06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

கிழக்கில் இருந்து புலிகள் மட்டுமல்ல, கருணா தரப்பும் ஒழித்துக் கட்டப்படுவார்கள்

தமிழ் தேசிய யாழ் மையவாதம் மட்டுமல்ல, கிழக்கு மையவாதமும் பேரினவாதத்தினால் அழிக்கப்படும். பேரினவாதம் மட்டும் தான், மீண்டும் வெற்றி பெறும் எதார்த்தம். இதை நோக்கிய அரசியல் எல்லைக்குள் தான், அனைத்தும் மையப்பட்டு செயல்படுகின்றது. தமிழ் மக்களின் அழிவும் சீரழிவும், புலிகளால் மட்டுமல்ல கருணா தரப்பாலும், அதற்கு அப்பால் புலியெதிர்ப்பு கும்பலாலும், கிழக்கு மையவாதிகளாலும் கூட நடக்கின்றது. கிழக்கு வாழ் தமிழ் மொழி பேசும் மக்களின் தனித்துவமே திட்டமிட்ட வகையில் ஒழித்துக்கட்டப்படும். இதை நோக்கி ஒரு நிழல் யுத்தம் நடக்கின்றது. இதில் தமிழ், முஸ்லீம் என்று வேறுபாடுகள் எதுவும் இருக்கப் போவதில்லை. இந்த நிலைமையை குறைந்தபட்சம் புரிந்துகொள்ளக் கூடிய அரசியல் கூட, எந்த தரப்பிடமும் இன்று கிடையாது.


வரலாற்றில் நிகழப்போகும் நிகழ்ச்சிகளை எம்மால் முன்கூட்டியே நிச்சயமாக எதிர்வு கூறமுடிகின்றது. புலிகள் இந்த நிழல் யுத்தத்தை ஒருதரப்பாக வலிந்து தொடங்க முன், இந்த யுத்தத்தின் விளைவை நாம் முன் கூட்டியே கூறியிருந்தோம். மக்கள் பெயரில் யுத்தத்தை புலிகள் கோரிய போது, அந்த யுத்தம் தொடங்கினால் முதலில் கிழக்கில் இருந்து புலிகள் ஒழித்துக்கட்டப்படுவார்கள் என்பதை நாம் முன் கூட்டியே பலமுறை எழுதியிருந்தோம். எமது இந்த அரசியல் ரீதியான சரியான எதிர்வு கூறல் மீது, சிலர் அது சாத்தியமற்ற ஒன்றாகவே கருதினர். இப்படி பல சரியான அரசியல் அவதானங்கள், அதன் விளைவுகள் நாங்கள் வெளியிட்டது போன்று நிகழ்கின்றது. இதை நாம் இங்கு கூறுவதன் நோக்கம், எதிர்கால நிலைமைகள் மீதான எமது அரசியல் எதிர்வினையை, எமது சரியான அரசியல் பார்வையை உட்கிரகிக்க வேண்டிய வரலாற்றின் தேவையை இடித்துரைக்கவே.


எமது அரசியல் அனுமானங்கள், முடிவுகள் சரியாகவே நாம் விளக்கியபடி நிகழ்ந்து வருகின்றது. புலிகள் கிழக்கில் இருந்து கிட்டத்தட்ட முடக்கப்பட்ட ஒருநிலையில், கூனிக் குறுகி நிற்கின்றனர். இதில் இருந்து அவர்களால் மீளவே முடியாது. புலிகள் ஒரு தற்கொலைக்கு ஒப்பான பாரிய தாக்குதலை நடத்த முயன்றாலும், நிலைமை அவர்களுக்கு சாதகமாக மாறாது. மக்கள் மத்தியில் இருந்து புலிகள் அன்னியமாதல் என்பது, வரலாற்றில் அவர்கள் காணாத அளவில் நிகழ்ந்துள்ளது. மறுபுறத்தில் பேரினவாதம் விரைவில் கிழக்கில் இருந்து புலிகள் முற்றாக ஒழித்துக்கட்டப்படுவர் என்கின்றது. புலிகளோ எந்த வீர சாகச சலசலப்புமின்றி நரிகளாக ஒடுங்கி மௌனமாகிவிட்ட நிலையில், ஒவ்வொரு முகமாக சந்தடியின்றி பேரினவாதத்தின் சூழ்ச்சியில் வீழ்ச்சியுறுகின்றது. தமிழ் மக்களின் தற்கொலைக்கு ஒப்பான குறுந்தேசிய இன வரலாறு, சொந்த பாசிசத்தால் தானாகவே மரணித்துக் கொண்டிருக்கின்றது.


இந்த நிகழ்ச்சிகள் புலிகளின் வரலாற்றில் தற்செயலானவையல்ல. புலிப் பாசிசம் தானாகவே வெம்பி வீங்கி, தானாகவே பொலபொலவென்று உதிர்கின்றது. இது கிழக்கில் தொடங்கிவிட்டது. வெம்பல் எந்த கறிக்கும் கூட உதவுவதில்லை என்பது போல், இந்தப் போராட்டம் எதையும் மக்களுக்காக சாதித்தது கிடையாது. மனித அழிவுகளையும் அவலங்களையும் தவிர, தமிழ் மக்கள் கண்டது இன்று எதுவுமில்லை. தமது சீரழிவையே, தேசிய வீரமாக முன்கூட்டியே புலிகள் பிரகடனம் செய்தனர். ஆனால் இதன் விளைவை நாம் முன்பே சுட்டிக்காட்டி வந்தோம். கருணா விவகாரம் ஒரு அதிகாரப் போட்டியாக வந்தபோது, நாம் எழுதிய கட்டுரையில் மிகத் தெளிவாக இதன் விளைவை வலியுறுத்தினோம். தமக்கு இடையிலான அதிகார மோதலை, ஒரு பிரதேச மோதலாக புலிகள் பாணியில் கருணா தரப்பு காட்டியபோது, புலிகள் தமிழ் மக்கள் பெயரால் எதிர்வினையாற்றும் அதே பண்பு, இதற்கு இருக்கும் என்பதையும், இதை புலிப்பாசிசம் உணர மறுப்பதையும் நாம் சுட்டிக்காட்டினோம்.


அதன் விளைவாக ஒரு சமூகத்தை இராணுவ வன்முறைக்குள் அடக்கிவிடலாம் என்று நம்பிய யாழ் மையவாதம், நடுச்சந்தியில் நிர்வாணமாகி நிற்கின்றது. அன்று கருணா தரப்பை வெறும் கருணாவாக, அதை வெறும் குறியீடாக காட்டியதன் விளைவு, தமிழ் மக்களை ஈடுசெய்ய முடியாத வரலாற்று முடிவுக்கு இட்டுச் சென்றுள்ளது. இதன் இறுதி ஆணிகள் அடிக்கப்படுகின்றது. இப்படி அதிகார போட்டியில் தனிக் குழுவான கருணா ஒன்றும் புலிகளின் நடத்தைகளில் இருந்து, அவர்களின் அரசியலில் இருந்து எந்த விதத்திலும் வேறுபட்டவர் அல்ல. புலிகள் தமிழ் மக்கள் மீது எதிர்வினையாற்றுவது போல், கருணா கிழக்கு மக்களின் மீது எதிர்வினையாற்றுகின்றார். மக்கள் பிரச்சினைகள் மீது புலிகள் போல் கருணா தரப்பும் செயல்படுவதுடன், இதற்கு மாறாக எந்த முன்முயற்சியும் எடுக்கவில்லை.


மக்களுக்கு எதிராக புலிகளைப் போல் செயல்பட்டபடி, தன்னை தற்பாதுகாத்துக் கொள்ள, இந்தியா இலங்கை அரசின் அரசியல் நோக்களுக்கு ஏற்ப ஒரு விசுவாசமுள்ள நாயாக சீரழிந்தார். இப்படி ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை உரிமைகள் மறுத்து, மக்களை சார்ந்து நிற்கத் தவறினார். ஒட்டுமொத்தத்தில் அரசியல் களம் என்பது மக்களில் இருந்து அன்னியமான குழு நடவடிக்கையாகி, அக் குழுக்கள் இன்னமொரு கூலி இராணுவத்தினால் அழிக்கப்படுகின்றது. புலிகள் அழிக்கப்படும் வரை தான், கிழக்கில் கருணா குழுவின் ஆட்டமும் கூத்தும் நடக்கும். புலிகளை கிழக்கில் இருந்து முற்றாக துடைத்தொழிக்கப்படும் நாட்கள் எண்ணப்படும் இன்றைய நிலையில், கருணா குழுவின் அட்டகாசங்கள் ஓங்குகின்றது. உண்மையில் சொல்லப் போனால் பேரினவாதம் கருணா குழுவின் வடிவில் இயங்குகின்றது. உண்மையில் இந்த சூதாட்டம் புலியை ஒழித்துக்கட்டப்படும் வரையிலான, பேரினவாத சலுகையும் சூழ்ச்சியுமாகும்.


கிழக்கில் புலிகள் முடிவு தெளிவானவுடன், கருணா குழுவின் ஆட்டத்தை பேரினவாதம் முடிவுக்கு கொண்டு வரும். புலிகளை அழிக்கும் வெறும் கூலிக் குழுவாக இருக்க மட்டும் அனுமதிக்கும் எல்லைக்குள் தான், கருணா குழுவின் அரசியலை பேரினவாதம் அனுமதிக்கின்றது. இதை மீறும் போது கருணா குழுவும் அழிக்கப்படும். இந்த உண்மையை யாரும் நிராகரிக்க முடியாது. இதை கருணா குழு புலியை ஒழித்த பின் மீறமுடியும் என்று நம்புவது, புலிகள் தம்மைத்தாம் நம்பக் கோருவது போன்ற ஒரு கற்பனையான வெற்று நம்பிக்கை தான். பலரும் கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுகின்றனர். புலிகள் கிழக்கில் இருந்து ஒழித்துக்கட்டப்பட்ட பின், கருணா என்ற கூலிக் குழு சொர்க்கத்தின் வழியை காட்டுவார்கள் என்று நம்ப முனைகின்றனர். கிழக்கைச் சேர்ந்த, புலியெதிர்ப்பை அரசியலாக கொண்ட மக்கள் விரோத புல்லுருவிகள் இப்படி கொக்கரிக்கின்றனர். பேரினவாதம் கிழக்கு மக்களின் ஜனநாயகத்தை மீட்டு, அதன் தனித்துவத்தை உறுதி செய்யும் என்று இவர்களின் அற்ப அரசியல் புலம்பவைக்கின்றது. ஆனால் நடக்கப் போவது அந்த மக்களின் சுடுகாடுதான். மக்களின் பிரதான எதிரியான பேரினவாதம் தன் நோக்கில் எந்த எதிர்ப்புமின்றி, சலசலப்பின்றி செயல்படுகின்றது.

 
யாழ் மையவாதம், அதை பிரதிநித்துவம் செய்யும் புலிகள், புலிகள் அல்லாத தரப்பு மீது காட்டுகின்ற எந்தவிதமான கோட்பாடற்ற கிழக்கு மையவாத புலம்பல்கள் அனைத்தும் மக்களுக்கு எதிரானது. மக்கள் என்ற கோணத்தில், மக்கள் நலன்கள் என்ற அடிப்படையில், இவர்களிடம் எந்த அரசியல் முன்முயற்சியும் கிடையாது. மாறாக அகதி முகாம் நடத்த கிழக்கின் பெயரில் புலியைப் போல பணம் சேகரிப்பதில் மட்டும் தான் இவர்களின் அற்பத்தனமான அரசியல் உள்ளது.


உண்மையில் மக்களை பிளந்து அரசியல் செய்ய நினைப்பது, புலியின் அதே வலதுசாரிய அரசியல் தான். ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கத் தவறுகின்ற கருத்துகள், செயல்பாடுகள், குறுகிய கிழக்கு மையவாதமாகின்றது. உண்மையில் சொன்னால் அதே யாழ் மையவாதம். இந்த குறுகிய போக்கின் பின், சில சமூக விரோத புல்லுருவிகளின் வாழ்க்கையில் மட்டும் மிதக்கின்றது. பிரதேசம், இனம், சாதி என்று எந்த சமூக ஒடுக்குமுறையையும் எதிர்கொள்ளும் போது, ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து நிற்கவும், அவர்களின் சமூக பொருளாதார கோரிக்கையுடன் இணைந்து நிற்கவும், மற்றய ஒடுக்கப்பட்ட மக்களுடன் ஒன்றுபட்டு நிற்கவும் தவறுகின்ற அரசியல் இழிவானது, கேவலமானது. இதை மீண்டும் எம் வரலாற்றில் அனுமதிக்க முடியாது. மனித விரோதத்தில் வக்கிரம் கொண்டது. குறுகிய எல்லைக்குள் இனம், பிரதேசம், சாதி என்று ஒன்றை முன்னிலைப்படுத்தி, ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்கள் சார்ந்த சமூக பொருளாதார கோரிக்கை சார்ந்து நிற்க தவறுகின்ற அற்பத்தனம் தான், கடந்த எமது 30 வருட போராட்டத்தில் நடந்தது, அது தான் கிழக்கின் பெயரிலும் இன்றும் நடக்கின்றது. இன்று கிழக்கு மையவாதம் அதே பாதையில் தன்னை முன்னிலைப்படுத்தி, சில பொறுக்கிகள் குலைக்க முனைகின்றனர். யாழ் மையவாதம் இல்லாத கிழக்கு மக்களுக்கு, நீங்கள் எதைத்தான் மாற்றாக கொடுக்கப்போகின்றீர்கள். தேசிய விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்தி சிலர் கொழுத்தது போல், கிழக்கை மையப்படுத்தி சிலர் கொழுப்பர்.


மறுபக்கதில் பேரினவாதம் இதைப் பயன்படுத்தி, கிழக்கை பல முரண்பாட்டின் எல்லைக்குள் வதைத்தபடி, தனது பேரினவாத நலனை அடைகின்றது. அறுவடையை அவன் செய்யத் தொடங்கிவிட்டான். கிழக்கில் பேரினவாதம் கட்டமைத்துள்ள சிங்கள மயமாக்கல் என்ற அரசியல் சூழ்ச்சிக்குள், அந்த நிலம் விழுங்கப்படுகின்றது. அதை நோக்கி இட்டுச் செல்வதில் புலிகள் முதல் கருணா தரப்பு வரையும் உடந்தையாக இருக்கின்றது. இதற்கு அப்பால் கிழக்கு மையவாதத்தை உச்சரிக்கும் பலரின் அரசியல் வங்குரோத்தின் மீது ஏறி பேரினவாதம் சவாரி செய்கின்றது.. இதனடிப்படையில் சர்வதேச அழுத்தங்களுக்கு இடையில் முன்வைக்க முனைந்த, முனைகின்ற ஒரு அரசியல் தீர்வுத் திட்டத்தை இழுத்தடித்து வருகின்றது. கிழக்கில் தமிழர் தரப்பின் வலுவற்ற ஒரு நிலையை உருவாக்கவும், தமிழர் முஸ்லீம் தரப்பை மோதலின் உச்சத்துக்கு இட்டுச் சென்று, கிழக்கில் தமிழ் மொழி பேசும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமையை சிதைக்கும் ஒரு கால அவகாசத்தை எடுத்து வருகின்றது. கிழக்கு வாழ் தமிழ் பேசும் மக்களை எதிரெதிரான முகாமில் பிளந்து, அதில் பேரினவாதம் குளிர் காய்கின்றது.


பல முரண்பட்ட பிரிவுகளுக்கு இடையில், ஒரு வெற்றிடத்தில், கிழக்கு மக்களுக்கு ஒரு தீர்வை வைப்பதன் மூலம், பேரினவாத நலன்களை கிழக்கில் வெற்றிகரமாக ப+ர்த்தி செய்யமுடியும். இந்த வெற்றிடத்தில் அவர்களை மோத வைப்பதன் மூலம், கிழக்கு மக்களின் அபிலாசைகளை பிளந்து, பிரித்து அரசியல் இலாபத்தை அடைய பேரினவாதம் செய்யும் சதிதான், இன்று கிழக்கில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் கிழக்கு மக்களை சார்ந்து நிற்க தவறுகின்ற கிழக்கு மையவாதிகள், அந்த மக்களின் முதுகுகளில் சவாரி செய்தபடி, பேரினவாதத்தின் செருப்பாகி நிற்கின்றனர்.


16.01.2007


பி.இரயாகரன் - சமர்