book _10.jpgசமகாலத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான பல்வேறு மனிதவிரோதசெயல்கள் மீதான ஒரு தொகுப்பு நூல் இது. மனிதத்தை நோக்கியும், மனிதத்தை நேசித்தலை நோக்கி முன்னேறுதல் என்பது அன்றாடம் அடிசறுக்குகின்றது. அதுவென்னவென்று கேட்கின்ற அளவுக்கு, அது அர்த்தமிழந்த ஒன்றாக பல்லிளித்து நிற்கின்றது. நாள்தோறும் மனிதனுக்கு எதிரான புதிய சதிகள், திட்டங்கள். பாவம் தமிழ்பேசும் மக்கள். மனிதனுக்கு எதிரான நிலைகளில், நிலைமைகளில் அன்றாடம் நடக்கும் அதிரடி மாற்றங்கள், அதிர்வுகள். அவற்றில் சிலவற்றை இந்த நூல் மூலம் உங்களுடன் பேச முனைகின்றேன்.


சமாதானம், அமைதி தொடங்கிய பின், ஒன்று இரண்டு என்று தொடங்கிய தொடர் கொலைகள், இன்று அன்றாடம் இரட்டை இலக்கத்தை எட்டி நிற்கின்றது. பலர் திடீர் திடீரென காணாமல் போகின்றனர். ஏன், எதற்கு காணாமல் போகின்றனர், கடத்தப்படுகின்றனர், கொல்லப்படுகின்றனர் என்று யாருமே புரிந்துகொள்ள முடியாத வகையில் அவை தொடருகின்றன. இதை எதிர்ப்பதாக பாசாங்கு செய்தபடி ஆதரிப்பதே, ஒவ்வொரு அரசியல் எதிர் தரப்பினரதும் அன்றாட அரசியலாக உள்ளது. இந்த மனித அவலங்களை இட்டு அக்கறைப்படுவது கூட கிடையாது. கொலை, கொள்ளை, கடத்தல், இதுவே தமிழ் மக்களின் உரிமையுடன்
தொடர்பானதாக காட்ட முனைகின்றனர். இதற்குள் பிரிவுகளும், பிளவுகளும், கோட்பாடு சார்ந்து நிகழ்கின்றது.

 

மக்களின் நலனை எட்டி உதைத்து கொள்வது முதல், மக்களின் எதிரிகளுடன் கூடிக் கும்மாளம் அடிப்பதே அரசியலாகி, அதை நியாயப்படுத்துவதே அரசியலாகிவிட்டது என்ற நிலை. மக்கள் நலனைக் கோரினால், அது பலருக்கு ஆச்சரியமான விடயமாகிவிடுகின்றது. விசித்திரமான மனிதனைப் பார்ப்பது போல் பார்க்கின்றனர். இது புலிகள் மட்டுமல்ல, புலியல்லாத தரப்பு நிலையும் இதுதான். இப்படி இரண்டு தரப்பு பாசிஸ்ட்டுகளுக்கு இது ஆச்சரியமாக அல்லாமல் எப்படித்தான் இருக்கும் எங்கும் எதிலும் பாசிசம. அவர்களின் நடைமுறை முதல் கொள்கை கோட்பாடு அனைத்தும் பாசிசமாகிவிட்டது. பேரினவாதம் இதன் கீழ் தான் பலமடைகின்றது. தனது பாசிச நடத்தையை செங்கோலாக காட்டி, அதையே ஜனநாயகமென்கின்றது. சமாதானம், அமைதி, தீர்வு என்று போடும் அரசியல் வேஷங்கள் எல்லாம் அலங்கோலமாகி நிற்கின்றது.

 

இதில் உள்ள 28 கட்டுரைகள், இதன் ஒருபகுதியை உங்கள் முன் அம்பலமாக்குகின்றது. இவை www.tamilcircle.net என்ற இணையத்தில் அன்றாடம் வெளியாகியவற்றில் ஒரு பகுதிதான்.
சமூகத்தை அரசியல் ரீதியாக புரிந்து கொள்ளவும், கற்றுக்கொள்ளவும், இக்கட்டுரைகள் வழிகாட்டும் என்று நம்புகின்றோம்.


பி. இரயாகரன்.
25.02.2007
www.tamilcircle.net