Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 2000இல் அமெரிக்காவைச் சேர்ந்த 400 முன்னணி பணக்காரக் கும்பல் அரசுக்கு கட்டிய வரி 7,000 கோடி டாலராக மட்டுமே  இருந்தது. இது 1992 உடன் ஒப்படும் போது இரண்டு மடங்காகியது. பணக்காரக் கும்பலுக்கு  ஏற்படும் வரி மூலமான இழப்பை குறைக்க கோரும் உள்ளடக்கம்தான், உலகெங்கும் வரி குறைப்பிற்கான நடைமுறை சார்ந்த சட்டத் திருத்தங்களை செய்கின்றனர். சிறப்பு வரிச்சலுகைகளை அமுல் செய்கின்றனர். அதாவது பணக்காரன் கட்டும் வரியின் அளவைக் குறைப்பதே, அடிப்படையான  ஜனநாயகமாகியுள்ளது. பணக்காரன் மேலும் பணக்காரனாவதை உறுதி செய்வதை அடிப்படையாகக் கொண்ட, வரி குறைப்பே இன்றைய உலகமயமாதல் வரிச் சட்டங்களாக உள்ளன.

 

 இன்று ஐரோப்பாவில் பணக்காரர்கள் மீதுள்ள வரியைக் குறைக்கும் மறைமுகவழியாக, ஐரோப்பிய இணைவு சாதகமாக்கியுள்ளது. ஐரோப்பிய இணைவின் ஊடாக பணக்காரர் வரி குறைந்த நாட்டுக்கு, தமது சொத்துக்களை  மாற்றி விடுகின்றனர். இதன் மூலம் செல்வத்தைக் குவிக்கின்றனர்.


 இன்று ஐரோப்பாவில் பெரும் பணக்காரர் மீதுள்ள வரி 


வரி                                              பாரீஸ்                  லண்டன்              புரூசல்ஸ்                       ஜெனிவா
மொத்த வரவு                30 லட்சத்துக்கு         13 லட்சம்              11 லட்சம்                       20 லட்சம் 
10 கோடி சொத்துக்கு       11 லட்சம்                       0                                  0                                         -
கூடுதல் பெறுமதியுடைய
5 கோடிக்கு                            1.3 கோடி                  30 லட்சம்                       0                                  4 லட்சம்
10 கோடி பரம்பரைச்          3.7 கோடி                 1 கோடி                  2.4 கோடி                       50 லட்சம்
சொத்துக்கு 


 ஏற்றத்தாழ்வான ஐரோப்பிய வரிக் கொள்கை பணக்காரக் கும்பலுக்கு ஒவ்வொரு நாட்டிலும் சாதகமாகவே உள்ளது. இருந்த போதும் வரி குறைந்த நாட்டுக்கு செல்வத்தை நகர்த்துவதன் மூலம், ஐரோப்பிய இணைவு மேலும் சாதகமாக மாறியுள்ளது. இதைக் கடந்து பொதுவாகவே பணக்காரர் மீதுள்ள வரியைக் குறைக்க சட்டங்கள் முதல் வரிக் கொள்கைகள் அனைத்தும் உலகமயமாதலுக்கு இசைவாக மாற்றப்படுகின்றது. வரிக் குறைப்பால் ஏற்படும் அனைத்துவிதமான இழப்பும், மக்களின் முதுகின் மேல் சுமத்தப்படுகின்றது. உழைப்பின் அளவு கூட்டப்படுவதுடன், சமூக உதவித் தொகை மீதான வெட்டை பொதுவாக்குகின்றனர். மக்களின் மேலான பொது வரி அதிகரிக்கப்படுகின்றது. இன்று தமது சொந்த வருமானத்தை குறைத்துக் காட்டி, வரி கட்டுவதைத் தவிர்த்து பெரும் கொள்ளை அடிக்கும் வகையிலும் சட்டம் இசைவாக உள்ளது. பிரான்சில் தமது சொந்த வருமானத்தை மறைத்தால், அதற்கான குற்றப்பணம் வெறுமனே 1500 ஈரோக்கள் மட்டுமே. பணக்காரர் களின் மோசடிகளுக்கு இது மட்டுமே போதுமான அளவு உதவி செய்கின்றது. ஒருபுறம் மோசடிக்கு வசதியும் வாய்ப்பும், மறுபக்கம் வரி குறைப்பு என்ற நனவான உலகமயமாதலில் மக்கள் தமது வாழ்வின் அனைத்து சமூக அடிப்படைகளையும் இழக்கின்றனர்.


 வரிக் குறைப்பு மூலம், படிப்படியாக தேசத்தில் உள்ள ஏழைகளுக்கு கிடைத்த அற்பசொற்ப வாழ்க்கையையும் பறிப்பதன் மூலம், பணக்காரனின் செல்வம் குவிகின்றது. தொடர்ந்தும் பணவீக்கம் மூலம் ஒரு செழிப்பான உலகத்தை உருவாக்கினர். சர்வதேச நாணயமாக டாலர் இருந்ததால் டாலரின் வீழ்ச்சியால், பெரும் பணக்காரக் கும்பலின் அசையாத சொத்துக்களின் பெறுமானத்தை உயர்த்திக் கொண்டனர். உலக பங்குச் சந்தைகள் மற்றும் உலகளாவிய நிதி மூலதனங்கள் மீதான ஆதிக்கம் மற்றும் வாரி வழங்கும் கடன் மூலம் கிடைக்கும் வட்டி பணக்காரக் கும்பலை வக்கரிக்க வைக்கின்றது. பரந்த தளத்தில் மக்களின் அடிப்படை வாழ்வாதாரம் மீதான இழப்புகளை உருவாக்கி, அதை தனிப்பட்ட மக்கள் விரோதக் கும்பல் தமதாகக் குவிப்பதையே நாம் எதார்த்தத்தில் சந்திக்கின்றோம். இந்தக் கொழுத்த கும்பலின் சொகுசுகள் அனைத்து, உலக மக்களின் முதுகுத் தோலின் மேல் நிர்மாணம் செய்யப்படுகின்றது.   


 மறுபக்கத்தில் நவீனத் தொழில்நுட்பம் சந்தையை தன்வசப்படுத்தியன் மூலம், உலக மக்களின் சேமிப்புகளை உறிஞ்சத் தொடங்கியது. நுகர்வு வெறிச் சந்தைப் பொருளாதாரமாகிய பண்பு, சந்தை சதிராட்டம் போடுகின்றது. பணக்கார வர்க்கம் செல்வச் செழிப்பில் தலைகால் தெரியாது பணத்தைக் குவிக்கின்றது. ஏழைகள் உலகெங்கும் பெருக்கெடுத்து வருகின்றனர். உலகின் வர்க்க ரீதியான பிளவு அகலமாகி வருகின்றது. இதன் மூலம் ஏகாதிபத்தியத்துக்கு இடையிலான முரண்பாட்டை உலகமயமாதல் தற்காலிகமாக பின்தள்ளியுள்ளது.  சொத்துக் குவிப்பு வர்க்கப் போராட்டத்தை முன்னிலைக்கு கொண்டு வந்துள்ளது. ஏழை பணக்காரப் பிளவு மேலும் துல்லியமாக அகலமாக்கி வருகின்றது. இது உலகளாவிய ஒரு நிகழ்ச்சிப் போக்காகும்.