Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிகளின் தலைவர் பிரபாகரன் அடிக்கடி, தமது இழிசெயலுக்கு துணைநின்ற மக்கள் விரோதிகளுக்கு "மாமனிதன்" என்ற பரிசு வழங்குகின்றார். அதேபோன்று தான் ஆனந்தசங்கரிக்கும் ஏகாதிபத்தியம் வழங்கியுள்ளது. "அகிம்சைக்கும் சகிப்புக்கும்" எடுத்துக்காட்டி, அதை ஊக்குவிக்க, இலங்கைப் பணத்தில் அண்ணளவாக ஒரு கோடிக்கு ஒரு பொன் முடிப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனந்தசங்கரிக்கோ, அவரின் கூட்டணிக்கோ இன்று தனித்துவமான சொந்த அரசியல் கிடையாது. அதனால் தான் இந்தப் பரிசுக்கு சிறப்பாக அவரை தேர்வு செய்துள்ளது. ஏகாதிபத்தியத்தின் அரசியலை ஆனந்தசங்கரி தன்வசப்படுத்தி, அதை தன்னுடைய அரசியல் திட்டமாக உலகுமெங்கும் முன்வைத்து வாலாட்டித் திரிவதால் தான், பரிசுக்குரிய நபராக அவர் தெரிவு செய்யப்பட்டார்.


ஆனந்தசங்கரி வைக்கும் அரசியல் என்ன? ஒரு அரசியல் தீர்வு. யுத்தமற்ற அமைதியான நிலைமை. தேர்தலில் போட்டியிடக் கூடிய ஜனநாயகம். இதையே ஆனந்தசங்கரி தனது அரசியலாக, கோரிக்கையாக முன்வைக்கின்றார். இதற்கு வெளியில், இந்த உள்ளடகத்துக்கு வெளியில் வேறு அரசியல் கிடையாது. இதையே ஏகாதிபத்தியம் முன்வைக்கின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளும் போது, ஆனந்தசங்கரியின் அரசியல் ஏகாதிபத்திய கைக்கூலித்தனம் வேறில்லைதான். இதையே அனைத்து புலியெதிர்ப்புக் கும்பலும் விசுவாசமாக செய்கின்றது. அப்படியிருக்க ஆனந்தசங்கரியை சிறப்பாக ஏன் தெரிவு செய்கின்றனர்.


ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை தனது சொந்த அரசியல் வேலைத்திட்டமாக மாற்றி, அதை விசுவாசமாக அங்குமிங்குமாக பறந்தோடித் திரிந்து முன்வைப்பது தான் அடிப்படைக் காரணமாகும். சிங்கள பேரினவாத தலைவர்களுடனும், உலக ஏகாதிபத்திய தலைவர்களுடனும் இதற்காக விசுவாசமாக பிரச்சாரம் செய்வதுடன், அதை வலியுறுத்தி புலிகளிடமும் கூட முரண்படுகின்றார். தமிழ்மக்களும் நாட்டின் அனைத்து இன மக்களும் விரும்பும் அமைதியையும், ஒரு அரசியல் தீர்வையும், பொதுவான ஜனநாயகச் சூழலையும், இதற்கு சார்பாக பயன்படுத்துவதில், ஆனந்தசங்கரி கையாளும் சூழ்ச்சி இனம்காணமுடியாத வகையில் மிகவும் நுட்பமாக மக்களுக்கு எதிராக இருக்கின்றது. ஏகாதிபத்திய இந்த அரசியல் நோக்கத்தை ஊக்குவிக்கவே, இந்தப் பொன்முடிப்பாகும்.


ஏகாதிபத்தியம் இன்று இலங்கையில் அரசு மற்றும் புலியிடம் கோருவதற்கு வெளியில், ஆனந்தசங்கரியிடமோ, புலியெதிர்ப்புக் கும்பலிடமோ மாற்று அரசியல் திட்டம் எதுவும் கிடையாது. மக்களுக்கு என்று தனித்துவமான, மக்கள் நலனை முன்வைக்கக் கூடிய ஒரு வேலைத் திட்டம் கிடையாது. இதை புரிந்துகொள்ளும் ஒவ்வொருவரும், இதன் பின்னுள்ள அரசியலை புரிந்துகொள்ளமுடியும். ஏகாதிபத்திய வேலைத்திட்டத்துக்கு விசுவாசமாக வாலாட்டி குலைப்பதும், அவர்கள் போடும் பிச்சையில் வாலாட்டி வாழ்வதும் தான் இவர்களின் அரசியல் பிழைப்பாகும். இதை இவர்கள் தமக்கு கிடைத்த உலக அங்கீகாரம் என்று பெருமையாக பீற்றவும், பண முடிப்பை இதை தொடர்வதற்கு சன்மானமாக மானவெட்கமின்றி கூறிக்கொள்கின்றனர். கைக்கூலிப்பணத்தை இப்படிப் பெற்று, அதைத் தொடர சபதம் ஏற்று நிற்கின்றனர்.


தமிழ்மக்களின் அன்றாட வாழ்வியல் துன்பங்களின் மேல், இப்படி பலர் கோமாளிக் கூத்தாடுகின்றனர். ஒருபுறம் அரசு, மறுபுறம் புலிகள், இதற்கு இடையில் சிலர். இப்படி கனவான் வேடங்கள், பொறுக்கி வேடங்கள் பற்பல. மக்களைப்பற்றி சிறிதளவு கூட அக்கறைப்படாத, அவர்கள் நலனை முன்வைக்காத மக்கள் விரோத அரசியல். இந்த வகையில் தான் ஆனந்தசங்கரியின் கைக்கூலி விசுவாசத்தை, ஏகாதிபத்தியம் மிதப்பாக்கிவிடுகின்றது.


ஆனந்தசங்கரியின் கடந்தகாலம் முதல் நிகழ்காலம் வரை மக்களை வைத்து பிழைப்பு நடத்தும் பச்சோந்தியாகவே அங்குமிங்கும் ஓடித்திரிந்தவர் தான். இறுதிக்கால கூட்டணி கால அப்புக்காத்து அரசியல் பணியில், அங்குமிங்குமாக ஊரையும் உலகத்தையும் கொள்ளையிட்டு கூத்தடிப்பவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை முன்வைக்கின்றார். அதையொட்டி அவர்களுடன் பேசமுனைகின்றார். அவர்களின் தலையீட்டை கோருகின்றார். அதற்கு துணைநிற்கும் அரசியல் விசுவாசத்தை பறை சாற்றுகின்றார். கடந்தகால கூட்டணியின் அதேபாணி அரசியல் சுத்துமாத்து, அதே கைக்கூலித்தனத் தனமே, ஆனந்தசங்கரியின் மையமான செயல்தளமாக உள்ளது. இது தான் ஆனந்தசங்கரியின் நிஜமான சொந்த அரசியல் முகம். இன்று இதை மூடிமறைக்கவே புலிப் பாசிசம் துணைநிற்கின்றது.


பாசிச புலிகள், மாபியா கொள்ளைக்காரராகி ஊர் உலகம் போற்ற, கொலை கொள்ளையில் ஈடுபடுவதையே தேசியமாக்கி நிற்கின்றனர். புலி அச்சுறுத்தல் சமூகம் முழுமையானதாகி, அதுவே சர்வமயமாகிவிட்டது. அந்த மாபியா பாசிச கும்பல் ஆனந்தசங்கரிக்கு தகுந்த மரியாதையும் தகுந்த இடமும் கொடுக்காததால், அமைதிக்காலத்தில் திடீர் அகிம்சைவாதியாகி திடீர் ஜனநாயகவாதியானவர். இதனால் புலிகளின் கொலைக்கு பலியாகக் கூடிய, முக்கிய அரசியல் பிரமுகராகினார். கதிர்காமருக்கு பின் சிங்கள பேரினவாதிகளே அவரை வெளிவிவகார அமைச்சராக நியமிக்க முனைந்தனர். அதேபோல் தமது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுக்க முன்வந்தனர். அந்தளவுக்கு மிக விசுவாசமாக பேரினவாதத்துக்கு ஏற்ற வகையில் பரிணமித்தவர். மந்திரிப் பதவியையும், பாராளுமன்ற உறுப்பினராகும் கோரிக்கையையும் நிராகரித்த ஆனந்தசங்கரி, அதற்கு பதிலாக ஏகாதிபத்திய கைக்கூலித்தனத்தை ஏற்றுக்கொண்டு அதற்காக பொன் முடிப்பையும் விசுவாசமாக பணிவாகப் பெற்றுக்கொண்டார். அரசியலில் அம்பலப்படாத, ஆனால் மக்களுக்கு எதிராக செயல்படுவதில், தனது கைக்கூலித்தனத்தை சாதுரியத்தை இதன் மூலம் நிறுவி நிற்கின்றார்.


இவரின் அரசியல் சூழ்ச்சியே பேரினவாத கோரிக்கையை நிராகரித்து, தன்னை தூய்மைவாதியாக காட்டியபடி சிங்கள அரசிடம் தீர்வை வைக்கக் கோருகின்றார். நடைமுறை சாத்தியமான ஒரு தீர்வை முன்வைப்பதன் மூலம், புலி மற்றும் அரசுக்கு எதிரானவராக காட்டிக் கொள்ளமுனைகின்றார். இதை அடிப்படையாகக் கொண்டு, உலகம் முழுக்க கடிதங்கள் மூலமும், நேரடியான பேச்சுவார்த்தையையும் நடத்துகின்றார். இது தான் அவரின் அரசியல் சூழ்ச்சி. இந்த அரசியல் எப்படிப்பட்டது என்பதை யாரும் உரசிப்பார்ப்பதில்லை. அந்தளவுக்கு தமிழ் சமூகத்தை புலிகள் மலடாக்கி வைத்துள்ளனர். இது புலிகளுக்கு மட்டுமல்ல, புலி அல்லாத ஆனந்தசங்கரி போன்ற அரசியல் பொறுக்கிகளுக்கும் உதவுகின்றது.


ஆனந்தசங்கரியின் அரசியல் என்ன? இந்தக் கேள்விக்கு யாரும் நேர்மையாக பதிலளிப்பதில்லை. ஆனந்தசங்கரியும் இதைச் சொல்லப்போவதில்லை. மாறாக யுத்தம், யுத்தக் கெடுபிடி, மனித அவலங்கள், புலியின் பாசிசம், பேரினவாதத்தின் கொடூரமான செயல்கள் பற்றி மட்டும் பேசுவர். இதில் இருந்து மீள, ஏகாதிபத்திய ஆதரவுடன் நடைமுறைச் சாத்தியமான ஒரு கோசத்தை அடிப்படையாகக் கொண்டு, அரசியல் ப+ச்சாண்டிகாட்டி, மக்களின் அடிமைத்தனத்தை பாதுகாப்பதே இவர்களின் மையஅரசியல்.


அதாவது ஏகாதிபத்தியம் கோருகின்ற ஒரு தீர்வு, அவர்கள் முன்மொழியும் ஒரு அமைதி, அவர்களின் நோக்கிலான ஒரு தேர்தலில் போட்டியிடக் கூடிய ஜனநாயகம், இதைத்தான் ஆனந்தசங்கரி தனது அரசியல் கோரிக்கையாக முன்வைக்கின்றார். இதைத்தான் புலியெதிர்ப்பு கும்பலும் முன்வைக்கின்றது. இந்த ஏகாதிபத்திய கைக்கூலித்தன அரசியலை அங்கீகரித்து, அதை உலகுக்கு வரையறுத்துக் காட்ட "அகிம்சை மற்றும் சகிப்புக்கான" பரிசாக இது காட்டப்படுகின்றது. இதன் உள்ளடக்கம் கேலிக்குரிய ஒன்றாக உள்ளது. அகிம்சை மற்றும் சகிப்புக்கு பரிசு என்றால், அதன் அரசியல் அர்த்தம் என்ன? புலிகளுக்கு அடங்கியொடுங்கிக் கிடப்பதும், இதற்குள் தானே அடங்குகின்றது. புலிகளின் பாசிசத்தை சகித்து, எதிர்ப்பின்றி அகிம்சையாக சகித்து வாழும் மக்கள் நிலையை உருவாக்கிய புலிக்கும், இது அரசியல் ரீதியாக இது பொருந்துமல்லவா! இதைத்தான் புலிகள் கோருகின்றனர். புலிகளுக்கே இந்த பரிசை கொடுத்து இருக்கலாமே.


ஆனால் இங்கு இது எதிர்நிலையில் பயன்படுத்தப்படுகின்றது. புலியின் வலது பாசிசம் அம்பலமாகி வெடித்துச் சிதறி சின்னாபின்னமாகி விடும் என்ற ஒரு நிலைக்கு, அது வீங்கி வெம்பிக் கொண்டிருக்கின்றது. வெடித்து சிதறும் போது, அதற்கு ஒரு அரசியல் வடிகால் தேவை என்பதை தெளிவாக ஏகாதிபத்தியம் உணருகின்றது. அந்த அரசியல் வடிகால், வலதுசாரிய வாய்க்காலாக இருக்கவேண்டும் என்பதால், பணமுடிச்சை வழங்கி ஒரு அரசியல் களம் மாற்றாக உருவாக்கப்படுகின்றது.


உண்மையில் நிகழ்சிகளின் போக்கில் வலதுசாரி அரசியல் முடிவுக்குவரும் போது, இடதுசாரி போக்கு வளர்ச்சியுறும் என்ற அச்சம் இயல்பாக மற்றொரு வலதைக் கொண்டு நிவர்த்தி செய்வது தான் ஏகாதிபத்திய அரசியல் உத்தியாகும். 1940 களிலும் 1950 களிலும் தேசியங்களைக் கோரி சுதந்திர போராட்டம் வீறுகொண்ட போது, ஏகாதிபத்தியம் தமது கைக்கூலிகளிடம் சுதந்திரத்தின் பெயரில் ஆட்சியைக் கைமாற்றிய அதே வலதுசாரிய நிகழ்ச்சிதான் இங்கும் அரங்கேறுகின்றது. புலிகளை புலிகளாக அதாவது பாசிச மாபியாவாக இருக்கும் எல்லைக்குள் அவர்களை ஏகாதிபத்திய கைக்கூலிகளாக வைத்திருப்பது என்பது, உலகமயமாதலின் இன்றைய நிகழ்ச்சிப் போக்கில் அவசியமற்றதாக உள்ளது. இந்த நிலையில் புலியின் உள் மற்றும் வெளி கூறுகளினால் ஏற்பட்டுவரும் சிதைவை ஈடுசெய்ய, மற்றொரு பிற்போக்கு வலதுசாரியின் கையில் தமிழ் மக்களின் தலைவிதியை தாரைவார்க்க ஏகாதிபத்தியம் முனைகின்றது. இந்த வகையில் நடைமுறைச்சாத்தியமான ஒரு அரசியல் தீர்வுடன் ஆனந்தசங்கரி தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஏகாதிபத்திய தயாரிப்பு களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளது. தனது சொந்த சரக்காக, அதை கூவிவிற்கும் தரகு வேலையை ஆனந்தசங்கரி விசுவாசமாக செய்கின்றார்.


டக்ளஸ், கருணா வரிசையில் ஆனந்தசங்கரி. நாளை வேறு பலரும் வருவார்கள். இவர்கள் யாரும் மக்களின் நலனை, அவர்களின் வாழ்வியல் சார்ந்து எதையும் தீர்க்கப் போவதில்லை. மாறாக புலிகள் இடத்தில் ஒரு மாற்று, பேரினவாதத்திடம் இதற்குள் ஒரு தீர்வு. இப்படி அரசியல் சூதாட்டத்தில் துணிந்து மக்களை வழிநடத்த முனைகின்றனர். அகிம்சை, சகிப்பு தத்துவம் என்பதே மனித பரிணாமத்துக்கு முரணானது. மனிதனை மனிதன் சுரண்டவும், சாதியால் சாதியின் பெயரில் ஒடுக்கவும், பெண் என்ற அடையாளத்தால் பெண்ணை இழிவுபடுத்தி அடக்கவும்... உள்ள உரிமையை தக்கவைப்பது தான் அகிம்சையும் சகிப்பும். ஒடுக்கப்பட்ட மக்கள் அடங்கியொடுக்கி சகிப்புடன் கூடிய அகிம்சைவாதிகளாக வாழ்வதைத்தான் அமைதியென்கின்றனர். அதைப்பற்றி பேசாத புலியெதிர்ப்புத் தான் ஜனநாயகம் என்கின்றனர். அகிம்சையை கூடிய சகிப்பை தமக்கு எதிராக கடைப்பிடிக்க கோருவது தான், ஏகாதிபத்திய அரசியலாகும். அகிம்சையை கடைப்பிடிக்கவும், சகித்துக் கொள்ளவும் வேண்டுகோள் விடுக்கின்றதென்றால், இதன் எதிர்மறையில் வன்முறையும் சகிப்புத்தன்மையற்ற போக்கும் சமூகத்தில் இருப்பதை அங்கீகரிப்தாகும். இதை எதிர்க்காது சகித்து வாழவும், அகிம்சையாக அடங்கிப் போகவும் கோருவது என்பதே, மனித இனத்துக்கு எதிரானது. இதைத் தான் புலிகளும் கோரினர். ஏகாதிபத்தியமும் ஆனந்தசங்கரியூடாக கோருகின்றனர்.


புலிப்பாசித்தை இதனுடன் பொருத்தி இதற்குள் மகுடம் சூட்டி, ஒரு சமூகத்தை இழிவாடி அதற்குள் வாழக்கோருவதே இவர்களின் அரசியலாகும். அதைப் பெருமையாக போற்றுவதும், அதைப் பெருமையாக கொண்டாடுவது மக்களுக்கு எதிரான அதே புலி ஏகாதிபத்திய அரசியல் தான். இந்தப் பரிசை பெருமையாக கருதி கருத்துரைத்த ஆனந்தசங்கரி, ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என்கின்றார். யாருடைய ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி இது? இதைத் தலையில் ஏற்றித் திரியும் புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் என்பது, அதே ஏகாதிபத்திய மக்கள் விரோத விசுவாச அரசியல் தான்.


இந்த ஏகாதிபத்திய பரிசுக்குரியவர் கடந்தகாலத்தில் கிளிநொச்சியில் தீவிர தமிழ் இனவாதம் பேசி அரசியல் ரவுடியாக, சமூக விரோதக்கும்பலின் துணையுடன் தான் அரசியல் பவனிவந்தவர். அன்று யாழ்ப்பாணத்தில் துரையப்பா கட்டிய கட்டிடங்களை தமிழ் இனவாதிகள் இடிக்கவில்லை, ஆனால் துரையப்பாவைக் கொன்றனர். ஆனால் ஆனந்தசங்கரி குமாரசூரியர் கட்டிய கட்டிடங்களை, நவீன சந்தையை, கிளிநொச்சி நகருக்கு நீர் வழங்கிய இணைப்புகள் பலவற்றையே செயற்படாது தடுத்து நிறுத்தியவர் அல்லது அதை குழிதோண்டி புதைத்தவர். குமாரசூரியரைக் கொல்வதற்கு இவர்களால் வளர்க்கப்பட்டவர்கள் பலமுறை முனைந்தனர்.


இப்படிப்பட்டவரின் அரசியல் யோக்கியதை தான் என்ன? தனது இரணைமடு காணிக்கு அருகில் இருந்த மயானத்தை (சுடலை) அகற்ற அரசியலையே பயன்படுத்தியவர். மாற்று மயானத்தை மக்களுக்கு காட்டியபோது, மக்களின் எதிர்ப்பால் அதைக் கைவிட்டவர். கிளிநொச்சி நகருக்கு வெளியில் மின்சாரம் சென்ற போது, முதலில் இவருடைய வீட்டுக்கு அருகாமையால் சென்றதன் மூலம் தான் முதலில் மின்சாரத்தை பெற்றவர். தனது வீட்டுக்கு செல்லும் வீதியில் மூன்று நவீன பாலங்களையே, தனது அரசியல் மூலம் நிறுவியவர். அவரின் காணிக்கே இந்த கவுரவம் என்றால், எத்தனை அரசியல் வண்டவாளங்கள். இப்படித்தான், இவரின் அன்றைய மக்கள் சேவை நடந்தது. இப்படி பலதும் பத்துமாக பலவுண்டு.

 

 
இந்த ஆனந்தசங்கரியின் அரசியலுடன் கொண்டிருந்த, மக்கள் விரோத பாசிச வலது அரசியல், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் கொடிகட்டி பறந்தது. புலிகளின் கொலைகாரக் கும்பல் முதல் பலரையும் தமது அரசியல் எடுபிடியாக்கி, தமது எதிரியாக கண்டவர்களை கொல்ல உதவியவர்கள். அதற்கு இனவாத அரசியல் வடிவம் கொடுத்தவர்கள் தான் இவர்கள். தமது சொந்த பாசிச அரவணைப்பில் வளர்த்தவர்கள். புலிக்கே வழிகாட்டியவர்கள். இன்று அகிம்சை, சகிப்புக்கு வேடமிட்டுள்ளனர். இவர்களின் அரசியல் சகிப்பு எப்படிப்பட்டது. எமது இணைய இணைப்பை போட்டவர்கள், சகிப்புத் தன்மை இழந்து அதை அகற்றியவர்கள். இப்படி நடிக்கும் இவர்கள் மீண்டும் வரலாறு திரும்பும் என்ற நம்பிக்கையுடன், ஏகாதிபத்திய ஆசியுடன் உலகம் சுற்றுகின்றனர். மக்களின் முதுகில் குத்தி நிற்கும் இந்தக் கும்பல், எப்படியாயினும் புலியை யார் ஒழித்தாலும் சரி என்ற வாயில் வீணி வடிய, புலிக்கு பதிலாக ஒரு ஓநாய்க் கூட்டமாகக் காத்துக்கிடக்கின்றனர். புலிகள் தின்ற மீதியைத் தின்ன, அங்குமிங்கும் வெறிபிடித்து துணைக்கு ஆட்களைப் பிடித்தபடி அலைகின்றனர்.


17.09.2006