இப்படி மக்களைக் கொன்று புதைத்து உருவாகியுள்ள பணக்காரக் கும்பலே, உலக நாகரிகத்தின் உயர் சின்னங்களாகப் பவனிவருகின்றனர். இப்படி 1998இல் உலகில் உருவானவர்களில் முதல் மூன்று செல்வந்தர்களின் சொத்து 48 நாடுகளின் தேசிய வருமானத்தைவிட அதிகமாக இருந்தது. 1999 ஐ.நா அறிக்கை ஒன்றின்படி அடிப்படை சுகாதாரம், சத்துணவு, அடிப்படைக் கல்வி, குடிநீர், இனப்பெருக்கம் சார்ந்த சுகாதாரம் மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டை ஏற்படுத்த 4,000 கோடி டாலர் தேவை என்று கூறுகின்றது.
உலகில் அதிக செல்வம் வைத்திருந்த 200 பேரின் சொத்தில் ஒரு சதவீதத்தைக் கொண்டு, அதாவது 700 கோடி டாலரைக் கொண்டு உலகம் முழுவதும் ஆரம்பக் கல்வியைப் புகட்டமுடியும். 200 செல்வந்தர்களின் செல்வத்தில் ஐந்து சதவீதத்தைக் கொண்டு அனைத்து அடிப்படையான சமூகத் தேவையையும் உலகம் முழுக்க பூர்த்தி செய்யமுடியும். இதன் மூலம் வருடாந்தரம் மூலதனத்தின் வெறியாட்டத்துக்கு இரையாகும் பத்து கோடி மக்களின் உயிரையும் கூட நாம் காப்பாற்ற முடியும். உண்மையில் சமூகப் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாண வழி என்ன என்பதை, இது இலகுவாக எடுத்து இயம்புகின்றது. மனித துயரங்கள் ஏற்படுத்தும் அவலங்களின் பட்டியல் நீண்டவை. அதை பின்னால் தனியாக விரிவாகப் பார்ப்போம். இந்த மனிதர்களின் துயரத்துக்கு காரணமானவர்களின் சுதந்திரம், ஜனநாயகம் என்ன என்பதை, முதலில் நாம் தெரிந்து கொள்வோம்.
2004இல் உலகிலேயே அதிக நுகர்வை நுகர்பவர்களும், உலக மக்கள் தொகையில் 20 சதவீதமானவர்களும் உலக செல்வத்தில் 86 சதவீதத்தை தனதாக்கி நுகரும் ஜனநாயகமே இன்று உலகமயமாதலாக உள்ளது. உலக மக்கள் தொகையில் அடியில் உள்ள 20 சதவீதமான ஏழைகள் உலக செல்வத்தில், வெறுமனே ஒரு சதவீதத்தையே நுகர்கின்றனர். இதுவே இன்றைய நாகரிக அமைப்பால் பீற்றப்படும் ஜனநாயகம். இதுவே இன்றைய சுதந்திரத்தின் இரத்தக் கொப்பளிப்பு. இதுவே இன்றைய உலகமயமாதல். இதற்கு அரசியல் ரீதியான வேறு விளக்கம் எதுவும் கிடையாது.
மக்களைப் பட்டினி போட்டு, உயிர் வாழ்வதற்கான அவசியமான அடிப்படைகளை எல்லாம் கொள்ளையிட்டு, கொன்று போடும் உலகமயமாதல் அமைப்பில் சிலர் நலன் மட்டுமே பாதுகாக்கப் படுகின்றது. அந்த வகையில் 2001இல் உலகளவில் பத்து லட்சம் டாலருக்கு அதிகமான தனிப்பட்ட சொத்துடைய மக்கள் விரோதிகளின் எண்ணிக்கை 71 லட்சமாக இனம் காணப்பட்டது. இது 2000ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இரண்டு லட்சமாக அதிகரித்துள்ளது. 2001இல் இந்த மனித விரோதிகளின் தனிப்பட்ட சொத்துக்களின் மொத்தப் பெறுமதி 26,20,000 கோடி (2.62 லட்சம் கோடி டாலராகும்) டாலராக இருந்தது. 2003இல் பத்து லட்சம் டாலருக்கும் அதிகமான தனிப்பட்ட சொத்தை உடைய மக்கள் விரோதக் கும்பல் முன்பைவிட பெருகியுள்ளது. இந்த வகையில் 77 லட்சம் பேர் உலகில் இனம் காணப்பட்டுள்ளனர். இது 2002யைவிட 5 லட்சம் அதிகமாகும். உலகமயமாதலில் பணக்காரக் கும்பல் பெருகுவதுடன், அவர்களின் சொத்துக்கள் குவிகின்றன. இதை அன்றாடம் இழப்பவர்கள் உலகில் உள்ள பரந்துபட்ட மக்கள் கூட்டங்களே.
2003இல் உலக மொத்தப் பணக்காரர்களில் 32 சதவீதம் பேர் அமெரிக்காவில் இருந்தனர். இதுவும் சென்ற வருடத்தை விட 13.6 சதவீதம் அதிகமாகும். 13.6 சதவீத அதிகரிப்பு 850 கோடி டாலரை பிரதிநிதித்துவம் செய்கின்றது. 3 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் எண்ணிக்கை 70,000 பேராவர். இது 2002இல் 58,000 மட்டுமே. 1975இல் அமெரிக்காவில் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான வருமானம் உடையோர் 4,500 பேர் மட்டுமே இருந்தனர். 1979இல் அமெரிக்க லட்சாதிபதிகள் எண்ணிக்கை 5.2 லட்சமாக இருந்தது. இது மொத்த மக்கள் தொகையில் 0.4 சதவீதமாகும். இன்று இவை பல பத்து லட்சமாகி விட்டது.
இந்த சமூகவிரோதக் கும்பல்கள், உலக மக்களின் செல்வங்களைக் கவருவதும், அதை தனிப்பட்ட தனிமனிதனின் சொத்தாக்குவதும், இன்றைய நாகரிக அமைப்பின் சுதந்திரம் மட்டுமின்றி இதுவே ஜனநாயகமாகவும் உள்ளது. இதைப் பாதுகாக்கவும், பெருக்கவும் உருவான நவீன வடிவமே உலகமயமாதலாகும். பணக்கார சமூக விரோதக் கும்பல்களின் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்ட உலகத்தில் நாம் இன்று வாழ்கின்றோம். அவர்களின் நலன்கள் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு பொருளாதாரக் கட்டமைப்பில்தான் நாம் உயிர் வாழ்கின்றோம். இது சூக்குமமான இணைப்புகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் மக்களை அடிமைப்படுத்தி, கொள்ளையிட்டு கொழுக்கும் சமூகவிரோதக் கும்பலைச் சேர்ந்த 475 முன்னணி உலக பணக்காரக் கும்பல்களின் தனிப்பட்ட சொத்து, 1999இல் உலகில் அடிநிலையில் உள்ள 50 சதவீதமான மக்களின் வருடாந்தர வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒரு சதவீதம் பேரின் வருமானம், உலக மக்களில் அடிநிலையில் உள்ள 57 சதவீதம் பேரின் வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. எவ்வளவு கேவலமான ஒரு சமூக அமைப்பில், நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். அமெரிக்காவில் 100 கோடி டாலருக்கும் அதிகமான சொத்தை வைத்திருந்தோர் 1989இல் 13 பேர் மட்டும் தான். இது 1996இல் 149 யாக உயர்ந்தது. உலகமயமாதல் மட்டுமின்றி, உலகமே எப்படி எதற்காக சுற்றுகின்றது என்பதையே இது நிர்வாணமாக்குகின்றது.
1997இல் முதல் பணக்காரனின் தனிப்பட்ட சொத்து 26 வறிய நாடுகளின் மொத்த தேசிய வருமானத்துக்குச் சமமானதாக இருந்தது. அதேநேரம் முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்து அடிநிலையில் உள்ள 40 சதவீதமான உலக மக்களின் வருமானத்துக்கு நிகரானதாக இருந்தது. 1994க்கும் 1998க்கும் இடையில் உலகின் முதல் 200 பணக்காரர்களின் சொத்து 44,000 கோடி டாலரில் இருந்து 1,00,000 கோடி டாலராக அதிகரித்தது. அதாவது இது உலக மக்கள் தொகையில் 41 சதவீதமானவர்களின், அதாவது 246 கோடி மக்களின் மொத்த வருமானத்துக்குச் சமமாக இருந்தது. முதல் 4 பேரின் தனிப்பட்ட சொத்துக்கள் 48 வறிய நாடுகளின் தேசிய வருமானத்தை விட அதிகமாக இருந்தது. 1998 ஐ.நா அறிக்கை ஒன்றில் உலகில் உள்ள முதல் மூன்று பணக்காரனின் சொத்து, 48 நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருப்பதை எடுத்துக் காட்டியது. ஆப்பிரிக்காவின் சகாராப் பகுதியின் வருமானத்தை விட உலகின் முதல் 15 பணக்காரர்களின் சொத்து அதிகமாக இருந்தது. தெற்காசிய நாட்டு மக்களின் சொத்தை விட முதல் 32 பணக்காரரின் சொத்துக்கள் அதிகமாக இருந்தது. சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் சமநிலைத் தன்மை என்ன என்பதை இது நமக்கு எடுத்துக் காட்டுகின்றது. உலகில் உள்ள அனைத்துச் செல்வங்களும் தனிமனித சுதந்திரம், தனிமனித ஜனநாயகம் என்ற அடிப்படையில், அனைத்தையும் தனிப்பட்ட தனிநபர்களின் சொத்தாக்குகின்றனர். சமூகத்தின் சுதந்திரம், சமூகத்தின் ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் போதுதான், உலகமயமாதலின் சுதந்திரம், ஜனநாயகம் என்பதே உயிர் வாழ முடிகின்றது. அந்த உலகமயமாதல் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தமதாக்கி அனுபவித்து கொழுக்கும், உலகில் தனிப்பட்ட சொத்தைக் கொண்ட முதல் 200 தனிப்பட்ட பணக்காரர்களின் மொத்த சொத்துக்கள் எப்படி அதிகரித்து வருகின்றது எனப் பார்ப்போம்.
1990 46,300 கோடி டாலர்
1991 51,400 கோடி டாலர்
1992 51,500 கோடி டாலர்
1993 52,300 கோடி டாலர்
1994 58,700 கோடி டாலர்
1995 67,800 கோடி டாலர்
1996 77,400 கோடி டாலர்
1997 79,800 கோடி டாலர்
1998 87,900 கோடி டாலர்
1999 1,00,000 கோடி டாலர்
2004 1,28,800 கோடி டாலர்
1990 உடன் ஒப்பிடும் போது உலகமயமாதல் மூலம், 1999இல் தனிப்பட்ட நபர்களின் சொத்துக் குவிப்பு இரண்டு மடங்காகியுள்ளது. 1990யை 2004யுடன் ஒப்பிடும் போது இது மூன்று மடங்காகி உள்ளதை உலகமயமாதல் பளிச்சென்று வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்படி சொத்துக் குவிப்பு ஏற்படும் போது, யாரோ நிச்சயமாக அதை இழந்தேயாக வேண்டும். இந்த பணக்காரக் கும்பலிடம் சொத்துக்களை இழப்பது உலக மக்கள் தான். இதற்கென்று வேறு வழி எதுவும் கிடையாது. அதாவது மக்களின் அடிப்படை வாழ்வியல் ஆதாரங்களையும் ஒட்டச் சுரண்டுவதே, உலகமயமாதலின் இலட்சியமாகி விட்டதையே இது ஒளிவுமறைவின்றி எடுத்துக்காட்டி விடுகின்றது. உலகமயமாதலில் செல்வம் மிகப்பெரிய பணக்காரக் கும்பலிடம் குவிந்து வந்ததையும், வருவதையும் புள்ளிவிபரங்களே சந்தேகத்துக்கு இடமின்றி நிறுவி விடுகின்றது. 1994இல் உலக நாடுகளின் தேசிய வருமானத்தை எடுத்து ஆராய்ந்தால், 2004 முதல் 200 பணக்காரர்களின் மொத்தச் சொத்தை விட, நான்கே நான்கு நாடுகள் மட்டுமே அதிக வருமானத்தைப் பெற்று இருந்தன. இதை 1994யுடன் எடுத்து ஆராய்ந்தால் ஏழு நாடுகள் மட்டுமே, முதல் 200 பணக்காரக் கும்பலின் சொத்துக்களைவிட அதிக தேசிய வருமானத்தைப் பெற்று இருந்தன. இதுவே, இன்றைய உலகமயமாதலின் வெட்டுமுகம்.