ஏகாதிபத்திய நாடுகளில் உள்ள ஒருசில பன்னாட்டு நிறுவனங்கள், உலகளாவிய மூலதனங்களையும் மனித உழைப்பையும் தமதாக்கி ஒன்று குவிப்பதே உலகமயமாதலாகும். இதன் மூலம் தனிப்பட்ட சிலரின் சொத்துக்கள் வரைமுறையின்றிக் குவிகின்றது. இப்படிக் குவியும் தனிப்பட்ட நபர்களின் சொத்துக்களே, ஆடம்பரமாகி மனிதனுக்கு எதிரான வக்கிரங்களாக வக்கரிக்கின்றன. இதுவே சமூகப் பண்பாடாகி உலகமயமாகின்றது. இன்றைய சமூக அமைப்பு என்பது, தனிப்பட்ட நபர்களின் செல்வக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது.
இதை இலட்சியமாகக் கொண்ட சமூக அமைப்பில், இதைப் பாதுகாக்கும் பொதுக் கோட்பாடாகவே சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் உள்ளது. இதன் முதிர்வே உலகமயமாகியுள்ளது. இதை மேலும் ஒழுங்குபடுத்தவும், முழு உலக மக்களையும் அடிமைப்படுத்தவும் உருவாக்கிய கட்டமைப்பே உலகமயமாதல் என்ற சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பாகும். இந்த உலகமயமாதல் என்பது மூச்சுக்கு மூச்சு, மூலதனக் குவிப்பை அடிப்படையாகக் கொண்டது. அதாவது உலகளவில் மனித உழைப்பை மையப்படுத்தி அதிகமாகச் சுரண்டிச் சூறையாடுவதை அடிப்படையாக கொண்டது. தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களும், நிதி மூலதனங்களும் தேச எல்லைகளைக் கடந்து நடத்தும் சதிராட்டமே உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். இதன் மூலம் தேசிய உற்பத்தி அழிந்திடும் போது, மக்களின் அடிமைத்தனம் நிரந்தரமாகவே முதுகில் செதுக்கப்படுகின்றது. உற்பத்தியில் அராஜகத்தைக் கையாளவும், தேசத்தை நிரந்தரமாக அடிமைப்படுத்தி விடவும், பெருமெடுப்பில் நிதி மூலதனமும் உலகெங்கும் வெள்ளமாகவே பாய்கின்றது. இவற்றை நாம் முழுமையாகத் தெரிந்து கொள்ளாத வரை, உலகமயமாதலை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது.
முதலில் தேசங்கடந்த தொழில் நிறுவனங்களின் கிளைகள் பெருமளவில் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளிலேயே புகுந்தன. இந்த வகையில் 65 சதவீதமான அமெரிக்க நிறுவனமும், 70 சதவீதமான பிரெஞ்சு நிறுவனமும், 75 சதவீதமான பிரிட்டிஷ் நிறுவனமும், 80 சதவீதமான மேற்கு ஜெர்மனி, கனடா, நெதர்லாந்து (டச்சு) மற்றும் பெல்ஜியம் நிறுவனங்கள் தமது கிளைகளை, சக ஏகாதிபத்திய நாடுகளில் தான் உருவாக்கின. இதன் மூலம் ஏகாதிபத்திய நாடுகளில் காணப்பட்ட தேசிய எல்லைக்குள்ளான சிறு உற்பத்திகளை விழுங்கி ஏப்பமிட்டன. பெரும் உற்பத்திகள் தமக்கு இடையில் ஒன்று சேர்ந்தது மட்டுமின்றி, போட்டி உற்பத்திகளை முடமாக்கின. ஏகாதிபத்திய நாடுகளில் உற்பத்தியில் ஏக போகத்தையும், அராஜகத்தையும் வரைமுறையின்றி ஏற்படுத்தியதுடன், ஒன்றையொன்று மிஞ்சும் வகையில் மிகப் பெரும் நிறுவனங்கள் போட்டியில் குதித்தன. இதனால் நாடுகள் தமக்கு இடையில் ஒன்று சேர்வதைத் துரிதப்படுத்திய அதே நேரத்தில், உலகைக் கைப்பற்றும் போட்டி விரைவாக உலகமயமாதலாகியது.
இந்த தேசங்கடந்த பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள் 1980இல் பல்வேறு நாடுகளின் தேசிய உற்பத்தியில் பெரும் பகுதியை கைப்பற்றியிருந்தன. சிங்கப்பூரில் 83 சதவீதத்தையும், மெக்சிகோ, பிரேசில், பெரு, கொலம்பியா, மலேசியாவில் 40 முதல் 44 சதவீதத்தையும், அர்ஜென்டினாவில் 33 சதவீதத்தையும், சிலியில் 25 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. இது போன்று கனடாவில் 50 சதவீதத்தையும், பிரிட்டன், இத்தாலி, மே.ஜெர்மனி, பிரான்சு, ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் 20 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. பிரிட்டனின் 30 தொழில் நிறுவனங்களும், அமெரிக்காவின் 180 தொழில் நிறுவனங்களும் அந்த நாடுகளின் 40 சதவீதமான தேசிய உற்பத்தியைக் கட்டுப்படுத்தின. ஒரு தேசத்தின் தலைவிதியை ஒரு சில நிறுவனங்களே சொந்தமாக்கிக் கொண்டன. உற்பத்தியில் பன்மைத் தன்மையை அழித்து, ஒற்றைத் தன்மையை அடிப்படையாக கொண்ட ஒரு வரைமுறை ஒன்றை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டனர். பன்மைப் பரிணாமம் கொண்ட உற்பத்திகளை அழித்து, ஒற்றைப் பரிணாம உற்பத்திகளைச் சந்தையில் குவித்தனர். இதன் மூலம் சமூகப் பன்மைத்துவம் மேலும் சிதைந்து, தனிமனித வக்கிரமே சமூகத் தன்மையாகியது. மனித உறவுகள் வர்த்தக உறவின் விதிக்குள்ளானதாக மாறிவிட்டது. இதைத் தாண்டி எதையும் இன்றைய அமைப்பு உருவாக்கிவிடவில்லை.
""தொழிற் பிரிவினையானது உழைப்பின் விளைபண்டத்தைச் சரக்காக மாற்றுகின்றது'' என்று மார்க்ஸ் மூலதனத்தில் குறிப்பிட்டது போன்று, உலகமயமாதலில் மனித உறவுகளே வர்த்தக உறவாகி விட்டது. சமூகத் தன்மை முற்றாகவே அழித்தொழிக்கப்பட்டு விட்டது, அழித்தொழிக்கப்படுகின்றது. மனிதனை மனிதன் விலைபேசி விற்கும் நிலைக்கு, சமூக உறவுகள் காட்டுமிராண்டி நிலைக்குத் தாழ்ந்து சென்றுவிட்டது, செல்கின்றது. எச்சசொச்சமாக எஞ்சிக் கிடக்கும் மனிதனின் மனிதத்தன்மையுள்ள சமூக உறவுகளையும், அது சார்ந்த உற்பத்திகளை அழிப்பதில், உலகமயமாதல் தனது வானளாவிய அதிகாரத்தை உலகெங்குமுள்ள மக்கள் மேல் நிறுவி வருகின்றது. உற்பத்தி ரீதியான மாற்றம், அது சார்ந்த அதிகாரத்தை ஒழுங்குபடுத்துவதன் மூலமே இது அரங்கேறுகின்றது. உற்பத்தி ரீதியான அதிகாரத்தை தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்த உற்பத்திகளே ஏற்படுத்துகின்றது. மனித இனத்துக்கு எதிரான அவற்றின் வரலாறு என்ன என்பதைத் தெரிந்து கொள்வது உலகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கியமானது.
1985இல் 3500 கோடி டாலருக்கு மேல் வருடாந்தம் வரவு செலவு செய்த 400 தேசங் கடந்த தொழில் நிறுவனங்கள் இருந்தன. இவை உலகளாவிய மொத்த உற்பத்தியில் மூன்றில் ஒன்றையும், உலகளாவிய அந்நிய வர்த்தகத்தில் பாதியையும், கனரக மற்றும் தொழில் நுட்பத்தில் 80 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. 1990இல் உலகில் இருந்த முதல் 500 தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகத்தில் 70 சதவீதத்தை கட்டுப்படுத்தியது. முதலீட்டில் 80 சதவீதத்தையும், உலகளாவிய தேசிய உற்பத்தியில் 30 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. 1990இல் உலகளவில் தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனமும் உலகளாவிய வகையிலான தனியார் மற்றும் அன்னிய முதலீட்டில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. விரல்விட்டு எண்ணக் கூடிய ஒரு சில நிறுவனங்கள், உலகின் தலைவிதியை இப்படித் தான் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத்தொடங்கின. இதுவே சுதந்திரம், இதுவே ஜனநாயகம் என்ற வரையறையை தாண்டி, இன்றைய சமூக அமைப்பு வேறு விளக்கத்தை மனித இனத்துக்கு வழங்கிவிடவில்லை.
1985இல் ஜப்பானின் நான்கு பெரும் தொழில் நிறுவனங்கள் அந்த நாட்டின் 96 தொழில்களில் 60 சதவீதத்தைக் கட்டுப்படுத்தின. 67 தொழில்களில் 70 சதவீதத்தையும், 46 தொழில்களில் 80 சதவீதத்தையும் கட்டுப்படுத்தின. பிரிட்டனின் இரண்டு தொழில் நிறுவனங்கள் 75 சதவீதமான கணினிப் பொறி உற்பத்தியைக் கட்டுப் படுத்தின. இத்தாலியில் கார் உற்பத்தியை ஒரு தொழில் நிறுவனமே 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தியது. இன்னொரு நிறுவனம் 94 சதவீதமான வார்ப்பு இரும்பு உற்பத்தியைக் கட்டுப்படுத்தியது. உற்பத்திகளை சொந்த நாட்டில் அழித்து அதை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் அதேநேரம், இதை மற்றைய நாடுகளிலும் நடைமுறைப்படுத்தவே மூலதனம் ஒன்றுடன் ஒன்று மோதுகின்றது. இதன் போது அதற்கு எதிரான தேசிய கூறுகளையும் அழித்தொழிக்கின்றது. இதன் போது எங்கும் வர்த்தக உறவுகளை, மனித உறவாக்கி மோதவிடுகின்றனர். மனித குழுக்களுக்கு இடையிலான மோதல்கள், வர்த்தக உறவில் ஏற்படும் மோதலில் இருந்து கட்டமைக்கப்படுகின்றன.
மனிதர்களை மோதவிடும் இன்றைய உலக வர்த்தகம் என்பதே, மனிதனை அடிமைப்படுத்தும் சந்தைக் கட்டமைப்பாலானது. அனைத்துப் பண்பாடுகளும், அனைத்துக் கலாச்சாரங்களும் இதற்குள் தான் மூச்சுவிடுகின்றன. இதுவே ஒரு பொது மொழியாகி ஒழுக்கமாகி நிற்கின்றது. இதை நாம் புரிந்துகொள்ள முனையும் போது, மந்தைக்குரிய நமது அடிமைத்தனத்தின் சின்னங்கள் நமது நெற்றிகளில் வியாபாரச் சின்னமாக, ("மார்க்''காக) அறையப்பட்டு இருப்பதைக் காணமுடியும்.