06292022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

'ஜனநாயகம்' என்ற பெயரில் பாசிசமே கோரப்படுகின்றது

தமிழ் மக்களின் பெயரில் "ஜனநாயக" கூத்து நடத்தப்படுகின்றது. "ஜனநாயகம்" என்ற பெயரில், ஜனநாயக மறுப்பு அரங்கேறுகின்றது. மாற்றுக் கருத்து என்ற பெயரில் பாசிசம் சித்தாந்தமாகின்றது. இதுவே புலியின் மாற்று என்று கூறிக்கொள்ளும் புலியெதிர்ப்புக் கும்பலின் நடைமுறை சார்ந்த அரசியலாகிவிட்டது.

இந்த புலியெதிர்ப்பு அரசியல், மக்களை தமது நடைமுறை அரசியல் போராட்டங்களில் இருந்து எட்டியுதைக்கின்றது. மாறாக மக்களை தமது சொந்த எடுபிடி அரசியலுக்கு பயன்படுத்த கூவியழைக்கின்றது. மக்களை புலிகள் எப்படி தமது சொந்த குறுகிய நலனுக்கு பயன்படுத்த முனைகின்றனரோ, அப்படியே புலியெதிர்ப்பு கும்பலும் செய்ய முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பல் ஏகாதிபத்திய தலையீட்டுக்கு ஏற்ற மறுகாலனிய சூழலையுருவாக்க, மக்களை தமது அரசியல் எடுபிடிகளாகவே வரக்கோருகின்றனர்.

 

இதைவிட வேறு எந்த ஒரு வேலைத்திட்டமும் அவர்களிடம் கிடையாது. இந்தக் கும்பல் இதைத்தான் தமிழ்மக்களின் புதிய தலைமை என்கின்றனர். இதனடிப்படையில் ஒரு கட்டுரை தேனீ இணையத்தில் வெளியாகியது. "தமிழ்மக்களுக்கு இன்று புதியதொரு ஜனநாயக தலைமைத்துவம் தேவை." என்ற தலைப்பில் வெளியாகியது. ஞாநி என்ற புனைபெயரில் எழுதும் திரோஸ்கியவாதி புலியெதிர்ப்பு எடுபிடி அரசியலை, அரசியல் மயப்படுத்த முனைகின்றது. புலியெதிர்ப்பு கும்பலுக்கு அரசியல் அடியெடுத்து கொடுப்பவர்கள் இந்த திரோஸ்கியவாதிகள் தான். புலிக்கு அரசியல் வழிகாட்டியவர் முன்னாள் திரோஸ்கிய பாலசிங்கம் என்றால், புலியெதிர்ப்பு கும்பலுக்கும் திரோஸ்க்கிய அன்னக்காவடிகள் வழிகாட்ட முனைகின்றனர்.


எங்கள் எல்லோருக்குமுள்ள அடிப்படையான சந்தேகமே, அனைத்துக்குமானதாக உள்ளது. இந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை ஏகாதிபத்தியத்தை எதிர்க்குமா? பேரினவாதத்தை எதிர்க்குமா? சுரண்டலை எதிர்க்குமா? சாதியம், ஆணாதிக்கம் போன்ற சமூக அநீதிகளையும், சமூக முரண்பாடுகளை ஒழிக்குமா? எப்படி? இதை முரணற்ற வகையில் புலியெதிர்ப்பு கும்பல்கள் கூறுவதில்லை. இதைப்பற்றி இவர்கள் கதைப்பதில்லை. மாறாக இதை தவிர்த்து விடவே விரும்புகின்றனர். இதன் மூலம் கும்பல் அரசியல் செய்கின்றனர். கும்பல் என்று இங்கு நாம் சொல்லும் போது, கோட்பாடற்ற புலியெதிர்ப்பு கும்பலாக இருக்கின்றது. இவர்கள் "ஜனநாயகம்" என்கின்ற போது, உலகில் உள்ள சமூக அநீதிகளை அனுசரித்து செல்வதையே ஜனநாயகம் என்கின்றனர். இதன் மூலம் படுபிற்போக்கான ஜனநாயக விரோதிகளாக இருப்பதை அடிப்படையாக கொள்கின்றனர். மாற்றுக் கருத்து என்கின்ற போது, நாலு புலியெதிர்ப்பு நாய்கள் ஒன்றாக குலைப்பதை மட்டும் குறித்து சொல்லுகின்றனர். இதற்கு வெளியில் "மாற்றுக் கருத்தை" இவர்கள் அனுமதிப்பதில்லை. இதற்கு வெளியில் "ஜனநாயகம்" இவர்கள் பேசுவதில்லை.


"ஜனநாயகம்" என்ற பெயரில் புலியை எதிர்க்கின்ற அனைவருடனும் எடுபிடிகளாகி துணைபோகின்றனர். தமிழ் மக்களுக்காக இவர்கள் போராடவில்லை மாறாக அவனை ஒடுக்கின்றவனுக்கு எடுபிடி அரசியலையே செய்கின்றனர். இந்த எல்லைக்குள் தான் "ஜனநாயகம்" என்கின்றனர். குறிப்பாக ஏகாதிபத்திய எடுபிடிகளாக இருகின்றனர். இதை மூடிமறைக்கும் இவர்கள், புலிகள் பாணியில் பதிலளிக்கின்றனர். தேசிய விடுதலைக்குப் பின் தான் சமூக முரண்பாடுகளுக்கு தீர்வு என்று புலிகள் கூறுகின்றனர். இதை விசுவாசமாக நம்புங்கள் என்கின்றனர். புலியெதிர்ப்பு கும்பலோ புலி அரசியல் போல் ஜனநாயகத்தின் பின்புதான், சமூக முரண்பாட்டுக்கு தீர்வு என்று கூறுகின்றது.


புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரு முகங்களாகவே சமூகத்தை காட்ட முனைகின்றனர். இதில் இரண்டு பகுதியும் தத்தம் எல்லைக்குள் நின்று மக்களை தமது எடுபிடியாக்கி கும்பல் அரசியல் செய்கின்றனர். இதன் மூலம் குறுகிய, தமது குழு நலன்களையே அடைய முனைகின்றனர். புலிகள் "தேசியம்" என்று சொல்ல புலியெதிர்ப்பு கும்பல் "ஜனநாயகம்" என்கின்றது. இப்படி மக்களின் வாழ்வு சார்ந்த, அவர்களின் சமூக போராட்டங்கள் திட்டமிட்ட வகையில் இந்தக் கும்பலால் புறக்கணிக்கப்படுகின்றது. இதன் மேல் மக்கள் விரோத, சமூக விரோத பாசிச கொடிகளையே பறக்கவிடுகின்றனர்.


புலியெதிர்ப்புக் கும்பலின் "ஜனநாயகம்" என்ற ஒற்றைப் பரிணாம அரசியல், ஏகாதிபத்தியம் முதல் பேரினவாதம் வரையிலான அனைவருடன் இணைந்தே ஜனநாயகத்தை மீட்க வேண்டும் என்கின்றது. இதனால் தான் புலிகளையே இலங்கையின் பிரதான எதிரி என்கின்றனர். இப்படி அரசியலையே தமது எடுபிடி கைக்கூலி அரசியலுக்கு ஏற்ப புரட்டிப் போடுகின்றனர். புலிகளால் நாம் அச்சுறுத்தப்படுகின்ற ஒரு நிலையில் கூட, இதை நாம் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. மாறாக இதை அம்பலப்படுத்தி, எதிர்த்துப் போராடுதே தவிர, வேறு இடைவழிகள் எதுவும் எமக்கு கிடையாது.


"புதியதொரு ஜனநாயக" தலைமைக்கான ஒரு அரசியல் பணியில் தேனீ ஈடுபடுவதாக வாழ்த்தும் குறித்த கட்டுரை, புலிக்கு எதிராக ஐரோப்பாவில் நடந்த போராட்டங்களை எடுத்துக் காட்டுகின்றனர். "புலிக்கெதிராக ஒஸ்லோவிலே நோர்வேயிலே ரொறொன்ரோவிலே லண்டனிலே என்று ஆர்ப்பாட்டங்கள் ஏற்படுமளவுக்கு தமிழ்மக்கள் புலிப்பாசிசத்தை நேரடியாக எதிர்க்கத் தலைப்பட்டு விட்டனர்." என்று கூறுகின்றனர். சரி புலிப் பாசிசத்தை எதிர்க்கின்றனர் என்றால், புலிப்பாசிசத்தின் எந்த சமூகக் கூறுகளை எதிர்கின்றார்கள். அதை எப்படி எதிர்கின்றார்கள். இதுவே அரசியல் ரீதியான அடிப்படையான கேள்வி.


பாசிசம் என்பது சமூக கூறு சார்ந்தது. பாசிசம் என்பது வர்க்கம் சார்ந்தது. பாசிசம் ஒரு வர்க்கத்தின் கருவிதானே ஒழிய, அந்தரத்தில் மிதப்பவையல்ல. பாசிசம் புலியின் கண்டுபிடிப்பல்ல. உலகில் பாசிசம் பல பாகத்தில் காணப்படுகின்றது. இலங்கையில் புலிகள் அல்லாத ஒரு நிலையில், சிங்கள பேரினவாத அரசே பாசிசமாகவுள்ளது. ஏன் உங்களிடமே அதுவுள்ளது. ஆச்சரியம், ஆனால் இதுவே உண்மை. பாசிசம் ஒரு வர்க்கத்தின் சுரண்டும் அடக்குமுறை இயந்திரம் என்பதை புரியாதவரை, உங்களிடம் உள்ள பாசிசத்தையே நீங்கள் "ஜனநாயகமாக" காட்டுவது நிகழ்கின்றது.


"ஜனநாயகம்" என்பதை குறுகிய எல்லைக்குள் விளக்கிவிடுவது நிகழ்கின்றது. தேர்தலில் பங்கு கொள்வதையும், மக்களுக்கு எதிரான சூழ்ச்சிமிக்க தேர்தல் அரசியல் செய்வதையே ஜனநாயகமாக காட்டுவதுடன் அரசியல் சோரம் போய்விடுகின்றது. இந்த "ஜனநாயகம்" மக்களின் சமூக பொருளாதார வாழ்வை மிதித்து அழிப்பதைத் தான், சுதந்திரமானது என்கின்றது. இது இயல்பில் ஏகாதிபத்திய எடுபிடி அரசியலாகிவிடுகின்றது. மக்களுக்கு எதிரான உலகமயமாதலை ஆதரிக்கும் எடுபிடி அரசியலாகிவிடுகின்றது. இது புலிகளை நோக்கி மக்கள் நலனை முன்வைக்காது.


மாறாக ஏகாதிபத்தியம் புலியிடம் எதை அமுல்படுத்த கட்டளையிடுகின்றதோ, அதையே தமது அரசியல் கோசமாக்கி புலிகளை எதிர்க்கின்றனர். இதன் மூலம் ஏகாதிபத்தியத்தின் பின்னால் நின்று, அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். இதன் விளைவு என்னவாக இருக்கும். கடந்தகால அனுபவமே எம்முன்னுள்ளது. அன்று இந்தியா ஆக்கிரமிப்பாளன் புலிக்கு எதிராக எதை வைத்தானோ, அதன் அடிப்படையில் ஒரு கூலிப்படையாக இந்தியாவின் "ஜனநாயக" கோசத்துடன் தலையீட்டு மக்களையே துன்புறுத்தி அடிமைப்படுத்தியது. இதேபோன்று அதே அரசியலுடன் புலிக்கு எதிரான ஒரு ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை இலங்கையில் நடத்தும் வகையில், ஒரு புலியெதிர்ப்பு ஏகாதிபத்திய "ஜனநாயக" கோசத்துடன் இயங்கத் தொடங்கியுள்ளது. இதற்கு உட்பட்டே தமது புலியெதிர்ப்பு "ஜனநாயக" கோசத்தை முன்வைக்கின்றனர். இதற்கு வெளியில் எதையும் யாரும் காட்டமுடியாது.


இதை நேரடியாக சொன்னால் புலியை அழிக்கவேண்டும். புலியை அழித்தால் தான், பாசிசம் ஒழியும் என்கின்றார்கள். எல்லாம் சரி. எப்படி அழிப்பது. யார் அழிப்பது? யார் அழித்தாலும், நாங்கள் அதற்கு துணையாக நிற்க தயார் என்கின்றீர்களே. இந்த எடுபிடி அரசியல் விபச்சாரத்தனமானது. இதில் சூக்குமமாக சதிகளுடன் இயங்கி, மக்களை ஏமாற்றி முதுகில் குத்துவதை நாம் அனுமதிக்க முடியாது. நாம் தெளிவாக கூறிவிட விடுகின்றோம். புலிப்பாசிசம் மக்களுக்கு எதிராக இருப்பதால் அந்த மக்கள் தான் புலிப்பாசித்தை ஒழிக்க வேண்டும். பாசிசம் மக்களுக்குள்ளேயுள்ள பிற்போக்கான சமூக கூறுகளில் வேர்விட்டுள்ளது. அதை ஒழிக்காமல் பாசிசத்தை ஒழிக்கமுடியாது. இந்த சமூகக் கூறுதான் புலியெதிர்ப்புக்கு அத்திவாரமாகவுள்ளது. இந்த அடிப்படையை மாற்றாது பாசிசத்தை ஒழிப்பது என்பது, உண்மையில் மற்றொரு பாசிசத்தை புலிக்கு மாற்றாக கொண்டு வருவதுதான். இந்த உண்மையை புலியெதிர்ப்புக் கும்பல் மறுக்கின்றது.


புலிப்பாசித்தை ஒழிக்கும் நிலையில் மக்களில்லை என்கின்றனர். நல்லதொரு நகைச்சுவைதான். மக்களின் மேலுள்ள அடக்குமுறை என்ற விலங்கை உடைக்கும் பலம், மக்களுக்கில்லை என்கின்றனர். எனவே அன்னிய தலையீட்டு மூலம் தான் புலியை அழிக்கவேண்டும் என்கின்றனர். இந்த அரசியலையே "ஜனநாயகத்தின்" பெயரில் இன்று இந்த கும்பல் செய்கின்றனர். இந்த வகையில் தான், தமது அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். ஏகாதிபத்தியத்திடம் மகஜர்கள், வேண்டுகோள்கள், சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்துகின்றனர். மக்கள் அல்லாத பாசிச ஒழிப்பையே, புலியெதிர்ப்பு ஊடகங்கள் மறைமுகமாவும் நேரடியாகவும் சூக்குமமாகவும் சொல்லுகின்றனர்.


உண்மையில் அரசியல் சூழ்ச்சியைத் தவிர இது வேறு ஒன்றுமல்ல. மக்கள் பற்றி திட்டமிட்ட இழிவாடல் செய்யப்படுகின்றது. ஆனால் எதார்த்தத்தில் புலிகளின் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் போராடுவதால், அன்றாடம் ஒருவர் கொல்லப்படுகின்றனர். மக்கள் போராடவில்லை என்பதும், மக்கள் அடங்கியொடுங்கி வாழ்கின்றனர் என்பது சுத்த அபத்தமாகும். இது பற்றி விரிவாக கீழே பார்ப்போம். இதில் மற்றொரு சூழ்ச்சிமிக்க விடயம், புலிக்கு எதிராக தவறான வழியில் மக்களை நிறுத்துவதாகும். புலிகளுக்கும் மக்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடும், புலியெதிர்ப்பு கும்பலுக்கும் புலிக்கும் இடையிலுள்ள முரண்பாடும் வேறு வேறானவை. பொதுவாக புலிகளை விமர்சிப்பவர்களுக்கு ஜனநாயக உரிமையே பிரதான முரண்பாடான விடயமாகவுள்ளது. ஆனால் மக்களுக்கு அதுவல்ல. மக்களுக்கு தமது வாழ்வு சார்ந்த வாழ்க்கை பிரச்சினையில், புலிகள் தலையிடுவதும் சுரண்டுவதும் பற்றியதே அவர்களின் போராட்டமாகும். இந்த முரண்பாட்டை ஒட்டி, புலியெதிர்ப்பு கும்பல் முரண்படுவதில்லை. மாறாக புலியுடன் அதில் ஐக்கியப்பட்டு, புலிக்கு ஒத்த அதே சுரண்டல் கருத்தையே புலியெதிர்ப்பு கும்பல் கொண்டுள்ளது. மக்கள் புலியுடன் முரண்படுகின்ற உண்மையான ஜனநாயக கோரிக்கைகளை புலியெதிர்ப்பு கும்பல் திட்டமிட்டு முன்னெடுப்பதில்லை. மாறாக இருட்டடிப்பு செய்து, அதை திரித்து எடுபிடி அரசியல் செய்கின்றனர். இதை வலியுறுத்துகின்ற அரசியல் போக்குளை மாற்றுக் கருத்தாக கூட அவர்கள் எற்றுக் கொள்வதில்லை. மாறாக இருட்டடிப்பு செய்கின்றனர். மாறாக சேறடிக்கவே பிரயத்தனம் செய்கின்றனர்.


உங்கள் புலியெதிர்ப்பு அரசியலை சரியென்று எடுப்போம். புலியை அழிக்க, உங்கள் மொழியில் சொன்னால் புலிப்பாசித்தை அழிக்க ஏகாதிபத்திய தலையீடு நடக்கின்றது என்று வைப்போம். அப்போது புலியெதிர்ப்பு அணி அதை நிச்சயமாக ஆதரிக்கும். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்த்து புலிகள் அல்லது மற்றொரு குழு சண்டை செய்தால், நீங்கள் ஏகாதிபத்திய இராணுவ நடவடிக்கையில் பங்கு கொள்வீர்கள். இதையும் நீங்கள் மறுக்கமுடியாது. அங்கு என்ன செய்வீர்கள். நீங்கள் அரசியல் செய்வீர்கள். அத்துடன் இராணுவ நடவடிக்கையில் ஈடுபடுவீர்கள். புலியழிப்பில் (படுகொலையில்) ஈடுபடுவீர்கள். அப்போது மக்களுக்கு எதிராகவும் இயங்குவீர்கள். மக்களின் பிரச்சினைகள் வேறு. உங்கள் பிரச்சினைகள் வேறானவை. இதனால் தான் மக்கள் அல்லாத புலியழிப்பில் அரசியல் விபச்சாரம் செய்கின்றீர்கள்.


இதை உறுதிசெய்யும் கடந்தகால உதாரணங்கள் இரத்த சாட்சியத்துடன் எம்முன் காட்சியளிகின்றது. இந்திய ஆக்கிரமிப்பின் போது, இந்தியக் கூலிப்படைகள் புலியழிப்பு என்ற பெயரில் தமிழ் மக்களுக்கு எதிராக என்ன செய்ததோ, அதையேதானே இந்த புலியெதிர்ப்பு "ஜனநாயக" வாதிகளாகிய நீங்களும் செய்வீர்கள். இல்லையென்கின்றீர்களா! அப்படி என்றால் எப்படி? இதில் இருந்து எப்படி நீங்கள் மாறுபடுகின்றீர்கள்!. அதைச் சொல்லுங்கள்! ஏன் இந்தியா அதைவிடுங்கள், "ஜனநாயகத்தின்" பெயரில் உங்களைப் போல் பிரிட்டிஸ் உருவாக்கிய ஈராக்கிய "ஜனநாயக" கைக்கூலிகள், ஈராக்கில் என்ன செய்கின்றனர். எந்தவிதத்திலும் நீங்கள் அவர்களில் இருந்து வேறுபட்டவர்கள் அல்ல. மக்களுக்கு எதிராக ஒரு கூலிப்படையாக மட்டும்தான் செயல்படமுடியும். அதாவது பாசிச ஒழிப்பில் மக்கள் தலையிடாத அனைத்தும், கூலிப்படையாக மக்கள் விரோத உள்ளடத்தில் மற்றொரு பாசிட்டாகவே செயல்படமுடியும். ஆகவே இந்த புலியெதிர்ப்பு ஜனநாயக போராட்டங்கள் மக்களுக்கு எதிரானவையாக, ஏகாதிபத்தியத்துக்கு சார்பானவையாக உள்ளது.


இந்த அரசியலை மூடிமறைக்கவும், மக்களை ஏமாற்றவும், திடீர் "ஜனநாயக" மகுடம் சூட்டி விபச்சாரம் செய்யும் அம்புகளை ஏவுகின்றனர். அதையும் நாம் பார்ப்போம். "முன்பு பாரிசில் சபாலிங்கத்தைக் கொன்றபொழுதும் யாழ்பாணத்திலிருந்து முஸ்லீம்களை அடித்துத் துரத்திய பொழுதும் மேற்குநாடுகளில் கூடப் புலிப்பாசிசத்திற்கு எதிராக மூச்சுக்கூடக் காட்ட முடியாது. அப்படியான பயங்கரவாதம் நிலவிய சூழலிலேயே இற்றைக்கு ஐந்துவருடங்களிற்கு முன்னர் தேனீ இணையத்தளம் ஜனநாயக விரும்பிகளால் மிக அர்ப்பணிப்போடும் மிகுந்த அரசியற் கரிசனையோடும் தமிழ் சமூகத்தின் நலனில் வழுவாத அக்கறையோடும் ஆரம்பிக்கப்பட்டது. அது இன்று எண்ணற்ற பாசிச விரோத இணையத்தளங்களின் வருகையை அறிவித்த தேவதூதனாகவே விளங்கியது." ஆகா அருமையான கண்டுபிடிப்பு. கடந்த ஐந்து வருடத்தின் முன்பாக ஜனநாயகத்துக்கான போராட்டமே நடக்கவில்லை என்கின்றனர். தேனீ தேவதூதனாக வந்த பின்புதான், எல்லாம் ஜனநாயகமாகி பூத்து குலுங்குகின்றதாம். நம்புங்கள் இந்த மோசடியை.


நாம் எமது இணையத்தளத்தை கடந்த ஐந்து வருடத்துக்கு முன்பாகவே தொடங்கியிருந்தோம். இணையம் தொடர்பான அறிவித்தலை சமர் இதழ்களில். ஜனநாயகத்துக்கு எதிரான போராட்டத்தை இணையத்திலும் கூட நாம் இவர்களுக்கு முன்பாக செயல்படுத்தினோம். இதற்கு முன் பத்து வருடமாக சமர் இதழ் வெளியாகியது. புலிகளை கடுமையாக விமர்சித்தவர்கள். ஐரோப்பாவில் பல பத்து சஞ்சிகைகள் வந்தன. அதற்கு முன் மண்ணில் நிகழ்ந்த போராட்டங்கள் எண்ணற்றவை. பலர் தமது உயிரை இதற்காகவே இழந்தனர். சமாதானம், அமைதி என்ற புதிய சூழல், தொழில் நுட்பம் சார்ந்த இணையத்தின் வருகை, புதியதொரு சூழல். இந்த சூழலை புலிகளும் (இணையத்தை) வெற்றிகரமாக பயன்படுத்துகின்றனர். சூழல் சரியான அரசியல் வழியை காட்டுவதில்லை. அதுவும் பிற்போக்காகவே வழி காட்டுகின்றது. இதையெல்லாம் மறுத்து தேனீக்கு ஒளிவட்டம் கட்டுவது நிகழ்கின்றது. இந்த ஒளிவட்டமே உண்மையில் ஜனநாயக விரோதமானது. ஜனநாயகத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புலிகள் மட்டும் கொல்லவில்லை, புலியல்லாத தரப்பும் கொன்றது. 1986கு முன் புலியல்லாத தரப்பே, அதிக ஜனநாயகப் படுகொலைகளை நடத்தியது. தமக்கு ஒளிவட்டம் கட்ட ஜனநாயகத்துக்கான ஒரு போராட்டம் நடந்தது என்பதையே, முதலில் இவர்கள் மறுக்க வேண்டியுள்ளது. இதன் மூலம் முன்னாள் ஜனநாயகவிரோதிகள், இன்று புது அவதாரம் பெற்று திடீர் "ஜனநாயக" வாதிகளாக தம்மை காட்டி வேசம் போட முனைகின்றனர். இதன் மூலம் ஜனநாயகத்தை மக்களிடமிருந்து பிரித்து, அதற்கு சொந்த விளக்கத்தை வழங்க முனைகின்றனர். இதன் மூலம் கடந்தகால குற்றங்களையும், சமகால ஜனநாயக விரோத எடுபிடிப் போக்கையும் மூடிமறைக்க முடியும் என்று நம்புகின்றனர்.


புலிக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டம் மிகவும் வீறு கொண்டவை. அரசியல் ரீதியில் ஒருங்கிணைக்கப்படாத வகையில் இந்தப் போராட்டம் நடக்கின்றது. புலிகளின் பாசிசத்துக்கும் மற்றய இயக்கங்களின் அராஜகத்தை எதிர்த்த போராட்டம் கட்டுப்படுத்த முடியாத, அடிமைப்படுத்த முடியாத அளவிலுள்ளது. நாள் தோறும் கொலைகளையும், சித்திரவதைகளையும் அனுபவிக்கும் எமது சமூகத்தில், இது நடக்கும் போராட்டத்தையே எடுத்துக் காட்டுகின்றது. மக்கள் அடங்கியொடுங்கி இந்த அராஜகத்துக்கு அடிபணிந்து வாழ்ந்துவிடவில்லை. அப்படி வாழ்ந்திருந்தால், புலிகளின் கொலைக்களம் நாறிக் கொண்டிருக்காது. புலிப்பாசிசம் நாற்றமெடுக்கின்றது என்றால், மக்கள் அன்றாடம் போராடுகின்றனர். புலிகளின் அன்றாட நெருக்கடியே தான், மக்களை அடக்கிவைப்பதாக உள்ளது. மக்கள் மீதான புலியின் உத்தரவுகள் அனைத்தும், மக்களை அடங்கிப் போக கோருகின்றது. ஆனால் முடியவில்லை.


இந்த மக்களின் போராட்டத்தையே திடீர் புலியெதிர்ப்பு "ஜனநாயக" வாதிகள் மறுக்கின்றனர். அதைக் கொச்சைப்படுத்துகின்றனர். மக்கள் போராடத் தயாரில்லை என்று கூறியே, ஏகாதிபத்திய தலையீடு அவசியம் என்கின்றனர். மக்களின் போராட்டம் சொந்த வாழ்வு சார்ந்த போராட்டமாக இருப்பதால், அதன் தீவிர எதிரியான "ஜனநாயக" வாதிகள் அதை மூடிமறைக்கின்றனர். திடீர் "ஜனநாயக" த்தின் காவலாளிகள், இதை இல்லாத ஒன்றாக காட்ட முனைகின்றனர். இதனால் கடந்த ஐந்து வருடம் பற்றி மட்டும் பேச முற்படுகின்றது. சிலர் கருணாவுக்கு பின் ஜனநாயக வேஷம் போடுகின்றனர். வேறு சிலர் ஜெயதேவனுக்கு பின் ஜனநாயக வேஷம் போடுகின்றனர். முந்தியதை மறுப்பது, இவர்களின் அரசியல் விபச்சாரமாகவேவுள்ளது.


கடந்த ஐந்து வருடமாக என்ன நடந்தது. கடந்த ஐந்து வருடமாகத்தான் ஏகாதிபத்தியம் அதிகரித்த அளவில் நேரடியாக இலங்கையில் தலையிடுகின்றது. அந்த தலையீடு எதை விரும்புகின்றதோ, அதை புலியெதிர்ப்பு அணி தனது ஜனநாயகக் கோசமாக்குகின்றது. புலிகள் பற்றி மக்களிடம் எந்த அறிவும் இல்லாத மாதிரி காட்டி, கடந்த ஐந்துவருடமாக புலியெதிர்ப்பு கும்பலின் உழைப்பால் தான் மக்கள் சிந்திப்பதாக கூற முனைகின்றனர். தமிழ் மக்கள் இயக்கங்களையும் அதன் மக்கள் விரோதத்தையும் புரிந்த அளவுக்கு, புலியெதிர்ப்பு அணி புரிந்து கொண்டது கிடையாது. ஒவ்வொரு தமிழ் மகனும் இந்த புலியை எப்படி எதிர்கொண்டு உயிர்வாழ்வது என்பதில், சொந்த அனுபவம் உள்ளவர்கள். எதைப் பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், எங்கே பேச வேண்டும், எப்படி உழைத்து வாழ வேண்டும் என்று முன்னெச்சரிக்கைகளுடன் புலியைப் புரிந்து வாழ்கின்றனர். அவனுக்கு எதையும் மேலதிகமாக நீங்கள் கற்றுக் கொடுக்கவில்லை.


புலியெதிர்ப்பு கருத்துத் தளங்கள் என்ன செய்தன. மக்களால் இந்தப் பாசிசத்தை ஒழிக்க முடியாது என்று கூறி, ஏகாதிபத்தியத்துக்கு சார்பான ஒரு புலியெதிர்ப்பு எடுபிடி அணியை அணிதிரட்ட முனைகின்றனர். புலிகள் செய்து வந்தவை பற்றிய விபரங்களை, பகிரங்கமாக கொண்டுவந்தனர். உண்மையில் இவை மக்களுக்கு தெரிந்த விடயங்கள் தான். ஆனால் இதை பகிரங்கமாக கொண்டு வந்தனர். இந்த துணிச்சல் தான், புலியெதிர்ப்பு கும்பலை குழுவடிவமாக்க உதவுகின்றது. இதன் மூலம் ஏகாதிபத்திய கூலிக்குழுவாக பரிணமிக்கின்றது. உண்மையில் ஆரம்பத்தில் தேனீ போன்றவை கூட இந்த அடிப்படையைக் கொண்டிருக்கவில்லை என்பதும் உண்மை. கோட்பாடும் கொள்கையுமற்ற புலியெதிர்ப்பு, படிப்படியாக ஏகாதிபத்திய கோட்பாட்டை உள்வாங்கியது. அத்துடன் பலமான ஏகாதிபத்திய புலியெதிர்ப்பு அணிகளின் வலிமையினால், கோட்பாடற்ற புலியெதிர்ப்பு அணிகளை அடித்துச் செல்லப்படுகின்றது. இது தான் நடக்கின்றது.


புலி எதிர்ப்பு "ஜனநாயகம்", மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் இணையாத வகையில் மக்களுக்கு அன்னியமானது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் இணையாத அந்த ஜனநாயகம், அது என்ன? அதையாவது மக்களுக்கு விளக்குங்கள். நீங்கள் ஜனநாயகத்தின் பெயரில் உயர்த்தி வைப்பது எல்லாம் என்ன! ஏகாதிபத்தியமும் உலகமயமாதலும் தமது நோக்கில் எதை புலிக்கு ஒரு அடிப்படையான நிபந்தனையாக வைக்கின்றதோ, அதை நீங்கள் ஜனநாயகமாக காட்டி கோசம் போடுவதைத்தான் ஜனநாயகம் என்கின்றீர்கள். இதைத்தான் "புதியதொரு ஜனநாயக"த் தலைமை என்கின்றீர்கள். அது சரி நீங்கள் "புதியதொரு ஜனநாயக"த் தலைமை என்கின்றீர்களே, அந்த பழைய ஜனநாயகத் தலைமை என்று எதைக்காட்ட முனைகின்றீர்கள். அரசியல் புலுடாவா விடுகின்றீர்கள்.


"புலிப்பாசித்தை நிர்மூலமாக்கவல்ல ஓர் ஜனநாயக இயக்கத்தை உருக்குவதில் தேனீ மிக அர்ப்பணிப்போடும் கரிசனையோடும் செயற்பட வேண்டுமென்று, அது கால்பதிக்கும் ஆறாவது அகவையையில் முன்வைக்கிறது. இருந்த போதும் தமிழ் மக்களுக்குள்ளே புலிப்பாசிசத்தைத் தோற்கடிக்கவல்ல தலைமைத்துவம் ஒன்று உருவாக வேண்டும் என்பதில் தேனீ மிகுந்த அக்கறை உடையது" சரி அந்த அக்கறை எப்படிப்பட்டது என்பதையாவது, சொல்லியிருக்கலாமல்லவா! சூக்குமமாக வெற்றிடத்தில் புலம்புவதே நிகழ்கின்றது. அர்ப்பணிப்பு, கரிசனை என்கின்றீர்களே, அதுதான் என்ன?


புலிப் பாசிச தலைமையை ஒழித்தால் அதனிடத்தில் என்ன வரும்? மற்றொரு பாசிசம் வராமல் இருக்க என்ன அடிப்படை இருக்கவேண்டும். இதையாவது சொந்த அர்ப்பணிப்பில், கரிசனையில் தெளிவாக்குகின்றார்களா எனின் இல்லை. இந்தக் கேள்விக்கு திடீர் "ஜனநாயகவாதிகள்" யாரும் பதிலளிப்பதில்லை. பாசிசம் என்பது அந்தரத்தில் தொங்குவதில்லை. பாசிசம் சில அடிப்படையான சமூக பொருளாதார கூறுகளுடன் அதிகாரத்துக்கு வருகின்றது. படுபிற்போக்கான சுரண்டல் அமைப்பின் மொத்த விளைவு தான் பாசிசம். அதாவது மக்கள் தாம் சுரண்டப்படுவதை எதிர்க்கும் போது, ஏற்படும் கடுமையான ஒடுக்குமுறைகளின் விளைவே பாசிசம். மக்களை அடக்கியொடுக்குவது எதற்காக! மக்களின் உழைப்பை சுரண்டுவதற்கே. புலியெதிர்ப்புக் கும்பல் இதை எதிர்ப்பதில்லை. இந்த சமூகக் கூறு இயல்பாக புலிக்கு மாற்றாக உள்ளவர்களைக் கூட பாசிட்டாகவே உருவாக்குகின்றது. புலிப் பாசிசத்தை எதிர்ப்பவர்கள், பாசிசம் தோன்ற காரணமான சமூக பொருளாதார கூறுகளை எதிர்ப்பதில்லை. இதனால் பாசிசம் மறுபடியம் புலிக்கு பதில் மற்றொரு பெயரில் வந்துவிடும். நாங்கள் வரலாற்றை கவனமாக பார்த்தால், புலிகள் இடத்தில் புளாட், ரெலொ.. என்று யார் வந்திருந்தாலும் இதே பாசிசம் இருந்தே இருக்கும். இதை, அந்த இயக்கங்கள் தமது அதிகாரம் நிலவிய காலத்தில் தெளிவாகவே நிறுவியவர்கள். 1986 க்கு முன்னம் அதிக படுகொலைகளை செய்த இயக்கம் புளாட். ரெலோ ஆதிக்கம் செலுத்திய குறுகிய ஆயுள் காலத்தில், அதிக மக்கள் விரோத வன்முறையில் ஈடுபட்ட ஒரு இயக்கமாகும். இப்படி ஈ.பி.ஆர்.எல்.எப் ஜனநாயகத்தின் பெயரில் இந்தியக் கைக்கூலிகளாகி நடத்திய மனிதவிரோத செயல்கள், ஈரோஸ் திட்டமிட்ட சதிக் கொலைகளை புலிக்கு நிகராகவே செய்தவர்கள். இப்படி பாசிசத்தின் கூறை இந்த இயக்கங்கள் அனைத்தும் கொண்டிருந்தன. எப்படி இது சாத்தியமானது?


பாசிசத்தின் உள்ளடக்கம் அந்த இயக்கங்களின் அரசியல் வழியில் இருந்தன. இந்த அரசியல் வழியில் தான், இன்று புலியெதிர்ப்புக் கும்பல் தன்னை ஒழுங்கமைக்கின்றது. எந்த கொள்கை கோட்பாடும் கிடையாது. புலியெதிர்ப்பு என்ற ஒரே அடையாளம், அவர்களை கடிவாளம் போட்டு கும்பலாக இணைக்கின்றது. இதற்குள் மிதவாத பினாமிகளும், கொலைகாரக் கும்பலும் அக்கம்பக்கமாகவே ஒருங்கிணைகின்றனர். நாம் இந்த கும்பல் அரசியல் மக்கள் விரோதத் தன்மை கொண்டது என்பதை அம்பலப்படுத்தும் போது, எழுதுவதை நிறுத்தக் கோரி புலியெதிர்ப்புக் கும்பல் மிரட்டுகின்றது. புலிக்கு எந்தவிதத்திலும் இந்தக் கும்பல் குறைந்தவர்கள் அல்ல. ஆயுதமும் பணப்பலமும் இல்லாததால், இந்தளவில் தமது சொந்த மட்டுப்படுத்தபட்ட வக்கிரத்தையே காட்டுகின்றனர். எல்லாம் கிடைத்தால், புலியை மிஞ்சும் கொலைகாரக் கும்பலாக மாறிவிடும். இதை மறுக்கும் எந்த அரசியல் அடிப்படையும், சமூகம் சார்ந்த கோட்பாடும் கிடையாது.


சந்தர்ப்பவாத புலியெதிர்ப்பே இந்த புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் அடிப்படை. தேனீ இணையம் ஜே.வி.பியை இனவாதக்கட்சி அல்ல என்று கடந்தகாலத்தில் தெரிவித்து வந்தது. ரி.பி.சியிலும் இப்படி பல வண்ணமாக புலம்பியவர்கள். ஆனால் அண்மையில் ஜே.வி.பி பற்றி வாய்விட்டு ரி.பி.சியில் நக்கலாக தேனீ ஆசிரியர் சிரிக்கின்றார். ஜே.வி.பி சொல்லித்தான் கண்காணிப்புக் குழுத் தலைவரை மாற்றியதாக, அவர்களின் இனவாத அரசியல் செய்தியைச் சொல்லி நக்கலாக சிரிக்கின்றார். சந்தர்ப்பவாத இனவாத அரசியல் பேசும் ஜே.வி.பியும், சந்தர்ப்பவாத புலியெதிர்ப்பு அரசியல் செய்யும் உங்களுக்கும் இடையில் அதிக வேறுபாடு கிடையாது. புலியெதிர்ப்பில் தான் இந்த இனவாதிகளை, கொம்பு சீவி ஜனநாயகவாதிகளாகக் காட்டியவர்கள் யார்?


இந்த ஜே.வி.பி பராளுமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் நாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறும் புலம்பல்கள், அரசியல் நடிப்பில் புலிக்கு நிகரானது. இதையெல்லாம் உண்மையாக காட்டி முன்னிலைப்படுத்திய ரி.பி.சி முதல் தேனீ வரையான புலியெதிர்ப்பு "ஜனநாயக" வாத கும்பல்கள் தான். இன்று அவர்கள் இனவாதிகளாக சிண்டுபிடிக்கும் புலிப்பாணி அரசியல், நடுச் சந்தியிலேயே புலிக்கு நிகராகவே நாறத் தொடங்கியுள்ளது. இவர்களை தோளில் தூக்கி ஆடிய புலியெதிர்ப்பு கும்பல் தம்மை "புதியதொரு ஜனநாயக" தலைமை என்கின்றனர், இது எமக்குத் தேவைதானா?


புலிப் பாசித்தை தோற்கடிக்கவல்ல அந்த "புதியதொரு ஜனநாயக" தலைமை எப்படி, அதைத் தோற்கடிக்கும். அதைச் சொல்லுங்கள். நேர்மையாக அதைச் சொல்லுங்கள். உங்கள் திட்டங்களை, விருப்பங்களை மூடிமறைக்காதீர்கள். ஏகாதிபத்தியத்திடம் மகஜர் கொடுத்து, மண்டியிட்டு எதற்காக இரந்து நிற்கின்றீர்கள். இந்தக் கூலிக்கும்பல் எடுபிடி அரசியல் மக்களுக்கு என்னதான் செய்யும்? ஏகாதிபத்தியம் நெற்றிக் கண்ணைத் திறந்தால் என்ன தான் நடக்கும்? ஜனநாயகம் வருமா? எப்படி? இப்படி ஏகாதிபத்தியத்திடம் மண்டியிடுவதற்கு வெளியில் எந்த செயல்பாடும் இவர்களிடம் கிடையாது. ஜெயதேவன் கூறியது போல் எம்மிடம் எண்ணையில்லை, அதனால் ஏகாதிபத்தியம் ஜனநாயகத்தின் பெயரில் அங்கு நேரடியாக தலையிடாது. நேரடியாக தலையிட வைக்க நாம் என்ன செய்யவேண்டும். கொஞ்சக் கூலிக்கும்பலை மக்களின் பெயரில் அணிதிரட்டி, ஏகாதிபத்தியத்தை தலையிடக் கோரும் போராட்டங்களை நடத்தவேண்டும். ஏனென்றால் புலியிடம் ஜனநாயகத்தைப் பெற, வேறு எதுதான் வழி. இதைத் தான் இந்த புலியெதிர்ப்பு "ஜனநாயகவாதிகள்" செய்கின்றனர். இல்லை என்கின்றீர்களா! பிரிட்டிஸ் ஏகாதிபத்திய பராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர்ச்சியாக நடக்கும் சந்திப்புகள் எதற்காக நடக்கின்றன? இவை அனைத்தும் மக்களுக்கு எதிரான சதிகளை அடிப்படையாக கொண்டவை. ஏகாதிபத்தியம் இலாபமின்றி எதையும் செய்வதில்லை. புலிக்கு பதிலாக ஏகாதிபத்திய சுரண்டலை கண்காணிக்கும் அவர்களின் தரகர்களாக இருக்க ஆசைப்படுபவர்கள் தான், இந்த புலியெதிர்ப்புக் கும்பல்.


ஈராக்கில் என்ன நடக்கின்றது என்பதையே நாம் பார்க்கலாம். ஜெயதேவன் போன்ற கும்பல்கள் தான், கூலிக்கும்பலாக ஏகாதிபத்திய ஆட்சிக்கு சார்பாக ஈராக்கில் ஆட்சியில் அமர்ந்துள்ளனர். இதில் சிலர் முன்பு பிரிட்டனில் ஈராக்கில் மறுக்கப்பட்ட ஜனநாயகம் பற்றி பேசியவர்கள். இவர்களின் ஜனநாயகம் ஈராக்கில் பெண்களை கற்பழிப்பதும், அங்குள்ள ஆண்களை சித்திரவதையூடாக பாலியல் வதைக்கு உட்படுத்துவதும், மக்களை கொன்று குவிப்பதும் தான் இவர்களின் ஜனநாயகமாகிவிட்டது. இதற்கு பதிலாக ஈராக்கிய வளங்களும், ஈராக்கிய மக்களின் உழைப்பும் சூறையாடப்படுகின்றது. இதைத்தான் நாளை ஏகாதிபத்தியம் நடத்தும் எந்த ஜனநாயக ஆக்கிரமிப்பின் பின்னாலும் நிகழும். இந்த புலியெதிர்ப்புக் கும்பல் தான், கைக்கூலி குண்டர்களாக பவனிவருவார்கள்.


இல்லையென்றால் கூறுங்கள் எப்படி புலிப் பாசித்தை ஒழிக்கப் போகின்றீர்கள் என்று?. புலிப்பாசிசத்தை ஜனநாயகத்தின் பெயரில் ஒருநாளும் ஒழிக்க முடியாது. பாசிசம் என்பது சுரண்டும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி. இதேபோல் தான் ஜனநாயகம் என்பதும் சுரண்டும் வர்க்கம் அமைதியாக சுரண்ட தேவைப்படும் கருவி. சுரண்டல் நெருக்கடிக்குள்ளாகும் போது அமைதி கலைந்து பாசிசம் உருவாகின்றது. ஒன்றின் நீட்சியாக மற்றொன்று உள்ளது. ஜனநாயகத்தின் பெயரில் பாசிசத்தை ஒழிப்பது என்பது, மற்றொரு பாசிசமாகவே அமையும். அதாவது புலிக்கு பதில் மற்றொரு பாசிசம்.


ஜனநாயகம் என்பது எங்கும் எப்போதும் வர்க்கம் சார்பானது. ஒரு வர்க்கத்தின் அதிகாரத்தை நிலைநாட்டும் வடிவம் தான் ஜனநாயகம். இதற்கு வெளியில் ஜனநாயகத்துக்கு விளக்கம் கிடையாது. குறிப்பாக கூறப்போனால் இந்த சமூக அமைப்பில் சுரண்டும் சுதந்திரத்தைத் தான், ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் என்கின்றனர். சுரண்டுவதை மறுக்கும் அனைத்து வடிவங்களையும், ஜனநாயகத்துக்கு விரோதமானது என்கின்றனர். சுரண்டுவதை மறுப்பது, சுதந்திரத்துக்கு விரோதமானது என்கின்றனர். ஜனநாயகம் என்பது அடிப்படையில் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாகவே உள்ளடக்க ரீதியாகவுள்ளது. அனைவருக்கும் உலகில் ஜனநாயகம் இருந்தால், அனைவருக்கும் சுதந்திரம் இருந்தால், அந்த சொல்லுக்குரிய அர்த்தமே இல்லாது போய்விடுகின்றது. உண்மையில் அந்த சொல்லே இல்லாது போய்விடுகின்றது.


எதார்த்தத்தில் ஜனநாயகம், சுதந்திரம் ஒரு பகுதிக்கு மறுக்கப்படும் போது தான், அது உயிர் வாழ்கின்றது. இதுவே இன்றைய உலகின் எதார்த்தம். எதை ஒவ்வொரு மனிதனின் உரிமையாக காட்டியபடி, அது மற்றவனுக்கு எதிராக மறுக்கப்படுகின்றதோ, அதைக் கோருவது அவர்களையே அம்பலப்படுத்துவதாக உள்ளது. ஜனநாயகம், சுதந்திரம் என்ற கோரிக்கை என்பது, பரந்துபட்ட மக்களுக்கு மறுக்கப்படுவதை அம்பலப்படுத்தி அதைக் கோரி போராடும் போது, அதன் பெயரில் அந்த மக்கள் அடக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வருவதைக் கோருகின்றது. கோரிக்கை அதை இல்லாது ஒழிக்க கோருகின்றது. அதாவது அனைவருக்கும் சுதந்திரம், அனைவருக்கும் ஜனநாயகம் என்ற உள்ளடக்கத்தில், அது சமூகத்துக்கு கிடைக்கும் போது அந்த சொல்லுக்குரிய உள்ளடக்கமே அர்த்தமிழந்து போகின்றது. ஆகவே ஜனநாயகம், சுதந்திரம் என்பன, இரு எதிர்நிலை முரண்பட்ட கூறுகளில் ஒன்றையொன்று எதிர்த்த போராட்டத்தில் செயற்படுகின்றது. இதன் முரண்நிலைத் தன்மை தான், இதன் மையக் கூறு.


உண்மையில் பரந்துபட்ட மக்களின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மறுப்பவன் தான், சுதந்திரத்தினதும் ஜனநாயகத்தினதும் காவலனாக உள்ளான். இந்த சுதந்திரம் ஜனநாயகம் என்ற உள்ளடக்கம் தான், அதை மறுப்பவனுக்கு எதிராக பயன்படுத்தும் கருவியாகின்றது. இது சமூக பொருளாதார உறவுகளில் ஏற்படுகின்றது. சமூக பொருளாதார உறவுகளில் மற்றவன் வாழ்வை சூறையாட உதவுவது இந்த ஜனநாயகமும் சுதந்திரமும் தான். இந்த சூறையாடல் தான், சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை மற்றவனுக்கு மறுத்து விடுகின்றது. மக்கள் ஜனநாயகம் சுதந்திரத்தின் பெயரில் தமக்கு மறுக்கப்படும், ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்தை எதிர்நிலையில் கோருவது ஒரு முரண்நிலைத் தன்மையில் நிகழ்கின்றது. இது இந்த சமூக பொருளாதார அமைப்பில் முரணற்ற வகையில் தீர்க்கப்படவில்லை. சுரண்டும் வர்க்கத்தால் ஜனநாயகத்தின் பெயரில் உருவாக்கப்படும் ஆளும் வர்க்கங்கள், பரந்துபட்ட மக்களுக்கு எதிராக இயங்கி, உலகெங்கும் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மறுக்கின்றனர். இதுவே உலக எதார்த்தம்.

 

ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கத்துக்கு, உலகில் எந்த ஒரு அமைப்பிலும் ஜனநாயகம் இருப்பதில்லை. இருப்பதாக நம்புவது, காட்டுவது சமூகங்களின் கொந்தளிப்பை சிதைப்பதற்காகத்தான். ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் போராடி வெல்வதைக் கூட, அதாவது ஜனநாயக பூர்வமாக கிடைத்ததைக் கூட அமுல்படுத்த அந்த ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. இந்த சமூக அமைப்பில் பெரும்பான்மையான மக்களின் விருப்பங்கள் மதிக்கப்படுவதில்லை. சொத்துடைய சுரண்டும் வர்க்கத்துக்குத் தான் ஜனநாயகம், சொத்தைச் சுரண்டுவதற்கே ஜனநாயகம். இதற்கு வெளியில் ஜனநாயகம் வாழவில்லை.


நீங்கள் ஜனநாயகம் என்ற பெயரில் எதை கூற முனைகின்றீர்கள். மக்கள் சுரண்டப்படுவதைத் தான், அதை ஆளுகின்ற வர்க்கத்தின் அடக்குமுறை ஆட்சியைத் தான் ஜனநாயகம் என்கின்றீர்கள். உயர்ந்த பட்சம் வாக்கு போடுவதை ஜனநாயகம் என்கின்றீர்கள். இதை உறுதிசெய்து எழுதும் நீங்கள் "மறுபக்கத்தில் இன்றைய ஒப்புவமை இல்லாத வேகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பூகோளமயமாக்கலானது எந்த இனத்தினதும் தனித்துவத்தை சுக்குநூறாக்கியிருக்கிறது." என்று கூறுவதன் மூலம், என்னதான் சொல்ல முனைகின்றீர்கள். தனித்துவத்துக்கான போராட்டம் தவறு என்றா சொல்லுகின்றீர்கள். புலியெதிர்ப்பு கண்ணை மறைக்க, ஏகாதிபத்தியத்துக்கு எதிரான தனித்துவமான போராட்டங்களையே தவறு என்று கூற முற்படுவது இங்கு அரசியலாகின்றது. புலிகளின் போராட்டம் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானதல்ல. ஏகாதிபத்தியத்துக்கு சார்பானவை. ஆனால் அதை குறுகிய புலியெதிர்ப்பு ஜனநாயகத்தில் எதிர்த்து குலவும் போது, தனித்துவமான போராட்டத்தையே தவறானதாக காட்டிவிடுவது நிகழ்கின்றது.


உலகமயமாதல் மக்களுக்கு எதிராக எதைச் செய்தாலும், உலகில் உள்ள மக்கள் அதற்கு எதிராக போராடுகின்றனர். அப்போராட்டங்கள் அனைத்தும், மக்களின் வாழ்வியல் சார்ந்த குமுறலாக வெளிப்படுகின்றது. நீங்கள் அதை "சுக்குநூறாக்கியிருக்கிறது" என்று கூறிக் கொண்டு, ஏகாதிபத்தியத்தின் பின்னால் ஜனநாயக கோசம் போட்டுச் செல்வது மக்களுக்கு விரோதமானது. புலிகளால் பாதிக்கப்படும் மக்களுக்கு எதிரான, மற்றொரு மக்கள் விரோதம் தான் இவை. இதற்கு தேனீயும், ரி.பி.சியும் தலைமை தாங்குகின்றது என்பது உண்மை தான். அதை நீங்கள் "புதிய தலைமை" என்றால் அதுவும் உண்மை. ஆனால் இவை மக்களின் உண்மையான சமூக பொருளாதார உணர்வுகளைச் சார்ந்து தலைமை தாங்க முற்படவில்லை. மக்களின் உண்மையான தேவைகளை அடிப்படையாக கொண்டு, ஜனநாயகத்தை முன்னெடுக்கவில்லை. அதை மறுத்து செயலாற்றுகின்றது. இதை எதிர்த்து "சுக்குநூறாக்கி"ன்ற மனித வாழ்வை, புலிகளைப் போல் நலமடிக்கின்றீர்கள் அவ்வளவே. இதை நீங்கள் மறுக்க முடியாது. ஏகாதிபத்தியம் "சுக்குநூறாக்கும்" மக்களின் வாழ்வின் அடிப்படைகளை விசுவாசமாக ஆதரிப்பதே, புலி பாசித்தை ஒழிக்கும் என்கின்றீர்கள்.


இதைத்தான் நீங்கள் வெட்கத்தைவிட்டு விபச்சாரமாகவே செய்கின்றீர்கள். "தமது மொழி கலாச்சாரம் தேசம் என்று பெருமைகொண்ட எந்தத் தேசமும் உலகநாகரீகம் என்ற சூறாவழியில் சருகுகளாகப் பறக்கின்றன. இன்று அமெரிக்க அரசாங்கத்திற்கே சுயநிர்ணய உரிமை கிடையாது. சுயநிர்ணயம் தாயகக் கோட்பாடு என்ற புலியின் அலம்பல் எதுவும் ஏற்றுக்கொள்ள முடியாத காலங்கடந்த உதவாத சொற்பதங்களாகும்" இது எதைக் காட்டுகின்றது. உலகமயமாதலுக்கு மண்டியிட்டு தலைவணங்குகின்றது. உலகில் நடக்கும் உலகமயமாதலுக்கு எதிரான போராட்டத்தை கேவலம் செய்கின்றது. மக்களுடன் இணைந்து நிற்காத தமது அரசியல் பொறுக்கித்தனத்தை நிர்வாணமாக்குகின்றது. புலியெதிர்ப்புக் கும்பலின் அரசியல் உலகமயமாதலை ஆதரிப்பது தான். மொழி, பண்பாடு, கலச்சாரம், தேசம் என்று சொல்வதற்கு எதிராக உலகில் உலகமயமாதலை முன்னெடுக்கும் ஏகாதிபத்தியமும், அதன் எடுபிடிகளும் மட்டும்தான் உள்ளனர்.


மக்கள் இனம் கண்டறிந்த மொழிகள், பண்பாடுகள், வாழ்வின் அடிப்படைகளை, சமூக உறவுகள் என அனைத்தையும், உலகைச் சூறையாடும் தனிமனிதக் குதர்க்க பண்பாடு அழித்தொழிப்பதை எப்படி நாம் அனுமதிக்க முடியும். சமூகத்தில் காணப்படும் அனைத்தும் தீமையானவையல்ல. நன்மையானதும் உண்டு. மனித இனம் தான் தனக்கு தீமையானதை ஒழிக்க வேண்டும். நன்மையானதைப் பாதுகாக்க வேண்டும். இது உலகம் தழுவிய மொத்த மக்களின் கடமை. உலகமயமாதல் இதைச் செய்யவில்லை. மொத்த மக்களுக்கு தீமையழிக்கவல்ல ஒன்றை உருவாக்குகின்றது. புலியெதிர்ப்புக் கும்பல் ஏகாதிபத்தியத்தின் எடுபிடிகளாக மாறி, உலகமயமாதலை புலியெதிர்பின் பின்னால் முன்வைக்கின்றனர்.


இதை புலியின் பெயரால் செய்கின்றனர். புலிகள் கோருவது சுயநிர்ணயமே கிடையாது. இது இந்த திரோஸ்க்கிய அன்னக்காவடி திரித்துக் காட்டுவதே அவர்களின் அரசியல் வக்கிரமாகும். புலிகள் முன்வைப்பது தேசத்தின் சுயநிர்ணயத்தை அல்ல. மாறாக நீங்கள் எப்படி ஏகாதிபத்திய உலகமயமாதலை ஆதரிக்கின்றீர்களோ, அதையே அவர்களும் கோருகின்றனர். இதில் தமது குழுவின் சொகுசான வாழ்வை நியாயப்படுத்தி அதிகாரத்தைக் கோருகின்றனர். இதைத் தமிழ் தேசியத்தின் பெயரில், சுயநிர்ணயத்தின் பெயரில் மக்களின் முதுகின் மேல் அவர்கள் வைக்கின்றார்கள். நீங்கள் ஜனநாயகத்தின் பெயரில் இதைச் செய்கின்றீர்கள். உண்மையான சுயநிர்ணயம் என்பது ஏகாதிபத்தியத்துக்கு எதிரானது. உங்களைப் போன்றவர்கள் உலகமயமாதலின் எடுபிடிகளாகி, உரிமைகளை சருகுகளாக விளங்கி அதை எட்டி உதைக்க வெளிக்கிட்ட பின்பாக, சுயநிர்ணயத்தையே திரிப்பது அவசியமாகிவிடுகின்றது. ஏன் நீங்களே சுயநிர்ணயத்தை மறுக்கும் விற்பன்னராகவே மாறிவிடுகின்றீர்கள். அரசியல் அற்பத்தனத்தில் உலகமயமாதலை நக்கிப்பிழைக்க வெளிக்கிட்டால், இப்படித்தான் புலம்பல் தொடங்குகின்றது.


அமெரிக்காவுக்கே சுயநிர்ணயம் கிடையாது, ஆகவே மனிதர்களுக்கு சுயநிர்ணயமாவது மண்ணாங்கட்டியாவது என்கின்றனர். பெண்களே ஆண்களிடம் சுயநிர்ணயத்தை கோராதீர்கள், ஏனென்றால் ஆண்களுக்கே சுயநிர்ணயம் கிடையாது. இதுதான் இதன் சாரம். ஆகவே பெண்கள் நீங்கள் ஆண்களின் அடிமையாக இருங்கள். இது உங்கள் பிறப்பின் விதி என்கின்றனர். உலகமயமாதல் உலகைச் சூறையாடுவதால் சமூகங்களின் தனித்துவத்தை அழிக்கின்றது என்றால், அதை நாங்கள் ஆதரிக்க வேண்டும் என்று இந்த தேனீயில் புலம்பும் ஞானி கூறுகின்றார். எனவே புலியை அழிக்க ஏகாதிபத்தியம் ஜனநாயகத்திடம் முறையிட வேண்டும் என்று இந்த வெள்ளாடு கூறுகின்றது. உலகை சூறையாட ஜனநாயகத்தின் பெயரில் ஏகாதிபத்தியம் நடத்தும் ஜனநாயக விரோத அழித்தொழிப்புகள் சரியானவை என்பதையே இச்செய்தி கூறுகின்றது. இதனால் புலிகளை அழிக்க அவர்களுடன் நாம் கைகோர்ப்பது அவசியம் என்கின்றனர். அமெரிக்காவுக்கே சுயநிர்ணயம் கிடையாது. இந்நிலையில் சுயநிர்ணயத்தை கோருவது மக்கள் விரோதம் என்கின்றனர். அதையே இந்த வெள்ளாடுகள் பாசிசம் என்கின்றனர்.


உண்மையில் புலியெதிர்ப்புக் கும்பல் என்பதால் மட்டும் இவர்களுக்கு எதிராக நாம் போராடவில்லை. மாறாக உலகமயமாதல் ஆதரவு மக்கள் விரோதக் கும்பல் என்பதால், இவர்களுக்கு எதிராக போராட வேண்டியுள்ளது. இந்தக் கும்பல் புலியின் பாசிசத்தை பயன்படுத்தி புலியெதிர்ப்பு கும்பலாகியது. இதன் மூலம் உலகமயமாதலின் எடுபிடி அரசியலை முன்வைக்கின்றது. இந்த அரசியல் உண்மையை புரிந்து கொண்டு, புலியெதிர்ப்புக் கும்பலில் உள்ளவர்கள் அரசியல் ரீதியாக விலகுவது அவசியமானது. அரசியல் என்பது புலிகளை அடிப்படையாக கொண்டு பகுத்தாய்வதல்ல. இவர் கூறுகின்றார் "இன்றைய புலிப்பாசிசத்தின் நெட்டூரங்களின் முன் நின்று போராடுபவர்களையே எதிர்கால வரலாறு அங்கீகரிக்கும். அவர்களே தமிழர்களின் நம்பிக்கையைத் தன்னகத்தே வென்ற தலைவர்கள் ஆவார்கள்" புலிப்பாசிசத்தை எதிர்த்து இனவாதிகள், பேரினவாத அரசு, அரசு சார்பு கூலிக்குழுக்கள், இந்தியக் கைக்கூலிக் குழுக்கள், ஏகாதிபத்திய சார்புக் குழுக்கள், ஏகாதிபத்தியம் வரை புலியை எதிர்க்கின்றனர். இது எப்படி மக்கள் தலைமையை உருவாக்கும்.


மக்கள் தமது வாழ்வு சார்ந்த சமூக பொருளாதார சுயநிர்ணயத்தைக் கோருகின்றனர். தங்களைத் தாங்களே ஆளும் ஜனநாயக உரிமையைக் கோருகின்றனர். தமது உழைப்பு சுரண்டப்படுவதை எதிர்த்து நிற்கின்றனர். சமூக உயிரியாக, மற்றவனுக்கு வஞ்சகம் செய்யாத மனிதத்துவத்தை கோருகின்றனர். தமது சமூக பொருளாதார வாழ்வின் நலன்களை கோருகின்றனர். இந்த அடிப்படையில் போராடாத எந்த தலைமையும், மக்கள் தலைவர்களாக வருவதில்லை. மாறாக எடுபிடிகளாக, கூலிக் கும்பலாக, மக்கள் விரோதிகளாகவே உருவாகின்றனர். இது தேனீ போன்ற புலியெதிர்ப்பு குழுக்களின் தலைவிதி கூட. புலிகள் வேறு மக்கள் வேறு என்பதும், புலியின் கோரிக்கை வேறு மக்களின் கோரிக்கை வேறு என்பதை நாம் புரியாத வரை, எமது அரசியல் மக்கள் விரோதத் தன்மை கொண்டதாகவே அமையும். மக்கள் பங்கு கொள்ளாத புலிக்கு எதிரான கும்பலின் நடவடிக்கைகள், மக்களின் நலனுக்கு முரணானது என்பதை புரியாத வரை, அவையும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவை தான். எந்த ஜனநாயகக் கோரிக்கையிலும் மக்கள் பங்கு கொள்ளாத வரை, மக்களின் சமூக பொருளாதார வாழ்வுடன் இணைந்ததாக இல்லாதவரை அவை பிற்போக்கான பாத்திரத்தையே மக்களுக்கு எதிராக வகிக்கின்றது.


குறிப்பு: ஜனநாயகம் பற்றி அதிகம் இன்று பேசப்படுவதால், அது திரிக்கப்படுவதால் கோட்பாட்டு ரீதியாக ஜனநாயகத்தை விளக்குவது அவசியமாகிவிடுகின்றது. அடுத்த கட்டுரை அதை ஆராயவுள்ளது.


17.03.2006


பி.இரயாகரன் - சமர்