Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

* மக்களின் இயல்பான ஐக்கியத்துக்கு பதிலாக, வடக்குகிழக்கு இணைப்பை யாழ் மேலாதிக்கமும், ஏகாதிபத்திய துணையுடன் செயல்படும் பேரினவாதத்தின் மிதவாத பிரிவும் கோருகின்றது.


* மக்களின் ஐக்கியத்தை மறுதலித்து, வடக்குகிழக்கின் பிளவை புலியெதிர்ப்பு கும்பலும், பேரினவாதத்தின் தீவீரமான பகுதியும் கோருகின்றது.


இந்த இரண்டு மக்கள் விரோதப் போக்கையும் நாம் அனுமதிக்க முடியாது. இதை தெளிவுபடுத்துவதும், இதற்கு எதிராக போராடுவது எம்முன்னுள்ள கடமையாகவுள்ளது.


இடதுசாரி வேடமிட்டு வலதுசாரிய ஜே.வி.பி, தீவிர பேரினவாதிகளாகி நிற்கின்றனர். முடிந்தளவுக்கு தமிழ் சிங்கள மக்களிடையேயும், தமிழ் மக்களிடையேயும் பிளவை ஆளப்படுத்தி இனவாத அரசியலை ஜே.வி.பி செய்கின்றனர். இந்த வகையில் அண்மையில் அழுகி நாறிக் கொண்டிருக்கும் இனவாத புண்ணைக் கிண்டிக் கிளறி சித்திரவதை செய்த ஜே.வி.பி, அதில் இனவாத சுகம் கண்ட நிகழ்வு தான் வடக்கு கிழக்கு பிரிப்பாகும். இதன் மூலம் இனவாத பிளவை, மேலும் ஒருபடி அதிகப்படுத்தினர். சட்டம், ஒழுங்கு நீதியின் பெயரில் அரங்கேற்றிய இந்த இனவாத வக்கிரம், சட்ட எல்லைக்குள் சிலர் நியாயப்படுத்துகின்றனர். வேடிக்கை என்னவென்றால் இந்த சட்டம், நீதி, நியாயம் எதுவும் ஜே.வி.பிக்கு எதிராக கடந்த காலத்திலும், நிகழ்காலத்திலும் பயன்படுத்தியது கிடையாது அல்லது அதில் இருந்து விலக்களிக்கப்பட்டு குற்றவாளிகளாகவே சமூகத்தில் உள்ளனர். எத்தனை கொலைகள், எத்தனை அடாவடித்தனங்கள், எல்லாம் நீதியின் முன் நியாயத்தின் முன் வரவில்லை. மாறாக வடக்குகிழக்கு பிரிப்பும், பிளவும் மட்டும் இனவாதிகள் வலிந்து உருவாக்கிய ஓட்டைச் சட்டத்தின் ஊடாக பிரிக்கப்பட்டு சமூகங்கள் பிளக்கப்படுகின்றன.


சட்டம், நீதி, நியாயம் எல்லாம், கடந்த வரலாற்றில் இனவாத சேற்றில் உருவானவைதான். இவை சமூகங்களை பிளந்தன. இந்த சட்டம, நீதி, நியாயம் மறுக்கப்பட்டு, அவை தமிழ் சமூகம் மீது பாய்ந்த போது, சட்டம் எங்கே உறங்கிக்கிடந்தது. மனிதனை மனிதன் பிளந்து, அதில் குளிர் காய்ந்த போது, சட்டமும் நீதியும், நியாயமும் அதற்கு தூணாகி துணை நின்ற வரலாற்றின் தொடர்ச்சியில், மீண்டும் இனவாதமாகவே சட்டம் நீதி பேசுகின்றது.


அண்மையில் திருகோணமலையில் திடீரென எழுந்த புத்தர் சிலை விவகாரம், சட்டத்தின் நீதியின் நியாயத்தின் முன் தீர்வுக்குள்ளாகவில்லை. ஏன் இந்த இனவாத ஜே.வி.பி மக்களை பிளக்காதே என்றோ அல்லது கடவுள் மறுப்பு கோட்பாட்டின் அடிப்படையிலோ நீதி கோரி நீதிமன்றம் செல்லவில்லை. இப்படி எத்தனையோ விடயங்கள், சமூகத்தை பிளந்த போது யாரும் நீதி கோரவில்லை. ஆனால் தமிழ் மக்களுக்கு எதிராக, தமிழ் மக்களை பிளக்க நீதி கோருகின்றனர். அதுவும் அவர்கள் உருவாக்கி இனவாத சட்ட ஓட்டைக்குள் ஏறி அமர்ந்தபடி, நீதி கோருகின்றனர். சமகாலத்தில் புலிக்கு எதிராக அல்லாத, தமிழருக்கு எதிராக எத்தiனையோ இனவாத நடைமுறைகள், இழிவாடல்கள், அவமதிப்புகள் நடைபெற்றன, நடைபெறுகின்றன. இதை எதிர்த்து ஜே.வி.பி அரசியல் ஆர்ப்பாட்டமோ, தமிழ் மக்களுக்கு நீதிகோரி நீதிமன்றத்தில் நியாயம் கோரியதில்லை. இப்படிப்பட்ட பேரினவாத அரசியல் பொறுக்கிகள், இடதுசாரி வேடம் போட்டு மனிதவிரோதிகளாகவே பவனிவருகின்றனர். புலியெதிர்ப்புக் கும்பல், இவர்களுக்கு அன்னக்காவடியாகி பாய் விரித்து விபச்சாரம் செய்தனர், செய்கின்றனர்.


இப்படித் தான் வடக்கு கிழக்கு பிரிப்பு விவகாரம் நீதிமன்றம் சென்றது. வடக்கு கிழக்கு இணைந்து இருப்பது, ஒரு இனத்தில் அடிப்படையான சுயநிர்ணய உரிமையாகும். இதை புலிகளைக் காட்டி பிளப்பவர்கள், பிளக்க எத்தனிப்பவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகளாவர். சொந்தமாக மக்கள் நலன் பேணும் எந்த அரசியலுமற்ற, இனவாத அரசியல் எடுபிடிகளாவர். சமூகங்களை பிளந்து அதை அரசியலாக செய்யும் இனவாத அரசியலாகும்.


பாசிச புலிகள் சமூகங்ளை பிரித்துவைக்கின்ற எல்லாவிதமான முயற்சிக்கும் துணைபோவதாகும். புலிகள் ஈனத்தனமான மனித விரோத முயற்சியை தனிமைப்படுத்தி அதை எதிர்க்க வக்கற்ற கும்பல்களின், அரசியலாக இது மாறுகின்றது. புலிகளின் பாசிசம் வக்கிரமாக சமூகங்களைப் பிளந்து கட்டவிழ்த்துவிட்ட பிளவுகள், மனிதர்களையே பல கூறுகளாக பிளந்து விட்டுள்ளது. இது வடக்கு கிழக்கு இணைப்பு பிரிப்பு என்று, பல கோணல் துண்டுகளாக அங்குமிங்குமாக பிய்த்தெறிகின்றது. தமிழ் மக்களுக்கு இடையிலேயே இந்தப் பிளவும் பிரிவும் ஆழமாகியுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பை புலிகள் மீது சுமத்த எவ்வளவுக்கு எமக்கு உரிமை உண்டோ, அதே அளவுக்கு புலிக்கு எதிரான பிரிவுகளின் செயலுக்கும் உண்டு. இங்கு விதிவிலக்கு கிடையாது. புலிக்குமட்டுமாக எதிர் வினையாற்றுவது, அதற்கு எதிரான அரசியலை எடுப்பது மக்களுக்கு சார்பானதல்ல. மாறாக சொந்தமாக சுயாதீனமாக மக்கள் நலனை மக்கள் சார்ந்து எடுத்தல் வேண்டும்.


இந்த நிலையில் வடக்குகிழக்கு இணைப்பு, தமிழ் மக்களின் அடிப்படையான சுயநிர்ணய உரிமை என்பதை மறுதலிக்க முடியாது. மனித மனங்களின் கறைபடிந்து போன யாழ் மேலாதிக்க வெறித்தனத்துக்கு எதிரான உணர்வு, வடக்கில் இருந்து கிழக்கு பிரிந்து இருக்கும் உணர்வை ஊட்டுகின்றது. இவை எல்லாவற்றையும் கடந்த நிலையில், ஒரு தேசிய இனம் என்ற வகையில், இணைந்து இருப்பதன் அவசியத்தை முன்னிலைப்படுத்துகின்றது. வெளித்தோற்றத்தில் உள்ள யாழ் மேலாதிக்க நடைமுறைகள் கடந்து, ஆழமாக சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை இது கோருகின்றது. இதை மறுதலிப்பது என்பது, சமூகங்களைப் பிளந்த யாழ் மேலாதிக்க புலியின் பிளவுவாத நடவடிக்கைகளுக்கு துணை போவதுதான்.


இணைப்புக்கான முன் நிபந்தனை என்பது, யாழ் மேலாதிக்கத்தை பிரதிநிதித்துவம் செய்யும் புலிகளின் மக்கள் விரோத பிளவுச் செயல்களை எதிர்ப்பதன் ஊடாக, இணைப்பை முன்வைதாகும். எல்லாவிதமான பிளவுவாத செயலையும், மனித விரோதச் செயலையும் எதிர்த்து மக்களின் ஐக்கியத்தை முன்னிலைப்படுத்துவதே உண்மையான நேர்மையான செயலாகும். இதற்குள் பரஸ்பரம் உரிமைகளை அங்கீகரித்தலாகும். மனிதனை மனிதன் மதிக்கின்ற வகையில், பிளவுகளையும் பிரிவினைகளையும் எதிர்த்தலாகும். இந்த வகையில் இனவாதிகள் புலியின் பெயரில் கையாளும் பிளவுகளையும் பிரிவினைச் சதிகளையும் முறியடித்து, தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமாக குரல் கொடுத்து போராடவேண்டிய நிலையில் நாம் எல்லோரும் உள்ளோம். பிளவுக்கும் பிரிவுக்கும் ஆப்பு வைக்கும் புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் முதல் பேரினவாதிகள் வரையிலான அனைத்து மனித விரோதிகளினதும் ஈனச் செயல்களை, தோலுரித்துக் காட்டி போராட வேண்டியுள்ளது.


இணைப்பின் பெயரில் அரங்கேறும் மற்றொரு அம்சத்தையும், நாம் இனங்கண்டு எதிர்த்து போராட வேண்டியுள்ளோம். தீர்வு என்ற பெயரில் நடக்கும் இணைப்பும், பிளவுக்கே வழிவகுக்கின்றது. நாம் மனிதர்களின் இணைப்பை, ஒரு இனத்தின் இணைப்பை வலியுறுத்தும் போது, தீர்வு என்ற பெயரிலான மக்களின் உணர்வுகளை நிராகரித்த இணைப்பைக் கண்டுகொள்ளத் தவறுவது, அதற்கு துணை போவதும் இனவாதம் தான். மிக நுட்பமாக இதை நாம் பிரித்தறிந்து, மக்களைச் சார்ந்து நிற்றல் என்பது மிக மிக முக்கியமானது, அவசியமானதாகும்.


தமிழ் மக்களின் பிரச்சிiiயைத் தீர்த்தல் என்ற அடிப்படையில், ஏகாதிபத்தியமும் பேரினவாதிகளும் இணைந்து வைக்கும் தீர்வு, வடக்கு கிழக்கு இணைந்தாக அமையும். இதன் மூலம் கிழக்கு மக்களை யாழ் மேலாதிக்கத்துக்கு அடிமைப்படுத்துகின்ற, அரசியல் அம்சத்தை அடிப்படையாக கொண்ட ஒரு சதியையே அரங்கேற்றுவர். இதை புலிகள் உட்பட புலியெதிர்ப்பு அணிகள் ஒரு சிலரைத் தவிர அங்கீகரிப்பார்கள். அந்த ஒரு சிலர் பிரிவினையை முன்வைத்து மக்களைப் பிளப்பவர்கள். அனைவரும் மக்களின் எதிரிகளாக வாழ்ந்தபடி, தத்தம் சொந்த நலனுகுக்கு உட்பட்ட வகையில் இதை கையாள்வார்கள். இப்படி இரண்டு போக்குகளையும் இனம்கண்டு, இவற்றை நாம் தெளிவுபடுத்தி, இந்த உள்ளடக்கத்தை வேறுபடுத்தி போராட வேண்டியவராக நாம் உள்ளோம். சமூகத்தைப் பிளந்து அதை சின்னாபின்னப்படுத்தி செய்ய நினைக்கும் எல்லா மக்கள் விரோத சதிகளையும், மனிதவிரோத நடத்தைகளையும் நுட்பமாக இனம் காண்பது என்பது, எம்முன்னுள்ள உடனடிக் கடமையாகவுள்ளது.


பேரினவாதிகள் கடந்தகாலத்திலும் நிகழ்காலத்திலும் தமிழ்பேசும் மக்களுக்கு தீர்வு என்ற பெயரில் வைக்கும் தீர்வுகள், தமிழ் மக்கள் அல்லாத சிங்கள மக்களுக்கும் ஒரு தீர்வாக்கி சிதைக்கின்ற ஒரு இனவாத தீர்வை முன்மொழிந்து வந்தனர். இதில் வடக்கு கிழக்கை தற்காலிகமாக இணைத்த மட்டும் மேலதிகமாக ஒன்றாக இருந்தது. அதை இன்று தமது இனவாதச் சட்டங்களிலேயே கழுவேற்றினர். இப்படித் தான் பேரினவாதம் சிந்தித்து செயலாற்றியது. உண்மையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்பது, இலங்கையில் காணப்படும் அனைத்து சிறுபான்மை இனங்களிதும் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களை உள்ளடக்கிய வகையில் தனித்னித் தீர்வுகளை அடிப்படையாக கொண்டதாகவே அமைய வேண்டும். அது மட்டும் தான் இலங்கையில் இனப்பிரச்னை பற்றி குறைந்தபட்சம் ஒரு நேர்மையான அணுகுமுறை. இதை சிங்களப் பேரினவாதமும், யாழ் மேலாதிக்க குறுந்தேசிய வாதமும் செய்யப் போவதில்லை. இரண்டும் மற்றைய சிறுபான்மை இனங்கள் மீதான அடக்குமுறையைத் தமது சொந்த தீர்வின் ஊடாகவும் கோருகின்றனர். ஆகவே இன முரண்பாடு இவர்களின் தீர்வின் பின்பும் எதார்த்தத்தில் எஞ்சிக்கிடக்கும்.


இரண்டு பிரதான தமிழ் சிங்கள இனவாதிகளின் முரண்பாடுகள், கடுமையான நெருக்கடிக்குள் சென்றுள்ளது. நிலைமை சர்வதேச அளவில் சென்று, மீள முடியாத ஓரு பாசிச சுழற்சிக்குள் சமூகம் முடங்கிவிட்ட நிலையில், இனியும் இப்படியே தொடர முடியாத நிலை இரண்டு பகுதிக்கும் ஏற்பட்டுள்ளது. கொலை கொலை கொள்ளை, இதைவிட்டால் எதுவுமில்லை என்ற சூனியம். இந்த நிலையில் யாழ் மேலாதிக்க தீர்வு, சர்வதேச அரங்கில் அவர்களின் முன்மொழிவாக வருவதை நோக்கி இரண்டு பகுதியும் அசைகின்றனர். இதில் புலிகள் உடன்பட மறுத்தால், புலி அல்லாத தரப்பு ஊடாக சர்வதேசம் ஓரு தீர்வை அரங்கில் கொண்டு வரவும், அதை அமுல்படுத்தும் வகையில் சர்வதேச தலையீடு தொடங்கியுள்ளது.


புலிகள் இந்த நிலையில் இருந்து தப்பிக்கவே அவசரமாக நிபந்தனையற்ற பேச்சுவார்த்தையை நோக்கி மீண்டும் ஓடுகின்றனர். பேரினவாதத்தின் தீர்வும், அதை எதிர்த்து தீவிர இனவாதிகளின் முரண்பாடுகளும் ஆழமாகின்றது. புதிய சக்திகள் இனவாதிகளாக அரங்கில் வருகின்றனர். இதில் ஜே.வி.பி மிக முக்கியமான இனவாதப் பாத்திரத்தை இன்று ஏற்றுள்ளனர். ஜே.வி.பியின் முக்கியமான அரசியலே இனவாதமாகிவிட்டது. தீர்வை எதிர்ப்பது, அதை கழுவேற்றுவதே அவர்களின் அரசியலாக எஞ்சிக்கிடக்கின்றது. வேறு மாற்று அரசியல் அவர்களிடம் கிடையாது. அனைத்தையும் புலிகளின் பெயரில், புலிகளின் மக்கள் விரோத செயல்களின் பின்னால் ஒழித்து நின்று செய்கின்றனர். இந்த வகையில் பிரிவினைக்கு எதிரான ஜே.வி.பியின் இனவாத சூழ்ச்சி நடவடிக்கையை, நாம் தெளிவாக இனம் காட்டி அம்பலப்படுத்தி போராட வேண்டியுள்ளது.


வடக்கு கிழக்கு இணைந்து இருப்பது எல்லா நிபந்தனைகளிலும் நிராகரிக்க முடியாத ஒன்று. ஒரு இனத்தின் சுயநிர்ணயத்தின் அடிப்படையில், இது முக்கியமான முதன்மையான நிபந்தனையாகும். இதை மறுக்கின்ற அனைவரும் மக்கள் விரோதிகளாவர். பாசிச புலிகளின் செயலைக் கொண்டு, யாழ் மேலாதிக்கத்தை அடிப்படையாக கொண்டு, இதை நாம் மறுதலிப்பது படுபிற்போக்கானது. இதற்கு எதிரான தனித்துவமான மக்கள் நலன் சார்ந்த அரசியல் வழி எதிர்ப்பவர்களிடம் இல்லை என்பதை எடுத்துக்காட்டும். உண்மையில் பிற்போக்காளர்களின் நடத்தைகளின் பின்னால் வால் பிடித்துச் சென்று, தமது எதிர்வினைகளை கொட்டித் தீர்ப்பதே, இவர்களின் சந்தர்ப்பவாத அரசியலாக முகிழ்கின்றது.


அனைத்து பிற்போக்கு மக்கள் விரோதக் கூறுகளையும் எதிர்த்து, மக்களின் ஐக்கியம் என்ற கோசத்தின் கீழ், அனைத்து பிரிவினைவாத பிளவுவாத நடத்தைகளையும் எதிர்க்க வேண்டும். இதற்கு சந்தர்ப்பவாதமாக அல்லாத, நிகழ்ச்சிகளின் பின் இழுபடாத தனித்துவமான அரசியல் நடைமுறை வேண்டும். இணைப்பிலும், இணைந்து இருப்பதுக்கும் யாழ் மேலாதிக்கமே இன்று எதார்த்தத்தில் தலைமை தாங்குகின்றது. அதாவது இன்று தலைமை தாங்கும் இன்றைய புலிகளும், நாளைய தலைமை தாங்க முயலும் புலியெதிர்ப்பாளர்களும், கிழக்கு மக்களின் அப்பட்டமான எதிரிகள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. இதில் நிபந்தனைகள் எதுவும் கிடையாது. ஒரு இனத்தின் பல்வேறு பிரிவுகளின் மேலான ஆதிக்க பிரிவுக்கு எதிரான, போராட்டத்தையே இது கோருகின்றது. வடக்கில் எப்படி யாழ் மேலாதிக்கத்துக்கு எதிரான தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் உள்ளதோ, அதேயொத்த நிலை தான் கிழக்கு மக்களின் நிலையும். கிழக்கு மக்களை, வடக்கு தனக்கு பின்னால் தனது நோக்கத்துக்கு 1956 - 1958 முதலாகவே பயன்படுத்தி வந்தது. இப்படி யாழ் மேலாதிக்கம், அந்த மக்களை ஒடுக்கியதை எந்தவிதத்திலும் அனுமதிக்கவும், அங்கீகரிக்கவும் முடியாது. இந்தப் போராட்டம் தொடருகின்றது. ஒவ்வொரு வடக்கு மக்களும், தனது சொந்த யாழ் மேலாதிக்கத்துக்கு எதிராக ஈவிரக்கமற்ற வகையில் போராடவேண்டிய வரலாற்றுப் பணியை, முன்நிபந்தனையான நேர்மை துணிவான செயலை செய்யக் கோருகின்றது.


கிழக்கு மக்கள் என்று பொதுவில் அழைக்கும் போது, கிழக்கு தமிழ் மக்களையும், முஸ்லீம் மக்களையும் தனித்தனியாக குறிக்கின்றது. கிழக்கு தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையும், முஸ்லீம் மக்கள் மேலான யாழ் மேலாதிக்க ஒடுக்குமுறையும் வேறுபட்ட வடிவில் காணப்படுகின்றது. கிழக்கு தமிழ் மக்களை யாழ் மேலாதிக்கம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக தவறாக வழிநடத்திய வரலாறு உண்டு. இதற்கு கிழக்கு யாழ் தலைமைகள் துணை போனார்கள், போகின்றார்கள். இந்த வகையில் ஒடுக்குமுறையை சரியாக புரிந்து, துல்லியமாக ஐக்கியத்துக்காக ஒருமித்த போராட்டத்தை அனைத்து மக்களின் எதிரிகளுக்கு எதிராக நடத்தவேண்டும். எதிரி வடக்கில் மட்டுமல்ல, கிழக்கிலும், ஏன் முஸ்லீம் மக்கள் மத்தியிலும் உள்ளனர். இதற்கு மேலாக சிங்கள மக்கள் மத்தியிலும் உள்ளனர். மக்களின் எதிரி இனம் கண்டும், இனம் காண்பதையே இக்காலகட்டம் தெளிவாக கோருகின்றது.


குறிப்பாக முஸ்லீம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிப்பதன் ஊடாக, இணைந்த வடக்குகிழக்கில் முஸ்லீம் மக்களின் தனித்துவமான அலகையும் அங்கீகரித்த, ஒரு கூட்டாச்சி முறை அவசியமானது. மக்கள் ஐக்கியமான செயல்பாட்டுக்கு எதிரான, அனைத்து பிரிவினைவாத பிளவுவாத மக்கள் விரோத நடத்தை தூண்டுகின்ற தமிழ் முஸ்லீம் பிற்போக்குவாதிகளை அம்பலப்படுத்தி போராடவேண்டும். மறுபக்கம் ஏகாதிபத்திய துணையுடன் பேரினவாதம், தனது இனவாத தீர்வாக, வடக்குகிழக்கை வலுக்கட்டாயமாக மக்களுக்கு எதிராக இணைக்கின்ற சதியை அம்பலப்படுத்தவேண்டும். கிழக்கு மக்கள் வடக்கின் யாழ் மேலாதிக்கத்துக்கு உட்படுத்துவதை எதிர்த்துப் போராட வேண்டும். தீர்வு என்ற பெயரில் நடக்கும், இந்த கூட்டுச் சதியை அம்பலப்படுத்த வேண்டும். யாழ் மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் புலிகளும், புலியெதிர்ப்புக் கும்பலும் இழைக்கும் கிழக்கு மக்களுக்கு எதிரான சதியை அம்பலப்படுத்தி போராடவேண்டும்.


இந்தியா இலங்கை ஒப்பந்தத்தில் வடக்குடனான கிழக்கின் இணைப்பில், கிழக்கு மக்கள் வடக்குடன் இணைவதா? இல்லையா? என்ற தெரிவை வாக்களிக்க கோருகின்றது. இது உள்ளடகத்தில் யாழ் மேலாதிக்கத்திற்கு அடிபணிவதா? இல்லையா? என்பதை கோருவதாக அமைகின்றது. கிழக்குடன் வடக்கு இணைவதா? என்று வடக்கு மக்களிடம் வாக்களிக்க கோரவில்லை. மாறாக கிழக்கில் மட்டும் கோரப்படுகின்றது. அப்படி என்றால் இதன் அர்த்தம் என்ன? கிழக்கு மக்கள் யாழ் மேலாதிக்கத்துக்கு உட்படுத்துவதை, அந்த மக்களிடம் அங்கீகரிக்க கோருவது தான். அதாவது யாழ்ப்பாணத்தானுக்கு கிழக்கு மக்கள் (மட்டக்களப்பான்) அடிமையாக இருக்க சம்மதிக்கின்றீர்களா என்பதைத்தான், அன்றைய இணைப்பு சாரப்படுத்தியது. இதுவே வாழ்வியல் எதார்த்தமாகவும் உள்ளது.


அன்றைய இணைப்பும், இதை நிரந்தரமாக்க கிழக்கு மக்களிடம் கோர இருந்த அங்கீகாரமும், யாழ் மேலாதிக்கத்தை உள்ளடக்கத்தை ஏற்றுக்கொண்டு உருவாக்கப்பட்டது. இந்தியா உள்ளிட்ட துரோகக் குழுக்களின் துணையுடனான இந்த உடன்படிக்கையில், புலிகளும் கையை நளைத்தனர். எந்தளவுக்கு கேவலமான இழிவான நிலை. கிழக்கு மக்களை பணயம் வைத்து செயய்ப்பட்ட அப்பட்டமான துரோகம். கிழக்கு மக்களிடம் நேரடியாகவே யாழ்பாணத்தானுடன் சேர்ந்து வாழ்ப்போகின்றீர்களா என்று அப்பட்டமாக கேட்டால், இதேபோல் யாழ்பாணத்தானின் அடிமையாக அரசியல் எடுபிடிகளாக வாழப் போகின்றீர்களா என்று கேட்டால், இல்லையென்றே வாக்களிப்பர். இதில் முஸ்லீம் மக்கள் பற்றி கேட்க வேண்டியதில்லை.


ஒருபுறம் யாழ் மேலாதிக்கம், மறுபுறத்தில் அதனை தலைமை தாங்கும் புலிகள் தனது சொந்த வன்முறை ஊடாக, இந்தப் பிளவை மேலும் பாரியளவில் அகலப்படுத்தியுள்ளனர். கிழக்கு தமிழ் மக்களை இழிவுபடுத்தியும், அவர்கள் மேலான வன்முறையை கட்டவிழ்த்துவிட்டனர். கருணா விவகாரத்தின் பின், இது மேலும் நுட்பமாகி அகலமாகின்றது. கிழக்கு தமிழ் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை, வடக்கு மக்கள் கொண்டுள்ளனர். அவர்கள் பண்பாட்டு கலாச்சார கூறுகள் ஊடாக இழிவாடி அந்த மக்களை தூற்றுகின்றனர். இதே போன்று முஸ்லீம் மக்கள் மேல், தொடர்ச்சியாக இனவிரோத அழிப்பில் புலிகள் ஈடுபடுகின்றனர். தமிழ் மக்களையும் அவர்களுக்கு எதிராக நிறுத்தி, அந்த மக்களை தூற்றுவதையே அரசியலாக்கியுள்ளனர். கருணா புலிகளில் இருந்த காலத்தில் கிழக்கில் எத்தனை முஸ்லீம் விரோத படுகொலைகள் நடந்தன. இன்று அதுவே அவர்களின் தலைவிதியாகயுள்ளது. இப்படிப்பட்ட நிலையில் வடக்குடன் முஸ்லீங்கள் இணைந்த ஒரு நிர்வாக அலகை எப்படி சுயாதீனமாக ஆதரிப்பார்கள்?. இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.


இந்த நிலையில் யாழ் மேலாதிக்கத்தையும், அதற்கு தலைமை தாங்கும் புலியையும் அம்பலப்படுத்தியும், அதே நேரம் இதைக் கூறி பிளவை விதைப்பதற்கு எதிராகவும், மக்களின் இணைப்பின் அவசியத்தை வலியுறுத்துவது, எல்லோரினதும் உடனடிக் கடமையாக உள்ளது. யாழ் மேலாதிக்கத்துக்கு தலைமை தாங்கும் புலிகளையும், புலியெதிர்ப்புக் கும்பலையும் அம்பலப்படுத்தி, இதற்கு ஆதரவாக துணையாக பேரினவாதிகள் முன்வைக்கும் இணைப்பை தோலுரிக்க வேண்டும். மக்களை பிளக்கும் பேரினவாதத்தின் இணைப்பினுடாக பிரித்தாளும் உத்தியை அம்பலப்படுத்த வேண்டும். பிளவு நடவடிக்கையை பேரினவாதத்தின் தீவிரமான பிரிவும், புலியெதிர்ப்பின் ஒரு பகுதியும் முன்னிலைப்படுத்துகின்றது. இதையும் அம்பலப்படுத்த வேண்டியுள்ளது. இன்று ஐக்கியம் பிளவு, இதில் எது நடந்தாலும், மக்களின் பிளவின் மீது, மக்களின் அடிமைத்தனத்தின் மீது தான் அரங்கேறும். இனவாத அடிப்படை எல்லைக்குள், தமிழ்பேசும் மக்களுக்கு இடையிலான பிளவிலேயே பேரினவாதம் தீர்வைத் திணிக்கும். இதற்கு எதிரான போராட்டம் தொடர்வதை யாரும் மறுதலிக்க முடியாது.


25.10.2006