செல்வங்கள் விரல்விட்டு எண்ணக் கூடிய தனிப்பட்ட நபர்களிடம் எப்படி எங்கிருந்து குவிகின்றது? உலகமயமாதல் பற்றிய அடிப்படைப் புரிதலுக்கு இது ஒரு அடிப்படையான கேள்வியாகும். இதை ஒவ்வொருவரும் கேட்காத வரை உலகமயமாதலைப் புரிந்து கொள்ளமுடியாது. பணம் தனிப்பட்ட ஒருவனிடம் குவிகின்ற போது, மற்றவன் நிச்சயமாக அதை இழக்கவேண்டும், இழந்தேயாக வேண்டும். இது பணம் குவிதலில் உள்ள அடிப்படையான ஒரு இயங்கியல் விதி. இதை எடுப்பாகவும் இயல்பாகவும் நாம் புரிந்து கொள்ளமுடியாதவகையில், சூட்சுமமாகவே உலகம் காட்சியளிக்கின்றது.

பணம் என்பது வெறுமனே வெற்றுத் தாள்களைக் (பேப்பர்களைக்) கொண்டவையல்ல. மனித உழைப்பை குறிப்பதற்கான அளவுகோலை அடிப்படையாகக் கொண்டே, பணத்தாள் அச்சடிக்கப் படுகின்றது. பணம் என்பது அதாவது செல்வம் என்பது உழைப்பை அளவுகோலாகக் கொண்டு அளக்கப்படுகின்றது. எவ்வளவு பணம் குவிந்து கிடக்கின்றதோ, அந்தளவுக்கு மக்களின் உழைப்பை சுரண்டிக் குவித்துள்ளனர் என்பதே இதன் அர்த்தம்.


 மார்க்ஸ் தனது ஆய்வில் ""வாழ்க்கைச் சாதனங்களுக்குச் சொந்தக்காரன் அங்காடியிலே உழைப்பாற்றலை விற்க வரும் பாட்டாளியைச் சந்திக்கும் போதுதான் முதலாளித்துவம் உயிர் பெற்றெழுகின்றது'' என்றார். முதலாளித்துவம் எப்படி உயிர் பெறுகின்றதோ, அதேபோல்தான் செல்வம் குவியும் போது உழைக்கும் மக்கள் அதை இழந்தேயாக வேண்டும். இப்படி இருக்கும் போது தனிப்பட்ட முதல் 200 பணக்காரர்களின் சொத்துக்கள், எப்படி அவர்களின் சொந்த, தனிப்பட்ட உழைப்பில் இருந்து குவிய முடியும். உலகளாவிய மக்களை வரைமுறையின்றி சூறையாடிய போதே, கடந்த 10 வருடத்தில் தனிப்பட்டவர்களின் சொத்துக்கள் இரட்டிப்பாகியது. 15 வருடத்தில் இதுவே மூன்று மடங்காகியது. அதாவது மனித சமூகத்தின் அடிப்படையான சமூகத் தேவைகள் மறுக்கப்படும் போதே, சொத்துக் குவிப்பு நிகழ்கின்றது. உலகளவில் மனித உழைப்பை வரைமுறையின்றி சூறையாடப்படும்போது, அது தனிநபர்களிடம் பல மடங்காகவே குவிகின்றது. இவை உலகளவில் பரந்த தளத்தில் நடக்கின்றது. பணம் குவிந்து செல்லும் போது, ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையில் உள்ள இடைவெளிகள் அதிகரிக்கின்றது. இதையே சுதந்திரமான உலகமயமாதல், தனது ஆன்மாவாகக் கொண்டு தனது சொந்த ஆணையில் வைக்கின்றது. பணக்காரனுக்கும் ஏழைக்கும் உள்ள இடைவெளியை ஆராயும் போது, இவை அதிர்ச்சிகரமான உண்மைகளாக வெளிப்பட்டு நிர்வாணமாகி விடுகின்றது. 


1820   1  பணக்காரனுக்கு      3 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1870   1  பணக்காரனுக்கு      5 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1913   1  பணக்காரனுக்கு    11 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1950   1  பணக்காரனுக்கு    35 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1970   1  பணக்காரனுக்கு    40 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1973   1  பணக்காரனுக்கு    44 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1990   1  பணக்காரனுக்கு    60 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1992   1  பணக்காரனுக்கு    72 ஏழைகளே உலகில் இருந்தனர்.
1997   1  பணக்காரனுக்கு   727 ஏழைகளே உலகில் இருந்தனர்.
2001   1  பணக்காரனுக்கு   845 ஏழைகளே உலகில் இருந்தனர்.


 எப்படி உலகம் பரந்துபட்ட உழைக்கும் மக்களுக்கு எதிரானதாக மாறி வருகின்றது என்பதையே ஒளிவுமறைவின்றி இவை எடுத்துக் காட்டுகின்றது. உழைக்காதவன் உழைக்கும் மக்களுக்கு எதிராக குவிக்கும் செல்வத்தின் அளவையே இது எடுத்துக்காட்டுகின்றது. இதனடிப்படையில் 2004இல் உலகமயமாதலின் கீழ் பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையில் உள்ள இடைவெளி, மேலும் பல மடங்காகி இருக்கும் என்ற உண்மையை, பணக்குவிப்பு எடுத்துக்காட்டி விடுகின்றது. நாம் சில உண்மைகளை விரும்பியோ அல்லது விரும்பாவிட்டாலும் கூட புரிந்து கொண்டேயாக வேண்டும். மக்களிடையே செல்வம் பரவிக் கிடந்த நிலை என்பது, ஜனநாயகம் சுதந்திரத்தின் பெயரில் எப்படி படிப்படியாக மறுக்கப்பட்டு, பறிக்கப்பட்டு வருகின்றது என்பதையே, மேலே உள்ள அடிப்படைத் தரவுகள் எடுத்துக் காட்டுகின்றன. நவீன சுதந்திரம், ஜனநாயகம் என்பது பணம் சிலரிடம் குவிவதையும், ஏழைகள் பெருகி வருவதையும் அடிப்படையாகக் கொண்டது. இங்கு உலகமயமாதல் என்பது தேசிய எல்லைகளை சுதந்திரமாகக் கடந்து சென்று பணக்குவிப்பை  வேகப்படுத்துகின்றது. உலகளவில் ஏழைகள் பெருகி வருவதையும், மக்கள் விரோத புல்லுருவிக் கூட்டம் ஒன்று உருவாகி வருவதையும், அவர்கள் மக்கள் மேல் வக்கரித்து எப்படி உருவாகின்றனர் என்பதையுமே இவை எடுத்துக் காட்டுகின்றது. இந்த வக்கிரமான நிலையை மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், இதன் விளைவை மேலும் நெருக்கி நுணுக்கமாகவே பார்க்கமுடியும். உலகில் ஏழை மற்றும் பணக்காரர்களின் எண்ணிக்கை


1820      26.7  கோடி பணக்காரனுக்கு               80.10 கோடி ஏழைகள் இருந்தனர்.
1950        7.08  கோடி பணக்காரனுக்கு           247.91  கோடி ஏழைகள் இருந்தனர்.
1973        8.75  கோடி பணக்காரனுக்கு           385.09  கோடி ஏழைகள் இருந்தனர்.

1992        7.45  கோடி பணக்காரனுக்கு           536.64  கோடி ஏழைகள் இருந்தனர். 

1997            80.02  லட்சம் பணக்காரனுக்கு   583.68  கோடி ஏழைகள் இருந்தனர். 

2001            71.00  லட்சம் பணக்காரனுக்கு  600.30  கோடி ஏழைகள் இருந்தனர்.


 1997இல் உலக மக்கள் தொகையில் 99.77 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர். இங்கு ஏழைகள் என்பது மத்தியதர வர்க்கத்தையும் உள்ளடக்கியது. மத்தியதர வர்க்கம் தனது சொந்தத் தேவையை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் விளிம்பில் வாழ்பவர்கள். இவர்கள் அன்றாடம் உழைத்தால் தான், தமது வாழ்நிலையை தக்க வைக்கமுடியும் என்ற நிலையில் உள்ளவர்கள். இதற்கு இவர்களிடம் எந்த மாற்றும் கிடையாது. இவர்களை பணக்காரர்கள் என்று வரையறுக்க முடியாது. பணக்காரன் என்பவன் தேவைக்கு அதிகமாக சொத்துக் குவித்து அதில் ஆடம்பரமாக வாழ்பவன். இவன் உழைத்து வாழவேண்டிய அவசியமில்லை. உழைப்பைச் சுரண்டுவதே இவனின் சிறப்புப் பணியாக உள்ளது. இதற்கு மாறாக 0.23 சதவீதம் பேர் உலகின் அனைத்து செல்வத்தினதும் சொந்தக்காரராக இருந்தனர். இந்த சமூக விரோத புல்லுருவி வர்க்கத்தின் நலன்களே, இன்றைய சுதந்திரமும் ஜனநாயகமாகும். இதைத்தாண்டி யாரும் இதற்கு வேறு விளக்கம் தரவேமுடியாது. உண்மையில் சொத்துடமை மறுப்பும், சொத்துடமை குவிப்பும் உள்ளடக்கி சமூக அமைப்பை நியாயப்படுத்தி வக்கரிப்பதே ஜனநாயகத்தின் உயர்ந்தபட்ச கோட்பாட்டு விளக்கமாகும். பரந்துபட்ட மக்களுக்கு சொத்துரிமையை மறுப்பதே  சுதந்திரத்தின் வரைவிலக்கணமாகும். இதை உலகளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்துவதே, உலகமயமாதலின் உள்ளடக்கமாகும்.