06292022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

ஜனநாயகம் என்றால் என்ன?

எடுத்த எடுப்பில் அதன் உண்மை முகத்தை இலகுவாக புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சூக்குமமான ஒன்றாகவே உள்ளது. திரிந்து போன நிலையில், கற்பனையான போலியான பகட்டுத்தனத்தில் இது மிதக்கின்றது. பொதுவாக மனிதனின் உரிமை சார்ந்த ஒன்றாக புரிந்து கொள்வது நிகழ்கின்றது. ஆனால் அந்த உரிமை என்பது சூக்குமமாகிவிடுகின்றது. ஜனநாயகத்தின் அடிப்படையே சமூகத்துக்கு எதிரானதும், தனிமனிதனின் குறுகிய நலன்களுக்கும் உட்பட்டதே.


ஒரு சமூக அமைப்பில் ஜனநாயகம் உயிர்வாழ வேண்டுமென்றால், அங்கு ஜனநாயகம் மறுக்கப்பட்டு இருக்க வேண்டும். இந்த முரண்நிலையின்றி ஜனநாயகம் உயிர்வாழ முடியாது. அதாவது இதில் ஏதோ ஒன்றின்றி ஒன்று இருக்கமுடியாது. இதுவே சமூகத்துக்கு எதிரானதாகவும், தனிமனிதனுக்கு சார்பானதாகவும் மாறிவிடுகின்றது. அதாவது அனைவருக்கும் ஜனநாயகம் இருந்தால், ஜனநாயகம் என்ற கோரிக்கையும் இருக்காது. இது இயல்பில் இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்களைக் கூட இல்லாததாக்கிவிடும். இது ஒரு விசித்திரமான, ஆனால் நிர்வாணமான உண்மை. இன்றைய ஜனநாயக பாராளுமன்றங்கள் இருக்கும் வரை, ஜனநாயக மறுப்பும் இருந்து கொண்டே இருக்கும். ஜனநாயகத்தின் முரணற்ற உள்ளடக்கம் இதுதான். இன்றைய சமூக அமைப்பு நீடிக்கும் வரை, ஜனநாயகத்தை மறுப்பவன் இருக்க வேண்டும். அதேபோல் ஜனநாயகத்தை கோருபவன் இருக்க வேண்டும். இன்று உலகெங்கும் அனைத்து மனிதர்களுக்கும் ஜனநாயகம் வழங்கிய சமூக அமைப்பு எதுவுமே கிடையாது. ஜனநாயகத்தை இழந்தவனும், அதை மறுப்பவனைக் கொண்டதுமான ஜனநாயக உலகம் தான், இந்த சமூக அமைப்புகள். இந்த நாடாளுமன்றங்கள் அனைத்தும் இதை பாதுகாப்பதில் தான் உயிர் வாழ்கின்றது.


இதுவே மிகவும் உன்னதமான சமூக அமைப்பாக, ஜனநாயகமாக காட்டப்பட்டு போற்றப்படுகின்றது. ஆனால் மக்களுக்கு எதிரான மிகவும் மோசமான ஒரு அமைப்பாக, அதன் உள்ளடகத்திலேயே அது உள்ளது. அதாவது மறுக்கப்படுகின்ற ஒரு அமைப்பாகத் தான், ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் என்ற அடிப்படையிலும் சரி, சமூகத்தில் உள்ள எந்தக் கூறும் சரி, மறுப்பதும் அதை கோருவதையும் அடிப்படையாக கொண்ட ஒரு அமைப்பையே உயர்வானதாக காட்டுகின்றனர். இதற்கு பெயர் ஜனநாயகம். இதை நிலைநாட்டும் உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர்.


இந்த ஜனநாயகம் என்பது தீர்மானமெடுக்கும் மக்களின் அதிகாரத்தையே மறுதலிக்கின்றது. மாறாக மக்கள் வாக்கு போடுவதையே ஜனநாயகமாக காட்டப்படுகின்றது. இதையே மக்களின் சொந்த தேர்வாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த தேர்வு எப்படியானதாக இருந்த போதும், மக்கள் தாம் விரும்பும் ஒரு அமைப்பை இந்த ஜனநாயகம் வழங்குவதில்லை. மாறாக அவர்களை அடக்கியாளும் ஒன்றையே ஜனநாயகம் வழங்குகின்றது. இங்கு மக்கள் வாக்களிப்பது என்பது கூட ஒரு சடங்காக, அதன் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத ஒன்றாக மாறிவிடுகின்றது. வாக்கு போட்ட தேர்வை திருப்பிப் பெற முடியாத ஒன்றாகிவிடுகின்றது. தேர்வே அர்த்தமற்ற ஒன்றாகிறது. இது சொந்த அடிமைத்தனத்தையே அடிப்படையாக கொண்டதாக மாறிவிடுகின்றது.


இந்த ஜனநாயகம் பெரும்பான்மை மக்களின் அரசியல் பொருளாதார விருப்பங்களை மறுதலிக்கின்றது. தெரிவு செய்யப்படும் இந்த அமைப்பு மூலமே இது நிகழ்கின்றது. தெரிவு செய்யப்படும் உறுப்பு, ஏற்கனவேயுள்ள ஆளும் அதிகார வர்க்கத்துடன் இணங்கி செயற்படும் ஒரு உறுப்பு மட்டும் தான். தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் நாட்டை ஆளுகின்ற அதிகார வர்க்கத்தை மீறி, சுயாதீனமாக செயல்பட முடியாது. மாறாக இருக்கின்ற சட்டதிட்டங்களுக்கும், அதேநேரம் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக அதற்குள் தான் சுயமாக செயல்படமுடியும். மக்களின் தேர்வு என்பது போலியானது. மக்கள் தங்களைத் தாங்கள் ஆள்வதற்கு தேர்ந்தெடுக்கின்றனர் என்பது சூக்குமமான ஒரு ஏமாற்று மோசடியாகும்.


உதாரணமாக வாக்குபோட்டு தெரிவு செய்யப்படும் எந்த உறுப்பினரும் சுரண்டல் கட்டமைப்பை இல்லாதாக்க முடியாது. சுரண்டல் அமைப்பை மாற்றுவதை விடுவோம், முதலாளிகளுக்கு எதிராக தொழிலாளிக்கு சார்பாக சட்டங்களை கொண்டுவர முடியாது. இங்கு பெரும்பான்மை மக்களின் விருப்பத்தை சட்டமாக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. இந்த ஜனநாயக அமைப்பு சாதியை ஒழிக்க முடியாது. ஆணாதிக்கத்தை கூட ஒழிக்க முடியாது. நிற வெறியை ஒழிக்க முடியாது. இனப்பாகுபாட்டை ஒழிக்க முடியாது. இதற்குள் அங்குமிங்குமாக சீர்திருத்தம் செய்து செயல்படலாமே ஒழிய, அதை ஒழிக்க முடியாது. இதை ஜனநாயகம் அனுமதிக்காது. ஜனநாயகத்தின் இருப்பே இதன் மேல் தான் உள்ளது.
இந்த ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பாதுகாக்கும் பொலிஸ் என்ற அடக்குமுறை இயந்திரம், பெரும்பான்மை மக்களின் விருப்பை நிறைவு செய்வதில்லை. எந்த முதலாளிக்கும் எதிராக, தொழிலாளிக்கு சார்பாக பொலிஸ் செயல்பட ஜனநாயகம் அனுமதியாது. இதுவே சமூகத்தில் அனைத்துத் துறையிலும் காணப்படுகின்றது. ஜனநாயகம் என்பது ஒரு வர்க்கத்தின் சர்வாதிகார ஆட்சியாகும்.


ஆனால் மக்கள் எந்த ஒரு சக மனிதனையும் அடக்கியொடுக்கி தான் வாழ விரும்புவதில்லை. தான் உழைத்து வாழவிரும்பும் சமுதாயத்தின், ஒரு உயிரியாகவே இருக்கின்றான், இருக்க விரும்புகின்றான். மற்றைய மனிதனை இழிவுபடுத்தி, அவனைத் தாழ்த்தி, இதன் மூலம் அவனின் உழைப்பைப் பிடுங்கி தான் வாழவேண்டும் என்று மக்கள் விரும்புவதில்லை. ஆனால் இதுவே பொதுவான ஆதிக்கம் பெற்ற ஒரு சமூதாய நடைமுறையாக உள்ளது. மக்களின் விருப்பங்களுக்கு அப்பால், இது ஆதிக்கம் பெற்ற ஒன்றாகவே உள்ளது.


இந்த ஜனநாயகம் என்ற சமூக அமைப்பு, தனது இருப்பு சார்ந்து இதை உருவாக்குகின்றது. ஜனநாயகம் என்பது சக மனிதனை ஒரு மனிதனாகக் கூட ஏற்றுக் கொள்வது கிடையாது. மாறாக தன்னை விட மற்றவனை அடக்கவே விரும்புகின்றது. மனிதனை அடக்கி அடிமைப்படுத்தி இழிவாடுகின்றது. ஏன் இப்படிச் செய்கின்றது. மற்றைய மனிதனைச் சார்ந்து, தான் வாழ்தல் இதன் மையமான அடிப்படையாகும். மற்றைய மனிதனின் வாழ்வை பறித்து, அதில் தான் வாழ்தல் இதன் மையக் கூறாகும். இதற்கு பெயர் ஜனநாயகம். பறிக்கும் உரிமை தான் ஜனநாயகம். இதுவே மனித சுதந்திரமாகும். இதற்கு வெளியில் வேறு விளக்கம் எதுவும் கிடையாது. இயற்கையில் மனிதனுக்கு இடையில் இல்லாத முரண்பாட்டை, செயற்கையில் பாதுகாக்க முற்படும் போது ஜனநாயகம் தோன்றுகின்றது. மனித முரண்பாட்டை உருவாக்கி அதை பாதுகாக்கும் அமைப்புத்தான் ஜனநாயகம்.


கடந்த 100, 150 வருடங்களுக்கு முன்னம், மனித அமைப்பில் மனிதர்களையே அடிமையாக வைத்திருத்தல் பொதுவாக சில ஜனநாயக நாடுகளின் சட்டங்களில் காணப்பட்டது. இதையே சமூக நாகரிகமாக அன்றைய மேட்டுக்குடி ஜனநாயகவாதிகள் கருதினர். ஆனால் இன்று அதை அநாகரிகமாகவும், மனிதவிரோதமாக கருதும் நாம், எமது இன்றைய நிலையை அன்றைய வாழ்வுடன் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. ஆனால் இன்று எம்மைப் போல், அன்று அதை அவர்கள் இயல்பான ஒன்றாக கருதினர். அன்று அடிமைகளை வாங்கவும் விற்கவும், குடும்பங்களை பிரித்து சிதைத்து விலங்கிட்டு சந்தையில் நிறுத்தவும், பெண்களை புணரவும், ஏன் கொல்லவும் கூட உரிமையிருந்தது. இதை அன்று சமூதாயத்தின் ஒழுக்கமாக சட்டம் அங்கீகரித்து இருந்தது. இதை அனுபவித்தவர்கள் தான், அன்றைய நாகரிகத்தின் உன்னதமான ஜனநாயக மனிதர்களாக சமுதாயத்தின் முன் நிறுத்தப்பட்டனர். இன்று அவர்களின் வாரிசுகள் உலகை கொள்ளையிடுகின்றனர். அன்று இதைக் கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால், தமது சிறந்த பண்பின் பெயரால் நியாயப்படுத்தினர். இதை பாதுகாப்பதும், அதை ஒட்டிய சட்டங்களுமே அன்று ஜனநாயகமாக கருதப்பட்டது. இன்று இதை சுதந்திரத்தின் பெயரால், ஜனநாயகத்தின் பெயரால் இதைச் செய்கின்றனர்.


இன்று நாம் அன்றைய நிகழ்ச்சிகளை இழிவானதாக எமது பொதுப்புத்தி மட்டத்தில் கருதிய போதும் கூட, நாம் இன்று உண்மையில் நவீன அடிமைகளாக இந்த ஜனநாயக அமைப்பில் உள்ளோம். உண்மையில் எம்மையே நாம் புரிந்து கொள்ளவில்லை. கொஞ்சம் உள்ளே சென்றாலே நாற்றமெடுக்கின்றது. உலக அமைப்பு எப்படி உள்ளது. மூலதனத்துக்கு அடிமையாக உள்ளது. இயந்திரத்தின் ஒரு உறுப்பாக மனிதன் மாற்றப்பட்டுவிட்டான். தனது உழைப்பை சந்தையில் விற்கக் கூட முடியாத புதிய நிலையை அடைகின்றான். இது நவீன அடிமைகளின் நிலை. ஒரு வட்டம் கீறப்பட்டுள்ளது, அதற்குள் நின்று உலகை பார்க்கவும், சிந்திக்கவும் நிர்பந்திக்கப்படுகின்றது. இது ஒரு முகம் என்றால், முகத்தின் உள்ளே கொத்தடிமைகள், சாதி ரீதியாக இழிவுபடுத்தி அடிமைப்படுத்தப்படும் தாழ்ந்த சாதிகள், இழிவாக கருதப்படும் கறுப்பின மக்கள், இன அடிமைத்தனங்கள், ஆணிண் ஆதிக்கம், மனித உழைப்பைச் சுரண்டும் மூலதனம் என மனித அடிமைத்தனம் பல வடிவில் பலவாக காணப்படுகின்றது. இதையே எமது பொதுப்புத்தி, ஜனநாயகமாக கருதுகின்றது. ஆச்சரியம் தான், ஆனால் இதுவே உண்மை. நாம் இதையே ஜனநாயகம் என்கின்றோம். இதற்கே வாக்களிக்கின்றோம். இதற்கே ஜனநாயக கோசத்தை போடுகின்றோம். நாம் மிகச் சிறந்த ஜனநாயக விரோதிகளாக, நாமாகவே எம்மை அறியாது இருக்கின்றோம். இதை எதிர்த்துப் போராடாத ஒவ்வொருவரும் ஜனநாயக விரோதிதான்.


சற்று விரிவாக போனால், மற்றைய மனிதனின் உழைப்பைச் சுரண்டுவதை நாம் எப்படி புரிந்து கொள்கின்றோம். ஒரு மனிதனின் உழைப்பைச் சுரண்டுவது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும்! சுரண்டுவது எப்படி சுதந்திர உரிமையாக இருக்க முடியும்! இந்தக் கேள்விக்கு நாம் ஒவ்வொருவரும் பதிலளித்தேயாக வேண்டியுள்ளது. நாம் சுரண்ட முடியாத நிலையிலும் கூட, மற்றவன் சுரண்டப்படுவதை எப்படி நாம் அங்கீகரிக்க முடியும். சரி நாம் அங்கீகரிக்கவில்லை என்று வைப்போம், அந்தக் கொடுமைக்கு எதிராக நாம் போராடவில்லை என்றால், எப்படி நாம் ஜனநாயகத்தின் பிரதிநிதிகளாக எம்மைச் சொல்லிக் கொள்ளமுடியும். முடியாது, உண்மையில் நாம் ஜனநாயக விரோதியாக, ஜனநாயகத்தை சக மனிதனுக்கு மறுக்கும் ஜனநாயக வாதியாக இருக்கின்றோம். இதுவே உண்மை. ஜனநாயகத்தை பாதுகாப்பவன் தான், ஜனநாயகத்தை மறுப்பவனாகவும் உள்ளான். இதில் இருந்து வேறுபட்டு நாம் எதைக் கோருகின்றோம் என்றால், ஜனநாயகத்தை ஒழிப்பதைக் கோருகின்றோம். அனைவருக்கும் ஜனநாயகத்தை உறுதி செய்வதன் மூலம், அதை இல்லாதொழிக்கும் சமூக அமைப்பைக் கோருகின்றோம்.


நான் ஒரு தனிமனிதன் என்ற வகையில், எனது உழைப்பை சுரண்டலுக்குள்ளாக்க விட்டுவிடுகின்றேன் என்று எடுப்போம். இந்த இடத்தில் இதை நாம், ஜனநாயகமாக அங்கீகரித்தால் இது எப்படி ஜனநாயகமாகும். அந்த ஜனநாயக விரோத செயலுக்கு உடந்தையாளனாகிவிடுகின்றேன். இதை எதிர்த்து நிற்காத எவனும் ஜனநாயகவாதியல்ல. ஜனநாயகம் என்பது மறுக்கப்படும் ஜனநாயக உரிமையை கோருவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். அதைப் பாதுகாத்தல் அல்ல. அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உரிமை பெறுவதன் மூலம், அதை இல்லாது ஒழித்தலாகும். சக மனிதன் மீதான சமூக ஒடுக்குமுறையை இல்லாது ஒழித்தலாகும். இதை நோக்கிய போராட்டம் தான், ஜனநாயகப் போராட்டமாகும்.


இதை மறுத்து, குறித்த காலத்துக்கு காலம் வாக்குப் போடுவதையே ஜனநாயகம் என்கின்றனர். மனிதனை மனிதன் சுரண்டுவதையும், சுரண்டும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர். அதேபோல் அறிஜீவிகள் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரத்தையே ஜனநாயகம் என்கின்றனர். இது ஜனநாயகம் என்றால், பரந்துபட்ட மக்களுக்கு இந்த ஜனநாயகத்தால் என்னதான் கிடைக்கின்றது.


இந்த ஜனநாயகத்தால் மக்களின் வறுமையை ஒழிக்க முடிகின்றதா? மனித சமூகம் வாழ்வதற்கு தேவையான சமூக அடிப்படைகளை இது பூர்த்தி செய்கின்றதா. எனின் இல்லை. இந்த ஜனநாயகம் மக்களுக்கு உதவவில்லை. மக்களை அடிமைப்படுத்தி இதை இல்லாதாக்கின்றது என்பதே உண்மை. மனித தேவையை இது பூர்த்தி செய்யவில்லை என்றால், இந்த ஜனநாயகம் யாருக்கானது? இந்தக் கேள்வி தெளிவாகவே அதற்கு பதிளிக்கின்றது. பணம் உள்ளவனுக்கே இந்த ஜனநாயகம். பணம் உள்ளவன் பட்டினியுடன் வாழவேண்டிய அவசியமில்லை. நோய்க்கு மருந்தின்றி மரணிக்க வேண்டியதில்லை. வாழ வீடின்றி வீதியில் படுத்துறங்குவதில்லை. எது அவனுக்குத் தேவையோ, அதை இந்த உலகில் இருந்து அவன் பெறுகின்றான். அவனின் வாழ்க்கையைப் பாதுகாப்பது தான், இந்த ஜனநாயகம். மிக விசித்திரமான எதார்த்தமான உண்மை இது.


இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கென்று வேறு உண்மைகள் எதுவும் கிடையாது. பணமுள்ளவனின் வாழ்க்கையைத்தான், இந்த ஜனநாயகம் பாதுகாக்கின்றது. அவனின் சொந்தத் தேர்வு தான் இந்த ஜனநாயகம். எப்படி சாதி பார்ப்பானின் தேர்வோ, அப்படித்தான் இந்த ஜனநாயகம். இது எதை எமக்கு தெளிவுபடுத்துகின்றது. பணமுள்ளவன் எப்படி இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றான் என்பதைத் தான். பணம் உள்ளவன் அதை எப்படி ஜனநாயக அமைப்பில் பெறுகின்றான் என்பதைத் தான்.


இந்த ஜனநாயக சமூக அமைப்பில் மக்கள் நாள் பூராவும், ஏன் வாழ்க்கை பூராவும் உழைக்கின்றனர். ஆனால் அவர்களிடம் பணம் இருப்பதில்லை. ஏன்? இந்த ஜனநாயக அமைப்பில் வாழவழியற்றுப் போகின்றனரே ஏன்? ஆனால் சிலர் மட்டும் இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்கின்றனர் என்றால் எப்படி? இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்கள், எப்படி ஜனநாயகத்தை தமது தேர்வு என்று சொல்லமுடியும்! இந்த ஜனநாயக அமைப்பில் வாழமுடியாதவர்களுக்கும், இந்த ஜனநாயக அமைப்பில் வாழ்பவர்களுக்கு இடையில் என்ன வேறுபாடு? எந்த நெருக்கடியுமின்றி வாழ்பவர்களுக்கு, வாழ்வதற்கான பணம் எப்படி அவர்களுக்கு மட்டும் கிடைக்கின்றது. வாழ்க்கை ப+ராவும் உழைப்பவன் வாழமுடியாத வகையில் பணத்தைப் பெறமுடிவதில்லையே ஏன்?. பணம் மரத்தில் காய்ப்பதில்லை. மனித உழைப்பில் தான் காய்க்கின்றது. ஆனால் உழைப்பவன் அதைப் பெறமுடிவதில்லையே. ஏன்?


மனித உழைப்பு பணத்தை உருவாக்குகின்றது என்பது உண்மையாக இருப்பதால் தான், உழைப்பவன் அதை கொண்டு வாழமுடியாத நிலை உருவாகுகின்றது. உழைப்பவன் தனது உழைப்புக்கு சொந்தக்காரனாக இருப்பதில்லை. இதனால் தான் அதை அவன் இழந்து விடுகின்றான். யாரிடம் இழக்கின்றான் என்றால் பணமுள்ளவனிடம். இதனால் பணமுள்ளவன் வாழ்கின்றான். இந்த இழப்பு எப்படி சாத்தியமாகின்றது என்பதே, அனைத்துக்குமான சூக்குமமாகவுள்ளது. மனித உழைப்பு சுரண்டப்படுபவதன் மூலம் தான், மற்றவனால் வாழமுடிகின்றது. உழைப்பவன் வாழமுடியாது போகின்றது. இதை பாதுகாக்கும் இந்த அமைப்புத்தான் ஜனநாயக அமைப்பாகவுள்ளது. இவர்கள் ஜனநாயகத்தின் காவலராக உள்ளனர். இந்த ஜனநாயகத்தின் தீவிர காவலர் யார் என்றால் பணமுள்ளவராக உள்ளனர். அவர்களே முதலாளிகளாக, நிலப்பிரபுகளாக உள்ளனர்.


ஜனநாயகம் என்பது, மற்றவனின் உழைப்பை சுரண்டுவதன் மூலம், தான் வாழ்வது தான். இதை மூடிமறைக்கவே வாக்களிக்கும் உரிமைப் பிரகடனங்கள் முன்வைக்கப்படுகின்றன. நீ உனது வாக்கு மூலம், யார் உன்னை ஆள்வது என்பதை தெரிவு செய்யமுடியும் என்று கூறமுனைகின்றனர். விரும்பின் நீயும் ஆள முடியும் என்ற பிரமையும் ஊட்டப்படுகின்றது. இது அதிஸ்ட லாபச் சீட்டுப் போல், கபடமும் சூழ்ச்சியும் நிறைந்த அப்பட்டமான மனித உழைப்பைச் சுரண்டும் அரசியல் சூதாட்டமாகும்.


உனது வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்யும் உனது உரிமை, நீயே ஆளமுடியும் என்ற உரிமை, இதுவே ஜனநாயகம் என்றால் இது எப்படி சக மனிதனை அடிமைப்படுத்துவதை அனுமதிக்கின்றது. சரி இந்த அடிமைத்தனத்தை இது எப்படி ஒழிக்கும்? சக மனிதனையே கேவலப்படுத்தும் சமுதாயத்தை, இது எப்படி மாற்றி அமைக்கும். மனிதர்களை சிறுமைப்படுத்தி கீழ்மைப்படுத்தும் சமூக முரண்பாடுகளை, எப்படி இது இல்லாததாக்கும்? விடை தெரியாத ஜனநாயகப் புதிர்தான் இது. ஜனநாயகத்தின் கடமை இதுவல்ல என்பதே, எதார்த்தம் கூறுகின்ற ஒரு ஜடமான வாழ்வாக உள்ளது.


வாக்களிக்கும் உரிமை, தெரிவு செய்கின்ற உரிமை, நீ ஆளுகின்ற உரிமை எப்படி எதார்த்தத்தில் உள்ளது. இன்று உலகை ஆளுகின்ற எந்த ஆட்சியாக இருந்தாலும் சரி, ஜனநாயக தலைவர்களாக இருந்தாலும் சரி, எந்த சுதந்திரமான எழுத்து பேச்சு சுதந்திரமாக இருந்தாலும் சரி, இழிந்துபோன இந்த அமைப்பின் மனித துயரங்களை தீர்ப்பதில்லை. அப்படிப்பட்ட நிலையில் இந்த ஜனநாயகம் மனிதர்களுக்கு எந்தவித்திலும் பயன்படவில்லை என்பது உண்மையாகின்றது. அனைத்து ஜனநாயகவாதிகளும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகத்தான் கூறுகின்றனர். ஆனால் எதார்த்தத்தில் அதை மறுதலிப்பவராகவே உள்ளனர். வாக்கு போட்டு தெரிவு செய்யப்பட்ட ஆளும் கட்சிகள், அதன் உறுப்பினர்கள் எங்கேயாவது மக்களுக்காக அவர்களின் வாழ்வு பிரச்சனைகளுக்காக உண்மையாக நேர்மையாக வாழ்கின்றார்களா? இன்று ஆளும் வர்க்கமாக உள்ள ஆட்சியாளர்கள், மக்களுக்கு தாம் என்ன தான் செய்ய போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? மக்களுக்கு எதிராக எதைக் கொண்டு வரப் போகின்றோம் என்று சொல்லுகின்றார்களா? இல்லை. வெளிப்படையாக மக்களுக்கு எதையும் சொல்வதில்லை. சூக்குமமாக தமது திட்டங்களை, மக்கள் புரிந்து கொள்ளாத மொழிகளில் அரூபமாகவே முன்வைக்கின்றனர். அதையும் அவர்கள் கடைப்பிடிப்பது கிடையாது. முழு மக்களையும் பாதிக்கின்ற, சொல்லாத பல விடயங்களையே மூலதனத்துக்கு சார்பாக அமுலுக்கு கொண்டு வருகின்றன. பொதுவாக பார்த்தால் மாற்றமுடியாத ஒரு அமைப்பின் விதிகளுக்கு, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் கட்டுப்பட்டு செயற்படுகின்றது.


மக்களுக்காக என்ன செய்யப் போகின்றோம் என எதுவும் சொல்வதில்லை. ஒப்பந்தங்கள் முதல் சட்டங்கள் வரை பல இரகசியமாகவே வைக்கப்படுகின்றன. ஒரு மூடுமந்திரமே ஆட்சியின் இயல்பாகின்றது. இதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இவற்றை புரிந்துகொள்ள சில உதாரணங்களை எடுப்போம்.


1. உலகமயமாதல் என்ற உலக ஒழுங்கு இன்று உலகெங்கும் நடைமுறையில் உள்ளது. அது உலகில் உள்ள மக்களின் வாழ்வின் ஆதாரங்களை இல்லாததாக்குகின்றது. மக்களை வெறும் மந்தைக் கூட்டமாக, அடிமைகளாக மாற்றுகின்றது. நாடுகளையே இல்லாது ஒழிக்கின்றது. உலக நாடுகளையும் அதன் தலைவிதியையும் அழிக்கின்ற இந்த உலகமயமாதல் ஒப்பந்தங்கள் என்ன? யாருக்காவது தெரியுமா? உலகில் உள்ள மக்களுக்கு இது என்னவென தெரியாது. மக்களை விடுவோம், தெரிவு செய்யப்பட்ட ஜனநாயக பிரதிநிதிகளுக்குத் தெரியுமா? தெரியாது. ஆனால் ஒவ்வொரு நாடும் இந்த தற்கொலை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில் கையெழுத்திட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு கூட இந்த ஒப்பந்தம் என்னவெனத் தெரியாது. ஆனால் கையெழுத்திட்டுள்ளனர். உலகின் சகல மனிதர்களின் வாழ்வும், இதற்குள் தான் இயக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக விரோத அநீதியை நியாயப்படுத்துவதே ஜனநாயகமாகிவிட்டது. இதைக் கொண்டு வந்த விதமே ஜனநாயகவிரோதமானது. கையெழுத்திட்ட வடிவமே ஜனநாயக விரோதமானது. ஆனால் இதை அமுல்படுத்தும் உரிமையை ஜனநாயகம் என்கின்றனர்.


கைநாட்டிட்ட இந்த ஒப்பந்தத்தை, வாக்குப்போட்டு தெரிவு செய்த பிரதிநிதிகள் யாரும் விவாதித்து அங்கீகரிக்கவில்லை. மக்களின் வாக்களிக்கும் உரிமையே இங்கு செல்லுபடியற்றது. தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இதை கேள்வி கேட்க முடியாது. அந்த ஒப்பந்தச் சரத்துகள் என்ன என்பதை அறியும் உரிமையும் கூட அவர்களுக்கு கிடையாது. வாக்கு அளிக்கும் உரிமை, தேர்வின் உரிமை, தேர்ந்தெடுத்த உறுப்பினரின் உரிமையென எதுவும் இந்த அமைப்பில் அர்த்தமற்ற ஒன்றாகவே உள்ளது. சரி உயர் நீதிமன்றங்கள் கூட இதை கேள்வி கேட்கவோ, தடை செய்யவோ முடியாது. ஜனநாயகம் என்பது இங்கு போலியான வெற்றுச் சொற்களாக இருப்பதையே எடுத்துக் காட்டுகின்றது. யார் இதை உருவாக்கினார்கள்? மக்களுக்கு மேலாக உள்ள அவர்கள் யார்? இதுவே இதைப் புரிந்து கொள்வதே மிக முக்கியமான கேள்வியாக எம்முன் உள்ளது.


2. இது போன்று ஓய்வூதிய வயதெல்லையை (5 வருடமாக) அதிகரிப்பது தொடர்பான சட்ட மூலங்கள் பல நாடுகளில் வருகின்றன. இந்தச் சட்டமூலம் பற்றி விவாதத்தை யார் தீர்மானிக்கின்றார்கள். தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுபினர்கள் என்றால், அதன் பின்னால் முதலாளிகள் உள்ளனர். சரி இந்த தெரிவு செய்யபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், இந்த சட்டமூலத்தை கொண்டு வரப்போவதாக கூறி மக்களிடம் வாக்கு கேட்டார்களா எனின் இல்லை. மக்களிடம் இப்படி கூறி வாக்கு கேட்பதில்லை. உண்மையில் மக்கள் தீர்மானிப்பதில்லை. தனது ஓய்வூதிய கால அளவை கூட்டவுள்ளதாக கூறி வாக்கு கேட்டு இருந்தால், மக்கள் அவர்களை நிராகரித்து இருப்பார்கள். மக்களை ஏமாற்றி வாக்கு பெற்ற பின்பு, அதை ஜனநாயகபூர்வமான தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் ஜனநாயகத் தெரிவு என்பது மொத்த மக்களுக்கும் எதிரான மோசடியாகும். இப்படித்தான் பலவற்றை ஜனநாயக விரோத பாராளுமன்றங்கள் ஜனநாயகத்தின் பெயரில் செய்கின்றன. சில சட்டமூலங்கள் பெரும்பான்மை மக்கள் எதிர்கின்ற நிலையிலும், வீதியில் இறங்கிப் போராடுகின்ற நிலையிலும் கூட, அதை மாற்ற முடியாது என்று மக்களுக்கு எதிராக கொக்கரிப்பதே ஜனநாயகமாக உள்ளது.


3. உலகில் உழைக்கும் மக்களுக்கு எதிரான சட்டங்களை எடுப்போம். வேலை நேர அதிகரிப்பு, குறைந் கூலிகள், வேலையைவிட்டு நீக்கும் உரிமைகள் என்று அன்றாடம் பல சட்டங்கள் மக்களுக்கு எதிராக கொண்டுவரப்படுகின்றது. யார் அவர்களை தெரிவு செய்தனரோ, அவர்களுக்கு எதிராக அவர்களின் விரும்பங்களுக்கு எதிராக சட்டங்களை கொண்டு வருகின்றனர். இந்த மக்கள் விரோத முதலாளி சார்புச் சட்டங்களை கொண்டு வரப்போவதாக மக்களுக்கு கூறி வாக்கு கேட்டனரா எனின் இல்லை? தெரிவு செய்யப்பட்டவர்கள் மக்களின் விருப்பு வெறுப்புக்கு வெளியில் கொண்டுவரும் சட்டங்கள், அந்த மக்களை உயிருடன் கொல்லுகின்றது. இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். இதையே மக்களின் தேர்வின் உரிமை என்கின்றனர். இது அப்பட்டமான மோசடியாகும்.


4. உலகில் பொதுவாக போடப்படும் சட்டங்கள் இயற்கை மீதான மனித உரிமையையே இல்லாததாக்குகின்றது. குடிக்கும் தண்ணீரையே ஜனநாயகம் காசாக்குகின்றது. உயிர்வாழ்வதற்கு தேவையான மருத்துவத்தை மறுத்து, உயிர்வாழும் உரிமையை ஜனநாயகம் காசாக்குகின்றது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை கல்வியின் உரிமையை மறுக்கும் ஜனநாயகம், அதையும் காசாக்குகின்றது. வாழ்வதற்கு இந்த ப+மியில் ஒரு துண்டு நிலத்தைக் கூட பெற முடியாத மனித அவலம். இதைத் தான் ஜனநாயகம் என்கின்றனர். உன்னிடம் பணம் இல்லை என்றால் குடிக்கும் நீரை, நோய் தீர்க்கும் மருந்தை, ஒரு நேர உணவை, வாழ்வதற்கான ஒரு இடத்தைக் கூட, இந்த ப+மியில் நீ பெற முடியாது. இந்த உண்மையை பாதுகாப்பது தான் ஜனநாயகம்.


பணத்தை பெறும் உனது உழைப்பை நீ எவ்வளவுக்கு விற்பது என்பதை நீ தீர்மானிக்க முடியாது. இதைத்தான் பாராளுமன்ற ஜனநாயக சட்டங்கள் அன்றாடம் உனக்கு எதிராக உருவாக்குகின்றன. இதைத் தான் உனது உரிமை என்றும், உனது ஜனநாயகம் என்றும் உனக்கு புகட்டுகின்றனர். மக்கள் இந்த பூமியில் வாழவழியற்ற நிலையை உறுதிசெய்யும் சட்டங்களை இயற்றுவதே ஜனநாயகத்தின் ஒரே கடமையாக உள்ளது. தெரிவு செய்யப்பட்ட எந்த உறுப்பினராவது அல்லது கட்சியாவது, இதைத் தமது கொள்கையாக கூறி வாக்குக் கேட்டார்களா? எனின் இல்லை. மக்கள் அவர்களை இதற்காகவா தெரிவு செய்தார்கள் எனின் அதுவும் இல்லையே!


இப்படி பற்பல உதாரணங்களை நாம் காட்டமுடியும். மக்கள் முன், முன்கூட்டியே திணிக்கப்பட்ட ஒரு அமைப்பில் தெரிவு செய்யப்படுபவர்கள், தாங்கள் செய்யப் போவதை கூடச் சொன்னதில்லை. அதேபோல் சொன்னதைச் செய்வதில்லை. உழைக்கும் மக்களுக்கு எதிராக செயல்படும் ஒரு மக்கள் விரோத கும்பலாகத்தான் உருவாகுகின்றனர். இந்தக் கும்பலின் மக்கள் விரோதச் செயலைத்தான் ஜனநாயகம் என்கின்றனர்? மக்களின் ஜனநாயக உரிமை, தேர்ந்த உரிமை என அனைத்தும், மிக மோசமான வழியில் ஒரு பணக்கார கும்பலுக்கு சார்பாக பயன்படுத்தப்படுகின்றது. மாறிமாறி ஆட்சிக்கு வரும் ஜனநாயகவாதிகள், மக்கள் விரோத சட்டங்களை மீளப் பெறுவதில்லை. அது அடுத்த ஆட்சியிலும் தொடருகின்றது. எப்போதாவது மீளப் பெறப்படுகின்றது எனின், மக்கள் வீதியில் இறங்கி இந்த ஜனநாயக ஆட்சிக்கு சவால்விடும் போது மட்டும் தான் நிகழ்கின்றது. மக்கள் இனியும் இந்த ஜனநாயகத்தை சகித்துக் கொண்டு வாழமுடியாத என்ற நிலையில், வீதியில் இறங்கி ஜனநாயகத்துக்கு சவால் விடுகின்றனர்.


மக்கள் வீதியில் இறங்கி புனிதமான ஜனநாயக அமைப்பையே தகர்த்துவிடும் அச்சுறுத்தலைவிடும் போது மட்டும்தான், மக்கள் விரோத ஜனநாயகச் சட்டங்கள் திரும்பப் பெறப்படுகின்றது. அதாவது மக்கள் விரோத ஜனநாயகத்தை பாதுகாக்கும் சட்டம் மீளப்பெறப்படுகின்றது. உண்மையில் இந்த ஜனநாயக அமைப்பின் எதிர்மறையான அம்சமே இங்கும் செயலாற்றுகின்றது. மக்கள் இந்த ஜனநாயக அமைப்பை ஏற்றுக் கொள்வதில்லை. உலகில் அன்றாடம் நடக்கும் போராட்டங்கள் பெரும்பாலானவை, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டம் தான். இந்த ஜனநாயகம் மக்களுக்கு எதிராக இருப்பதால் மக்கள் வீதியில் இறங்கி போராடுகின்றனர். இப் போராட்டத்தில் மக்கள் ஜனநாயகத்தை முன்னிறுத்தினாலும் கூட, இந்த ஜனநாயக அமைப்புக்கு எதிரான போராட்டமாகவே அவையுள்ளது. இது நிகழாத போது, மக்களின் அன்றாட வாழ்க்கையே கண்ணீர் ஆறாக, இந்த ஜனநாயகத்துக்கு எதிராக பெருக்கெடுக்கின்றது. இதுவும் அன்றாட மனித வாழ்க்கையில் நடந்தேறுகின்றது.


மக்களுக்கு எதிரான சட்டங்கள், ஒப்பந்தங்கள் ஏன், யாருக்காக உருவாக்கப்படுகின்றன? முழு மக்கள் கூட்டத்துக்கு எதிராக, ஏன் இந்த ஜனநாயகவாதிகள் இயங்குகின்றனர். மூலதனத்தின் நலன் என்பதே, இதன் மையமான அரசியல். ஜனநாயகம் என்பது மூலதனத்தை விரிவுபடுத்துவது தான். பணக்காரனை பணக்காரனாக்குவது தான். ஏழையை மேலும் ஏழையாக்குவது தான். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு என்று வேறு விளக்கம் கிடையாது. பரந்துபட்ட மக்களின் வாழ்வை அழித்து, மூலதனத்தை பெருக்குவது தான் ஜனநாயகம். இந்த உரிமையைத் தான் சுதந்திரம் என்கின்றனர். மூலதனம் வாழவேண்டும் என்றால், மக்கள் சுரண்டப்பட வேண்டும். இந்த முரண்நிலையான கூறு எதார்த்தத்தில் ஜனநாயகமாக உள்ளவரை, இந்த ஜனநாயக அமைப்பு ஒரு சார்பு நிலையை எடுத்தேயாக வேண்டியுள்ளது. மனித உழைப்பை சுரண்டுவது அல்லது சுரண்டலை எதிர்ப்பது என்ற எதிர்நிலைப் போக்கு, தெளிவாக துல்லியமாக இதிலொன்றை தெரிவு செய்கின்றது.


இந்த ஜனநாயகம் என்பது மூலதனத்தைப் பாதுகாக்கும் அமைப்பாகவே உள்ளது. இது தவிர்க்க முடியாது மூலதனத்தை பெருக்க, மக்களின் உழைப்பை அதிகளவில் சுரண்டுவதை கோருகின்றது. மக்களிடம் உள்ளவற்றை புடுங்குவதை சட்டமாக்குவது தான் ஜனநாயகமாகி விடுகின்றது. ஆளும் வர்க்கத்தின் மூலதனத்தை பெருக்கவும் பாதுகாக்கவும், மக்கள் விரோத சட்டங்களை இந்த ஜனநாயக அமைப்பு உருவாக்குகின்றது. ஜனநாயகத்தின் பெயரில் தேர்வு செய்யும் உறுப்பு, அப்படித்தான் உள்ளது. இது தவிர்க்க முடியாது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே இருக்கின்றது. நிலவும் ஜனநாயகம் என்பது மக்களுக்கு அல்ல, மூலதனத்துக்குத் தான். மூலதனத்தின் வாழ்வுக்கு உட்பட்ட சட்ட திட்டங்களைத் தான், இந்த அமைப்பின் சமூக ஒழுக்கமாக்குகின்றனர். இதற்கு வெளியில் சுயாதீனமாக சுயேட்சையான சட்டதிட்டங்கள் எதுவும் இருப்பதில்லை. ஜனநாயகத்தின் எல்லைப்பாடு, இதற்கு வெளியில் எதுவும் கிடையாது.


இந்த ஜனநாயகத்தில் மக்களை மந்தைத் தனத்தில் வைத்திருப்பதன் மூலம் தான், தமது சொந்த இருப்பையே தக்கவைக்க முடிகின்றது. ஜனநாயகத்தின் உறுப்பாக காட்டப்படுகின்ற கருத்து தளங்கள் மிகப்பெரிய ஒரு மூலதன நிறுவனமாக மாறிவிட்டது. மக்களிடம் கருத்தை பெருமளவில் எடுத்துச் செல்லுகின்ற ஊடகவியலில், மக்கள் தமது கருத்தை விரும்பியவாறு சொல்லமுடியாது. ஏன் பெரும்பான்மை மக்கள் விரும்புகின்ற ஒரு கருத்தைக் கூட பிரதிபலிக்க முடியாது. இதில் மூலதனத்தின் நலனுக்கு எதிராக கருத்துரைக்கவே முடியாது. ஊடகமே ஒரு மூலதனத்தின் மேல் வீற்றிருக்கின்றது. ஊடகமே ஒரு மூலதனமாகிவிட்டதால், அதற்கு உட்பட்ட வகையில் செயலாற்றுவதையே அது அனுமதிக்கின்றது. இதற்குள் தான் மாறுபட்ட கருத்தை பிரதிபலிக்க முடியும்.


ஊடகத்துறை மக்களின் அன்றாட வாழ்வியல் பிரச்சனையைப் பற்றி பேசுவதில்லை. மக்களுக்கு எதிரான சட்டதிட்டங்களையும், ஒப்பந்தங்களையும் பற்றி பேசுவதில்லை. வாக்கு போட்டு தேர்ந்தெடுத்த உறுப்பினர்கள் எப்படி ஏன் மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர் என்பதைப் பற்றியோ, அவர்களின் ஜனநாயக விரோத செயல்பாட்டைப் பற்றியோ பேசுவதில்லை. ஜனநாயகத்தின் பெயரில் ஜனநாயக விரோதமாகவே செயல்படும் அமைப்பைப் பாதுகாப்பதில், மக்களுக்கு எதிராக செயல்படுவதை பாதுகாக்கின்ற வகையில் கருத்தை எடுத்துச் செல்லுகின்றன. மக்களுக்கு கருத்தை எடுத்துச் செல்லும் ஊடகங்கள் தனிப்பட்ட முதலாளிகளுடையதாக அல்லது ஆளும் அதிகார வர்க்கத்தின் ஒரு உறுப்பாக உள்ளது. இது பரந்துபட்ட மக்களின் வாழ்வுக்கு எதிராக திட்டவட்டமாக செயலாற்றுகின்றது.


இது இப்படி என்றால் ஆளும் கட்சிகளை எடுத்தால் அல்லது எதிர்க்கட்சியை எடுத்தால் இதே நிலைதான். கட்சிகளே பெரும் பண நிறுவனங்களாகவே மாறிவிட்டன. பண முதலைகளின் நிறுவனங்களாகவும், அதை பொறுக்கித் தின்னும் ஒரு அடியாள்படைகளைக் கொண்ட ஒரு மக்கள் விரோத நிறுவனமாக கட்சிகள் மாறிவிட்டன. மக்களுக்கு முன்னால் தாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று சொல்லி, நேர்மையாக வாக்கு கேட்பதில்லை. மாறாக எதையும் சொல்வதில்லை. எதையும் மக்களுக்கு தருவதாக கூறுவதில்லை. அப்படிக் கூறினாலும் அதை மக்களுக்கு கொடுப்பதில்லை. மக்களிடம் இருப்பதை புடுங்கும் அரசியல் தான், கட்சிகளின் ஜனநாயகமாக உள்ளது. இது மக்களின் வாக்குத் தொடங்கி உழைப்புவரை விரிந்து அகன்று செல்லுகின்றது. உலகமெங்கும் வீதி தோறும் போராடும் மக்கள் இந்த உண்மையைத் தான், அன்றாடம் உலகுக்கு புகட்டுகின்றனர்.


அமெரிக்கா முதல் இந்தியா வரையில் மிகப் பெரிய பணக்காரக் கட்சிகள் மட்டும் தான் ஆட்சிக்கு வரமுடியும். கட்சிகளே மிகப் பெரிய (பணம்) நிறுவனமாகிவிட்டது. அந்தளவுக்கு பணம் முதல் அடியாட்படைகள் வரை கொண்ட ஒரு ஆளும் நிறுவனமாகிவிட்டது. மக்கள் வாக்களித்தாலும் சரி, வாக்களிக்கவிட்டாலும் சரி, ஆளும் நிறுவனங்கள் ஆட்சிக்கு வந்தேயாகின்றது. மக்களுக்கு எதிரான சட்டங்களையும், திட்டங்களையும் அன்றாடம் இயற்றுகின்றனர். இதில் இடது வலது வேறுபாடுகள் எதுவும் கிடையாது. ஜனநாயக அமைப்புக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி கேள்விக்குள்ளாக்கும் போது, அதை பாதுகாக்க சீர்திருத்தம் செய்கின்றனர். இதற்கு மேல் இந்த ஜனநாயக அமைப்பில் மாற்றம் எதையும், இந்த சமூக அமைப்பை ஏற்றுக் கொள்ளும் எந்தக் கட்சியும் செய்வதில்லை.


வாக்கு போட்டு தெரிவு செய்யும் உறுப்பினர்கள், பெரும்பான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. மாறாக சிறுபான்மை வாக்குகளை பெற்று ஆளும் வர்க்கமாக மாறி, பெரும்பான்மை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனர். பொதுவாக இந்த ஜனநாயக அமைப்பில் ஆளும் வர்க்கங்களாக உள்ளவர்கள், 20 சதவீதத்துக்கு உட்பட்ட மக்களின் வாக்கைப் பெற்றே பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகளாக உள்ளனர். அவர்கள் தான் சட்டங்களை இயற்றுகின்றனர். உலகில் பொதுவாக 40 முதல் 50 சதவீதமான மக்கள், இந்த ஜனநாயக தேர்தலில் நம்பிக்கை வைத்து வாக்களிப்பதில்லை. வாக்களிக்கும் 50 முதல் 60 சதவீதமான மக்கள் வாக்கில், ஆளும் வர்க்கம் 20 சதவீதமான வாக்குகளைப் கூட பொதுவாக பெரும்பான்மை நாடுகளில் பெற முடிவதில்லை. இப்படி இந்த ஜனநாயகம் நிர்வாணமாகி, மக்களுக்கு எதிராகவே நிற்கின்றது.


இந்த ஜனநாயகம் இப்படித் தான் நிர்வாணமாகியுள்ளது. இந்த ஜனநாயகம் மனிதனின் வாழ்வை குழிபறிப்பதில் தான் உயிர்வாழ்கின்றது. இது இப்படி என்றால், கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரத்தையே ஜனநாயகமாக கொண்டாடும் சிலர் ஜனநாயகத்தை எப்படி விளக்கி வாழ முற்படுகின்றனர் எனப்பார்ப்போம்.


இவர்களுக்கு இந்த உலகம் எப்படி இருக்கின்றது என்பது பற்றி அக்கறையில்லை. தனக்கு எப்படி இந்த உலகம் இசைவானதாக இருக்க வேண்டும் என்பது பற்றித்தான், அவனின் கவலை. தன்னையொத்த சகமனிதன் சிந்திக்கவே நேரமின்றி, உழைத்தபடி வாழ்கின்றானே என்ற கவலை இவர்களுக்கு கிடையாது. சகமனிதன் கருத்தைக் கூட சொல்ல முடியாத நிலையில், கல்வியறிவு இந்த ஜனநாயக அமைப்பால் மறுக்கப்பட்ட நிலையில் பட்டினியுடன் வாழ்வதைப்பற்றி அவனுக்கு கவலையில்லை. சக மனிதனுக்கு அவை இல்லாது இருப்பது தான், தனது உரிமை என்கின்றான். இதை அவன் நேரடியாக சொல்வதில்லை. அதை நாகரீகமாக வெளிப்படுத்துகின்றான். அந்த மக்களின் வாழ்வைப்பற்றியும், அதற்கான காரணமாக உள்ள இந்த ஜனநாயகத்தை, தனது ஜனநாயகத்தின் மூலம் கேள்விக்குள்ளாக்குவதில்லை. இதையே அவன் ஜனநாயகம் என்கின்றான். இதன் மூலம் தன்னை சமூகத்தின் மேலே உயரத்தில் தக்கவைக்க முனைகின்றான்.


முரணற்ற ஜனநாயகத்தை ஒரு ஜனநாயகவாதி கோருவானாகின், நிச்சயமாக இந்த ஜனநாயகத்தை நுகர முடியாத மனித வாழ்வையும் அந்த ஜனநாயக விரோத அமைப்பையும் எதிர்த்து போராடுவான். ஜனநாயகம் மறுக்கப்பட்டு அதை நுகர முடியாத உலகம் மிகப் பெரியது. ஜனநாயகம் சிலருக்கானதாக (பணம் உள்ளவனுக்காக) உள்ள போது, ஜனநாயகம் என்னவென தெரியவே முடியாத நிலையில் கோடானுகோடி மக்களை மந்தைகளாக வாழவைப்பதே இந்த ஜனநாயக அமைப்புத்தான். இதை மூடிமறைப்பதும், இதை வேறொன்றாக காட்டுவதும் இந்த ஜனநாயகத்தின் கேடுகெட்ட செயலாகின்றது. அதாவது மனிதனை மனிதன் அடிமையாக்குகின்ற உழைப்புச் சுரண்டலை மூடிமறைக்கின்ற வகையில், சமூகங்களையே சுரண்டும் வடிவங்களாக மாற்றிவிடுகின்றனர். இயற்கையில் உடல் மற்றும் கால விசும்பலுக்கும் உட்பட்ட சமூக வேறுபாடுகளையும், பண்பாட்டு வேறுபாடுகளையும் மோதவிடுவது இதன் ஒரு அங்கமாகும். பெண்ணை ஆணைவிட கீழ்நிலைக்கு இட்டுச் சென்றதால், ஆண் மேலாண்மை பெண்ணை இழிவாக்குகின்றது. ஆணின் உழைப்பு சுரண்டப்படுவதை இது மூடிமறைக்கின்றது. அதேநேரம் பெண்ணை ஆண் சுரண்டவும் முடிகின்றது.


சாதியத்தின் படிநிலைப்பட்ட சமூக அமைப்பில், உயர்சாதி தாழ்ந்த சாதியை இழிவுபடுத்துவதன் மூலம் தாழ்ந்த சாதியை உயர்ந்த சாதி சுரண்டுகின்றது. இங்கு சுரண்டல் என்பது பண்பாட்டுத் தளத்தில் தொடங்கி உழைப்பு வரை விரிந்த ஒரு தளத்தில் காணப்படுகின்றது.


இதே போல் தான் நிற முரண்பாடுகள். வெள்ளையினத்தை உயர்ந்த இனமாக காட்டுகின்றது. இது மற்றைய நிறங்களை இழிவாக பார்ப்பதன் மூலம், மற்றயை நிறங்கள் மீதான சுரண்டலை நடத்துகின்றது. இதுபோல் இனமுரண்பாடு ஒரு இனத்தை மேன்மை இனமாக காட்டுவதன் மூலம், மற்றயை இனம் சுரண்டப்படுகின்றது. இப்படி சமூக முரண்பாடுகளை முன்தள்ளி சுரண்டுவதன் மூலம், சுரண்டல் வடிவங்கள் இடம்மாறி சுரண்டப்படுபவர்களை மோதவிடுகின்றது. அதேநேரம் மேனிலையில் உள்ளவன், சுரண்டுவதன் மூலம் அதிக லாபங்களை அடைகின்றான். கீழ்நிலையில் உள்ளவன் நியாயமாக தனக்கு மேலான ஒடுக்குமுறைக்கு எதிராக போராட, மேனிலையில் உள்ளவன் அதை பயன்படுத்தி கொழுக்கின்றான். மூலதனம் தனக்கு இசைவாகவே இதைப் பயன்படுத்துகின்றது. இப்படி எங்கும் எதிலும் மூலதனத்தின் லாபங்களே குறிக்கோளாகிவிடுகின்றது.


இதன் மூலம் சுரண்டல் அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. இந்த ஜனநாயக அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. சகமனிதனையும், சக சமூகங்களை இழிவாடி கொள்ளையிடுவதற்கு இந்த ஜனநாயகம் உரிமையளிக்கின்றது. கிட்லரும் கூட ஜனநாயகத்தின் ஊடாகவே யூதரை இழிவுபடுத்தியே, ஆரிய மேன்மை பேசி ஆட்சிக்கு வரமுடிந்தது. இன்று உலகை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா ஆட்சி முதல், உலகை அடக்கியாள்வதற்கு கூட இந்த ஜனநாயகம் இடம்விட்டு கொடுக்கின்றது. மக்கள் விரோத அனைத்துச் செயலையும், ஜனநாயகம் வழிகாட்டுகின்றது.


இந்த நிலையில் ஜனநாயகத்தை நாம் எதிர்நிலையில் பயன்படுத்த வேண்டியுள்ளது. அதாவது ஜனநாயகத்தில் உள்ள முரணற்ற கூறுகளை பயன்படுத்தி, ஜனநாயக விரோதத்தை ஒழிப்பதன் மூலம் ஜனநாயகத்தை அர்த்தமற்றதாக்க வேண்டும். அனைத்து மக்களின் ஜனநாயகம், ஜனநாயகத்தை இல்லாது ஒழித்துவிடுகின்றது என்ற உண்மையை அடிப்படையாக கொண்டு நாம் போராட வேண்டியுள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் சொல்லுகின்ற பொய்யையும் புரட்டையும், ஏன் அந்த வர்க்க சர்வாதிகாரத்தையும், அது உருவாக்கும் பாசிசத்தையும் அம்பலப்படுத்தி மக்கள் தங்கள் கையில் அதிகாரத்தைப் பெறுவதே ஜனநாயகமாகும். மற்றவனுக்கு ஜனநாயகத்தை மறுப்பதை ஜனநாயகம் என்று சொல்வதன் மேல், மக்கள் தமது சர்வாதிகாரத்தை நிறுவவேண்டும். அதாவது பெண் என்றும், தாழ்ந்த இனமென்றும், தாழ்ந்த நிறம் என்றும், தாழ்ந்த சாதி என்றும் பேசும் ஜனநாயக உரிமை மீதும், சகமனிதனின் உழைப்பைச் சுரண்டும் ஜனநாயக உரிமை மீதும் மக்கள் சர்வாதிகாரத்தை நிறுவி அதை மறுக்க வேண்டும். இதுதான் உண்மையான ஜனநாயகம். மக்கள் சர்வாதிகாரம் தான், அனைவருக்கமான ஜனநாயகத்தை வழங்கும. இது ஜனநாயகத்தின் பெயரில் உள்ள மனித இடைவெளியை அகற்றி, அதை இல்லாததாக்கும்.


23.03.2006


பி.இரயாகரன் - சமர்