இப்படி உலகை ஜனநாயகத்தின் பெயரிலும், சுதந்திரத்தின் பெயரிலும் ஆளுகின்ற பலர் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாகவும் இருக்கின்றனர். இந்த ஆளும் வர்க்கமும், அதைச் சுற்றி உள்ள அதிகாரவர்க்கமும் கூட பெரும் பணக்காரக் கும்பலானதே. இந்தக் கும்பல் ஏழை மக்களின் நலனையிட்டு ஒரு நாளும் ஒரு கணமும் சிந்திக்கப் போவதில்லை. மக்களின் நலனுக்காகச் செயல்பட வேண்டும் எனின், தமது சொந்தச் செல்வத்தின் இழப்பை அங்கீகரிக்க வேண்டும். எந்தப் பணக்காரனாவது தனது சொந்த சொத்து இழப்பை அங்கீகரிக்க போவதில்லை.

 உதாரணமாக உலகின் முதல் பெண் பணக்காரியான பிரிட்டிஷ் அரியணையில் இருக்கும் எலிசபெத் தனது உடைக்காக மட்டும் வருடம் 8.7 லட்சம் இலங்கை ரூபாவையும், பூக்களுக்கு வருடம் 5.2 லட்சம் இலங்கை ரூபாவையும் செலவு செய்கின்றார். இதை அவர் இழக்கத் தயாராக இருப்பதில்லை. மாறாக பச்சை இடவும், தமது சமூக அந்தஸ்துக்காக குறைந்த பட்சம் தமது செல்வத்தில் ஒரு சில சில்லறைகளை வீசியெறிவதன் மூலம், பெரும் கொள்ளைகளை அடிப்பதே இன்றைய ஜனநாயகம் மட்டுமின்றி இதை நியாயப்படுத்துவதுமே இன்றைய நவீன அரசியலுமாகும். மூலதனத்துக்கு சலுகைகளை வாரி வழங்குவதன் மூலம் ஏழ்மையைப் பெருக்குவது அரசுகளின் பொதுக் கொள்கை. இதற்குக் கூலியாகவே தன்னையும், தன்னைச் சுற்றியுள்ளவர்களின் சதையுள்ள கொழுப்பு மூலம் மக்களை அடக்கியாளுகின்றனர்.  


  இப்படிப் பல வழிகளில் பணக்காரக் கும்பலின் செல்வக் குவிப்பு என்றுமில்லாத போக்காகியுள்ளது. பணம் என்ற வகையில் அதை நோக்கி, உலகின் அனைத்தையும் இழுத்தெடுக்கின்றது. மக்கள் விரோதக் கும்பலின் தனிப்பட்ட சொத்துக்கள் சர்வதேச வருமானத்தில் மிகப் பெரிய ஒன்றாகி விட்டதால், அதைச் சுற்றியே ஒரு சமுதாய இருப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய பணக்காரக் கும்பலின் சொகுசு வாழ்க்கைக்கு ஏற்ற, மிகப் பெரிய வக்கிரமான கட்டமைப்பு உருவாக்கப்படுகின்றது. இந்தச் செல்வத்தைக் கொண்டு, இந்தப் பணக்காரக் கும்பல் ஒரு வேளை சோற்றையும், ஒரு கறியையும் உண்டு வாழவில்லை. மாறாக இந்தப் பணத்தைக் கொண்ட நுகர்வு என்பது, கவர்ச்சிகரமான, இழிவான பண்பாட்டை அடிப்படையாக கொண்ட வக்கிரத்தால் தன்னை அலங்கரிக்கின்றது.


 மக்கள் விரோத பணக்காரக் கும்பலின் ஆடம்பரமான வக்கிரத்துக்கு ஏற்ற வகையில், உலகம் தலைகீழாகவே சுற்ற வைக்கப்படுகின்றது. குவியும் பணத்தைக் கொண்டு அவர்கள் வாழும் ஆடம்பரமான வாழ்க்கை மூடு மந்திரமாகவே எப்போதும் உள்ளது. அதை தனிமனித உரிமை என்ற பெயரில், சாயம் பூசி மூடப்படுகின்றது. இதை கண்டு கொள்வது, கேள்வி கேட்பது தனிமனித உரிமைகளில் தலையிடும் அநாகரிகம் என்ற கற்பிக்கப் படுகின்றது. பொதுவாகவே, சமூகத்துக்கு எதிரான தனிமனித வக்கிரங்கள் புனிதமாக்கப் படுகின்றன. எல்லோரும் தெரிந்து கொள்ள முடியாத, இரகசியமான, சூக்குமத்தால் மூடப்பட்டுள்ளது. இந்தப் பணக்காரக் கும்பல் உலகில் உள்ள அனைத்தையும் வாங்கி நுகரும் வக்கிரமான அனைத்துத் திறனைக் கொண்டதாக உள்ளது. சுதந்திரம், ஜனநாயகம் இதன் தாராளமான விரிந்த கடைகெட்ட எல்லையாக உள்ளது.


    இந்தப் பணக்காரக் கும்பலின் வக்கிரங்கள் வக்கரிக்கும் போது, அவர்களின் நுகர்வுகள் சில சந்திக்கு வருகின்றன. சில உதாரணங்கள் மூலம் இதைப் பார்ப்போம். இந்தியாவைச் சேர்ந்த சஹாரா குருப் முதலாளியான சுப்ரஹ்டா ரோயின் இரண்டு பிள்ளைகளுக்கு 2004 பெப்ரவரி மாதம் திருமணம் ஒன்றை அடுத்தடுத்து நடத்தினர். அண்ணனின் திருமணக் கூத்துக்கு 1,500 வி.ஐ.பி.க்கள் உட்பட உலகிலேயே வக்கிரம் பிடித்த சமூக விரோதிகளான 5,000 பேர் கலந்து கொண்டனர். இந்திய மக்களை ஏமாற்றிக் கொள்ளையடிக்கும் நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உள்ளடங்கிய சமூக விரோதிகள் புடைசூழவே இவை நடைபெற்றது. இவர்களின் வருகைக்காக விசேட விமானங்கள், இலவச பயணங்களை நடத்தியது. லக்னோவ் இரண்டு ஹோட்டல்களின் எல்லா அறைகளும் இந்த பொறுக்கி கும்பலால் நிரம்பி வழிந்தது, 100 பென்ஸ் கார் அங்கும் இங்குமாக ஓடியது. இறக்குமதி செய்யப்பட்ட சமையல்காரர்கள் மூலம் சீன, இத்தாலி, லெபனான், மெக்சிகோ, மொங்கோலியா உணவு என்று பல விதமாக, கொழுப்பேறிய சமூக விரோதிகளின் வாயின் ருசிக்கு ஏற்ப விரும்பியவாறு பரிமாறப்பட்டது. பல வகையான விதவிதமான குடிபானங்கள் தனி. 4000 சொந்த ஊழியர்கள் உட்பட 7000 பேர் திருமண வேலைகளுக்கென அமர்த்தப்பட்டனர். இதை விமர்சிப்பதைத் தடுக்க, 1.40 லட்சம் ஏழைகளுக்கு ஒரு வாரம் தொடர்ச்சியாக உணவு வழங்கப்பட்டது. 101 ஏழைகளுக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டது.


 இவரின் தம்பியின் திருமணம் பெப்ரவரி 14ஆம் திகதி நடைபெற்றது. இந்தக் கூத்துக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் வருவதாக இருந்தது. இறுதியில் அவர் வரவில்லை. இவரின் திருமணத்துக்கான வரவேற்பு மண்டபத்தை அலங்கரிக்க 500 பேர் அமர்த்தப்பட்டனர். 10,500 சமூக விரோதிகள் திருமணத்துக்கான விசேட அழைப்பைப் பெற்றனர். இவர்களின் வருகைக்காக விசேட விமானப் பறப்புகள் ஒருபுறம், மறுபக்கத்தில் விருந்தினருக்கு அதிர்ஷ்ட லாபச் சீட்டு மூலம் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன. 110 விதம் விதமான உணவு வகைகளை உற்பத்தி செய்ய, 1800 சமையல்காரர்கள் கூலிக்கு அமர்த்தப் பட்டனர். இந்த அரங்கைப் பாதுகாக்க 2000 பேர் கொண்ட பயிற்சி பெற்ற பாதுகாப்பு பிரிவு ஒன்று கூலிக்கு அமர்த்தப்பட்டது. வெளிநாட்டில் இருந்து கூலிக்கு மாரடிக்கும் இசைக் கலைஞர்கள், வாய்ச் சுவைக்காக பலவிதமான இறக்குமதி செய்யப்பட்ட உயர்ரகப் பொருட்கள் குவிக்கப்பட்டது. வாசனை மெழுகுவர்த்தியை 10 லட்சம் இந்தியா ரூபா செலவில், முன்னாள் நடிகையும் இன்னாள் முதலாளியாக உள்ள ஒருத்தி இறக்குமதி செய்து அன்பளிப்பாக வழங்கினார். இப்படி வாசனையைக் கக்கிய மெழுகுவர்த்திகளின் மொத்த எண்ணிக்கை 56,000 ஆகும். இந்தத் திருமணத்தை நடத்திய பணக்காரனின் சொத்து 370 கோடி பவுண்டுகளாகும். இந்தியா ரூபாவில் 65,800 கோடி ரூபாவாகும். இந்தத் திருமணத்துக்காக 2 முதல் 5 கோடி பவுண் வரை செலவாகியது. அதாவது 335 முதல் 885 கோடி இந்திய ரூபா செலவாகியது. தனிநபருக்கு 3,000 பவுண்டு வீதம், அதாவது ஒருவருக்கு 5.32 லட்சம் இந்தியா ரூபா செலவு செய்யப்பட்டது. இந்த பணக்காரனுக்கு 33,000 ஏக்கர் நிலம் மற்றும் வீடுகள் சொந்தமாக உள்ளது. 7 இலட்சம் ஊழியர்கள் இவரின் கீழ் வேலை செய்கின்றனர். தனிப்பட்ட விமானம், இரண்டு தொலைக்காட்சி நிலையங்கள், ஒரு ஞாயிறு செய்திப் பத்திரிகை என்று பல இவரிடம் உண்டு. இதைக் கொண்டு மக்களை அடக்கியாளவும், அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்தும் பண்பாடு தான், இது போன்ற பணக்காரனின் பண்பாடு.


 உலக செல்வங்களையே தமதாக்கி அதையே நாகரிகமாக்கி விடும், தனிப்பட்ட சொத்துடைய வர்க்கத்தின் பிரதிநிதிகளின் ஆடம்பரங்களும், ஆர்ப்பாட்டங்களுடன் கூடிய வக்கிரத்தை உள்ளடக்கிய அவர்களின் வாழ்க்கை முறைக்கு இவைகள் ஒரு எடுத்துக்காட்டு. இந்தப் பணக்காரக் கும்பல் ஆபாசமாகவும் வக்கிரமாகவும் திண்டதைப் பேளும் போது, அதை சுத்தம் செய்யவே பெரும் தொகையைச் செலவு செய்பவர்கள். உலக மக்களை உலகமயமாதலூடாக சூறையாடிப் பெறும் பணத்தை, இந்த கும்பல் பெட்டியில் அடுக்கி வைப்பதில்லை. நுகர்வு வெறியினால் வக்கிரம் பிடித்துவிட, விதவிதமாக வக்கரித்து அலைகின்றனர். இந்த நுகர்வின் பொதுதன்மையைச் சுற்றி ஒரு உலகத்தையும், ஒரு சந்தையையும் கட்டமைக்கின்றனர். மூன்றாம் உலகநாடுகள் மேற்கு நோக்கி தமது உற்பத்தியை எப்படி ஒழுங்கமைத்து மேற்கு நாட்டவர்களுக்கு சேவை செய்கின்றனரோ, அதேபோன்று இந்த பணக்காரக் கும்பலுக்கு சேவை செய்யும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பாக உலகம் மாறிவருகின்றது. தனிப்பட்ட பணக்காரர்களின் சொத்தே பல உலக நாடுகளின் தேசிய வருமானத்தை மிஞ்சும் போது, அந்தப் பணத்தைச் சுற்றி உற்பத்தி முறையே மாறத் தொடங்கி விடுகின்றது. உழைக்கும் மக்களின் உழைப்பு இவர்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஒரு வரையறைக்குள், உற்பத்தி முறைகளே மாற்றி அமைக்கப்படுகின்றது. அதாவது பணம் உள்ளவனின் தேவைக்கு ஏற்ற உற்பத்தி, என்பதே உலகமயமாதலின் அடிப்படை நிபந்தனை. பணத்தை அதிகம் செலவு செய்யத் தயாரான ஒரு வர்க்கத்துக்குத் தேவையான உற்பத்தியும், அதைச் சார்ந்த உழைப்புமே உலகமயமாதலாகும். 


 இந்தப் பணக்காரக் கும்பலின் ஆடம்பரங்கள், ஆர்ப்பாட்டங்களுக்கு மேலும் சில மாதிரிகளைப் பார்ப்போம். 1999இல் பிரான்சில் மிகப் பெரிய பணக்காரக் கும்பல் 6 முதல் 12 கோடி ஈரோ பெறுமதியுள்ள 22,000 மாடமாளிகளை சொந்தமாக வைத்திருந்தனர். இதிலும் குறிப்பாக 10 முதல் 15 வீடுகள் மிகப் பெரிய அரண்மனைகளாகும். இதன் பரப்புகள் 20,000 முதல் 40,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டவை. பிரெஞ்சு பணக்காரக் கும்பல் எப்படி வக்கரித்து இருக்கின்றனர் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஆனால் பிரான்சில் வீடுகளற்ற நிலையில், வீதியில் வசிப்போர் எண்ணிக்கையோ 5 லட்சமாகும். இதைவிட மோசமான அடிப்படை வசதிகளற்ற நிலையில், வீடுகள் தேடியபடி 20 இலட்சம் குடும்பங்கள் வாழ்கின்றனர்.


 பிரெஞ்சு பணக்கார வர்க்கம் அரண்மனைகளில் வாழ்கின்றனர் என்றால், இதுவே உலக பணக்காரரின் பொது ஒழுக்கமாக உள்ளது. இது போன்ற வீடுகளில் ஒன்று, உலகிலேயே அதியுயர் விலைக்கு அண்மையில் லண்டனில் விற்பனையாகியது. இதன் பெறுமதி 7 கோடி பவுணாகும். அதாவது இலங்கை பணத்தில் 1,245 கோடி ரூபாவாகும். இதை வாங்கியவன் இந்தியரான லஷ்மி மித்தலாவான். 12 படுக்கை அறைகளைக் கொண்ட இந்த வீடு, பொதுவான வீடுகளை விட 55 மடங்கு பெரியவை. அந்த வீட்டின் வாகன இருப்பிடத்தில் 20 கார்கள் நிறுத்த முடியும். இவனின் தனிப்பட்ட சொத்து 1996இல் 150 கோடி டாலராக இருந்தது. ஆனால் 2004இல் உலகில் 62வது பெரிய பணக்காரனானதுடன், இவனின் தனிப்பட்ட சொத்து 620 கோடி டாலராகியது. 2005இல் இவனின் சொத்து திடீர் வீக்கம் கண்டது. தனிப்பட்ட சொத்து 2,500 கோடி டாலராகியது. அத்துடன் உலகில் மூன்றாவது மிகப் பெரிய பணக்காரனானான். இவனுக்கு லண்டனில் மற்றொரு வீடு உள்ளது. இதன் பெறுமானம் 90 லட்சம் பவுண்ட்டாகும். அதாவது 160 கோடி இலங்கை ரூபாவாகும். இது போன்று 1997இல் கொங்கொங்கில் 6.27 கோடி பவுணுக்கு மற்றொரு வீடு விற்பனையாகியது.


   வீடுகள் தான் இப்படி என்றால் அதிர்ஷ்ட எண் என்ற ஒன்றை வாங்கவும், இந்தப் பணக்காரக் கும்பல் தண்ணியாக செலவு செய்யத் தயங்குவதில்லை. சீனாவைச் சேர்ந்த பணக்காரன் ஒருவன், அதிர்ஷ்ட எண் என்ற ஒன்றை வாங்க, 10 கோடி இலங்கை ரூபாவை செலவு செய்துள்ளான். இவற்றை மனித சமுதாயத்தின் ஒழுக்க விதியாகக் காட்டுவதே இன்றைய ஜனநாயகமும் சுதந்திரமுமாகும்.


 இந்தத் திமிர் பிடித்த சொகுசு வாழ்க்கைக்கு பின்னால், உண்மைகள் அதிர்ச்சிகரமானதாகவே எதார்த்தத்தில் உள்ளது. 1987 டாலர் பெறுமதியை அடிப்படையாக கொண்டு ஆராய்ந்தால் 1970க்கும் 2000க்கும் இடையில் ஒப்பிடும் போது உலகளவில் சராசரி தலா வருமானம் 2,900 டாலரில் இருந்து 3,600 டாலராக அதிகரித்தது. சராசரியாக 25 சதவீதத்தால் இது அதிகரித்தது. ஆனால் வறிய நாடுகளில் இது 287 டாலரில் இருந்து 245 டாலராகக் குறைந்துள்ளது. அதாவது சராசரியாக வருமானம் 15 சதவீதத்தால் குறைந்துள்ளது. 1975க்கும் 1997க்கும் இடையில் ஏகாதிபத்திய நாடுகளின் சாராசரி வருமானம் வருடத்துக்கு 12,598 டாலரில் இருந்து 19,283யாக அதிகரித்தது. ஏழை நாடுகளின் உள்ளே புகுந்து பார்த்தால், ஏழ்மையின் வக்கிரம் மனித துயரங்களால் வக்கரித்து கிடக்கின்றது. நமீபியாவை எடுத்தால் 5 சதவீதமான வெள்ளையர்கள் நாட்டின் 70 சதவீதமான செல்வத்தை நுகரும் அதேநேரம், 55 சதவீதமான கறுப்பர்கள் கஞ்சிக்கே வழியற்ற கையேந்தி வாழும் ஏழைகளாக உள்ளனர். இது சுதந்திரம் பெற்ற நமீபியா சுதந்திரத்தினதும், ஜனநாயகத்தினதும் ஒரு எடுத்துக்காட்டாகும்.


 இதற்கு மாறாக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் வக்கிரம் தெவிட்டத் தயங்குவதில்லை. உலகில் அதி உயர் கட்டணத்தை அறவிடும் தங்கு விடுதியின் (டணிtஞுடூ) ஒரு இரவுக்கான செலவு 33,243 டாலராகும். இது ஜெனிவாவில் உள்ள வின்சன் விடுதியாக உள்ளது. பணக்காரக் கும்பலால் உபயோகிக்கப்படும், உலகிலேயே அதிக செலவு உள்ள காரின் பெறுமானமோ 21 இலட்சம் டாலராக உள்ளது. இந்த பணக்காரக் கும்பல் தமது வீட்டை அலங்கரிக்கப் பயன்படுத்தும் பொருட்களின் ஒரு சிலவற்றின் விலைகளை ஆராயும் போது, அதன் வக்கிரத்தை எடுத்துக் காட்டுவனவாக உள்ளது. இந்தப் பணக்கார கும்பல் வீட்டுச் சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்தும் சுவருக்கு ஒட்டும் பேப்பரின் விலை 40,000 டாலராகும். இந்த மனித விரோதக் கும்பல் பயன்படுத்தும் தொலைக்காட்சிப் பெட்டியின் விலையோ 2.5 லட்சம் டாலர்களாகும். இவர்கள் சமைக்காது அலங்காரமாகப் பாவிக்கும் வீட்டு அடுப்பு, 14 ஆயிரம் ஈரோவுக்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. இப்படி பற்பல. இந்தக் கும்பல் சுவைக்க பிரான்சில் விசேடமாகவும், குறைந்த பட்சம் விலையான 650 ஈரோ பெறுமதியான விசேட வைன்கள் 6,000 போத்தல் வருடாந்தரம் உற்பத்தி செய்யப்படுகின்றது. வக்கிரம் பிடித்த இந்த வர்க்கம் போடும் ஒரு காலணியின் (சாப்பத்தின்) விலை 2,500 ஈரோவாக (அண்ணளவாக 3 லட்சம் இலங்கை ரூபா) உள்ளது. இப்படி இந்த பணக்காரக் கும்பல், மனித அவலத்தின் மேல் வக்கிரமாகவே தன்னைச் சுற்றி ஒரு உலகத்தையே படைக்கின்றனர். உலக மக்களின் பணங்களின் மேல், அவர்களின் உழைப்பைப் பிழிந்து கிடைக்கும் இரத்தத்தைக் குடித்தே, இந்தப் பணக்காரக் கும்பல் சொக்கிக் கிடக்கின்றது. இதுவே உலகமயமாதலின் உயர்ந்த இலட்சியமாகவும், அதன் ஒழுக்கமாகவும், அதன் பண்பாடாகவும் உள்ளது.


 இந்த வக்கிரமான ஒழுக்கம் சார்ந்த சொர்க்கத்ததைச் சுற்றியே, தனிநபர்களின் சமுதாயமாக உலகம் மாற்றப்படுகின்றது. இதில் தனிநபர்கள் கூட கவர்ச்சிகரமான சந்தைப் பொருளாகின்றனர். கவர்ச்சி சார்ந்த பாசிச வக்கிரமே, தனிநபர் கதாநாயகர்களை உருவாக்குகின்றது. மலட்டுத்தனமான சிந்தனைத் தளத்தில் மக்களை மந்தைகளாக்கி, தனிநபர்களைச் சுற்றி தனிநபர் பிம்பங்களைக் கட்டமைக்கின்றனர். இந்தத் தனிநபர் பிம்பங்கள் மக்களை மேய்க்கும் இடையர்களாகி விடுகின்றனர். அவர்கள் உலகமயமாதலின் சந்தையைக் கவர்ச்சியாக்கி, அதையே நுகர்வு வெறியாக்கி, மக்களை அடிமைப்படுத்தும் நபர்களாகி விடுகின்றனர். இந்த நபர்களின் தனிப்பட்ட விலையோ பல கோடிகளைத் தாண்டிவிடுகின்றது. உதாரணமாக உலகிலேயே அதியுயர் விலை கொண்ட மனிதர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர். இவர்கள் விளம்பரங்களில் தோன்றுபவராகவே உள்ளனர். இப்படித் தோன்றும் முதல் 10 நபர்களின் சராசரி விலை, 2003இல் 4.90 கோடி டாலராகும். இது 2002இல் 4.84 கோடி டாலராக இருந்தது. இப்படி கோடிக்கணக்கான பெறுமதியில் விலை போகும் நபர்கள், செய்யும் விளம்பரங்கள் உலக மக்களையே மலட்டு மந்தையாக்குகின்றது. இந்த மந்தைத் தனத்தில் மக்கள் சிக்கிவிடும் போது, மக்களின் உழைப்பை அவர்களே அறியாமல் பிடுங்கிவிடுவது உலகமயமாதலின் சந்தைவிதி. இதில் சில துளிகளை வீசியெறியும் போதே, கோடிக்கணக்கான விலையுள்ள உலகமயமாதலின் பிம்பங்கள் உருவாகின்றனர். இதன் மூலம் குறித்த ஒரு பொருளை, உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் வருடத்தில் ஒரு டாலர் லாபம் கிடைக்கும் வகையில் விற்றுவிட்டால், 600 கோடி டாலர் திடீரென்று ஒரு வருடத்துக்கு கிடைத்துவிடும். இது தனிப்பட்ட நபர்களின் சொத்தாகின்றது. இந்த உள்ளடக்கம் தான் உலகமயமாதல்.


 இதன் மூலம் மனித சமூகத்துக்கு எதிராக, ஒரு சிலர் எப்படி வாழ்கின்றனர் என்பதின் எடுப்பான சிறப்பான வடிவம் தான் இது. சமூகத்துக்கு எதுவெல்லாம் மறுக்கப்படுகின்றதோ, அதை நுகர்வதும் அதைக் கொண்டு வக்கரிப்பதுமே செல்வச் செருக்கின் உயிர் உள்ள துடிப்பான ஆன்மாவாக உள்ளது. மூலதனம் என்ற நூலில் மார்க்ஸ் ஷேக்ஸ்பியரின் நாடகத்தில் இருந்து எடுத்துக் காட்டுவது, இன்றும் இந்த பணக்காரக் கும்பலின் வக்கிரத்தைப் புரிந்து கொள்வதற்கு மிகவும் பொருத்தமான வரிகளாகவே உள்ளது.


தங்கம், மஞ்சள் நிறமாய் மின்னும் தங்கம்!
அருமையும் பெருமையும் என்னென்ன செய்திடும்!
கறுப்பை வெள்ளையாக்கும், கெட்டதை நல்லதாக்கும்!
தவறென்றானதை சரியென்றாக்கிடும்!
இழிந்ததை சிறந்ததாய் உயர்த்தி வைத்திடும்!
கிழவனைக் குமரனாய், அஞ்சி நடுங்கும்
கோழையைத் தீரனாய் மாற்றி வைத்திடும்!
.. என்னே இது, விண்ணுறை தெய்வங்காள்!
அர்ச்சகரை, அடியாரை உம்மிடமிருந்தே கவர்ந்து கொள்ளுமே!
மல்லர்தம் தலையணை தட்டிச் செல்லுமே!
இம்மஞ்சள் அடிமை  என்னென்ன செய்திடும்?
மதங்களைப் பிணைக்கும், சிதைக்கும்!
படுபாவிக்கும்  அருள் பாலிக்கும்!
தொழுநோயென்றும் பாராது குலாவச் செய்திடும்!
கொள்ளையர் தம்மை அவையிலமர்த்தி,
பட்டமும் பாராட்டும் பெற்றுத் தந்திடும்!
வதங்கிய விதவையை மணவறையில் அமர்த்திடும்!
... வினை வைக்க வந்த மண்மகளே!
மனிதனைவர்க்கும் வாய்த்த விலைமகளே!


 இங்கு பணம் தங்கமாக உள்ளது. எல்லாவிதமான சமூக விரோத வக்கிரங்களையும் செல்வம், தனது காலடியில் இருந்து உற்பத்தி செய்கின்றது. தனிநபர்களின் வக்கிரத்துக்காக மனித சமூகத்தையே தரம் தாழ்த்துவது, உலகமயமாதலின் உள்ளடக்கமாகும். மக்கள் கூட்டம் சிலருக்காக சேவை செய்யக் கோருவதை உலகமயமாதல் ஒழுக்கமாக, பண்பாடாகக் கட்டமைக்கப்படுகின்றது. மக்களின் சுயசிந்தனைத் திறனை முடக்குவது, அதை மலடாக்குவது உலகளாவிய பொதுவான உலகமயமாதல் உத்தியாகவும் உள்ளது.