ஏகாதிபத்திய நலன் என்பது, நாட்டை எப்படி ஒட்டுமொத்தமாக விற்பதன் மூலம், மறு காலனியாதிக்கத்தை விரைவாக ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டது. இலங்கையில் சமாதானம் என்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலின் பின்பாக, இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் மூன்று மடங்காகியது. 2003 இன் முதல் ஆறு மாதங்களில் வெளிநாட்டு மூலதனம் 1,700 கோடி ரூபாவாக இருந்தது. இது 2003-இன் இறுதியில் வெளிநாட்டு முதலீடுகள் 3,000 கோடி ரூபாவாக இருக்கும் என்று, முதலாளிகளின் முதலீட்டுச் சபை அறிவித்து இருந்தது. ஆனால் அது 5000 கோடி ரூபாவைத் தாண்டியது.

 

அனுமதித்த திட்டங்களில் 60 சதவீதமானவைகளில், வெளிநாட்டு நிறுவனங்கள் ஏற்கனவே சூறையாடத் தொடங்கியிருந்தன. இவை பெரும்பாலும் கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில், அதாவது அதியுயர் பாதுகாப்புப் பிரதேசங்களில் முதலீடப்பட்டது. பொல்காவலையில் பெரும் மூலதனத்துடன் கார் தொழிற் சாலையொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. சர்வதேச வர்த்தகத்தின் ஒரு பகுதியாக தொலைபேசி பரிவர்த்தனை விரிவாகின்றது. இதனடிப்படையில் 2003 முடிவுக்குள்ளாக 900 கோடி ரூபா (9 கோடி டொலர்) மூதலதனத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் ஒப்பந்தங்களைச் செய்திருந்தது. இதன் மூலம் 2003 இல் தொலைபேசி எண்ணிக்கை பயன்பாடு 3 லட்சத்தால் அதிகரித்துள்ளது. மூன்று மலேசிய காஸ் நிறுவனங்கள் 2004-இல் இலங்கையில் முதலீடு செய்ய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.


முதலாவது சுப்பர் மக்கற்றுடன் கூடிய வீட்டு அமைப்பு திட்டதிற்கு பசுவிக் சர்வதேச அமைப்பு பம்பலப்பிட்டியில் 85 கோடி ரூபாவை முதலீட்டுள்ளது. இதில் நவீன 58 வீடுகளையும், 93 கடைத் தொகுதி கொண்டதாக கட்டப்படுகின்றது. மத்தியத் தரத்துக்கு மேற்பட்ட பிரிவினரின் நலன்களையும், அவர்களின் சொகுசு வாழ்வையும் உறுதி செய்யும், சுப்பர் மக்கற்றுகளுடன் கூடிய நவீன வீட்டுத் தொகுதிகளை உருவாக்குவதில், வெளிநாட்டு மூலதனங்கள் களமிறங்கியுள்ளது. மக்களின் அன்றாட பொழுது போக்கு இடமான காலி முகத்திடலைத் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு 9.90 கோடி ரூபாவிற்கு தேசிய அரசுகள் விற்றுவிட்டன. மக்களின் தேசிய சொத்தான பஸ் போக்குவரத்தை ஆறுகட்டமாகப் பிரித்து நயவஞ்சகமாக அரசு தனியார்மயமாக்கவுள்ளது. இதன் முதல் கட்டமாக 39 சதவீதப் பங்கை 150 கோடி ரூபாவுக்கு பிரிட்டிஷ் நிறுவனம் ஒன்றுக்கு தாரைவார்த்துள்ளது. இதை அரசு மக்களின் ஆணை, ஜனநாயகத்தின் உயர்பண்பு என்று பீற்றுகின்றனர். மறுபுறத்தில் தனியார்துறையை ஊக்குவிப்பதை எந்தத் தேசியவாதியும் கண்டுகொள்வதில்லை. யாழ்ப்பாணத்தில் யுத்தத்தின் ஊடாகத் தனியார் பஸ்சேவை ஆதிக்கம் பெறுவதை அரசு ஊக்குவித்தது. தமிழ்த் தேசியவாதிகள் இதற்கு தாராளமாகவே எண்ணைவார்த்து கொழுத்தினர். தற்போது 350 பஸ்களுடன் இயங்கும் தனியார்துறை, அமைதி சமாதானம் என்ற கோஷத்தின் கீழ் மேலும் 150 பஸ்களால் தனது பலத்தை அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தேசிய போக்குவரத்தை திட்டமிட்டு அரசு ஒழித்துக் கட்ட, தமிழ்த் தேசியவாதிகள் சாமரம் வீசுகின்றனர்.


இலங்கையில் உழைக்கும் மக்களின் ஓய்வூதியப் பணத்தைக் கொள்ளையிட முயலும் ஏகாதிபத்தியங்கள், அதற்கு இசைவான முதற்கட்ட முயற்சியில் இறங்கியுள்ளது. உலக வங்கியின் உத்தரவுக்கு இணங்க ஓய்வூதிய நிறுவனமான இ.பி.எவ், இ.ரி.எவ் (நுPகு இ நுவுகு) இரண்டும் 2004-இல் இணைக்கப்படவுள்ளது. இதில் உள்ள மொத்தத் தொகை 32000 கோடி ரூபாவாகும். உழைக்கும் மக்களின் ஓய்வூதியப் பணமான 32000 கோடி ரூபாவையும் சுருட்டிக் கொள்ளவும், இதை முறை கேடாக தமது சொந்த முதலீட்டுக்கே பயன்படுத்தவும் தொடங்கியுள்ளதுடன், இதைக் கொண்டே இலங்கை உட்பட மற்றைய நாடுகளுக்கு கடன் கொடுத்து வட்டி வசூலிக்கவும், உலகவங்கி முனைப்புக் கொண்டு திட்டங்களை முன் தள்ளுகின்றது.


அத்துடன் கொள்ளையிடுபவன் விரைவாக நாட்டுக்குள் வரவும், கொள்ளையிட்டவன் விரைவாக நாட்டை விட்டு வெளியேறவும் நவீன பாதைகள், நவீன விமான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதைப் பூர்த்தி செய்ய 80 சதுர மைல் பரப்பில் அமைய உள்ள இரண்டாவது சர்வதேச விமான நிலையம், மொனகலவில் அடுத்த மூன்று வருடத்தில் கட்டிமுடிக்கப்படவுள்ளது. இதன் செலவு (20 முதல் 50 கோடி டொலர்) 2000 முதல் 5000 கோடி ரூபாவாகும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 70 கோடி ரூபா செலவில் புதிய இறங்கு பாதை ஒன்று கட்டப்படுகின்றது. உலகமயமாதல் விரைவு பெறுவதால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து, நாட்டை விட்டு வெளியேறுவோர், உள் வருவோரின் எண்ணிக்கை 30 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த வகையில் நவீன வீதிகள், நவீன விமான நிலையங்கள் பல கட்டமைக்கப்படுகின்றது. இவை நாட்டின் மையமான கட்டுமானமாகிவிட்டது. இது கொள்ளை அடிப்பவனின் நேரடி நலனை மட்டுமல்ல, அவனுக்குச் சேவை செய்வதையும் கோருகின்றது. இதன் மூலம் மற்றவனின் குண்டி கழுவி பொறுக்கி வாழ்வது தேசியமயமாகின்றது.