல் புளுடா. இன்று அமைதியையும் சமாதானத்தையும் கோருவதே துரோகமாக மாறியுள்ளது. தமிழ் மக்கள் யுத்தத்தை விரும்பவில்லை என்று கூறுவது கூட துரோகமாகிவிட்டது. அமைதியை சமாதானத்தை கோருவது மரண தண்டனைக்குரிய ஒரு தேசிய குற்றமாகிவிட்டது. யாரும் எவரும் அதை உரசிப்பார்க்கலாம்.
இந்த மக்கள் விரோத யுத்தத்துக்கு எதிராக, யாரும் கருத்துரைக்கவே முடியாது, இதை புலிக்கு எதிரானதாகவே கருதி காய் அடிக்கின்ற மலட்டுக் கூட்டம் தான், புலியாகி, தாமே தமிழ் தலைமையாக கூறிக்கொண்டு அனைத்தையும் காயடிக்கின்றனர். இதை மீறி யாரும் வாய் திறக்கவே முடியாது. புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மாவீரர்" உரை, என்ன தான் பேரினவாதத்தின் பக்கத்தை ஓப்புக்கு சொல்லி அழுதாலும், தமிழ் மக்களுக்கு எப்படி பாடை கட்டுவது பற்றிய தமது பாசிச நிலைப்பாட்டை மக்களின் பெயரில் சொல்லிப் புலம்பினார்.
புலிகளின் தலைவர் பிரபாகரனின் 'மாவீரர்" உரை தொடர்பாக தமிழ் சமூகமே இரண்டுபட்ட வகையில், பிளவுபட்டு எதிர்கொண்டது. இந்த பிளவு மிக ஆழமானது. யுத்தத்தை மக்களின் பெயரில் செய் என்றும், அமைதியை மக்களுக்கு தாருங்கள் என்றும், இந்த பிளவு ஆழமாகக் காணப்படுகின்றது. இது வாழ்வியலில் வேறுபட்ட பிரதேசங்களைச் சார்ந்து பிரதிபலித்தது. யுத்தத்தையும், அதன் அவலங்களையும், ஏன் புலிகளின் பாசிசத்தையும் சொந்தத்திலும் நேரிலும் அனுபவிப்பவர்கள் பெரும்பான்மையானோர் அமைதியையே எதிர்பார்த்து புலிகளின் முன் வாய்பொத்தி காத்து நிற்கின்றனர். மறுபக்கத்தில் யுத்தத்தை பொழுது போக்காக கருதி, புலம்பெயர் சமூகத்தில் பெரும்பான்மை யுத்தத்தை கோருகின்றது. தமது மேற்கத்தைய இயந்திர வாழ்வில் களைப்பைப் போக்கும் ஒரு 'ரொனிக்காக", வீரமாக உரையாடவும் பேசி வம்பளக்கவும் யுத்தம் அவர்களின் சொந்தக் கோரிக்கையாகின்றது.
மண்ணில் யுத்தம் வெறுப்பாகவும், புலம்பெயர் நாட்டில் யுத்தம் மகிழ்ச்சியாகவும் கொண்ட உணர்வுகளின் அடிப்படையில், இந்த 'மாவீரர்" உரை மீது மக்கள் கவனம் திரும்பியது. ஒரு பகுதி மக்களின் சாவும், மறுபகுதி மக்களின் உற்சாகம் கொண்ட வாழ்வும் இதில் அடங்கிப் பிரதிபலித்தது.
புலம்பெயர் சமூகமும் புலிகளும்
எந்த சமூக ஒழுங்குக்கும் உட்படாத அனைத்து சமூக பிற்போக்கையே ஆதாரமாக கொண்ட புலம்பெயர் லும்பன் சமூகத்தில், புலிகளின் இருப்பு பரஸ்பரம் சொந்த நலன் சார்ந்ததாகவே காணப்படுகின்றது. எந்த மக்கள் நலனும் இதன் பின்னால் இருப்பதில்லை. புலிகள் மக்களுக்கு எப்படி அவர்களின் வாழ்வியலுடன் ஒன்றுபட்ட உதவுகின்றனர் என்று, இவர்கள் அவர்களை கேட்பதில்லை, அதேபோல் அந்த மக்கள் ஊடாக தாமும் அதைக் கேட்டு அறிவதில்லை. இதை மீறாத வகையில், ஊடகத்துறையை கைப்பற்றி அவை மூலம் சொன்னதையே மீளச் சொல்லும் கிளிப்பிள்ளைகளாக மக்களைச் சொல்ல வைக்கின்றனர். இதை ஊடகத்துறை ஊடாக மீறும் போது, அவை தடுக்கப்படுகின்றது. புலியெதிர்ப்பு மீறல் மற்றொரு மந்தை கூட்டத்தை உருவாக்குகின்றது. மக்கள், மக்களின் நலன் என்று யாரும் இந்த எல்லையை மீற, இந்த இரண்டு கும்பலும் அனுமதிப்பதில்லை. இந்த சூழல் பாசிசத்தையே தழைத்தோங்க வைக்கின்றது.
இந்த மலட்டு லும்பன் புலம்பெயர் சமூகம், புலிகளும் அதன் தலைவரும் யுத்தத்தை மீள அறிவிப்பார், சண்டையை தொடங்குவார் என்ற நம்பிக்கையுடன் தொலைக்காட்சியின் முன் வாய்பிளந்து எச்சில் வடிய காத்துக் கிடந்தனர். இதுவே அவர்களின் அன்றாட அரிப்புக்குரிய வாழ்க்கையாகி விடுகின்றது. சொந்தமாக மண்டையில் எதுவும் இருப்பதில்லை.
இவர்களுக்கு புரிவதில்லை தலைவர் பாசிசத்தின் கைதி என்பது. பாவம் புலித் தலைவர். எதை எப்படி பேசுவது என்பதற்கு கூட அவருக்கு சுதந்திரம் கிடையாது. அவர் விரும்பும் சண்டையை கூட சொல்ல முடியாத நிலை. நாங்கள் மீண்டும் சண்டைக்கு போகப் போகின்றோம் என்று சொல்ல முடியாத அவலநிலை. ஆகவே சொதப்ப வேண்டும், சொதப்பியே விடுகின்றார். இரண்டுநாள் கழித்து தமிழ்ச்செல்வன் யுத்தநிறுத்தம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக, தலைவர் உரைக்கு புதிய பொழிப்புரை வழங்குகின்றார். இதற்கு அடுத்த நாள், இளம்திரையன் மௌனவிரதம் பூண்டு, மீண்டும் அதை சொதப்புகின்றார்.
இந்த பூச்சாண்டி காட்டும் சொதப்பல்களையே புலம்பெயர் சமூகம் வாய்பிளந்து தொலைக்காட்சி பெட்டிக்குள் மூழ்கி கிடந்த நிலையில், தலைவர் வழமைபோல் இம்முறையும் வாசித்த உரை, புலம்பெயர் சமூகத்துக்கு சப்பென்றாகியது. யுத்தத்தை நாம் செய்யப் போவதாக நேரடியாக பேச முடியாத நிலையில், இந்த மலட்டு புலம்பெயர் அறிவற்ற கூட்டத்துக்கு சப்பென்று போக, பேய் அறைந்த ஒரு நிலையை உருவாக்கியது. உற்சாகமிழந்து "தலைவர் இந்த முறையும் சொதப்பிப் போட்டார்" என்று நம்பிக்கை இழந்து புலம்பினர்.
உடனே இதை மொழிபெயர்க்கவும், புதிய பொழிப்புரையையும் வழங்கத் தொடங்கினர். இதற்கு என்று நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ்மக்களின் பாராளுமன்ற பொம்மைப் பிரதிநிதிகள் தத்தம் பொழிப்புரையுடன், இறுதி யுத்தத்தை தலைவர் அறிவித்துள்ளார் என்கின்றனர். இந்தா தமிழீழம் என்கின்றனர்.
தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் இந்த புலிப்பினாமிகளுக்கு, இங்கே என்ன வேலை. அந்த மக்களுடன் அவர்களின் துன்ப துயரத்துடன் நின்று போராட வேண்டிய இவர்களுக்கு, இங்கு என்ன வேலை. புலிகளின் அனைத்து மனித உரிமை மீறலுக்கும் பணம் திரட்ட வெளிநாட்டில் நின்றபடி, தொடந்தும் அந்த மக்களைத் துன்புறுத்த உதவும்படி இங்குள்ள மக்களை உற்சாகமூட்டுகின்றனர். தலைவர் சொதப்பியதை மீள மொழி பெயர்த்து மக்களை மந்தையாக்க முனைகின்றனர். மொழிபெயர்த்தும், விரிவுரைசெய்தும், ஆய்வுகள் நடத்தியும் அவர்கள் கண்ட முடிவு, தலைவர் தனிநாட்டை அமைக்க சண்டையை தொடங்கப் போவதாக பெருமையுடன் அறிவிக்கின்றனர். வாயைப் பிளந்து தொலைக்காட்சியின் முன் செபம் செய்தவர்களின் வாய்க்குள், அவல் வீழ்ந்தது மாதிரி ஒவ்வொன்றாக வந்து வீழ்ந்து கொண்டிருந்தது. புலியைச் சொல்லி பிழைக்கும் லும்பன்கள், அவர்களின் தலைவர் வாசித்த ஒவ்வொரு வரியையும் அங்குமிங்குமாக புரட்டி அதை சண்டையாக காட்டிய போது, புலம்பெயர் சமூகம் அதன் பின் உற்சாகத்தை எட்டியது.
இப்படி சண்டை பற்றிய படிமானம் மனத்திரையில் நிழலாட, வாயில் எச்சில் ஒழுக மறுபடியம் உருவெடுத்து ஆடத் தொடங்குகின்றனர். சண்டையையும், அதன் அழிவையும், மரணங்களையும் கண்டு மகிழ்ந்து திளைக்கும் மனநிலையுடன் தான், புலம்பெயர் சமூகம் அன்று உறங்கச் சென்றது. அன்றைய புலிக் கனவுகள் அனைத்தும் மனிதப் பிணங்களாகவே மாறி, அவை டொலராக, ஈரோக்களாக உற்சாகமூட்டியது. மற்றவன் அழிவில், மற்றவன் சிதைவில் நம்பிக்கை கொண்ட இந்தப் புலம்பெயர் சமூகம், இந்த விடையம் தான் இவர்கள் அன்றாட வாழ்வில் பொழுது போக்காகி, இன்று இவையின்றி உணவே செரிப்பதில்லை. சினிமாவில் சண்டைக் காட்சி பார்க்கின்ற ரசிகர் கும்பல் போல் இந்தக் கும்பல், அதற்காகவே அலைகின்றது.
இதற்குள் ஒரு பகுதி புலியின் பெயரில் பிழைத்துக்கொள்கின்றனர். இதில் முன்னுக்கு நிற்பவர்களின் குடும்பங்களை முற்றுமுழுதாக வெளிநாட்டில் இறக்கிவிட்ட பின் தான் குலைக்கின்றனர். இப்படி இதற்கு இந்த தேசியம் உதவுகின்றது. அங்கு எஞ்சியிருக்கும் உறவினரை, இந்த எச்சில் பொறுக்கிகள் இங்கு அழைப்பதையே தமது தேசிய இலட்சியமாக கொண்டு சதா அலைகின்றனர். இப்படி சமூகத்தின் கோடரிக்காம்பாகி பாசிசத்துக்கு காவடி எடுத்து ஆடுகின்றனர்.
போராட்டத்தில் இழப்பு இன்றி இருக்குமா என்று இவர்கள் கேட்கின்றனர். அனால் அதை தான் இழக்க தயாரற்ற நிலையில், தனது குடும்பத்தை பாதுகாப்பாக வைத்துக் கொண்டே, அனைத்துக்கும் ஒளிவட்டம் கட்டுகின்றனர். மற்றவனின் மரணத்தில் வாழும் இவர்கள் தான், சமூகத்தின் கடைநிலையில் உள்ள பொறுக்கிகளாக உள்ளனர். இவர்கள் தான் இன்று, தமிழ் தலைமை என்று தம்மைத் தாம் கூறிக்கொண்டு சமூகத்தை ஆட்டிப்படைக்கின்றனர்.
யுத்த பிரதேசத்தில் வாழும் மக்கள்
இவர்களுக்கு யாரும் விளக்கவுரையோ, பொழிப்புரை செய்வதில்லை. மாறாக துப்பாக்கி முனையில் மரணங்களை விதைத்து இதுதான் தலைவரின் செய்தி என்று இரத்தம் உறைய பறைசாற்றுகின்றனர். மரணம், மரணம், இதுதான் அந்த மக்களுக்கான ஒரேயொரு செய்தி.
யுத்தத்தையும், மரணத்தையும் வாழ்வாக கொண்டு, பீதியை உணர்வாக கொண்ட ஒரு சமூகத்தில், யுத்தம் அவர்களை பாடை கட்டி அழக் கோருகின்றது. இதைத்தான் பிரபாகரனின் மாவீரர் செய்தி அவர்களுக்கு கூறியுள்ளது. இந்த மரணங்களால் அந்த மக்கள் பெறப் போவது எதுவுமில்லை. இது அந்த மக்களுக்கு நன்கு தெரியும். இருப்பதை இழப்பதைத் தவிர, அவர்கள் புலிப்பாசிசத்தில் பெறப் போவது எதுவுமில்லை.
சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறையை ஒருபுறம் உணரும் மக்கள், அதற்காக புலம்பெயர் சுகவாழ்வு தமிழன் போல் புலியின் பின்னால அரோகராப் போடத் தயாராக இல்லை. தமிழ் மக்களின் தேசிய பிரச்சனையை ஒருபுறம் உணர்ந்த போதும் கூட, புலிகளின் யுத்தம் சரி புலிகளின் மலட்டு பேச்சுவார்த்தையும் கூட அதைத் தீர்க்காது என்பதை தமிழ்மக்கள் நன்கு அறிவர். புலிகளின் எந்த அணுகுமுறையும், எந்த நடத்தையும், தமது துன்பத்தை அதிகரிக்க வைக்கின்றவை தான் என்பதை அனுபவரீதியாக அவாகள் நன்கு அறிவர். இதுவே அவர்களின் அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. சொந்த வாழ்வில் அவர்களின் அனுபவம், சதா அவர்கள் காணும் காட்சிகள், புலிகளின் பாசிசத்தின் கோரத்துக்கு வெளியில் அவர்களின் விடிவை எதிர்கொள்வதில்லை. இதுவே வியாபித்திருக்கின்றது.
மறுபக்கத்தில் இதற்கு இணையாக பேரினவாதத்தின் நயவஞ்சமான கோரமான ஒடுக்குமுறையை அனுபவிக்கின்றனர். சூதும் சூழ்ச்சியும் கொண்ட பேரினவாதம், புலிகளின் பாசிச வண்டியில் ஏறியமர்ந்து தமிழ் மக்களின் மேலாக ஊர்வலம் போகின்றனர். இதையும் தமிழ் மக்கள் உணருகின்றனர். இதற்கு எதிராக தமிழ் மக்கள் செயற்பட புலிகள் அனுமதிப்பதில்லை. இதற்கும் புலிகள் மரண தண்டனையை தான் பரிசாகக் கொடுக்கின்றனர். மக்கள் தமது பிணங்களை தாமே சுமந்தபடி, மௌனமாக தமது பிரேத ஊர்வலத்தையே நடத்துகின்றனர்.
மக்கள் எந்தப் பக்கமும் மூச்சுக் கூட விட முடியாத நிலையில் திணறுகின்றனர். அரசு அல்ல புலிகளே, தமிழ் மக்களின் அழிவுக்குரிய ஒரு யுத்தத்தை தொடங்கிவிடுவார்கள் என்று தமிழ் மக்கள் ஆழமாகவே நம்புகின்றனர். இதுவே உண்மை. பிரபாகரன் போன்று அவநம்பிக்கையான உரை ஒன்றையும், ஏன் மீள யுத்தத்துக்கு செல்வது என்பது பற்றியும் அரசு எதையும் பிரகடனம் செய்யவில்லை.
அரசு தான் தற்பாதுகாப்பில் ஈடுபவதாகவே கூறுகின்றது. புலிகளின் சென்ற மாவீரர் தின உரையைத் தொடர்ந்து, மக்கள் படை என்ற பெயரில் நடத்திய தாக்குதல்களும், அதைத் தொடந்து மாவிலாறு மூதூர் தாக்குதல்களும் பல ஆயிரம் உயிரை பலிவாங்கியது. இதில் தமிழ் சிங்களம் என்ற விதிவிலக்கற்ற வகையில் எந்த நோக்கமுமின்றி மடிந்தனர். முழுமையான யுத்தத்தை புலிகள் இன்று கோருகின்றனர். மிக முக்கியமானது மீண்டும் யுத்தம் என்று அரசு கோரவில்லை. யுத்தத்தை புலிகளே முன்வைக்கின்றனர் என்றால், யுத்தத்தை தொடங்குவதில் உள்ள முனைப்பு அம்பலமாகின்றது.
மக்கள் புலிகள் வலிந்து தொடங்கும் யுத்தத்தையிட்டு வெறுப்பும், ஆத்திரமும் கொண்டுள்ளனர். வாய் திறந்து சமாதானமே எமக்கு வேண்டும் என்று சொல்ல முடியாத நிலையில், மக்களை நோக்கி புலிகளின் துப்பாக்கிகள் குறிவைத்து நிற்கின்றது. மக்களுக்கும் புலிக்கும் இடையிலான உறவு இதைத் தாண்டியதல்ல. இது இயல்பாக அன்னிய தலையீட்டு மூலம், யுத்தத்தை தடுத்து நிறுத்தக் கோரும் உணர்வாக மாறி வருகின்றது. புலிக்கு எதிரான அன்னிய தலையீடு என்பது, பலதரப்பின் அங்கீகாரத்துடன் நடக்கும் ஒரு ஆக்கிரமிப்புக்குரிய சூழலை உருவாக்கி வருகின்றது.
மக்கள் மீது காறி உமிழும் புலியெதிர்ப்பு ஓட்டுண்ணிகளின்
புலியெதிர்ப்பு ஓட்டுண்ணிகளின் புலியெதிர்ப்பு குலைப்பு, பேரினவாதத்துக்கு ஆதரவானதும் அன்னிய சக்திகளுக்கு விசுவாசமானதாகவும் வாலாட்டுகின்றது. மக்கள் விரோத புலிச் சகதிக்குள் நின்று, சுற்றிந் சுற்றி குலைக்கும் இவர்கள், ஆளுக்காள் கவ்வி அதற்குள் இழுக்கின்றனர். பாவம் மக்கள். மக்களை வழிகாட்டக் கூடியதும், மக்களை விடுதலைக்கு போராடும் வழியை வழிகாட்டக் கூடிய, எந்த ஒரு செய்தியையும் இவர்களிடம் இருந்து மக்கள் பெற முடிவதில்லை. வேத சுபீச்சார்த்தம் செய்யும் பாதிரி போல், இவர்கள் புலியெதிர்ப்பு காலாட்சேபம் நடத்துகின்றனர்.
உலகில் அனைத்தும் புலியாகி விட்டது. புலிகளுக்கு அனைத்தும் தலைவர் மயமானது போல், இதன் எதிர்க்கோடியில் நிற்கும் இந்தக் கும்பலுக்கு அனைத்தும் புலியெதிர்ப்பாகிவிட்டது. கீரைக் கடைக்கு ஒரு எதிர்கடை வைத்து நடத்துகின்றனர். பேரினவாத அமைப்பில் கீரைக்கடையில் எதுவும் மக்களுக்கு கிடைப்பதில்லை, அதே நிலைதான் எதிர்க் கடையிலும். இதைத்தான் இவர்கள் ஜனநாயகம் என்கின்றனர். கடை வைத்திருப்பது தான் ஜனநாயகம், கடையில் என்ன இருக்கின்றது எனபதை கேட்பது ஜனநாயகம் இல்லை என்கின்றனர். அப்படி கேட்பதை அனுமதிக்கக் கூடாது என்பதே ஜனநாயகமாகி, இந்த இரு தரப்பினரதும் ஒரே சீரிய கொள்கையாகிவிட்டது. கேள்விக்கும், விமர்சனத்துக்கும் இரு தரப்பும் பதிலளிக்க மாட்டார்கள்.
இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் உயர்ந்தபட்ச அரசியல், புலியை எதிர்ப்பது தான். இவர்கள் தலித் என்று நீலக்கண்ணீர் வடித்தாலும் சரி, கிழக்கு என்று கருணாவின் பின் நின்று ஊளையிட்டாலும் சரி, மனித உரிமைவாதி என்று ஏகாதிபத்திய மலத்தில் ஒரு புழுவாக புரண்டு நெளிந்தாலும் சரி, மக்களை ஏமாற்றி கோயில் உண்டியலை வைத்து பொறுக்கினாலும் சரி, பொறுக்கித் திரியும் முன்னாள் இயக்க பொறுக்கியானாலும் சரி, தமிழ் மக்களின் எதிரியுடன் கூடியிருந்து பொறுக்கித் தின்னும் இன்னாள் இயக்க உறுப்பினர் என்றாலும் சரி, அனைத்துக் கட்டமைப்பையும் எதிர்ப்பதாக கூறிக்கொண்டு மக்கள் விரோத கட்டமைப்பில் இருக்கும் மாங்காய் மண்டைகளும் சரி, இவர்களின் அரசியல் எல்லை புலியை எதிர்ப்பதுதான். புலியை எதிர்ப்பது தான், இவர்களின் விபச்சாரத்தை தொடங்குவதற்குரிய ஒரே புள்ளி.
இதனடிப்படையில் தான் இவர்கள் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இந்த புலியெதிர்ப்பைக் கலைத்துப் போட்டால், இந்த நாய்களிடம் எஞ்சுவதற்கு எதுவுமில்லை. புலியெதிர்ப்புக் கருத்துத் தளங்கள், அவர்களின் வானொலிகளில் அலம்பல்களில் உள்ள புலியெதிர்ப்பை அகற்றினால், அதில் எந்த சாரமும் இருப்பதில்லை. புலி ஆதரவு தளங்களில் தலைவர், சண்டை இவைகளை அகற்றினால், அதில் எதுவும் இருப்பதில்லை. அதேநிலைதான் இதற்கும். மக்களுக்கு என்று, இவர்கள் எதையும் சொல்வது செய்வது கிடையாது.
இந்த புலியெதிர்ப்புக் கும்பல் 'மாவீரர்" தின உரைக்கு முன்னமே, அதையொட்டி நையாண்டி உரை எழுதத் தொடங்கினர். பிறகு அதை வைத்து அரசியல் விபச்சாரம் செய்தனர். சரி நீங்கள் என்ன சொல்லுகீறிர்கள் என்றால், அரசுக்கு சலுகை வழங்க வேண்டும் என்கின்றீர்கள்.
புலியெதிர்ப்பு பாசிச குஞ்சுகளே, புலி 'மாவீரர்" தின உரைக்கு பதில் என்ன வைத்திருக்க வேண்டும் என்று உங்களால் சொல்ல முடியுமா? மக்களின் தேவை என்ன என்று உங்களால் சொல்ல முடியுமா? பேரினவாதத்தை எப்படி எந்த வழியில் என்ன கோரிக்கையில் அடிப்படையில் அம்பலப்படுத்திக் காட்டி போராட முடிமா? இந்த அடிப்படையில் புலிக்கு மாற்றான ஒரு மக்கள் நல அரசியல் வேலைத் திட்டத்தை வைக்க முடியுமா? உங்கள் முன் விடப்படும் சவால் தான் இது.
'மாவீரர்" தின உரை எப்படி அமையும் என்று ஊகத்தை முன் கூட்டியே நையாண்டியாக எழுதி, உங்கள் புலியெதிர்ப்பு வக்கிரத்தை கொட்ட முடிந்த உங்களால், முடியுமா பிரபாகரன் என்ன சொல்ல வேண்டும் என்பதை? யாரை ஏமாற்றுகின்றீர்கள். புலித்தலைவரின் அதே நாய்பிழைப்பு, உங்களுக்குத் தேவைதானா? புலித் தலைவர் போல் மக்கள் விரோத வக்கிரத்தை ஊத்திக் குலைத்து வாயில் வைத்து திணிப்பதில் உள்ள கருசனை, மக்கள் பற்றிய அக்கறையில் கிடையாது. ஒரு உருப்படியான மாற்று மக்கள் வேலைத் திட்டத்தை முன்வைக்க முடியாதவர்கள் தான், இந்த லும்பன் ஒட்டுண்ணிகள்.
சரி நீங்கள் குருடனுக்கு வழிகாட்டுவது போல், புலிகள் ஆயுதத்தை கைவிட்டு பல கட்சி ஜனநாயகத்தை ஏற்றுவிட்டால் என்ன நடக்கும்? ஐயா புண்ணியவான்களே கொஞ்சம் சொல்லுங்களேன்!. என்னதான் நடக்கும். சரி இந்த பேரினவாதம் எப்படி ஒழியும்? இதை புலிகள் ஒழிப்பார்கள் என்பதல்ல. இந்த ஒழிப்பு எப்படி நடைமுறைப்படுத்த முடியும் என்றே கேட்கின்றோம்? உண்மையில் புலிகளைப் போல் தான் இந்த புலியெதிர்ப்பும். புலிக்கு மாற்றாக புலியெதிர்ப்பைத் தவிர வேறு எந்த மக்கள் திட்டமும் கிடையாது. உண்மையில் பேரினவாத்துக்கு எதிரான ஒரு திட்டமும் கிடையாது. ஒரு திட்டம் உண்டு என்றால், அது புலியை எதிர்ப்பதும் பேரினவாதத்தை ஆதரித்தல் என்பதே திட்டம்.
கூட்டிக் கழித்து கணக்கு பார்த்தால், புலியெதிர்ப்பின் அரசியல் இதுதான். புலியெதிர்ப்பு குஞ்சுகளே, கூட்டல் கணக்கு கொஞ்சமாக அல்ல, அதிகமாக இப்படித் தான் உதைக்கும். இவர்கள், இந்த மக்கள் விரோத ஜென்மங்கள் 'மாவீரர்" தின செய்தி மீது குலைக்க வெளிக்கிட்டால், அது பிரபாகரனின் மாவீரர் உரை போல் நாறத் தொடங்குகின்றது. 'மாவீரர்" உரை மக்களுக்கு எப்படி எதிராக உள்ளது என்று சொல்ல முடியாது, மக்கள் மேல் காறி உமிழ்வதைத் தவிர இவர்களால் வேறு எதுவும் செய்ய முடிவதில்லை.
புலி ஆதரவு பினாமிகள் முதல் எல்லா மக்கள் விரோத கழிசடைகளும் எப்படி இந்த உரையை வைத்து கொண்டாடுகின்றனரோ, அதேயொத்த வகையில் இந்த உரையை வைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் அதன் மேல் காறி உமிழ்ந்து கொண்டாடுகின்றனர். இதுதான் இந்த இருதரப்பினரதும் அரசியல். மக்களுக்கு நீங்கள் என்னதான் சொல்ல முனைகின்றீர்கள் என்று கேட்டால், ஆளையாள் பார்த்து முழிக்கின்றனர். தத்தம் வேஷங்கள் மக்கள் முன் நிர்வாணமாவதைக் கண்டு மிரளுகின்றனர்.
கொடிகட்டி பறக்கின்றது பேரினவாதம்
மகிந்த ராஜபக்ச தனது பேரினவாதத்தை மிகச் சிறந்த ஜனநாயக நகைச்சுவையாகவே, அண்மையில் இந்தியாவில் வைத்து வெளிப்படுத்தினார். அதை அவர் வடக்கு கிழக்கு இணைப்பு பற்றி, அந்த மக்களின் வாக்கெடுப்பு மூலம் தான் அதை தீர்மானிக்க வேண்டும் என்றார். ஆகாகா என்ன ஜனநாயகவாதி என்று புகழாரம் சூட்டினர். இவரா தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு தருவார்?. புலியெதிர்ப்பு குஞ்சுகள் முதல் அனைவரும் இந்த செய்தியை முதன்மைப்படுத்தினர். சில புலியெதிர்ப்பு நாய்கள் எமது வேலைத்திட்டத்தை அடிப்படையாக கொண்டது இதுவென்று, புல்லரிக்க எச்சில் வடிய விசுவாசமாக வாலாட்டின.
எமது கேள்வி இந்த ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு, தமிழ் மக்கள் பிரிந்து செல்ல விரும்புகின்றனரா என்று ஒரு வாக்கெடுப்பை நடத்துங்களேன்? யாரை ஏமாற்றுகின்றீர்கள்? உங்கள் ஜனநாயகம் கிலோ என்ன விலையாக விற்கின்றீர்கள். கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட முடியும் என்ற பேரினவாதத் திட்டம், தமிழீழம் பிரிந்து போவதற்கு ஏன் பொருந்தாது? ஐயா ஜனநாயகவாதிகளே, தனித்து கிழக்கு என்று கூக்குரல் இடும் ஜனநாயக வாதிகளே, கொஞ்சம் இரக்கம் காட்டி மக்களுக்கு பதில் சொல்லுங்கள். திருடன் போல் ஒடி ஒளியாதீர்கள்.
ஜனநாயகம் கிலோ என்ன விலை என்று கூவி விற்றுவிடுவதே உங்கள் அரசியல் பிழைப்பாகி விடுகின்றது. இப்படி பேரினவாத பாசிச நோக்கில் கிழக்கைப் பிரிக்கும் ஜனநாயக வக்கிரத்தை அரங்கேற்ற முனையும் ஒரு பேரினவாத ஜனாதிபதி, தமிழ் மக்களுக்கு நியாயமான ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்பச்சொல்லுகின்றனர். புலிகளின் தலைவர் தனது சொந்த நலன் சார்ந்து இதை சொன்ன போதும், உண்மையில் பேரினவாதம் பேரினவாதமாகவே இருக்கின்றது. அதையே பேரினவாத ஜனாதிபதியின் கூற்று மீண்டும் அம்பலமாக்குகின்றது.
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு. நல்ல அரசியல் நகைச்சுவை. தமிழ் மக்களை மொட்டையாக்கும் தீர்வு இது. இலங்கை இனப்பிரச்சைன தீர்வு பற்றி நாம் முன்பு பல விடையங்களை எழுதிய போதும், சமகால முக்கியத்துவம் கருதி மிக முக்கிய அடிப்படை குறிப்பை எழுத வேண்டியுள்ளது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு தீர்வாக வடக்கு கிழக்கு தனியான அலகு ஒன்றை வழங்குவது என்பது, பேரினவாதத்தை கழுவி தமிழ் மக்களுக்கு குடிக்க ஊத்துவதாகும். மாறாக இலங்கை வாழும் இனங்களை அடிப்படையாக கொண்ட (இன) தேசிய இன அலகுகளாக பிரித்து, அதன் அடிப்படையில் அவை தம்மைதாம் ஆளும் வகையில் இன அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். அதை மையப்படுத்தி ஒரு ஐக்கிய அரசியல் அலகை உருவாக்க வேண்டும். இதில் இனம் சம்மந்தமான முடிவுகளை சமமான இன பிரதிநிதிகளைக் கொண்டும், எந்த ஒரு இன பிரதேசமாவது இனம் சம்பந்தமான முடிவை அமுல்படுத்துவதை எதிர்க்கும் பட்சத்தில், அதை நடைமுறைப்படுத்த முடியாத வகையில் அரசியல் அமைப்பு திடப்படுத்த வேண்டும். தேசிய இனப்பிரச்சனையில் நிரந்தரமாக குறைந்தபட்ச தீர்வுக்கும், எதிர்காலத்தில் கிழித்தெறிய முடியாத ஒரு தீர்வாகவும் இது அமையும். தமிழ் மக்களுக்கு மட்டும் என்பது, அவை எப்போது வேண்டுமென்றாலும் கிழித்தெறியப்படலாம். உண்மையில் இலங்கை வரலாற்றில் இந்த இனப்பிரச்னை தீர்வில், சுயநிர்ணயத்தை அருபமாக வைத்தற்கு அப்பால், இது போன்ற நடைமுறை சார்ந்த கோரிக்கையை யாரும் தெளிவாக முன்வைத்து போராடியதில்லை. அரசை ஒரு சிங்கள அரசாக விட்டு வைக்கும் வகையில்தான், கோரிக்கை, பேச்சுவார்த்தை, தீர்வு என்று அனைத்து அரசியல் நாடகத்தையும் தமிழரசுக் கட்சி முதல் அனைவரும் நடத்தினார். இன்று அதையே செய்கின்றனர்.
சிங்கள மக்களுக்கு ஒரு சிங்கள இன அலகு உருவாக்கப்படுவது போல், மற்றய இனத்துக்கும் உருவாக்க வேண்டும். இதுதான் இந்த அரசியல் அமைப்புக்குள் குறைந்தபட்சம் இலகுவாக தீர்வு காண வழிகாட்டும். வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு முதல் எல்லா பம்மாத்துக்கும் முடிவு காணப்படும். ஜே.வி.பியின் இனவாதம் முதல் சிங்கள உறுமயவின் சிங்கள துவேஷம் அனைத்தும் சந்திக்கும் வரும். மக்கள் மக்களாக வாழ வழிகாட்ட இது முன்நிபந்தனையாகும். இதை வலியுறுத்தி போராட அழைக்கின்றோம்.
பி.இரயாகரன்
02.12.2006