இனப்பிரச்சனையில் அமெரிக்காவின் தலையீடுகள் அத்துமீறி அதிகரித்துச் செல்லுகின்றது. நேரடியான ஆக்கிரமிப்புக்கான புறச்சூழலைத் திட்டமிட்டே அமெரிக்கா உருவாக்கி வருகின்றது. இந்த வகையில் ஒஸாமா பின்லேடன் தலைமையிலான அல்-ஹைடா என்ற இஸ்லாமிய அடிப்படைவாத மதவாதக் குழுவுக்கு, கடலில் தற்கொலைத் தாக்குதலை எப்படி நடத்துவது எனப் புலிகள் பயிற்சி அளித்ததாக அமெரிக்கவின் "கடல் புலனாய்வுப் பிரிவு" குற்றம்சாட்டியது. "கடல் புலனாய்வுப் பிரிவைச்" சேர்ந்த கிவ்வென் கிம்மில்மன் புலிகளிடம் இருந்து "ஜமா இஸ்லாமியா" பெரும் பலன்களை பெறுவதாக கூறியதன் மூலம், புலிகள் மேல் கத்தியைத் தொங்கவிட்டுள்ளது அமெரிக்கா. ஒட்டு மொத்தத்தில் இலங்கை இனமுரண்பாட்டின் ஒரு இனப் பிரிவைச் சார்ந்து வெற்றிகரமாக தலையிடுவதற்கான அடிப்படையை அமெரிக்கா உருவாக்கிவருன்றது. அதே நேரம் புலிகளினால் பாதிக்கப் பெற்ற தரப்பின் நிபந்தனை அற்ற ஆதரவையும் கூட அமெரிக்கா பெற்று நிற்கின்றது. இலங்கை இனமுரண்பாட்டின் பின்னணி சூத்திரதாரிகளே, இன்று இலங்கையில் தலையிட முனையும் இந்த ஏகாதிபத்தியங்கள் தான் என்ற உண்மையை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.


1983 இனக் கலவரவரத்தை சிங்கள இனவாதிகள் திட்டமிட்டு நடத்திய போது, தமிழ் மக்கள் ஒடுக்கப்படுவதை அமெரிக்கா நேரடியாக ஆதரித்தது. இனவாதிகளுக்கு சாமரம் வீசிவிட்டது. இலங்கையை விபச்சாரம் செய்ய திறந்து விட்ட அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன ஒடுக்கமுறையின் அவசியத்தை அங்கீகரித்தது. இன ஒடுக்குமுறை தான், இலங்கையை விபச்சாரம் செய்யும் வக்கிரத்தை மூடிமறைக்கும் என்பதைக் கொள்கை ரீதியாக அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. இதை அவர்கள் தமது கொள்கையாகவே பிரகடனப்படுத்தினர். 1983 இனக்கலவரத்தை ஒட்டி உத்தியோக ப+ர்வமான 1984-ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் அறிக்கையில் "சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில், பயங்கரவாதிகள் நடந்துகொண்டதன் விளைவாகவே ஏற்பட்ட சம்பவம் இனக்கலவரமாகும்" என்று பச்சையாகவே விளக்கம் அளித்தனர். இப்படி உலகம் எங்கும் பல நாடுகளில் இது போன்று விளக்கமளித்து, தலையிட்ட வரலாறு நீண்டு கிடக்கின்றது. இப்படித்தான் அன்று இனவாதத்துக்கு ஆதரவு அளித்து யுத்தத்தை வீங்க வைத்தனர். இதன் மூலம் இலகுவான பொருளாதார சரணடைவுகளையும், இலங்கையில் நேரடித் தலையீடுகளையும் நடத்தக் கூடிய ஒரு சர்வதேசச் சூழலை உருவாக்கினர்.


1983-ல் சிங்கள இனவாதிகள் ஏகாதிபத்திய ஆதரவுடன் நடத்திய இனக் கலவரத்தை அடுத்து, அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கஸ்பர் வெயின் போகர் 1983 அக்டோபர் முதலாம் திகதி இலங்கை வந்ததுடன், இனவாதிகளுக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார். 1984-இல் அமெரிக்கப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் nஐசப் அடாப்போ தலைமையில் ஆறு பேர் கொண்ட குழு ஒன்று இலங்கை வந்தது. இராணுவ உதவியாக 3.5 லட்சம் (இன்றை பெறுமானப்படி அண்ணளவாக 3.5 கோடி ரூபா) டொலர் அமெரிக்கா வழங்கியதுடன், இராணுவப் பயிற்சி மற்றும் கடற்படையைப் பலப்படுத்தவும் உறுதி அளித்ததுடன் யுத்தத்தைத் தொடர ஊக்கம் அளித்தனர். 1983-இல் இலங்கையின் இராணுவச் செலவு வெறுமனே 151.2 கோடி ரூபா மட்டுமே. அமெரிக்கா வழங்கிய நிதி மற்றும் இராணுவ ஒத்துழைப்புக்குப் பிரதி உபகாரமாக திருகோணமலை எண்ணைக் குதத்தில் அமெரிக்க யுத்தக் கப்பல்கள் எண்ணை பெறவும், அமெரிக்கா ஒளிபரப்பு நிலையத்தை இலங்கையில் அமைக்க 1000 ஏக்கர் நிலத்தையும் தானமாக வழங்கியது. இப்படித் தான் திட்டமிட்டு யுத்தம் விரிவாக்கப்பட்டது. ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துக் கொண்ட அமெரிக்காவின் தலையீடு இலங்கையில் அதிகரித்தது. தமிழ் மக்களின் போராட்டத்தைப் பயங்கரவாதமாக சித்தரித்தது. சிங்கள இன ஒடுக்குமுறையை ஜனநாயகத்துக்கான தற்காப்பு போராட்டம் என்றது. உலகளாவிய தலையீட்டுக் கொள்கையை அமெரிக்கா இப்படித் தான் உருவாக்கி வருகின்றது. புலிகளின் அரசியல் வங்குரோத்துடன் கூடிய தனிநபர் அழித்தொழிப்பை, அமெரிக்கா தனது பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டது.


இப்படி இனவாத யுத்தத்துக்கு ஆதரவான அமெரிக்கத் தலையீடு, பல்வேறு கட்டங்களைத் தாண்டி இலங்கை அண்மை யுத்த நிறுத்தத்தை அடைந்துள்ள நிலையில், நேரடியாகவே களத்தில் இறங்கியுள்ளது அமெரிக்கா. 11.11.2002 அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸ் மட்டக்களப்புக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டதுடன் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரமுகர்களைச் சந்தித்து அமெரிக்க நலன்களை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளை முன்வைத்தார். பின்னர் மட்டக்களப்பு கெயர் அலுவலகத்தில் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் அ. சந்திரநேரு, கிழக்குப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் மா.செ.மூக்கையா போன்றோரையும் சந்தித்தார். அரசியல் பிரமுகர்கள், இராணுவத் தளபதிகள், சமூகப் பிரமுகர்கள், வர்த்தகர்கள் என்று சமூகத்தை ஏமாற்றும் பலவிதமானவர்களை அமெரிக்கத் தூதுவர் அடிக்கடி வடக்கு கிழக்கு முதல் கொழும்பு வரை சந்தித்து வருகின்றார். அமெரிக்க நலன் சார்ந்த கைக்கூலிகளை பலப்படுத்துவதன் மூலம் இலங்கையில் அமெரிக்க நலன்களை உறுதி செய்வதே சந்திப்புகளின் அடிப்படைக் குறிக்கோளாக உள்ளது.


அமெரிக்க நலன்களின் அடிப்படையில் 24.11.02 கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸ் அறிக்கை ஒன்றை விடுத்தார். இனப் பிரச்சனைத் தீர்வு முயற்சியில் நோர்வே அரசு வெளிப்படையானதும், உயர்ந்த நோக்கத்துடனும் செயற்படுகிறது என்றார். அவர் தனது அறிக்கையில் இலங்கை அமெரிக்கப் படையினர் மத்தியில் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றார். அமைதி சமாதானம் என்பது சரக்கு உலகமயமாதல் போக்கில் ஒரு அங்கமே என்பதை அமெரிக்கா மீண்டும் தெளிவுபடுத்தியது. இவை ஒன்று உள்நாட்டுச் சரக்கு அல்ல என்பதையும், இது வெறுமனே நோர்வையினது அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி, இது எம்முடையது தான் என்பதை தெளிவாகச் சுட்டிக் காட்டி நோர்வையை பாராட்டுகின்றார்.


இதனடிப்படையில் 26.11.02 ஒஸ்லோ மாநாட்டில் உரையாற்றிய அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர், புலிகளுக்கு மூன்று நிபந்தனைகளை விதித்தார். வன்முறையைக் கைவிட வேண்டும், தனிநாட்டுக்கான போராட்டத்தைத் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் சுயாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறியதன் மூலம், மறைமுகமாக மிரட்டினார். அத்துடன், புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் வாழும் மக்களின் வாழ்வுக்கான உரிமையைப் போற்றிப் பேணவேண்டும் என்று எச்சரித்தார். அவர் மேலும் வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து புலிகள் விலக்கப்படுவது குறித்து, ஊகிக்க இது பொருத்தமான நேரமல்ல என்றார். புலிகள் மேலான கடுமையான இராணுவ அரசியல் நெருக்கடியை அமெரிக்கா தொடர்ச்சியாகப் பிரயோகிக்கும் வழியில் அவரின் எச்சரிக்கை அமைந்து இருந்தது. தங்கள் மீதான தடையை நீக்கக் கோரும் புலிகளின் கோரிக்கையை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை ஒட்டு மொத்தமாக காட்டிக் கொடுத்த பின் பரிசீலிக்கப்படும் என்பதை மிகத் தெளிவாகவே புலிகளுக்கு கூறிவிடுகின்றார்.


இன்று புலிகளில் 14 ஆயிரம் பேர் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின்றன. அதில் 60 சதவீதம் பேர் 18 வயதுக்குக் குறைவாக இருப்பதாகவும் இத் தகவல் தெரிவிக்கின்றது. இறந்த புலிகளில் 40 சதவீதம் பேர் 9 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்களாகும். வயது ரீதியாக, அறிவியல் ரீதியாக பின்தங்கிய ஒரு விடுதலை இராணுவம், கூலிமனப்பான்மை கொண்டது. எதையும் சொந்தமாக சிந்திக்கத் தகுதியற்றது. இராணுவ வாதம் மக்களுடனான நேர்மையான உறவை எப்போதும் மறுத்து வந்தது. ஒப்பந்தத்தை நேர்மையாகக் கடைப்பிடிப்பதை சாத்தியமற்றதாக்கியது. கட்டாய ஆள்சேர்ப்பு, சிறுவர்களைப் படையில் இணைத்தல் போன்ற ஜனநாயக விரோதச் செயலையே புலிகள் கையாண்டனர். மக்களின் எதிர்ப்புடன் கூடிய அதிருப்தி மற்றும் இதற்கு எதிரான முறைபாடுகள் அதிகரித்தது. இதை அமெரிக்கா புலிகளுக்கு எதிராக மீண்டும் பயன்படுத்தியது. மாசி 2003 முதல் வாரத்தில் யாழ் சென்ற அமெரிக்கத் தூதுவர், சிறுவர்களைப் புலிகள் படையில் சேர்ப்பதற்கு எதிராகக் கடும் எச்சரிக்கையுடன் கூடிய மிரட்டலை விடுத்தார். இந்த எச்சரிக்கையை யாழ் மண்ணில் வைத்து அறிவித்தது, அவர்களின் சொந்தமான அமெரிக்க மண்ணில் வைத்து சாவல் விடும் அதிகாரத் திமிருக்கு சமமாகும். புலிகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் அமெரிக்கா கண்காணித்துக் கொள்வதுடன், மக்கள் விரோத ஒவ்வொரு நடவடிக்கையையும் அமெரிக்கா புலிகளுக்கு எதிராகப் பயன்படுத்திக் கொள்கின்றது.


புலிகள் முரண்டு பிடித்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அமெரிக்காவின் எச்சரிக்கை பலமாக வந்து கொண்டிருந்தது. மாசி 2003 இரண்டாம் வாரம் அமெரிக்க ராஜாங்க அமைச்சர் றிச்சாட் ஆர்மிரெஜ், புலிகள் பயங்கரவாதப் போக்கைக் கைவிட்டு அமைதிக்கு திரும்ப வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்தார். அமெரிக்கா தனது பொருளாதார நலனுக்கு எதிரான அனைத்தையும் பயங்கரவாதமாகக் காட்டும் பயங்கரவாத அடிப்படையில் நின்றே, புலிகளைப் பயங்கரவாத இயக்கமாக வருணிக்கின்றது. இந்த பயங்கரவாத வரையறை மக்களின் நலனில் இருந்து அமெரிக்கா உச்சரிப்பதில்லை. இதனால் தான் புலிகளும் தங்கள் மேலான தடையை நீக்கக் கோரி, நாங்களும் நீங்களும் ஒன்று என்கின்றனர். ஆனால் அமெரிக்காவோ அதை நாங்கள் சொல்லலாமே ஒழிய, நீங்கள் அதைச் சொல்ல முடியாது என்ற நிலைப்பாட்டில் நின்று புலிகளை அடிபணிந்து வரக் கோருகின்றனர்.


புலிகளை அடிபணிந்து வரக்கோரும் அமெரிக்க நிலைப்பாடு இலங்கை மீதான அமெரிக்காவின் கொள்கையாகவே உள்ளது. தொடர் மிரட்டல், எச்சரிக்கையின் அடிப்படையில் 20.11.2003-ல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் ஒரு செய்தியாளர் மாநாட்டை அமெரிக்கத் தூதுவர் ஆஸ்லி வில்ஸ் நடாத்தினார். இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த இறுதித் தீர்வும் நாட்டின் சகல பகுதிகளிலும் ஜனநாயக ஆட்சி நிலவுவதையும், பன்முகத்தன்மை காணப்படுவதையும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்றார். அவர் மேலும் இலங்கையர்களாகிய நீங்களும், உங்கள் தலைவர்களும் தான் நிரந்தர சமாதானம் என்றால் என்ன? இறுதித் தீர்வுகள் எவை? என்பதைத் தீர்மானிக்க வேண்டும். ஒஸ்லோ மாநாட்டில் அமெரிக்கா கலந்துகொள்வதன் மூலம் புலிகள் குறித்த அமெரிக்காவின் நிலைப்பாடு மாறிவிட்டது எனக் கொள்ளக் கூடாது எனறார். சந்தேகங்கள் அற்ற வகையில் புலிகளுக்குத் தமது கொள்கையைப் பிரகடனம் செய்த அமெரிக்கா, சிங்கள இனவாதிகளுக்கு கைகொடுத்து தூக்கிவிட்டது. புலிகளுக்குத் தொடர் எச்சரிக்கை, மிரட்டல், அடிபணியக் கோரும் நிர்பந்தங்களை இரகசியமாக செய்வது ஒருபுறம் இருக்க, பகிரங்கமாக சிங்கள இனவாதிகளுக்கு அமெரிக்கா வேண்டுகோள் விடுத்தது.


இது ஒருபுறம் நிகழ மறுதளத்தில் அமெரிக்கா நேரடியாகவே பகிரங்கமாகக் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றது. 1.11.2003-ல் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்த அறிக்கை ஒன்றில், புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து வட-கிழக்கில் சர்வதேசக் கண்ணிவெடிகள் அகற்றும் குழுவின் அமெரிக்க நிபுணர்கள் இதுவரையிலும் 980 நிலக்கண்ணி வெடிகளையும், வெடிக்காத நிலையில் இருந்த 42 வெடி பொருட்களையும் சுமார் 123,000 சதுர மீற்றர் பகுதியிலிருந்து அகற்றியுள்ளதாகக் கூறியதன் மூலம், தமது நாட்டின் நேரடித் தலையீட்டை உலகறியப் பிரகடனம் செய்தது. இப் பணியில் 26 அமெரிக்க நிபுணர்கள் ஈடுபட்டிருந்ததாகக் கூறியதன் மூலம் இலங்கையிலிருந்து அமெரிக்கா வெளியேற்றம் என்பது சாத்தியமற்ற ஒன்றாக்கியுள்ளது. புலிகளின் தாக்குதல் நடப்பின், 26 பேரின் பாதுகாப்புக் கருதி அமெரிக்கப் படை நேரடியாக இலங்கைக்குள் இறங்கும்.


அமெரிக்கா இலங்கைப் பிரதேசத்தில் தனது தலையீட்டுக்கான பல முக்கிய சந்திப்புகளை நடத்துகின்றன. பல ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றது. இதன் பின்னணியில் திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுடன் தொடர்புபடுத்தி நிலவும் கருத்துக்கு அமெரிக்கத் தூதர் ஜெப்ரி லண்ட்ரெட் பதிலளிக்கத் தவறவில்லை. "திருகோணமலையில் அமெரிக்காவுக்கு கடற்படைத் தளம் தேவையில்லை. எமது யு.எஸ்.எய்ட் அலுவலகம் திருகோணமலையில் திறக்கப்படுவது யுத்தத்தினால் சோர்வுற்ற மக்களுக்கு சமாதான முயற்சியில் நன்மைகள் தெளிவாகத் தெரியக் கூடியதான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கேயாகும். இதுதான் எமது இலட்சியம்." என்றார். கடற்படை தளமும் சரி, யு.எஸ்.எய்ட் அலுவலகம் திறந்தாலும் சரி இரண்டும் ஒன்று தான். அமெரிக்காவின் ஒவ்வொரு பிரஜையையும் காப்பாற்றும் உரிமையின் பெயரில்தான், அமெரிக்கா சர்வதேச ரீதியாகவே மற்றைய நாடுகள் மேலான ஆக்கிரமிப்பிற்கு விளக்கம் கொடுக்கின்றது. அமெரிக்காவின் சிவில் சமூகம் மீதான பாதுகாப்பைக் கூறியே, தலையீட்டை அமெரிக்காவால் நடத்த முடியும். அப்படித் தான் சர்வதேச அளவில் அமெரிக்கா அடாவடித்தனமாகச் செயல்படுகின்றது. ஒருபுறம் தனது (அமெரிக்க) அரசியல் நலன் சார்ந்த ஊழியர்களை வடக்கு கிழக்கில் அமெரிக்கா அன்றாடம் விதைக்கின்றது, மறுதளத்தில் பல பத்து ஒப்பந்தங்கள் தனது தலையீட்டுக்கு இசைவான சரத்துகளை கொண்டுள்ளதால் அதை வரவேற்கின்றது.


இந்த யு.எஸ்.எய்ட் திருகோணமலை அலுவலகம் 2 லட்சம் ரூபா பெறுமதியான உதவிப் பொருட்களின் துணையுடன் 9 அரசு சாராத நிறுவனங்கள் மற்றும் சமூகங்களை மையமாகக் கொண்டு இயங்குகின்றது. அதேநேரம் யு..எஸ்.எயட் அலுவலகம் அம்பாறையில் வேறு திறக்கப்பட்டுள்ளது. 2003 மார்ச் முதல் 88 திட்டத்துக்கு 2.2 லட்சம் டொலர் (அண்ணளவாக 2.2 கோடி ரூபாவை) உதவிகளை வழங்கியதாக தூதுவர் அறிவித்தார். இதைவிட திருகோணமலையில் 14 திட்டத்துக்கு 2.3 லட்சம் டொலரையும் (2.3 கோடி ரூபாவையும்), அம்பாறையில் 23 திட்டத்துக்கு 3.7 லட்சம் டொலரையும் (அண்ணளவாக 3.7 கோடி ரூபாவையும்) அமெரிக்கா நேரடியாக வழங்கியுள்ளது. நேரடியான நிதிகளை வழங்குவது, தன்னார்வக் குழுக்களை உருவாக்குவது, நேரடி அலுவலகங்களைத் திறப்பது என்று அமெரிக்கா வடக்கு கிழக்கில் அதிகளவில் ஊடுருவி வருகின்றது. யாழ்ப்பணத்துக்கு 2004 மாசி மாதம் யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் தென்னாசியப் பிரிவின் பிரதி அதிகாரி மார்க் எஸ்.வாட் தலைமையிலான உயர்மட்டக்குழு யாழ் சென்றது. 5 கோடி ரூபா திட்டமொன்றையும் தொடங்கினர். செயற்கைக் கால் உற்பத்தி செய்யும் ஜெய்ப்பூர் நிறுவனத்தின் மீள் புனரமைப்புக்காக யு.எஸ்.எயிட் 50 லட்சம் ரூபாவை ஏற்கனவே வழங்கியிருந்த நிலையில் அதைப் பார்வையிட்டனர். யாழ் கல்வி வலயத்துக்கு யு.எஸ்.எயிட் வழங்கிய 80 ஆயிரம் ரூபா நிதி உதவியுடனான, ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கலையும் பார்வையிட்டனர். மருதபுரம் கிராமத்துக்கு சென்றதுடன், ஒரு படகையும் ஐந்து கட்டுமரங்களையும் மீனவர்களுக்கு வழங்கினர். மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்ளையும் கூட வழங்கினர். புலிகள் தனிநாடு கோரும் பிரதேசங்களில் தமது அலுவலகங்களைச் சவால் விட்டே திறக்கிறது. யாழ் குடாவில் மற்றொரு தூதரகலாயத்தை அமைக்க முயன்ற அமெரிக்கா, அதைத் தற்காலிகமாகப் பின் போட்டுள்ளது. வவுனியாவில் அமெரிக்கா அலுவலகம் ஒன்றை திறக்க வாடகைக்கு எடுத்த கட்டிடத்தை, புலிகள் கொடுத்த நிர்பந்தம் காரணமாக கட்டிடச் சொந்தக்காரர் அதை மீள பெற்றுள்ளர். அமெரிக்காவுக்கும் புலிகளுக்கும் இடையில் இரகசியமான போர் ஒன்று வடக்கு கிழக்கில் நளாந்தம் நடந்து வருகின்றது.


இதன் ஒரு அங்கமாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகத்தின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று புலிகளுக்கு சவால் விடும் வண்ணம், தரைப்பாதை வழியாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்றது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் ஊடாக இந்தப் பயணம் நடத்தப்பட்ட நிகழ்வு தற்செயலானவையல்ல. ஒரு மிரட்டல் உடன் கூடிய அச்சுறுதலாகவே நடத்தப்பட்டது. மிக நீண்ட பல கெடுபிடியான பயணங்களைக் கொண்ட பாதை வழியாக அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் முன் கூட்டியே சீண்டும் ஒரு ரோந்தை நடத்திப் பார்த்தனர்.


அமெரிக்கத் தலையீட்டின் ஒரு அங்கமாக அமெரிக்கப் பாராளுமன்ற சர்வதேச தொடர்புகள் கமிட்டியின் உயர்குழு ஒன்று இலங்கை வந்தது. அக்குழு யாழ்ப்பாணத்துக்கு வேறு சென்றது. அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் அமைதி முயற்சிகள் மற்றும் அமெரிக்க - இலங்கை உறவுகள் ஆகியவைக் குறித்து இக்குழு அதிகக் கவனம் செலுத்தி ஆராய்ந்தது. அரசு உயரதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சமூகப் பிரமுகர்கள், அரசுச் சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் பலரையும் விரிவாகச் சந்தித்து இரகசிய ஆலோசனைகளை நடத்தினர். இலங்கையின் பொருளாதார, அரசியல், இராணுவத் துறைகள் பலவற்றில் தலையீட்டை அமெரிக்க நலன் சார்ந்து நடத்தினர்.


இராணுவ ரீதியாக அமெரிக்காவும் மற்றும் இந்தியாவும் இலங்கை இராணுவத்தை வழிநடத்தத் தொடங்கியுள்ளது. அடிக்கடி இராணுவச் சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள், கூட்டுப் பயிற்சிகளை நடத்துகின்றன. இந்த வகையில் அமெரிக்க தேசிய இராணுவக் கல்லூரியைச் சேர்ந்த 20 இராணுவ அதிகாரிகள் கொழும்பு வந்ததுடன், இலங்கை இராணுவ அதிகாரிகளை சந்தித்தனர். பயிற்சிகள் பலவற்றை பார்வையிட்டதுடன் இரகசியச் ஆலோசனைகளிலும் ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவின் ஏவுகணை நாசகாரி கப்பல்களில் ஒன்றான ஓகானே (டி.டி.ஜி.77) கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது. இந்தக் கடற்படைக் கப்பல் சுமார் 350 வீரர்களைக் கொண்டது. கடலில் விரைவான, தொடர்ச்சியான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராவதே, இப்போர்க் கப்பலின் வருகையின் அடிப்படை நோக்கமாக இருந்தது. புலிகளை இராணுவ ரீதியாக எச்சரிக்கும் அடிப்படையில் இந்த வருகை மறைமுகமான எச்சரிக்கையை விடுத்தது.


புலிகளை எச்சரிக்கவும், இலங்கை அரசை பலப்படுத்தும் அடிப்படையிலும் அமெரிக்கா நவீன தாக்குதல் கப்பல்களை இலங்கைக்கு வழங்கியது. அமைதி, சமாதான கோசத்தின் கீழ் இராணுவ முஸ்தீப்புகளை அமெரிக்கா ஊக்குவித்தது. இதன் அடிப்படையில் அமெரிக்காவின் கரையோரக் காவல்படை மற்றும் பாதுகாப்புப் பந்தோபஸ்து ஒத்துழைப்புச் செயலணி ஆகியவற்றை உள்ளடக்கிய குழு இலங்கைக்கு வந்தது. அமெரிக்கா தனது மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் திட்டத்தின் கீழ் 210 அடி நீளம் கொண்ட, இடைத்தரத் தாக்குதல் ஆற்றல் கொண்ட கரையோரக் காவலுக்கான மனத்துணிவு (ஊழரசயபநழரள) என்ற இராணுவக் கப்பலை இலங்கைக்கு வழங்குவது தொடர்பாக பேசினர். இதனடிப்படையில் இதற்கான ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக இலங்கையில் கப்பல் தளங்கள், கப்பல் சீர்செய்வதற்கான மேடை வசதிகள், துறைமுகங்கள் போன்றவற்றை இந்தக் குழு பார்வையிட்டது. 2004ஆம் ஆண்டு இறுதிக்கு முன்னர் இலங்கைக்கு வந்து சேரும் வகையில் இக்குழு ஆலோசனைகளை நடத்தியது. இதைவிட ஹெலிகொப்டர் தாங்கிச் செல்லும் நவீனரக கரையோர ரோந்து யுத்தக்கப்பல் ஒன்றை இலங்கைக்கு அமெரிக்கா மானிய விலையில் வழங்கியுள்ளது. இந்தக் கப்பலின் விலை 15 கோடி அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 1500 கோடி ரூபாவாகும்) ஆகும். அமைதி சமாதனம் என்று ஒரு பக்கம் கூறிக் கொண்டு, மறுபக்கத்தில் இராணுவ ரீதியாக இனவாத இலங்கை அரசை பலப்படுத்தும் முயற்சியில் அமெரிக்காவும் இந்தியாவும் பாரிய இராணுவ உதவிகளைச் தொடர்ச்சியாக வழங்குகின்றது. அதேநேரம் புலிகளை மிரட்டி பணியவைக்கும் எச்சரிக்கைகளைத் தொடர்ச்சியாக அச்சுறுத்தும் வகையில் கையாளுகின்றது. புலிகளின் மக்கள் விரோத ஒவ்வொரு நடவடிக்கையையும், உலக மயமாதலுக்கு சார்பாக அமெரிக்கா இலகுவாகவே எடுத்துக் கையாளுகின்றது.


அமெரிக்காத் தலையீட்டை இலகுவாக நடத்தக் கூடிய வகையில் கடல் ஒப்பந்தங்களை இலங்கை செய்துள்ளது. அமெரிக்கத் துறைமுகங்கள் ஊடாகக் கொண்டு செல்லப்படக்கூடிய சரக்குப் பெட்டகங்களின் (கொண்டெயினர்கள்) பாதுகாப்பைப் பலப்படுத்துதல் என்ற பெயரில், கொழும்புத் துறைமுகத்தின் பாதுகாப்பை உயர்த்தும் ஓர் ஒப்பந்தத்தில் அமெரிக்காவும், இலங்கையும் கையெழுத்திட்டன. இதன் மூலம் கப்பல் போக்குவரத்துக்கு இடைஞ்சலான புலிகளின் கடற்படை அமெரிக்காவின் தாக்குதலுக்குரிய இலக்காகியுள்ளது. புலிகள் தாக்காமல் இருக்கும் ஒரு நிலையில் கூட, சரக்கு கப்பலை மூழ்கடித்து அமெரிக்கா புலிகள் மேல் தாக்குதலை நடத்தும் சுதந்திரத்தை இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு இலவசமாகவே வழங்கியுள்ளது. இதைவிட இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள விமானப் போக்குவரத்து உடன்படிக்கையும் அமுலுக்கு வந்துள்ளது. 2003 ஜூன் மாதம் 11ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட இந்த உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டு நாடுகளினதும் விமானக் கம்பெனிகள் கட்டுப்பாடற்ற விமானப் போக்குவரத்துக் களை மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் வழிவகுத்துள்ளது. அதாவது அமெரிக்கா வானது இலங்கை வான்பரப்பை தனக்கு சொந்தமாக்கும் ஒப்பந்தமே இது. இலங்கை வான் பரப்பை அமெரிக்கா கட்டுப்படுத்தவும், கண்காணிக்கும் உரிமையையும் இவ்வொப்பந்தம் வழங்கியுள்ளது. புலிகளின் விமானத் தாக்குதல் என்பது, அமெரிக்கா மீதான தாக்குதலாக கருதப்பட்டு புலிகள் மேலான அமெரிக்காத் தாக்குதலை நியாயப்படுத்த இந்த ஒப்பந்தம் வழியமைத்துள்ளது.


இந்த வகையில் புலிகள் மேலான அதியுயர் நிர்ப்பந்தத்தை அமெரிக்கா பிரயோகிக்கின்றது. அமெரிக்காவின் நேரடி தலையீடு அதிகரித்துள்ள நிலையில், புலிகள் ஒரு அறிக்கையை வெளியிட்டனர். அதில் அவர்கள் "இந்தப் பிராந்தியத்தைச் சாராத சக்திகளை (நுஒவசய வுநசசவைழசயைட - குழசஉநள) தேவை யற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்சினைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளைக் குழப்பி வருகிறது இலங்கை அரசு"- என்று தனது கையாலாகாத்தனமான விமர்சனத்தை புலிகளின் தலைமைப்பீடம் அறிக்கை மூலம் வெளிப்படுத்தினர். உண்மையில் இந்த நிலையை உருவாக்கியவர்கள் வெறும் அரசு மட்டுமல்ல. துரிதமான அமெரிக்காத் தலையீட்டை ஏற்படுத்தும் உந்து விசையைக் கொடுப்பவர்கள் புலிகள் என்ற உண்மையையும் நாம் நிராகரிக்க முடியாது. புலிகளின் அரசியல், தனிநபர் அழித்தொழிப்பை அடிப்படையாகக் கொண்டது. இதில் இருந்தே அமெரிக்காவின் தலையீட்டை நியாயப்படுத்தக் கூடிய தொடர் நடத்தைகள் தூண்டுகோலாக உள்ளது. இதை பின்னால் விரிவாக ஆராய்வோம்.


புலிகளின் விமர்சனம் அரசியலற்ற இராணுவ வாதக் கண்ணோட்டம் சார்ந்து பிரதிபலித்தது. அரசியல் ரீதியாக அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாட்டை ஆதரிக்கும் புலிகள், அமெரிக்கா தம்மை ஆதரிக்கும் கடைக்கண் பார்வைக்காக ஏங்கி நிற்பவர்களே. ஆனால் அமெரிக்கா ஒரு தலைப்பட்சமாக இலங்கை அரசை ஆதரிப்பதையும், தமக்கு எதிரான மிரட்டல்களையும் சகித்துக் கொள்ள முடியாத ஒரு நிலையில் தான் புலிகள் இக்கருத்தை முன்வைத்தனர். அதையும் குறிப்பிட்டுச் சொல்ல வக்கற்றுப் போன நிலையில் புலம்பத்தான் முடிகின்றது.


புலிகளுக்குப் பதிலளிக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தனது எச்சரிக்கையில் "இலங்கையர்கள் தங்கள் பிரச்சினையைத் தங்களுக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது. அவர்கள் அப்படிச் செய்வார்களேயானால், அது உலகுக்கே முக்கியத்துவமான சாதனையாக இருக்கும்." என்றார். இதன் மூலம் இதை நீங்கள் தீர்க்கத் தவறும் பட்சத்தில் என்ன நடக்கும் என்பதை சொல்லாமல் சொல்லிவிடுகின்றார். இலங்கையர்கள் தமக்குள் இப்பிரச்சனையை தீர்க்கத் தவறும் பட்சத்தில், அதை நாங்கள் தீர்த்து வைப்போம். அதாவது புலிகளை அழித்து, தீர்க்கும் வழிமுறையை நாங்கள் கையாள்வதா? அல்லது புலிகள் தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக் கொடுத்து துரோகம் இழைத்து பிரச்சினையைத் தீர்க்கின்றீர்களா என்பதை புலிகளே தெரிவு செய்யக் கூறுகின்றார். இதில் மட்டும் தெரிவு செய்யும் சுதந்திரத்தை புலிக்கு விட்டுவிடுகின்றார்.


மேலும் அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் தனது எச்சரிக்கையில் "புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன்படுத்துவதைக் கைவிடச் செய்யும் அழுத்தமாக, புலிகளை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும். நாங்கள் புலிகளை வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளோம். நாம் அவர்களை வேட்டையாடுவோம். அவர்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க முயற்சிப்போம். இனிமேலும் வெளிநாட்டுப் பயங்கரவாத இயக்கமாகச் செயற்படமுடியாத சூழலில் அவர்கள் பணிபுரிவதனையே நாம் விரும்புகின்றோம். இலங்கை சமாதான நடவடிக்கைகளுக்கான வாய்ப்பைச் சரிவரப் பயன்படுத்தத் தவறுவோர் சரித்திரத்தின் மிக மோசமானவர்களாகக் கணிக்கப்படுவார்கள்" என்று கூறியதன் மூலம், தமது இலக்கைத் தெளிவுபடுத்திவிடுகின்றார். புலிகளை வேட்டையாடும் சகல வழிகளையும் அமெரிக்கா கையாளும் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தினார். புலிகள் அமெரிக்காவின் கடைக் கண் பார்வை கிடைக்கும் என்ற தவிப்பில் விண்ணப்பங்கள் செய்து கொண்டிருக்கும் ஒரு நிலையில், அச்சுறுத்தலை தெளிவாக அமெரிக்கா விடுத்து வருகின்றது. கடைக் கண் பார்வை என்பது ஒட்டு மொத்தத் துரோகத்துடன் தொடர்புடையது என்பதைச் சொல்லாமல் சொல்லி விடுகின்றார். இந்தத் துரோகத்தை சரிவரப் பயன்படுத்தத் தவறுவோர், சரித்திரத்தில் மிக மோசமானவர்களாக கருதப்பட்டு அழிக்கப்படுவர் என்பது அமெரிக்காவின் தெளிவான செய்தி.


அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் மேலும் தனது எச்சரிக்கையில் "சிங்களவர்கள், தமிழர்கள் என்பதற்கு அப்பால் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், பௌத்தர்கள், இந்துக்கள் என்றும் உள்ளனர். அதனால் தான் இலங்கையர்கள் தமக்குள் உள்ள வேறுபாடுகளைத் தாங்களே தீர்த்துக் கொண்டால் அது உலகின் மிகப் பெரிய சாதனையாக இருக்கும் என்று நான் கூறுகின்றேன்" என்றார். 1983 கலவரத்தை பயங்கரவாத நடவடிக்கைக்கு எதிரான மக்களின் கோபமே இனவாதக் கலவரம் என்றது அமெரிக்கா. இன்று இப்படிக் கூறுவது அமெரிக்காவின் இன்றைய நலன். இனமுரண்பாட்டைக் கைவிட்டு மதவாதத்தைக் கையிலெடுக்கக் கோருகின்றது. இது மக்களுக்கு இடையில் பதற்றத்தை தக்கவைப்பதுடன், உலகமயமாதல் நிகழ்ச்சியை நேரடியாக அச்சுறுத்தாது, உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுக்கு சாதகமான சூழலையே இது உருவாக்கி தரும். இதை அவர் மறைமுகமாக எடுத்துக் காட்டுகின்றார். இதனடிப்படையில் இலங்கையில் மதவாதச் சக்திகளின் தீவிர நடவடிக்கைகள் தொடங்கி உள்ளது. சிங்களப் பகுதிகளில் பல பத்து கிறிஸ்துவத் தேவாலயங்கள் தாக்கப்பட்டன. வடக்கு கிழக்கிலும் மதப் பதற்றங்கள் ஆங்காங்கே உருவாகி வருகின்றன. மதமாற்றச் சட்டம் பற்றிய இந்து பௌத்த கூக்கூரல்கள் அடிக்கடி மதப் பதற்றத்துக்கு வித்திடுகின்றது.


அமெரிக்காவின் பிரதி இராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் மேலும் தனது கருத்தில் "இலங்கை விவகாரம் வெற்றியாக முடியும் என்று கூறிக்கொண்டுதான் உதவும் நாடுகள் இந்தப் பங்களிப்பை தர முன்வந்துள்ளன. அத்தோடு சமாதானத்துக்கான வாய்ப்பை இம்முறை சாதகமாகப் பயன்படுத்தத் தவறுவோரைச் சரித்திரம் மிக மோசமாக மதிப்பிடும் என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்" என்று கூறியதன் மூலம், புலிகளுக்கு எதிராக நேரடியான மிரட்டலை விடுத்தார். ஒரு இராணுவத் தலையீட்டுக்கான அனைத்து உள்ளடக்கத்தையும் இது வெளிப்படுத்தி நிற்கின்றது. இலங்கை, ஆக்கிரமிப்பின் எல்லைக்குள், மறுகாலனியாக்கத்தின் விளிம்பில் நிற்கின்றது. பயங்கரவாதத்தை ஒழிக்க, யுத்தத்தை நிறுத்த, மக்களின் ஜனநாயக வாழ்வை உருவாக்க என்ற கோசத்தின் கீழ், இந்த ஆக்கிரமிப்பு நிகழும் வாய்ப்பு அமெரிக்கா உள்ளிட்ட இந்தியாவின் நிகழ்ச்சி நிரலாக உள்ளது.


உலகில் அமெரிக்கக் கனவுடன் உள்ள பண்பாடுகள், கலாச்சாரங்கள், பொருளாதார மேட்டுக்குடி பரம்பரை உள்ளவரை, மக்களை அடக்கியொடுக்க கைக்கூலிக் கும்பல்கள் வரிசையில் நிற்கின்றனர். இதன் ஒரு அங்கமாக அமெரிக்கா வருடாந்தம் வழங்கும் லொத்தர் விஸாவுக்கு, உலகளவில் சுமார் 73 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். இவர்களில் ஒரு லட்சத்து 11ஆயிரம் அதிர்ஷ்டசாலிகள் தெரிவு செய்யப்பட்டனர். ஆகக்கூடுதலானவர்கள் 5126 பேர் வங்காளத்திலிருந்தும், 4259 பேர் நேபாளத்திலிருந்தும், 1833 பேர் தாய்வானில் இருந்தும், 1431 பேர் ஈரானிலிருந்தும், தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். இலங்கைக்கு ஐந்தாவது இடத்தில் 1418 பேர் தெரிவு செய்யப்பட்டனர். அமெரிக்கர் மீதான விசுவாசத்தை பிரதிபலிக்கும் இந்தப் போக்கில், இவ்விண்ணப்பம் லட்சக்கணக்கில் இருந்துள்ளது. அமெரிக்காவுக்குத் தேவைப்படும் கைக்கூலி இராணுவத்தை உருவாக்க போதுமான அளவில் இலங்கையில் பண்பாட்டு, கலாச்சார மட்டங்கள் உயர்ந்த தளத்தில் அமெரிக்க உணர்வுக்கு சாதகமாகவே இன்று உள்ளது.