கொலைகளையே தமது அரசியல் பரிகாரமாக சிந்திக்கின்ற எமது சொந்த மன உணர்வுகள், மனிதத்தின் சகல கூறுகளையும் மலடாக்கிவிடுகின்றது. எமது சிந்தனை முறையும், வாழ்வியல் முறையும், மற்றவனின் மரணம் மூலம் தீர்க்கப்படலாம் என்று நம்புகின்றது எமது அறிவு. அப்படித்தான் அதை விளக்குகின்றது. அப்படித்தான் அதை நடைமுறைப்படுத்துகின்றது. இப்படி சிந்திக்கின்ற காட்டுமிராண்டிகளைக் கொண்ட ஒரு சந்ததிகளின் காலத்தில், நாம் உயிருடன் வாழ்கின்றோம்.
மக்கள் மேலான கூட்டுப்படுகொலைகள், தனிநபர்கள் மேலான பழிக்கு பழிவாங்கல்கள் என்று எங்கும் எல்லாத் தளத்திலும், இதுவே அரசியலாகி புளுக்கின்றது. புலிகள் முதல் அரசு வரை ஏன் கருணா தரப்பு கூட, இதற்காக சொந்த தர்க்கவாதத்தையே கொட்டித் தீர்க்கின்றனர். மனிதமோ அனுதினமும் செத்து மடிகின்றது.
ஏன் எதற்கு நாம் கொல்கின்றோம், ஏன் அதை நாம் நியாயப்படுத்துகின்றோம் என்றால், அதற்கு எந்த சுயவிளக்கமும் கிடையாது. துரோகி தியாகி, பயங்கரவாதி என்று பல பட்டங்களை மொட்டையாக சூட்டி, கொலைகள் மூலம் தீர்வு காணும் மலட்டு அரசியலே எம் மண்ணில் வக்கரித்து கிடக்கின்றது. காட்டுமிராண்டிகளின் கொலைவெறி தேசத்தில், இதுவே மனிதப் பண்பாகி, அதுவே ஒழுக்கமாகி, அதுவே வாழ்வாகிவிட்டது.
கொலைகளுக்கு எதிரான மனித உணர்வுகளைக் கூட, நேர்மையாக வெளிப்படுத்துவது கிடையாது. ஒன்றை மட்டும் சார்பு நிலையில் கண்டிப்பது, மற்றையதை நியாயப்படுத்துவது, இதுவே இன்றைய அறிவுத்துறையின் ஒழுக்கமாகிவிட்டது. சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் இந்த வக்கிரம் ஆதிக்கம் பெற்ற கருத்தாகிவிட்டது. இதையே பத்திரிகைத் துறையும், ஒளி ஒலி ஊடகமும், ஏன் எழுத்து துறையும் கூட ஆக்கிரமித்துள்ளது. நெருப்பு கொம், நிதர்சனம் கொம் முதல், அந்த அரசியல் பின்னணி இசையில் பிழைக்கும் ஒட்டுண்ணி இணையங்கள் அனைத்தும் இந்த அரசியல் ஆபாசத்தில் தான் பூத்துக் குலுங்குகின்றது.
இதையேதான் பேரினவாத அரசும் செய்கின்றது. வாகரை தாக்குதல் பற்றி அரசின் உத்தியோகப+ர்வ தகவல் அப்பட்டமான பொய்களை அடிப்படையாக கொண்டது. ராடார் மூலமும், உளவுத் தகவல் மூலமும் புலிகள் தாக்கும் நிலையைக் கண்டறிந்து, ஒன்றுக்கு இரண்டு முறை பரிசோதித்த பின் தாக்கியதாக கூறுவது அப்பட்டமான ஆபாசமான பொய்யாகும். ஒன்றுக்கு இரண்டுமுறை சரிபார்த்த தகவலில், உளவுத் தகவல் அங்கே மக்கள் அகதியாக கூடி வாழ்கின்றனர் என்று கூறவில்லையோ? யாரை ஏமாற்றுகின்றீர்கள்.
இது எந்த விதத்திலும் புலிகள் மக்கள் மத்தியில் இருந்து தாக்கமாட்டார்கள் என்று அர்த்தமாகாது. புலிகள் மக்கள் மத்தியில் இருந்து திட்டமிட்டு தாக்குபவர்கள் தான். மலிவான பிரச்சாரத்துக்கும், இலகுவாக மனித உணர்வுகளை விலைபேசி பணம் திரட்டுவதற்கும் இது போன்ற கொலைகள் உதவுவதால், அதைத் திட்டமிட்டு தூண்டக் கூடியவர்கள் தான் புலிகள். கொலைகள் அனைத்தையும் ஆபாசமான பொய்கள் மூலம் நியாயப்படுத்துவது அல்லது மூடிமறைப்பது பொதுவாக அனைத்து தரப்பிலும் அரங்கேறுகின்றது. இப்படி தான் அரசு என்றால், புலிகள் முதல் கருணா தரப்புவரை பொய்களாலும் புரட்டுகளாலும் கொலைகளை நியாயப்படுத்தி, வக்கிரப்படுத்தி, அதை விளம்பரம் செய்து தமக்கு உரமாக்குகின்றனர்.
மக்கள் மீதும், அரசியலில் ஈடுபடுபவர்கள் மீதுமான படுகொலைகள் கொடுக்கும் விளைவு மிகப்பெரிய மனித அவலத்தையே விதைக்கின்றது. விதைவைகள் கொண்ட ஒரு தேசம் உருவாக்கப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பில் பெண்கள் தான் நசிந்தவர்கள், நலிந்தவர்கள். ஒவ்வொரு கொலையும் பெண்ணின் வாழ்வையே நாசமாக்கி அவளையே அழிக்கின்றது. இந்தப் பெண்களின் வயிற்றில் பிறந்த குழந்தைகளின் எதிர்காலமோ சூனியமாகின்றது. எமது தமிழ் இனம் எந்தளவுக்கு சீரழிய முடியுமோ, அந்தளவுக்கு கொலைகாரர்களால் சீரழிக்கப்படுகின்றது. இதைச் செய்பவர்கள், அதை நியாயப்படுத்துபவர்கள், தாம் தான் தமிழ் மக்களின் பாதுகாவலர் என்று தம்மைத் தாம் பீற்றிக்கொள்கின்றனர். அதற்காகவே கொல்கின்றனராம்.
அரசை ஆதரிப்போரும், புலிகளை ஆதரிப்போரும் விதிவிலக்கின்றி கொலைகளை ஆதரித்து ஆபாசமாக கூச்சலிட்டு கூத்தடிக்கின்றனர். ரவிராஜ் ஆக இருக்கலாம், கேதிஸ் ஆக இருக்கலாம் அல்லது வாகரை படுகொலை முதல் கெப்பிற்றிக்கல படுகொலை எல்லாமே காட்டுமிராண்டித்தனத்தையே தெளிவாக பறைசாற்றுகின்றது. கொலையை புலிகள் செய்தது, அரசு செய்தது, கருணா செய்தது என்று பிரித்து பார்த்து கண்டிப்பது, அதை ஆதரிப்பது என்பதற்கு எந்த அரசியல் தர்க்க நியாயவாதமும் கிடையாது.
அரசியல் ரீதியாக முரண்பட்டவர்கள், மாற்று அரசியலைக் கொண்டவர்கள், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை அரசியல் ரீதியாக அணுக மறுக்கின்றனர். இது கொலை செய்கின்ற அலுக்கோசுகளின் நிலையல்ல. மாறாக அரசியல் பேசும் இவர்கள் தமக்கு இடையில் கூட, அடாவடித்தன பேர்வழிகளாக ரவுடிகளாக, கொலையை தூண்டுபவர்களாக, அதற்கு துணை செய்பவர்களாக, அதை நியாயப்படுத்துபவராகவே உள்ளனர்.
பழிக்குப் பழி என்ற குறுகிய குதர்க்க அரசியல் மூலம், சமூகத்தை இழிவாக இழிவாடி இவர்கள் வழிநடத்துகின்றனர். கொலைகள் மூலம், இதுதான் சமூகத்தின் தீர்வு என்று பறைசாற்ற முனைவதை நாம் ஒருநாளும் மன்னிக்கவே முடியாது. இது போன்ற தொடர் கொலைகளை கடமைக்கு கண்டிப்பது, பிழைப்புக்கு இதை பயன்படுத்த புலம்புவது, சுயநலத்துக்கு பயன்படுத்துவது, குறுகிய அரசியல் வக்கிரத்தை கொட்டித் தீர்க்க விபச்சாரம் செய்து, எல்லாம் எம் மத்தியில் இரத்தமும் சதையுமாகவே அரங்கேறுகின்றது. கொலைகளை சார்புத் தன்மையில் விபச்சாரம் செய்து ஆதரிப்பது, எதிர்ப்பது என்ற அரசியல் விபச்சாரம் மிக கீழ்நிலைப் பாத்திரத்தை வகிக்கின்றது.
கொலைகளை உணர்வுபூர்வமாக மனித உள்ளடக்கத்தில் எதிர்கொண்டு, எதிர்த்துப் போராடும் அரசியல் வளமே எம்முன் அவசியமானது. மக்களை சிந்திக்கவும், மனிதத் தன்மையை கற்றுக் கொள்ளும் வழியில் நாம் போராட வேண்டியுள்ளது. மனிதனை மனிதனாக நேசிக்க கற்றுக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் இதற்கு மாற்றுத் தீர்வாகாது.
துப்பாக்கியும் கையுமாக மட்டுமின்றி கழுத்தை வெட்டி முண்டத்தை எடுத்துச் செல்லும் வெறிகொண்ட ஒரு கொலைகாரக் கூட்டம், நன்கு பயிற்றப்பட்டு கொலைக்களத்தில் அலுக்கோசுகளாக இறக்கி விடப்பட்டுள்ளனர். அன்றாடம் அதிர்ச்சியூட்டும் கொலைகள், விதவிதமான கொலைகள் எல்லாம் எமது தமிழினத்தின் விடுதலையின் பெயரில் நடக்கின்றது. இந்தக் கொலைவெறி பிடித்த அலுக்கோசுகள் தான், தமிழ் சமூகத்தின பாதுகாவலராம். ஆளாளுக்கு நியாயம் தர்க்கம். இதுவே எமது தேசிய வரலாறு முழுக்க வக்கிரமடைந்து கிடக்கின்றது. மனித மூளைகளை மலடாக்கி, அவர்களை கழுவிலேற்றுகின்ற இந்த அலுக்கோசுகளின் உலகத்தில், மனித சிந்தனையை துளிர்விட வைப்பதன் மூலம் தான், நாம் மனிதனாக மீண்டும் மீள முடியும். இதன் மூலம் தான் நாம் மனிதனாக இருக்க கற்றுக்கொள்ள முடியும். இரத்தமும் சதையுமாகிப் போன எமது சமுதாயத்தில், இதைவிட இதற்கு மாற்று எதுவும் கிடையாது. இது மட்டும் தான் மனிதனைச் சார்ந்ததும், நடைமுறையில் செயல்பூர்வமானதுமாகும்.
10.11.2006