உலகமயமாதல் என்பது உலக மூலதனம் நடத்தும் வர்த்தகம் மற்றும் சுரண்டலின் தங்கு தடையற்ற கொள்ளையை அடிப்படையாகக் கொண்டது. தங்கு தடையற்ற வர்த்தகத்தையும், சுரண்டலையும் பாதுகாப்பதே உலகமயமாதலின் அடிப்படைக் கொள்கையாகும். மூலதனம் சுரண்டிக் கொழுக்கும் தனது உற்பத்தி மற்றும் வர்த்தக விரிவாக்கத்தை சுதந்திரமாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் செயலாற்றும் வகையில், உலகளாவிய நாட்டு எல்லைகளையே தகர்ப்பதே உலகமயமாதலாகும். இதுவே தனிப்பட்ட பணக்காரக் கும்பலையும், மூலதனத்தில் அராஜகத்தையும், ஏகாதிபத்தியத்தின் அதிகாரத்தையும், தங்குதடையற்ற வகையில் உலகில் நிலைநிறுத்துகின்றது.
மூலதனம் கட்டமைக்கும் அராஜகம் பரந்துபட்ட மக்களின் வாழ்வியலை இல்லாதொழிக்கின்றது. உலகின் செல்வங்களை எல்லாம் பன்னாட்டு மூலதனம் தனது தனிப்பட்ட சொத்தாக்குகின்ற நிலையில், அவர்களே உலக வர்த்தகத்திலும், உற்பத்தியிலும் பெரும் பகுதியைக் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் உழைக்கும் மக்கள் உழைப்பைப் பயன்படுத்தும் இயற்கை ஆதாரங்களையே முற்றாக இழந்து வருகின்றனர். அதாவது உண்மையில் என்ன நடக்கின்றது. மிகப்பெரிய நிறுவனங்கள் உலக உற்பத்தியையும் வர்த்தகத்தையும் தனதாக்கி வருகின்றன. உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் இருந்து அன்னியமாகும் மக்கள் கூட்டம் படிப்படியாக உலகெங்கும் பெருகி வருகின்றனர். மக்கள் சுயமாக உழைத்து வாழ்ந்த உற்பத்தித் தளங்கள், உலகெங்கும் நாள்தோறும் அழிக்கப்படுகின்றன. சுய உற்பத்தியும், அது சார்ந்த வாழ்வியல் முதல் அறிவியல் வரை அனைத்தும் பலாத்காரமாகப் புணரப்பட்டு அழிக்கப்படுகின்றது. இதன் மூலம் சுயசிந்தனை முதல் சுதந்திரமான உணர்வுகள் வரை அனைத்தும் மலடாக்கப்படுகின்றன.
இதைப் புரிந்து கொள்ள சில புள்ளிவிபரங்களை மேலும் எடுத்துப் பார்ப்போம். 1996இல் உலக சனத்தொகையில் அரைவாசிப் பேரின் வருமானத்துக்கு சமனாக, உலகின் மிகப் பெரிய 17 பன்னாட்டு நிறுவனங்களின் வியாபாரம் இருந்தது. ஆனால் இந்த நிறுவனங்கள் 42.5 லட்சம் தொழிலாளர்களுக்கே வேலை வழங்கினர். இந்தத் தொழிலாளர்கள் எண்ணிக்கை, உலகத் தொழிலாளர்களில் வெறும் 0.006 சதவீதம் மட்டுமேயாகும். மறுபக்கத்தில் 200 மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் உலகளாவிய பொருளாதார செயற்பாட்டில் 25 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. ஆனால் அதை உற்பத்தி செய்த தொழிலாளர்கள் எண்ணிக்கை 1.88 கோடி பேராவர். இது மொத்தமான 250 கோடி தொழிலாளர் படையில் 0.75 சதவீதம் மட்டுமேயாகும். ஐ.நா அறிக்கை ஒன்றின் படி தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகில் ஒரு சதவீதம் பேருக்கே வேலை வாய்ப்பை வழங்குகின்றன. 2003இல் 58.84 சதவீத உற்பத்தியை 2000 பன்னாட்டு நிறுவனங்கள் கட்டுப்படுத்தின. ஆனால் இவர்கள் 6.4 கோடிப் பேருக்கே வேலை வாய்ப்பை வழங்கினர். இதுவே 100 சதவீதமாக மாறும் போது, அதிகபட்சம் 10.87 கோடி மக்கள் உலகில் வேலை செய்தால் போதுமானது. மற்றவர்கள் உலகத்தில் தேவையற்ற உயிரியல் தொகுதியாகவே, உலகமயமாதல் கருதும். இதில் எந்தச் சந்தேகமும் மூலதனத்தைப் புரிந்து கொண்டவர்களுக்குத் தேவையற்றது.
100 சதவீத உற்பத்தியை தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் கைப்பற்றும் போது, இன்றைய நிலவரத்தின் படி எட்டு மணி நேர வேலைப்படி 86.96 கோடி மணித்துளிகள் இன்றைய உற்பத்திக்குப் போதுமானது. இதை, உற்பத்தியை, மனிதத் தேவையின் அடிப்படையில் பகிரப்படின், அதற்காகவே மனிதன் உழைக்கும் பட்சத்தில், மிகக் குறைவான நேரமே போதுமானது. இன்றைய உற்பத்தியின் அடிப்படையிலும் கூட ஒரு மனிதனின் உழைப்பின் அளவு மிகக் குறைவான அளவே போதுமானது. உண்மையில் பார்த்தால் உழைக்கும் ஆற்றல் உள்ள, உலகில் வாழும், ஒவ்வொரு மனிதனும், சராசரியாக 20 நிமிடங்கள் உழைத்தாலே போதுமானது. ஆனால் இன்று வேலை நேரம் அதிகரிக்கப்படுகின்றது. உழைப்பின் திறன் நவீன இயந்திரங்கள் மூலம் உயர்த்தப்பட்டு மனிதவலு பிழியப்பட்டு கறக்கப்படுகின்றது. மனித ஓய்வை மறுக்கும் வகையில், ஓய்வூதிய வயது அதிகரிக்கப்படுகின்றது. உழைப்பினால் முன்கூட்டியே உழைப்பாளி கொடுத்த ஓய்வூதியப் பணத்தைக் கொள்ளையடிப்பவர்கள், உழைப்பாளியின் முதுமையிலும் உழைத்து வாழவும் கோரப்படுகின்றனர். மனித வாழ்வுக்கு அவசியமானதும், உழைக்கும் வர்க்கம் உழைத்துக் கொடுக்கும் செல்வம் சார்ந்த சமூக நலத் திட்டங்கள் வெட்டப்படுகின்றன. சமூக நலத்திட்ட நிதிகள், சமூக விரோத மூலதனத்தால் உறிஞ்சப்படுகின்றன. மூலதனம் உருவாக்கிய அரசு என்ற நிறுவனம், இவற்றைச் செய்து முடிக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் அடிப்படையாகக் கொண்ட இன்றைய சமூக அமைப்பே புணரப்பட்டு, உலகமயமாதலாகியுள்ளது. மக்களின் வாழ்வை அழித்தொழிக்க, அரசுகள் மூலதனத்துக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்குகின்றன. உதாரணமாக அமெரிக்கா அடுத்த 10 வருடங்களுக்கு 15,000 கோடி டாலரை அமெரிக்க நிறுவனங்களுக்கு வரிச்சலுகையாக வழங்கியுள்ளது.
இப்படிச் செல்வம் குவியும் போது, உற்பத்தி குவிகின்றது. இதன் மூலம் உழைப்பவர் எண்ணிக்கை தொடர்ச்சியாகக் குறைக்கப்படுகின்றது. உழைப்பவர்களின் உழைப்பின் சுமை அதிகரிக்க வைக்கப்படுகின்றது. மறுபக்கத்தில் தொழில்நுட்பம் உழைப்பவனின் உழைப்பைச் சுரண்டுவதில் மிகவும் நுட்பமாக மாறுவதுடன், மனிதனின் முழு உறுப்பையும் பயன்படுத்தி சுரண்டும் திறனையும் அதிகரிக்க வைக்கின்றது. இதன் மூலம் சூறையாடல் மேலும் அதிகமாகின்றது. பரந்துபட்ட மக்கள் வாழ்வை உழைப்பில் இருந்து அன்னியமாக்கும் இந்தப் பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயமாதல் ஊடாக எதைத்தான் மக்களுக்குத் தந்துவிடுவார்கள்.
உண்மையில் உற்பத்திக்கான ஆதாரமான இயற்கை மற்றும் சமூக உடைமைகள் பரந்துபட்ட மக்களுக்குப் படிப்படியாக மறுக்கப்படுகின்றன. மனித உழைப்பு மதிப்பிறக்கப்படுகின்றது. மனிதன் என்பவன் தேவையற்ற உயிரியல் தொகுதியாகக் கருதும், மூலதனச் சித்தாந்தம் கட்டமைக்கப்படுகின்றது. எங்கும் எதிலும் அராஜகம் கட்டமைக்கப்படுகின்றது. எல்லாவற்றையும் சமூகத்திடம் இருந்து கைப்பற்றும் அதிகாரமே சுதந்திரமாகவும், ஜனநாயகமாகவும் வக்கரித்து விடுகின்றது.
இந்த சுதந்திரமான அராஜகப் போக்கு எப்படி வீங்கி வெம்புகின்றது எனப் பார்ப்போம். 1993இல் 300 பன்னாட்டு நிறுவனங்கள் உலகின் உற்பத்திக்கான உடமையில் 25 சதவீதத்தை சொந்தமானதாகக் கொண்டிருந்தன. உலகில் மிகப் பெரிய 50 வங்கிகள் உலகளவில் 60 சதவீதமான நிதியைக் கட்டுப்படுத்தின. அதன் மொத்தப் பெறுமானம் 20,00,000 கோடி (20 டிரில்லியன்) டாலராக இருந்தது. சமூகத்துக்கு எதிரான சமூக விரோதக் கட்டமைப்புக்களை மிகவேகமாக நிறுவிவிடும் வழியில் உலகமயமாதல் முன்னேறிப் பயணிக்கின்றது. இயற்கையை மனிதனுக்கு மறுப்பதன் மூலம், உற்பத்திக்கான மூலப்பொருள், உற்பத்திக்கான உடமைகள், நிதி மூலதனம் அனைத்தையும் விரல்விட்டு எண்ணக் கூடிய சில நிறுவனங்களும், வங்கிகளும் கட்டுப்படுத்துகின்றன. இதை முழுமையாகக் கட்டுப்படுத்த உலகமயமாதல் ஊடாக முயலுகின்றன. இந்த நிலைமையின் சிறப்பான எடுப்பான வடிவம் தான் உலகமயமாதலாகும். ஏகாதிபத்திய சகாப்தத்தின் உயர்ந்த வளர்ச்சி கட்டத்தில் ஏற்பட்ட ஒரு வடிவம் தான், இந்த உலகமயமாதாலாகும். சொத்துக்கள் குவியும் வடிவம் எந்தளவுக்கு இழிவான சமூகப் பாத்திரத்தை வகிக்கின்றதோ, அந்தளவுக்கு மக்களின் வாழ்வு மேலும் ஆழமாகவே கற்பழிக்கப் படுகின்றது.