06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்

மனிதன் கற்றுக் கொள்வதற்கு வரலாறு தந்துள்ள படிப்பினைகள், மனித அவலங்கள் ஊடாகவே எம்முன் பரந்து விரிந்து வீழ்ந்து கிடக்கின்றது. ஆனால் நாங்கள் அந்த யாழ்ப்பாணிய மேலாதிக்க வழியில் தான், அதுவும் அந்த குண்டுச் சட்டியில் தான் குதிரை ஓட்டுவோம் என்றே கங்கணம் கட்டி ஆடுகின்றனர். இதை அம்பலப்படுத்தும் வரலாற்றுத் தேவை எம் முன் மீண்டும் மீண்டும் எழுகின்றது. கருணாவின் பிளவும், அதன் பின் அண்மையில் கிழக்கில் இராணுவத்தின் மீள் ஆக்கிரமிப்புகளும் வெற்றி பெற்று வருகின்ற இன்றைய நிலையில், புலியெதிர்ப்புக் கும்பல் போடுகின்ற அரசியல் வேஷங்களும், அவர்களின் கூத்துகளும், யாழ் மேலாதிக்கத்தின் ஒரு நாற்றமடிக்கும் கோவணமாகவே, கிழக்கு மேலாதிக்கம் மாறுகின்றது.


யாழ் மேலாதிக்கம் என்றால் என்ன?


யாழ் மேலாதிக்கம் என்ற சொல்லை, தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதன்முதலில் பாவித்தவர்கள் நாங்கள். இது போன்று குறுந்தேசியம் போன்ற பல சொற்களை நாமே முதலில் பயன்படுத்திய போது, அதை சரியான அரசியல் போக்கில் தமிழ் மக்களின் சமூக பொருளாதார உள்ளடகத்தின் மீது பாவித்தவர்கள். அந்த வகையில் இந்த சொற்கள் ஆழ்ந்த அரசியல் அர்த்தத்துடன் தான் பயன்படுத்தினோம். எந்த மக்கள் இனத்தையும் பிளப்பதற்காகவோ, எந்தப் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவதற்காகவோ அல்ல. மாறாக மக்களின் ஐக்கியம், சரியான போராட்டம் என்ற உள்ளார்ந்த மக்கள் நலன் சார்ந்த நோக்கில் பயன்படுத்தப்பட்டது.


ஆனால் இந்த சொற்கள் கொண்டிருந்த சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, அதன் மூல வேர்களில் இருந்து வெட்டியெடுக்கப்படுகின்றது. பின் அவை திரிக்கப்பட்டு மிக மோசமான முறையில் சமூகங்களை பிளக்க, மேலெழுந்தவாரியாக வெற்றுச் சொற்கோவையாக பயன்படுத்தப்படுகின்றது. உலகெங்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடையிலான பரஸ்பர புரிந்துணர்வும், அவர்களுக்கு இடையிலான ஐக்கியம் என அனைத்தும் சிதைக்கப்படுகின்றது.


தமிழ் மக்கள் மத்தியில் இருந்த பிரதேசவாத பிளவை யாழ் மேலாதிக்கம் அகலப்படுத்திய போது, இதற்கு எதிராக ஐக்கியப்படுவதற்கு பதில் கிழக்கு மேலாதிக்கம் பிளவை மேலும் அகலப்படுத்தியது, அகலப்படுத்துகின்றது. கூறப்போனால் யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாகவே கிழக்கு மேலாதிக்கம் செயல்படுகின்றது. புலிகள் சிங்கள மக்களுடன் ஐக்கியப்பட்ட போராட்டத்துக்கு பதில் பிளவை எப்படி விதைத்தனரோ, அதையே கிழக்கு மேலாதிக்க சக்திகள் யாழ் மக்களுக்கு எதிராக கையாளுகின்றது. யாழ் மேலாதிக்கத்தின் கோமணமாகவே செயல்படுவதில், கருணா கும்பலும் அவர்களின் எடுபிடிகளும் நாலு காலில் நிற்கின்றனர்.


இந்த வகையில் தமிழ் மக்களின் போராட்டத்தை திசை திருப்புவது, அதை திரிப்பது அவசியமாகின்றது. அதைச் செய்தபடிதான் இந்த கிழக்கு மேலாதிக்கம் கட்டமைக்கப்படுகின்றது. பேரினவாதத்துக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம், வடக்கு மட்டுமல்ல, கிழக்கு மக்களுக்கும் பொதுவானது. பேரினவாதம் தமிழர் என்ற ஒரு பொது அடையாளத்தின் மீது தான், தனது பேரினவாத ஒடுக்குமுறையைக் கட்டமைத்தது. தமிழ் சமூகங்களுக்கு இடையில் இருக்கும் தன்னளவிலான ஏற்றத்தாழ்வான வளர்ச்சியும், அவர்கள் சந்திக்கும் முரண்பட்ட நெருக்கடிகளும், அதை எதிர்கொண்ட விதமும், பிரதேசத்துக்கு பிரதேசம் வேறுபட்டது. இவை அனைத்தும் பேரினவாதத்தை எதிர்த்து போராடுவதில் உள்ள கூறுகளை பொதுவானதாக்கியது. ஆனால் இந்தப் போராட்டத்தை முன்னனெடுத்தவர்கள், அந்ததந்த பிரதேச மக்களின் அடிப்படையான சமூக பொருளாதார நலன்களை புறந்தள்ளியதன் மூலம், தமது சொந்த குறுகிய நலன்களை மையப்படுத்தி போராட்டத்தை சிதைத்தனர். காலாகாலமாக நீடித்த அரசியல் தலைமைகளின் வழியில் இழிந்து சென்றனர். இந்த சீரழிவையே நாம் யாழ் மேலாதிக்கம் என்றோம்.


அதாவது ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகளை கவனத்தில் எடுத்து, அதைத் தீர்க்கத் தவறுகின்ற அனைத்து சமூகக் கூறுகளும் யாழ் மேலாதிக்கமாக உள்ளது. எப்படி சிங்கள மேலாதிக்கம் தமிழ் மக்களை ஒடுக்கியதோ, அதேயொத்த யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்த போது, அதை நாம் சரியாகவும் தெளிவாகவும் அரசியல் ரீதியாக எதிர்த்தோம். இந்த யாழ் மேலாதிக்கத்தை, இந்த குறுந்தேசிய போராட்டத்தை எதித்தவர்கள் யார் என்றால், கடந்த வரலாறு முழுக்க நாம் தான். எமது கருத்தை ஒத்தவர்கள் தான். இதற்காக போராடி நூற்றுக்கணக்கில் முதலில் பலியானவர்கள் எமது கருத்தைக் கொண்டவர்கள் தான்.


இப்படி யாழ் மேலாதிக்கமாக சீரழிந்த இந்தப் போராட்டத்தை அம்பலப்படுத்துவதில், வடக்கைச் சேர்ந்த நாம் தான் சரியாகவும் துல்லியமாகவும் துணிவாகவும் வரையறுத்து அதை முதலில் முன்வைத்தவர்கள். கிழக்கில் இருந்து, இந்த இயக்கங்களுக்கு எதிராக இவை முன் வைக்கப்படவில்லை. இதை நாம் குற்றச்சாட்டாக முன்வைக்கவில்லை. மாறாக இது தான் எதார்த்தமாக இருந்தது. எப்படி போராட்டம் வடக்கில் முனைப்பு பெற்றதோ, அதேபோல் அதன் தவறை எதிர்த்து முனைப்பு பெற்றது. யாழ் மேலாதிக்கம் பற்றி வடக்கில் தான் குரல்களும் போராட்டமும் தொடங்கப்பெற்றது. இது வரலாறு. இதை யாரும் கொச்சைப்படுத்த முடியாது. புலியெதிர்ப்பில் இவை காயடிக்கப்பட்டு, கிழக்கு மேலாதிக்கம் கட்டமைக்கப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும்? கிழக்கில் இருந்து எழுகின்ற ஒடுக்கப்பட்ட மக்களின் குரல் என்பதும், கிழக்கு மேலாதிக்கம் என்பதும், இரண்டும் வௌவேறான விடயங்கள். கிழக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் மேல் தான், கிழக்கு மேலாதிக்கம் உருவாக்கப்படுகின்றது.


கிழக்கு வாழ் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிறுத்தாத போராட்டம் எப்படி யாழ் மேலாதிக்கமாக இருக்கின்றதோ, அதேயொத்தது தான் மக்கள் பற்றி அக்கறையற்ற அனைத்தும். இது அனைவருக்கும் பொருந்தும். இது கிழக்கு மையவாதத்துக்கும் அப்படியே அச்சொட்டாகவே பொருந்துகின்றது.


ஒடுக்கப்பட்ட அனைத்து சமூகங்களினதும் நலன்களைப் பற்றியும், அக்கறையற்ற குறுகிய போக்குகள் அனைத்தும் பிற்போக்கானவை. குறிப்பாக இந்த யாழ் மேலாதிக்கம் மற்றைய பிரதேச மக்களை மட்டும் ஒடுக்கவில்லை. அது சொந்த பிரதேச மக்களையே ஒடுக்குகின்றது. சொல்லப் போனால் முதலில் தனது சொந்த பிரதேச மக்களை ஒடுக்குவதன் மூலம் தான், மற்றைய பிரதேச மக்களை ஒடுக்குகின்றது. இந்த வகையில் கிழக்கு மேலாதிக்கமும், இது முதலில் கிழக்கு மக்களை ஒடுக்கியபடிதான், யாழ் மக்களுக்கு எதிராக குலைக்கின்றது. ஆதிக்கம் பெற்றுள்ள யாழ் மேலாதிக்கத்தை ஒற்றைப்பரிணாமத்தில், ஒரு சமூகத்துக்கு எதிரானதாக காட்டுவது அபத்தம். சொந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஐக்கியப்பட்டபடி, மற்றைய ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஐக்கியப்படுவதே, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டமாகும். இது யாழ் மேலாதிக்கமாக இருந்தாலும் சரி, கிழக்கு மேலாதிக்கமாக இருந்தாலும் சரி, சிங்கள மேலாதிக்கமாக இருந்தாலும் சரி, சொந்த ஒடுக்கப்பட்ட மக்களுடன் முதலில் ஐக்கியப்படுவது முதலாவது நிபந்தனையாகும்.


கிழக்கு மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்தினதும் கோவணமாகவும் இருக்க விரும்புகின்றது.


கிழக்கு மேலாதிக்கம் கையாளும் அரசியல் உத்தி, புலியை மட்டும் எதிரியாக சித்தரித்தபடி, பேரினவாதத்தின் வாலில் தொங்குவது தான். பேரினவாதம் தமிழ் இனத்துக்கு எதிராக நடத்திய, நடத்தி வருகின்ற கொடூரமான தொடாச்சியான அனைத்து இனவழிப்பு பக்கங்களை மூடிமறைப்பது தான், இவர்களின் உள்ளார்ந்தமான அரசியலாக உள்ளது. இவர்களின் கிழக்கு மேலாதிக்க பிரதேசவாத குறுகிய உணர்வுடன், மற்றயை பிரதேச மக்களை இழிவாடுவதன் மூலம், சொந்த பாசிச முகத்தை துணியைப் போட்டே மறைத்துக் கொள்ள முனைகின்றனர்.


தமிழ் மக்கள் என்ற அடையாளத்தின் கீழ் ஒரு இனம் தன்னை அடையாளப்படுத்தப்படுவதை, சிங்கள பேரினவாதம் ஒடுக்கவே எப்போதும் விரும்புகின்றது. அதன் அடிப்படையில் தான், கிழக்கு மேலாதிக்கம் சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றது. இதன் எடுபிடிகள் தான் கருணா முதல் அனைத்து எடுபிடி பினாமிகளும்.

 
யாழ் மேலாதிக்கத்தின் சமூக பொருளாதார அரசியல் கூறுகளை, வடக்கு மக்களின் கூறுகளாக திரித்து இழிவாடுவது இதன் முக்கிய கூறாகும். இதன் மூலம் மக்களை பிளந்து விடுவதன் மூலம் தான், சிங்களப் பேரினவாதம் கிழக்கையும் தமிழ் மக்களின் அரசியல் இருப்பையும் இல்லாதொழிக்க முனைகின்றது. இந்த வகையில் தான் கிழக்கில் நடக்கின்ற அனைத்து அரசியல் கூத்துகளும் அரங்கேற்றப்படுகின்றது.


கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து நின்று, யாழ் மேலாதிக்க அரசியல் சமூக பொருளாதார கூறுகளை ஒழித்துக்கட்ட முனையவில்லை. அதாவது யாழ் ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு செயல்படும் அரசியல் கூறுகள் எதுவும், கிழக்கு என்ற மேலாதிக்க கூச்சலின் பின் கிடையாது. இதேபோல் சிங்கள ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கவோ, முஸ்லீம் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கவோ முனையவில்லை. கிழக்கு மேலாதிக்கத்தை யாழ் மேலாதிக்கத்தை, சிங்கள மேலாதிக்கத்தை என அனைத்து சமூக ஒடுக்குமுறைகளையும் எதிர்க்கும், கிழக்கு மக்களின் குரல்கள் எதுவும் எழவில்லை. எழுவது தனது சொந்த மக்களை ஒடுக்குகின்ற கிழக்கு மேலாதிக்கம் தான்.


இந்தளவுக்கு இவர்களுக்கு பக்கபலமாக நிற்பவர் கருணாவின் தலைமையிலான மற்றொரு கைக்கூலி பாசிஸ்ட். இந்த பாசிஸ்ட் தனது முந்தைய புலி இயக்கம் மீதான எந்த ஒரு அரசியல் விமர்சனத்தையும் (தனிப்பட்ட முரண்பாட்டைத் தவிர) இதுவரை வைத்தது கிடையாது. நாங்கள் மக்களுக்கு எதிராக என்ன செய்தோம், இதில் எதையெல்லாம் நாம் செய்யக் கூடாது என்று, எந்த ஒரு அரசியல் கண்ணோட்டத்தையும் விமர்சித்தது கிடையாது. அந்த கூலிக் கும்பலுக்கு, அவை பற்றிய எந்த அடிப்படை அறிவு கூட கிடையாது. ஏன் நிலவுகின்ற யாழ் மேலாதிக்கத்தைப் பற்றி, அதன் சமூக பொருளாதார கூறுகள் மீது எந்த கருத்தும் உரைத்தது கிடையாது. யாழ் மேலாதிக்கத்தை ஒத்த கிழக்கு மேலாதிக்கம் தான், அவர்களின் கனவாகிக் கிடக்கின்றது. இந்தக் கருணா கும்பலும், அவர்களின் எடுபிடிகளும், புலியின் அதே பாதையை அப்படியே பின்பற்றுவது தான், இவர்களின் கிழக்கு மேலாதிக்க அரசியல் சாரமாகும்.


கருணாவின் தனிப்பட்ட தலைமைத்துவம் என்பது அன்று யாழ் மேலாதிக்கத்தை பிரதிநித்துவம் செய்து, யாழ் மேலாதிக்க புலிக்கு சலாம் போட்டது. கிழக்கில் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களையே முன்முயற்சி எடுத்து கொன்று போட்டவர். இதனால் புலிகளின் முக்கிய தலைவரானவர். இன்று சிங்கள மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் பேரினவாதத்துக்கு சலாம் போடுகின்றார். இன்றும் கிழக்கு ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை கொல்வது தான், அவரின் அரசியல். இதைத் கிழக்கு மேலாதிக்கமாக கட்டமைக்கவே முக்கி முனங்கி முனைகின்றனர்.
இவர்கள் செய்வது எல்லாம் புலிகள் இழைக்கும் தொடர்ச்சியான அதே அரசியல் தவறை, மொத்த தமிழ் மக்கள் மீது ஊத்திக் குழைத்து திணிப்பது தான். அதாவது தமிழ் மக்களை புலிகள் என்று கூறும் சிங்கள பேரினவாத வழியில், யாழ் மேலாதிக்கத்தை வடக்கு மக்களாக காட்டுவது இவர்களின் அரசியல் உத்தியாகின்றது. கிழக்கு மக்களை யாழ்ப்பாண மக்களுக்கு எதிராக கட்டமைப்பதே, கிழக்கு மேலாதிக்கத்தின் உத்தியாக உள்ளது. இலங்கை அரசியலில் தமிழ் சிங்கள முஸ்லீம் மக்களை, எப்படி அவ்வவ் மேலாதிக்கவாத சக்திகள் ஒன்றுக்கொன்று எதிராக எப்படி கட்டமைக்கப்பட முடிந்ததோ, அதே வழியில் பிரதேசவாத மேலாதிக்க சக்திகள் மக்களை பிரதேச ரீதியாக எதிராக நிறுத்துவது அரங்கேறுகின்றது.


இந்த வகையில் அண்மைக் காலமாக கிழக்கு மக்களை யாழ் மக்களுக்கு எதிராக நிறுத்தும் அரசியலை, புலியெதிர்ப்பு அணிகள் முழுமூச்சில் எடுக்கின்றது. இவர்கள் பேரினவாத எடுபிடி அரசியலில் நக்கித் திரிவதால், இந்த முனைப்பில் கூர்மையாகவே களமிறங்கியுள்ளனர். அண்மைக்காலமாக கருணாவின் திடீர் எடுபிடியாகி, கிழக்கு மேலாதிக்கத்தின் ஐரோப்பிய பிரதிநிதியாக அவதாரம் பெற்றுள்ள எம்.ஆர்.ஸ்ராலின் எழுதப்பட்ட "யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல கிழக்குமாகாணம்" என்ற கட்டுரை "மற்றது" என்ற கனடா இதழில் வெளியாகியது. இது கிழக்கு மேலாதிக்கத்தை பிரச்சாரம் செய்யும், கிழக்கின் குரல் இணையத்திலும் வெளியாகியது. இந்த கிழக்கு மேலாதிக்க நபரின் பல புனைபெயர் கட்டுரைகள், புனைபெயர் ரீ.பீ.சீ உளறல்கள் பலவும், கிழக்கு மேலாதிக்கத்தை யாழ் மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக பிரகடனம் செய்கின்றது. இப்படி பலர் இந்த சாராம்சத்தில் கூச்சலிடுகின்றனர்.


மேல் குறிப்பிட்ட தலைப்பிலான கட்டுரை மிகக் கவனமாக, பேரினவாதத்தைப் பற்றி ஒரு வரி கூட பேசாது யாழ் மக்களை இழிவாடுகின்றது. யாழ்ப்பாண மக்களின் தமிழீழத் தேசியம் தான், கிழக்கில் கட்டமைக்கப்பட்டதாக ஒருதலைப்பட்சமாக கருத்துரைக்க முனைகின்றது. கிழக்கு மக்களை ஏமாற்றியதாக காட்ட, பேரினவாதத்தின் கொடூரமான முகத்தை துணி போட்டு மூடி மறைத்தபடி தான், கிழக்கு மேலாதிக்க கதையாடல் ஒன்றைக் கட்டமைக்க முனைகின்றது.


சிங்களப் பேரினவாதத்தின் அருவடியாக இருத்தல் தான், கிழக்கு மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ற உள்ளடக்கத்தை அடிப்படையாக கொண்டு, யாழ் மக்களை இழிவாடி எதிர்க்கின்றனர். உண்மையில் கூறப் போனால் யாழ் மேலாதிக்கத்தைப் எதிர்ப்பதற்கு பதில், அதைப் பாதுகாத்தபடி, யாழ் மக்களை இழிவாடுகின்றது. பானையில் இருந்தால் தானே அகப்பையில் வரும். அகப்பையே கிழக்கு மேலாதிக்கமாக இருப்பதால், அகப்பையில் எதுவும் இருப்பதில்லை.


இந்த கிழக்கு மேலாதிக்க கதையாடலின் மக்கள் விரோதக் கூறுகளை இனம் காண முன், கிழக்கு மக்கள் சிங்கள பேரினவாத ஒடுக்குமுறைக்கு உள்ளாகவில்லையா என்பதை வரலாற்றின் இருட்டில் இருந்து வெளிச்சத்துக் கொண்டு வரவேண்டியுள்ளது. கிழக்கு மக்கள் தமிழர்களாக இருந்தால், அவர்களுக்கு சிங்கள பேரினவாதத்தால் எந்த பிரச்சினையும் இருக்கவில்லையா? யாழ் மேலாதிக்கம் அல்லாத ஒரு நிலையில் மகிழ்ச்சியாக, எந்த பிரச்சினையுமின்றி அவர்கள் நல்லிணக்கத்துடன் வாழ்ந்தார்களா? இதை மூடிமறைக்கும் கிழக்கு மேலாதிக்கம் சிங்கள பேரினவாதத்தின் அடிவருடியாக வீழ்ந்து, புனைந்து இருட்டடிப்பு செய்யும் நிலையில், அதை நாம் மீள முன்வைப்பது அவசியமாகின்றது.


பேரினவாதத்தால் ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களின் கல்வி


வெறும் தரப்படுத்தல் மூலம் மட்டும், தமிழ் மக்களின் கல்வியை பேரினவாதம் ஒடுக்கவில்லை. மாறாக கற்றுக்கொடுக்கும் வசதி வாய்ப்புக்கள் மூலமும் அதைச் செய்தது. பேரினவாத ஆட்சியில் 22 சிங்கள மாணவருக்கு ஒரு ஆசிரியர் இருக்க, 34 தமிழ் மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் காணப்படுகின்றது. இது இனவாத அடிப்படையில் தான், மாணவர் ஆசிரியர் விகிதம் காணப்படுகின்றது. இது பிரதேச ரீதியாக மாறும் போது, இது மேலும் மேலும் கோரமாகின்றது. இதை யாழ் மேலாதிக்கம் செய்யவில்லை. சிங்கள மேலாதிக்கமே செய்தது. இப்படி தமிழர் கல்வியை திட்டமிட்ட முறையில் ஒடுக்கியது. இதை மேலும் புரிந்துகொள்ளவும், இதன் விளைவை காணவும், 1997 இல் உயர்தர மாணவர்களின் வீகிதத்தையும் பார்க்க அட்டவணை -1 உதவுகின்றது.


ஒரு நாட்டின் உயர்தர மாணவர்கள் கற்கும் விகிதம், கல்வித் தரம், கல்வி வளம் மறுக்கப்பட்டதால் சிங்கள மாணவர்களுடன் ஒப்பிடும் போது 16500 பேருக்கு உயர்தரக் கல்வி மறுக்கப்படுகின்றது. உண்மையில் இவை சுரண்டல் அரசு என்ற பொது நிலைக்கு அப்பால், இது இன ரீதியாக தமிழ் மக்களுக்கு மறுதலிக்கப்படுகின்றது. இது பிரதேச ரீதியாக பார்த்தால், மேலும் கூர்மையடைகின்றது. இதில் யாழ் பிரதேசத்துக்கு வசதியும் வாய்ப்பும் அதிகமாக இருக்கின்றது. இது யாழ் மேலாதிக்கத்தின் நேரடி விளைவால் நிகழ்வதில்லை. யாழ் மேலாதிக்கம் இந்த உண்மையைப் புரிந்து எதிர்வினையாற்ற தயாரற்ற நிலையில், அனுபவிக்கும் சலுகையாகவே உள்ளது. இந்த பின்தங்கிய நிலை சிங்கள பகுதிகளிலும் கூட காணப்படுகின்றது. ஆனால் அது தமிழ் பிரதேசத்தில் சிங்கள இனவாதத்தால் மேலதிகமான ஒரு சிறப்பு ஒடுக்குமுறையாக உள்ளது.


தமிழ் சிங்கள மாணவர்களின் கல்விக்கான வசதியும் வாய்ப்பும், சிங்கள பேரினவாத அரசு இன ஒடுக்குமுறையாலும், மக்களைச் சுரண்டும் ஒரு அரசின் செயலாலும் நிகழ்கின்றது. இதை கிழக்கு மேலாதிக்கம் கண்டு கொண்டு செயல்பட முனையாது, யாழ் மேலாதிக்கம் பற்றிய மேலெழுந்தவாரியாக பேசிக் கொண்டு, யாழ் மக்களை எதிர்ப்பது ஏன். இதன் பின் அரசியல் உள் நோக்கமே உள்ளது. பேரினவாதம் இந்த வகையில் தான் தரப்படுத்தலை கொண்டு வந்தது. ஆனால் அது தரப்படுத்தலுக்கு முன்னமே தனது தரப்படுத்தலை தொடங்கியது. இந்த தரப்படுத்தல் மூலமான பேரினவாத இனவாதக் கல்விமுறை என்பது, பல்கலைக்கழக அனுமதிக்கான அதன் பரீட்சையையே இனவாதமாக்கியதை அட்டவணை -2 மற்றும் 3 தெளிவுபடுத்துகின்றது.

 

தமிழ் உயர்தர மாணவர்கள் பரீட்சை எடுக்க முன்னமே, கல்வியின் தரமற்ற சூழல் மூலம் தமிழ் மாணவர்கள் தரப்படுத்தப்பட்டு, அதன் எண்ணிக்கை சிங்கள மக்களுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியுற்று காணப்படுகின்றது. இதன் பின்தான் பல்கலைக்கழக தெரிவுக்கான மறுதரப்படுத்தல் நிகழ்கின்றது. தமிழ் மொழி பேசும் மலையக, முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களின் கல்வி எவ்வளவு மோசமாக மறுதலிக்கப்பட்டுள்ளது என்பதை இப்புள்ளிவிபரம் தெளிவாக உணர்த்துகின்றது. தமிழ் மக்களின் கல்வி, இன விகிதத்தின் எல்லைக்குள் கூட பேணப்படவில்லை. உண்மையில் கல்வி வாய்ப்பும், அதற்கான வசதியும் மறுக்கப்பட்ட ஒரு இனமாக மாற்றுவதில் பேரினவாதம் வெற்றி பெற்றுள்ளது.


சிலர் இதை யுத்த காலத்துக்குரியதாக கூற முனையலாம். ஆனால் இது யுத்தத்துக்கு முந்தைய நிலையிலும் கூட இருந்தது. அத்துடன் யுத்த சூழலுக்கு வெளியில் வாழும் மலையக, மற்றும் முஸ்லீம் மக்களின் நிலையை இது உள்ளடக்கியது. குறிப்பாக இந்த புள்ளிவிபரம் கூட பெருமளவில் யாழ் பிரதேசம் சார்ந்த உயர்வு தான், இந்த புள்ளிவிபரத்தைக் கூட பேணுகின்றது. சிங்கள பேரினவாதம் தமிழ் மக்களின் கல்வியை தரப்படுத்தலில் மட்டுமல்ல, கல்வி கற்கும் முறையிலேயே நலமடித்துள்ளது.


1998 இல் பொதுவாக இலங்கையில் 124 மாணவருக்கு ஒரு பட்டதாரி ஆசிரியர் இருக்க, இது மலையகத்தில் 500க்கு ஒன்றாக உள்ளது. மலையகத்தில் பாடசாலை கல்வி நிர்வாகிகள் 118 பேர் தேவையாக இருக்க, வெறுமனே ஒன்பது பேரே உள்ளனர். இதை எந்த யுத்த சூழலும் தடுக்கவில்லை. மாறாக இனவாதம் இதை உருவாக்குகின்றது.


மலையகத்தில் தமிழ் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியர்கள் 7 சதவீதமாக இருக்க, இது சிங்கள பகுதியில் 25 சதவீதமாகவும், முஸ்லீம் பாடசாலையில் 17 சதவீதமாகவும் காணப்படுகின்றது. மலையக பாடசாலையில் பயிற்றப்படாத ஆசிரியர் தொகை 55 சதவீதமாக உள்ளது. சிங்கள பாடசாலையில் 19.3 மாணவருக்கு ஒரு ஆசிரியரும், முஸ்லீம் பாடசாலையில் 20 பேருக்கு ஒருவரும், மலையக தமிழ் மாணவருக்கு 37 பேருக்கு ஒரு ஆசிரியரும் காணப்படுகின்றனர். 1994 இல் ஆசிரியர் மாணவர் விகிதம் சிங்கள மொழிப் பாடசாலையில் 18 க்கு ஒன்றாகவும், தமிழ் மொழிப் பாடசாலைகள் 43க்கு ஒன்றாகவும், தமிழ் முஸ்லீம் மொழிப் பாடசாலைகள் 21க்கு ஒன்றாகவும் உள்ளது. ஏன் இந்த நிலைமை. இந்த பேரினவாத அரசு தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்க போவதாக சவடால் அடிக்கின்றனர். இதற்கு புலிகளா தடையாக உள்ளனர் அல்லது யாழ் மேலாதிக்கமா தடையாக உள்ளது. மலையக தமிழ் தலைவர்கள் அரசில் இருந்தும், இது தான் நிலை.


இதுதான் முஸ்லீம் மக்களின் நிலையும் கூட. 1969-70 இல் மருத்துவ துறைக்கு தெரிவான முஸ்லீம்களின் எண்ணிக்கை 0.9 சதவீதமாகும். 1979-81 இலங்கையில் முஸ்லீம் டாக்டர்களின் எண்ணிக்கை 2.93 சதவீதம் மட்டுமேயாகும். முஸ்லீம் தலைமைகள் இருந்தும் இது தான் நிலவரம். இனவாத அரசு, தனது பேரினவாத அதிகாரம் மூலம், தமிழ் மக்களை ஒடுக்குகின்றது. இதற்கு எதிரான போராட்டத்தை சரியாக முன்னெடுக்கத் தவறி, யாழ் மையவாதமாக சீரழிந்ததை நாங்கள் சரியாக அடையாளம் கண்டு எதிர்த்தோம். நீங்கள் அப்படி செய்கின்றீர்களா எனின் இல்லை.


1983 இல் பல்கலைக்கழக அனுமதியை எடுத்தால், 82.4 சதவீதமான உழைக்கும் மக்களில் இருந்து பல்கலைக்கழகம் தெரிவானோர் 39.2 சதவீத மட்டுமேயாகும். வர்க்க ரீதியாக, சாதி ரீதியாக கல்வி மறுக்கப்படுவதையும், 17.6 சதவீதமான மேட்டுக் குடியில் இருந்து 60.8 சத வீதமானவர்கள் பல்கலைக்கழகம் செல்வதை காட்டுகின்றது. கல்வி உயர்குடிகளின் பிடியில் இருப்பதையும், தேசிய இனப் போராட்டங்கள் இதற்குள் சிதைந்து கிடந்ததையே யாழ் மையவாதமாக நாம் காட்டினோம். 1967ம் ஆண்டு பல்கலைக்கழக பொறியியல் மருத்துவ அனுமதியில் 73 சதவீதமானவர்கள் தனியார் அல்லது உயர்தர பாடசாலையைச் சேர்ந்தவர்களுக்கும், 18 சதவீதமானவை தனிப்பட்ட பரீட்சார்த்திகளான முன்னாள் உயர்தர பாடசாலைகளின் பழைய மாணவர்களுக்குமே கிடைத்தது. கல்வி உயர் சாதியம், வசதி வாய்ப்பைக் கொண்ட உயர் வர்க்கத்தின் பிடியில் சிக்கிக் கிடந்தது. இந்த வகையில் தான் தமிழ் சிங்கள இனவாதம் இசைவாக்கம் அடைந்து இருந்தது. இது சிங்கள மேலாதிக்க வாதமாகவும், தமிழ் மேலாதிக்க வாதமாகவும், அதாவது யாழ் மேலாதிக்கவாதமாகவும் காணப்பட்டது. சிங்கள பேரினவாதம் கட்டமைத்த இனவாத கூறுகளை, யாழ் மேலாதிக்கம் கண்டு கொள்ள மறுத்தது.


கிழக்கு மக்களின் கல்வியை எடுத்தால், யாழ் மாவட்டத்துடன் அல்லது கொழும்புடன் அல்லது கண்டியுடன் ஒப்பிடின் மிகமிக பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இதற்கு யாழ்ப்பாண மக்களா அல்லது யாழ்ப்பாணியமா காரணம்? இல்லை. கிழக்கின் கல்வி மிகப் பின்தங்கிய நிலைக்கு காரணம் இலங்கை அரசின் அரசியல் உள்ளடக்கத்தில் உள்ளது.


* இலங்கை அரசு மக்களை சுரண்டுகின்ற அரசு. அந்த வகையில் மக்களுக்காக அது செயல்படுதில்லை.


* இலங்கை அரசு இனவாத அரசு. அந்த வகையில் இன ரீதியாக மக்களைப் பிளந்து, சில சலுகைகளை ஒரு இனத்துக்கு அபரிதமாக கொடுத்து பிரித்தாளுகின்றது.


இந்த இடத்தில் கிழக்கு போன்ற பல பகுதிகள் இலங்கையில் காணப்படுகின்றது. இலங்கை அரசு ஒரு சுரண்டும் வர்க்க அரசு என்பதால், அது அனைத்து மக்களுக்குமான கல்வியை, கல்விக்கான சூழலை வழங்க மறுக்கின்றது. இந்த உண்மையை நாங்கள் எப்படி மறுதலிக்க முடியும். இந்த நிலையில் பொது கல்வித் தளத்தை இனரீதியாக பிளந்து, கல்வியை ஒரு இனத்துக்கு எதிராக மேலும் மோசமாக்கியது. இதன் மூலம் தமிழ் மக்கள் வாழும் பின் தங்கிய பகுதியில், கல்வியை முற்றாக இனவாத அடிப்படையில் சீரழித்தது. இதற்கு சில உதாரணங்களை அட்டவணை -4 இல் பார்க்கலாம்.


இந்த தரவுகள் எமக்கு எடுத்துக் காட்டுவது, அரசின் திட்டமிட்ட கோரமான இனவாத முகத்தைத்தான். சிங்கள குடியேற்றத்தை திட்டமிட்டு நடத்திய திருகோணமலையில், அரசின் இனவாத கல்வி முறையின் முகத்தை இது நன்கு உணர்த்தி அம்பலமாக்குகின்றது. சிங்கள இனத்துக்கு வழங்கும் ஒரு தலைப்பட்சமான சலுகைகளும், தமிழ் முஸ்லிம் மக்களுக்கு எதிரான போக்கையும் எப்படி நாம் இருட்டடிப்பு செய்வது சாத்தியம். அதிக பாடசாலைகள் தமிழ்பேசும் மக்களிடம் உள்ளது என்றால், அது அவர்களின் பாரம்பரிய பிரதேசமாக இருந்ததால் காணப்படுகின்றது. இப்படி சலுகை பெற்ற பெரும்பான்மை இனம், கல்வியிலான நெருக்கடியை சந்திக்கும் மற்றைய இனமக்களின் நிலைக்கு, யாழ் மக்கள் தான் காரணம் என்ற புனைவு நகைப்புக்குரியது. இதை எதிர்த்துப் போராடவில்லை என்ற யாழ் மேலாதிக்கத்தை குற்றம்சாட்டி, இதற்காக போராட முனைவது சரியானது. இதையா கிழக்கு மேலாதிக்கம் செய்கின்றது. இல்லை. மாறாக யாழ் மேலாதிக்க வழியில் செல்லுகின்றது. அடுத்து இதுவே சமூகத் தளத்தில் விஞ்ஞானக்கல்விக்கும் நிகழ்கின்றது. இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த கல்வி எப்படி இலங்கையில் காணப்படுகின்றது என்பதை அட்டவனை 5இல் பார்க்க முடியும்.


இந்த ஏற்றத்தாழ்வான நிலைமை இலங்கை தழுவியது. மக்களைச் சுரண்டும் அரசு சமூகங்களை கீழ் நிலையில் வைத்திருக்கும் அதே நேரம், இன ரீதியாக தமிழ் மக்களை கீழ் நிலைக்கு தள்ளி அச்சமூகத்தின் கல்வியையே மறுக்கின்றது. உண்மையில் இந்த சமூக அவலத்தை, அதன் அரசியல் பொருளாதார நோக்கில் ஆராய மறுப்பவர்கள், ஒரு பிரிவு மக்கள் மீது அதை இழிவாடி அரசியல் இலாபம் அடைவதை நாம் எப்படியும் அனுமதிக்க முடியாது. இது மனித அவலங்களை பெருக்குவதைத் தவிர, வேறு ஒரு தீர்வையும் தருவதில்லை. இங்கு பேரினவாதத்தின் பொது நிலையை, யாழ் மேலாதிக்கமாக திசை திருப்பமுடியாது. பேரினவாதம் பேரினவாதமாகவே இன்று வரையுள்ளது. நாங்கள் கல்வியில் யாழ் மேலாதிக்கவாதம் என்று கூறுவது, இந்த நிலையை அரசியல் பொருளாதார நோக்கில் இனம் காண மறுத்து, தனது நலனுக்காக மட்டும் இதை திரித்து பயன்படுத்துவதைத் தான்.


இந்த யாழ் மேலாதிக்கம் உள்ளடக்கத்தில் சுரண்டும் தன்மை கொண்டது என்பதால், அதுவும் இயல்பாக அனைத்து மக்களுக்கும் கல்வியை மறுக்கின்றது. அதாவது அது சாதியம், ஆணாதிக்கம் என்று பல தளத்தில் இதை மறுதலிக்கின்றது. தனது சொந்த மக்களின் ஒரு பகுதியாக உள்ள மக்கள் கூட்டத்துக்கு, சாதி ரீதியாக கல்வியை மறுக்கின்றது. இதே போன்று பிரதேச ரீதியாகவும் மறுக்கின்றது. இப்படி யாழ் மேலாதிக்கம் ஒரு சுரண்டும் வர்க்கம் என்ற வகையில், அது பன்மைத் தன்மையில் மக்கள் விரோத அடிப்படையைக் கொண்டது.


இலங்கையில் இனவாத அடிப்படை ஒருபுறம் உள்ளது. மறுபக்கத்தில் சுரண்டும் அமைப்பு என இரண்டு பிரதான கூறும் இணைந்து, சமூகங்களை வௌவேறு அளவில், பிரதேச ரீதியாகவும் பிரித்து ஒடுக்குகின்றது. இந்த அரசுக்கு எதிராக போராடியவர்கள் இதை அனுசரித்தபடி சென்றதையே, நாம் யாழ் மேலாதிக்கம் என்றோம். எந்த மக்களையும் இழிவாடுவதற்காக அல்ல. மக்களின் பெயரால் போராடியவர்களின் சமூக இழிவை அம்பலப்படுத்தும் வகையில், அதைக் குறிப்பாக்கினோம்.


இந்த வகையில் தான் நாம் தரப்படுத்தலையும் பார்த்தோம். தரப்படுத்தல் என்பது சிங்கள பேரினவாதத்தினால் தமிழ் இனத்துக்கு எதிராக கொண்டு வரப்பட்ட திட்டமிட்ட ஒரு இனவாத நடவடிக்கையே. அதை தமிழ் மக்கள் சார்பாக எதிர்த்தது மிகவும் சரியானது. அதில் எந்த தவறுமில்லை. ஆனால் அதை எதிர்த்த உள்ளடக்கத்தில் மாற்றாக முன்வைக்கப்பட்ட கோசம், அதன் அரசியல் கூறுகள் முற்றாகவே தவறானது. மிகவும் நுட்பமானது, ஆனால் தெளிவான ஒரு விடயம். இந்த விடயத்தை இன்றும் பலரும் தெளிவாக புரிந்த கொள்ளவில்லை. நான் இதை ஒட்டி எழுதிய "யுத்தத்தின் பரிணாமமும் உலகமயமாக்கலின் படையெடுப்பும்" என்ற நூல் பலரால் படிக்கப்படவேயில்லை.


தரப்படுத்தலை எப்படி எதிர்த்து இருக்க வேண்டும்? அன்று இதை எதிர்த்தவர்கள், தரப்படுத்தல் வடக்கு அல்லாத தமிழ் பிரதேசங்களுக்கு வழங்கிய சிறு சலுகையையும் சேர்த்துத்தான் எதிர்த்தனர். ஒரு குறுகிய அடிப்படையில் இந்த எதிர்ப்பு கோசங்கள் முடக்கப்பட்டது. இதன் அடிப்படைகளில் தேசிய விடுதலைப் போராட்டமும், குறுகிய பாசிசமாகியது. தரப்படுத்தலின் முழு சாராம்சத்தையும் காணத்தவறி, யாழ் மேலாதிக்கமாக சீரழிந்தது.


இதை எதிர்த்தது தவறு என்று கூறுபவர்கள் கூட, இன்று வரை முழு சாராம்சத்தில் இருந்து இதைக் காணமறுக்கின்றனர். இன்று கிழக்கு மேலாதிக்கம் இதை மற்றொரு கோணத்தில் மூடி மறைக்கின்றது. ஒருபுறம் பேரினவாதம், மறுபுறம் அதை முழு மக்கள் நலன் சார்ந்ததாக மாற்ற மறுக்கின்ற யாழ் மேலாதிக்கவாதம். இவ் இரண்டையும் எதிர்த்து எப்படிப் போராடுவது.? இது ஒரு அடிப்படையான கேள்வி.


அன்று பிரதேச ரீதியாக கிடைத்த சிறிய சலுகைகள், கிழக்கு மக்களுக்கு மிகப் பெரிய எந்த மற்றத்தையும் தந்துவிடவில்லை. சொல்லப்போனல் தரப்படுத்தல் உருவாகிய பின்னான கடந்த முப்பது வருடத்தில் எந்த மற்றத்தையும் கிழக்கில் எற்படுத்தியது கிடையாது. இந்த சலுகையின் பின்னணியில் கிடைத்தாக, எதைதான் பீற்றுகின்றனர் என்றால் அது ஒரு வட்டம் தான். தரப்படுத்தலை எப்படி எதிர்த்து இருக்க வேண்டும் என்ற விடயத்தை பார்க்க முன், சிங்கள பேரினவாத அரசு இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு இன அடிப்படையில் தரப்படுத்தலை கொண்டு வந்த பின்பான, 1975 இல் பல்கலைக்கழக அனுமதி பின்தங்கிய பிரதேசத்துக்கு எதையும் பெரிதாக வழங்கிவிடவில்லை. அட்டவணை -6 இதை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது.

 

இனரீதியாக யாழ் அல்லாத தமிழ் பிரதேசங்களில் எந்த மாற்றத்தையும் பெரிதாக வழங்கிவிடவில்லை. இந்த தரப்படுத்தல் யாழ் பகுதியை மட்டுமல்ல, முன்னேறிய சிங்களப் பகுதியையும் பாதித்தது. இந்த தரப்படுத்தல் கொண்டு வந்ததன் அடிப்படை நோக்கம், இலங்கையில் கிராமப்புறங்களில் இருந்து உருவான ஜே.வி.பி கிளர்ச்சியை ஒரு வர்க்க கண்ணோட்டம் சார்ந்ததாக பார்க்கப்பட்ட ஒரு நிலையில், அதை இனவாத ரீதியில் சீரழிக்க கொண்டு வரப்பட்ட ஒரு இனவாதத் திட்டம். இந்த வகையில் இனவாத ரீதியாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் தான் தரப்படுத்தல்.


சிங்கள கிராமப்புறங்களில் இந்தத் தரப்படுத்தல் மூலம், ஒரு கற்பனையான பிரமை விதைக்கப்பட்டது. சிங்கள ஒரு பிரிவுகளிடையே இது பாதிப்பை ஏற்படுத்திய போதும், அவர்களின் குரல்கள் வெளிவர முடியாத வகையில் இனவாதக் கூச்சல் முதன்மையான முக்கிய பங்காற்றியது. உண்மையில் இதைத் தான் அரசு எதிர்பார்த்தது. அரசு எதிர்பார்த்தது போல், தமிழ் மக்களிடையே எதிர்ப்பு எழுந்தது. இந்த விடயத்தை யாழ் மேலாதிக்க சமூகம் கல்வி சார்ந்து, ஒரு இன ரீதியாக எதிர்த்ததே ஒழிய, இதை சமூகத் தன்மையில் காணவில்லை. இந்தப் போக்கே இன்றுவரை உள்ளது. தலைதாங்கியவர்கள் தமது யாழ் மேலாதிக்க நோக்கில் இதற்கு விளக்கமளித்தனர். இதற்குள் கோசங்களை முன்வைத்துப் போராடினர்.


இந்த தரப்படுத்தலை அன்று எப்படி எதிர்கொண்டிருக்க வேண்டும்? பேரினவாத சுரண்டல் அரசு, இனங்களைப் பிளந்து முன்வைத்த போது, தமிழ் மக்களாகிய நாம் அதை சரியாக எதிர்த்து வழிநடத்தியிருக்கவேண்டும். அந்த வகையில்


* தகுதியான அனைத்து மாணவர்களுக்கும் பல்கலைக்கழக அனுமதியை வழங்கு என்று கோரியிருக்க வேண்டும்.


* பின்தங்கிய பிரதேசக் கல்வித்தரத்தை உயர்த்து என்று கோரியிருக்க வேண்டும். 


* இனரீதியாக தனிச் சலுகைகளை வழங்குவதை நிறுத்தி, அனைவருக்கும் தரமான கல்வியை ஏற்படுத்தும், சமூக பொருளாதாரத்தை ஏற்படுத்த கோரியிருக்க வேண்டும்.


* இனரீதியாக மக்களை பிரிப்பதை நிறுத்தக் கோரி, மாணவர்கள் ஐக்கியத்தைக் கோரியிருக்க வேண்டும்


இவற்றை நாம் செய்யவில்லை. நாம் இதற்கு எதிர்த்திசையில் சென்றோம். இதைத்தான் நாங்கள் யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். இதை மறுத்து, தமது கோரிக்கையை தனது குறுகிய எல்லைக்குள் சுருக்கியதையே யாழ் மேலாதிக்கம் என்கின்றோம். அனைத்து மாணவர் நலன்களை முன்னிறுத்தி, பொதுத் தளத்தில் பேரினவாதத்தை எதிர்த்து இருக்கவேண்டும். இதை யாழ் மேலாதிக்கம் செய்யவில்லை. இது தான் கல்வியில் யாழ் மேலாதிக்கம். இந்த யாழ் மேலாதிக்க பிரதேசத்தில் வாழ்ந்த 50 சதவீதமான தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நிலை மிக மிக மோசமானது. அந்த மாணவர்களின் கல்வி கற்கும் உரிமையைக் கூட யாழ் மேலாதிக்கம் மறுத்தது. இப்படி யாழ் மேலாதிக்கம் சமூகத்தின் உள்ளேயே, எத்தனையோ விதத்தில் மக்களின் கல்வி மறுக்கப்படுவதை கண்டு கொண்டதே கிடையாது. இதைப் போல் தான் இன்று, கிழக்கு மேலாதிக்கமும் யாழ் மேலாதிக்க கோவணமாகி கூச்சல் போடுகின்றது.


இந்த யாழ் மேலாதிக்கத்தை தனிமைப்படுத்தி எதிர்க்க முன்வராத அனைத்தும் உள்ளடகத்தில் பிற்போக்கானது. இன்று கிழக்கு மையவாதமும் அதே யாழ் மேலாதிக்க வழியில் தன்னை வளப்படுத்திக் கொள்ள நினைப்பது, மன்னிக்க முடியாத ஒரு குற்றம். யாழ் மேலாதிக்கம் எதை தனது இழிவினூடாக செய்ய மறுத்ததோ, அதைத்தான் இன்று கிழக்கு மேலாதிக்கம் செய்கின்றது.


அன்று தரப்படுத்தலின் மூலம் கிழக்கு மக்களுக்கு கிடைத்த அற்ப சலுகையைக் கூட, அன்று யாழ் மேலாதிக்கம் கண்டுகொள்ள மறுத்தது. அதையும் சேர்த்து எதிர்த்தபோது, அதன் சீரழிவான பாதை அம்மணமானது. இந்த வகையில் யாழ் மேலாதிக்க கூறுகளின் மீதும் இன்று செல்ல முனைவது அபத்தம்.


அன்று யாழ்ப்பாணம் அல்லாத பின் தங்கிய தமிழீழப் பகுதிகளில் தரப்படுத்தல் மிகச் சிறிய எண்ணிக்கை என்ற போதும், மருத்துவத்துறையில் 167 சதவீத அதிகரிப்பையும் பொறியியல்துறையில் 700 சதவீத அதிகரிப்பையும் ஏற்படுத்தியது. இதையும் சேர்த்து எதிர்த்தவர்கள், இதையிட்டு யாரும் கவலைப்படவில்லை. மாறாக மூடிமறைத்தனர். அதே நேரம் யாழ்ப்பாணம் மருத்துவதுறையில் 32 இடங்களையும், பொறியியல் துறையில் 36 இடங்களையும் இழந்ததை முதன்மை விடயமாக்கினர். அதை யாழ் மேலாதிக்க வழியில் தான் இனவாதமாக்கினர். மறுபக்கத்தில் மொத்தத்தில் தமிழ் பிரதேசங்களில் மருத்துவத்துறை 28 இடங்களையும், பொறியியல்துறை 25 இடங்களையும் இழந்தது. இப்படி மொத்தத்தில் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களை சூறையாடியது. பின்தங்கிய பிரதேசத்து கல்வியை மறுத்தபடி, பொதுவான இனவாத தளத்தில் ஒரு சலுகை, மறுபக்கத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான பொது ஒடுக்குமுறை. பின்தங்கிய தமிழ் பிரதேசங்கள் ஒரு முன்னேறிய நிலையில் இருந்திருந்தால், இந்த தரப்படுத்தல் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.


கிழக்கில் நடந்த திட்டமிட்ட இனவாத குடியேற்றங்கள்


பேரினவாதத்தின் துணையுடன் இன்று கிழக்கு மையவாதம் பேசும் பலரும் மறக்க விரும்பிய, மறைக்க விரும்பியது, கிழக்கு குடியேற்றத்தைத்தான். கிழக்கில் திட்டமிட்ட இனவாத சிங்கள குடியேற்றம் நடந்தது என்பது கற்பனையா? இன்றும் பேரினவாதம் அதைத் தான் செய்கின்றது என்பது பொய்யா? தமிழ் மக்களின் தேசிய போராட்டம் இவைகளை கவனத்தில் கொள்ளாது, இந்த அடிப்படையில் அந்த மக்களை சார்ந்து நிற்கத் தவறியது யாழ் மேலாதிக்கம் தான். இதை கிழக்கு மேலாதிக்கம் செய்ய முனைவது மன்னிக்கமுடியாதது.


கிழக்கு மேலாதிக்கம் மூடிமறைக்கும், திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் யாழ் மேலாதிக்கத்தின் விளைவல்ல. யாழ் மேலாதிக்கம் இதற்காக போராடவில்லை என்பது ஒருபுறம், மறுபக்கத்தில் இதற்காக ஏன் கிழக்கு மக்கள் போராடவில்லை.? இன்று கிழக்கு மையவாதம் பேசுவோர், ஏன் இதற்காக இன்றும் அதை எதிர்த்துப் போராட முனையவில்லை. இப்படி இருக்க யாழ் மேலாதிக்கத்தை ஒரு தலைப்பட்சமாக குறுகிய எல்லைக்குள் குற்றம் சாட்ட உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. யாரெல்லாம் அந்த மக்களின் சமூக பொருளாதார உறவுடன் பின்னிப்பிணைந்து, அந்த மக்களுக்காக குரல் கொடுக்கின்றனரோ, அவர்கள் அதுவும் பேரினவாத அரசை பிரதான எதிரியாக கொண்டு எதிர்க்கின்றனரோ, அவர்கள் மட்டுமே இந்த யாழ் மேலாதிக்கத்தை எதிர்ப்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் உள்ளனர்.


இப்படி இருக்க பேரினவாத குடியேற்றத்தையே கிழக்கு மையவாதம் காணமறுப்பது அற்பத்தனமாகும். கிழக்கு மக்கள் போராட்டத்தில் இணைந்தது என்பது, சிங்கள பேரினவாத நடத்தைகளுக்கு எதிராகத் தானே ஒழிய, கற்பனையில் அல்ல. மாறாக யாழ் மேலாதிக்கத்தின் புனைவாக கருதுவது, மக்களையே வெறும் முட்டாளாக கருதும் கிழக்கு மேலாதிக்கமாகும். ஒவ்வொருவனும் போராட முனைந்த போது, அவனின் தியாக உணர்வுகள் யாழ் மேலாதிக்கமாக இருந்தது கிடையாது. மாறாக அதில் ஒரு சமூக நோக்கு இருந்தது. இந்த வகையில் பேரினவாதத்தை எதிர்கொண்ட ஒவ்வொரு இளைஞனும், ஆயுத பாணியாக முனைந்த உணர்வை, யாரும் கொச்சைப்படுத்த முடியாது.


இது கிழக்கு மற்றும் வடக்கில் போராடிய ஒவ்வொரு இளைஞனுக்கும் பொதுவானது. இதை பிழையான பிற்போக்கான தலைமைகள் பயன்படுத்திகொண்டது என்பது, அந்த மக்களின் போராட்ட உணர்வின் தவறல்ல. இன்று புலிகளில் இருந்து பிரிந்த கருணா, அதே பிற்போக்கைத் தான் மறுபடியும் செய்கின்றார். தனது தனிப்பட்ட நலனுக்காக கிழக்கு மக்களை பேரினவாதத்தின் எடுபிடியாக்குகின்றார். அன்று யாழ் மேலாதிக்க புலிக்கு பின்னால் எப்படி இளைஞர்களை அழைத்துச் சென்றாரோ, அதையே இன்று பேரினவாதத்தின் பின் அணிவகுத்து கூட்டிச் செல்லுகின்றார். இதற்கு பின்னால் அணிதிரளும் அரசியல் அன்னக் காவடிகளும் அதையே செய்கின்றனர். கிழக்கு மக்களின் உண்மையான பிரச்சினைகளில் இருந்து யாரும் சிந்திப்பதில்லை. இந்த வகையில் சிங்கள குடியேற்றம் பற்றி மூடிமறைக்கப்படும் வரலாற்று நிலையில், அதை இனங்காட்டும் வரலாற்றுத் தேவை மீண்டும் எம்முன் வந்துள்ளது.


கிழக்கில் எப்படி தமிழ் பேசும் மக்கள் திட்டமிட்ட வகையில் சிங்கள பேரினவாதிகளால் இன அழிப்புக்குள்ளானார்கள் என்பதை அட்டவணை 7இல் காணமுடியும். இதை ஏன் இன்று அனைவரும் மூடிமறைக்க விரும்புகின்றனர். இந்த குடியேற்றத்தை யாழ் மேலாதிக்கம் செய்யவில்லை. மாறாக சிங்கள பேரினவாத மேலாதிக்கமே செய்தது. யாழ் மேலாதிக்கம் போல், இதை எதிர்த்து கிழக்கு போராடவில்லை. புலியெதிர்ப்பு கூட இதைக்கண்டு கொள்வதில்லை. தற்போது இதை எல்லோரும் மூடிமறைக்கும் அரசியலைச் செய்ய முனைகின்றனர். கிழக்கு மேலாதிக்கம் இதை பேரினவாதத்துடன் சேர்ந்து செய்ய நினைப்பது, கிழக்கு மக்களுக்கு எதிரான துரோகத்தை தவிர வேறு எதுவுமல்ல. யாழ் மேலாதிக்கம் தமிழ்மக்களுக்கு செய்த அதே துரோகத்தையே, இன்று கிழக்கு மேலாதிக்கம் மூலம் செய்வது மன்னிக்கவே முடியாது. இந்த கிழக்கில் என்ன நிகழ்ந்தது, நிகழ்கின்றது என்பதை அட்டவணை 8 இன்னமும் தெளிவாக காட்டுகின்றது.


உண்மையில் கிழக்கு மாகாணத்தில் திட்டமிட்ட குடியேற்றம், பாரம்பரியமாக வாழ்ந்த மக்களை படிப்படியாக சொந்த மண்ணில் இருந்து அகற்றுவதாக இருந்தது. இதன் மூலம் பல செறிவான இனக் குடியேற்றத்தை நடத்தியதன் மூலம், குறித்த பிரதேசங்களை பிரித்தெடுக்கவும் இனவாத அடிப்படையில் பெரும்பான்மையினரின் நலனை மையமாகக் கொண்ட மாகாணங்களும் உருவாக்கப்பட்டது. அவை இந்த மாகாணங்களில் இருந்து நிரந்தரமாகவே பிரிக்கக் கூடிய வகையில் கூட, இந்த இனவாத குடியேற்றம் அரங்கேற்றப்பட்டது. இந்த நிலையில் போராடச் சென்ற ஒவ்வொருவரும் ஒரு சமூகத்தின் உறுப்பாக வாழ்ந்து உணர்ந்த இனவாத நடத்தைகளை கண்டு, அதற்கெதிரான தியாக மனப்பான்மையுடன் தான் போராடுவதற்காக இயக்கங்களில் இணைந்தனர். இது தெளிவானது. ஆனால் தலைமை தாங்கும் பிற்போக்கான சமூகக் கோட்பாடுகள், அந்த தியாகத்தை அரசியல் ரீதியாகவே இழிவாடின. இதைத்தான் இன்று கிழக்கு தலைமைகள் என்று கூறிக்கொள்வோரும் செய்கின்றனர். ஒரு இனம் எப்படி திட்டமிட்டு ஒடுக்கப்பட்டது என்பதையும், அதன் சமூக பொருளாதார இருப்பு எப்படி சூறையாடப்பட்டது என்பதையும் அட்டவணை 9 மூலம் பார்ப்போம்.


இப்புள்ளி விபரங்கள் எப்படி திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம், ஒரு இன அழிப்பை அதன் பொருளாதார கட்டுமானத்தை சிங்கள பேரினவாதிகள் நடத்தினார்கள் என்பதை தெளிவாக காட்டுகின்றது. புத்தளத்தில் 1953 க்கும் 1971 க்கு இடையில் தமிழ் மக்களின் சனத்தொகை அதிகரிப்பு அண்ணளவாக மூன்று மடங்காக இருக்க, சிங்களவர் தொகை 9 முதல் 10 மடங்காக அதிகரித்துள்ளது. மட்டக்களப்பில் தமிழர் சனத் தொகை அண்ணளவாக இரண்டாக அதிகரிக்க சிங்கள மக்களின் தொகை மூன்று மடங்காகியுள்ளது. திருகோணமலையில் தமிழர் தொகை இரண்டு மடங்காக அதிகரிக்க, சிங்களவர் தொகை 3.5 மடங்காக அதிகரித்துள்ளது. இதில் சில குறித்த பகுதிகள் பல மடங்காகவும், எல்லை கிராமங்களில் முற்றாகவே மாற்றி அமைக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தில் சிங்களவர் தொகை அதிகரித்துச் செல்ல, தமிழர் தொகை குறைந்து வருகின்றது. இதுவே புத்தளத்திலும் நடந்தது. இப்படி தமிழர் பிரதேசங்கள் சூறையாடப்பட்டது. இதற்கு எதிராக போராடுவது தவறு என்று பலராலும் விதந்துரைக்கப்படுவதும், போராட்டத்தை கொச்சைப்படுத்துவதும் இன்றைய புலியெதிர்ப்பு அரசியலின் மையக் கூறாகியுள்ளது. புலிப்பாசிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகள் மீது தமது பாசிச உள்ளடக்கத்தில் போராட்டத்தை இழிவாடிய போது, அதை மறுதலித்து உண்மையாக போராட வேண்டியதல்லவா ஒரு நேர்மையான மனிதனின் கடமை. அதை இந்த புலியெதிர்ப்பு செய்வதில்லை. மாறாக இந்த பேரினவாத அரசுடன் கூடிக் குலாவுகின்றது. ஒரு சமூகத்தின் நிலை என்பது சொந்த துரோகத்தால் மூட்டைகட்டி வைக்கமுடியாது. புத்தளம் தேர்தல் தொகுதி ஒரு சிறந்ததொரு எடுத்துக்காட்டு. இதை அட்டவணை 10 தெளிவுற புரிய வைக்கின்றது.


உண்மையில் புத்தளம் முற்றாக சிங்கள பிரதேசமாக மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. எல்லையோர மீன்பிடி அபிவிருத்தி மற்றும் பல்வேறு திட்டங்களின் பெயரில் திட்டமிட்ட இன குடியிருப்புகள் உருவாக்கப்பட்டன. தமிழர் மற்றும் முஸ்லீம்களின் வாழ்விடங்கள் சூறையாடப்பட்டன. சுதந்திரத்துக்கு முன் வரை இயல்பான மக்களின் குடிபெயர்ச்சிகள் இப்பிரதேசங்களில் இருந்துள்ளது. ஆனால் போலிச் சுதந்திரத்துக்கு முன் தொடங்கி சுதந்திரத்தின் பின், திட்டமிட்ட குடியேற்றம் ஒரு போக்காக இனவழிப்பாக மாறியது. திருகோணமலையில் 1921 இல் 4.6 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள் 1971 இல் 28.8 யாகவும், மட்டக்களப்பு அம்பாறையில் 4.5 இல் இருந்து 17.7யாகவும் மாறியது. இந்த திட்டமிட்ட குடியேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு எமது போராட்டம் ஆரம்பிக்க தவறியதே, எமது போராடத்தின் அடிப்படையான திசை விலகலாகுயாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான் கிழக்கு மேலாதிக்கம்.


தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் மட்டுமல்ல, கிழக்கில் வாழும் தமிழ் மொழி பேசும் 32.4 சதவீதமான முஸ்லீம் மக்களின் நிலங்களும் இன அழிப்பின் ஊடாக சூறையாடப்பட்டன. தமிழ் பேசும் முஸ்லீம் மக்களையும் தமிழ் தேசியம் எதிரியாக காட்டிய போது அம்பாறையில் வாழும் 41.6 சதவீதமானவர்களையும், திருகோணமலையில் வாழும் 29.0 சதவீதமானவர்களையும், மன்னாரில் வாழும் 26.6 சதவீதமானவர்க ளையும், மட்டக்களப்பில் வாழும் 24 சதவீதமானவர்களையும், வவுனியாவில் வாழும் 6.9 சதவீதமானவர்களையும், முல்லைத்தீவில் வாழும் 4.9 சதவீதமானவர்களையும், யாழ்ப்பாணத்தில் வாழும் 2.4 சதவீதமானவர்களையும், புத்தளத்தில் வாழும் 9.7 சதவீதமானவர்களையும் நேரடியாக தமிழீழ எல்லைக்குள்ளேயே எதிரியாக மாற்றியது. தமிழ் குறுந் தேசியத்தின் பிற்போக்கான போராட்ட அடிப்படையே நண்பர்களையும் எதிரியாக்கியுள்ளது. தமிழ் தேசிய எல்லைக்குள் வாழ்ந்த சிறுபான்மை இனங்களை எதிரியாக மாற்றிய யாழ் உயர் வர்க்க யாழ்தேசியம், அந்த மக்கள் உள்ளிட்ட உழைக்கும் பிரிவின் நிலத்தை பெரும் தேசிய இனவாதிகள் திட்டமிட்டு சூறையாடியபோது, அதற்காக போராட முன்வரவில்லை. அதை வரலாற்று ரீதியாக அடையாளம் கண்டு, அந்த மக்களுடன் அந்த மக்களின் பிரச்சினைகடாக தன்னை ஆயுதபாணியாக்கவில்லை


உண்மையில் இந்த நிலையைத்தான் இன்று புலியெதிர்ப்பு முதல் கிழக்கு மேலாதிக்கம் வரை தனது அரசியலாக கொள்கின்றது. யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாகத் தான் புலியெதிர்ப்பும், கிழக்கு மேலாதிக்கமும் உள்ளது. எந்த சமாதானத் தீர்வும் இதற்கு தீர்வு காணமுடியாது. ஒரு தீர்வு திட்டமிட்ட பேரினவாத நடவடிக்கைகளை எதிர்த்து தீர்வு காண்பதாக அமைய வேண்டும். திருகோணமலையில் கந்தளாய், மொறவேவ, அல்லை, பதவியா போன்ற சிங்கள குடியேற்றம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. கந்தளாய், மொறவேவத் திட்டமிட்ட இனக் குடியேற்றத்தில் 2300 சிங்கள குடும்பங்கள் குடியேற்றப்பட்டனர். இப்படித் தொடர்ச்சியான குடியேற்றங்கள் நடத்தப்பட்டன. திருகோணமலையில் 1880 இல் 935 சிங்கள மக்களே வாழ்ந்தனர். இது 1981 இல் 86341 யாக அதிகரித்துள்ளது. சிங்கள மக்கள் இன்று இந்த மாவட்டத்தில் பெரும்பான்மை இனமாகிவிட்டனர். 1880 இல் தமிழ் இனத்தைவிட 14 மடங்கு குறைவாக இருந்த சிங்களவர், இன்று பெரும்பான்மை இனமாகிவிட்டனர். இந்த வகையில் அட்டவணை-11 திருகோணமலையில் நடந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் போக்கை எடுத்துக்காட்டுகின்றது.


சிறுபான்மை இனங்கள் மீது திட்டமிட்டு பெரும்பான்மை இனம் சார்ந்து பேரினவாதிகள் நடத்திய அழித்தொழிப்பு ஒரு தொடர்ச்சியான ஒரு சமூக நடவடிக்கையாக நடந்து வந்துள்ளது. சிறுபான்மை இனங்களின் நிலப்பறிப்பு நடந்தபோதும், அந்த மக்களின் பொருளாதாரம் சூறையாடப்பட்ட போதும் எமது தேசியம் எழுச்சி பெறவில்லை. மாறாக யாழ் நலன்களில் இருந்தே, தேசியம் குறுகிய எல்லைக்குள் முன்வைக்கப்பட்டது. இதை எதிர்த்தவர்கள் பலர் சொந்த இயக்க உட்படுகொலைகள் மூலமும், வெளிப்படுகொலைகள் மூலமும் கொல்லப்பட்டனர். இன்று வரை இதற்கு எதிரான செயல்பாடுகள் தான், புலி ஆதரவு, புலியெதிர்ப்பின் மைய அரசியல் கூறாகவுள்ளது.


ஒரு இனஅழிப்பின் வரலாறு பாரிய இனவழிப்பு ஊடாகவே நகர்ந்து வந்துள்ளது. 1901 ஆண்டு இலங்கையை ஒன்பது மாகாணங்களாக பிரித்த போது வடக்கு 8700 சதுரக் கிலோ மீற்றராகவும் (இலங்கையின் மொத்த நிலப்பரப்பில் 13 சதவீதமாக), கிழக்கு 10 440 சதுர கிலோ மீற்றராகவும் (மொத்த நிலப்பரப்பில் 16 சதவீதமாகவும்) இருந்தது. இங்கு வாழ்ந்த சனத்தொகை முறையே 340 936 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 10 சதவீதமாகவும்), 173 602 யாகவும் (இலங்கை சனத்தொகையில் 5 சதவீதமாகவும்) இருந்தனர். 1948 போலிச் சுதந்திரத்தை தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் இருந்து 509 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு நீக்கப்பட்டு, புதிய மாகாண அமைப்பு உருவானது. 1901இல் தமிழரின் மரபுவழித் தாயகமாக 29 சதவிகித நிலப்பரப்பு இருந்தது. இது 1995 இல் 17 வீதமாக குறைந்து போனது. அதாவது சுதந்திரத்தின் பின்பு கிழக்கில் 7 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பையும், வடக்கில் இருந்து 500 சதுர கிலோ மீற்றர் பரப்பையும் திட்டமிட்ட இனக் குடியேற்றம் மூலம் சிங்கள மயமாக்கினர். 1901 இல் தமிழர் வாழ் நிலப்பரப்பு 19100 ச.கிலோ மீற்றராக இருந்தது. 1901 இல் 65 சதவீத கடற்கரைகளும் தமிழர் நிலப்பரப்பில் காணப்பட்டது. ஆனால் இன்று அவை முற்றாக குறைக்கப்பட்டுள்ளது.
1948 இல் கிழக்கு மாகாணத்தில் 5 சதவீதமாக இருந்த சிங்கள மக்கள், 1995 இல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளனர். இந்த வகையில் கிழக்கு மற்றும் திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்தில் திட்டமிட்ட குடியேற்றத்தினை அட்டவனை-12 வெளிப்படுத்துகின்றது.

 

இவ்வாறு இனவாத கொடியை தமிழ் பகுதிகளில் பறக்க விட்டவர்கள், இனவொடுக்கு முறையை சிறுபான்மை இனங்கள் மேல் சமூகமயமாக்கினர். இந்த திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் சார்ந்து 1931 க்கும் 1943 க்கும் இடையில் 115 லட்சம் ரூபா விவசாய அபிவிருத்திக்கும், 33 லட்சம் குடியேற்றத்துக்கும் என அன்றைய பெறுமதிப்படி ஒதுக்கிய டி.எஸ். சேனநாயக்கா, தமிழ் எல்லையோர குடியேற்றத்தை தொடங்கினார். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் ஊடாக அம்பாறை 1960ம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து பிரிக்கப்பட்டது. 1947க்கும் 1974 க்கும் இடையில் காணி அபிவிருத்தி, நீர்ப்பாசன திட்டம், குடியேற்றத்துக்கு அன்றைய பெறுமதிப்படி 370 கோடி ரூபாவை செலவு செய்துள்ளது. இதில் பெருமளவில் சிங்கள குடியேற்றத்தை மையமாகக் கொண்டு நடத்தப்பட்டது.


1952 இல் கல்லோயாத் திட்டம் மூலம் பட்டிப்பளை ஆற்றுக்கு குறுக்கே கட்டிய அணை சேனநாயக்கா சமுத்திரமாகியது. இது திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை விரிவாக்கும் அடிப்படையில் உருவாக்கியது. அழகியபாறை அம்பாறை மாவட்டமாகவும் திரிபடைந்தது போல், சிங்கள குடியேற்றம் சார்ந்து உருவான தேர்தல் தொகுதி திகமடுல்லையானது. 1952 இல் தொடங்கிய கல்லோயா குடியேற்றத் திட்டம் போல் திருகோணமலையில் அல்லை - கந்தளாய் குடியேற்ற திட்டம் உருவாக்கப்பட்டது. முசலி - மணலாறு குடியேற்றம் மன்னார் மாவட்டத்தில் உருவாக்கப்பட்டது. அத்துடன் கொண்டைச்சி திட்டம் மூலம் மரமுந்திரிகை திட்டம் அறிமுகமானது. கடற்கரையோர மீன் பிடி சார்ந்தும், முந்திரிகை தோட்டம் என்ற பெயரிலும் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது. வவுனியாவில் பாவற்குள திட்டம் உருவானது.


1941ம் ஆண்டு டி.எஸ். சேனநாயக்கா கல்லோயாத் திட்டத்தை அமுலுக்கு கொண்டு வந்தார். இதன் மூலம் 44 குடியேற்றக் கிராமம் உருவாக்கப்பட்டது. இதில் 38 சிங்கள கிராமமாகும். மிகுதியான ஆறு கிராமங்கள் தமிழ் மொழி பேசுவோருக்கு வழங்கிய போதும், குடியேற்றத்துக்கு திட்டமிட்டே நீர் வழங்கப்படவில்லை. அல்லது சிங்களப் பகுதியூடாகவே நீர் வழங்கப்படுவதாக இருந்தது. கல்லோயாத் திட்டம் தொடங்கும் முன்பு அங்கு 3000 சிங்களவரே இருந்தனர். இது இன்று 146371 யாக மாறிவிட்டது. 1901 இல் கந்தளாய் பிரதேசத்தில் மொத்த சனத்தொகையில் தமிழர் 79 பேரும், 55 முஸ்லிம்களும், 16 சிங்களவரும் இருந்தனர். 1921 குடிசன மதிப்பீட்டில் ஒரே ஒரு சிங்களவரே அங்கு இருந்தார். 1981 குடிசன மதிப்பீட்டில் சிங்களவர் 31206 பேரும், முஸ்லீம்கள் 4323பேரும், தமிழர் 2001பேருமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்ட குடியேற்றங்கள் பாரம்பரியமாக வாழும் மக்களை சொந்த மண்ணில் இருந்தும், அவர்களின் பொருளாதார வாழ்வில் இருந்தும் துரத்துவதன் மூலம், தமிழ் தேசிய பண்புகளை அழித்தொழிப்பதை மையமாகக் கொண்டு இருந்தது. இது அம்பாறை மாவட்டத்தின் மொத்த இனவிகிதத்தையே மாற்றியமைத்தது. அம்பாறை மாவட்ட வாக்காளர் எண்ணிக்கையையே தலைகீழாக்கியது. இதை அட்டவனை-13 மூலம் காணமுடியும்.


இனஅழிப்பில் முஸ்லீம் மக்களின் மண்ணையும் அபகரித்தனர். இனவாதம் மலையக மக்களில் தொடங்கி முஸ்லீம் தமிழ் என்று அனைத்து சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய பிரதேசங்களை அழித்தொழிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஆனால் தமிழ் குறுந்தேசியம், அனைத்து சிறுபான்மை இனங்களின் நலன்களையும் உயர்த்தத் தவறியது. மாறாக அவர்களை எதிரியாகக் காட்டியும், பண்பாட்டு பொருளாதார கூறுகள் மூலம் அவர்களை இழிவாக்கியும் சுரண்டவும், அவர்களை அழித்தொழிக்க சிங்கள இனவாதிகளுடன் ஒரே அணுகுமுறையையே கையாண்டனர், கையாளுகின்றனர். தமிழ் மக்களினதும், சிறுபான்மை தேசிய இனங்களினதும் பாரம்பரிய பிரதேசங்கள் சூறையாடப்பட்ட போது, இதற்காகவும் அந்த ஏழை எளிய மக்களுக்காகவும் யாரும் போராடவில்லை. போலி இடதுசாரிகள் இனத் தேசியவாதிகளும் பாராளுமன்றத்தில் ஒரு கண்டன அறிக்கை விடுவதுடன், இதை ஊக்குவித்தனர். அதே நேரம் காலத்துக்குக் காலம் பாராளுமன்றத்தில் இனவாத அரசுக்கு பக்கபலமாகவும், ஆட்சியில் பங்கேற்றும் பன்றியைப் போல் திகழ்ந்தனர். இந்த இன அழிப்பு இந்த பன்றிகளின் சாக்கடை நாற்றத்தில் செழித்து வளர்ச்சி பெற்றது. அம்பாறை மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1752.4 சதுர மைல்களாகும். இதில் 1005.96 சதுர மைல்கள் திட்டமிட்ட சிங்கள குடியேற்றம் மூலம் தனி சிங்கள பிரதேசமாக்கப்பட்டது. அம்பாறை மாவட்டத்தின் சனத் தொகை பரம்பல் இதை துல்லியமாகத் தெளிவாக்குகின்றது. 1981ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு, எமக்கு திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மாற்றியமைத்த ஒரு இன அழிப்பை அட்டவணை-14 நிறுவுகின்றது.


1981 க்கு முந்திய மக்கள் தொகை இனரீதியாக எப்படி திட்டமிட்டு அழிக்கப்பட்டது என்பதை புள்ளிவிபரங்கள் தெளிவாக்குகின்றன. மட்டக்களப்பு மாவட்டம் இன்றைய அம்பாறை மாவட்டம் உள்ளடக்கிய ரீதியாக காணப்படும் இனம், பரம்பல், தெளிவாகவே இனவாதிகளின் இன அழிப்பையும் மௌனம் காத்த தமிழ் குறுந் தேசிய இனவாதிகளிள் யாழ் மையவாத தேசியத்தை அட்டவணை-15-16-17 அம்பலம் செய்கின்றது.


திட்டமிட்ட இன அழிப்பை, திட்டமிட்ட குடியேற்றம் மூலம் மட்டக்களப்பு எல்லையோரங்களில் தொடங்கிய இனவாதிகள், அதை இன ரீதியாக அறுவடை செய்ய அம்பாறையை தனிமாவட்டமாக்கினர். சுதந்திரத்துக்கு பின் பாரிய குடியேற்ற திட்டங்கள் மூலம், தமிழ் முஸ்லீம் பாரம்பரிய பிரதேசங்கள் அபகரிக்கப்பட்டன. தமிழ், முஸ்லீம் விவசாயிகள் அந்த மண்ணில் இருந்து படிப்படியாகத் திட்டமிட்டே அகற்றப்பட்டனர். ஆனால் இந்த இனவாதத்தை எதிர்த்து போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகள் வரை போராடவில்லை. பாராளுமன்ற கதிரை கிடைக்கும் என்ற ஒரு நிலைகளில் போராடும் போலி இடதுசாரிகள் முதல் இனத் தேசியவாதிகளே இனங்களை பிளந்து குளிர்காய்ந்தனர். நிலத்துடன் வாழ்வை நடத்தி உழைக்கும் விவசாய மக்கள் மேல் கொண்டிருந்த இழிவான சமூக கண்ணோட்டமும், வர்க்க வெறுப்பும் அந்த மக்களையிட்டும், மக்களின் தேசிய மற்றும் பொருளாதார நலனை முன்வைத்தும் போராடவில்லை. மாறாக இந்த இனவாத வர்க்க சமூக அழிப்பின் மேல் குளிர்காய்ந்தார்கள். இந்த திட்டமிட்ட குடியேற்றம் பல்வேறு பிரதேசங்களின் ஒரு தொடர் கதையாக இருந்த போது, போலி இடதுசாரிகள் முதல் போலி தேசியவாதிகள் ஈறாக இதில் கும்மாளம் போட்டனர்.


இது இன்றுவரை இந்த அடிநிலை மக்களின் வாழ்வின் ஆதாரங்கள் மேல், இந்த தேசியத்தை முன்வைக்கவில்லை, முன்வைக்கப் போவதுமில்லை. தேசிய இனங்கள் மற்றும் சிறுபான்மை இனங்களின் பாரம்பரிய வாழ்விடங்கள் முதல் அவர்களின் பொருளாதார ஆதாரமே தகர்க்கப்பட்டது. தமிழ்தேசிய விடுதலைப் போராட்டம் தன்னளவில் குறுகி யாழ் மேலாதிக்கமாக சிதைந்த போது, பேரினவாதத்துக்கு அதுவே மிகவும் சாதகமாகியது. இந்த வகையில் கிழக்கு மக்கள் இதற்கு எதிராக போராடவில்லை. இன்று கிழக்கு மேலாதிக்கம் பேசும் யாரும் இதையிட்டு அலட்டிக்கொள்வதில்லை. இப்படி எமது வரலாறும், எமது சமூகமும் சிதைகின்றது. இதே போன்று வேலை வாய்ப்பு முதல் வளங்களைப் பகிர்தல் என அனைத்திலும் சிங்களப் பேரினவாதம் தமிழ் மக்களை ஒடுக்கியது. இது கிழக்கு மக்களுக்கு விதிவிலக்காக இருக்கவில்லை.


தமிழ் தேசிய உணர்வு என்பது யாழ் மேலாதிக்கமல்ல.


தமிழ் தேசியத்தை யாழ் மேலாதிக்கமாக கட்டமைப்பது, காட்டுவது, காண்பது என்பது, உண்மையில் அரசியல் பொருளாதாரம் தெரியாத பிழைப்புவாதிகளின் உள்நோக்கம் கொண்ட ஒரு அரசியல் சதியாகும். கிழக்கு மக்களுக்கு எதிரான பேரினவாதத்தின் சில ஒடுக்கமுறைகளையே, நாம் மேலே பார்த்தோம். இது போன்று பல்துறை சார்ந்த வகையில் நாம் எடுத்துக்காட்ட முடியும். மலையக மக்கள், கிழக்கு மக்கள் எதிரான பேரினவாத பக்கத்தைத் திறந்தால், அதன் கோரத்தை நாம் காணமுடியும். இதை எல்லாம் மூடிமறைத்துவிட்டு, யாழ் மேலாதிக்கத்தை மட்டும் ஒருதலைபட்சமாக முதன்மைப்படுத்தி குலைப்பது ஏன்? இப்படி குலைப்பதன் மூலம் கட்டமைக்கும் புலியெதிர்ப்பு மற்றும் கிழக்கு மேலாதிக்கம் உள்ளடக்கத்தில் யாழ் மேலாதிக்கத்தின் கோவணம் தான். இன்று யாழ் மேலாதிக்கம், புலியெதிர்ப்பின் பெயரிலும் உள்ளது. உண்மையில் புலி பாசிட்டுகளும் கூட இதையேதான் கையாளுகின்றனர். அந்த வகையணியில் தான், இவர்களின் அரசியல் ஒரே பாதையின் கீழ் அணிவகுக்கின்றது.


கிழக்கு மேலாதிக்க கருத்துக்கள் கருணா என்ற பேரினவாத கூலிக் கும்பலின் பின் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், கிழக்கு மக்களின் போராட்டத்தை யாழ் போராட்டமாக காட்டுகின்ற நிகழ்ச்சிகள் கருத்து தளத்தில் ஆதிக்கம் பெற முனைவதை நாம் இனம் காணவேண்டியுள்ளது. கடந்த போராட்ட காலத்தில் இயக்கங்களில் இருந்து இறந்து போனவர்களின் கிழக்கு உணர்வை "யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல" என்று கூறுவது, உள்ளடகத்தில் அவர்களின் போராட புறப்பட்ட உணர்வை கேலிசெய்வதாகும். இப்படி கூறிக் கொண்டு யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக கிழக்கு மேலாதிக்கத்தை கட்டமைப்பது நிகழ்கின்றது. யாழ் மேலாதிக்கம் கிழக்கு மக்களின் எந்த உரிமையை மறுத்தனரோ, அதை கிழக்கு மேலாதிக்கமும் மறுக்கின்றது.


கிழக்கைச் சேர்ந்தவர்கள் யாரும், யாழ் மேலாதிக்கத்துக்கு சேவை செய்ய என்ற உணர்வுடன் போராட புறப்படவில்லை. அவன் தன்னளவில் சமூக உணர்வுடன், சமூக அடிப்படைகளில் இருந்தே போராடச் சென்றவர்கள். அவனை இழிநிலைக்கு உள்ளாக்கி, அவர்களின் உணர்வுகளை சிதைத்தது என்பது அவனின் குற்றமல்ல. இங்கு அவன் கோவணமாகியது கிடையாது. இன்று நாங்கள் அதே வரலாற்றை திருப்பிப் போட்டால், சிங்கள பேரினவாதத்தின் கோவணமாக அல்லவா கிழக்கு மக்கள் இருக்கின்றனர் என்று ஏன் சொல்லமுடியாது? அன்று புலிகள், இன்று பேரினவாதத்துக்கு பின்னால் கிழக்கைச் சார்ந்த எடுபிடிகள் அணிகட்டி நின்றதைத்தானே இது எடுத்துக் காட்டுகின்றது.


தலைமைகள் தனது கோவணமாக மக்களை கருதுவது தான் உண்மை. தனது நிலையை ஒத்த எல்லைக்குள் மக்களை சிறுமைப்படுத்தி பார்ப்பதே அதன் அரசியலாகும். மக்கள் அப்படி தம்மைக் கருதுவதில்லை. தமது கோவணமாக யாழ் மேலாதிக்கம் மக்களை கருதியது போல் தான், கிழக்கு மேலாதிக்கமும் கிழக்கு மக்களை கருதுகின்றது. கருணா தலைமையாகட்டும், கிழக்கு என்று கூறும் அனைவரும், கிழக்கு மக்களை தமது கோவணமாகவே கருதுகின்றனர். கிழக்கு மக்களின் சமூக பொருளாதார பிரச்சினை மீது எதிர்வினையாற்றாத அனைத்தையும், நாம் எதிர்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். கிழக்கு மக்களின் சமூக பொருளாதார வாழ்வியல் பிரச்சினைக்காக குரல் கொடுக்கும் எந்தக் குரலையும், நாம் ஆதரிக்கமுடியும். ஒடுக்கப்பட்ட மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுப்பதும், தனக்கான தலைமையை உருவாக்குவதும் அவசியமானது. இதை செய்யாத அனைத்து பித்தலாட்டங்களும், மோசடிகளும் அரசியலில் சகித்துக்கொள்ளவே முடியாதது.


"யாழ்ப்பாணத்தின் மானம் காக்கும் கோவணம் அல்ல" என்று கூறுவதன் மூலம், யாழ் மக்களை கிழக்கின் எதிரியாக சித்தரிக்கின்றனர். யாழ் மேலாதிக்கம் யாழ் மக்களுக்கே எதிரானது. யாழ் மக்களின் நலனை குழி தோண்டி புதைப்பது தான் யாழ் மேலாதிக்கம். இப்படி இருக்க அந்த யாழ் மக்களை எதிரியாக சித்தரிக்கும் கிழக்கு மேலாதிக்கம், யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக இருப்பதையே எடுத்துக்காட்டுகின்றது. யாழ் மேலாதிக்கத்தின் எதிரியாக யாழ் மக்கள் எப்படி எந்தக் காரணத்தினால் இருக்கின்றனரோ, அப்படி கிழக்கு மேலாதிக்கத்தின் எதிரியாக யாழ் மக்கள் இருக்கின்றனர். இதேபோல் தான் இவ்விரண்டு பகுதிக்கும் கிழக்கு மக்களும் உள்ளனர். யாழ்ப்பாண மக்களின் கோவணமாக கிழக்கு மக்கள் ஒரு நாளும் இருந்தது கிடையாது. யாழ்ப்பாண மக்களின் நலனும், கிழக்கு மக்களின் நலனும் ஒன்றுபட்டவை. இந்த வகையில் யாழ் மேலாதிக்கம் உட்பட அனைத்து மேலாதிக்கத்தையும் எதிர்ப்பதில் தான், அந்த மக்களின் நலன்கள் அடங்கியுள்ளது. மக்களின் நலன்களை மறுப்பதில் யாழ் மேலாதிக்கம் மட்டுமல்ல, கிழக்கு மேலாதிக்கமும் ஒன்றுபட்டு நிற்கின்றது. இதுவே எதார்த்த உண்மை.


யாழ் மேலாதிக்கம் போல் குறுகிய எல்லையில் குறுக்கு வழியில் கட்டமைக்கும் கிழக்கு மேலாதிக்கம், அதை இயக்கத்தின் தனிமனித தலைமை நபர் ஊடாக பார்க்கின்றது. "இந்த யாழ்.மையவாத சிந்தனையில் இருந்து வெளிப்பட்டமையால் தான் போராட்ட அமைப்புகளின் தலைமைகள் அனைவரும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்களாயிருந்தார்கள் (குட்டிமணி, உமாமகேஸ்வரன், பிரபாகரன், இரத்தினசபாபதி, பத்மநாபா, பாலகுமார், சிறிசபாரட்ணம், பனாங்கொடை மகேஸ்வரன், வட்டுக்கோட்டை ஜெகன், நாகராஜமாஸ்ரர், விசுவானந்ததேவன், பாலசுப்ரமணியம், அ.பகீரதன், காண்டீபன், ஒப்ராய்தேவன்..)". இப்படி அரசியலை கைவிட்டு, அதை வெட்டி சிறுக்கவைத்த, கருணா என்ற கிழக்கு நபரை கிழக்கு நலன் சார்ந்ததாக காட்டும் அரசியல், கிழக்கு மேலாதிக்கத்தின் பொறுக்கித்தனமாகும். ஒரு இயக்கத்தின் தலைமையில் இருப்பவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தான், அவரின் மேலாதிக்கத்தின் அடையாளம் என்று கூறுவது அசட்டுத்தனமாகும். இது இயல்பாக கருணாவுக்கு பின்னால் வாலையாட்டி, விசுவாசமாக கிழக்கு மையவாதத்தை முன்வைக்கின்றது. இந்த கிழக்கு மையவாதம் மற்றும் புலியெதிர்ப்பு அரசியல் வங்குரோத்தின் வெட்டுமுகத்தை தெளிவுபடுத்துகின்றது.


இப்படி பார்த்தால் இந்தியாவின் ஜனாதிபதி தாழ்த்தப்பட்டவராக இருந்த போது, அங்கு தாழ்த்தப்பட்டவர் ஆட்சியா நிலவுகிறது, இன்று முஸ்லீம் ஆட்சியா நிலவியது. இல்லை. ஆனால் போக்கிரித்தனமாக அரசியல் இதைத்தான் கூற முனைகின்றது. போராட்ட தலைமைகள் யாழில் தொடங்கியதே யாழ் மையவாதம் என்றால், இந்தக் கூற்று நகைப்புக்குரியது. தலைமையின் உருவாக்கம் ஒரு பிரதேசத்தில் இருந்தது என்பதால், அதை யாழ் மையவாதம் என்பது, உண்மையில் யாழ் மையவாதத்தை திரித்து அதைக் கொச்சைப்படுத்தி கொல்லைப்புறத்தால் அதைப் பாதுகாப்பதுதான். யாழ் மேலாதிக்கத்தின் கோவணமாக கிழக்கு மேலாதிக்கம் இருப்பதையே இது பறைசாற்றுகின்றது.


மக்களை மக்களாக மதிக்காத குருட்டுப் பார்வை. மக்கள் மக்களாகவே இருக்கின்றனர். யாழ்ப்பாண மக்களை யாழ் மையவாதத்தின் பிரதிநிதிகள் என்றால், அங்கு வாழும் தாழ்த்தப்பட்ட மக்களை எப்படி பார்ப்பது. இப்படி இவர்கள் கிழக்கு மேலாதிக்க சின்னத்தனங்கள், யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான யாழ் மக்களின் போர்க்குணாம்சம் மிக்க போராட்டங்களையே கொச்சைப்படுத்தி இருட்டடிப்பு செய்வதன் மூலம், அதேயொத்த கிழக்கு மேலாதிக்கத்தை மக்களுக்கு எதிராக கட்டுவதாகும். இந்த வகையில் நடைபெற்ற ஒரு முக்கிய போராட்டம் தான், விஜிதரன் போராட்டம். பலருக்கும் தெரியாதது, விஜிதரன் கிழக்கைச் சேர்ந்தவன் என்பது. இந்த மாணவனை புலிகள் கடத்திசென்ற நிலையில், புலிக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகம், யாழ் மக்கள் எழுச்சி கொண்டு போராடினர். தமிழ் மண்ணில் நடந்த உண்மையான ஒரு மக்கள் போராட்டத்தின், ஒரு வீச்சான உண்மையான குணாம்சத்தை அது காட்டியது.


யாழ் மேலாதிக்க தலைமைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டம். பல்கலைக்கழகத்துடன் நிற்காது, பாடசாலைகள் முதல் அனைத்தும் சமூக தளங்களும் தழுவிய வகையில், பரந்த மக்கள் மத்தியில் போராட்டத்தை எடுத்துச்சென்றது. யாருக்கு எதிராக, யாழ் மையவாதத்துக்கு எதிராக, அதன் பாசிசத்துக்கு எதிராக, அனைத்து இயக்கத்தின் ஜனநாயக விரோத போக்குக்கும் எதிராக, இப்போராட்டம் நடத்தப்பட்டது.


இதை நாம் அன்று தலைமை தாங்கிய போது, எமது அரசியல் அதை சரியாக இட்டுச்சென்றது. எந்த மாகாணத்தில் எந்தச் சாதியில் பிறந்தோம் என்பதல்ல, என்ன அரசியல் என்பது தான் தீர்மானித்தது. ஒரு மாதத்துக்கு மேலாக நடத்திய போராட்டத்தில், அந்த கிழக்கு மகனுக்காக யாழ் மக்கள் கண்ணை மூடிக்கொள்ளவில்லை. இதற்கு தலைமையேற்ற சிலர், பின்னால் கொல்லப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் நடந்து சாகும்வரை உண்ணாவிரதத்தில் 5 யாழ் மாணவர்களும் (இதில் ஒருவர் பெண்), ஒரு கிழக்கு மாணவியும், ஒரு பொது மகனும் பங்கு கொண்டனர். இங்கு எந்த யாழ் கதையாடலும் கட்டப்படவில்லை. ஒரு மனிதன் கடத்தப்பட்டு காணமல் போனான் என்ற வகையில் தான், அந்த மக்கள் போர்க்குணாம்சத்துடன் இதை எதிர்கொண்டனர். இந்த போராட்டத்தில் வைக்கப்பட்ட கோசங்கள், புலிகளை அரசியல் அனாதையாக்கும் கோரிக்கைகள் என்று, இந்த யாழ் மேலாதிக்க புலிகள் துண்டுபிரசுரம் மூலம் அறிவித்தவர்கள்.

 
இதை சரியாக வழிநடத்திய தலைமை யாழ்ப்பாணமா அல்லது கிழக்கா என்பது தீர்மானிக்கவில்லை, என்ன அரசியல் என்பது தான் அதை நிர்ணயம் செய்தது. வடக்கில் மற்றைய இயக்கங்களை புலிகள் படுகொலை செய்து அழித்தபோது, கிழக்கு போராளிகள் தப்பி வாழ முடியாத நிலையில், அவர்களில் பலர் உயிர் தப்பிவாழ இந்த யாழ்ப்பாண மக்கள் உதவியதை நாம் எப்படி கிழக்கு மேலாதிக்கம் மூலம் கொச்சைப்படுத்த முடியும். இதனால் சிலர் தமது உயிரை பாசிஸ்ட்டுகளிடம் இழந்தனர். பாசிஸ்ட்டுகள் விடுத்த அச்சுறுத்தல் தான், தஞ்சம் கொடுக்கவே அஞ்சுமளவுக்குரிய காரணமாக இருந்தது. இது கிழக்குக்கு என்று மட்டுமல்ல, வடக்குக்கும் தான் கொடுக்க மறுத்தது. இந்த இயக்க தலைமை வடக்கு மக்களுக்கும் எதிராகத் தான் இருக்கின்றது.


அது மக்கள் கூட்டத்தை எதிராக கட்டமைத்து காட்டுவதைத்தான் யாழ் மேலாதிக்கம் செய்தது என்றால், அதையே கிழக்கு மேலாதிக்கம் செய்ய நினைப்பது வரலாற்றின் நகைப்புக்குரிய ஒன்றாகவும் உள்ளது. யாழ் இயக்க தலைமைகள் பற்றி கூறுகின்றவர்கள், வசதி கருதி சிலவற்றை இருட்டடிப்பு செய்கின்றனர். கிழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றி மறைந்ததை மறந்து விடுவது, மறைத்துவிடுவது வசதிகருதித்தான். மொத்தம் 30க்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின. அதில் கிழக்கில் ஒன்றுக்கு மேற்பட்ட இயக்கங்கள் தோன்றின. இவை வரலாற்றில் நிற்க முடியாது போனது, கிழக்கில் மட்டுமல்ல வடக்கிலும் தான் நிகழ்ந்தது. ஒரு தலைப்பட்சமாக யாழ்ப்பாணத்தில் மட்டும் இயக்கங்கள் தோன்றவில்லை. கிழக்கிலும் தோன்றத்தான் செய்தது. அதன் தலைவர்கள் கிழக்கைச் சேர்ந்தவர்கள் தான். இதை எல்லாம் மறைத்து விளையாடுவது வசதியான, வசதி கருதிய குறுகிய அரசியல் வக்கிரம் தான். கிழக்கில் ஒரு போராட்டம் தொடங்க எந்தவிதத்திலும், யாழ் மையவாதம் தடையாக இருக்கவில்லை.


"யாழ்ப்பாணத்தினுடைய மத்தியதர வர்க்கத்தின் அபிலாசைகளுக்காக தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட "தமிழீழ கதையாடல்" தனது அந்திம காலங்களில் தள்ளாடிக்கொண்டிருக்கிறது." இதுவே நல்லதொரு நகைச்சுவைக்குரிய பேரினவாத கதையாடல். மத்தியதர வர்க்கம் கிழக்கில் இல்லையென்பது இதன் சாரம். இங்கு இந்தக் கதையாடல் பற்றிய புலம்பல், மிகக் கவனமாக பேரினவாதத்தின் மறுபக்கத்தை இருட்டடிப்பு செய்கின்றது. இப்படி இருட்டடிப்பு மூலம் தான், இதை கிழக்கு மக்களின் பிரச்சினையல்ல என்று காட்டுவது சாத்தியமாகின்றது. யாழ் மையவாத அரசியல் கிழக்கில் ஆதிக்கம் வகிக்க முன்னமே, பேரினவாதம் கிழக்கில் சூறையாடி வருவதையே நாம் மேலே பார்த்தோம்.

 

சிங்கள பேரினவாதம் தான் தமிழ் கதையாடலை கட்டமைத்தது என்பதை காணமறுப்பது, அதைக் கண்டு கொள்ளாமல் இருட்டடிப்பு செய்வது, கதையாடல்களை புனைவதும் கிழக்கு மேலாதிக்க அரசியல் உள்ளடக்கமாகும். அதுவும் பேரினவாதத்தின் பின்னால் நின்று செய்வது இங்கு கேடுகெட்ட கேவலமாகும். தமிழ் மக்களின் பிரச்சினைகள் அத்திம காலத்தை அடையவில்லை. மாறாக அதை தமதாக்கிய பிரிவுகளின் அரசியல் தான், அத்திம காலத்தை அடைகின்றது. இது கருணா என்ற கிழக்கு மேலாதிக்க பாசிச கும்பலுக்கும் விதிவிலக்கல்ல. மக்களின் பிரச்சினை பிரச்சினையாகவே இருக்கின்றது.


இது வடக்கு மக்களுக்கு மட்டுமல்ல, கிழக்கு மக்களுக்கும் அதேநிலை தான். இங்கு இந்த அந்திம காலத்தில் யாழ்ப்பாண மத்தியதர வர்க்கத்தின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. உண்மையில் பேரினவாதம் புகுத்திய இனவாதம், அப்படியே உள்ளது. இதை இல்லை என்று காட்டுகின்ற கதையாடல், உள்நோக்கம் கொண்ட புலியெதிர்ப்பாகவும், கிழக்கு மேலாதிக்கமாக நீடிக்கின்றது. சொல்லப்போனால் பேரினவாத குடையின் கீழ் அரசியல் பிழைப்பு நடத்துபவர்களின் கதையாடல் தான்.


"இந்தத் தமிழீழக் கனவுக்காக கிழக்கு மண்ணில் காலூன்றிய தமிழ் பேரினவாத வெறியினால் பல்லினங்களைக் கொண்ட கிழக்கு மாகாணத்தினது உயிர் மூச்சாக ஒருகாலத்தில் திகழ்ந்த "சமூக நல்லிணக்கம்" கழுத்து நெரிக்கப்பட்டு இன்று குற்றுயிராகக் காட்சியளிக்கின்றது." என்று கூறுகின்ற கூற்று உண்மைக்கு புறம்பானது. சொந்த மக்களுக்குள்ளேயே எத்தனையோ ஏற்றத் தாழ்வுகளும், ஒடுக்குமுறைகளும். இப்படி இருக்க மற்றைய மக்களுடன் ஒன்றாக இருந்தது பற்றிய புனைவு இட்டுக்கட்டலாகும்.


இங்கு மிகக் கவனமாக சிங்கள மக்களுடன் சமூக நல்லிணக்கத்தை கொண்டு வாழ்ந்ததாகக் காட்ட முடியவில்லை. சமூக நல்லிணக்கத்தை முதலில் மறுத்தது, சிங்களப் பேரினவாதம் தான். இதையே நாம் அதன் திட்டமிட்ட குடியேற்றத்தில் தெளிவாக காண்கின்றோம். சமூகங்கள் நல்லிணக்கமற்ற வகையில் இருத்தல் என்பதற்காகவே, இயல்பான குடியேற்றத்துக்கு பதில் இனவாத குடியேற்றத்தை நடத்தினர். இது தமிழ், முஸ்லீம் மக்களையே தனது எதிரியாக கருதியது. இதில் சிங்கள மக்கள் அல்லது குடியேறிய மக்கள் பகடைக் காய்களாக பயன்படுத்தப்பட்டனர். பொதுவான ஒடுக்குமுறைகளை கண்டு கொள்ளாத போக்கு ஒடுங்கி வாழ்வதை, இணக்கப்பாடாக காண்பது அபத்தம். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கு இடையில், தமது பொது எதிரிக்கு எதிராக இணங்கி வாழ்தல் என்பது, உங்கள் கிழக்கு மேலாதிக்க அரசியல் நிலைக்கு உட்பட்டவையல்ல.


சிங்கள பேரினவாதத்துக்கு எதிராக எழுந்த தமிழ் தேசியம் குறுந்தேசியமாகி அதுவே பாசிசமாகிய போது, அதுவும் தன் பங்குக்கு சமூக நல்லிணக்கத்தை மறுதலித்தது. மொத்தத்தில் இலங்கையில் ஆதிக்கம் பெற்ற மேலாதிக்க பிரிவுகளின் அரசியல் தான், சமூக நல்லிணக்கத்தை விதைத்தது. மக்கள் மக்களாகவே, அதாவது உழைக்கும் மக்களாக தம்மீதான ஒடுக்கமுறைக்கு எதிராக ஒன்றுபட்டு இருக்கின்றனர்.


அவர்கள் தாம் என்ன மொழி பேசுகின்றோம் என்று பாகுபாடு காட்டி சமூகத்தில் இயங்குவது கிடையாது. அப்படி இருப்பதாக திணிப்பது, மேலாதிக்க சமூகப் பிரிவுகளின் சுயநல அரசியலாகும். இன்று கிழக்கு மேலாதிக்கம் யாழ் மக்களுக்கு எதிராக கட்டுகின்ற அதே அரசியல் உள்ளடகத்தைத் தானே, யாழ் மேலாதிக்கமும் கையாண்டது. மக்களை எதிரானதாக நிறுத்துகின்ற அபத்தம் தான் இங்கு அரசியலாகின்றது. வடக்கு கிழக்கு மக்களுக்கு இடையில் நல்லிணக்கம் எதுவும் இல்லையோ?


"ஒருகாலத்தில் திகழ்ந்த 'சமூக நல்லிணக்கம்' கழுத்து நெரிக்கப்பட்டு இன்று குற்றுயிராகக் காட்சியளிக்கின்றது." என்று கூறிக் கொண்டு யாழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கின்ற கிழக்கு மேலாதிக்கம், இதை கிழக்கில் கூட செய்ய முனையவில்லை. யாழ் மேலாதிக்கத்தை அதன் சமூக பொருளாதார கூறுகளில் இனம்காட்டி, அதை தனிமைப்படுத்தி எதிர்க்க வக்கின்றி, யாழ் மக்களை எதிராக கட்டமைத்து காட்டுவது சமூக நல்லிணக்கமோ! ஒரு ஒடுக்கப்பட்ட மக்களுடன், ஒன்றிணைந்து நிற்க மறுப்பது, அதை அடிப்படையாகக் கொண்ட அரசியலை முன்வைக்க மறுப்பது, சமூக நல்லிணக்கத்துக்கே எதிரானது.


இதை மறுத்து, நல்லிணக்கத்தை மற்றொரு பேரினவாத கூலிப் பாசிஸ்ட்டு மூலம் காட்டுவது தான் வேடிக்கை. "தமிழீழத்தின் பெயரில் அதற்காக தாகம் கொண்டலைவதாகச் சொல்லிக்கொண்ட புலிகள் ஊட்டிய இனவெறிகளினால் இதுவரை காலமும் தமிழ் - முஸ்லிம் என ஆழமாக பிளவுபடுத்தப்பட்டிருந்த கிழக்கிலங்கை மக்கள் கருணா பிரிவின் பின்னர் தாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய இன நல்லுறவின் அவசியத்தை உணரத் தலைப்பட்டுள்ளனர்." இப்படித்தான் கிழக்கு மேலாதிக்கம் யாழ்மேலாதிக்க கோவணமாக கூவ முனைகின்றது.


கிழக்கு மேலாதிக்கம் கருணாவின் வடிவில் இருப்பதை இது தெளிவாக்கி நிற்கின்றது. கருணாவின் பிளவின் பின், கிழக்கு பற்றிய கதையாடல் தொடங்கியவர்களின் அறப் புலம்பல்கள் தான் இது. சரி தனிமனிதனை மையப்படுத்தி கதையாடல் என்ற வகையில், கருணாவுக்கும் பிரபாகரனுக்கும் அவர்கள் சார்பு கும்பலுக்கும், என்னதான் வேறுபாடு உண்டு. எதுவுமில்லை. அவர்களின் அரசியல் நடத்தையில், அவர்களில் அரசியல் நடைமுறையில் தான் என்ன வேறுபாடு. கருணா தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, ஒரு சமூக முரண்பாட்டை பயன்படுத்திக் கொண்ட ஒரு இழிந்த அற்பன். இதில் நேர்மை என்பதுக்கு, எந்த இடமும் இல்லை. இப்படிப்பட்ட ஒருவனின் அரசியல் கிழக்கு மேலாதிக்கமாகுமே ஒழிய, எந்த சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்காது. அது ஒடுக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு சார்பானதல்ல. கிழக்கு வாழ் ஒடுக்கப்பட்ட மக்களுக்கே எதிரானது. இதைத்தான் யாழ் மேலாதிக்கம் காலாகாலமாக செய்தது.


ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான மேலாதிக்கப் பிரிவுகளினால் ஒருநாளும் மனிதத்துவத்தை உருவாக்கமுடியாது. இங்கு "தமிழீழத்தின் பெயரில்" என்று கூறுவதன் மூலம், அதை கைவிட்டு பேரினவாதத்துடன் கூடி தீர்க்க முனையும் அலுகோசுகளின் பாதையையே காட்டுகின்றது. தமிழீழக் கோசம் என்ற வகையில், அது தன்னளவில் அனைத்து தவறுக்குமான காரணமல்ல. மாறாக அது கொண்டிருந்த அரசியல் தான் காரணம். அந்த மக்கள் விரோத அரசியலைப்பற்றி பேசாது, ஒரு சமூக ஒடுக்குமுறை சார்ந்த கோசத்தின் மீது குற்றம் சாட்டி வரலாற்றை திரிப்பது, உள்நோக்கம் கொண்ட அரசியல் சதியாகும். அதுவே மக்களுக்கு எதிரானது. அந்த வகையில் தான் புனையப்படுகின்றது.


இந்த புனைவாளர்கள் "2004 மார்ச் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகளுக்குள் ஏற்பட்ட பிளவானது கிழக்கு மாகாணத்தில் இருந்த முஸ்லிம்கள் அல்லாத தமிழர்களையும் தமிழீழ தாயகக் கோட்பாட்டில் நம்பிக்கையற்று வெளியேறச் செய்துள்ளது. இன்றைய நிலையில் கிழக்கிலங்கையின் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழீழத்துக்கு வெளியே தமது அரசியல் அபிலாசைகளை தேடத் தொடங்கியுள்ளனர்." மக்களையே நெருங்காத, அவர்களின் பிரச்சினையையே பேசாத ஒரு கும்பலின், நல்லதொரு ஒரு கதையாடல். இது புலிகளே தமிழ் மக்கள் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கட்டப்பட்ட ஒரு புனைவுக் கதை. கருணாவை கிழக்கு மக்களின் ஏகபிரதிநிதியாக கட்டமைக்கின்ற அதே புலி அரசியல்.


கருணா புலியில் இருந்த போது கூட கிழக்கு மக்களின் அபிலாசைகளோடு இணைந்து இருக்கவில்லை. பிரிந்த பின்பும் ஒன்றாக எப்படி மாறியது? மக்களின் காதுக்கு பூ வைக்கும் படலம் தான், இந்த கிழக்கு மேலாதிக்க கட்டமைப்புக்களும், அதன் வக்கிரங்களும். புலிகள் எப்படி தமிழ் மக்களுக்கு எதிராக இருந்தனரோ, அப்படித்தான் கருணாவும் அதில் இருந்தவர். அவர் பிரிந்த போது கூட, அந்த மக்கள் மக்களாகவே அதே அடிமைத்தனத்துடன் தான் உள்ளனர்.


தமிழ் மக்கள் தமிழீழத்துக்கு வெளியில் வேறு தீர்வை நாடுகின்றனர் என்பது, ஒரு தலைப்பட்சமாக குறுகிய உள்நோக்கம் கொண்ட ஒரு அரசியலாகும். தமிழீழம் என்ற கோரிக்கையை புலிகள் தமது பாசிச வழிகளில் சிதைத்தது என்பது, தமிழ் பேசும் மக்களின் தெரிவல்ல. மக்கள் எதிரான இரண்டு தளத்திலான (புலிகள் மற்றது புலியெதிர்பு அணி) எதிர்வினைகளால், மக்களின் செயலற்ற தன்மை தான் கட்டமைக்கப்பட்டது. இந்த நிலையில் மக்கள் அரசியல் ரீதியாக எந்த முடிவையும் எடுக்கும் நிலையில், அவர்கள் சுயாதீனமான எதுவும் கிடையாது. கிழக்கு வாழ் மக்கள் அரசியல் சுதந்திரமற்ற நிலையில், அவர்களின் பெயரில் தமிழீழத்துக்கு எதிராக இருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது. கிழக்கு மேலாதிக்க கும்பலின் கைக் கூலித்தன முடிவுகளை, கிழக்கு மக்களின் பெயரில் திணிப்பதாகும். இதைத் தான் புலிகளும் செய்தவர்கள்.


கூலிக் கும்பலாக பேரினவாதத்துக்கு பின்னால் நிற்கின்ற கருணா போன்றவர்களையே இவை பிரகடனம் செய்யப்படுகின்றது. அன்று புலியில் இருந்து தனிப்பட்ட பிரச்சினை காரணமாக பிரிந்தவர், பிரதேசவாதத்தை கிளப்பியவர், இன்று மக்களின் பெயரில் தமிழீழத்துக்கு எதிராக பேரினவாதத்துடன் சேர்ந்து கும்மியடிக்கின்றனர். மக்கள் எந்த முடிவையும் சுயாதீனமாக எடுக்க முடியாத ஒரு பாசிச சூழலை கட்டமைத்து வைத்தபடி தான், இவைகள் மக்களின் பெயரில் உரைக்கப்படுகின்றது.


தமிழீழத்தை புலிப் பாசிசமும், புலியெதிர்ப்பு அருவடித்தனமும் சிதைத்த போதும், பேரினவாதம் பேரினவாதமாகவே உள்ளது. இதற்கு மாற்று என்று இவர்களிடம் எதுவுமில்லை. மேலாதிக்க சக்திகள் தாம் சொந்த வாழ்வுக்கு ஏற்ற ஒரு தீர்வை அடைவதற்காகத் தான், இப்படி மூடிமறைக்கப்பட்ட அரசியல் சதிகளை மக்களின் பெயரில் கூறுகின்றனர்.


இப்படி பற்பல கிழக்கு மேலாதிக்க கதையாடல்கள், பல்வேறு அபத்தங்கள் புனையப்படுகின்றன. அனைத்தும் மக்களின் பிரச்சினை பற்றி பேசாத வகையில், இவை சூழ்ச்சிகளுடன் கட்டமைக்கப்படுகின்றன. கிழக்கில் வாழும் அந்த 90 சதவீதமான ஏழை விவசாயிகளின் ஒரு நேரக் கஞ்சியே கிடைக்க மறுக்கின்ற அவல வாழ்வை, இவர்களின் எந்த அரசியலும் தீர்க்கமாட்டாது. மக்களிடம் இருக்கும் கோவணத்தை உருவும் கிழக்கு மேலாதிக்க அரசியல், உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கத்தின் மானத்தை மறைக்கும் மற்றொரு கோவணம் தான்.


08.02.2007


பி.இரயாகரன் - சமர்