06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

முன்னுரை : உலகமயமாக்கம் என்பது அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையுமே ஆதாரமாகக் கொண்டது

நா ம் எப்படி இருந்தோம், எப்படி இருக்கின்றோம்,  எப்படி இருக்கப் போகின்றோம் என்பதை உலகமயமாதல்  ஒவ்வொருவர் முன்னாலும் கேள்வி எழுப்புகின்றது. உலகமயமாதல் உலகில் உள்ள அனைத்தையும் ஒற்றைப் பரிணாமத்தில் கட்டமைக்கின்றது.

சுதந்திரச் book _2.jpgசந்தையும், சுதந்திர வாணிபமுமே அனைத்துக்குமான சமூக அடிப்படையாகிவிட்டது. அதாவது மனித உழைப்பையும், வாழ்வையும் சூறையாடுவதே உலகமயமாதல். இதனடிப்படையில் தனிமனித சமூக அமைப்பே உலகம் என்ற கோட்பாட்டு முதன்மை பெற்று, உலகில் உள்ள அனைத்தையும் தனிமனித நலனை மையப்படுத்தி அழிக்கின்றது. இதன் மூலம் அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையுமே மனிதருக்கிடையிலான ஒரேயொரு சமூக உறவாக்கிவிடுகின்றது. இதன் மூலம் சமூக நலனுக்கு எதிரான தனிமனித நலன் என்பது, உலகின் அனைத்துச் செல்வமும் ஒருவனின் தனிப்பட்ட சொத்தாக மாறும் வக்கிரத்தை அடிப்படையாகக் கொண்டே உலகமயமாதல் இயங்குகின்றது.


 நிலப்பிரபுத்துவச் சமூக அமைப்பில் மன்னர்களும், கோயில்களும் நாட்டின் அனைத்துச் செல்வத்தையும் தமதாக்கும் வகையில், மக்களைத் தனக்குச் சேவகம் செய்யும் ஒரு சமூக அமைப்பை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. உலகமயமாதலோ ஒரு தனிமனிதனிடம் உலகத்தின் அனைத்துச் செல்வமும் குவிக்கப்படுவதை அடிப்படையாகக் கொண்டு அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும், காட்டுமிராண்டித் தனத்தையும் சமூக உறவாக்குகின்றது. உலகில் உள்ள மக்கள் வளர்ப்பு மந்தைக்குரிய நிலைக்கு தரம் தாழ்ந்து, அடிமைகளாக வாழும் இழிநிலையை உருவாக்குகின்றது. குவிந்து வரும் செல்வத்துக்கும், அதைச் சுற்றி உள்ள மனித விரோத லும்பன்களுக்கும் சேவை செய்பவர்களாக, மக்களின் வாழ்வு ஒழுங்கமைக்கப்படுகின்ற உலகளாவிய நிகழ்ச்சிப் போக்கு சார்ந்த சமூக உறவுதான் உலகமயமாதல்.


 மனிதக் கலைகள், மனித இயல்புகள், மனித அறிவுகள், மனிதப் பண்பாடுகள், மனித மொழிகள், மனித கலாச்சாரங்கள், மனித நாகரிகங்கள்.... என அனைத்தும் மனித உழைப்பு சார்ந்து உருவாகின. இந்த மனித வரலாற்றின் பன்மைத் தன்மைகளையே உலகமயமாதல் மறுதலிக்கின்றது. இவற்றைப் படிப்படியாக அழித்தொழிக்கின்றது. மனித இனம் கடந்து வந்த கரடுமுரடான நீண்ட பாதைகளில், பல மனிதச் சிதைவுகளைக் கண்ட போதும் இன்று மனித இனம் காணும் அழிவுகள் மிகப் பிரம்மாண்டமானது. அது இயற்கை முதல் மனித உயிர்கள் வரை எதையும் விட்டு வைக்கவில்லை. வளர்ப்பு மந்தைக்குரிய அடிமைத்தனத்தையும், மிருகத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் உலகமயமாதல் தனது பண்பாக்கி, அதையே மனித இயல்பாக்குகின்றது. இப்படிச் சூறையாடும் முதலாளித்துவமும், அதன் ஆன்மாவாக உள்ள ஜனநாயகமும் வக்கிரம் பிடித்த நிலையில், மனித இனத்துக்கு எதிராகவே தன்னையும் தனது ஆன்மாவையும் வெளிப்படுத்தி பேயாட்டம் ஆடுகின்றது. இதையே மார்க்ஸ் வார்த்தைகளில் கூறுவதானால் அவை உரிமைகளை விட்டுவிட்டு அடிமைத்தனத்தை மட்டும்,  சமூக உறவுகளின் பண்புகளை விட்டுவிட்டு மிருகத்தனத்தை மட்டும், பண்பாட்டை விட்டுவிட்டு காட்டுமிராண்டித்தனத்தை மட்டும் வெளிப்படுத்துகின்றன. தனிமனித சொத்துரிமையை மனித இனத்துக்கு எதிராகவே, நிலை நிறுத்தும் மூலதனத்தின் வேட்கை எல்லையற்றது. மற்றொருவனிடம் கடைசித் துளியாக எஞ்சியுள்ள சுய மனித உழைப்பும், தனிச் சொத்துரிமையும் உள்ளவரை, பேயாட்டம் ஆடுவதை மூலதனம் நிறுத்திவிடப் போவதில்லை.


 மனித இனம் வரலாறு தெரிந்த காலம் முதல் நடந்த அனைத்துப் போராட்டங்களும், வர்க்கப் போராட்டங்களாகவே இருந்துள்ளது. இந்த வர்க்கப் போராட்டம் என்பது மனித உழைப்பைச் சுரண்டியவனுக்கும், சுரண்டப்பட்டவர்களுக்கும் இடையிலானதாக இருந்துள்ளது. இதற்குள் தான் நீதி, ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் முதல் ஜனநாயகம் வரை அனைத்தும் குதியாட்டம் போடுகின்றது. உலகமயமாதல் இதற்கு வெளியில் எந்தவிதத்திலும் தன்னைத் தகவமைத்துவிடவில்லை. இதைச் சுரண்டலுக்கு அப்பாற்பட்ட முற்போக்கான ஒன்றாகத் திரித்தும் புரட்டியும் காட்டும் சந்தர்ப்பவாத உலகமயமாதல் ஆதரவு அறிவாளிகளும் இருக்கின்றார்கள். அவர்கள் உலகமயமாதலை முதலாளித்துவத்தில் இருந்தும் வேறுபட்ட ஒன்றாகவே காட்டமுயல்வதன் மூலம், உலகமயமாதலை எதிர்புரட்சிகர வழிகளில் பாதுகாக்க முனைகின்றனர். ஆனால் முதலாளித்துவப் புரட்சிக்குப் பிந்திய ஒரு சமூக அமைப்பில் நீடித்த இயங்கியல் போக்கில் இருந்து, உலகமயமாதல் எந்த விதத்திலும் தன்னை மாற்றிக் கொண்டதில்லை. உலகமயமாதல் முதலாளித்துவத்தின் ஒரு நீட்சியாக, அதன் கொடூர வடிவங்களில் ஒன்றாகவே தொடருகின்றது. வர்க்கப் போராட்டத்தினால் முதலாளித்துவம் கடுமையான உள் முரண்பாட்டையும், வெளி முரண்பாட்டையும் தொடர்ச்சியாகச் சந்தித்தது, சந்தித்து வருகின்றது. முதலாளித்துவத்தின் வளர்ச்சி, அதாவது சொத்துகளைக் குவிப்பது படிப்படியான ஒரு சீரானதும், சீரற்றதுமான குறுக்குநெடுக்கு பாதைகள் ஊடாகவே கடந்து வந்தது. இதன் தொடர்ச்சியில் வர்க்கப் போராட்டங்கள் முன்பைவிட கூர்மையாகியுள்ள இன்றைய நிலையில், அது அமைப்பு ரீதியான பலத்தைக் கொண்டிருக்காத நிலையில், முதலாளித்துவம் முன்பைவிட வேகமாக மூலதனத்தைக் குவிக்க தொடங்கியுள்ளது. இதன் சிறப்பான, குறிப்பான வடிவமே  உலகமயமாதல் ஆகும்.


 இந்த உலகமயமாதல் மனித இனத்துக்கு எதிரான ஒரு சமூக விரோதியாக, ஒரு குற்றவாளியாக எப்படி செயல்படுகின்றது என்பதை விளக்குகிறது இந்த நூல்.


 மறுபக்கம் எனது இந்த முயற்சி கடுமையான போராட்டத்தின் ஊடாகவே நடத்தவேண்டியுள்ளது. சமூக அடித்தளங்கள் அற்ற நிலையில், சமூக ஆதரவு அற்ற நிலையில் தனிமனிதனாகப் போராடும் வாழ்க்கை என்பது, மிகவும் துயரமிக்கதாக உள்ளது. ஈழத் தமிழர் மத்தியில் அன்னியமாகியுள்ள ஒரு நிலையில், சமூக முன்னெடுப்புகளையும், சமூக அங்கீகாரங்களையும் பெறமுடியாத ஒரு நிலையில், உளவியல் ரீதியான நெருக்கடிகள் முதல் வாழ்வுக்காகவும் போராட வேண்டியுள்ளது. நூல்களை வெளிக் கொண்டு வரவும், எனது குடும்ப வாழ்வுக்காகவும் நானே கடுமையாக உழைத்து வாழவேண்டிய நிலையில் உள்ளேன். இந்த நிலைமையைப் புரிந்து கொண்டவர்களாக கூறக் கூடியவர்கள் கூட, எனது ஒரு நூலை வாங்கி ஆதரவு தருவதில்லை. நான் மரணித்தால் 100 இரங்கல் அஞ்சலிகளைக் கூட இவர்கள் வெளியிட்டு விடுவார்கள். ஆனால் எனது நூலின் பத்து பிரதியைக் கூட இவர்களிடையே விற்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகவே உள்ளது. நூலை வெளியிடவே உழைப்பின் ஒரு பகுதியைப் பயன்படுத்தும் ஒரு நிலையில், நூலை விற்று அதை மீட்க முடியாத போது புதிய வெளியீட்டுக்காக மீண்டும் உழைக்க வேண்டியுள்ளது.


 இந்த நிலையில் சாதியம், கலாச்சாரம், இலக்கியம், மலையக மக்கள், இலங்கை முஸ்லீம்கள், இலங்கை இடதுசாரிய வரலாறு மீதான விமர்சனம் என்று பலதுறை சார்ந்த பல பக்கக் குறிப்புகளை அன்றாடம் தொகுத்துள்ளேன். இதை அடிப்படையாகக் கொண்டு அவற்றை நூலாக்க முடியாத அளவுக்கு, இதற்கான நேரத்தை ஒதுக்க முடியாத நிலையில் உள்ளேன். முழுநேரமும் எழுத்துப் பணியில் ஈடுபடுவதன் மூலம் தான் இதைப் பூர்த்தி செய்யமுடியும், ஆனால் அதற்கான சமூக அடிப்படையின்மை, உளவியல் ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. சமூக நலன் அடிப்படையில் காலத்தைச் செலவு செய்து சேகரித்த குறிப்புகள் கூட, எனது கடின உழைப்பைத் தாண்டி வீணாகிவிடுமோ என்ற அச்சம், இயல்பாகவே மிக வேதனையைத் தரக்கூடியது. எட்டு மணி நேரம் கட்டாயம் உழைத்து வாழவேண்டிய நிலையில் இருந்தும், மற்றொரு எட்டு மணி நேரம் இதற்காக உழைக்கும் நிலையில் இருந்தும், சமூக ஆதரவின்மையால் எனது உழைப்பின் பலனை முழுமையாக வெளிக் கொண்டு வரமுடியாத நிலையில் உள்ளேன். அத்துடன் சமகால சமூக நிகழ்ச்சிகள் மீதும் தொடர்ந்து கருத்தை முன்வைப்பது மிக அவசியமானதாக உள்ளது. இதனால் உயிர் ஆபத்துடன் கூடிய அச்சுறுத்தல் பின் தொடரும் நிலையில், போராட்டம் என்பது மேலும் கடுமையானதாக மாறுகின்றது. இந்தக் கடுமையான பல தொடர் நெருக்கடியான நிலைமையின் ஊடாகவும், எனது தனிப்பட்ட வாழ்வை இதற்காக முழுமையாக அர்ப்பணித்த நிலையில் தான், இந்த நூல் உங்களுக்கு கிடைக்கின்றது.  

    
 இயல்பானதும் இயற்கையானதுமான மனிதப்  போராட்டத்தில், எல்லையற்ற நீடித்த வரலாற்றில் நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் என்று சிந்திக்கும் ஒவ்வொருவரும், மக்களின் வாழ்க்கை என்ன? என்ற ஒரு பரந்த தளத்தில் உலகைப் பகுத்தாராயக் கற்றுக் கொள்வதும், அதற்காகப் போராடுவதுமே மிக உயர்ந்த மனித ஒழுக்கமாகும். உலக மக்களுக்காக, நாம் அவர்களுடைய அன்றாட வாழ்வில் இணைந்து, ஒரே சமூக அமைப்பாகப் போராடுவது தான் உயர்ந்த ஒரு ஜனநாயகமாகும். இதை அடிப்படையாகக் கொண்டே லெனின் மனித ஒழுக்கத்தின் சிறந்த கூறுகளே இலட்சியங்கள் என்றார். மற்றவனைப்பற்றி அக்கறைப்படாத இலட்சியங்கள், ஒழுக்கக்கேட்டின் மிக மோசமான பண்புக் கூறாகும். இது சமூக விரோதத் தன்மை கொண்டது. தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைப்படும் ஜனநாயகமும், அதற்கான சுதந்திரமும் எப்போதும் மற்றவனுக்கு அதை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டது. உண்மையில் ஜனநாயக விரோதத்தின் மொத்த ஆன்மாவே முதலாளித்துவம் தான். இதற்கு மாற்று எதுவும் உலகத்தில் கிடையாது. மனித சமூக சாரம் என்பது, தனிமனித விருப்பங்கள், அவனின் தனிப்பட்ட உணர்வுகள் அல்ல. மாறாக, மனிதர்க்கு இடையிலான சமூக உறவுகளே மனித சமூக சாரமாகும். உலகமயமாதல் இதைத்தான் மறுதலிக்கின்றது.


 உண்மையான ஜனநாயகம் என்பதும், உண்மையான சுதந்திரம் என்பதும், மக்கள் பற்றிய பொதுவான சமூக நடைமுறைகளில் இருந்துதான் தெரிந்து கொள்ளமுடியும். அலங்காரமான வார்த்தை ஜாலங்களாலோ, ஏமாற்றுக்களாலோ எதையும் எதார்த்த வாழ்வின் மீது மெய்ப்பித்து விட முடியாது. மாவோ கூறியது போல் ""உலகத்திலே காணப்படும் எல்லாப் பொருட்களைக் காட்டிலும் மக்கள் தாம் விலைமதிப்பில்லாதவர்கள்; உயர்ந்தவர்கள்.'' இதைத் தாண்டி உலகத்தில் யாரும் எதையும் படைக்க முடியாது. மக்கள் பற்றிய அடிப்படைக் கோட்பாடுதான், மனித நாகரிகத்தின் உயர்வு பற்றி பேசுவதற்குரிய ஒரேயொரு சமூக அடிப்படையாக உள்ளது. இது மனித சமூக சாரத்தை அடிப்படையாகக் கொண்டது.


 இன்று மனித உழைப்பின்றி யாரும் உயிர்வாழ முடியாது. ஆனால் உழைப்பவனுக்கு உண்ண உணவு இல்லை. உழைப்பவன் இயற்கையான நீரைக் கூட குடிக்கும் உரிமை மறுக்கப்படுகின்றது. நீர் கூட சந்தைப் பொருளாகிவிட்டது. இவனுக்குச் சுதந்திரம், ஜனநாயகம் என எதுவும் இல்லை. இந்த அமைப்பால் உன்னதமானதாகக் கூறப்படும் எதையும், உழைப்பவன் பெறமுடியாது. யார் உழைப்பதை மறுக்கின்றானோ, யார் உழைப்பை இழிவானதாகக் கருதுகின்றானோ, அவன்தான் உழைப்பினால் கிடைக்கும் அனைத்து உற்பத்தியையும் நுகர்கின்றான். யார் உழைப்பவனை இழிவாக்கி அவர்களது உழைப்பைத் தனதாக்குகின்றானோ, அவனுடைய இழிவான வாழ்க்கை முறைமை தான், உலகின் உன்னதமான நாகரிகமாகி விடுகின்றது. சமுதாயத்தில் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லாத இன்றைய எல்லா  நிலையிலும், கட்டமைக்கப்படும் ஜனநாயகப் பீற்றல்கள் அனைத்தும், உழைப்பவனின் ஜனநாயகத்தை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டது. அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் ஒரு கருதுகோலேயல்ல அல்லவா? இதற்கு மாறாக ஒருவனுக்கு ஜனநாயகம் இல்லாதபோதுதான், மற்றொருவனுக்கு ஜனநாயகம் இருக்கும். இதுவே இன்றைய எதார்த்தம். இதையே உலகமயமாதல் தனது அடித்தளமாகவும் ஆதாரமாகவும் கொள்கின்றது.


 இப்படி உருவாகும் ஜனநாயகத்தின் மூலம் உழைக்கும் மக்களின் உழைப்பைச் சுரண்டியே அன்றாடம் கொழுக்கும் உலகமயமாதல், உழைக்கும் மக்களின் அடிப்படையான சமூகத் தேவைகளைக் கூட மறுக்கின்றது. உழைக்கும் மக்களை இழிவாகக் கருதும் தனிமனித சமூக உருவாக்கமே, உலகமயமாதலின் உயிர் நாடியாக உள்ளது. இங்கு ஜனநாயகம், சுதந்திரம் என எதுவும் மக்களுக்குக் கிடையாது. இந்த உலகமயமாதலின் வக்கிரத்தை தெளிவாகப் புரிந்து கொள்ள, உலகவங்கி சீனாவுக்கு வழங்கிய விசேட கடன் ஒன்று, அந்த மக்களின் ஆயுளைக் குறைக்கும் வழிகாட்டுதல் நிபந்தனையுடன்  வழங்கப்பட்டது. உலக மக்களின் சராசரி ஆயுளைவிட சீனா மக்களின் சராசரி ஆயுள் இரண்டு வருடம் அதிகமாக இருப்பதை மூலதனத்தால் சகித்துக் கொள்ள முடியவில்லை. இரண்டு வருடங்கள் சராசரி ஆயுளைக் குறைக்கக் கோரி உலக வங்கி உத்தரவு இட்டதுடன், அதற்கும் கடன் வழங்கியுள்ளது. உணவு மாற்றத்தின் ஊடாக இயற்கை மரணத்தை அதிகரிக்கக் கோரி, எந்த உணவை அதற்காக வழங்க வேண்டும் என்ற அடிப்படை  நிபந்தனையுடன், அதுவும் இறக்குமதி செய்தே உணவு வழங்க வேண்டும் என்ற இரண்டாவது நிபந்தனையுடன் கடன் வழங்கியது. இது தான் உலகமயமாதல்.


 மற்றொரு உதாரணத்தைப் பார்ப்போம். 1980இல் உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரும், அமெரிக்கக் கருவூலத் துறையின் தலைவருமான லாரன்ஸ் சம்மர்ஸ், 1992ஆம் ஆண்டு உலக வளர்ச்சி அறிக்கையை எழுதும் பொறுப்பில் இருந்தார். இவர் 1991இல் ஒரு கடிதத்தை உலகவங்கியின் ஊழியர்களுக்கு வழிகாட்டுவதற்காக எழுதினார். அதில் அவர், குறைந்த வளர்ச்சி உடைய நாடுகளுக்கு அசுத்தமான தொழிற்சாலைகளை மாற்றுவதை உலக வங்கி ஏன் ஊக்குவிக்கக்கூடாது? என்று கேள்வியெழுப்பி வழிகாட்டினார். அக்கடிதத்திலேயே அவர்  மேலும் குறிப்பிட்டதாவது,  

 

 1. மூன்றாம் உலக நாட்டில் கூலி குறைவானது. மாசுக் கேட்டினால் நோய் மற்றும் மரணம் ஏற்படின் குறைந்த செலவே ஏற்படும்.


 2. மூன்றாம் உலக நாட்டில் குறைந்த மாசுக்கேடே ஏற்பட்டுள்ளது. இதனால் மாசை அங்கு நகர்த்துவது சிறப்பானது. ஏனெனில் அங்கு வீசும் காற்று லாஸ் ஏஞ்சல்ஸை விட உயர்தரமானது.


 3. ஏழைகள் ஏழைகள் தான். ஆகவே சுற்றுச்சூழல் பற்றி கவலைப்படுவது அவர்களுக்குச் சாத்தியமில்லை. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணம் 200 சதவீதமாக இருக்கும் போது, மார்பு புற்றுநோய்க்கு இரசாயன நஞ்சு காரணம் என்று கவலைப்பட மாட்டர்கள் என்றார். உலக வங்கியின் கொள்கை இப்படித்தான் உலக மக்களுக்கு எதிராக வகுக்கப்படுகின்றது.


 இந்த உலகவங்கியும் அதன் வழிகாட்டலுக்கு உட்பட்டு மூன்றாம் உலக நாடுகளுக்கு வழங்கிய கடனுக்காக 2001ஆம் ஆண்டு வட்டியாகவும் கடன் மீள் கொடுப்பனவாகவும் 38,000 கோடி டாலர் ஏழைகளின் பிணங்களின் மேலாகவே பறித்தெடுத்தனர். இப்படி உலகில் உள்ள அனைத்தையும் அழித்து கைப்பற்றும் இந்த உலகமயமாதல் என்ற அமைப்பு வடிவமே சர்வாதிகாரமானது. இங்கு ஜனநாயகம், விவாதம் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாசிச சமூக அமைப்பில் சுரண்டும் வடிவம் சார்ந்த நடைமுறை கோட்பாட்டையே ஆதாரமாகக் கொள்கின்றது. தேச எல்லைகளை பலாத்காரமாக அழித்தொழிக்கும் சட்டதிட்டங்களில் கையெழுத்திட்டபோது, மூன்றாம் உலக நாடுகளுக்கு அதில் என்ன இருக்கின்றது என்று தெரியாத கைநாட்டுகளாக கையெழுத்திட்டனர். அதில் என்ன இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே கையெழுத்திட்டனர். அவர்கள் சொல்வதை இவர்கள் செய்யவேண்டும். இப்படித் தான் உலகமயமாதலின் அடிப்படை கோட்பாடு உருவானது. இந்த உலகமயமாதல் உலக ஒழுங்கை அமல் செய்யப் போவதையிட்டு, எந்த நாடும் மக்களிடம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பைக் கூட நடத்தவில்லை. ஏன் இது பற்றி பாராளுமன்றங்களில் விவாதங்கள் கூட நடத்தப்படவில்லை. ஜனநாயகப்பூர்வமான எந்த அடிப்படையும் இன்றி, சர்வாதிகாரமாக ஏகாதிபத்தியங்களால் திணிக்கப்பட்டன. பாராளுமன்றங்களில் இந்தப் பொருளாதாரக் கொள்கை மீது ஒரு வாக்கெடுப்பு கூட நடத்தப்படவில்லை. மேல் இருந்து கீழாக ஒரு பாசிசச் சர்வாதிகாரக் கட்டமைப்புத் தான் ஏகாதிபத்திய நலன்கள் சார்ந்து உலகமயமாதலாக பரிணமித்தது. 


 இது தேச எல்லைகளையே அழிக்கின்றது. அனைத்து வகையான சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும் அழிக்கின்றது. உலகளவில் தனிமனிதனை அடிப்படையாகக் கொண்ட, மனித விரோதக் கூறுகளைத் தக்கவைத்து ஒருங்கிணைக்கின்றது. மக்களின் சமூகப் பொருளாதாரப் பாரம்பரியக் கூறுகளை ஈவிரக்கமின்றி குறிவைத்து அழிக்கின்றது. பன்மைத் தன்மை வாய்ந்த மனிதனின் சமூக அறிவியல் கூறுகளை அழிக்கின்றது. இப்படி மனிதனின் வாழ்வுடன் தொடர்புடைய அனைத்தையும் விழுங்கி ஏப்பமிட வழி வகுப்பதுதான் உலகமயமாதல் ஒப்பந்தம்.


 குவியும் மூலதனத்தின் உயர்ந்தபட்ச நலன் என்ற ஒரேயொரு வரையறைக்குள், அனைத்தையும் அழித்தொழித்து விடுகின்றது. இந்த உலகமயமாதல் என்பது திடீரென இந்தச் சமூக அமைப்பில் உதித்தது அல்ல. மாறாக இது முதலாளித்துவ அமைப்பின் ஒரு நீட்சியாகும். இதை மார்க்சியம் தனது புரட்சிகரமான நடைமுறை சார்ந்த வரலாற்றுப் பாதையில் மிகத் தெளிவாக எடுத்துக்காட்டி வந்துள்ளது. லெனின் இது பற்றிக் கூறும் போது தெளிவாகவே நிதி, சொத்துரிமை மற்றும் பகுதி அளவு உற்பத்தி ஆகியவற்றில் தொழிலின் அனைத்துக் கிளைகளிலும் ஒரு தனிநாட்டில் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் ஏகபோகங்கள் எடுத்துக் கொள்கின்றன என்றார். தனிப்பட்ட நபர்களின் கையில் குவிந்துள்ள மூலதனம் என்றுமே தனக்குள் தான் முடங்கிக் கொள்வதில்லை. மாறாக உலகில் உள்ள மனிதர்களின் உழைப்பு படைக்கும் அனைத்துவிதமான உற்பத்தியையும், தனதாகக் கைப்பற்றும் வரை ஓய்வின்றி இயங்குகின்றது. இது தேசத்தின் எல்லைகளை மட்டுமின்றி, மற்றொரு பூமியில் உழைக்க ஓர் உயிரினம் இருந்தால் அங்கும்கூட  சென்றுவிடும்.


 மனித உழைப்பின் இறுதி மூச்சுவரை மனிதனைச் சுரண்டுவதை மூலதனம் நிறுத்துவதில்லை. மார்க்ஸ் தெளிவாக ஏங்கெல்ஸ்க்கு எழுதிய கடிதத்தில் இதை எடுத்துக் காட்டுகின்றார். ஒரு துண்டுச் சதை, ஒரு நரம்பு, ஒருதுளி இரத்தம் இருக்கும் வரை கதையில் வருகின்ற உயிருள்ள மனிதனின் இரத்தத்தை உறியும் பணம் போன்று, மூலதனமானது அவனை முழுதும் சுரண்டாமல் அவன்மீது தான் கொண்ட பிடிப்பைத் தளர்த்தாது என்றார். உலகில் பேய் பற்றிய கற்பனையான புனைவுகள் எதுவாக இருந்தாலும், எதார்த்தத்தில் எது பேயாக இருக்கின்றதோ அதை மார்க்ஸ் தெளிவாகவே படம் படித்துக் காட்டுகின்றார். அந்தப் பேய், தனிநபர்களின் கையில் குவிந்து கிடக்கும் மூலதனமாகும். அந்தப் பேய் கோடானுகோடி மக்களின் வாழ்வை அன்றாடம் பலியெடுக்கும் மூலதனமேயாகும்.

 
 இந்த மூலதனப் பேய் மனித உழைப்பை உயர்ந்த பட்சம் சுரண்டுவதற்கு இசைவாகவே, எப்போதும் தொழில் நுட்பத்தை நோக்கி ஆடுகின்றது. மனிதனை உயர்ந்தபட்சம் சுரண்டுகின்ற அதிநுட்பமான தொழில் நுட்பம் நோக்கி மூலதனம் பேயாட்டம் போடும் போது, இதைத் தொழில்நுட்பப் புரட்சியாகக் காட்டி சிலர் உலகமயமாதலை ஆதரிக்கின்றனர். இது உருவாக்கும் சமூக அமைப்பை, முதலாளித்துவத்தில் இருந்து விலகிய ஒரு புதிய சமூக அமைப்பாகச் சிலர் திரித்துக் காட்டுகின்றனர். உலகமயமாதல் உந்துதலுக்கு உதவும் உயர்ந்த தொழில் நுட்பம் ஒரு புரட்சியாக இருப்பதால், இந்தப் புரட்சியை ஆதாரமாக கொண்டு மக்கள் மேலான சுரண்டல் அமைப்பை ஆதரிக்கின்ற கோட்பாடுகளை அறிவுத்துறையினர் சமூகத்தின் மேல் நஞ்சாக செலுத்துகின்றனர். சமூக அவலத்தை  திரித்துக் காட்டுகின்றனர். இதை மார்க்சியம் முன்பு எதிர்கொள்ளாத ஒன்று என்றும், இது புதிதான ஒன்று என்றும் சத்தியம் செய்கின்றனர். உலகமயமாதலை மார்க்சிய வரையறைக்குள்ளேயே பகுத்தாராய முடியாது என்று சத்தியம் செய்கின்றனர். புதிய தத்துவங்கள் அவசியம் என்கின்றனர். இந்தப் போக்கு உலகமயமாதலை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி பற்பல கோட்பாடுகள் மூலம், உலகமயமாதலின் எதிரணியில் நின்று மக்களின் வாழ்வில் சிறிது சிறிதாக நஞ்சிடுகின்றனர். இந்த கும்பல்களில் யாரும் மக்களுக்காக நடைமுறையில் வீதியில் இறங்கி போராடுபவர்கள் அல்ல.


 தொழில் நுட்பம் என்பது உழைப்பின் சுரண்டலை தீவிரப்படுத்தவே உருவாக்கப்படுகின்றது. இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டறியும் தனிநபர்கள், இக்கண்டுபிடிப்பு மூலம் தமது தனிப்பட்ட வாழ்க்கையில் பணத்தைக் குவிக்கும் வேட்கையில் இருந்துதான், இந்தப் புரட்சியை மக்களின் பிணங்களின் மேல் நடத்துகின்றனர். மக்களின் அடிப்படை வாழ்க்கையின் நலன்கள் என்ற அடிப்படையில், இந்தத் தொழில்நுட்ப புரட்சி மக்களுக்கு எதிரான நிலையில், எதிர்ப்புரட்சிகரப் பாத்திரத்தையே சமூக இயக்கத்தில் பங்காற்றுகின்றது. இந்த  மூலதனத்தின் வக்கிரத்தை மூலதனம் என்ற நூலில் எடுத்துக்காட்டும் மார்க்ஸ் ""உற்பத்தித் திறனைப் பெருக்குதல் வேண்டும். அதன் வாயிலாகச் செய்பண்டங்களின் மதிப்பை வீழ்த்துதல் வேண்டும். அதனால் தன் மிகை மதிப்பைப் பெருக்குதல் வேண்டும் ... செய்பண்டங்களின் மதிப்பை மலிவாக்கிப் பாட்டாளியையே மலிவாக்குதல் வேண்டும்'' என்று தெளிவுபடவே மூலதனத்தின் நோக்கத்தை எடுத்துரைக்கின்றார். தொழிலாளி வர்க்கத்தை மலிவாக்குவது மட்டுமல்ல, உற்பத்திக்குள்  உள்ள உழைப்பாளியை ஒழித்துக் கட்டவும், தொழில் நுட்பம் தயங்கவில்லை. மார்க்ஸ் கூறுவது போல் ""...ஒவ்வொரு முதலாளிக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. உழைப்பின் உற்பத்தித் திறனை வளர்ப்பதன் மூலமாகச் சரக்குகளின் விலைகளை மலிவாக்குதல் வேண்டும்.'' உழைப்பாளியின் உற்பத்தி திறனை வளர்ப்பதன் மூலம் அதிகம் சுரண்ட முடியும் என்பதால், தொழில் நுட்பம் முதன்மை பெறுகின்றது. மனித உழைப்பில் மனிதனின் ஒரு உறுப்பை இயக்குவதற்குப் பதில், அனைத்து உடல் உறுப்புகளையும் இயங்க வைத்து பிழிந்தெடுக்கும் கலைதான், உழைப்பின் மீதான மூலதனத்தின் தொழில் நுட்பம். மனித உழைப்புதான் தொழில் நுட்பத்தின் உயிர்நாடியாக இருக்கின்றது. ஆனால் தொழில் நுட்பம் மனிதனின் உழைப்பை இயந்திரமயமாக்கியதுடன், அதன் ஒருபாகமாக்கிச் சுரண்டும் ஒரு நுட்ப கருவியாக்கியுள்ளது. மறுபக்கம் சந்தையைப் போட்டி மூலதனத்திடம் இருந்து கைப்பற்றும், உத்தியிலும் கூட நவீன தொழில் நுட்பத்தை புகுத்துகின்றனர்.


 தொழில்நுட்பம் சார்ந்து உற்பத்திக் கருவிகள், சுயமாக மனிதஉழைப்பு இன்றி தன்னியல்பாக இயங்கக் கூடியவையல்ல. மார்க்ஸ் மூலதனத்தில் கூறுவது போல் "".... இயந்திர சாதனங்களைக் கொண்டு நடத்தப்படும் தொழில்களின் பெருக்கமும், புதிய உற்பத்திக் கிளைகளில் இயந்திர சாதனங்களின் படையெடுப்பும் தொழிலாளர் வர்க்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்தவையாய் இருந்தன. சமுதாயத்தில் வர்க்கத்தின் தோற்றங்களின் பின்னால் வர்க்கப் போராட்டம்தான் உற்பத்தி சக்தியின் வளர்ச்சியை உந்தித் தள்ளுகின்றது. எவ்வளவுக்கு எவ்வளவு வர்க்கப் போராட்டம் கூர்மையடைகின்றதோ, அந்தளவுக்குச் சமுதாயம் வர்க்க இருப்பைப் பாதுகாக்க உற்பத்தி சக்தியில் நவீனத்தைப் புகுத்துகின்றது. இந்த நவீனத் தொழில் நுட்பத்துக்கு எதிரான வர்க்கப் போராட்டம் மற்றும் இடைஞ்சல் இல்லாது இருப்பின் தொழில் நுட்பம் பாய்ந்து சென்று விடுமா? என்று மார்க்ஸ் கிண்டலாகவே தொழில்நுட்பப் புரட்சி அடிவருடிகளைக் கேலி செய்கின்றார். முதலாளித்துவ அமைப்பில் அதன் நாடி நரம்பாகவே செயல்படும் தொழில் நுட்பப் புரட்சி, வர்க்கப் போராட்டங்களின் எதிர் வினையாகத்தான் உயிர்  பெற்றெழுகின்றது. இது மனிதகுலத்துக்கு எதிராகவே, மனித உழைப்பைச் சிறுமைப்படுத்தும் நோக்கில் களத்தில் குதிக்கின்றது. இதன் மூலம் மனிதனின் தன்மான உணர்வையே நலமடித்து விடுகின்றது.


 மார்க்ஸ் மூலதனத்தில் கூறுவது போல் ""முதலாளிகள் எந்திரங்களைப் புகுத்துதல் பாட்டாளியின் வேலைநாள் நேரத்தை எல்லை மீறி நீடிக்கும் விளைவை உண்டாக்குகின்றது. உழைப்பு முறையையும் சமுதாய உழைப்பு அமைப்பையும் தீவிரமாக மாற்றியமைக்கிறது. மூலதனம் செய்பண்டங்களின் உற்பத்தியிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றது முதலாளிகளின் இப்போக்கைப் பாட்டாளிகள் எதிர்த்தால் அவ்வெதிர்ப்பைத் தகர்க்க வேண்டிய படைக்கலங்களையும் வைத்திருக்கின்றது மூலதனம். இவ்விளைவுகளால் சமுதாயத்தில் முதலாளிகள் கனவிலும் புரிய முடியாததொரு பாட்டாளிக் கூட்டம் உருவாகின்றது அதுதான் வேலை தேடியலையும் பாட்டாளிக் கூட்டம்'' இதுவே இன்றைய எதார்த்தம். மக்கள் சொத்திழந்த நிலையில், உழைப்பை விற்கும் சந்தையில் குவிந்து கிடக்கின்றனர். விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் கையில் வரைமுறையின்றி சொத்துக்கள் குவிகின்றன. குவிந்து செல்லும் சொத்துக்களும் சரி, அதை இழக்கும் மக்கள் கூட்டமும் சரி, மனித வரலாற்றில் இன்று நடக்கும் வேகத்தில் என்றுமே நடந்தது கிடையாது. மிகப் பெரிய பஞ்சங்கள் கூட, இந்த வேகத்தில் இதைச் செய்துவிடவில்லை. தங்கம் தனது மதிப்பை சில பிரதேசங்களில் இழந்த போது கூட, இப்படி ஒரு சொத்துக் குவிப்பு நடக்கவில்லை. இந்தக் கொள்ளையை தொழில்நுட்பப் புரட்சி என்று போற்றிப் பூசிக்க, வாழ்வை இழந்து வரும் எந்த மக்கள் கூட்டமும், ஒருநாளும் முன்வராது.


 தொழில் நுட்பம் தன்னளவில் (மனித வரலாற்றில்) ஒரு புரட்சியாக இருந்தபோதும், உழைக்கும் மக்களின் வாழ்வுக்கு பயன்படுவதைவிடவும், மனித வாழ்வை மேலும் அவலமாக்கும் மூலதனத்தின் கைப்பொம்மையாகி, அதன் நுட்பக் கருவியாகி விட்டது. தொழில்நுட்பப் புரட்சி எதிர்ப்புரட்சிகரமான பாத்திரத்தையே, மனிதனின் சமூக வாழ்வில் எற்படுத்தி விடுகின்றது. தேச எல்லைகளையும் கடந்து மனிதனைச் சுரண்டும் ஒரு உறுப்பாகி விட்டது. உலகமயமாதலின் வரலாற்றில் தொழில் நுட்பம், ஒரு இழிவான சமூகப் பாத்திரத்தை மனித இனத்துக்கு எதிராகக் கையாளுகின்றது.


 இது உழைக்கும் பரந்துபட்ட மக்களின் அதிகாரத்துக்குப் பதில், ஒரு சிலரின் அதிகாரத்துக்கு ஏற்ற ஒரு சர்வாதிகார உறுப்பாகி விட்டது. இந்தக் கோட்பாட்டை மறுத்து நிற்கும் அறிவுத்துறையினர், தொழில்நுட்பப் புரட்சி என்று வாய்கிழிய குரல் கொடுத்து, புரட்சியின் விசுவாசமிக்க ஆதரவாளராக தம்மை இனங்காட்டிக் கொள்கின்றனர். எந்தப் புரட்சியும் உழைக்கும் மக்களின் வாழ்வுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டு, அவர்களின் வாழ்வை வளப்படுத்த வேண்டும். இதுதான் சமூகப் புரட்சி. அது இல்லாதவரை எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தையே மக்களுக்குப் பரிசளிக்கின்றது. இதனடிப்படையில் தொழில்நுட்பப் புரட்சி மனித இனத்துக்கு எதிரான நிலையில் செயலாற்றுவதால்,  எதிர்ப்புரட்சிப் பாத்திரத்தை வகிக்கின்றது. ஒரு தொழில்நுட்பப் புரட்சி கூட மக்களின் அதிகாரத்தில் மட்டும் தான் மக்களின் வாழ்வுக்குப் பங்காற்றுகின்றது. மார்க்ஸ் மூலதனத்தில் கூறியது போல் ""உற்பத்தித் துறைகள் மீது பாட்டாளிகளின் பொது அமைப்பு கட்டுப்பாடு செய்யவேண்டும் என்ற கருத்தை எதிர்க்கும் முதலாளித்துவச் சிந்தனையாளர்கள், சமுதாயம் முழுவதையும் அடிமைப்படுத்தும் ஒரு மாபெரும் தொழிற்சாலை அமைப்பாக மாற்ற விரும்புகின்றனர்.'' இதன் ஒரு சிறப்பான, எடுப்பான வடிவம் தான் உலகமயமாதல். உலகமயமாதலை ஏதோ ஒரு விதத்தில் ஆதரிக்கும் எல்லாவிதமான தர்க்க நியாயவாதங்களும், இதற்கு வெளியில் ஒரு மில்லிமீட்டர் கூட நகர்ந்துவிடுவதில்லை.     


 அமெரிக்க அரசின் முக்கியக் கொள்கை வகுப்பாளரும், முக்கிய மந்திரியுமாக இருந்த கொலின் பாவெல் நறுக்குத் தெரித்தது போல் உலகமயமாதலைப் பற்றி எடுப்பாகவே கூறிவிடுகின்றார். ""தனிச் சொத்துரிமையை மதிப்பது மனித கௌரவத்தின் அடையாளம்; இதில் சமரசம் செய்து கொள்வது கூடாது.'' இதுதான் உலகமயமாதலின் எடுப்பானதும், தெளிவானதுமான முரண்பாடற்ற ஒரு காட்சியாகும். மனித கௌரவம் தனிச் சொத்துரிமையை அங்கீகரிப்பதில் இருக்கின்றது. இதுதான் உலகமயமாதல் கொள்கையை வகுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிலை. இதுதான் தனிச் சொத்துரிமையை பாதுகாக்கும், அதன் கொள்கைகளை வகுக்கும் அனைவரினதும் நிலை. இதன் அடிப்படையில்தான் கொலின் பாவெல் உலகின் எல்லாவிதமான ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தின் உள்ளடக்கத்தை உலகமயமாதல் வரையறுக்கின்றது'' என்றார். அதை அவர் அழகுபடவே  ""சுதந்திரச் சந்தையும், சுதந்திர வாணிபமும் நமது தேசியப் பாதுகாப்புத் திட்டத்தில் முன்னுரிமை பெறுகின்றது'' என்றார். இதற்கு வெளியில் ஜனநாயகம் மற்றும் மனித சுதந்திரம் பற்றி இன்றைய சமூக அமைப்புக்கு வேறுபட்ட கோட்பாடுகள் எதுவும் கிடையாது.


 அறிவுத்துறையினர் என்று கூறிக் கொள்பவர்கள் உழைக்கும் மக்களின் ஜனநாயகத்தை மறுத்து, அவர்களின் சுதந்திரத்தை மறுத்தே கொக்கரிக்கின்றனர். இந்த அறிவுத்துறையினர் மக்களின் அடிமைத்தனங்களின் மேல்தான் சவாரி செய்கின்றனர். தங்களை மேதைக்குரிய நிலையில் தக்கவைத்துக் கொண்டு, சமூகத்தையே திரித்துப் புரட்டுகின்றனர். மாவோ கூறியது போல் ""மேதைக்கு அறிகுறி சராசரி அறிவை விட சற்று அதிகமான அறிவுடையதாகும். ஆனால் மேம்பட்ட அறிவு என்பது ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு சில மக்களையோ சார்ந்திருப்பது அல்ல. இது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக விளங்கும் ஒரு கட்சியைச் சார்ந்திருக்கிறது. ஒரு சரியான அரசியல் வழியையும் மக்களின் ஒட்டு மொத்தமான அறிவையும் சார்ந்திருக்கிறது...'' மக்களின் அறிவை மழுங்கடிக்கும், சமுதாயத்தின் உண்மைகளை திரித்துக் காட்டும் போக்கு எப்போதும் மக்கள் விரோதத் தன்மை கொண்டது. மக்களின் முதுகில் சவாரி செய்வதாகும். எதார்த்த உண்மைகளை அறிவியல்பூர்வமாக எடுத்துக்காட்டாது, திரித்துக் காட்டுகின்ற அறிவு மக்கள் விரோதத் தன்மை கொண்டது. உலகமயமாக்கலின் சுதந்திரச் சந்தைக்கும், சுதந்திர வாணிபத்துக்கும் காலாற சேவை செய்பனவாக உள்ளது.


 உலகமயமாதலின் ஆதாரவாளர்களும், அங்கும் இங்குமாகத் தம்மை இனம் காட்டும் உலகமயமாதலின் கள்ளக் குழந்தைகளும் இணைந்து செய்யும் மனித விரோத நடத்தைகளை, நாம் இன காணவேண்டியுள்ளது. உலகமயமாதலில் பல சாதகமான நல்ல அம்சங்கள் உண்டு என்று எடுத்துக் காட்டி (உதாரணமாக தொழில்நுட்ப புரட்சி), அதனால் உலகமயமாதலை எதிர்க்க முடியாது என்ற சந்தர்ப்பவாதப் பொறுக்கிகளையும் நாம் இனம் காணவேண்டிய வரலாற்றுக் கட்டத்தில் உள்ளோம். உதாரணமாக ஜெர்மனிய நாஜி கோயரிங் கூறியது போல் ""தலைவர்கள் தாம் விரும்பயபடி யெல்லாம் மக்களை ஆட்டுவிக்க முடியும்... நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். நாம் தாக்கப்படுகிறோம் என்று சொல்லுங்கள். சமாதானம் பேசுபவர்களுக்கு நாட்டுப்பற்று இல்லையென்றும், நாட்டை ஆபத்துக்கு உள்ளாக்குகிறார்கள் என்றும் தூற்றுங்கள். இந்தச் சூத்திரம் எந்த நாட்டிலும் வேலை செய்யும்.'' இந்த அணுகுமுறையைத்தான், உலகமயமாதலின் எல்லாக் கூறுகளிலும் மக்களுக்கு எதிராக கையாளுகின்றனர். மக்களை வெறும் மந்தைக் கூட்டங்களாக தம்பக்கம் அணிதிரட்டுகின்றனர். மனித அடிமைத்தனத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும், மிருகத்தனத்தையும் அடிப்படையாகக் கொண்ட சமூக உணர்வுகளை உலகமயமாதல் படைக்கின்றது. இதற்காக பொய்யையும், புரட்டையும் உள்ளடக்கிய பரபரப்புகளூடாக மனித அறிவையே மலடாக்குகின்றனர். சுயசிந்தனை முறையையும், கேள்வி கேட்கும் விமர்சன சுயவிமர்சன முறையையும் தகர்க்கின்றனர்.


 ""நான் விரும்பியதை அடையும் வரை
 என்னால் அமைதியாகச் செயல்பட முடியாது,
 நான் எதையும் என்றும் சுலபமாகக்
 கொள்வதில்லை, ஓய்வு ஒழிவின்றிப்
 பாடுபட்டாக வேண்டும்.
 எனவே நமது அனைத்தையும் இழக்கத் தயாராவோம்
 நமக்கு ஓய்வில்லை, ஒழிவில்லை, நாம் சோர்வறியோம்
 செயல்பாடோ அல்லது ஆழ்ந்த விருப்பமோ இன்றி
 மயான அமைதியில் அல்ல, மந்தகதியில் அல்ல.
 வலியென்னும் நுகத்தடியின் கீழே
 ஏக்கமோ தன்னைத்தானே நுணுகிப் பார்ப்பதோ இல்லை
 எனவே
 அந்த அபிலாசை, அந்தக் கனவு, அந்தச் செயல்
 நமக்கு நிறைவேறாத ஒன்றாகவே இருக்கட்டும்.''


 இது எதுவாக இருந்தாலும் மனித குலத்தின் விடுதலை என்ற உன்னதமான இலட்சியத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டியதை 1841ஆம் ஆண்டு ஒரு இலக்கியச் சஞ்சிகையில் மார்க்ஸ் கவிதை வடிவில் கூறியுள்ளதையே, நாம் எமது வழியாகக் கொண்டு போராடுகின்றோம். இந்த மண்ணில் ஒரு சொர்க்கத்தை படைக்க போராடுகின்றோம். இதுவே எமது இலட்சியம் மட்டுமல்ல அனைத்துமாக உள்ளது. இதுவே எனது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாக எனது ஆன்மாவாகவும் உள்ளது.
  லெனின் கூறியது போல் ""மடிமை, கவனமின்மை, துப்புரவின்மை, காலத்திட்பமின்மை, அமைதியிழந்த அவசரக் கோலம், செயலுக்கு பதில் விவாதத்தையும், வேலைக்குப் பதில் பேச்சையும், மாற்றிச் செய்யும் விருப்பம், எதையும் முழுமையாக செய்து முடிக்காமல், உலகில் உள்ள சகலத்தையும் செய்வதற்கான விருப்பம் படித்தவர்களின் இனப்பண்புகளாகும். விடாமுயற்சி, சலியாத உழைப்பு, எந்தப் பொருளையும் நூறு முறைகள் சோதனை செய்யவும் அவற்றை நூறு தடவைகள் திருத்திக் கொள்ளவும் தேவையான விருப்பம், உறுதி, திறமை, எது வந்தபோதிலும் இலட்சியத்தை அடைந்தே தீருவது இவை பாட்டாளி வர்க்கம் பெற்றிருக்கிற குணங்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் இந்த குணங்களே பாட்டாளி வர்க்கம் வெற்றியடையும் என்பதற்கு உறுதிகூறும்'' மனித குலத்தின் விடுதலைக்காக விடாமுயற்சியுடன், நாங்கள் கடுமையாகவே சமரசமின்றிப் போராடுவோம். எனது நூல் இந்த உணர்வுகளுடன்தான், உங்களை செயலுக்கான வழிகாட்டியாக அழைத்துச் செல்கின்றது.  


பி.இரயாகரன் - சமர்