பொல்பொட் கால கம்போடியாவில் எடுக்கப்பட்ட ஒரேயொரு படம் Year Zero", அன்று அமெரிக்காவில் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. 1975 ம் ஆண்டு, வியட்நாம் யுத்தத்தின் நீட்சியாக கம்போடியாவில், அமெரிக்க விமானப்படை கண்மூடித்தனமான விமானக் குண்டுவீச்சில் இரண்டு மில்லியன் மக்களை கொன்று குவித்த போது, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி நிக்சன் கூறிய விளக்கம்: "இது பைத்தியக்காரனின் போரியல் கோட்பாடு". கம்போடியா தொடர்பான சர்வதேச மன்னிப்பு சபையின் அறிக்கை, கம்போடிய இனப்படுகொலையில் கொல்லப்பட்ட நான்கு மில்லியன் மக்களில், குறைந்தது இரண்டு மில்லியன் ஆவது அமெரிக்க படைகளினால் கொல்லப்பட்டனர், என்று கூறுகின்றது.

 

அமெரிக்க குண்டுவீச்சின் எதிர் விளைவாக, அதுவரை மக்கள் ஆதரவற்றிருந்த, பொல்பொட் தலைமையிலான, "க்மெர் ரூஜ்" என்ற கெரில்லா இயக்கத்தின் பின்னால் மக்கள் பெருமளவில் அணிதிரண்டனர். மக்கள் ஆதரவுடன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய க்மெர் ரூஜ், உலகம் அதுவரை காணாத ஆட்சியதிகாரத்தை மக்கள் மீது திணித்தனர். தலைநகர் நோம்பென்னிற்கு வந்த க்மெர் ரூஜ் போராளிகள், அனைத்து மாநகரவாசிகளையும் சில மணிநேரத்துக்குள் வெளியேறுமாறு உத்தரவிட்டனர். (மீண்டும் அமெரிக்க விமானங்கள் வந்து தாக்கலாம் என்ற அச்சம் ஒரு காரணமாக வைக்கப்பட்டது)

 

நகரங்கள் வெறிச்சோடின. மக்கள் அனைவரும் நாட்டுப்புறங்களில், விவசாயக் கிராமங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் குடியேற்றப்பட்டனர். இந்த வரலாறு காணாத இடப்பெயர்வினால், குடும்பங்கள் பிரிந்தன, பாடசாலைகள் மூடப்பட்டன. எல்லா மதங்களும் தடை செய்யப்பட்டன. வழிபாட்டுத்தலங்கள் இடிக்கப்பட்டன, அல்லது இழுத்து மூடப்பட்டன. மத்திய வங்கி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது, பணம் என்ற ஒன்றே இல்லாமல் போனது. மக்கள் அனைவரும் விவசாய உற்பத்திகளில் ஈடுபடுத்தப்பட்டனர். எல்லாமே பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பமாவதாக க்மெர் ரூஜ் கூறியது. அந்தப் புதிய காலகட்டத்தின் ஆரம்பம் தான் 0 (Year Zero).

 

க்மெர் ரூஜ் இயக்கம், மத்திய தர வர்க்கம் முழுவதையும் எதிரியாகப் பார்த்தது. அதன் விளைவு, ஆசிரியர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள், வக்கீல்கள், பிற தொழில்துறை வல்லுனர்கள், வெளிநாட்டவர்களுடன் தொடர்பு வைத்திருந்தவர்கள்... இவ்வாறு ஆயிரக்கணக்கான கம்போடியர்கள் சித்திரவதை செய்து கொன்று குவிக்கப்பட்டனர். இவ்வாறு எதிரிகளாக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உணவு மறுக்கப்பட்டு, பிள்ளைகள் போஷாக்கு குறைபாட்டால் இறந்தனர்.

 

கம்போடியாவில் நான்கு ஆண்டுகள் க்மெர் ரூஜ்ஜின் ஆட்சி நடந்தது. இறுதியில் அண்டைநாடான வியட்நாமுடன் எல்லைப்பிரச்சினையில் சண்டை மூண்ட போது, இது தான் தருணம் என்று, சில க்மெர் ரூஜ் அதிருப்தியாளர்கள் வியட்நாமுக்கு ஓட, வியட்நாமிய இராணுவம் படையெடுத்து வந்து, க்மெர் ரூஜ்ஜின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவு கட்டியது. அந்த காலகட்டத்தில் அங்கே சென்ற ஆங்கிலேய ஊடகவியலாளர் John Pilger, அப்போது அங்கிருந்த நிலையை, பொது மக்கள் படும் துன்பத்தை பற்றி "Year Zero" என்ற தலைப்பிலான படமாக எடுத்தார். அந்தப்படம் ஐரோப்பாவில் காண்பிக்கப்பட்ட பின்பு தான், சில உதவி நிறுவனங்கள் கம்போடியாவிற்கு சென்றன.


YEAR ZERO

 
கம்போடிய மக்களின் அவலத்தை கண்முன்னே கொண்டு வரும் அதே வேளை, அன்று மேற்குலக நாடுகள் எந்த உதவியும் வழங்காமல் பாராமுகமாக இருந்ததையும், மனித அவலத்திற்கு காரணகர்த்தாக்களான "க்மெர் ரூஜ்" அன்று அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டதையும் இந்த ஆவணப்படம் எடுத்துரைக்கின்றது. பனிப்போர் காலகட்டம் அது. சோவியத் முகாமை சேர்ந்த வியட்நாமை எதிர்க்க, க்மெர் ரூஜ்ஜிற்கு அமெரிக்கா ஆயுத/நிதி உதவி வழங்கியது. அதனால் அன்று க்மெர் ரூஜ் செய்த அட்டூழியங்களை, இனப்படுகொலைகளை எல்லாம் அமெரிக்கா கண்டு கொள்ளவில்லை.

 

எங்கேயெல்லாம் மனித அவலம் நிகழ்கிறதோ, அங்கெல்லாம் தான் தலையிடுவேன், என்று கூறும் அமெரிக்கா; பிற்காலத்தில் "கம்போடிய இனப்படுகொலைக்கான நீதிமன்றம்" அமைத்து, பொல்பொட் உட்பட க்மெர் ரூஜ் தலைவர்களை விசாரிக்க துடிக்கும் இதே அமெரிக்கா, அன்று இதே குற்றவாளிகளுக்கு உதவி புரிந்தது! நண்பர்கள் பகைவர்களாவதும், பகைவர்கள் நண்பர்களாவதும், அமெரிக்க சரித்திரத்தில் சகஜம். சர்வதேச நீதிமன்றம் அமைத்தால், அதில் அமெரிக்க அரச அதிகாரிகளும் விசாரிக்கப்பட வேண்டும் என பொல்பொட் கூறியதால், கடைசி வரை பொல்பொட் நீதிமன்றத்தில் நிறுத்தப்படாமல், வீட்டுக்காவலில் இறந்த பின்னர் தான், கம்போடிய படுகொலைகளுக்கான ஐ.நா. சபையின் கீழான நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

 

எப்போதும் வெல்பவர்களே சரித்திரத்தை எழுதுவதால், கம்போடிய இனப்படுகொலையில் அமெரிக்காவின் பங்கு பற்றி, இன்றைய தலைமுறை எதுவுமே அறியாமல் இருக்கலாம். இந்த ஆவணப்படம் அவர்களது அறியாமையை தகர்க்கின்றது.