Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

உ ன்னதமானதாகக் காட்டப்படும் உலகமயமாதல் என்ற   சுதந்திரமான, ஜனநாயகமான, நாகரிக சமூக அமைப்பில்,   மனிதர்கள் சுயசிந்தனையற்ற நிலையில் அடைத்து வைக்கப்பட்ட மந்தைக் கூட்டமே. இங்கு பண்ணை அடிமைகளாக, பண்ணை மந்தைகளைப் போல் வாழவே கற்றுக் கொள்கின்றோம். சமூக அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும் ஒருங்கே கொண்ட காட்டுமிராண்டிகளாக மனிதர்களை மாற்றுவதில்தான் உலகமயமாதலின் வெற்றி அடங்கியுள்ளது.

 இதையே உலகமயமாதலின் நாகரிகமாக நாம் வரித்து கொண்டுள்ளோம். உலகமயமாகும் உன்னதமான நாகரிக உலகின் ஏழ்மையும் மனித அவலங்களும் நாளுக்குநாள் பெருகி வருகின்றது. கிடைக்கின்ற புள்ளிவிபரம் ஒன்று 1820இல் இருந்தைப் போல் அல்லது பல மடங்கு மோசமானதாக இருப்பதை உறுதி செய்கின்றது. இந்த நாகரிகமான, உன்னதமான உலகமயமாதல் சமூக அமைப்பில் ஒரு நிமிடத்துக்கு பசியால் மட்டும் 17 பேர் உலகில் கொல்லப் படுகின்றனர். அதாவது நாள் ஒன்றுக்கு பசியால் 24,000 பேர் வீதம், வருடம் 86 லட்சம் பேர் கொலை செய்யப்படுகின்றனர். இவை சிலர் அனுபவிக்கும் தனிமனித சுதந்திரம் மற்றும் தனிமனித ஜனநாயகத்தின் விளைவுகள். மனிதன் உயிர் வாழ்வதற்கு தேவையான அடிப்படையான தடுப்பு மருந்தை, உன்னதமான உலகமயமாதலின் ஏகபிரதிநிதிகள் மக்களுக்கு மறுப்பதால், வருடம் 5.5 கோடி பேர் கொல்லப்படுகின்றனர். அதாவது நிமிடத்துக்கு 95 பேர் கொல்லப்படுகின்றனர். ஐந்து வயதுக்கு உட்பட்ட 1.2 கோடி குழந்தைகளை, துடிதுடிக்க, மூலதனம் என்ற சுதந்திர ஜனநாயகத்துக்காகவும் சுதந்திரத்தின் வெற்றிக்காவும் வருடாந்தரம் பலியிட்டுக் கொன்று புதைக்கின்றனர்.


 மனிதர்களின் அடிப்படையான சமூகத் தேவைகள் சிலரின் நலன் சார்ந்து மறுக்கப்படுவதால், வருடாந்தரம் கோடிக்கணக்கான மக்கள் இயற்கையாகவே கொல்லப்படுகின்றனர். இவை இயற்கை மரணங்கள் அல்ல. ஆனால் அப்படித்தான் இன்றைய சமூகக் கட்டமைப்பு நியாயப்படுத்தி, நீடிக்கின்றது. மூலதனம் நடத்தும் இந்த மனிதப்படுகொலைகளை, கௌரவமான முறையில், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் பெயரில் இவற்றை எல்லாம் இயற்கை மரணங்களாக முத்திரை குத்திப் புதைக்கின்றனர். இவை எல்லாம் உலகெங்கும் ஜனநாயகபூர்வமாக மக்களின் பெயரில் தெரிவு செய்யப்பட்ட அரசுகளின் மேற்பார்வையின் கீழ், அன்றாடம் நடக்கின்றது. இந்த மனிதப் படுகொலைகளை நடத்தும் அரசுகளை, ஜனநாயகம் என்ற பெயரில் மக்களின் பெயரில் மூலதனம் தெரிவு செய்கின்றது. மனிதனின் அடிப்படைத் தேவையை மறுக்கும் உலக பன்னாட்டு மூலதனத்தின் சூறையாடும் உலகளாவிய ஜனநாயகக் கொள்கையால்தான், வருடாந்தரம் கோடிக்கணக்கான மக்கள் தம் உயிரை மூலதனத்துக்காக பலியிடுகின்றனர். உலகமயமாதல் என்னும் மூலதனக் குவிப்புக் கொள்கையால், நேரடியாக வருடாந்தரம் பல்வேறு காரணங்களால் கொல்லப்படும் 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் சுதந்திரமான உயிர்வாழும் உரிமையை இட்டு, இந்த ஜனநாயகத்தைப் போற்றும் யாரும் அக்கறைப்படுவதில்லை. மரணங்களை இயற்கையானதாகக் காட்டி வக்கரித்து கிடக்கின்றனர்.