பாசிசம் தனக்கு அரசியல் முலாம் ப+சக்கூடிய ஒருவர் மூலம் களத்தில் இறங்கியுள்ளது. எதிராளிக்கு எதிரான தமது பாசிச நடத்தையை, முதல் முதலாக ஜனநாயகத்தின் ஒரு கூறாகத் காட்டத் தொடங்கியுள்ளது. இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறுவதும் புலம்புவதும் நிகழ்கின்றது. ஜெயதேவனுக்கு எதிராக ஈழம் வெப் இணையத்தில் வெளிவந்த ஒரு கட்டுரைக்கு எதிராக தேனீ இணையத்தளத்திலும், ரி.பி.சியிலும் விவாதிக்கப்பட்டது. சபேசன் என்பவரால் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை, அவரின் சொந்தப் பெயரில் சொந்த இணையத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒருபுறம் சபேசன் புலிப்பினாமியாக நாய் வேசம் போட்டுக் குலைக்க, ஜெயதேவன் கும்பல் பனங்காட்டு நரி வேஷம் போட்டு ஊளையிடுவதுமே விவாதமாகியது.
சபேசன் என்பவர் புலியின் பாசிசத்தையே ஜனநாயகமாக சோடிக்கும் அடிமை சேவகத்தை விசுவாசமாக தொடங்குகின்றார். அறிவு நேர்மையற்ற, பகுத்தறிவற்ற சொந்த பசப்பல்களுடன் பாசிசத்தையே ஜனநாயக நடைமுறையாக திரிக்கின்றார். ஜனநாயகமே என்று மூக்கால் சிந்தி புலம்பும் ரி.பி.சியும், அது சார்ந்த கும்பலும், இதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாது திணறுகின்றனர். சொந்த அரசியலே இந்த எல்லைக்குள் இருப்பதால், அந்த அரசியல் வரையறையை வைத்து இவர்களின் ஜனநாயக வேஷத்தை பினாமி புலி சபேசன் திணறடித்து விடுகின்றார்.
புலிக்கு பினாமியாக எழுதும் சபேசன் ஜெயதேவனை விளித்து "ஒரு காலத்தில் நீங்கள் எம்மவர் " என்று அறிவதில் இருந்து, தனது பினாமிய கூலித் தொழில் பற்றி அவருடன் உரையாட விரும்புகின்றார். இங்கு சபேசன் "எம்மவர்" என்பதன் ஊடாக, ஒரு கும்பலின் செயல்பாட்டையே தமக்கிடையில் அடையாளம் காண்கின்றார். பரந்துபட்ட மக்களிடம் இருந்து வேறுபட்ட, அதேநேரம் அவர்களுக்கு எதிராக இயங்கும் ஒரு கும்பல் தான் தாங்கள் என்பதை முதலில் இந்த விளிப்பின் ஊடாகவே அடையாளப்படுத்துகின்றார். ஏன் ஐயா எம்மை விட்டு போனீர்கள் என்று எச்சரிக்கையுடன் ஒப்பாரிவைக்கத் தொடங்குகின்றார்.
சபேசன் தனது ஒப்பாரியில் "மெத்தப் படித்தவர் என்றும் ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்திருப்பவர் என்றும் தெரிந்து கொண்டேன். சில மாதங்களுக்கு முன்பு தமிழீழத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தீர்கள் எனவும் கேள்விப்பட்டேன். அதன் பிற்பாடு நீங்கள் இடம் மாறி விட்டதையும் எமது விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலைகளில் ஈடுபடுவதையும் கவனித்து வருகிறேன்." என்கின்றார். சரி சபேசன், 'எமது' விடுதலைப் போராட்டத்தை மழுங்கடிக்கும் வேலை என்கின்றீர்களே அது என்ன? எப்படி மழுங்கடிக்கின்றார். அதை ஏன் உங்களால் சொல்ல முடியவில்லை. 'எமது' விடுதலைப் போராட்டத்தை என்கின்றீர்கள். எமது போராட்டம் என்பது எதைக் குறிக்கின்றது. ஆம் அது மக்களுக்கு எதிரான புலிப்போராட்டதைக் குறிப்பிடுவதால் தான், 'எமது' என்று உரிமையுடன் 'எம்மவர்' நோக்கி பிதுங்கி வெளிப்படுகின்றது.
விடுதலைப் போராட்டம் என்றால் என்ன? புலியும் புலிக்கும்பலும் தாம் விரும்பியதை அடைவதா விடுதலைப் போராட்டம். மக்களின் அனைத்து ஒடுக்குமுறையையும் ஒழிக்காத விடுதலைப் போராட்டம் பொய்யானது போலியானது. மக்களை ஏமாற்றி சிலர் நலனைப் பேணுவது மோசடித்தனமாகும். தமிழீழத்தில் ஒரு மனிதனுக்கு என்ன உரிமை உண்டோ, அந்த உரிமை எல்லா மக்களுக்கும் இருக்கவேண்டும். புலிகள் இதை விடுதலைப் போராட்டம் என்ற பெயரில், அதை மக்களுக்கு மறுக்கின்றனர்.
ஜெயதேவன் உங்களுடன் இருந்து ("எம்மவர்") எதை விடுதலைப் ('எமது') போராட்டத்துக்குச் செய்தாரோ, அதைத்தான் இப்பவும் செய்கின்றார். மக்களுக்கு எதிராக உங்களைப் போல் மக்களை ஏமாற்றிபடியே தான் மக்கள் விரோத அரசியல் செய்கின்றார். நீங்கள் மக்கள் விரோத அரசியலில் புலிகள் என்றால், அவர் அதில் கைதேர்ந்த ஏகாதிபத்திய புலியாகின்றார். இங்கு அவர் புலிப்பினாமியாக அல்ல, ஏகாதிபத்திய பினாமியாக உள்ளார். ஏகாதிபத்தியத்துக்கு விசுவாசமாக வாலாட்டி, அவர்களைச் சுற்றி விசுவாசமாக வலம் வருகின்றார். உங்களுடைய அதே அரசியல் அதே நோக்கம், ஆனால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்து நிலைமைக்கு ஏற்ப மற்றொரு புலியாகவே பரிணமிக்கின்றார். மக்களுக்கு எதிரான அரசியலில் ஈடுபடுவதில், அதீதமான ஒற்றுமையுடன் புலிகளுடன் களத்தில் இறங்குகின்றனர். கருணா புலியில் இருந்து பிரிந்து எப்படி மற்றொரு புலிக் கருணாவாக இருக்க முடிந்ததோ, அதையே இவரும் செய்கின்றார். ஆனால் நாகரிகமாக அவர் செயல்பட, நீங்கள் காட்டுமிராண்டித்தனமாக அதையே செய்கின்றீர்கள். அதைத்தான் அவர் புலிக்குள் கோரினார். புலிக்கும் அவருக்குமான முரண்பாடே அரசியலில் அல்ல, மக்களை ஏமாற்றுவதில் எந்த மாதிரியான நடைமுறையை கைக்கொள்ளவேண்டும் என்ற நடைமுறை தொடர்பாகவே இருந்துள்ளது. ஜெயதேவன் என்றைக்கும் புலியின் அரசியலில் இருந்து எப்படி வேறுபடுகின்றேன் என்பதை சொல்லமுடியாது. புலியுடன் அணுகுமுறை தொடர்பான வேறுபாடே இங்கு உள்ளது. அதை மட்டுமே, இவரால் சொல்ல முடிகின்றது. மெத்தப்படித்ததாக கூறும் நீங்களும் சரி, படித்தாக நம்பும் பனங்காட்டு நரியான அந்த ஜெயதேவனும் சரி, சமூகத்துக்கு என்ன செய்கின்றார்கள். சமூகத்தின் பொருளாதார வாழ்வை அழிக்கும், இரத்தம் குடிக்கும் அட்டை போல் உறுஞ்சும் அரசியலையே செய்கின்றார்கள். மக்களின் வாழ்வு சார்ந்த, அவர்களின் பொருளாதார இருப்பு சார்ந்த எந்த அரசியலையும் இவர்கள் செய்யவில்லை. மாறாக அதை குழிபறிக்கும் கிடங்கையே, அரசியலாக வெட்டுகின்றனர். புலி என்றும், புலிக்கு எதிரென்றும் இதற்குள்ளேயே சுற்றிச்சுற்றி அரசியல் செய்கின்றனர். இதுவே இன்று இலங்கை அரசியல் முழுக்க புரையோடிக் காணப்படுகின்றது.
ஜெயதேவன் இன்று இடம்மாறி புலிக்கு எதிராக புலியெதிர்ப்பு அணியாகிப் பிழைக்கின்றார் என்றால், அது அரசியல் ரீதியாக அல்ல. அதே அரசியல், ஆனால் இடமாறி நிற்கின்றார். புலிகளிடம் அரசியலைக் கற்றவர்கள், உண்மைக்குப் பதில் பொய்யையும் வாழ்வுக்கு பதில் அழிவையும் விதைத்து, குறுந்தேசியத்தில் 'மெத்தபடித்த' அடிவருடியாகவே அரசியலில் பிழைக்க முடிந்தது. இந்த மெத்தப்படித்த அடிவருடிகள் அரசியலில் பினாமியாக மட்டும் தான் நீடிக்க முடியும். அதைத் தான் இன்று ஜெயதேவன் நேர்த்தியாக பிரிட்டிஸ்சுக்கு விசுவாசமாக செய்கின்றார். இன்று புலிக்காக அல்ல, நேரடியாகவே ஏகாதிபத்தியத்துக்காக ஊளையிடுகின்றாரே ஒழிய, இந்த எல்லையைத் தாண்டி மக்களுக்காக வாழ்பவர்கள் அல்ல. "ராஜதந்திர வட்டாரங்களில் தொடர்புகளை வைத்தி"ருந்தவர் என்பது, ஏகாதிபத்தியத்துடன் நீங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தையே அவர் ஊடாக எடுத்துக் காட்டுகின்றீர்கள். உங்கள் முரண்பாடு என்ன? ஐயோ இப்ப நீங்கள் மட்டும் எங்களை விட்டுவிட்டு, அவர்களுடன் தனித்து நின்று கூடிக் குலைக்கலாமோ! இது துரோகம் அல்லவா! இது "எமது விடுதலைப் போராட்டத்தை" மழுக்கடிப்பதல்லவா என்றே கூற முனைகின்றீர்கள். நீங்கள் செய்வதை எம்முடன் சேர்ந்து நின்று உங்களுக்காக அல்லாமல் எமக்காக செய்யுங்கள் என்பதே சபேசனின் தியாக அறிவுரை.
புலிகள் மக்களுக்கு எதிராக இருத்தல் என்பதையே, உள்ளடக்க ரீதியாக அதையே ஜெயதேவனும் செய்கின்றார். நீதி விசாரணையற்ற புலியின் படுகொலை அரசியலை இன்று எதிர்க்கும் ஜெயதேவன், ஜனநாயகம் என்ற சொல்லில் தொங்குகின்றார். ஜனநாயகம் என்பது இந்த கும்பலின் விளக்கமே, புலிகள் அல்லாத புலி போன்ற குழுக்களின் செயல்பாட்டை அங்கீகரிக்க கோருவதே. இவர்கள் சிறுபான்மை இனங்களின் முரண்பாட்டை, சாதிய முரண்பாட்டை, பால் முரண்பாட்டை, பிரதேச முரண்பாட்டை, வர்க்க முரண்பாட்டை... ஒழிப்பதை ஜனநாயகமாக கருதுவதில்லை. ஏன் ஏகாதிபத்தியம் உலகமயமாதலூடாக தேசியத்தை சிதைப்பதைக் கூட முரண்பாடாகக் கருதுவதில்லை. இவற்றை எல்லாம் ஒடுக்கும் சமூகத்தின் ஆதிக்கம் பெற்ற முரண்பட்ட கூறுகளின் சுதந்திரம் தான், ஜனநாயகம் என்கின்றனர். புலிகள் இன்று இந்த நிலையை அடைந்தது என்பது புலித் தலைவரின் தனிப்பட்ட விருப்பமல்ல. மாறாக இந்த முரண்பாட்டை ஒடுக்கி அடக்கியாண்டதன் விளைவாகும். ஜெயதேவன் போன்றவர்கள் சமூக முரண்பாட்டை ஜனநாயக விரோதமாக கருத மறுப்பதன் மூலம், ஜனநாயக விரோதியாக மக்கள் விரோதியாக மற்றொரு புலியாகவே வளர்ச்சியுறுகின்றனர். இதனால் தான் அவர் புலியிலும் இருக்க முடிந்தது. ரி.பி.சி கும்பலுடனும் சேர்ந்து இருக்க முடிகின்றது.
சபேசன் தனது புலிப்பினாமிக் கட்டுரையில் "ஜெயதேவன் அவர்களே! உங்களுடன் சில விடயங்களை நான் மனம்விட்டு பேச விரும்புகிறேன். உங்களை நீங்கள் ஒரு தமிழ் தேசிய உணர்வாளரென கூறுகிறீர்கள். அந்த வகையில் உங்களது தாய்நாடு தமிழீழமாக மட்டுமே இருக்க முடியும். நீங்கள் பிரித்தானியாவின் கடவுச்சீட்டை வைத்திருந்தாலும் உணர்வால் நீங்கள் தமிழீழத்தவராகவே இருந்தீர்கள். ஆகவே உங்களை சந்தேகத்தின் பேரில் தடுத்துவைப்பதற்கும் விசாரிப்பதற்கும் உங்களின் தாய்நாட்டிற்கு உரிமையில்லையா? ஒருவர் மீது குற்றச்சாட்டு வைப்பதும் விசாரணை நடத்தப்படுவதும் நிரபராதியெனின் விடுதலை செய்வதும் உலகின் அனைத்து நாடுகளிலும் நடக்கும் மிகச் சாதாரண நடைமுறை. அத்துடன் விசாரிக்கின்ற பொழுது சிறிது மிரட்டுவதும் அதற்காக தங்களை இரக்கமற்றவர்களாக காட்டிக் கொள்வதும் வழக்கம். அதுவும் ஒரு நாட்டின் புலனாய்வுப்பிரிவால் விசாரிக்கப்படும் பொழுது சொல்லவே வேண்டாம். அனைத்துவிதமான முறைகளும் கையாளப்படும். உடல்ரீதியான உளவியல்ரீதியான அழுத்தங்கள் ஏற்படும் வண்ணம் விசாரணைகள் நடைபெறும். ஆனால் உங்களை உடல்ரீதியாக எவ்விதத்திலும் துன்புறுத்தாது, தங்களைப் பற்றி வேண்டுமென்றே பயங்கரமாகச் சொல்லி உங்களை அச்சத்தில் ஆழ்த்தி உளவியல் ரீதியான விசாரணை முறையைக் கையாண்டிருக்கிறார்கள். இவைகளை நீங்கள் சொன்னதை வைத்தே அறிந்து கொண்டேன். இவ்வாறு ஒருவரை விசாரிப்பதில் ஏதும் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. உலகிலே எத்தனையோ நாடுகளில் பலர் தவறான முறையில் தண்டனை வழங்கப்பட்டு சிறையில் வாடியிருக்கிறார்கள். பலர் செய்யாத குற்றத்திற்காக தூக்குமேடை ஏறியிருக்கிறார்கள். ஜனநாயக நாடுகள் என மதிக்கப்படும் நாடுகளில் கூட பல முறை தவறான தீர்ப்புக்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழீழ தேசம் உங்களுக்கு தண்டனை எதையும் வழங்கவில்லை. உங்களை தடுத்து வைத்து விசாரித்தார்கள். அவ்வளவே. இதற்குப் போய் நீங்கள் தமிழீழத்தோடு போர் தொடுக்க முனைவது அழகான செயல் அல்ல". என்கின்றார். புலிகளின் பாசிச நடவடிக்கையை ஜனநாயக செயல்பாடாக காட்டும் வகையில், 'ஜனநாயக' நாடுகளின் இயல்பான ஒன்றாகவே இதை எடுத்துக் காட்டுகின்றார். மிகவும் கைதேர்ந்த அரசியல் தர்க்க மோசடி. ஜெயதேவன் பாணியில் அதே அரசியலில் நின்று, இது தர்க்கிக்கப்படுகின்றது. இதனால் தான் ஜெயதேவன் முதல் ரி.பி.சி வரை பதில் சொல்ல முடியாது பினாற்றுகின்றனர். இந்த கேள்விக்கு, தர்க்கத்துக்கு அவர்களால் பதிலளிக்க முடியவில்லை.
உண்மையில் ஜே.வி.பி இனவாதிகள் என்று நாம் அம்பலப்படுத்திய போது, தாம் பதில் அளிக்கின்றோம் பிரசுரிப்பார்களா என்று எம்மை நோக்கி சிலர் மூலம் சவால்விடுத்தனர். நாம் அந்த இனவாத அரசியல் சவாலை ஏற்று ஜே.வி.பிக்கு அழைப்பை விடுத்தபோது, இன்றுவரை மௌனமே பதிலாக அளித்தனர். இதுபோல் தான் ஜெயதேவன், சிவலிங்கம் போன்றோர். அவர்களின் மக்கள் விரோத கருத்துக்கு எதிரான எனது கட்டுரைகளுக்கு பதிலளிப்பதாக தனிப்பட்ட நபர்களிடம் வாயால் பீற்றுபவர்கள் தான். இந்தக் கும்பலால் சபேசனின் பாசிச விவாதத்துக்கு பதிலளிக்க முடியவில்லை. ரி.பி.சி விவாத அரங்கில் சபேசன் நேரடியாக தொலைபேசி அழைப்பின் ஊடாக வந்தபோது, அவரை சுற்றி நாலு ஐந்து பேரும் குதறினர். தர்க்கரீதியாக அவரின் பாசிசத்தை அம்பலப்படுத்தி விவாதிக்க முடியாத, அதே அரசியலைக் கொண்டு திக்குமுக்காடினர்.
கிட்லர் இந்த ஜனநாயக அமைப்பை பயன்படுத்தி எப்படி ஆட்சிக்கு வந்தானோ, அதைத்தான் சபேசன் கையெடுத்துள்ளார். 'ஜனநாயகம்' பற்றி கொள்கை ரீதியான இரண்டுபக்க நிலையும் ஒன்றாக இருப்பதால் தான் சபேசன் வாதத்துக்கு பதிளிக்க முடிவதில்லை. ஜனநாயகம் பற்றி பீற்றிக் கொள்ளும் ரி.பி.சி அன் கோக்களும், விடயத்துக்கு வெளியில் நின்று கொக்கரிக்கின்றனர். வழமை போல் ராம்ராஜ் ஒரு கட்டத்தில் சபேசனை வானொலியில் மடக்க, கொலைகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் என்ற போது, கிட்லரின் கோயபல்ஸ் சபேசன் அதையும் தாண்டி இவர்கள் பாணியில் பதிளித்த போது, ரி.பி.சி சபேசனுக்கு எதிராக பாவித்து அம்பு நேரம் முடிந்துவிட்டது என்ற பதில்தான். இதுதான் ஜெயதேவன் ரி.பி.சி கும்பலின் கருத்துச் சுதந்திரம் பற்றி அவர்களின் பொது நிலைப்பாடு. கிட்லருக்கு பிரச்சார மந்திரியாக கோயபல்ஸ் என்ற ஒரு கோமாளி இருக்கலாம் என்றால், பிரபாகரனுக்கு ஏன் ஒரு சபேசன் இருக்கக் கூடாது. அதுவும் சொந்த முகத்துடன் வெளிவருகின்றார். பிரபானிச பாசிசத்தை பிரச்சாரம் செய்யும் சபேசனின் ஜனநாயகம் பற்றியும், கைது விசாரணைகள் பற்றிய அவரின் பாசிச கருத்துக்கும் வருவோம்.
எடுத்த எடுப்பில் புலிகளுக்கு சலுகையை அடிப்படையைக் கொண்ட ஒரு கோட்பாட்டை அடிப்படையாக கொண்டே இந்த தர்க்கம் அமைகின்றது. புலிகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டபூர்வமான ஒரு அமைப்பு அல்ல. மக்களால் நேசிக்கப்படும் ஒரு விடுதலை இயக்கமல்ல. மாறாக காலம்காலமாக படுகொலை அரசியல் மூலம், அடக்குமுறையை மக்கள் மேல் ஏவி அதிகாரத்துக்கு வந்தவர்கள் புலிகள். மக்களின் சாதாரண அடிப்படை உரிமையை மறுத்து அதிகாரத்துக்கு வந்தவர்கள். புலிகள் அனுபவிக்கும் எந்த உரிமையும், சலுகையும் மக்களுக்கு கிடையாது. இதை புலிகளே பகிரங்கமாக பாசிசமாகவே கூறியுள்ளனர். "மக்களுக்கு எழுத்து, பேச்சு, கருத்து, பத்திரிகைச் சுதந்திரம் வேண்டும்"."மக்களுக்கு விரும்பிய அரசியல் ஸ்தாபனங்களில் இருக்கவோ அரசியல் நடத்தவோ சுதந்திரம் வேண்டும்." என பல்கலைக்கழக மாணவர்கள் கோரிய போது, இந்த கோரிக்கைக்கு பகிரங்கமான துண்டுப் பிரசுரம் மூலம் 28.11.1986இல் பதிலளித்த புலிகள், இது "..விடுதலைப் புலிகளை அரசியல் அனாதைகளாக்கக் கூடிய மேலும் இரு கோரிக்கைகள்" என்று கூறி நிராகரித்தனர். அன்று முதல் இன்று வரை புலிகள் வேறு, மக்கள் வேறாகவே உள்ளனர். புலிகளின் உரிமைகள் மக்களுக்கு கிடையாது. இப்படியான அமைப்பில் நீதி, நியாயம் எப்படி இருக்கும். புலிகளின் உரிமைகள் மக்களுக்கு கிடையாது என்பதை இது தெளிவுபடுத்துகின்றது. அனைத்தும் மக்கள் விரோதத் தன்மை கொண்டவையாகவே உள்ளது. அனைத்தும் மக்களுக்கு எதிரானவை. மக்களின் மேல் துப்பாக்கி மூலம் சர்வாதிகாரத்தையே நிலைநிறுத்துகின்றது. மக்களின் சமூக பொருளாதார வாழ்வின் அனைத்து உயிர் மூச்சையும் கழுத்தை நெரித்து கொல்லுகின்ற ஒரு நிலையில், அதை எதிர்த்து போராடும் உரிமையை மறுப்பது பாசிச பினாமிகளின் நக்குத்தனமாகும்.
மக்கள் மேலான ஒடுக்குமுறை மூலம் புலிகள் என்ற குழு உயிர்வாழ்கின்றது. இங்கு எந்த நீதியும் சட்டமும் நிலைநாட்டப்படுவதில்லை. விசேட சலுகைகள் கொண்ட ஒரு கும்பலின் மக்கள் விரோத பாசிச ஆட்சியே நடக்கின்றது. இப்படியான ஒரு நிலையில் உங்களையே நீங்கள் ஏமாற்றிக் கொண்டு என்ன சொல்லுகின்றீர்கள் என்றால் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யக் கூடாதா, விசாரணை செய்யக் கூடாதா? என்று வியாக்கியானம் செய்கின்றீர்கள். பாசிச பிரச்சார மந்திமாரே! முதலில் நீங்களே வலிந்து உருவாக்கியுள்ள தமிழீழச்சட்டங்கள் எல்லாம் எங்கே போனது? உங்கள் தமிழீழச்சட்டம் இதை ஏன் விசாரிக்கவில்லை. உங்கள் நீதிமன்றங்கள் போலியானவையா? குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக வைத்திருக்க வேண்டுமல்லவா? நீங்கள் உங்கள் விசாரணையை, கைதை முதலில் நீங்களே வலிந்து உருவாக்கிய சட்டத்தின் முன் கொண்டுவாருங்கள். இதற்குப் பின் தான் கைது செய்யும் உரிமை, விசாரணை பற்றி எல்லாம் பேசமுடியும். இதை செய்யமறுத்து விசாரித்தவர்களை, இதை செய்ய மறுத்து நியாயப்படுத்துபவர்களை (உங்களைப் போன்றவர்களை), உங்கள் நீதிமன்றத்தின் முன் வந்து சட்டத்தை மீறியமைக்காக தண்டிக்கக் கோருங்கள். இதைவிடுத்து பினாற்றல் ஏன்! இதன் பின் ஜெயதேவனைப் பற்றி பேச வாருங்கள். அது நியாயம்.
சரி வக்காலத்து வாங்கும் பாசிச பினாமியே, அவர் மீதான உங்கள் குற்றச்சாட்டுகள் என்ன? நீங்கள் மீண்டும் குற்றவிசாரணை செய்ய முன்னம், அவர் பற்றி எழுத முன்னம், அவர் மீதான குற்றம் தான் என்ன? உங்கள் அவதூறுகள், தீர்ப்புகள், தண்டனைகள் எதுவும் சூக்குமமானவையாக, மிருகத்தனமானதாகவே உள்ளது. 1986 இல் தொடங்கிய ரெலோ அழிப்பின் பின்பாக, குறைந்த பட்சம் நாளொன்றுக்கு ஒருவரையாவது புலிகள் கொன்று வந்துள்ளனர். இதில் நீதி எங்கே நியாயம் எங்கே உயிர் வாழ்ந்தது. காட்டுத் தர்பார். தமிழ் தாய் பத்து மாதம் சுமந்து பெற்றுப் போட்ட ஒவ்வொரு உயிரையும் காட்டுமிராண்டிகள் இலகுவாக வேட்டையாடினர். எந்த நீதிமன்றம் இதை விசாரித்தது. உங்களுக்கு குற்றம் சாட்டும் உரிமையும், விசாரிக்கும் உரிமையும் உண்டு என்றால், அதை குறைந்த பட்சம் நீங்களே உருவாக்கி (நீங்களே நிராகரிக்கும்) கண்துடைப்பு செய்யும் தமிழீழ நீதிமன்றத்துக்கு முன்கொண்டு வாருங்கள். இதைவிடுத்து இரகசிய பாதாள சிறைகளில் சித்திரவதை செய்யும் உரிமையையும், அவர்களை ஈவிரக்கமற்று கொல்லும் உரிமையையும், உங்களுக்கு எந்த மக்கள் எப்போது எப்படி வழங்கினார்கள். உங்கள் உரிமைகளை மக்களுக்கு வழங்க மறுக்கும் நீங்கள், மக்களுக்கு எந்த நீதியையும் வழங்குவதில்லை. இதைவிடுத்து நீங்கள் செய்வதை மக்களுக்கு முன் பகிரங்கமாக ஒத்துக் கொள்ளுங்கள். நாங்கள் என்ன செய்தோம், செய்கின்றோம் என்பதை பகிரங்கமாகவே நேர்மையாகச் செய்யுங்கள். குற்றவாளியாக நீங்கள் கருதியவர்களின் குற்றம் தான் என்ன என்று பகிரங்கமாக அறிவியுங்கள். இதைவிடுத்து பல கோடி ரூபாவில் கட்டப்படும் நீதிமன்றங்கள் போலியானவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உங்களின் கருத்தின் மீதும், இந்த மாதிரியான நடத்தைகள் மீதும் மக்களின் கருத்துரிமையை அனுமதியுங்கள். கருத்துச் சொல்லுபவன், கேள்வி கேட்பவன், பணம் தரமறுப்பவன், உங்கள் ஹர்த்தாலுக்கு கடையை பூட்ட மறுத்தவன் என அனைவருக்கும் மரணதண்டனையை பரிசளித்துக் கொண்டு, சட்டவியாக்கியானம் மனித உரிமை வியாக்கியானம் செய்வது அப்பட்டமான பாசிமாகும்.
ஐரோப்பிய நீதிமன்றங்கள், அமெரிக்க நீதிமன்றங்கள் விசாரிக்கவில்லையா, குற்றவாளி அல்லாதவனை தண்டிக்கவில்லை என்ற உங்கள் தர்க்கத்தில், நீங்கள் உங்கள் விசாரணையை உங்கள் நீதிமன்றத்தில் உங்கள் சட்டத்துக்கு உட்படுத்திக் கூட நடத்தவில்லை. இதை முடிந்தால் கண்டியுங்கள். சொந்த அறிவிருந்தால், துணிவிருந்தால் அதை நேர்மையாக எழுதுங்கள். மேற்கில் குற்றவாளியாக நிறுத்தப்பட்டவன் தனக்காக வாதிட முடியும். அது பகிரங்கமாக மக்கள் முன் அனைத்தும் தெளிவாக தெரிவானதாக உள்ளது. அதைப்பற்றி மக்கள் கருத்துரைக்க முடியும். ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நீதிமன்றங்களில் உள்ள உரிமை பற்றி உதாரணம் காட்டமுடியும் என்றால், அந்த நாட்டில் உள்ள உரிமைகளை உதாரணம் காட்டி முதலில் அதை எமது மக்களுக்கு வழங்குங்கள். அதைக் கோருங்கள். அதன் பின் உதாரணத்தைக் காட்டுங்கள். அந்த நீதி மன்றங்கள் கடைப்பிடிக்கும் குறைந்தபட்ச வெளிப்படையான அணுகுமுறையை அமுல்படுத்துங்கள்.
அடுத்து மேற்கில் அப்படி உள்ளது என்பதால், அவை சரியானவை என்பதல்ல. அதனால் தான் மேற்கில் மக்கள் அதற்கு எதிராகப் போராடுகின்றனர். இந்த போராட்டத்தை நீங்கள் காணாத மாதிரி நடித்து அதை நியாயப்படுத்துவதே, இங்கு உங்கள் ஏகாதிபத்திய உள்ளடக்கமாக உள்ளது. ஜெயதேவன் போன்றவர்கள் ஏகாதிபத்திய தொங்குசதையாக இருப்பதால், உங்களைப் போல் இதை ஆதரிக்கின்றனர். இதனால் தான் உங்கள் பாசிச விதண்டாவாதத்துக்கு அவர்களால் பதிலளிக்க முடியாது திணறுகின்றனர். ஆனால் மக்கள் அப்படியல்ல. மக்கள் மேற்கிலும் சரி, தமிழீழத்திலும் சரி இதை எதிர்த்துப் போராடுகின்றனர். உங்களைப் போல் மக்கள் நக்கிப் பிழைக்கவில்லை. சொந்த உழைப்பில், சொந்த அதிகாரத்துக்காக அவர்கள் எப்போதும் எங்கும் தமக்காக தம்முயிரை அர்ப்பணித்துப் போராடுகின்றனர். ஜெயதேவன் போல் பிரிட்டிஸ் ஆளும் வர்க்கத்தில் கால்களில் தவம் இருக்கவில்லை.
ஏன் தமிழீழ தேசியவிடுதலைப் போராட்டம் சமூக அநீதிகளை ஒழிக்கப் போவதாக கூறி, மக்களை ஏமாற்றித்தான் பாசிசத்தை உருவாக்கினர். இதைத்தான் கிட்லரும் செய்தான். மக்களை ஏமாற்றவும், தம்மை மக்கள் நலன் சார்ந்ததாக காட்டவும் புலிகளும் கூட பின்நிற்கவில்லை. புலிகளின் அரசியல் வேலைத்திட்டத்தை உள்ளடக்கிய கொள்கை விளக்க நூலான "சோசலிச தமிழீழம்" என்ற நூலில் இந்த மோசடியைச் செய்கின்றனர். அதில் புலிகளின் அரசியல் இலட்சியம் என்ற பகுதியில் "தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு … அடிப்படையான அரசியல் இலட்சியம்" என்கின்றனர். "தேசிய விடுதலை எனும் பொழுது ….ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே" தமது இலட்சியம் என்கின்றனர். அதை அவர்கள் விளக்கும் போது "சுதந்திர தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடன், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும்…" ஆட்சியாக அமையும் என்கின்றனர். மேலும் அவர்கள் விளக்கும் போது "சோசலிசப் புரட்சி எனும்பொழுது எமது சமூகத்தில் நிலவும் சகலவிதமான சமூக அநீதிகளும் ஒழிந்து, ஒடுக்குதல் முறைகளும் சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கின்றோம்" என்றனர். அத்துடன் "தமிழீழ சமூக வடிவமானது ஒரு முதிர்ச்சி கண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்தி முறை இயங்கவில்லை. … வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதிய தொழில் பிரிவு உறவுகளும் ஒன்று கலந்த ஒரு… பொருளாதார அமைப்பானது சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்கு முறைகளையும் சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது. எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகலவிதமான சமூக ஒடுக்கமுறைகளையும் ஒழித்துக்கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தை கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும்" என்று மக்களின் முதுகில் அறிக்கை சவாரி செய்கின்றது.
இப்படி மக்களின் உரிமை பற்றி பேசியவர்கள், மக்கள் நலன் பற்றி பேசியவர்கள் அதை மறந்துவிட்டனர். இன்று மக்கள் அதைக் கோரும் போது கிடைப்பது சகலரும் அறிந்த மரணதண்டனை தான். இந்த அமைப்புடன் இந்த வேலைத்திட்டதுடன் ஒட்டி உறவாடிய ஜெயதேவன் போன்றோர் கூட அதை அமுல்படுத்தவில்லை. மாறாக இதற்கு எதிராகவே புலியின் பினாமியாக இருந்த போதும் சரி, இன்று புலிக்கு வெளியில் புலியெதிர்ப்பு அரசியல் பேசுகின்ற போதும் கூட பேசவில்லை. மக்களுக்கு எதிராக இருப்பதில் இவர்கள் தமக்கு இடையில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். இப்படி மக்களுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்கும் நிலையில் தான், தம்முடன் முரண்பட்டு நிற்கும் தரப்பை விசாரணை செய்யும் உரிமை பற்றியும், அவர்களை அழித்தொழிக்கும் உரிமை பற்றியும் பேசுகின்றீர்கள். உங்கள் தர்க்கவாதம் சரியென்றால், தமிழரின் உரிமையை மறுத்து அரங்கேற்றும் மக்களுக்கு எதிரான சிறிலங்கா நீதிமன்ற விசாரணைகளும் சரியானவைதான். சிறிலங்கா பேரினவாத நீதிமன்றங்கள் குறைந்தபட்சம் நீதிமன்றத்துக்கு உயிருடன் ஆட்களை கொண்டு (ஒரு சில விதிவிலக்கு தவிர) வருகின்றது. ஆனால் உங்கள் கையில் சிக்கியவர்கள் புதைகுழிக்குள் அல்லவா போடப்படுகின்றனர். இங்கு எந்த நீதி, விசாரணை என எதுவும் கிடையாது.
ஈராக்கில் அமெரிக்க இராணுவமும், பிரிட்டிஸ் இராணுவமும் புலிகளைப் போல் செய்வதை ஜெயதேவன் போன்ற புலியெதிர்ப்புக் கும்பல்கள் ஆதரிக்கலாம். ஆனால் மக்கள் அப்படி ஆதரிப்பதில்லை. இதை நாம் மக்களுடன் சேர்ந்தே எப்போதும் எதிர்த்து வந்துள்ளோம். மக்களின் வாழ்வு சார்ந்த சமூக பொருளாதார வாழ்வு மறுக்கப்பட்ட நிலையில், சமூக எதிர்வினைகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் பிற்போக்கானவை. இவை சமூக விரோத தனிச் சொத்துரிமை நீதிமன்றங்களாக இருப்பதுடன் பிற்போக்கானவை. நீதி மன்றங்கள், விசாரணைகள் மக்களின் நலனை சூறையாடும் போது, அவர்களுக்கு எதிராக சட்டங்களை புனைந்து குற்றவாளியாக்கும் போது அவை படுபிற்போக்கான சமூகப் பாத்திரத்தையே வகிக்கின்றது. இதைத் தான் புலிகளும் செய்கின்றனர். ஆனால் சொந்த சட்டவிதிகளைக் கூட மதிக்காத பாசிச சர்வாதிகாரத்தை ஏவுகின்றனர்.
இந்த நிலையில் புலிப்பினாமியாகிய சபேசன் கூறுகின்றார் "உங்களின் பெயரில் இருந்த கோயிலை கட்டாயப்படுத்தி எழுதி வாங்கியதாக சொல்கிறீர்கள். நான் ஒரு பகுத்தறிவுவாதி. என்னைப் பொறுத்தவரை மக்களின் மூட நம்பிக்கைகளை வியாபாரம் செய்யும் ஒரு நிறுவனமே கோயில். ஆகவே மக்களை ஏமாற்றி காசு பறிக்கும் இந்த நிறுவனங்கள் ஒரு தனிநபரிடமோ அல்லது நிர்வாகம் என்ற பெயரில் தனிநபர்களிடமோ இருப்பதை விட எமது அரசாங்கத்திடம் இருந்தால் நாட்டுக்காவது சிறிது பயனாக இருக்கும் என நம்புகிறேன். இதே கருத்தையே விடுதலைப்புலிகள் கொண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே. தமிழீழத்தில் விடுதலைப்புலிகள் யாரும் மதச் சின்னங்களை அணிவதில்லை. சைவர்களை பெரும்பான்மை உறுப்பினர்களாக கொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் ஒரு போதும் இந்துமதவாதம் பேசியதில்லை. அப்படிப் பேசியிருந்தால் இந்தியாவின் ஆர்எஸ்எஸ் தொடக்கம் பாரதீய ஜனதாக் கட்சி வரை எமக்கு பக்கபலமாக இருந்திருக்கும். பாரதீய ஜனதா ஆட்சியில் இருந்த பொழுது நல்ல பலனை தமிழீழம் பெற்றிருக்கும். ஆனால் விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை. விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கிறார்கள். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகளாயின் எதற்காக வெளிநாடுகளில் கோயில்களை நிர்வகிக்கிறர்கள் எனக் கேட்கலாம். (இந்த உண்மையை சொல்வதற்கு இங்கே உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.) கோயில்கள் நல்ல இலாபம் தரக்கூடிய வியாபார நிறுவனங்களாக இருப்பதாலேயே அதை நடத்துகிறார்கள். ஆகவே மக்களும் தனியார் நடத்துகின்ற கோயில்களுக்கு சென்று தனியார்களின் வளர்ச்சிக்கு துணை போவதை விடுத்து விடுதலைப்புலிகள் நடத்துகின்ற கோயில்களுக்கு போவது நல்லது. அதே போன்று உங்களைப் போன்றவர்களும் தங்களின் கோயில்களை எமது நாட்டிற்கு வழங்க வேண்டும். இதில் மற்றவர்களின் கருத்து எப்படியோ நான் இங்கே உள்ள கோயில்களை தமிழீழ அரசு கையகப்படுத்துவதை ஆதரிக்கிறேன். அதுவும் ஒரு கோயில் நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்படுமாயின் நிச்சயமாக அதை கையகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தாலே கோயில்களால் தமிழீழ மக்களிடம் சுரண்டப்படும் பணம் தமிழீழ அரசிடம் சென்று நல்ல முறையில் பயன்படுத்த வழிபிறக்கும். ஆகவே ஜெயதேவன் அவர்களே! இந்த விடயத்திலும் என்னால் விடுதலைப்புலிகள் மீது தவறு சொல்ல முடியவில்லை."
திருடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் சுரண்டுவதற்கும் பாசிச கொள்கை விளக்கம் சபேசனால் வழங்கப்படுகின்றது. அதை செய்வதற்கு எப்படிப்பட்ட வழியையும் கைக்கொள்வதை இது நியாயப்படுத்துகின்றது. புலிகள் லண்டனில் இருந்த கோயிலை பலாத்காரமாக ஜெயதேவனிடம் இருந்து அபகரிக்க, அவரை வன்னிச் சிறையில் அடைத்து வைத்து பலாத்காரமாகவே கையெழுத்து வாங்கிய நிகழ்சிக்கு, பகுத்தறிவு நாஸ்திக விளக்கம் வழங்கி நியாயப்படுத்துகின்றார். கிட்லருக்கு பிரச்சார மந்திரி கோயபல்ஸ் எதை செய்து அனைத்தையும் நியாயப்படுத்தினானோ, அதையே சபேசன் செய்கின்றார். அவர் கூறுகின்றார் "நான் ஒரு பகுத்தறிவுவாதி" என்கின்றார். அப்படி பகுத்தறிவுவாதிகள் இருந்தால் தனிச் சொத்துகளை அவர்களிடம் தந்துவிட வேண்டுமோ? என்ன தர்க்கம். பகுத்தறிவாதிகளிடம் கோயிலை எழுதிக் கொடுத்துவிட வேண்டுமாம். இதையே தான் புலிப்பினாமியாக அவதரித்த தமிழீழக் கட்சியைச் சேர்ந்த கனடா இளங்கோவும் சொன்னான், செய்தான். அவன் தனிச் சொத்துக்களைக் கூட போராட்டத்தின் பெயரில் பறிப்பதை நியாயப்படுத்தியவன். அது தனது போராட்டத்துக்கு தேவையாம்.
இப்படி பகுத்தறிவாதிகளிடம் வருமானமுள்ள (வருமானமற்றவை அல்ல) கோயில் சொத்துரிமையை கொடுத்துவிட வேண்டுமாம். ஏனென்றால் அதில் இருந்துவரும் வருமானத்தில் பகுத்தறிவு பிரச்சாரம் செய்ய (மக்களுக்கு என்ற போர்வையில்) என்பது மற்றுமொரு மறைமுக விளக்கம். பகுத்தறிவு பற்றிய இந்த கோயபல்ஸ் சபேசனின் விளக்கம், கோயில் இருக்க வேண்டும். அந்த வருமானம் வேண்டும். மக்கள் புலிகளின் கோயிலுக்கு போக வேண்டும். ஆனால் நாங்கள் பகுத்றிவாதிகள். புலிகளால் மட்டும் தான் இப்படிக் கூறமுடியும்.
அவர் கூறுகின்றார் "விடுதலைப்புலிகளும் ஒரு வகையில் பகுத்தறிவாளர்களே" அருமையான ஒரு பிதற்றல். அவர் கூறகின்றார் மதச்சின்னம் அணிவதில்லையாம். இந்து மதத்தில், மதச்சின்னம் பொதுவாக மக்களும் தான் அணிவதில்லை. ஆனால் சாதிச்சின்னத்தை அணிந்தல்லவா உள்ளனர். பெயரில் தொடங்கி யார் யார் என்ன சாதி என்ற அடையாளத்தை இந்து மதத்தின் பெயரில் அணிந்தல்லவா உள்ளனர். சபேசன் கூறுகின்றார் புலிகள் இந்துமதவாதம் பேசியதில்லையாம். விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லையாம். விடுதலைப்புலிகள் பகுத்தறிவுவாதிகள் என்பதாலேயே, இந்தியாவில் உள்ள பார்ப்பனர்கள் எமது போராட்டத்தை எதிர்க்கின்றனர் என்று கண்டுபிடிக்க முனைகின்றார். மதச்சின்னம் அணியாத, இந்து மதத்தைப் பேசாததால் பகுத்தறிவாதிகள் என்கின்றார். துரோகி தியாகி என்ற ஒற்றை வரியில் தண்டனைகளையும், தீர்ப்புகளையும் வழங்கும் ஒரு இயக்கத்தின் கோட்பாட்டாளர்கள் இப்படித் தான் கண்டுபிடிப்பார்கள்.
முஸ்லிம் மக்களை தமிழ் மக்கள் என்ற வலிந்து அடையாளப்படுத்தும் புலிகள், மத அடிப்படையில் தானே அவர்களை வெளியேற்றினர். இன அழிப்புகளை தொடர்ச்சியாக மத அடிப்படையில் புலிகள் நடத்தவில்லையா? இங்கு இந்து மத அடையாளத்துடன் முஸ்லீம் மதத்துக்கு எதிராக புலிகள் செயலாற்றவில்லையா?
பகுத்தறிவு என்பது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் அதை பிரச்சாரம் செய்வது. அதன்படி வாழ்ந்து காட்டுவது. சமூகத்தை பகுத்தறிவாக மாற்றுவது அதன் உள்ளடக்கமாகும். இதை எங்கே புலிகள் செய்துள்ளனர். புலிகள் பார்ப்பான் முன்னால் பயபக்தியுடன் அமர்ந்து, அவன் சொல்லும் மந்திரம் கேட்டு, கீழ்ப்படிந்து சிரம்தாழ்த்தி தவமிருந்தே அனைத்தையும் செய்கின்றனர். இங்கு எந்த பகுத்தறிவு கோட்பாடும் எதுவும் அவர்களிடம் கிடையாது. இந்து மதம் பெண்ணை அடிமைப்படுத்த, அதன் உள்ளடக்கத்தில் உருவாக்கிய தாலியை அணிந்து தமிழ் மரபுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். பிரபாகரன் பார்ப்பான் முன் மண்டியிட்டு அமர்ந்து, அவன் எடுத்துக் கொடுத்த ஆணாதிக்க அடிமைத் தாலியை தனது மனைவிக்கு கட்டிய போது பகுத்தறிவு முருங்கை மரத்திலா ஏறியிருந்தது. இதுவே தமிழீழத்தில் பொதுவான இந்துப் பண்பாடாக உள்ளது. புலியில் திருமணம் செய்தவர்கள் எத்தனை பேர் தாலியைக் கட்டவில்லை. இந்து மதமும், அதன் சடங்கும், அதை சாதிய அடிப்படையில் உருவான பிரமாணப் பன்றிகளுமின்றி, தமிழீழத்தில் பகுத்தறிவா வாழ்கின்றது. இந்த பார்ப்பனிய மதம் இந்து மதமாகிய போதே, சாதிய அமைப்பை தமிழ் மக்கள் மேல் இந்து மதத்தின் ஊடாகவே வலிந்து திணித்தது. சாதியம் சமூகத்தையே பிளந்து நிற்கின்ற நிலையில், அதை புலித் தேசியம் இன்று பாதுகாத்து நிற்கின்றது. இந்து மதம் உருவாக்கிய சமூக அமைப்பை பாதுகாக்கும் பொறுப்பை, புலிகள் பொறுப்பேற்று நிற்கின்றனர். பகுத்தறிவுவாதிகளை, கம்யூனிஸ்ட்டுகளை புலிகள் தமது சொந்த வதைமுகாமில் வதைத்தனர். தமிழீழத்தில் பாடசாலைகள் கட்டப்படவில்லை, கோயில்கள் தான் கட்டப்படுகின்றன. விரித்து அகட்டிப் பார்த்தால் பகுத்தறிவுவாதிகளை கைது செய்ய பொலிஸ் நிலையங்களும், நீதிமன்றங்களும் தான் கட்டப்படுகின்றன.
இராணுவத்துக்கு எதிரான ஒவ்வொரு தாக்குதலுக்கும் கோயிலுக்கு நேர்த்திவைத்த புலிகள் தலைமையா, பகுத்தறிவுக் கோட்பாட்டை கொண்டுள்ளது. பிரபாகரன் நேர்த்தி தீர மொட்டை அடித்தது முதல் எத்தனையோ சம்பவங்கள் உண்டு. தமிழனை இந்து என்று கூறுவதே பகுத்தறிவுக்கு எதிரானது. தமிழன் இந்து அல்ல. பார்ப்பனியம் தான் இந்து. பார்ப்பனியம் சாதிய அமைப்பு தான் இந்து மதம். இந்து மதத்துக்கு இதற்கு வெளியில் எந்தத் தத்துவமும் கிடையாது. இந்து மத சாதிய அமைப்பை பாதுகாக்கும் சாதியப் பணியில் புலிகள் உள்ளனர். பள்ளனும் பறையனும் உங்கள் கண்டுபிடிப்பான பகுத்தறிவு தமிழீழத்தில் என்னதான் செய்கின்றான்.
பார்ப்பானிய வழியில் அவனுக்குரிய இந்துமதக் கடமையை செய்வதையே, உங்கள் தமிழீழச்சட்டம் வரையறுக்கின்றது. இதைத் தான் புலியெதிர்ப்பு அணியும் அடிப்படையாக கொள்கின்றது. தமிழீழச்சட்டம் சாதியை ஒழிக்கவில்லை. அதை பாதுகாக்கின்றது. தமிழீழச் சட்டம் பகுத்தறிவை முன்வைக்கவில்லை. பகுத்தறிவுக்கு எதிரான சட்டக்கோவை தான் அது. இப்படி விதண்டாவாதமாக கருத்தை முன்வைப்பதே பகுத்தறிவுக்கு எதிரானது. இன்று தமிழ்ச் சமூகத்தில் பகுத்தறிவு எதுவும் கிடையாது. பகுத்தறிவாக சிந்திப்பதற்கே, புலிகள் எமனாக உள்ளனர். பகுத்தறிவுக்கு எதிரான போக்கே பாசிசமாக வளர்ச்சியுற்றுள்ளது. இதனால் சமூகம் சந்திக்கும் துன்பங்கள் கூட இன்று வெளிப்படுத்த முடியாத கொடூரமான நிலையில், கடவுளிடம் சொல்லி அழுவதே பகுத்தறிவுக்கு புறம்பாக அதிகரித்துச் செல்லுகின்றது. இதுவே கோயில்களின் அதிகரிப்பையும் அதன் பகட்டுத்தனத்தையும் எடுத்துக் காட்டுகின்றது. பகுத்தறிவற்ற குருட்டு வாதத்தை விடுத்து, எதார்த்த உண்மை உண்மையாகவே உள்ளது. "விடுதலைப்புலிகள் என்றும் பொய்யான மதவாதம் பேச விரும்பியதில்லை" என்கின்றார். ஐயா எல்லாமே பொய்யும் புரட்டுமாக பேந்துவிடும் புலிகள், பொய்யாக அவர்கள் வாழ்வதில்லை என்கின்றீர்கள். நல்ல நகைச்சுவைதான். பொய் பேசா உத்தம புத்திரர்களின் நேர்மை பற்றி மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியும். இதற்கு யாரும் விளக்கம் சொல்லத் தேவையில்லை.
உங்கள் அடுத்த பாசிச வாதத்தைப் பார்ப்போம். "நீங்கள் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து தமிழீழத்தின் ஒரு பாமரக் குடிமகன் என்ன சொல்கிறான் என உங்களுக்கு தெரியுமா? அண்மையில் ஒரு நண்பருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது 'உவரை விட்டது பெரிய பிழை ஆளைப் போட்டிருக்க வேண்டும்' என மிகச் சாதாரணமாகச் சொன்னார். கேட்ட பொழுது அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அவர் சொன்னதை பலரும் சொல்கிறார்கள் என்பதே உண்மை. சிந்தித்துப் பாருங்கள் ஜெயதேவன் அவர்களே! உங்களின் முகத்தைக்கூட அறிந்திராத மனிதர்கள் நீங்கள் இறந்து போக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அப்படியெனில் நீங்கள் எவ்வளவு தூரம் தரம் தாழ்ந்து போயிருக்க வேண்டும்." உங்கள் கருத்தை மற்றவன் பெயரால் சொல்வது இங்கு பகுத்தறிவாகின்றது. இது தான் பாசிச புலிகள். மக்களின் பெயரால் தாக்குதல்கள், மக்களின் பெயரால் கொலைகள், அதன் தொடர்ச்சியில் உயிரோடு விட்டதே பிழை என்ற உங்கள் வாதம், மற்றவன் பெயரால் புனையப்படுகின்றது.
இதைத்தான் பலரும் தமது சொந்தக் கருத்தாக கொண்டுள்ளனர் என்றால், இதை மக்கள் தமது கருத்தாக கொண்டு இருக்கவில்லை. ஏனென்றால் மக்களுக்கு தான் கருத்துரிமையை வழங்கமுடியாது என்று, உங்கள் தலைவர் முன்னமே துண்டறிக்கை போட்டு அறிவித்துவிட்டார். அது புலிகளை அரசியல் அனாதையாக்கிவிடும் என்று உங்கள் தலைவர் போட்ட துண்டறிக்கை கூறுகின்றது. அப்படி கருத்துக் கூறுபவர்களைத் தான் நாளொன்றுக்கு ஒருவர் வீதம் தலைவர் சிந்தனையில் மண்டையில் போட்டு வருகின்றீர்கள். யார் இப்படி தலைவரின் முடிவையே, திருத்தி போட்டிருக்க வேண்டும் என்கின்றனர். உருப்போடும் மதக் கும்பலைப் போல், புலியின் பின்னால் அதையே வாந்தியெடுக்கும் உங்களைப் போன்றவர்கள் தான். இதைத்தான் உங்கள் அரசியலாக நீங்கள் கொண்டுள்ளீர்கள். அரசியல் ரீதியாக விவாதிக்க முடியாத, விமர்சிக்க முடியாத கும்பல்கள், விட்டது பிழை என்று கூறி மண்டையில் போடுவது பற்றி மட்டும்தான் பேசமுடியும். தரம் தாழ்ந்தது ஜெயதேவன் என்பதைவிட, நீங்கள் தான் தரம் தாழ்ந்துள்ளீர்கள். மற்றவன் சொன்னதாக நீங்கள் சொன்னால், அதை கண்டித்து அரசியல் ரீதியாக அதை அம்பலப்படுத்த முடியவில்லை. நீங்கள் அதன் ஆதரவாளராகி, அதை நியாயப்படுத்தி பிரச்சாரமல்லவா செய்கின்றீர்கள். ஜெயதேவன் அன் கோகள் மக்கள் விரோதிகள் தான். ஏகாதிபத்தியத்தின் முன்னால் மண்டியிட்டு அவர்களின் கால் ப+ட்சை நக்கியே சுத்தம் செய்யத் தொடங்கிவிட்டனர். அதையே இன்று ரி.பி.சியில் அரங்கேற்றுகின்றனர். இன்று உங்களைப் போன்றே, புலியெதிர்ப்புக் கும்பலும் அரசியல் செய்ய முனைகின்றது. பொய்யையும், புரட்டையும், திரிபையும் தான் புலியெதிர்ப்பு இணையங்கள் படிப்படியாக தமது சொந்த அரசியல் சிந்தனையாக உருவாக்கி வருகின்றனர். இதை நாம் மற்றொரு கட்டுரையில் பார்க்கவுள்ளோம்.
சபேசன் கூறுகின்றார் "மாத்தையா தண்டிக்கப்பட்ட பொழுதும் மற்றைய இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுத்த பொழுதும் பேசாமல் இருந்த நீங்கள் இப்பொழுது அவைகளை தவறு என பேசுகிறீர்கள். இது நகைப்புக்கிடமான ஒன்றாக இல்லையா? எதற்கெல்லாம் முன்பு நீங்கள் துணை போனீர்களோ, அதற்கு எதிராக இப்பொழுது பிரச்சாரம் செய்கிறீர்கள். இதில் உங்களுக்கும் கருணாவிற்கும் வித்தியாசம் இல்லை. கருணா விசாரணைக்கு அழைத்ததும் துரோகம் செய்தான். நீங்கள் விசாரணை முடிந்து விடுவித்த பிறகு துரோகம் செய்கிறீர்கள்." என்கின்றீர்கள். மக்களுக்கே கருத்துச் சொல்லும் உரிமை, எழுத்துரிமை, பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்ட நிலையில், அதை வழங்கினால் புலிகள் அரசியல் அனாதையாகிவிடுவார்கள் என்று புலிகளே ஒத்துக்கொண்ட ஒரு அமைப்பின் உள்ளே, இதைப்பற்றி பேசினால் என்ன நடக்கும் என்பதை உங்களைத் தவிர அனைவரும் அறிந்ததே. பாம்பின் காலை பாம்பு அறியும் என்பார்கள். உங்களுக்கு என்ன நடக்கும், எப்படி நடக்கும் என்பது நன்கு தெரியும். அவரை உயிருடன் விட்டது பிழை என்பதை நியாயப்படுத்தி கருத்துரைக்கின்றீர்கள் அல்லவா! அவர்கள் முன்னமே அமைதி காப்பது, மௌனம் காப்பது, இயக்கத்தில் தப்ப வழியின்றி நீடித்திருப்பது சிலவேளைகளில் அவசியமானதாக இருக்கலாம். (இதில் ஜெயதேவன் விதிவிலக்கு, அவர் ஐரோப்பாவில் இருந்தவர்) அது அப்படித் தான் இருக்கும். அதை வரலாறு நிறுவிக் காட்டும். எதிர்காலத்தில் இப்படி பலர் பலவிடயத்தை புலிக்கு எதிராக, புலிக்குள் இருந்தே கொண்டு வருவார்கள்.
ஆனால் இங்கு விடயத்தின் முரண்பாடு எங்கே உள்ளது என்றால், கருணாவும் ஜெயதேவனும் புலியில் இருந்து வெளிவந்த பின் எந்த அரசியலைக் கொண்டுள்ளனர் என்பதே எம்முன் உள்ள அடிப்படையான பிரச்சனையாகும். புலியின் அதே அரசியல், அதே பாணி, அதே நடைமுறை. இதுதான் முரண்பாட்டின் மையமான விடயம். கருணாவும், ஜெயதேவனும் புலியின் அதே அரசியலை முன்வைக்கின்றனர். யாரும் எவரும் மறுத்து நிறுவமுடியாது. மக்கள் பற்றி, அவர்களின் சமூக பொருளாதார வாழ்வு பற்றி சிறிது கூட அக்கறையற்றவர்கள். மக்களுக்கு எதிராக இயங்குவதில் புலிக்கு சளைத்தவர்கள் அல்ல என்பதை நிறுவிவருகின்றனர். இவர்கள் புலியின் இடத்துக்கு வந்தால் என்ன செய்வார்கள். சுயமாக சிந்தித்துப் பாருங்கள். உங்களைப் போன்று அவர்களும் வருவார்கள். அதற்கு ஒரு பினாமிக் கூட்டம் ரி.பி.சியின் பின் வக்காலத்து வாங்கியே உருவாகி வருகின்றது. முன்னைநாள் ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் தனது சொந்த இடதுசாரிக் கருத்துடன் பின்னால் தள்ளப்படுகின்றார். இதே போன்றே பசிருக்கும் நிகழ்கின்றது. தீவிர வலதுசாரிய ஜெயதேவனின் ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது. இங்கும் புலி அரசியல், புலியெதிர்ப்பு அரசியலாக மேலோங்கி ஆதிக்கம் பெறத் தொடங்கியுள்ளது.
அடுத்து சபேசன் சொந்த புத்தியை தலைவரிடம் அடகு வைத்தும், அதை வைக்கக் கோரியும் வைக்கும் புலி வாதத்தைப் பார்ப்போம். "உங்களின் உரைகளையும் எழுத்துக்களையும் படிக்கும் போது எமது நாட்டின் மதியுரைஞர் மீது அதிகமான தாக்குதல்களை நடத்தி வருவது கண்கூடாக தெரிகிறது. நீங்கள் அவரை விட அதிகம் படித்திருந்தும், அவருக்கு கிடைக்கும் மதிப்பும் மரியாதையும் உங்களுக்கு கிடைக்கவில்லையே எனும் காழ்ப்புணர்வில் அவர் மீது தாக்குதல் நடத்துவது போல் தெரிகிறது. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இப்பொழுது அறுபதாம் ஆண்டுகளில் இல்லை. இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம். ஏட்டுச்சுரக்காய்கள் எப்பொழுதும் உதவுவதில்லை." முட்டாள்களின் வால்கள் இப்படித்தான் கூறமுடியும். கல்விபற்றி பெருமை, அறிவு பற்றி பெருமை எல்லாம் தனிமனிதனை புகழ்வதில் முடிகின்றது என்றால், அவன் முட்டாள் தான். சமூகம் சார்ந்து கற்காத கல்வி எவையும் அறிவல்ல. சமூகத்தை புரிந்து கற்பதும், அதை கூறுவதும் தான் அறிவு. இது ஜெயதேவனுக்கும் கிடையாது. மதியுரையர் பாலசிங்கத்துக்கும் கிடையாது. இவர்களின் அறிவுரை கேட்கும் தலைவருக்கு உண்டு என்று எப்படி கூறமுடியும். பாலசிங்கத்தை எடுத்தால் அடிமுட்டாள். உளறுவதைத் தவிர, வக்கிரத்தை வசைபாடும் அரசியலை வரிந்து கொண்ட ஒருவன். மக்களின் வாழ்வின் மீதான காழ்ப்புணர்வுடன் வன்மம் மிக்க வசைபாடுபவன்.
"இயற்கையை ஆசானாகவும் அனுபவத்தை வழிகாட்டியாகவும் கொண்டு தமிழீழத்தை வீறு நடை போட வைத்திருக்கும் தலைவரின் காலத்தில் வாழ்கிறோம்." யார் வாழ்வதற்காக நாம் போராடுகிறோம். மக்களா! தலைவரா: யார் வாழ்வதற்காக நாம் போராடுகின்றோம். மக்கள் பற்றி அவர்களின் வாழ்வுபற்றி, அவர்களின் சமூக பொருளாதார நெருக்கடிபற்றி தலைவரால் ஒரு வார்த்தை பேசமுடியுமா, சிந்திக்க முடியுமா? அதற்கு ஒரு தீர்வை வைக்கமுடியமா? சரி உங்களால் முடியுமா? தலைவரிடம் சிந்திக்கும் சுதந்திரத்தை அடகுவைத்த பின் புலிப் பினாமியாக பினாற்றவே முடியும். சரி புலியெதிர்ப்பு இந்த ஜெயதேவன் கும்பலால் வைக்க முடியமா? அதை எதிர்த்து அவரால் அறிவு மூடத்தில் பினாற்ற முடியும்.
அண்மையில் ஜெயதேவன் ரி.பீ.சி வானொலியில் "லெனின் லும்பன்களைப் பாவித்து தனக்கு எதிரான புத்திஜீவிகளை அழித்தார்" என்றார். இதைப் போல் தான் புலிகளும் லும்பன்கள், காடையர்கள்.. கொண்டு செயல்படுவதாக பினாற்றினான். இதற்கு தேனீயில் தன்னை மூடிமறைக்கும் புலியெதிர்ப்பு அரசியல் அனாதையொன்று திரொக்கியத்தின் பெயரில் வம்பளந்தது. அந்த திரொக்சிய அரசியல் அனாதை, ஸ்ராலின் மீது இப்படிக் கூறியது. இஇந்த இரு புலியெதிர்ப்புக் கும்பலும் ஒன்றையே செய்ய முனைந்தனர் என்பதே இதில் உள்ள அடிப்படை விடையமாகும். அந்த திரோக்சிய அரசியல் அனாதை முன்பு இதே ஜெயதேவனிடம், புலியெதிர்ப்புக்கு ஒரு திட்டத்தை முன்வைக்க வேண்டும் என்று திரொக்சிய தோழமையுடன் ரி.பி.சி வானொலியில் வேண்டுகோள் விடுத்தது.
ஜெயதேவன் பிரிட்டிஸ் அரசியல் ஏஜண்டாக, அதன் தயவில் புலியெதிர்ப்பு பிரிட்டிஸ் அரசியலை செய்வதை தொடங்கியவுடனேயே, மார்க்சியத்தை கொச்சைப்படுத்துவதை அடிப்படையாக கொள்கின்றார். புலிகள் என்ற தீவிர மக்கள் விரோத வலதுசாரியத்தை எதிர்த்து மற்றொரு மக்கள் விரோத வலதுசாரி மாற்றை உருவாக்குவதென்றால், எதை எதிர்க்க வேண்டும். அது நிச்சயமாக இடதுசாரியக் கருத்தைத்தான். இந்த வகையில் தான் எல்லோரும் அறிந்த ரி.பி.சி ஆய்வாளர் சிவலிங்கம் அரசியல் அனாதையாக்கப்படுகின்றார். பொதுவான இடதுசாரிக் கருத்தை எதிர்ப்பது என்ற நிலையில், மார்க்சியத்தை எதிர்ப்பதில் வன்மம் மிக்க வக்கிரமே கொப்பளிக்கின்றது.
சாதாரண இடதுசாரிய நிலையில் 09.02.2006 அன்று ரி.பி.சியின் அரசியல் ஆய்வு தளத்தில் குமாரின் கருத்தை எதிர்த்து, வலதுசாரிய ஜெயதேவன் உணர்ச்சிவசப்பட்டு முன்வைத்த கருத்துகளும், வன்மமும் கொண்ட அரசியல் தமிழ் சமூகத்தினுள் புலியல்லாத மற்றொரு புதிய எதிரியை தொடர்ச்சியாக இனம் காட்டிவருகின்றது. குமாரை எதிர்த்து ஜெர்மனியைச் சேர்ந்த ஜெகநாதன் பழைய புளாட் பாணி அரசியலை பினாற்றிய போதும் சரி மற்றும் பலரும் இது தொடர்பாக கருத்துரைத்த போது, அதில் வன்மம்மிக்க இடது எதிர்ப்புநிலை மேலோங்கி தொடர்ச்சியாகவே அம்பலமாக்கி வருகின்றது.
இந்த கும்பலால் தான் லெனின் திரிக்கப்படுகின்றார். லெனின் அராஜகத்துக்கு எதிரான போராட்டத்தை நடத்தியவர். அதை அவர் பல தளத்தில் நடத்தியவர். அவர் சுடப்பட்ட போது, அவரைச் சுட்டவர்கள் அராஜகவாதிகள் தான். இவர்களுக்கு மேற்கத்தைய உங்களைப் போன்ற ஏஜண்டுகள் உதவி செய்தனர். புத்திஜீவிகளை அழித்தார் என்பதே நகைப்புக்குரியது. சோவியத்தின் வளர்ச்சி மற்றும் அதன் வீழ்ச்சியிலும் சோவியத் மக்கள் அனுபவித்த உரிமைகள் தர்க்க சான்றாகவுள்ளது. சோவியத் புரட்சிக்கு பின் சோவியத்தின் அறிவு விருத்தி, நூல்களின் பெருக்கம், புத்திஜீவிகளின் அதிகரித்த எண்ணிக்கை எல்லாம் இங்கு சான்றாகவேவுள்ளது. இதை பற்றி நான் எழுதி வெளிவரவுள்ள நூலில் விரிவாக பார்க்கமுடியும். பார்க்க நூலை.
இந்த மண்ணில் சொர்க்கத்தைப் படைப்போம்
மார்க்சிய எதிர்ப்பு புலியெதிர்ப்பில் இது மையங் கொள்கின்றது. இதுவே புலியின் நிலை கூட. இதைப்பற்றி மற்றொரு கட்டுரையில் பாhக்கவுள்ளேன். 'ஒரு பேப்பர்' பத்திரிகையில் தொடங்கி நிதர்சனம் டொட் கொமின் வைப்பாட்டியாக உருவான நெருப்பு டொட் கொமின் வக்கிரம் வரை பார்க்கவுள்ளேன். அத்துடன் புலியெதிர்ப்பு கும்பலின் புலியெதிர்ப்பு அரசியலுடன் ஏகாதிபத்திய ஆதரவு என்ற புதிய நிலைப்பாடும், உலகமயமாதல் ஆதரவு தேசிய எதிர்ப்பு என்ற ஏகாதிபத்திய ஆதரவு கொண்ட புலியெதிர்ப்பு தந்திர உபாயமும், இடதுசாரிய எதிர்ப்பு என்ற அவர்களின் வலதுசாரிய அரசியல் சித்தாந்தம் வரை அடுத்த கட்டுரை உங்களுடன் ஆராயவுள்ளது.
11.02.2006