தனிமனிதர்களின் வாழ்வியல் பிளவுகளில் ஏற்பட்டுவரும் இடைவெளிகளினால் ஏற்படும் மனிதஅவலம், சமூகப் பிறழ்ச்சியாகி வக்கரிக்கின்றது. சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகள் தொடர்ச்சியாகவே பிளவுறுவதுடன், இவை விரிந்து அகன்று வருகின்றது. இது பல்வேறு சமூகப் பிரிவுகளில் வேறுபட்டு பிரதிபலிக்கின்றது. குறைந்த வருமானம் உடைய பொருளாதாரத்துக்கும் உயர் வருமானமுடைய பொருளாதாரத்துக்கும் இடையிலான தனிமனித வருமான பகிர்வு வீதம், 1970இல் 1க்கு 28 யாக இருந்தது. இது 1990இல் 1க்கு 50 யாக அதிகரித்தது. கிடைக்கும் வருமானம் பகிரப்படும் வீதமே, முன்பை விடவும் அகலமாகி வருகின்றது. செல்வத்தை நோக்கி செல்வம், காதல் கொண்டு பறந்தோடுகின்றது. இவை எல்லாம் ஏகாதிபத்தியம் சார்ந்தே விரிவாகின்றது.
உலக மக்களில் 20 சதவீதமான ஏகாதிபத்திய (பணக்காரர்களைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தில் தான் பெறும் பங்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் வகையில், சூறையாடலை விரிவாக்கியே வந்துள்ளது, விரிவாக்கி வருகின்றது. ஏகாதிபத்தியங்கள் 1960இல் இருந்து 1989க்கும் இடையிலான காலத்தில் தனது பங்கை 70.2 சதவீதத்தில் இருந்து 82.7 சதவீதமாக அதிகரிக்கும் வண்ணம் பெரும் சூறையாடலை மூன்றாம் உலக நாடுகள் மீது நடத்தியது. இதே காலப் பகுதியில் 20 சதவீதம் மீதான மிக வறிய (ஏழைகளைக் கொண்ட) நாடுகள், உலக வருமானத்தை தாம் பெற்ற 2.3 சதவீதத்தை இழந்து 1.4 சதவீதமாக குறைந்து போனது. மனித அவலமே ஜனநாயகமாகி, சமூகத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத எல்லைக்குள் கையேந்திப் பிழைக்கவே உலகமயமாதல் மனித இனத்தை வழிகாட்டி நிற்கின்றது.
மனிதனை மனிதன் சூறையாடுவதைத் தனிமனித உரிமையாக்கி, அதையே சுதந்திரம் ஜனநாயகம் என்ற பெயரில் மூலதனம் உலகெங்கும் அரங்கேற்றுகின்றது. இருப்பவனுக்கும், இல்லாதவனுக்கும் இடையில் உள்ள இடைவெளி, நேர் எதிர் திசைகளில் வேகமாகவே பயணிக்கின்றது. எந்தத் தொழில் நுட்பமும், இந்த சமூக அமைப்பிலான எந்தத் தீர்வும், இந்த இடைவெளியைத் தடுத்து நிறுத்தாது, மேலும் சூறையாடுவதற்கு இசைவான திசையில் இயங்குகின்றது. இதன் நெம்புகோலாக இன்று இருப்பது உலகமயமாதலே. இந்த உலகமயமாதல் அமைப்பு என்பது தேசங்கடந்த பன்னாட்டு நிறுவனங்களையும், தேசங்கடந்து செல்லும் நிதிகளையும் சார்ந்து சதிராட்டம் போடுகின்றது..