Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இதற்கு பதில் தெரிந்தவர்கள், அனைத்தையும் கேள்விக்குள்ளாக்க முடியும். தமக்காக தேசியம், தமக்காக ஜனநாயகம், இது தான் பொறுகளின் உயர்ந்தபட்ச அரசியல் எல்லை. புலம்பெயர் நாட்டில் புலிகள் ரீ.பீ.சீயை தாக்கி அழித்துள்ளனர். அழித்தால் புலித் தேசியம் வாழ்ந்துவிடாது.

தேசியத்தின் பெயரில் தாக்கப்பட்டனர் என்பதால், புலியெதிர்ப்பு ஜனநாயகம் வாழ்ந்துவிடாது. ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான். ரீ.பீ.சீ மீதான புலியின் வன்முறை, நீண்ட அவர்களின் பாசிச வரலாற்றின் தொடர்ச்சி தான். இது சபாலிங்கம் கொலை, நாதன் கஜன் கொலை முதல் தொடர்ச்சியான பல சம்பவங்கள், எம் மண்ணில் மட்டுமல்ல புலம்பெயர்ந்த நாட்டிலும், பாசிசம் கொடிகட்டி பறக்க முனைவதையே பறைசாற்றுகின்றது.


புலி ஆதரவு ஊடகத்துறையை சேர்ந்த செய்தியாளர்கள் தொடர்ச்சியாக அரசாலும், ஜனநாயக வழிக்கு வந்ததாக பறைசாற்றும் ஜனநாயக கொலைகாரர்களாலும் கொல்லப்படுவதையும்,அவை முடக்கப்படுவதையும் எப்படி நாம் அங்கீகரிக்க முடியாதோ, அதேயளவுக்கு புலியெதிர்ப்பு ஊடகத்துறையை புலி அழிப்பதை நாம் அங்கீகரிக்க முடியாது. கண்டனங்கள், விமர்சனங்களை ஒரு தரப்பாக்கி, அது சார்புத்தன்மை பெற்ற போலித்தனமாகி விடுகின்றது. மக்கள் பற்றி எந்தக் கரிசனையுமற்ற நிலையில் தான், தத்தம் சொந்த குறுகிய நலனில் கண்டனங்கள் விலை போகின்றது.


வாய் கிழிய வக்கிரமாகவும், கவர்ச்சியாகவும் ஆடிக் காட்டியும் தான், இவை அனைத்தும் அரங்கேறுகின்றது. கருத்தை கருத்தாகவே எதிர்கொள்ள வக்கற்ற தளத்தில், புலிகள், புலி எதிர்ப்பாளர்களும் ஒரே குறிக்கோளுடன் தான் செயல்படுகின்றார்கள். பரஸ்பரம் தமது எதிரிக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு, மக்களின் முதுகில் ஏறி நின்றே விபச்சாரம் செய்கின்றனர். புலிகள் தேசியம் என்கின்றனர், புலியெதிர்ப்பு கும்பலோ ஜனநாயகம் என்கின்றனர். சரி யாருக்கு தேசியம்? யாருக்குத் தான் ஜனநாயகம்? இதைபற்றி விவாதிக்க வக்கற்றவர்கள் தான், இதைச் சொல்லி ஊடகத்தில் சொந்த விபச்சாரம் செய்கின்றனர்.

 

புலியெதிர்ப்பு கருத்துகளை எதிர்கொள்ள முடியாத புலிகள், 26.11.2006 அன்று காலை பிரபாகரனுக்கு பிறந்தநாள் பரிசாகவும், மாவீரருக்கு சமர்ப்பணமாகவும் ரீ.பீ.சீயை அடித்து நொருக்குகின்றனர். இதற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக, அதாவது 23.11.2006 அன்று புலியெதிர்ப்புக் கும்பல் ப.வீ.சிறீரங்கனின் கருத்தை எதிர்கொண்டு பதிலளிக்க முடியாது அவருக்கு மனநோய் என்று அறிவித்து, மருத்துவம் செய்ய பணம் தரக்கோருக்கின்றனர். பார்க்க:

 

என்ன அரசியல் ஒற்றுமை. கருத்தை கருத்தாக எதிர்கொள்ள வக்கற்ற மக்கள் விரோதிகள், இப்படி ஒரேவிதமான அணுகுமுறையை கையாளுகின்றனர். ப.வீ.சிறீரங்கனுக்கு ஜனநாயகம் கிடையாது என்பது, இந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஜனநாயக அரசியல் அகராதி வரையறுக்கின்றது. புலிகளின் அரசியல் அகராதியும் இதைத் தான் ரீ.பீ.சீக்கு கூறுகின்றது. இதை யாராலும் மொழி பெயர்க்க முடியுமா?
புலிகள் ஆடம்பரமான வகையில் தமிழ் பேசும் மக்களின் பணத்திலும், மற்றவர்களின் ஊடகங்களை கைப்பற்றியும், அடியாட்படைகளைக் கொண்ட ஒரு பாசிச சர்வாதிகாரத்தையே ஊடகத்துறையில் நிறுவியுள்ளனர். யாராலும் மூச்சுவிட முடியாது. மூச்சுவிடுபவர்களின், மூச்சு நிறுத்தப்பட்டு விடும் என்ற நிலைமை. இப்படித்தான் ரீ.பீ.சீ மீதான தாக்குதலும் சொந்த பாசிச வழியையொட்டி நிகழ்த்தப்பட்டது. இதன் மூலம் புலிகள் ஊடகத்துறையில் கொண்டுள்ள சர்வாதிகாரமே, ஒரே தகவல் மையமாக பவனிவருகின்றது. இப்படி வானொலிகள், தொலைக்காட்சிகள், பத்திரிகைகள், இணையங்கள் எண்ணிலடங்காதவை. தேசியத்தைச் சொல்லிக்கொண்டே, தேசியத்தை பாடைகட்டி சதா ஒப்பாரி வைக்கின்றனர். மீறும் போது ஊளையிடுகின்றனர். அனைத்தும், அனைத்து சிந்தனையும் புலிப் பாசிசமாக இருக்கும் வகையில், அனைத்து ஊடகத்துறையையும் வளைத்து போட்டும், மிரட்டியும் அடிபணிய வைக்கின்றனர். இப்படி ஒரேயொரு ஊளையிடும் ஊடகத் துறையை பரவலாகக் கொண்டு, தமது சொந்த நியாயத்தை சொல்ல முடியாத வகையில் தேசியம் பாசிசமாகி அலங்கோலமாகிக் கிடக்கின்றது. இதன் மூலம் தெரு நாய்கள் எல்லாம், அதை கிண்டி கிளறி ஊளையிட்டபடி தின்கின்றன.


புலிகளின் ஊடகத் துறையின் உள்ள வசதிகள், வாய்ப்புகள் மட்டுமின்றி, எல்லாவிதமான வளத்தையும் கொண்டு தமது நியாயமான போராட்டத்தை சொல்ல முடியாத வகையில் நியாயமற்ற புலிப் போராட்டத்தை நடத்துகின்றனர். இந்த நிலையில் தான் அடியாட்கும்பலைக் கொண்டும், படுகொலைகள் மூலமும் தமது பிரச்சாரத்தை செய்ய முனைகின்றனர். ஊடகத்துறையில் சொந்தப் படையை வைத்து, உப்புச்சப்பற்ற ஒப்பாரியாகிவிடுகின்றனர். இதை எல்லாம் வாய்ப்பாக கொண்டு புலிக்கு எதிராக ரீ.பீ.சீ ஊளையிடுகின்றது. தெரு நாய்களாக அலையும் இவர்கள், ஏகாதிபத்திய ரவுடிகளினதும் சமூக விரோதிகளினதும் துணையில் கொழுக்க நினைத்து, புலிகளைக் குதறுகின்றனர். குலைநடுக்கம் பிடித்து புலிகள் உறுமுகின்றனர். இந்த மக்கள் விரோத நாடகத்தையே மக்கள் முன் ஆடிக்காட்டுகின்றனர்.


இன்று, புலியெதிர்ப்பு ஜனநாயகம் பேசும் ரீ.பீ.சீ, ஜனநாயகம் பேச முன்னம் புலிகளின் கால்களை சுதந்திரமாக, ஆனால் நாயைப் போல் தாழ்ந்து நக்க முனைந்தவர்கள் தான். இப்படி நக்கிய ரீ.பீ.சீ, முதன் முதலில் வன்னியில் இருந்து மாவீரர் பாசிச செய்தியை நேரடியாக ஒளிபரப்பிய அந்தப் பாசிச பெருமையை இன்றும் பீற்றிக்கொள்பவர்கள் தான். புலியின் பாசிசத்தின் முன்னால், நாம் தான் புலம்பெயர் ஊடகவியலில் தலை சிறந்த புலி அரசியல் எடுபிடிகள் என்ற பெருமையை இரசித்து கோரியவர்கள். நாயிலும் கீழாய் தாழ்ந்து தாழ்ந்தே தவண்டு புலிக்கு வாலாட்டினார்.

 
முன்பு ரீ.பீ.சீ யில் சமகால நிகழ்வுகளை செவ்வாய் தோறும் ஆய்வு செய்து வந்த சுவிஸ்சைச் சேர்ந்த அழகுகுணசீலன் - ஜெந்திமால ஆய்வு நிகழ்ச்சியை கூட, புலிப்பாசிசத்தின் வேண்டுகோளுக்கு அமைய நிறுத்தினார். இப்படி ஜனநாயகம் வேஷம்கட்டி ஆடிய ரீ.பீ.சீ, அப்பட்டமான ஜனநாயக விரோதிகளாகவே புலிக்கு விசுவாசமாகவே குலைத்தனர்.


புலிகள் ஐ.பீ.சியை புடுங்கி தனதாக்கிய நிகழ்வும் சமகாலத்தில் தான் அரங்கேறியது. அதைத் தொடர்ந்து இன்றைய ரீ.ரீ.என்னும் புடுங்கப்பட்டது. ஐ.பீ.சி யின் வரவு, ரீ.பீ.சீயை புடுங்க முனைகின்றது. ரீ.பீ.சீ வள்ளென்று குலைக்க, தெரு நாயாக தேசியத்தில் இருந்து விரட்டப்படுகின்றனர். நாயிலும் கீழாக தாழ்ந்து குலைத்த ரீ.பீ.சீயை, புலியெதிர்ப்புக் கும்பலாக மாற, இப்படி புலிகளே காரணமாக இருந்தனர். இந்த நாய் வேஷத்தை கலைத்து தெருநாயாக முன்னம், தமிழ்செல்வனிடம் கடைசி வேண்டுகோளை விடுத்ததும், அவர்கள் இவர்களை முதுகில் தட்டி பின் முதுகில் குத்தியதுமான வரலாறு பலர் அறியாதது.


இப்படி புலி பாசிசத்தின் எடுபிடியாக மாறமுனைந்து தோற்ற நிலையில் தான், புலியின் தொடர்ச்சியான பாசிச முற்றுகைக்குள் இருந்து தப்பிப்பிழைக்க புலியெதிர்ப்பு கும்பலின் எடுபிடியாகியது. சுவிஸில் சிறையில் ஜனநாயக கம்பியை எண்ணும் இதன் நிர்வாகி ராம்ராஜுக்கு, புலிகள் ஒரு அங்கீகாரம் கொடுத்து இருந்தால் நல்ல நாயாக இன்றுவரை குலைத்து இருப்பார். எந்த அரசியல் வேறுபாடும், புலிகளிடம் மாறுபட்ட வகையில் இன்றுவரை கிடையாது. கொப்புதாவியவர்களிடம், இறுதியான ஒரு கொப்புத்தான் எஞ்சிக்கிடக்கின்றது.


அது இவர்கள் சொல்லும் ஜனநாயகம். புலிகள் கூறும் தேசியம் போல், இந்த ஜனநாயகமும் அதே தோற்றம் கொண்டது அதிக வேறுபாடில்லாதது. புலித் தேசியத்தின் பாசிச முகத்தின் ஒரு பக்கத்தை எதிர்க்க வெளிக்கிட்ட இவர்கள், படிப்படியாக சமாதான காலத்தில் புலியெதிர்ப்பு அணியாக பலம்பெற்றனர். எல்லா அரசியல் தெருப்பொறுக்கிகளும் தெரு நாய்கள் போல் ஊளையிட்டபடி ஒன்று சேர, ஜனநாயக மறுப்பைiயே ஆதாரமாக கொள்கின்றனர். புலிகள் தேசியத்தை சொல்லி தேசியத்தையே மறுப்பது போல், இந்த தெருநாய்களும் அதையே செய்கின்றனர்.


இந்த தெரு நாய்கள் புலியை எதிர்ப்பதையே சொந்த அரசியலாகக் கொண்டு புலிக்கு சவால் விடுகின்றனர். புலிகள் இல்லையென்றால், வேறு எந்த அரசியலும் இவர்களின் சொந்த ஜனநாயகத்தில் இருப்பதில்லை. புலிகளின் இருப்புத்தான் இவர்களின் ஜனநாயகம். புலிகளின் அண்டப் புளுகுமூட்டைகளையும், ஆபாசங்களையும், பாசிச கோமாளித்தனத்தையும் அம்பலப்படுத்தி தமது சொந்த எடுபிடித்தனத்துடன் வாழ்வது ரீ.பீ.சீக்கு மிக இலகுவான விடயமாகியது. இப்படி புலம்பெயர் சமூகத்தில், ரீ.பீ.சீ பலம்பொருந்திய புலியல்லாத ஒரு மாற்று ஊடகமாகியது. புலிகள் ஒருபுறம் தேசியத்தின் பெயரில் தேசிய விரோத கருத்தை ஊதுகின்றனர் என்றால், புலியெதிர்ப்புக் கும்பல் ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோத கருத்தை ஊதுகின்றனர். நடப்பது நாதஸ்வரக் கச்சேரி தான். பாட்டுத் தான் வேறு. இந்த ரீ.பீ.சீ யை மையமாக வைத்து, பல பத்து புலியெதிர்ப்பு இணையத்தளங்கள் எல்லாம் இதே பல்லவி.


இந்த நிலையில் இதை எதிர்கொள்ள முடியாத புலிகள் ரீ.பீ.சீ மீதான புலித்தாக்குதலை மறுபடியும் நடத்தியுள்ளனர். புலிகள் இதை செய்திருப்பார்களா? "ரீ.பீ.சீ: வானொலிக்கான தோழமை" என்ற பெயரில் ப.வி.சிறீரங்கன் எழுதிய கட்டுரையில் "அந்த வானொலி மீதான பாசிசக்குண்டர்களின் தாக்குதலானது மீளவும் தமிழ்பேசும் மக்களை ஒடுக்கத்துடிக்கும் மேலாண்மையுடைய இயக்கங்களின் இழிசெயலாக இருக்கலாம். அல்லது இத்தகைய செயல்களால் அந்த வானொலியைப் பிரபலப்படுத்த முனையும் ஒரு தந்திரமாகவும் இருக்கலாம்." என்று சிறீரங்கன் குறிப்பிட்டுள்ளார். இந்த பொறுக்கிகளுடன் சிறீரங்கன் "தோழமை" பற்றி என்ன கருத்து கொண்டிருக்கின்றார் என்பது, அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குரியது. ஆனால் அவர் குறிப்பிடும் விடயம் தற்செயலானதல்ல. அந்தளவுக்கு ரீ.பீ.சீ யின் பின்னால் திரண்டு இருப்போர் முன்னாள் இன்னாள் கொலைகார இயக்கங்கள், அதில் இருந்தவர்கள் எந்த சுயவிமர்சனமுமின்றி அதே அரசியலையே இன்று செய்பவர்கள், சதிகாரக் கும்பல்கள் எல்லாம் ஒருங்கிணைந்தும் பிரிந்தும் செயல்படுகின்றனர். இதில் முன்னாள் புலிகளும் அங்கம். அவர்கள் கொண்டுள்ள அரசியல், மக்களுக்கு வெளியில் குறுக்குவழியில் மட்டும்தான் அரசியலைச் செய்கின்றது. தற்காலிகமாக உடனடியான புலிபாசிசத்தை ஒழிக்கும் வழி தான் இவர்களின் அரசியல் எல்லைப்பாடு.


மக்களில் நம்பிக்கையற்ற இவர்கள், அன்னிய சக்திகளில் பின்னால் வாயில் உமிழ்நீர் ஒழுக ஓடி நக்குகின்றவர்கள் தான். எப்படியும் எதையும் இதற்காக, எந்த வழியிலும் செய்யக்கூடியவர்களைக் கொண்ட ஒரு அணியாகும். இவர்கள் புலிகளைப் பயன்படுத்தி எப்படியும் வாழக் கூடியவர்கள். சிறீரங்கன் குறிப்பிட்டது போல், செய்யக் கூடியவர்கள் தான். இதில் எந்த சந்தேகமும் யாருக்கும் கிடையாது. தமது சொந்த பிரபல்யம், புலிகள் மீதான ஏகாதிபத்திய அணுகுமுறையை கடுமையாக்கவும், ரீ.பீ.சீ.க்கு பணத்தை திரட்டவும் என பல வழிகளில் ரீ.பீ..சீ இறங்காது என்பதைச் சொல்வதற்கு எந்த அரசியல் ஆதாரமும் அடிப்படையும் கிடையாது. கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகளின் கூடாரம் தான் புலியெதிர்ப்பு கும்பல். இந்த வழி புலிக்கு மட்டும் சொந்தமானதல்ல.


இன்று புலிக்கு போட்டியாக வடக்கு கிழக்கிலும் மற்றைய பகுதிகளிலும் நடக்கும் கொலைகளை இராணுவம் மட்டும் தனித்துச் செய்யவில்லை. ஜனநாயகத்துக்கு வந்த புலியெதிர்ப்பு கும்பலின் ஒரு பகுதியின் துணையுடன் தான் செய்யப்படுகின்றது. இப்படி தான் புலியெதிர்ப்பு ஜனநாயகமும் தனது அரசியல் வரையறையைக் கொண்டு விபச்சாரம் செய்கின்றனர். இந்த நிலையில் ரீ.பீ.சீ மீதான தாக்குதலை ஒட்டி, எனது நண்பர் ஒருவர் புலிகள் இவ்வளவு மோட்டுத்தனமாக இதைச் செய்யமுடியுமா என்றார்? நான் ஆம் என்றேன். சுவிஸ் பேச்சுவார்த்தையை மோட்டுத்தனமான தம்மைத் தாம் கேலித்தனமாக்கி சந்தி சிரிக்க வைத்த புலிகள், இதை ஏன் செய்யமாட்டார்கள்! பாசிசமே அனைத்துமாகிவிட்ட நிலையில், இது போன்றவை தான் அவர்களின் அரசியல் இருப்புக்கான அடித்தளமாகிவிட்டது.


ரீ.பீ.சீயின் புலியெதிர்ப்பு கருத்தை எதிர்கொள்ள முடியாதவர்கள். அவர்கள் எவ்வளவு தான் ஆடம்பரமாக அலங்கரித்த ஊடகத்துறைகளை வைத்திருந்தாலும், மக்களை சார்ந்த மக்களின் விடுதலையை பேசாத வரை, இதுதான் அவர்களின் முன்னுள்ள மாற்று வழியாக உள்ளது. கொல்லுதல், செயலற்றதாக்குதல், முடக்குதல், மிரட்டுதல் இதை விட புலிக்கு வேறு அரசியல் வழி கிடையாது. அவர்களுக்கு தெரிந்த ஒரே அரசியல் வழி இது தான். ரீ.பீ.சீ மீதான புலித்தாக்குதல் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள் என்றால், அது தான் தவறு.


மக்கள் பற்றி உண்மையான அக்கறை, அவர்களின் விடுதலை பற்றி நேர்மையான சிந்தனை இல்லாத நிலையில், பேடித்தனமாக கோழைத்தனமான வகையில் புலிகள் இதை குறுக்குவழியில் எதிர்கொள்கின்றனர். இது புலிக்கு மட்டுமான சொந்த வழியல்ல. தாக்குவது, கொல்வது, அவதூறு ப+சுவது, மனநோயாளியாக காட்டுவது மக்கள் விரோத அரசியலில் அரசியலாகிவிடுகின்றது. ஜனநாயக ரீதியில் புலிகள் முதல் புலியெதிர்ப்புக் கும்பல் வரை விவாதிக்க, பேச வக்கற்றுக் கிடக்கின்றனர்.


இன்று தமிழ்பேசும் மக்கள் தேசியத்தின் பெயரில் புலிகளின் பாசிசத்தை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் பெயரில் புலியெதிர்ப்பு ஜனநாயக விரோதத்தையும் ஒருங்கே எதிர்கொண்டு நிற்கின்றனர் என்பதே உண்மை. மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, எங்கும் ஒரு அராஜகம் கட்டவிழ்த்து விடப்படுகின்றது. இதை எதிர்கொண்டே, எதிர்வினையாற்ற வேண்டியுள்ள வரலாற்றுக் கட்டத்தில் நாம் உள்ளோம்.


26.11.2006