Language Selection

பி.இரயாகரன் -2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

மீண்டும் மீண்டும் அமைதி, பேச்சுவார்த்தை என்று தொடரும் அரசியல் நாடகத்தில் பங்கேற்கும் அரசியல் கோமாளிகள், ஒட்டுமொத்த மக்களின் வாழ்வையும் மிக கேவலமாகவே இழிவாடுகின்றனர். அதேநேரம் இவர்களின் கோமாளித்தனம் உருவாக்கும் ஒவ்வொரு அமைதியும், மக்களின் நிம்மதி மூச்சாகவே எழுகின்றது. இவை எல்லாம் எதை எமக்கு எடுத்துக் காட்டுகின்றது. யுத்தம் மக்களுக்கானதல்ல என்பதையும், யுத்தம் மக்களுக்கு எதிரானதாகவே நடத்தப்படுவதையும் எடுத்துக் காட்டுகின்றது. இதுவே தமிழ் தேசிய யுத்தம் பற்றிய மக்களின் மனப்பாங்காகும்.


வாய்பேசவே முடியாத அசாதாரணமான ஒரு நிலையில், மக்கள் தேசியத்தின் பெயரில் வாழவைக்கப்படுகின்றனர். மக்கள் தமது சொந்தக் கருத்தை ஊமையாக வெளிப்படுத்தும் விதத்தின் மூலம், இதன் மீதான தமது ஆழ்ந்த வெறுப்பைப் பிரதிபலிக்கின்றனர். தேசியத்தின் பெயரிலான யுத்தம் இப்படி என்றால், தேசியத்தின் பெயரிலான அமைதியும் கூட மக்களுக்கு எதிராகவே உள்ளது. மக்கள் புலித் தேசியத்தின் பெயரில் வாழவழியின்றி, தேசியத்தின் பெயரில் வாழ்வை இழந்து நிற்கின்றனர். சொந்தக் குழந்தையை, குடும்ப உறுப்பினரை, உறவினரை, ஏன் சமூகத்தின் கூட்டைக் கூட இழந்து விட்டனர். இதன் மேல் எந்த அபிப்பிராயமும் சொல்ல முடியாத நிலையில் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். சொல்பவன் மேலும் இழப்பை தாங்கிக் கொள்ள வேண்டிய துயரமே, எமது புலித் தேசியமாகிவிட்டது.


இது மட்டுமா இல்லையே, உழைப்பை, சொத்துக்களை, சுற்றுச் சூழலை, சிந்தனை ஆற்றலை, ஏன் சமூகத்தின் ஆற்றல்மிக்க பரஸ்பர இயங்கியல் உறவை எல்லாம் தமிழன் இழந்துவிட்டான். இதையே தேசியம் என்கின்றனர். இதையே தமிழ் தேசிய வெற்றி என்கின்றனர். பிரபாகரனும். சுற்றி வாழ்பவர்களின் வாழ்க்கையையும் தான் தேசியம் என்றும், தேசிய வெற்றியும் என்கின்றனர். இந்த சிறு கும்பல் இதன் பெயரில் வாழ்வதால், அவர்களின் உலகளாவிய நுகர்வு கூட தேசியத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது. தமிழ் மக்களின் பெயரில், தமிழ் தேசியத்தின் பெயரில் இவை அனைத்தும் கடைவிரித்து நியாயப்படுத்தப்படுகின்றது.


மக்களின் வாய்களை மூடி ஒட்டிவிட்டு நடத்தும் முகமூடிக் கொள்ளை போன்ற, இந்த புலித் தேசிய கொள்ளைக்காரர்கள் ஒரு கைதேர்ந்த முகமூடி கொள்ளைக்காரராகவே மாறிவிட்டனர். முகமூடி கிழிகின்ற போது, அவர்களை காப்பாற்றவே யாருமில்லாது போய்விடும் தவிர்க்க முடியாத பாதையில், வேகமாகவே இந்த முகமூடிக் கொள்ளைக்காரர்கள் தப்பியோட முனைகின்றனர். இதைத் தான் பேச்சுவார்த்தை என்ற பெயரில், அன்னிய நாடுகளில் ஆடம்பரமான மாளிகைகளில் கூடியிருந்து பேசமுனைகின்றனர். அங்கு மக்களுக்காக என்ன பேசுகின்றார்கள் என்றால் எதுவுமேயில்லை. மக்கள் பற்றி, அந்த சமூகத்தின் எதிர்காலம் பற்றி இவர்கள் எதிரியுடனும் பேசுவதில்லை, ஏன் தமக்குள்ளும் கூட பேசுவதில்லை. தமக்குள் பேசிக் கொள்வதே, தமது சொந்த குழு நலன்பற்றி மட்டும் தான். இப்படிப்பட்டவர்கள் எதிரியுடன் மக்கள் பற்றி பேச முடியாது. ஏன் அதைப்பற்றி எந்த அறிவும் கூட இவர்களிடம் கிடையவே கிடையாது.


மாறாக தமிழ் குறுந்தேசியத்தின் கடைக்கோடியில் நின்று, குறுகிய குழுநலனை முதன்மைப்படுத்தி இழிந்துபோன விபச்சார தரகர்களாகி பேரங்களில் ஈடுபடுகின்றனர். இதை பேரினவாதம் தனது நலனுக்கு இசைவாக பயன்படுத்தி, சிங்களப் பேரினவாதத்தையே தக்கவைக்கின்றது. உண்மையில் பேரினவாதம் முதிர்ச்சியடைந்த ஒரு அரசியல் சதுரங்கத்தில், புலிகளின் குறுகிய நலன்களின் பின்னால் வெற்றிகரமான அரசியலையே செய்கின்றனர். இதனடிப்படையில் இன்று புலிகளின் மையப் பிரச்சினையாக கருணா விவகாரம் உள்ளது. இதற்குள் புலிகள் சுற்றிச்சுற்றி நிற்க, பேரினவாதம் அதற்குள் சுற்றிச்சுற்றி ஓடுகின்றது. கிட்டத்தட்ட கிழக்கின் ஒரு பகுதியை புலிகள் கருணாவிடம் இழந்து நிற்கின்றனர் அல்லது கருணா அதை எடுத்துள்ளார். இந்த விடயம் தொடங்கிய போது புலிகள் ஆர்ப்பரித்து அதை தமது சொந்த வக்கிரத்தின் மூலம், அதை வெறும் தனிநபர் விவகாரமாகவே காட்ட முனைந்தனர். அதன் விளைவு இன்று பூதாகரமாகி, அவர்களின் அதிகாரத்தைக் கூட நடுச்சந்தியில் நிறுத்துகின்றது.


அன்று இந்த விடயத்தை தாமே தீர்த்துக் கொள்வதாக கூறியதுடன், அரசு இதில் தலையிட வேண்டாம் என்று எச்சரிக்கையையும் கூட விடுத்தனர். தமிழ் மக்களுக்கு இது ஒரு சிறிய பிரிவின் பிரச்சினை என்று கூடக் கூறினர். எல்லாவற்றையும் வெற்றிகரமாக அரசியல் கொலைகள் மூலம் நடந்தி முடித்துவிடலாம் என்று கூட நம்பினார்கள். அப்படித்தான் செய்தார்கள். இராணுவ ரீதியில் தீர்க்கப்படமாட்டாது என்று கூறியபடியே, படுகொலைகளை தொடங்கினார்கள். இந்த அரசியல் படுகொலைக்கு இலங்கை அரசு பலவகையில் உதவியது. கண்காணிப்புக் குழு மறைமுகமாக உதவியது. இதன்போது கொலைகள், ஆட்கடத்தல், ஆயுத பயன்பாடுகள் எவையும் யுத்த நிறுத்த மீறலாகக் கூட பதிவு செய்யப்படவில்லை. ஏன் கருணா அங்கிருந்து முற்றாக துரத்தியடிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகக் கூட, புலிகளால் பிரச்சாரம் செய்யப்பட்டது. இருந்தபோதும் புலிகள் எதிர்பார்த்த மாதிரி நிகழ்ச்சிகள் நிகழவில்லை.


மாறாக மட்டு அம்பாறையில் படிப்படியாகவே புலிகளின் பலம் சிதறி கட்டுப்பாட்டை இழந்து வருகின்றனர். இது திருகோணமலையை நோக்கியும் நகருகின்றது. புலிகள் என்ற குழுவின் இராணுவ எதிர்காலத்தைக் கூட, இது கடுமையாகவே கேள்விக்குள்ளாக்கி வருகின்றது. பொல்லைக் கொடுத்து அடிவாங்கிய கதையாகி வருகின்றது. கருணா விவகாரத்தை இராணுவ ரீதியாக கையாண்டதனால் ஏற்பட்ட தோல்விதான், புலிகளை மீண்டும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு செல்லவைத்தது. இதன் மூலம் அரசுடன் சேர்ந்து கருணா விவகாரத்தை மீண்டும் இராணுவ ரீதியாக கையாள விரும்புகின்றனர். இதற்குள் தான் சுற்றிச்சுற்றி பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். இது வெற்றியளிக்காத ஒரு நிலையில், புலிகள் இராணுவ ரீதியாக இராணுவத்துக்கு எதிரான தாக்குதலை நடத்தினாலும் கூட கருணா விவகாரம் தீர்க்கமுடியாது. மாறாக கிழக்கின் பெரும் பகுதியை அல்லது முற்றாகவே புலிகள் இழக்கவேண்டிய நிலை உருவாகும். இதனால் புலிகள் மீண்டும் யுத்தத்துக்கு செல்வதை இந்த விவகாரம் கூட தடுக்கின்றது. ஒரு சிலந்திவலையில் சிக்கிவிட்ட புலிகள், அதில் இருந்து தப்ப அங்குமிங்குமாக அலைபாய்கின்றனர்.


இதன் ஒரு அங்கமாகவே "அரசியல்" வேலைசெய்யவெனக் கூறி, இராணுவக் கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்ல அனுமதி கோருகின்றனர். குறிப்பாக கிழக்கில் இராணுவ பாதுகாப்புடன் உட்புகுவதன் மூலம், தம்மீதான இராணுவ கைதுகளை தவிர்த்து இராணுவத்தின் பாதுகாப்புடன் தேடியழித்தலை செய்ய விரும்புகின்றனர். இதையே அவர்கள் "அரசியல்" வேலை செய்தல் என்கின்றனர். இதன் மூலம் நிதி திரட்டல், ஆட்திரட்டல் உட்பட பலவற்றை மீண்டும் செய்ய விரும்புகின்றனர்.


தம்மீதான கருணா தரப்பு தாக்குதலைக் காட்டி, "அரசியல்" வேலை செய்வதில்லை என்று அறிவித்த அன்றைய நிலைமை எதுவும் இன்று மாறிவிடவில்லை. ஆனால் "அரசியல்" வேலை செய்வதாக கூறி மீண்டும் செல்வதன் மூலம் தான், குறைந்தபட்சம் அழித்தொழிப்பை செய்ய முடியும் என்ற நிலைமை கிழக்கில் ஏற்பட்டுள்ளது. இது தவிர்க்க முடியாமல் அரசின் எந்த நிபந்தனையையும் ஏற்று, மீண்டும் "அரசியல்" செய்ய செல்வதன் மூலம் கருணா விவாகாரத்தை இராணுவ ரீதியாக முடிவுக்கு கொண்டுவரவே புலிகள் விரும்புகின்றனர். இங்கு பேச்சுவார்த்தையே புலிகளின் இராணுவ வழியாக இருக்கின்றது. இதைப் பேரினவாதம் தெளிவாக புரிந்து, இதற்கு ஏற்ப முரண்டுபிடித்து காய்நகர்த்தலை செய்கின்றது. புலிகள் தாங்களாகவே உருவாக்கிய சிக்கலில் இருந்து இராணுவ ரீதியாக மீண்டும் மீளநினைப்பது நிகழ்கின்றது. அரசு குண்டுசட்டிக்குள் குதிரையை (புலியை) ஓட்ட முனைகின்றது.


இந்த நிலையில் புலிகள் புதிதாக சந்திக்கும் மிக முக்கிய நெருக்கடியாக இருப்பது கிழக்கில் கருணா விவகாரம்,மேற்கில் ஜெயதேவன் விவகாரம் இவர்கள் இருவருமே புலிகளின் முக்கியமான நபர்களாக இருந்தவர்கள். புலிக்கு எதிராக இன்று பலம்பெற்று பலம்பொருந்தி நிற்கின்றனர். புலிகள் இந்தளவுக்கு நெருக்கடியை வரலாற்றில் என்றும் சந்தித்தது கிடையாது. இது போன்று நாளை புலிக்குள் இருந்தே பலர் வருவார்கள். இதை இந்தச் சம்பவங்கள் வரலாறாகவே மீண்டும் உறுதி செய்கின்றது. இந்த நிலைமை புலிகளின் சொந்த பாசிச அணுகுமுறையினால் தான் ஏற்படுகின்றது. புலிக்குள்ளும் வெளியிலும் புலியின் பொதுவான பாசிச அணுகுமுறை இதைத்தான் உருவாக்குகின்றது. இதில் பலர் கொல்லப்பட்டாலும் சிலர் மிக மூர்க்கமாகவே தப்பிப்பிழைத்து விடுகின்றனர். அவர்கள் புலிக்கு சவால் விடுபவராகவே மாறிவிடுகின்றனர்.


புலிக்கு சவால்விடும் முன்னாள் புலிகளின் அரசியல் என்ன? நாய்க்கு எலும்பு போட்டால் எப்படி வாலாட்டுமோ, அப்படியான ஒரு நிலையில் இருந்தவர்கள் தான் இவர்கள். இதற்கு அவர்கள் தயாராக இருந்தவர்கள் தான். இன்றும் அதைத்தான் செய்கின்றனர். ஆனால் இந்த நாய்களை வளர்க்கத் தெரியாத பிரபாகரனின் அணுகுமுறை தான், புலிக்கு எதிராகவே அவர்களை வெறிபிடித்து அலைய வைத்துள்ளது. இவர்களுக்கு என்று சொந்தக் கருத்து எதுவும் இருக்கவில்லை. கருத்தின் அடிப்படையில் புலியில் இருந்து வெளியேறவில்லை. புலிகளால் எட்டி உதைக்கப்பட்ட நிலையிலேயே காவடி எடுக்கின்றனர். தனிப்பட்ட முரண்பாடுகளை மூடிமறைக்கவே திடீர் அரசியல் கோசங்களை கவ்விக் கொண்டு, பழைய எலும்மைப் பார்த்து வொவ் வொவ் என்று குலைக்கின்றனர்.


ற கருணா விவகாரம் தனிப்பட்ட அதிகாரம் சார்ந்த முரண்பாடுகளால் எழுந்தவைதான். ஆனால் இதை பேசித் தீர்க்க முடியாத வகையில், ஒரு அமைப்பின் ஜனநாயகமின்மை இதன் அடிப்படையாக இருந்தது. ஒரு பாசிச அமைப்பில் காணப்படும் சர்வாதிகார முறைமை, முரண்பாட்டுகளுடன் இணங்கிப் போதல், ஏன் பேசித்தீர்த்தல் என்பதை நிராகரிக்கின்றது. இது எதிர்மறையான விளைவுகளை உருவாக்குகின்றது. இதை தீர்க்க உயிரையே காவுகொள்ள முனையும் போது, அது கோரமான வடிவத்தில் எதிர்வினையாற்றி தன்னைத் தக்கவைக்கின்றது.


கருணா இதில் இருந்து தப்பிப்பிழைக்க புலிகளின் யாழ் மேலாதிக்க பிரதேச வாதத்தையே பயன்படுத்தி, பிரதேசவாதத்தை முன்னே தள்ளி தன்னை அரசியல் ரீதியாகவே தற்காத்துக் கொள்ள முனைந்தான். இதை புலிகள் வழமைபோல் அதே சர்வாதிகார பாசிச அணுகுமுறையுடன் எட்டி உதைத்தனர். இந்த நெருக்கடியைக் கூட கையாளத் தெரியாத அரசியல் மூடர்களாகவே அவர்கள் இருந்தனர். இந்த அரசியல் மூடர்களின் அணுகுமுறை இயல்பாகவே, கருணாவின் பலத்தை அதிகரிக்கவைத்தது. உண்மையில் கருணாவை இராணுவ ரீதியாகவே பலப்படுத்தியது. புலிகளின் அணுகுமுறைதான் அதற்கு நெம்புகோலாக இருந்தது.


இது சகலருக்கும் பொருந்தும். புலிகளுடன் முரண்பட்டவர்களுக்கு மரணதண்டனை என்ற தீர்ப்பு முன்னால் வைக்கப்பட்ட பின்பு, சம்பந்தப்பட்டவர்கள் உயர்ந்தபட்ச துணிச்சலுடன் புலிக்கு எதிராக செயல்படத் தொடங்குகின்றனர். இதன் மூலமே, தம்மை புலிக்கு மாற்றான தலைவர்களாக மாற்றிவிடுகின்றனர். புலிக்கு எதிரான அணியை புலிகள் தான், தமது சொந்த நடைமுறைகளில் இருந்து உருவாக்கிவிடுகின்றனர்.


கருணா தானும் சேர்ந்து உருவாக்கிய யாழ் மேலாதிக்க பிரதேசவாதத்துக்கு எதிராக, அதே பாணியில் தனது குறுகிய பிரதேசவாதத்தை வைத்ததன் மூலம், மற்றொரு புலியாக உருவாகினான். பிரபாகரனுக்கு நிகராகவே மற்றொரு பிரபாகரன். அதே சர்வாதிகார பாசிச அமைப்பு. அன்றாடம் நடக்கும் கொலைகள், கடத்தல்கள் அனைத்தும் யார் ஏன் செய்தனர் என்று இனம் காணமுடியாத வகையில், ஒரே தன்மையானதாகவே காணப்படுகின்றது. கொலைகள் தான் தமக்கான அரசியல் வழி. அப்படித் தான் கிழக்கில் கருணா பாசிசம் உதயமாகின்றது. புலிக்கு மாற்றாக கருணாவிடம் மாற்று என்று எதுவும் கிடையாது. கொலை, கொலைகள் இதன் மூலம் சமூகத்தில் அச்சத்தை ஊட்டி, மற்றைய கொலைகாரர்களை ஓடவைத்து பிரதேசத்தைக் கைப்பற்றுவது தான் இவர்களின் அரசியல்.


இப்படி வளர்ந்துவரும் கருணா விவகாரத்தையே புலிகள் தான் தாமே வலிந்து உருவாக்கினர். அன்று கருணா அறிவித்த பிரதேசவாதம் தொடர்பாக பேசத்தயார் என்று புலிகள் அறிவித்து, பேசியிருந்தால் என்ன நடந்திருக்கும். கருணாவின் தனிப்பட்ட முரண்பாடும், அவர் வைத்த பிரதேசவாத அரசியலும் கேள்விக்குள்ளாகியிருக்கும். அவர்களின் நேர்மை சந்திக்கு வந்திருக்கும். பிரச்சினைகளை பேசித் தீர்க்கும் அணுகுமுறை, கருணாவின் குறுகிய பிரதேசவாத அரசியல் முன்முயற்சியை இல்லாததாக்கியிருக்கும். மறுபக்கத்தில் பேச முனைவதன் மூலம், காலகாலமாக இருந்துவரும் யாழ் மேலாதிக்கத்தை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கியிருக்கும்.


ஆனால் புலிகள் செய்தது என்ன? பேச மறுத்து, இராணுவ ரீதியாக அழித்தொழித்தல் என்ற பாசிச வழியில் அணுகியது. இது இயல்பாகவே நிலவிய பிரதேசவாத உணர்வுக்கு தீனி போட்டு, பிரதேச வெறுப்பாகவே வளர்ச்சியுற்றது. இதன் மூலம் கருணா தனித்துவமிக்க ஒரு இராணுவக் குழுவாக உருவாக வழியமைத்தது. இதன் வளர்ச்சியே, கிழக்கில் புலிகளின் பல பகுதிகளை அவர்கள் படிப்படியாக இழப்பதை துரிதமாக்கியது. இரகசியமான ஒரு படுகொலை யுத்தம் நடக்கின்றது. இராணுவ வழியில் ஈவிரக்கமற்ற படுகொலைகள், சித்திரவதைகள் ஊடாகவே கருணா என்ற மற்றொரு புலியின் பலம் கிழக்கில் படிப்படியாக அதிகரிக்கின்றது.


அண்ணையையே கருணாத் தம்பி மிஞ்சும் அளவுக்கு, கொலைக் கலாச்சாரம் கொடிகட்டிப் பறக்கின்றது. கிழக்கில் அண்மையில் தொடரும் படுகொலைகள், புலிகள் அங்கு பலவீனமாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. இங்கு பலம் பலவீனம் என்பதை கொலைகளைக் கொண்டே, தமிழ் தேசியம் தன்னை இனம் காட்டி வருகின்றது. யார் அதிக கொலை செய்கின்றார்களோ, அவர்கள் அப்பிரதேசத்தை கைப்பற்றுகின்ற பாசிச அரசியல் நடக்கின்றது. இதைத்தான் தமிழ் தேசியம் என்றும், ஜனநாயகம் என்று கூறிக்கொண்டு மக்களின் அடிமைத்தனத்தின் மேல் தமது சிம்மாசனங்களை நிறுவுகின்றனர்.


ற இது போன்றே ஜெயதேவன் விவகாரம். வசதியான வாழ்வும், ஊரையே கூட்டி மேய்க்கவல்லவர் இவர். உலகளாவில் மக்கள் விரோதிகளுடன் கொண்டுள்ள உறவு மூலம், எல்லாவிதமான மக்கள் விரோதத்தின் இழிந்த தகமையும் கொண்டு செயல்படுபவர் தான் இந்த ஜெயதேவன். இவர் முரணற்றவகையில் பொருத்தமாகவே மாமனித இயல்புகளுடன் புலிகளின் அணியில் இருந்தது தற்செயலானதல்ல. யாரெல்லாம் மக்கள் விரோதிகளாக இருக்கின்றார்களோ, யாரெல்லாம் தேசியத்தைப் பயன்படுத்தி பிழைக்க கூடியவர்களோ, அவர்கள் புலிகளில் மட்டும் தான், சந்தர்ப்பத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப ஒட்டிக்கொண்டு இருக்க முடியும். மக்கள் விரோதிகளாகவே உருவான எல்லாக் குழுக்களையும் விட, மிகவும் பலம் வாய்ந்தவர்களாக மட்டுமல்ல, அதை நாட்டாமை முறையில் அமுல் செய்தவர்கள் புலிகள் தான். இந்த வகையில் ஜெயதேவன் புலிகளில் ஒட்டிக்கொண்டு நக்கித் திரிந்தது ஆச்சரியமானதோ, அதிர்ச்சிகரமானதோ அல்ல. புலியில் அவர் செய்தது, ஏகாதிபத்திய துணையுடன் புலியின் மனிதவிரோத செயலுக்கு பட்டுக்கம்பளம் விரித்து துதிபாடியது தான். ஏகாதிபத்திய அங்கீகாரத்தை புலிக்கு பெற்றுக் கொடுக்கவே, வேர்வை சிந்தி நாயாக உழைத்தவர்.

 

அவர் சொல்வது போல் முன்னமே புலிகளின் மனித விரோத செயலுக்கு எதிராக உள்ளே குரல் கொடுக்கவில்லை. எந்த நேர்மையான மனிதனும் இப்படி சொல்ல மாட்டான். பொறுக்கிகள் மட்டும் தான் இப்படி சொல்ல முடியும். உண்மையானவன், நேர்மையானவன் எப்போதுமே புலியில் இருந்து விலகிவிடுவார்கள். உண்மையில் கடந்த காலத்தில் பலர் புலியில் இருந்து விலகியிருந்தனர். அவர் கூறியது போல் அவருக்கு தெரிந்த முதல் கொலை மாத்தையா கொலைதான் என்றால், இந்த ஜனநாயக கயவாளிப் பயல் பக்காத் திருடனாவான். பிரிட்டிஸ் ஏகாதிபத்திய கால்களை நக்கிக் கொண்டு, இவர் இன்று ஜனநாயகத்துக்கு தலைமை தாங்குகின்றார். சரி இந்த ஜெயதேவன் வன்னிநோக்கி ஏன் சென்றார். புலிகளின் மனித விரோதச் செயலைக் கண்டித்து பாதயாத்திரையாக வன்னி செல்லவில்லை. மாறாக தனது தனிப்பட்ட நலனை உறுதி செய்யவும், லண்டனில் இதற்கு தடையாக இருந்த புலிப்பிரமுகர்களை பற்றி குற்றம்சாட்டச் சென்றவர் தான் இவர். ஊரையே மேய்ந்து வாழ்பவர்களுக்கு இடையிலான சண்டையில், பஞ்சாயத்து செய்து வைக்கக் கோரியே "ஜனநாயகத்தின் தலைவர்" வன்னி சென்றவர். இதற்கு வெளியில் மக்களுக்காக கசிந்து கண்ணீர் மல்கி, புலித்தலைவர்களிடம் மண்டியிடவில்லை. மண்டியிட்டது மக்கள் விரோத புலியை நியாயப்படுத்த, புலியில் தனக்குரிய ஒரு அந்தஸ்த்தை தரும்படி கோரித்தான்.


இப்படி நாயாக வாலாட்டிச் சென்றவரை புலிகள் எப்படி அணுகினார்கள். வழமைபோல் எதைச் செய்கின்றனரோ அதைச் செய்தனர். பிரிட்டனில் புலியை நம்பி அதில் சொகுசாக வாழும் சிலரின் குறிக்கோளை ப+ர்த்திசெய்யும் வகையில், அவரிடம் இருந்த சொத்தை அபகரிப்பதே அவர்களின் குறிக்கோளாகக் கொண்டு அவரை சிறைவைத்தனர். இதன் மூலம் சொத்துப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்கள். அங்கும் இந்த ஜனநாயக விரோத செயலை எதிர்த்து நின்று கையெழுத்திட மறுக்கவில்லை. அங்கும் ஜனநாயகத்தைக் காட்டிக் கொடுத்து சரணடைகின்றனர். யாருக்கு எதிராக பணத்தைக் கொடுத்து முறையிடச் சென்றாரோ, அவர்களிடமே இவரின் சொத்தை பறித்து கொடுத்த விவகாரமே இவரை புலிக்கு எதிராக "ஜனநாயகவாதி" யாக்கியது. இதில் வேடிக்கை என்னவென்றால் இன்று ஜெயதேவனுக்கு எதிராக புலிகள் கூறும் குற்றங்களின் அடிப்படையில், அன்று புலிகள் விசாரணை செய்யவில்லை. சொத்து கைமாற்றம்தான் அனைத்துக்குமான விசாரணையாக இருந்தது. புலிகள் அப்படியென்றால் ஜெயதேவன் இன்று பேசும் ஜனநாயகத்துக்காக போராட அங்கு செல்லவில்லை. மாறாக புலியிடம் ஜனநாயக விரோத செயலில் ஈடுபடும் தனக்குரிய கௌரவத்தையும், அங்கீகாரத்தையும், அதிகாரத்தையும் கோரியே சென்றார். ஆனால் நடந்தது அனைவரும் அறிந்தது தான்.


இந்நிலையில் பிரிட்டிஸ் அரசின் தலையீடே, அவரை மீண்டும் இலண்டன் கொண்டு வந்தது. அவரின் சொத்தை மீளவும் அவரிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வும் நடந்தேறியது. இதைத் தொடர்ந்து புலிக்கு சவால் விடுமளவுக்கு செயல்பட்டு வந்த ரி.பி.சி வானொலியின் மூலமே, புலிக்கு எதிராக இன்றைய வளர்ச்சி பெற்றுள்ளார். அதேநேரம் முன்பு புலிக்காக ஏகாதிபத்தியத்துடன் கூடிக்குலாவி எதைச் செய்தாரோ, அதை அப்படியே புலிக்கு எதிராக மாற்றிவிட்டார். ஒரு குத்துக்கரணம் அடித்ததன் மூலம் எல்லாம் அப்படியே தொடருகின்றது. புலியுடன் இருந்த போதும் சரி, புலியைவிட்டு அதற்கு நேர் எதிராக மற்றைய அணியுடன் சென்ற போதும் சரி, மக்கள் விரோத "ஜனநாயகம்" பற்றிய நிலைப்பாட்டில் அவரின் உள்ளடக்கம் ஒன்றாகவேயுள்ளது. இதன் மூலம் இன்று புலிக்கு எதிராக சர்வதேச ரீதியான கடுமையான தலையீட்டுக்கு துணையாகி புலிக்கு சவால்விடுகின்றார்.


இந்த விடயத்திலும் புலிகளின் அணுகுமுறை தான் மீண்டும் இங்கு அம்பலமாகின்றது. ஒரு எலும்பை வீசினால் வாலாட்டி குலைக்க தயாராக இருந்த ஒருவரை, தனக்கு எதிராக மாற்றிய பெருமை புலிப்பாசிசத்தையே மீண்டும் சேரும். தனக்கு ஒரு எலும்பைக் கோரித்தான் வன்னி சென்ற ஜெயதேவனுக்கு, புலிகள் செய்தது கல்லால் அடித்தது தான். கல்லெறி தாங்காது, அதை விசர் நாயாக்கியதே நிகழ்ந்தது. இன்று கல்லெறியவே முடியாத நிலைக்கு வந்துள்ளது. எதிரிகளை புலிக்கு எதிராக உருவாக்கும் வடிவமே இப்படித்தான் தொடருகின்றது.


வாலாட்டுவதற்கு ஒரு எலும்பு போதுமானதாகவே இருந்தது. ஆனால் அதற்கு பதில் புலிகளின் நடத்தைகள், அவர்களுக்கு சர்வதேச ரீதியாக புதிய சவால்களை தரக் கூடிய ஒருவரை உருவாக்கியுள்ளது. இப்படி பலரை அன்றாடம் உருவாக்கினர். இதில் பலர் எலும்புக்காக அலைபவர்கள் தான். ரி.பி.சி ராம்ராஜ் கூட அப்படி அன்று புலிகளிடம் அலைந்தவர்தான். புலிகளின் பாசிசம் கடுமையான எதிர்தரப்பு பாசிசத்தையே உருவாக்குகின்றது. புலிகள் தாம் எதிரியாக கருதுபவர்களுக்கு மரணதண்டனை என்ற பொதுவான அணுகுமுறையே, மரணதண்டனையை எதிர்கொள்ளும் நபர்களை அடுத்த கடைக்கோடியில் மிகத் தீவிரமான புலியெதிர்ப்பு செயல்வீரராக்கி விடுகின்றது. படுபிற்போக்கான மக்கள் விரோதிகள் அனைவருடனும், எந்த நிபந்தனையுமின்றி கூடிக் குலைப்பதையே புலிகளின் அணுகுமுறையே ஒருங்கமைக்கின்றது.


புலியெதிர்ப்பு எதிரிகளை தொடர்ச்சியாகவே அன்றாடம் புலிகள் தான் உற்பத்தி செய்கின்றனர். பின் அந்த எதிரிகளை அழித்தல் என்ற அடிப்படையில், குறுந்தேசிய அரசியல் செய்கின்றனர். இந்த அரசியல் தமிழ்மக்களின் அரசியல் பிரச்சனைகளை இல்லாதொழித்து குறுகிய வட்டத்தில் புளுக்கத் தொடங்குகின்றது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வுகளை, தமது சொந்த தனிப்பட்ட எதிரியை அழித்தல் என்ற எல்லைக்குள் குறுக்கி அதற்குள் காய் நகர்த்த முனைகின்றனர். புலியின் கடந்தகால பேச்சுவார்த்தையும், அதன் நோக்கமும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையைப் பற்றி ஒருநாளும் பேசவில்லை. மாறாக தமது எதிரிகளை அழித்தொழித்தல் என்ற எல்லைக்குள் அரசியலை குறுக்கி, கொலைகளை பேச்சுவார்த்தை மூலம் இலகுவாக்க முனைகின்றனர். இப்படி பல ஆயிரம் கொலைகளை செய்தனர்.


இந்த நிலையை புலியின் எதிரி உட்பட, தமிழ் மக்களின் எதிரியான போனவாதியும் புலிகளிடம் கற்றுக்கொண்டு, அதற்குள் பேச்சுவார்த்தையை சிதிலமடையச் செய்கின்றனர். நிலைமை இதற்குள் தொடர்ச்சியாகவே மோசமாகி வருகின்றது. ஒப்பந்தச் சாரத்தை மாற்ற முடியாது என்ற கூறும் அதேநேரம், அதை அமுல்படுத்தவும் மறுக்கின்ற சூழ்ச்சிமிக்க அணுகுமுறையே புலி மற்றும் அரசின் நிலைப்பாடாகிவிட்டது. புதிய கடுமையான எதிரிகள் அன்றாடம் புது அவதாரம் பெறுகின்றனர். கருணா, ஜெயதேவன் போன்றவர்களின் அண்மைய செயல்பாடுகள் புலியின் அணுகுமுறைக்கே சவால் விடுகின்றது. இது ஒரு பிரதேசத்தையே புலி இழக்கும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. கிழக்கில் கருணா அணியின் செயல்பாடுகள் புலிகளை அங்கிருத்து துடைத்தொழிக்கின்றது. அதேநேரம் அங்கு மற்றொரு பாசிச புலி உருவாகின்றது. மேற்கில் ஜெயதேவன் விவகாரம், ஒரு தரப்பான புலியின் புகழ்பாடும் கருத்துத்தளத்தை இழிவுபடுத்தி மற்றொரு இழிவு புகுத்தப்படுகின்றது.


புலியின் பேச்சுவார்த்தைகள் எதிரிகளை கொல்லுதலுக்கு இசைவான ஒரு சூழலை உருவாக்குவதாக இருந்தது. ஆனால் பல புதிய சவால்மிக்க எதிரிகளை உருவாக்குவதையே இப் பேச்சுவார்த்தைகள் எதார்த்தமாக்கு கின்றன. உண்மையில் புலியின் பேச்சுவார்த்தைகள், மேலும் பல தளங்களில் புதிய பல எதிரிகளை உருவாக்கிவிட்டுள்ளது. எதிர்காலத்தில் புலிக்கு உள்ளிருந்தும், வெளியில் இருந்தும் கடும் சவால்களை எதிர்பார்க்க கூடிய ஒரு சூழலை, துப்பாக்கி குண்டுகளால் தீர்த்துவிட முடியாது. கருணா விவகாரமும், ஜெயதேவன் விவகாரமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதை நிறுவியுள்ளது.


புலிகள் அரசியல் ரீதியாகவே தப்பிப்பிழைப்பது என்பது கேள்விக்குள்ளாகி வருகின்றது. இதில் இருந்து மீள்வதற்கு இரு வழிப்பாதை உண்டு.


1. மக்களுக்கான அரசியலை முன்னிலைப்படுத்தி தம்மை சுயவிமர்சனம் செய்வது.


2. உடனடியாக நிரந்தரமான அரசியல் தீர்வை கோரி பேச்சுவார்த்தையை நகர்த்துவது. இதன் மூலம் ஒரு இதயசுத்தியான ஒரு தீர்வை வந்தடைய முயல்வது.


இதன் மூலம் மட்டும்தான் அரசியல் ரீதியாகவும், ஏன் இராணுவ ரீதியாகக் கூட புலிகள் தப்பிப்பிழைக்க முடியும். பேரினவாதம் பேச்சுவார்த்தை என்ற அரசியல் நாடகத்தை ஆடிய போது கூட அம்பலமாகிவிடவில்லை. புலிகள் தான் தொடர்ச்சியாக அம்பலமாகின்றனர். உண்மையில் பேரினவாதம் எந்தவகையிலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு அரசியல் தீர்வை முன்வைக்கவில்லை. ஏன் அதில் அக்கறையற்று கூட இருக்கின்றது. புலியின் அணுகுமுறை இதற்கு இசைவானதாகவேயுள்ளது. புலிகளின் சிதைவை துரிதப்படுத்தும் வகையில், புலிகளின் சொந்த குறுந்தேசிய குழுநல அரசியலையே தனக்கு சார்பாக பயன்படுத்துகின்றது. சர்வதேச ரீதியாக புலிக்கு எதிராக உள்ள கருத்து மாற்றப்பட முடியாத ஒன்றாகிவிட்டது. பேரினவாதத்தின் பாசிச பயங்கரவாதம் கூட சர்வதேச கருத்துக்கு உட்பட்டதாக கருதும் அளவுக்கு, அமைதிகாலத்தில் கூட புலிகளின் நடைமுறை துணையாகியுள்ளது. பேரினவாதம் சர்வதேச ரீதியாக பலம் பெறுவது என்பது, புலிகளின் நடவடிக்கையாலே தான் ஏற்படுகின்றது.


பேரினவாத அரசும் சரி, அவர்களை சுற்றி இயங்கும் எதிர்கட்சி உட்பட ஏன் ஜே.வி.பி வரை, மிக மோசமான இனவாதிகளாகவே உள்ளனர். தமிழ்மக்களுக்கு எந்த ஒரு அரசியல் தீர்வையும் அவர்கள் வழங்கப்போவதில்லை. ஏன் அவர்களின் கட்சித் திட்டங்களில் இதற்கான ஒரு தீர்வை முன்வைக்காது, ஒரு இனவாத அரசியலையே நடத்துகின்றனர் என்றால் அது அப்பட்டமான பேரினவாதம் தான். தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் குறிக்கோள் எதுவுமின்றியே, பேச்சுவார்த்தை மேசையில் நெருக்கமாகவே அமர்ந்து வம்பளக்கின்றனர். இவர்கள் இப்படி என்றால் புலிகள் தனது குழுவுக்கு எதிரானவர்களை கொல்லுதல் என்ற அடிப்படையான குறிக்கோளுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளை குழிதோண்டி புதைக்கின்றனர்.


இதுவும் பேரினவாதத்துக்கு மிகவும் மகிழ்ச்சியான விடயம் தான். கொல்பவனும் தமிழன், கொல்லப்படுபவனும் தமிழன். இதனால் நாட்டை விட்டு ஓடுபவனும் தமிழன். தேசம் சிங்கள தேசமாகின்றது. தான் செய்யவேண்டியதை, குறுந்தேசிய புலிகளைக் கொண்டே பேரினவாதம் செய்து முடிக்கின்றது. இன்று கிழக்கிலும் இதே கதி. தமிழன் அன்றாடம் உயிர் இழக்கின்றான் அல்லது சொந்த பிரதேசத்தை விட்டே தப்பி ஓடுகின்றான். தமிழ் மக்கள் சொந்த வாழ்விடத்தை விட்டு செல்வதன் மூலம், ஒரு இனத்தின் அழிவை பேரினவாதம் உறுதிசெய்கின்றது. காலாகாலமாக பேரினவாதம் எதைச் செய்யவிரும்பியதோ, அதை தேசியத்தின் பெயரில் புலிகள் செய்து முடிகின்றனர்.


ஒவ்வொரு சம்பவமும், ஒவ்வொரு நிகழ்ச்சியும் கையாளப்படும் விதமே, தமிழ் மக்களிடையேயான ஆழமான பிளவாகி அவர்களையே தமக்குள் எதிரியாக்கி மோதவைக்கின்றது. தமிழருக்கிடையான முரண்பாட்டை, புலியின் அரசியலைக் கொண்டே அகலமாக்குதல் என்பது பேரினவாதத்தின் அரசியல் உத்தியாகின்றது. தேசியம் என்பது இதற்குள் சிதைந்து சின்னாபின்னப்படும் போது, பேரினவாதம் இதையிட்டு மகிழ்ச்சி கொள்கின்றது. இதற்கு ஆக்கமும் ஊக்கமும் ஏன் உதவியும் கூட செய்கின்றது. இதில் புலிகளின் எதிரிக்கு மட்டுமல்ல, புலிக்கும் கூட உதவுகின்றது.


இன்று தேசியம் என்றால் என்னவென்று கேட்டால், யாருக்கும் அதுபற்றி எதுவும் தெரியாது. தேசியம் என்று அடிக்கடி உச்சரிக்கும் புலிக்கு, அது பற்றிய அறிவே கிடையாது. இராணுவ நடவடிக்கை, கொலை செய்தல், பிரபாவை புகழ்தல், புலிக்கு எதிரானவற்றை தூற்றுதல், சிங்களவன் என்று இழிவாடுதல் இவற்றைத் தான் தமிழ் தேசியம் என்று புலிகள் கூறுகின்றனர். இதை மறுத்து தமிழ்தேசியத்தை உயர்த்துவதைக் கூட, இவர்கள் தேசியத்துக்கு எதிரானதாக தூற்றுவதும் கொல்வதும் தொடருகின்றது.


தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது இலங்கையில் முற்றாக துடைதொழிக்கப்படுகின்றது. தமிழ் இனம் அங்கு ப+ண்டோடு அழிக்கப்படுகின்றது. தமிழ் இனத்தின் தொடர்ச்சியான அன்றாடம் நடக்கும் புலம்பெயர்வு, தொடர்சியான கொலைகார அரசியலால் தூண்டப்படுகின்றது. சொந்த வாழ்க்கையையே வாழமுடியாத வகையில், உழைப்பை சூறையாடுவதன் மூலம் தமிழ் இனம் தப்பியோட வைக்கப்படுகின்றது. வாழவழியற்ற நிலையை சொந்த மண்ணில் உருவாக்குகின்றது. தமிழ் இனத்தின ஆழமான அழிவையும் சிதைவையும் பேரினவாதம் செய்துவிடவில்லை, தமிழ் தேசியம் என்ற பெயரில் புலிகளே செய்து முடிக்கின்றனர். இதையே பேரினவாதத்துடனான பேச்சுவார்த்தைகளில் புலிகள் கோருகின்றனர் என்றால் அதையே வெற்றிகரமாக அமுல் செய்ய முனைகின்றனர்.
தமிழ் மக்களின் சொந்த விடுதலையை, அவர்களின் சொந்த அதிகாரத்தின் மூலம் மட்டும்தான் பெறமுடியும். தமிழ் மக்களின் சொந்த அதிகாரம் அல்லாத எதுவும், அவர்களுக்கு எதிரானது தான். ஏன் தமிழ் மக்களின் உரிமைகளை மறுக்கின்ற எதுவும், அந்த மக்களின் போராட்டமே அல்ல. அது அவர்களுக்கு எதிரானது. இது பேச்சுவார்த்தையாக இருந்தாலும் சரி, ஜனநாயகமாக இருந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் இது பொருந்தும்.


29.03.2006