06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை எப்படி நாங்கள் குழிதோண்டி புதைத்தோம் என்று சாட்சியம் சொல்லும் பாலசிங்கம்

வரலாற்றுக் குப்பைத் தொட்டியில் இருந்து புலிகளையும் பாலசிங்கத்தையும் மீட்கும் போது கிடைப்பதோ, சமூக அறியாமை என்னும் சூக்குமமே. அவை ஒரு நூலுக்குள் அடக்க முடியாதவை. அதில் இருந்து ஒரு சிறிய பகுதியே இக்கட்டுரை. உங்கள் நம்பிக்கைகள், அதிதமான பிரமைகள் எல்லாவற்றையும் இது வெட்ட வெளிச்சமாக்கி தகர்க்கின்றது.


புலிகள் தமது கடந்த கால வரலாற்றை மட்டுமல்ல, நிகழ்காலத்தையும் மிக வேகமாகவே குப்பைத் தொட்டியில் போட்டு புதைப்பது, அவர்களுக்கு கைவந்த கலை. வற்றாத புதையல் போல், அவர்களின் வரலாற்றுக் குப்பையைக் கிண்டிக் கிளறினால் கிடைப்பதோ, தேசியத்தை விலைபேசுவது, சுயநிர்ணயத்தை இழிவுபடுத்துவது, மக்களை ஏமாளிகளாக்குவது தான். இந்தப் பாசிட்டுகளுக்கு இதுவே கைவந்த கலையாக உள்ளது. மோசடித்தனம், ஏமாற்றுதல், பொறுக்கித்தனம் என்று சமூகத்தை இழிவாடி, அதன் மூலம் பொறுக்கித் தின்னுகின்ற எல்லா கீழ்நிலைப் பண்பாட்டையும், புலிகள் தமது சொந்த வக்கிரம் மூலம் தமது பண்பாடாக்கியுள்ளனர்.


தமிழ் மக்களையும், சுயநிர்ணயத்தையும் எப்படி நாங்கள் ஏமாற்றி மோசடி செய்தோம் என்பதை, பாலசிங்கம் தனது மனைவி மூலமான நூலில் ஒரு சாட்சியமாக முன்வைத்து அதை அம்பலமாக்கியுள்ளார். "ஆயுதப் போராட்டமானது சுயநிர்ணய உரிமைக்கான அரசியல் போராட்டம் என்பதை நியாயப்படுத்துவதற்காகவே, விடுதலைப் புலிகள் தங்களது ஆரம்பகால வரலாற்று வளர்ச்சிக் கட்டத்தில் மார்க்சிய லெனினிச தத்துவங்களை பயன்படுத்தினர்கள்.",1 ,என்று தெளிவாக பிரகடனம் செய்துள்ளனர். புலிகளால் வெளியிடப்பட்டதும், பாலசிங்கம் தனது சுயசரிதையாக தனது மனைவி மூலம் வெளியிட்ட இந்த நூலில் இதைக் குறிப்பிடுகின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணயம் மார்க்சிய லெனினியத்திலேயே இருப்பதை ஏற்றுக்கொள்ளும் இக் கூற்று, அதை தாம் கைவிட்டு நிராகரித்திருப்பதையும் தெளிவாக ஒத்துக்கொள்கின்றது. இதை பாலசிங்கம் தனது மனைவியூடாக சொல்லியுள்ளது தான், இதில் உள்ள சிறப்பு. இங்கு, நியாயப்படுத்தல் என்பது, சாராம்சத்தில் மக்களை மோசடி செய்து ஏமாற்றுவதாகும். இன்று இந்த சுயநிர்ணயத்தை புலிகள் மட்டுமல்ல, புலியெதிர்ப்பு அணியும் கூட முன்வைப்பதில்லை,


தேசியம், சுயநிர்ணயம் என்பது இன்று புலிகளைப் பொறுத்தவரையில், வெறும் வார்த்தைகள் தான் என்பதை புலிகள் பாலசிங்கம் மூலம் தெளிவாக்குகின்றனர். தேசியத்தையும், சுயநிர்ணயத்தையும் தமது பாசிச நலன் சார்ந்த தமது தேவைக்கு பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர் என்பது அவர்களைப் பொறுத்தவரையிலும் உண்மையானதே. இதேபோல் தான் புலிகளுடனான சொந்த தியாக, தமிழ், தமிழ் தேசியம் என அனைத்தையும் புலிகள் பயன்படுத்துகின்றனர். நாளை எல்லாவற்றையும் எமது சுயநலத்துக்காகத்தான் செய்தோம், நியாயப்படுத்தினோம் என்றால், அது ஆச்சரியமானதல்ல. இன்றுபோல் அன்றும் நாலு நாய்கள் இதையும் நியாயப்படுத்தவே செய்யும்.


ஒரு எதிர்ப்புரட்சியை பாலசிங்கத்தின் வரலாற்றின் தொடர்ச்சியில் நாம் காணமுடியும். தமிழ் மக்களின் போராட்டத்தையே புலிகள் போராட்டமாக்கி, அதை காலத்துக்கு காலமும், சந்தர்ப்பத்துக்கு ஏற்பவும் திரித்துப் புரட்டியதைத் தான், பாலசிங்கம் புலிகளில் இருந்து செய்தவர். துயரம் தோய்ந்த தமிழ் மக்களின் வரலாறு, புலிகளை எதிர்மறையில் கற்றுக்கொள்ளக் கோருகின்றது. தேசம், தேசியம், சுயநிர்ணயம் என எந்த மண்ணாங்கட்டியும் அவர்களின் அரசியலில் கிடையாது.


புலிகள் என்ற பெயரில், பிரபாகரனின் தனிப்பட்ட விருப்பங்கள் தேசியமாகியது. இதற்கு மேற்பூச்சு அடிக்கும் வேலையைத் தான், பாலசிங்கம் செய்தார். பிரபாகரனின் சொந்த மனவக்கிரங்கள் தான், புலிகளின் செயலாகியது. இதை பாலசிங்கத்தின் குடும்பத்தை தவிர, வேறு யாராலும்  அனைவரும் ஏற்கும்படி சிறப்பாக சொல்லமுடியாது. ,"பிரபாகரன் அவர்கள் தமது பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடிப்பதாக இருந்தால், அவர் ஒரு துறவிக்கான கோலத்துடனேயே வாழ்ந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், அனைத்து போராளிகளும், அப்போதும் சரி, இப்போதும் சரி உணர்ச்சியற்ற மலடர்களாகவும் மனவிரக்தி பிடித்தவர்களாகவும் வாழவேண்டியிருக்கும்",1, ஒரு சர்வாதிகாரி பற்றி, ஒரு சர்வாதிகார பாசிச இயக்கம் பற்றிய, ஒரு தெளிவான துல்லியமான சித்திரம். இது தான் புலி. இதற்கு வெளியில் புலிக்கு வேறு முகம் கிடையாது. மக்கள் நலன், தேசியம், சுயநிர்ணயம் என எதுவும் இதற்குள் கிடையாது. பிரபாகரன் விரும்பும், நோக்கம், நடைமுறை எதுவும், இதற்குள் துளியளவும் கூட கிடையாது.


இன்றைய ஒவ்வொரு அரசியல் கொலையும், தனிப்பட்ட பிரபாகரனின் வக்கிரமான சிந்தனையின் எல்லைக்கு உட்பட்டதே. பிரபாகரன் திருமணம் செய்த சந்தர்ப்பத்தை எடுத்துப் பாருங்கள். அன்று பல்கலைக்கழக உண்ணாவிரதம் நடக்காமல் இருந்திருந்தால், அவர்களை புலிகள் கடத்தாமல் விட்டிருந்தால், கடத்தியவர்களை பிரபாகரன் தன் வீட்டில் கொண்டுவராமல் விட்டிருந்தால், மதிவதனி பிரபாகரனை காதலிக்காமல் விட்டிருந்தால், நிச்சயமாக பிரபாகரன் திருமணம் செய்யும் சந்தர்ப்பம் இருந்திருக்காது. அப்படியான ஒரு நிலையில் இயக்கத்தின் உள்ளான பாலியல் வெளிப்பாட்டுக்கு, மரணதண்டனை தானே பதிலாக கிடைத்திருக்கும். பாலியல் வெளிப்பாடு துரோகமாகவும், இயக்க கட்டுப்பாட்டை மீறுவதாகவும் காட்டி அவை தண்டனைக்கு உள்ளாகியிருக்கும். இன்றுவரை அதை பாட்டுப்பாட தயாராகவே புலிகள் இருந்திருப்பர். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. இதை நியாயப்படுத்துவது தான் பாலசிங்கத்தின் "தேசிய குரலாக" இருந்தது. இப்படிப்பட்ட நியாயப்படுத்தலைத் தான் பாலசிங்கம் செய்தவர். ஒரு சர்வாதிகாரி தன் சொந்த தனிமனித வக்கிரத்தையே புலி இயக்க விதியாக்கி, அதை தமிழ் மக்களின் விடுதலையாக காட்ட, பாலசிங்கம் அதற்கு ஒளிவட்டம் கட்டி ஆடியவர்.


இந்த "தேசியகுரல்" பாலசிங்கத்துக்கும் பிரபாகரனுக்கும் உள்ள உறவின் எல்லை என்ன? மனைவி அடேல் "பாலாவுக்கு அதிகார அபிலாசைகள் எதுவும் கிடையாது". இவை காரணமாகவே திரு.பிரபாகரனின் மிகவும் நம்பிக்கைக்குரிய ஆலோசகராக அவரால் பணிபுரிய முடிந்தது" 1, என்கின்றார். பாலசிங்கம் தனது மனைவி மூலம் இந்த உண்மையை புட்டு வைக்கின்றார். அதிகார ஆசை பிரபாகரனுக்கு மட்டும் இருக்கமுடியும். இதை மீறி அதிகாரம் பற்றி சிந்தித்தால், அவருக்குரிய தண்டனை துரோகமும் மரணமும் தான். பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னான அரசியல் கூத்துகள், புலிகளின் கண் அசைவுடன் தொடர்புடையது. அவர்கள் பாலசிங்கத்தை நிராகரித்தால், பாலசிங்கத்தின் ஆளுமை என்று நம்பும் அனைத்தும் பூச்சியம் தான். இது பாலசிங்கத்துக்கு நன்கு தெரியும். அதனால் தான் பாசிட்டாகவே சதா ஆடிக் கொண்டிருந்தார்.


விடுதலைப் போராட்டம், மக்கள் போராட்டம், தமிழ் தேசியம், தமிழ் உணர்வை எல்லாம், எவ்வளவுக்கு எவ்வளவு இழிவாக்க முடியுமோ, அந்தளவுக்கு அதை பாலசிங்கம் காலத்துக்கு காலம் தொடர்ச்சியாக செய்தார். அதையே புலிகள் தமது தத்துவம் என்றனர். இதனால் அவரை "மதியுரைஞர்" என்றனர். ஆனால் மக்கள் தமது சொந்த விடுதலைப் போராட்டத்தை, புலிகளிடம் இழந்து நிற்கின்றனர். சுயநிர்ணயம் என்று எதையும் பேசமுடியாத நிலைக்கு பாசிஸ்ட்டுகளின் காலுக்கு கீழ் இழிந்து தாழ்ந்து போனார்கள். தமிழ் இனம் தனது மடியிலே துன்ப துயரத்தை ஒரு சுமையாக சுமந்து நிற்கின்றனர். சிங்களப் பேரினவாதமோ, தமிழ் பேசும் மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளையே, தொடர்ந்தும் மறுத்து நிற்கின்றது. அதேநேரம் சிங்கள பேரினவாதம் தமிழ் மக்கள் மத்தியில் உள்ள புலிகளின் ஜனநாயக விரோதப் போக்கை பயன்படுத்தி, தமிழ் மக்களையே பிரித்து சின்னாபின்னமாக்கியுள்ளது. தேசியவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கத் தவறியதன் விளைவு, வடக்கு கிழக்குக்கு இடையிலான தமிழ் மக்களின் பிளவு ஆழமாகி வருகின்றது. இதை பேரினவாதம் தன்னால் முடிந்தளவுக்கு அகலமாக்கி வருகின்றது.


இப்படி தமிழ் இனத்தின் அடிப்படை சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தை பேரினவாதம் மட்டும் ஒடுக்கவில்லை, புலிகள் சுயநிர்ணயத்தை கைவிட்டது மட்டுமின்றி, அதையும் ஒடுக்குகின்றனர். இப்படி சுயநிர்ணயத்தை இழிவாடி தேசியத்தை கைவிட்டவர்கள், இறுதியாக இனம் என்ற அடிப்படையையும் கைவிட்டு, கொள்கை கோட்பாடு அற்ற ஒரு பாசிச மாபியா இயக்கமாகவே மாறிவிட்டதனர். எஞ்சி நிற்கும் சம காலத்தில் முன்னுக்கு பின் முரணாகவே கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் சீரழிவும், சிதைவும் ஒருங்கே நிகழ்கின்றது. இதற்குரிய தத்துவ விளக்கத்தை காலத்துக்கு காலம் கொடுத்து வந்தவர் அன்ரன் பாலசிங்கம். இப்படி பாலசிங்கத்தின் வாழ்வு புலிகளுடன் பின்னிப்பிணைந்து வந்துள்ளது. நடந்து கொண்டிருக்கும் புலிகளின் சொந்த அழிவை வழிகாட்டிய ஒரு தத்துவ மேதை, அதை அந்த பாசிஸ்ட் பார்க்க முன் மரணித்தது, துரதிஸ்டவசமானது தான். புலிகளில் ஒரு பாசிஸ்ட்டாக, அதன் சித்தாந்தவாதியாக இருந்ததன் மூலம், ஆயிரம் ஆயிரம் மக்களின் மரணங்களுடன் பாலசிங்கத்தின் வரலாறு பதியப்படுகின்றது.


இந்த பாலசிங்கம் யார்?


ஒரு திரொக்ஸ்கியவாதி. இப்படி மார்க்சியத்தை கழுவேற்றிய திரொக்ஸ்சிய அரசியலையே அவர் கற்றவர். இந்த அடிப்படையில் தான் புலிகள் என்ற வலதுசாரி இயக்கத்தில் இணைந்தவர். இவர் இணைந்த இயக்கம், தனிநபர் பயங்கரவாதத்தையே தனது அரசியல் செயல்பாடாக கொண்டு இயங்கியது. கொலை, கொள்ளை, சாகசம், தலைமறைவை அடிப்படையாக கொண்ட ஒரு இயக்கம் தான் புலிகள். இதுதான் அதன் நடைமுறைத் தந்திரம். புலி அரசியல் என்பது தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு பின்னாலான ஒரு அரசியலற்ற கூலி இராணுவக் கும்பல். இதை பாலசிங்கம் அழகாகக் கூறுகின்றார். "... சில பேர் என்னிடம் கேட்டார்கள், செல்வநாயகம் ஐயாவும் இதைத்தான் கேட்டார். சமஷ்டியை அவங்கள் கொடுக்கவில்லை. பிறகு நீங்கள் ஏன் இதைக் கேட்கிறியள் என்று. அவர்கள் ஏமாற்றி விட்டால், என்ன செய்வீர்கள் என்று. நான் சொன்னன் ஏமாற்றட்டும், அதைத் தான் நாங்களும் எதிர்பார்க்கிறோம். செல்வநாயகத்தார் என்ன வைத்திருந்தார். அவர் அகிம்சையை ஆயுதமாக வைத்திருந்தார். நாங்கள் பீரங்கிகளை அல்லவா வைத்திருக்கின்றோம்",3,, தமிழர் விடுதலை கூட்டணியால் உருவாக்கி வளர்க்கப்பட்ட ஒரு கூலிக் கும்பல், காலம் கடந்தும் அரசியல் ரீதியாக எதையும் மாற்றிவிடுவதில்லை.


இப்படி உண்மையை பளிச்சென வெகுளித்தனமாக பாலசிங்கம் போட்டு உடைக்கின்றார். அகிம்சை அல்லது ஆயுதம், இது தான் கூட்டணியையும் புலிகளையும் வேறுபடுத்துகின்றது. இதைவிட வேறு எதுவும் அரசியல் ரீதியாக அல்ல. மக்களின் நலன்களில் இருந்து அல்ல. ஆயுதமும் அது சார்ந்த அதிகாரமும் வரும் போது, தரகு மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்க கண்ணோட்டமும், குணாம்சமும் மக்கள் விரோத போக்கை பண்பியல் ரீதியாக வளர்ச்சி பெறவைக்கின்றது.


இந்த இயக்கம் அன்று முதல் இன்று வரை அரசியலை ஆணையில் வைத்தது கிடையாது. அரசியல் என்பது, இவர்களால் நினைத்துப் பார்க்கமுடியாத ஒன்று. அதை வெட்டி வேலையாக கருதினர், கருதுகின்றனர். ஒரு இயக்கத்தில் அரசியல் என்பது, முரண்பாட்டையும் குழப்பத்தையும் ஏற்படுத்துவதாகவே கருதி அதை வெறுத்தனர். இப்படிப்பட்ட ஒரு இயக்கத்துக்கு தத்துவம், தத்துவ மேதை அவசியமாக இருக்கவில்லை. அவர்களுக்கு தேவைப்பட்டது என்ன? தமது தனிநபர் பயங்கரவாதத்தை நியாயப்படுத்தும் ஒரு லுங்கி தேவைப்பட்டது. அந்த லுங்கி தான் பாலசிங்கம். புலிகளின் தனிநபர் பயங்கரவாத செயலை நியாயப்படுத்தி அறிக்கை தயாரிக்கவும், அதை துண்டுப்பிரசுரமாக விடவும், இவற்றை எல்லாம் ஆங்கிலத்தில் எழுதி வெளியிட தேவைப்பட்ட ஒரு லுங்கி தான், இந்த பாலசிங்கம். ஒரு சமூக பொறுக்கிக்கே உரிய பண்பும், ஆணாதிக்க வக்கிரத்தை அரசியலாக துப்பும் வக்கிரமும் ஒருங்கு சேர, எதையும் எப்படியும் நியாயப்படுத்தும் பச்சோந்தியாக, முள்ளந்தண்டற்ற ஒரு மண்புழுவான பாலசிங்கம் புலிக்கு பொருத்தமாகிப் பொருந்திப்போனது வரலாற்றின் சதிதான்.


பாலசிங்கம் இல்லையென்றால் புலிகளில்லை. பிரபாகரன் ஒரு தனிமனித சூக்குமவாதி என்றவகையிலும், சந்தேகவாதி என்பதாலும், சமூகத்தின் முன் ஊன்றுகோல் இன்றி செயல்பட முடியாதவர் என்பதாலும், பொது அரங்கிலான மாற்றங்களை உள்வாங்கிச் செல்லும் தலைமைத்துவ தகுதி அவருக்கு இருக்கவில்லை. அதை பாலசிங்கம் தான் நிறைவேற்றினார். இந்த வகையில் தான், பாலசிங்கத்தின் தனித்துவமான பங்கு முக்கியமானதாகின்றது. இப்படி புலிகளுடன் ஒன்றாகிப் போன பாலசிங்கம் ஒரு அரசியல் தத்துவ மேதையல்ல. அவர் உச்சரிக்கும் மார்க்சியம், திரொக்ஸ்சியத்தில் இருந்து அதன் சொந்த மார்க்சிய விரோத சீரழிவுக்கு ஏற்ப பொறுக்கியவர். அவரே திரொக்ஸ்சியத்தை கைவிட்ட பின், தான் ஒரு நவமார்க்ஸ்சிட் என்று தனது மனைவி மூலம் ஒத்துக்கொள்கின்றார். அதே நோக்கில் புலிகளிலும் பயன்படுத்தியவர். அவற்றை அவரின் கடந்தகாலம் ஊடாக தெரிந்து கொள்வது அவசியம்.


பாலசிங்கம் வீரகேசரி பத்திரிகையில் ஒரு செய்தியாளராகத் தான் தன் வாழ்வை தொடங்கியவர். இதன் பின் பிரித்தானியத் தூதரகத்தில் ஒரு மொழிபெயர்ப்பாளனாக வேலை செய்தவர். அதைப் பயன்படுத்தி இலணடன் சென்றவர். இக்காலத்தில் பௌத்த கோட்பாடுகளை உள்வாங்கி, அது தொடர்பாக உரை நிகழ்த்தியவர் கூட. இலண்டனில் தான் அவர் திரொக்ஸ்சியானார். இக்காலத்தில் தான் “Tamil nations self determination” என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இந்த நூலை நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ("இன்று socialist equality party , என்ற பேரில் இலங்கையிலும் இலண்டனிலும் இயங்கும் உலக திரொக்ஸ்சியக் கட்சி") பிரித்தானியக்கிளையே, WRP (workers revolutionary party) 2, அச்சிட்டு வெளியிட்டது. இப்படி திரொக்ஸ்சிட்டுகளின் துணையுடன் தமிழ் தேசியத்தை உச்சரித்தவர். இந்த நூல் தான், புலிகளின் தத்துவ ஆலோசகராக வர வழியை ஏற்படுத்தியது.


இந்த ஆங்கில திரொக்ஸ்சிய நூல் தான், புலிகளின் "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" என்று கொள்கை பிரகடனமாக பின் வெளிவந்தது. இந்த பாலசிங்கத்தின் நூல் தான், புலிகளின் ஒரேயொரு கொள்கைப் பிரகடன நூலாகும். இந்த நூலின் உள்ளடக்கத்தை புலிகளிடம் இனம் காணமுடியாது. இதை அமுல்படுத்தக் கோரினாலே, அது மரண தண்டனைக்குரிய துரோகமாகும். இந்த நூலுடன் தான் புலிகளின் தத்துவவாதியானார் பாலசிங்கம்.


பாலசிங்கத்தின் மனைவி அடேல் "தத்துவம் உலகை மாற்றியமைக்க வேண்டும் என்ற மார்க்சிய தத்துவ சிந்தனைக் கீற்று, பாலசிங்கத்துக்கு பிடித்திருந்தது",1 என்கின்றார். வெறும் பிடிப்புத்தான். இப்படிப்பட்ட பாலசிங்கம் மார்க்சிய சமூக மாற்றத்தை எதிர்த்து, நடைமுறையில் ஒரு வலதுசாரியாக வாழ்ந்தவர். இவர் "மார்க்சின் சமூக தத்துவத்தையும் சிக்மன்ட் பிராய்டின் உளவியல் தரிசனத்தையும் இணைத்து இழைக்க முனைந்தார்",1 என்கின்றார். அது ஒரு மோசடிக்காரன் மட்டும் செய்யக் கூடிய ஒரு செயல். இப்படி முரணாகவே சிந்தித்தவர்கள் 'சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி" , என்ற நூலில் எழுதிய சுயநிர்ணயம் வெறும் நியாயப்படுத்தல் தானே ஒழிய நடைமுறைக்கு அல்ல. "தமிழ் மக்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை மாக்சிய-லெனினிச சிந்தனையின் அடிப்படையில் நியாயப்படுத்தினார்.",,1, இப்படி மக்களை ஏமாற்றும் தனது வாழ்க்கையையே நியாயப்படுத்துவதில் தான், அவரின் தத்துவ விரசல் காணப்பட்டது. இந்த பாலசிங்கம் மாக்சிய - லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை விளக்கியவர், இதன் பின் அவரே சுயநிர்ணய உரிமை மறுப்பாளரானார்.


அதை அவரே கூறுகின்றார். "சுயநிர்ணய உரிமை என்றால் என்ன என்று ஐ.நா.சாசனத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது காலத்துக்குக் காலம் மாற்றமடைந்து புதிய அர்த்த பரிமாணத்துடன் காலத்துக்குக் காலம் வளர்ச்சியடைந்து வரும் கோட்பாடு. முன்பு ஒரு சர்வதேச சட்டரீதியாக இருந்தது. இப்போது அனைத்துலக மக்களுக்கும் பொருத்தமான ஒரு மனித உரிமையாக இந்தக் கோட்பாடு விளங்குகின்றது" இப்படி வேறு யாராலும் கூறமுடியாது. முன்பு மாக்சிய-லெனினிச சிந்தனையில் சுயநிர்ணய உரிமையை கண்டவர், இன்று உலகமயமாதல் எல்லைக்குள், ஐ.நா.சாசனத்தில் காண்கின்றார். இப்படி தான் புலியின் அரசியல் சீரழிந்தது. சொந்த தேசிய விடுதலைப் போராட்டத்தையே, சொந்த தியாகத்தையே இப்படி யாரும் இவ்வளவு நேர்த்தியாக கேவலப்படுத்தி ஏகாதிபத்தியத்துக்கு மொத்தமாகவே விற்கமுடியாது. இதை அனைத்துலக மனிதவுரிமை என்பதன் மூலம், அனைத்துலகமும் சுரண்டும் உரிமையை புலிகள் அங்கீகரிக்கின்றனர். ஐ.நாவின் உலக அகராதியிலும், புலிகளின் தேசிய அகராதியிலும், மனிதவுரிமை ஒன்றுபட்டுள்ளது. இது உள்ளடக்கத்தில் மக்களை சூறையாடுவதுதான். இது தான் சுயநிர்ணயம் என்றே புலிகள் வக்காலத்து வாங்குகின்றனர்.


முன்பு இது அனைத்துலக மக்களுக்கு பொருத்தமில்லாததாக இருந்ததாகவும், இன்று பொருத்தமாக மாறி உள்ளதாகவும் கூறுவது, உள்ளடக்கத்தில் சுயநிர்ணயம் உலகமயமாகி விட்டது என்பதை கூறி துரோகத்துக்கு விளக்கம் கொடுக்கின்றார். முன்பு நாடுகளுக்கு ஒரு சட்ட ரீதியான தேசிய வரையறையாக இருந்தது மாறி, உலகமயமாதல் என்ற அனைத்து மக்களையும் உள்ளடக்கியதே தேசியம் என்ற விளக்கத்தை வைக்கின்றார். நாட்டை ஏகாதிபத்தியங்கள் கொள்ளையடிக்கும் உரிமைக்கு இவர் தத்துவ விளக்கம் தருகின்றார்.


தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை தமது சொந்த பாசிச வலது குழுவுக்கு இசைவாக விளக்கம் கொடுத்து, முடிந்தவரை அதை அவர் காட்டிக் கொடுக்கின்றார். தமது சுயநிர்ணயக் கொள்கை என்பது, உலகமயமாதல் தான் என்பதை வலியுறுத்தி, ஏகாதிபத்தியத்திடமே விசுவாசமாக வாலாட்டத் தயங்கவில்லை. இதற்கு சொந்த மக்களையும், தேசிய நலன்களையும் விற்றுவிடவும் பின் நிற்கவில்லை. புலிகளிடம் அமெரிக்கா உங்கள் பொருளாதார கொள்கை என்ன என்று கேட்ட போது, பாலசிங்கம் அசகு பிசகாது, ஐயா நாங்கள் உங்களின் கொத்தடிமைகள் என்றார். அதை அவர் "தாராள ஜனநாயக பெறுமானங்களை அடிப்படையாகக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கைக்கே நாம் ஆதரவானவர்கள் என்பதை மட்டும் என்னால் கூறமுடியும்",3, என்றார். எப்படிப்பட்ட தமிழ் தேசியம்! எப்படிப்பட்ட தேசிய விடுதலை! எப்படிப்பட்ட சுயநிர்ணயம்? அனைத்து தியாகத்தையும், புலிகளால் மட்டும்தான் மொத்தமாக விற்கமுடியும். தமிழ் மக்களின் விடுதலையை திறந்த பொருளாதார கொள்கையாக உள்ள உலகமயமாதல் எப்படி ஏற்படுத்தும். யாருக்காவது அறிவும், நாணயமும் இருந்தால் கூறுங்கள்.


இதை மக்களுக்கு சார்பான கொள்கை என்றும் உலகில் யாராலும் நிறுவமுடியாது. கோட்பாட்டளவில், நடைமுறையில் இதன் விளைவு என்பது, நாட்டை மறுகாலனியாக்குவதே ஒழிய, வேறு எதுவுமல்ல. இங்கு இதை முன்வைக்கும் புலிகளின் பாத்திரம் என்னவாக இருக்கும். ஏகாதிபத்திய உலகமயமாதல் கொள்கையை அமுல்படுத்தும் தரகராக மாறி, மக்களை அடக்கியொடுக்குவதைத் தாண்டி, எதையும் மக்களுக்காக அவர்கள் செய்யமுடியாது. உலகமயமாதல் தான் எமது கொள்கை என்று, பிரபாகரனும் தனது அறிக்கை ஒன்றின் மூலம் தெளிவாக்குகின்றார். இதற்கு வெளியில் புலிகளிடம் ஒரு தனியான சொந்தப் பொருளாதாரக் கொள்கை எதுவும் கிடையாது. தனது பாசிச கட்டமைப்பில் புலிகள் என்ற குழு செய்ய விரும்புவது, தாராள பெறுமானங்களைக் கொண்ட திறந்த பொருளாதாரக் கொள்கையை அமுல் செய்வதைத் தான், சுயநிர்ணய உரிமை என்கின்றனர். இதைத் தான் அவர்கள் தமிழ் தேசியம் என்கின்றனர். மக்கள் என்றும், தியாகம் என்றும் போடும் எல்லாவிதமான அரசியல் கூத்துகளின் மொத்த விளைவு, உலகமயமாதல் கொள்கையை அமுல் செய்யும் அதிகாரத்தை புலிகள் தம்மிடம் தரக் கோருவது தான். இந்த வெட்டி வேலையைத் தான் சுயநிர்ணயம் என்கின்றனர்.


இந்தக் கோட்பாட்டை வரவேற்ற அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "இலங்கையின் நண்பர்கள் அதிகளவு தாராள சிந்தனையுடன் செயல்படும் நோக்கத்துடன் இருக்கிறார்கள் என்பதே எனது அபிப்பிராயமாகும். வட கிழக்கின் அபிவிருத்தியடையாத பகுதிகளுக்கே தமது பணம் சென்றடைய வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள்.",3, என்றார். ஒரு தேசத்தின் அனைத்துவிதமான மனித உரிமைகளையும் புலிகள் அமெரிக்காவின் தாராள பொருளாதார நலனுக்கு தாரைவார்க்க, ஒரு தேசத்தை மிக இழிவாக அவர்களால் எள்ளிநகையாட முடிகின்றது. உலகமயமாதலுக்கு வாலாட்டி வள்ளென்று விசுவாசமாக குலைக்கும் புலிகள் "திறந்த பொருளாதாரக் கொள்கை",3, யைத்தான், தமிழ் மக்களின் தமிழ் தேசியம் என்கின்றனர் புலிகள். எவ்வளவு பெரிய துரோகம்.


இப்படி பாலசிங்கம் புலியின் துரோக நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போது, அமெரிக்கத் தூதர் ஆஷ்லி வில்ஸ் "..புலிகளின் பொருளாதாரக் கொள்கை என்ன? சகலவற்றையும் அவர்கள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முயற்சிக்கிறார்களா? இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்து வட, கிழக்கை தனிமைப்படுத்தி அங்கு சர்வாதிகாரக் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது என்று அவர்கள் கருதுகிறார்களா? இதற்கு உதவி வழங்கும் நாடுகள், அமைப்புகள் இணங்கமாட்டார்கள் என்று நான் கருதுகின்றேன்.",3, என்றார். இதற்குள் தெளிவாகவே அமெரிக்காவின் புலிகளுடனான, அடிப்படை முரண்பாட்டை தெளிவுபடுத்தி விடுகின்றார். இதற்கு வெளியில் புலிக்கும் அமெரிக்காவுக்கும் முரண்பாடு எதுவும் கிடையாது. இப்படி திறந்த பொருளாதார கொள்கையை (கொள்ளையை) ஏற்றுக்கொள்ளும் இருவருக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டையும், மக்கள் விரோதத்தில் அவர்கள் ஒன்றுபட்டு நிற்பதையும் காணமுடிகின்றது.


இந்தக் கட்டமைப்பை தாண்டி, எதையும் தமிழ் மக்களுக்காக புலிகள் ஏற்படுத்திவிட முடியாது. உலகமயமாதல் அமைப்புக்குள், அதற்குள் இணங்கிச் செல்லும் எல்லைக்குள் தான் புலிகளின் போராட்டம் நடக்கின்றது. இது அமெரிக்காவின் கொள்கை மட்டுமல்ல, அனைத்து நாடுகளின் கொள்கையும் கூட. புலிகளின் அரசியலை இதைத் தாண்டி, எதையும் சொந்தமாக நகர்த்த முடியாது. இந்த வகையில் தான் தேசம், தேசியம், சுயநிர்ணயம் பாலசிங்கத்தின் வழிகாட்டலின் சிதைந்து சின்னாபின்னமாகி அழிந்து வந்தது.


புலிகளின் வரலாற்றை அவர்களின் சொந்த குப்பைத் தொட்டியில் இருந்து தேடும் போது, எவ்வளவு பெரிய மோசடிக்காரர்கள் என்பதைக் காணமுடியும். இதற்கு ஏற்ற கோயபல்ஸ் தான் பாலசிங்கம். 1981 இல் பிரபாகரன் எழுதிய கவிதையில் ,


"....
நாம் செல்லும் இடமெல்லாம் ,, ,
எமது எதிரிகள் அஞ்சி ஓடுகிறார்கள்,
மக்களிடம் உள்ள ,
பிரதேசம் சாதி,
மதமென்னும் பேய்களும்,
அலறி ஓடுகின்றன,
எமது படையணி விரைகின்றது,…, ,
எமது தேசத்தை மீட்க,
நாம் செல்லும் இடமெல்லாம் ,
காடுகள் கழனிகள் ஆகின்றன,
வெட்டிப் பேச்சு வீரர்கள்,
மிரண்டோடுகின்றனர்..!,
உழைப்போர் முகங்களில் ,
உவகை தெரிகிறது,
ஏழைகளின் முகங்களில்,
புன்னகை உதயமாகின்றது.",4,


என்ன புல்லரிக்கும் வார்த்தை ஜாலங்கள். இயக்க தலைவரின் பெயரில் இது பதிவாகியுள்ளது. பொதுவாக பாலசிங்கமே பிரபாகரனின் கருத்துக்கள் பலவற்றை எழுதியவர் என்ற வகையில், ஒரு இனத்தை இருவரும் சேர்ந்து இழிவாக எள்ளி நகையாடினர். இந்த கவிதை வரிகளிலுள்ள ஏதாவது ஒன்றை புலிகள் செய்துள்ளனரா? தலைவருக்காக உயிரையே விடத் தயாராக உள்ள நீங்கள், தலைவரின் இந்தக் கூற்றுக்காக போராடி உயிர் விடுவீர்களா? இனப்பற்றாளர்களே எங்கே உங்கள் கைகளை இதற்காக உயர்த்துங்கள்! யாரை ஏமாற்றுகின்றீர்கள்?


சமூகம் இனமாக, மதமாக, சாதியாக, பிரதேசமாக, கருத்தாக பிளந்து சின்னாபின்னமாகி வருகின்றது. தமிழ் மக்களின் வறுமை, இயலாமை, நடைப்பிண வாழ்க்கை, அச்சம் கலந்த பீதி, வாழ வழியற்று கையேந்தும் நிலைமை இது தான் புலிகள் மக்களுக்கு கொடுத்த விடுதலை. எந்த மனித அவலத்தைத் தான், புலிகள் மக்களுக்கு ஏற்படுத்தவில்லை. வாழ்வு மீதான நம்பிக்கை, ஊக்கம் எதுவும் மக்கள் மத்தியில் கிடையாது. நடைப்பிண வாழ்க்கை. மனிதனுக்குரிய அனைத்தையும் அழித்து விட்டார்கள். இக் கவிதை 1981 இல் எழுதியது என்பதால், 25 வருடம் கழித்து 2006 இல் இறுதியில் எமது தேசத்தின் நிலைதான் என்ன? சமூகம் பல கூறுகளாக, துண்டு துண்டுகளாக பிளந்துகிடக்கின்றது. புலிகள் அதற்கு எண்ணை ஊற்றி மோதவிட்டனர், மோதவிட்டுள்ளனர். முதலில் முஸ்லீம் மக்களை எதிரியாக்கியவர்கள், இன்று கிழக்கு மக்களை எதிரியாக்குகின்றனர். இதன் விளைவால் கிழக்கை முற்றாகவே பேரினவாதத்திடம் இழந்து வருகின்றனர்.


மீளமுடியாத இந்த தோல்விகள் இராணுவ ரீதியான பேரினவாத நடவடிக்கைகளால் உருவாகவில்லை. புலிகளுக்குள்ளான ஜனநாயக இன்மையால் ஏற்பட்ட பிளவும், அதைக் கையாண்ட விதமும் முதன்மையானது. தமிழ் மக்கள் என்ற அடிப்படை நலனில் இருந்து சிந்திக்க தெரியாத கோயபல்ஸ்சுகள், ஒரு இராணுவவாதியை வழிகாட்ட முற்பட்டதன் மொத்த விளைவு இது. இதுவே சாதியாக, மதமாக பிளவுறும் ஒரு நிலையை நோக்கி, போராட்டம் ஆழமாக சிதைந்து வருகின்றது.


ஒரு சமூகத்தை எந்தளவுக்கு இழிவாக்கி இழிவுபடுத்த முடியுமோ, அந்தளவுக்கு பிரபாகரன் என்ற தனிமனிதனைச் சுற்றி ஒளிவட்டம் கட்டித்தான் பாலசிங்கத்தால் குழிபறிக்க முடிந்தது. இந்த ஒளிவட்டம் குறுகிய பாசிசத்தால் வக்கிரம் கொண்டது. அதை பாலசிங்கம் குடும்பத்தால் தான் அழகாக கூறமுடிகின்றது. ,"பிரபாகரனைப் பொறுத்த வரையில் துப்பாக்கிகளில் தான் நாட்டம் உண்டு",1, இதற்குள் தான் அவரின் அனைத்து ஆளுமையும், சிந்தனையும். இது தான் அவரின் எல்லையாகின்ற போது, பாசிசத்தைத் தவிர வேறு எதையும் மக்களுக்காக அவரால் கொடுக்க சிந்திக்க முடியாது. இதற்கு வெளியில் அவரின் நாட்டம் என்ன? ,"பிரபாகரனுக்கு அவனுடைய போராளிகளுக்கும் ஆங்கிலப் படங்கள் தான் பிடிக்கும். குறிப்பாக போர்ப் படங்கள்"1 வேறு ,"சுவைத்து உண்பது வாழ்க்கையின் அடிப்படையில் இன்பங்களில் ஒன்று என்பதும்",1, "அவருடைய அணிகலன் கச்சிதமாக இருக்கும் ஆடை புனைவது பிரபாகரன் அவர்களுக்கு ஒரு நிகழ்வு",1 ,வேறு என்ன தான் இருக்கும். ,"நீண்ட தாடியுடனோ, அழுக்கான உடைகளுடனோ ,, நடமாடவில்லை. அப்படிப்பட்ட தோற்றம் பிரபாகரனுக்கு சகிக்க முடியாத ஒன்று",1, இப்படி உள்ளவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். இப்படிப்பட்ட பிரபாகரனும் பின்னால் நின்று பாலசிங்கம் ஒளிவட்டம் கட்ட, தமிழ் மக்கள் கையேந்துவதைத் தவிர வேறு எந்த வழியும் கிடையாது.


பிரபாகரன் இப்படி வாழ்வதற்கு, அவரின் கவிதை வரிகள் போல் மக்கள் வாழ்ந்தார்களா? மக்கள் தலைவர்கள் யார்? ஸ்ராலின் 1930ம் ஆண்டில் போட்ட மழைக்கோட்டையே அவர் தனது மரணம்வரை போட்டவர். மாவோ போராட்ட காலத்தில் போட்ட உடுப்புகள் பினாட்டாகி தனது ஆயுள் தெரியாது உருண்டு கிடந்தது. வியட்நாம் தந்தை கோசிமின் நாட்டின் தலைவரான போது, போட்ட உடுப்பைத் தவிர மாற்று உடுப்பின்றிய நிலையில் மற்றொரு தோழரின் உடுப்பை இரவல் பெற்று பதவி ஏற்றவர். மாவோ ஆட்சி ஏறிய பின் வடகொரிய யுத்த முனைக்கு மகனை அனுப்பியவர். அதில் அவரின் மகன் கொல்லப்பட்டார். ஸ்ராலின் மகன் இரண்டாவது உலகப் போர் முனையில் சண்டையில் ஈடுபட்ட போது, கிட்லரால் கைது செய்யப்பட்டு பேரம் பேசும் பொருளாகிய போது, ஸ்ராலின் அதை நிராகரித்தார். இதனால் அவரின் மகன் கொல்லப்பட்டார். புலித்தலைவர்கள் போல் யுத்த முனைக்கு வெளியில், மக்களுக்கு வெளியில் அவர்கள் வாழவில்லை. மக்களின் அனைத்து துன்ப துயரங்களிலும் பங்காளியாக இருந்து, மக்களின் உண்மையான தலைவர்களாக இருந்தனர்.


இதற்கு மாறாக வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் வசனத்தில் மக்களை ஏமாற்றி தாம் மட்டும் வாழமுனைகின்றனர்.


"உழைப்போர் முகங்களில்,
உவகை தெரிகிறது,
ஏழைகளின் முகங்களில்,
புன்னகை உதயமாகின்றது.",4


இதை மக்களின் வாழ்வாக உருவாக்கிப் போட்ட சுவையாக உண்ண முடிகின்றது. கச்சிதமாக ஆடை அணிய முடிகின்றது. நீங்கள் சொல்லுங்கள். மக்கள் நலன் சார்ந்த ஒரு படத்தை பார்க்கும், சமூக ரசனை கிடையாது. வாழ்க்கைக்கு உதவாத மனித வாழ்வை இழிவாடுகின்ற, அமெரிக்க கொலிவூட் வக்கிரங்களில் மூழ்கி எழுகின்றனர். இவர்கள் எப்படி சமூகத்தைப் பற்றி நேசிக்கவும், சிந்திக்கமுடியும்.


பாலசிங்கம் குடும்பம் இதையும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றனர். ,"சோஷலிச தத்துவம் மட்டில் பல போராளிகளுக்கு உள்ளார்ந்த பற்று இருந்தது. ஆனால் யாரும் மார்க்சிய நிலைப்பாட்டை என்றும் தழுவியதில்லை. மார்க்சிய புரட்சியாளர்கள் என்ற அந்த மாமூல் தோற்றம் கூட இல்லை",1, தத்துவ பற்றும், தோற்றமும் எப்படித்தான் இருக்கமுடியும். அவை பிரபாகரனுக்கு பிடிக்காத ஒரு விடயம். இதை மீறினால் தண்டனை மரணம் வரை உண்டு. அதையும் நாம் கூறத் தேவையில்லை. "அரசியற் சித்தாந்தங்கள், கோட்பாடுகள் பற்றி பிரபாகரன் பெரிதும் அலட்டிக் கொள்வதில்லை.",1 ,எதைப்பற்றி தான் அவர் அலட்டிக் கொள்வார். சுவையான உணவு, கச்சிதமான உடை, ஆயுதம், சண்டை (ப் படம்) இப்படி ஒரு தனிநபரை சுற்றி உருவான இயக்கம், மக்கள் பற்றி எதையும் அலட்டிக் கொள்வதில்லை. இந்த பாசிச மாபியா இயக்கத்துக்கு, பாலசிங்கம் கோயபல்ஸ்சாக இருந்தவர்.


கருணாவின் பிளவை அடுத்து கோயபல்ஸ் பாலசிங்கம் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைக் கட்டியெழுப்பியதற்காகத் தமது மக்களால் பெரிதும் விரும்பி ஏற்றப்படுபவர் பிரபாகரன்." பிரபாகரனுடன் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சேர்ந்து வாழ்ந்தவன், இணைந்து தொழிற்பட்டவன் என்ற வகையில் அவரின் எண்ணத்திலோ, செயலிலோ பிரதேசவாதத்திற்கான சாயலைக்கூட நான் கண்டதில்லை. புலிகளின் தலைமைத்துவத்தின் மீது கருணா சுமத்தும் பிரதேசவாதக் குற்றச்சாட்டு இல்லாததொன்று, அபாண்டமானது."10 இதில் முரண் என்னவென்றால் பிரதேசவாதம், சாதியம், வர்க்க பிளவுகள் சமூகத்தில் உண்டு என்பதை ஏற்றுக்கொள்வதாகும். சமூகத்தில், சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை, உள்ளது என்றால், அந்த சமூகத்தால் பிரபாகரன் போற்றப்படுகின்றார் என்றால், அந்த இயக்கம் ,சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டது தானே. இதுதான் எதார்த்த உண்மை. இந்த எதார்த்தம் உண்மையாக இருக்கும் போது, அதை விரட்டிவிட்டதாக கவிதைபாடும் பிரபாகரன், மக்களை ஏமாற்றியதும் ஏமாற்றுவதும் உண்மைல்லவா!


"மக்களிடம் உள்ள,
பிரதேசம் சாதி,
மதமென்னும் பேய்களும்,
அலறி ஓடுகின்றன"
'என்றவர்,'


பாலசிங்கம் கூறுவது போல் "இங்கு மரபு ரீதியாக தமிழ்ச் சமுதாயத்தில் நூற்றாண்டுகளாக ஊறிப்போயிருந்த சாதி, சமய, வர்க்க வேறுபாடுகளை விஞ்சி, ஐக்கியப்பட்ட"10 போராட்டம் என்பது, இவற்றைக் களையாது தமிழ் தேசியம் கட்டமைக்கப்பட்டது என்பதை ஒத்துக் கொள்கின்றது. அதாவது இவற்றை அடிப்படையாக கொண்ட தேசிய இயக்கம் என்பது, பிரதேச, சாதிய, மதவாத, ஆணாதிக்க, வர்க்க அடிப்படையைக் கொண்டது. காலாகாலமாக யாழ் மையவாதத்தால் இவை கட்டிப் பாதுகாக்கப்படுகின்றது. இது ஒரு சமூகப் பிரச்சினை. இதன் பிரதிநிதியாக புலிகளும், அதன் தலைவர் பிரபாகரனும் உள்ளனர். அதற்கு பாலசிங்கம் கோயபல்ஸ்சாக விளக்கமளித்தவர்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்கின்றார். இப்படி கூறியவர், அந்த தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் தொண்டைக் குழியை வெட்டியவர். பிரபாகரன் கீழ்வாழும் தமிழ் பாட்டாளி வர்க்கத்தின் இன்றைய நிலை என்ன? "தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்."5 என்றவர், உண்மையில் அதற்கு வெளியில் நின்று செயற்படுவதையும், தமிழ் பாட்டாளி வேறு, நாங்கள் வேறு என்பதையும் அவராகவே உணர்த்தி நிற்கின்றார். இந்த வகையில் தமிழ் பாட்டாளி வர்க்கத்தையே உதைத்து சுரண்டி வந்தவர்கள், தமது சொந்த அரசியல் திட்டத்தில் என்ன சொல்லுகின்றனர்.


அந்த திட்டத்துக்கு அழகாகவே "சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி",6,, என்று இந்த பாசிட்டுக்கள் தலைப்பிட்டனர். அதில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்றனர். இப்படி மக்களை ஏமாற்றி மோசடி செய்ய, பொய்கார கோயபல்ஸ்சுகளால் மட்டும் தான் முடியும்.


இந்த கோயபல்ஸ் பாசிச கும்பல் அதனுடன் மட்டும் தமது மோசடியை நிறுத்தவில்லை. "தேசிய விடுதலை எனும் பொழுது ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே"6 தமது இலட்சியம் என்றனர். அதுவே "தமிழீழத் தாகம்"6 என்றனர் "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்" ஆட்சியாக அமையும் என்றனர். மேலும் அவர்கள் "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்"6 என்றனர். அத்துடன் விட்டார்களா "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சிகண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளிவர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்சசொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்"6 என்றனர். இப்படி புலிகள் சொன்னார்கள். ஒரு போராட்டத்தை இப்படிச் சொல்லி மோசடி செய்தவர்கள் யார்? ஒரு கணம் சுயமாக உங்களால் சிந்திக்க முடியமா?


எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. மக்களின் கழுத்தை அறுத்து எறிந்த வரலாறு இது. சுயநிர்ணயயுரிமைப் போராட்டத்தை மோசடி செய்துள்ளனர். இன்று இதைப் பற்றி அவர்கள் பேசுவதில்லை. பேசுபவர்களை அவர்கள் உயிருடன் விடுவதில்லை. அன்று மக்கள் பற்றி பேசுவதற்கு இருந்த குறைந்தபட்ச அக்கறை, இன்று இந்த பாசிஸ்ட்டுகளிடம் கிடையாது. இதற்கு வழிகாட்டிய கோயபல்ஸ் பாலசிங்கம் எவ்வளவு பெரிய பொய்யனாக, ஒரு மோசடிக்காரனாக இருக்கின்றான். இதைத் தான் நாசி கோயபல்ஸ் செய்தான். ஈழத்து கோயபல்ஸ்சாக பாலசிங்கம் செயல்பட்டார் என்பதோடு, தமிழ் மக்களின் மேலான அரசியல் படுகொலைகள் மூலம் தத்துவவாதியானவர்.


தமிழ் சமூகத்தையும் உலகத்தையும் ஏமாற்றுவதில் தான் அவரின் போக்கிரித்தனமே இருந்தது. தமது பாசிச அரசியலை மற்றொரு பாசிஸ்ட்டான எம்.ஜி.ஆர்க்கு பாலசிங்கம் எடுத்துக் கூறுவதே பாசிஸ்ட்டுகளுக்கேயுரிய ஒரு தனி அழகு. "விடுதலைப்புலிகள் கம்யூனிஸ்ட்டுக்கள் அல்லர். விடுதலைப் புலிகள் புரட்சிவாதிகள், சுதந்திரப் போராளிகள். தமது தாயகமான தமிழீழத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுபவர்கள். சாதியக் கொடுமை, பெண் அடிமைத்தனம் மற்றும் சமூக முரண்பாடுகள் நீங்கிய சமத்துவமும் சமூக நீதியும் நிலவும் ஒரு உன்னதமான, சுதந்திரமான சமுதாயத்தைப் படைக்கவே நாம் போராடுகின்றோம். ஏழைகளின் சுபீட்சத்திற்காகவும் ஒடுக்கப்படும் மக்களின் விடிவிற்காகவும் நாம் ஆயுதமேந்தி போராடுகின்றோம்"7 என்றார் இந்த ஈழத்து கோயபல்ஸ். அத்துடன் விடவில்லை "நீங்கள் ஏழைகளின் துயர்துடைக்கத் தொண்டாற்றவில்லையா? நீங்கள் சினிமா உலகில் சாதித்ததை விடுதலைப் புலிகள் நிஜவுலகில் சாதிக்கிறார்கள். உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்?.. உங்களையும் பிரபாகரனையும் சமூகப் புரட்சிவாதிகள் என்று தான் சொல்ல வேண்டும்"7 என்றார்.


எம்.ஜி.ஆர் சினிமாவில் நடித்துக் காட்டி, மக்களை வாழ்வில் ஏமாற்றினார். நாங்கள் போராட்டத்தில் நடித்து நடைமுறையில் ஏமாற்றுகின்றோம் என்கின்றார். "தலைவர் பிரபாகரனது புரட்சிகரமான வாழ்வும் வீர வரலாறும் எம்.ஜி.ஆரை வெகுவாக கவர்ந்தது"7 இப்படி இரண்டு பேரின் பாசிச நோக்கமும் ("உங்களுக்கும் புலிகளுக்கும் இலட்சியம் ஒன்றுதான்") ஒன்று என்பதை கூறி கோடிக்கணக்கில் அதற்காக எம்.ஜி.ஆரிடம் பணம் வாங்க முடிந்தது. எம்.ஜி.ஆருக்கு "இல்லாதோருக்கு வாரி வழங்கும் மன வளமும் இருந்தது. ஏழை மக்கள் அவரை ஒரு தெய்வமாகப் ப+சித்தனர்", அதிசயமான குணவியல்புகள் கொண்டவர். நெஞ்சில் உறுதியும் நேர்மையும் கொண்ட ஒரு உன்னதமான மனிதாபிமானி",7, இப்படிச் சொல்லித் தான் பணம் பெற்றார்கள். எம்.ஜி.ஆர் அப்பன் உழைத்த காசிலேயா உங்களுக்கு பணம் கொடுக்க முடிந்தது? இல்லை மக்களை கொள்ளையிட்ட காசில் தான், இரண்டு பாசிஸ்ட்டுகளும் ஒன்றாக வண்டில் இழுக்க முடிந்தது. இப்படி மக்களை ஏமாற்றுவது தான் இவர்களின் குறிக்கோளாக இருந்தது. மக்களை மாயாஜாலத்தில் தள்ளி, ஏமாற்றுவதே இவர்களின் கூட்டுக் கொள்கையாக இருந்தது. ஏமாற்றல், மோசடி, பொய், புனைவு, மாயாஜாலம், இழிவு, அச்சுறுத்தல், கொலை மிரட்டல், இழிவான பாலியல் இரசனை என்று, மனிதத்துவத்தை இழிவுபடுத்தி விடுகின்றனர். பின் இவற்றை கூட்டியள்ளி, தமிழ் மக்களின் மேல் ஒரு பாசிசத்தின் குரலாக அறைந்தவர் தான் இந்த ஆன்ரன் பாலசிங்கம்.


இது அம்பலமாகும் போது ஆன்ரன் பாலசிங்கம் பாசிசத்துக்குரிய கொலை எச்சரிக்கையை தமிழ்மக்களை நோக்கி விடுகின்றார். அவர் வடக்கில் ஆற்றிய உரை ஒன்றில் "யாழ்ப்பாண புத்திஜீவிகளான நடுத்தர வர்க்கத்தரான நீங்கள் தான் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனின் அங்கிருந்துதான் அதிக விமர்சனம் வருகின்றது",8 ,என்றார். தாம் சொல்வதைத் தவிர, நீங்கள் எதையும் விமர்சிக்க கூடாது. இதை மீறிய போது, மரணத்தைத் தான் புலிகள் பரிசாக அளித்தனர், அளிக்கின்றனர். மறுபக்கத்தில் இதே பாலசிங்கம் கூறுகின்றார் மாற்றுக் கருத்துடையோர் ,".. தமிழர் தாயகத்தில் அரசியல் பணியில் ஈடுபடும் உரிமை உண்டு என்பதை நாம் ஏற்கனவே சொல்லியுள்ளோம்",9, என்கின்றார். மாற்றுக்கருத்துடையோர் அரசியல் செய்ய முன்னம், அவர்கள் தமிழ் மண்ணில் உயிருடன் வாழமுடியாது. 30-06-86 இல் இந்தியாரூடே (ஆங்கிலம்) வெளியீட்டில் பிரபாகரனை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகின்றது. "தமிழீழத்துக்கு எந்த மாதிரியான அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்கள்?" என்று கேட்கப்படுகின்றது. அதற்கு அவர் "மக்களால் ஆதரிக்கப்படும் ஒரே ஒரு அரசியல் கட்சியே அங்கு இருக்கும். பல கட்சி ஜனநாயகத்தை நான் விரும்பவில்லை." என்றார். ஆதரிப்பதும் அவரே, ஆள்பவரும் அவரே. இப்படி ஒரு சர்வாதிகாரி, ஒரு பாசிஸ்ட் முன்வைக்கும் தேசியம் மக்களுக்கானதல்ல. அதே 1986 இல் இந்த பாசிஸ்ட்டுகள் தமது பாசிசத்தையே துண்டுப்பிரசுரமாக வெளியிட்டவர்கள். அதில் மக்களின் அடிப்படை உரிமைகள் "புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்"10 என்றவர்கள். இதில் வாக்களிக்கும் உரிமை உள்ளடங்கத்தான்.


இவர்கள் எந்த மக்களுக்காக எப்படி போராடுவார்கள்? இவர்கள் ஒரு மோசடிக்காரர்கள். நேர்மையற்றவர்கள். தமது அரசியல் துரோகத்தை ஒன்றுக்கு பின் ஒன்றாக கோயபல்ஸ் பாணியில் புலம்புபவர்கள். உதாரணமாக பாலசிங்கம் "இந்த அரசு அமெரிக்காவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்தியாவுடன் உடன்பாடு செய்கின்றது. இந்த அரசு சர்வதேச நாடுகளுடன் உடன்பாடுகள், ஒப்பந்தங்களை செய்கின்றது. ஒருபுறம் வர்த்தக ஒப்பந்தங்கள், பொருளாதார ஒப்பந்தங்கள், இராணுவ ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றது. எதற்கு? புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது. இது எங்களுக்குத் தெரியும்....",10 ,என்கின்றார். இதே பாலசிங்கம், கருணாவின் பிரிவை அடுத்து கருணாவுக்கு பதிலளித்த போது "சர்வதேச உதவியோடு சிங்களவர்கள், முஸ்லிம்கள் உட்பட வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களுக்குமான மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, புனருத்தாரணம் தொடர்பான பாரிய திட்டங்களை மேற்கொள்ளமுடியும்.",10 என்கின்றார் "தேசிய குரல்". முந்தையதுக்கு முரணாக பிந்தையது வரும். இப்படித் தான், "தேசியத் தலைவர்" தேசத்தை தேசியத்தை வெல்வார் என்கின்றனர். இஸ்ரேல் என்பர், சிங்கப்பூர் என்பர், அனைத்தும் கனவுகளில் கற்பனையில் சிந்தித்து அதில் சஞ்சரிக்கின்றனர்.


"தேசிய குரல்" பாலசிங்கம் "புலிகள் இயக்கத்தை சுற்றி, ஒரு பாதுகாப்பு சிலந்திவலை ஒன்று போடப்படுகின்றது" என்று கூறிய அதேநேரம், அண்மையில் நவீன பாலசிங்கமாகி பிரபாகரன் அறிக்கைகளை எழுதும் பாலகுமார் யாழ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரையில் "பிரிட்டன், அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகள் புலிகளோடு உறவு வைப்பது தான் சரியானதென்று இப்போது தீர்மானித்துள்ளன. புலிகளோடு உறவு வைப்பதுதான் தெற்காசியச் சமநிலையைப் பேணுவதற்கான சரியான வழி என்பதனையும் பல நாடுகள் இப்போது நன்கு உணர்ந்துள்ளன.",10, என்கின்றார். யாரை ஏமாற்ற இவையெல்லாம். இது தான் புலிகள். இதே பாலகுமார் "...ஈராக் மீதான அமெரிக்கா யுத்தம் எமக்கு ஒரு பாடம். எனவே, மக்களாகிய நீங்கள் எமது தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அதைத் திருத்துவதற்கான சகல நடவடிக்கையையும் நாம் மேற்கொள்வோம்",10, எப்படி சுட்டிக் காட்டுவது. தங்கள் சொந்த மரணங்கள் மூலமா?


இதை சுட்டிக் காட்டுவது மக்களின் உரிமைகளில் ஒன்று. ஆனால் அது ,"புலிகளை அரசியல் அநாதையாக்கிவிடும்",10 என்று சொன்னவர்கள் நாங்கள் அல்ல, நீங்களே. அதன்படி இதற்கு மரணதண்டனையை தீர்வாக்கி, அதை செய்து வருபவர்கள் யார்? நீங்கள் தான். "தேசத்தின்குரல்" கோயபல்ஸ் புலம்பெயர் சமூகம் பற்றி கூறும் போது "வடலிப் பக்கம் மலக்கழிவிற்காக ஒதுங்கியவர்கள் கொமோட் மலசல கூடம் தேவை என்று கோருபவர்கள் இவர்கள்.",2 என்றவர். இதற்கு முரணாகவே 2006ம் ஆண்டு மாவீரர்தின செய்தியில் பிரபாகரன் "தமிழினம் விடுதலைப் பாதையில் வீறுகொண்டெழுந்திருக்கின்ற இந்தப் பெருமைமிகுந்த வரலாற்றுக் காலகட்டத்தில் உலகத்தமிழினத்தின் உதவியையும் பேராதரவையும் நாம் வேண்டிநிற்கிறோம். இந்தச் சந்தர்ப்பத்திலே எமது புலம்பெயர்ந்த உறவுகள் காலங்காலமாக விடுதலைப் போராட்டத்திற்குச் செய்துவரும் பெரும் பங்களிப்பிற்கும் உதவிகளுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு தொடர்ந்தும், உங்கள் தார்மீகக் கடமையை ஆற்றுமாறு வேண்டுகிறேன். இதேபோன்று எமக்காக உணர்வுபூர்வமாக உரிமைக்குரல் கொடுத்துவரும் தமிழக உறவுகளுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்வதோடு எமது தமிழீழத் தனியரசு நோக்கிய போராட்டத்திற்கு தொடர்ந்தும் நல்லாதரவும் உதவியும் வழங்கி, எமக்குப் பக்கபலமாகச் செயற்படுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டுகிறேன்.",11 என்ன மோசடி. இவை எல்லாம் எதற்காக. புலம்பெயர் தமிழனின் பணத்துக்காக, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றி, தமிழ் மக்களின் அழிவின் மீது தாம் மட்டும் வாழ்வதற்காகத் தான்.


இதே பிரபாகரன் 1992 இல் தனது மேதினம் செய்தியில் "போராட்டப் பளுவை ஒரு தோளிலும், பொருளாதாரப் பளுவை மறு தோளிலுமாக, உறுதி தளராது சுமந்து நிற்கும் தமிழ்ப்பாட்டாளி வர்க்கத்தை நான் பாராட்டுகின்றேன்.",5 என்றவர். இன்று அந்த வர்க்கத்தின் நிலையை நாம் பார்க்கின்றோம். இதே நிலை தான் புலம்பெயர் தமிழனுக்கும், தமிழக மக்களுக்கும் நிகழும். இது பொருந்தாது என்றால் ஏன்? எத்தனை வரலாற்று ஆதாரங்களையும், மோசடிகளையும் நாம் காட்டமுடியும்.


புலிகளின் தலைவர் பிரபாகரனை "எமது சமூகம் மாறிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் போராக வீசிக்கொண்டிருக்கும் வரலாற்றுப் புயல் எமது மண்ணில் காலம் காலமாக நிலைத்திருந்த பழைமைவாத விருட்சங்களை வேரோடு பிடுங்கி வீழ்த்தி வருகிறது. எமது மனக்குகையில் குடியிருந்த மூட நம்பிக்கைப் பேய்கள் விரட்டப்பட்டு வருகின்றது. எமது சமூகக் கருத்துலகில் புதிய பார்வை மலர்கிறது. புதிய விழிப்புணர்வு தோன்றி வருகின்றது. சமூக உறவுகளில் புரட்சிகரமான மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது",13 , என்றார். இது நிகழ்ந்ததாக யாராவது காட்ட முடியுமா?


இதற்கு மாறாக அவரின் வழிகாட்டி பாலசிங்கம் தமிழ் மக்களை ஏமாற்ற முடிகின்றது. தமது பாலியல் வக்கிரத்தில் தான் தமிழ் மக்களை உற்சாகப்படுத்த முடிகின்றது. 2000ம் ஆண்டு மாவீரர் தின உரையும் பாலசிங்கத்தின் பொழிப்புரையும் "... எமது தேசத்தின் கலாச்சாரத் தலைநகரான யாழ்ப்பாணத்தின் வாசற்படியை அண்மித்து நிற்கின்றன. யாழ்ப்பாணத்தின் கழுத்தைத் திருகியபடி குடாநாட்டை வன்னி மாநிலத்துடன் துண்டித்து..." நிற்கின்றான் என்கின்றார் பிரபாகரன். அன்ரன் பாலசிங்கம் யாழ்ப்பாணம் மீதான புலிகள் தாக்குதல் நடத்த முன்முயற்சி எடுத்ததை அடுத்து, உலக நாடுகளிடம் சிங்கள இனவெறி அரசு கையேந்திய நிகழ்ச்சி பற்றி " யாழ்ப்பாணத்தை பிடித்து தனியரசாக அமையப் போகின்றது" முடிவில்லாத புளுடா அரசியல். தமிழீழம் யாழ்ப்பாணம் என்கின்றார். தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான தேசிய விடுதலைப் போராட்டம் யாழ்ப்பாண மையவாதமாக இருப்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. சரி அந்த யாழ்ப்பாண தனியரசு எப்படி என்கின்றார் பாலசிங்கம்? அது "சந்திரிக்கா தனது மடியில் பல்வேறு தேள் மற்றும் கொடுக்கனை கட்டிவைத்துள்ளார்" அது தான் அவரின் யாழ்பாணத்து தமிழீழம். இந்த யாழ்ப்பாணத்துக்கு சந்திரிக்காவின் மடியில் "சின்ன சின்ன ஆசைகள் எனக்கும் உண்டு" என்றவர். இவர் 2005 பொழிப்புரையில் கருணாவை நோக்கி "பாலியல் இயக்கம்", தொடங்க கோரியவர். வேறு எப்படித்தான் இந்த கோயபல்ஸ்சால் மக்கள் அரசியல் செய்யமுடியும்!


இவர் எப்படிப்பட்ட ஒரு தத்துவஞானி. சிங்கள இனவெறி பிரதமர் உரைகள் பற்றி குறிப்பிடும்போது "கிராமப்புறத்தான்" என்றார். சிங்கள மக்கள் பற்றி குறிப்பிடும் போது "மோட்டுச் சிங்களவன்" என்றார். "சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை", என்றார். ஆனால் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் கோயபல்ஸ் பாலசிங்கம் "அங்கே பொறிகள் இருக்கும். சதி வலைப் பின்னல்கள் இருக்கும். என்ன மாதிரி பாலசிங்கத்தை மடக்கலாம். புலிகளை என்ன மாதிரி அவர்களது இலட்சியத்திலிருந்து திருப்பி வேறு பாதையில் கொண்டுபோகலாம் என்று சதிகள் இருக்கும். இவைகளுக்கு முகம் கொடுக்கவேண்டும். பேச்சுவார்த்தை என்றால் சாதாரண விடயம் அல்ல. சிங்கள எதிரி தங்களிடம் உள்ள சிறந்த சாணக்கியர்கள், சிறந்த அறிவுஜீவிகள், பெரிய படிப்பாளர்கள், சட்ட மேதைகளை அனுப்புவார்கள்." என்றார்.,"மோட்டுச் சிங்களவன்", "சிங்களவனின் மேல்மாடியில் ஒன்றும் இல்லை" என்றவர் இப்படி ஒன்றுக்குபின் ஒன்றாக முரணாக கூற முடிகின்றது என்றால், பாசிஸ்ட்டுகளின், அந்திம காலத்தின் ஒரு உளறலாகவே வெளிவருகின்றது. இந்த மக்கள் விரோத பாசிஸ்ட்டுகளைப் புரிந்து கொள்ளாது, அதனுடன் சேர்ந்து கூத்து அடிப்பவர்களை அப்பாவிகள் என்பதா? சதிகாரர்கள் என்பதா? மோசடிக்காரர்கள் என்பதா? பிழைப்புவாதிகள் என்பதா? நீங்களே முடிவு செய்யவேண்டும்.

1. சுதந்திர வேட்கை - அடேல் பாலசிங்கம்
2. தேனீ -  புலியெதிர்ப்பு இணையம்
3. ஏகாதிபத்திய மேலாதிக்கத்தின் கீழ் இலங்கை - பி.இரயாகரன்
4. எரிமலை ஆகஸ்ட் 1991 - புலிகளின் பத்திரிகை
5. எரிமலை ஆகஸ்ட் 1993 - புலிகளின் பத்திரிகை
6. சோஷலிசத் தமிழீழத்தை நோக்கி - புலிகளின் அரசியல் அறிக்கை
7. விடுதலை - பாலசிங்கம்
8. உதயன் - புலி ஆதரவு இணையம்
9. வீரகேசரி - பத்திரிகை
10. http://www.tamilcircle.net/                                    
11. புதினம் - புலி ஆதரவு இணையம்
12. போரும் சமாதானமும் - பாலசிங்கம்
13. எரிமலை ஆடி 1993 - புலிகளின் பத்திரிகை

 

24.12.2006

 


பி.இரயாகரன் - சமர்