06282022செ
Last updateபு, 02 மார் 2022 7pm

சுத்திகரிப்பும், தூய்மையாக்கலும்

எமது தேசிய வரலாறு என்பது இனத் தூய்மையாக்கலும், புலி சுத்திகரிப்பும் என்ற எல்லைக்குள்ளான கொலைகளால் ஆனாவை. அன்றாட அரசியல் என்பதே கொலைகளின் நிகழ்ச்சி நிரலாகிவிட்டது. பேரினவாதிகளும் புலிகளும் கூட்டாகவே நடத்தும் இந்த கொலை வெறியாட்டத்தில், ஒரு இனத்தின் இருப்பே அழிகின்றது. இதன் முடிவு தான் என்ன? முடிவின்றி தொடரும் இந்த எதிர்நிலைப் படுகொலைகள்,

 சிந்திக்கத் தெரிந்தஇ சமூகம் பற்றி அக்கறையுள்ள ஒவ்வொருவரிடமும் எழுப்பும் கேள்வியும் இதுதான்? கடந்த 30 வருடங்களாக இது முடிவின்றி தொடருகின்றதே ஏன்? சுத்திகரிப்பும் முடியவில்லை, தூய்மையாக்கலும் முடியவில்லை. மாறாக இது ஆயிரம் ஆயிரமாக அன்றாடம் புதிதாகவே உற்பத்தி செய்யப்படுகின்றது. இதற்கான ஒரு பட்டியலுடன், பெரும் தொகை பணத்துடன் கொலை செய்வதற்கென்றே ஒரு கூட்டம் நாயாக அலைகின்றனர். கொலைகளை ஒருதரப்பு ஆதரித்து பேசுவதே அன்றாட அரசியலாகிவிட்டது. இதற்கு வெளியில் அரசியல் பேசுவதற்கு என்று எதுவும் கிடையாது.

 

அன்றாடம் தாய்மை கருவறையுடன் குதறப்பட்டு, தேசியத்தின் தெருக்களில் ஒரு தொங்கலில் இருந்து மறுதொங்கல் வரை தொங்கவிடப்படுகின்றது. இந்த தெருவோர பிணங்களின் மேல் தொலைக்காட்சிகள், வானொலிகள், இணையங்கள், பிழைக்கத் தெரிந்த புத்திஜீவிகள், கொலை ஆதரவு கும்பல்கள், பணத்துக்காக பல்லிளிக்கும் கயவாளிக் கும்பல்கள் என அனைத்து வகையான புலி ஆதரவு புலி எதிர்ப்புக் கும்பல்களும் அரசியல் செய்கின்றனர். இது தான் இவர்களின் அரசியல் என்றாகிவிட்டது. தாம் தான் தமிழ் மக்களின் மீட்சிக்கான செங்கம்பளத்தை விரிப்பதாக கூட இவர்கள் மார்பு தட்டுகின்றனர். அரசியல் கோமாளித்தனத்தின் உச்சத்தில், மனிதம் இழிவாடப்பட்டு காட்டுமிராண்டிகளால் நரைவேட்டையாடப்படுகின்றது. இதை புசிக்கும் கும்பல் தான், இந்த கொலைகளால் மகிழ்ந்தபடி, உற்சகமாக வாயில் மனித எலும்புகளை கவ்வியபடி தேசிய வெறியாட்டம் ஆடுகின்றனர். மேலும் நரபலி கோரி கூச்சலிடுகின்றனர்.

 

அன்றாடம் நடக்கும் கொலைகளைப் பற்றி எழுதுவதற்கே கை கூசுகின்றது. இதுவே அரசியலாகிவிட்ட நிலையில், இதை விமர்சனம் செய்வதே சகிக்க முடியவில்லை. என்னத்தை எழுதி, என்ற அதிர்வு முள்ளந்தண்டு எலும்பையே உறையவைக்கிறது. சமூகம் பற்றிய எந்த அறிவுமற்ற பொறுக்கித் தின்னும் லும்பன்களை உருவாக்கி, அவர்களைக் கொண்டு நடத்தும் கூலிக் கொலைகள் மூலம் சிலர் மட்டுமே வாழ்கின்றனர். அவர்களின் இருப்பு அதற்குள் தான் இருக்கின்றது. இதனால் இது அரசியலாகின்றது. இதற்கு வெளியில் இந்தக் கொலைகள் முடிவாக எதையும் சாதிக்கப்போவதில்லை.

 

மனிதப் படுகொலை அமைதியின் பெயரில், சமாதானத்தின் பெயரில், அழுத்தத்தின் பெயரில், தூய்மையாக்கல் பெயரில், சுத்திகரிப்பின் பெயரில் தொடருகின்றது. இதைக் கண்காணிக்க ஒரு கண்காணிப்புக் குழு. சர்வதேச குழுக்களோ புறா வேடம் அணிந்து, சமாதான காவலராக இதைப்பற்றி அறிக்கை வெளியிடுகின்றனர். இதைபற்றி ஆய்வு அறிக்கை விடவும், கண்டனம் தெரிவிக்கவும் சர்வதேச அமைப்புகள் வேறு. உள்ளுரில் இதன் ஒரு பகுதியை மட்டும் கண்டிக்கும், பக்கச்சார்பான நிலைப்பாடுகளுடன் கூச்சலிடும் ஒப்பாரி வேறு.

 

மனிதம் அன்றாடம் செத்துக் கொண்டிருக்கின்றது. கண்டிப்பவர்களின், கண்காணிப்பவர்களின் ஆதரவுடன் தான் மனிதம் இழிவாடப்பட்டு குதறப்படுகின்றது. 'இனம் தெரியாத" கொலைகள், கொல்லப்பட்டது 'அப்பாவி பொது மக்கள்" என்று கொலைகள் பற்றி விதம்விதமாக கருத்துக் கூறுகின்றனர். இப்படி கூறுபவர்கள், கொலை செய்யப்பட்டவன் மீது ஏறியிருந்து மீண்டும் மீண்டும் தமது கைககளால் குத்தி மீள் கொலைகளையே நடத்துகின்றனர். அரசியல் என்பது இப்படி வக்கரித்து வரிந்து கட்டிய கோமணத்துடன் சந்தியில் நிற்கின்றது.

 

தேசியம் என்பது காணமல் போய் விட்ட நிலையில், அதைத் துருவித்துருவி தொலைத்த இடத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடுகின்றனர். மறுபுறம் இனவழிப்பே தமிழ் தேசியம் என்ற அடிப்படையில் தொடங்கிய கொலையை, எதிரியும் போட்டி போட்டு செய்கின்றான். யார் தமிழ் மக்களை அதிகம் அழிப்பது என்பதில், இவர்களுக்கு இடையில் எண்ணிக்கை போட்டி வேறு. அதில் ஒருவிதமான குரூரமான மகிழ்ச்சி இவர்களுக்கு.

 

இந்த குரூரமான ரசிகர்கள் தனக்கு சார்பானவர் (மற்றொரு கொலையாளி அல்லது கொலைக்கு உடந்தையாளர்) கொல்லப்படும் போது மட்டும், ஐயோ கொலைகள் என்று மூக்கால் புலம்பிக் காட்டுகின்றனர். யார் கொல்லுகின்றனர் என்பதில் கூட பரஸ்பரக் குற்றச்சாட்டுகள் வேறு. ஏன் நாங்கள் செய்ய வேணடும் என்ற வினாக்களையும் கூட கோமளித்தனமாக தொடுக்கின்றனர். கொலைகளை காட்டியே மறுபுறம் வியாபாரம். தமிழன் என்று கண்ணீர் விட்டு நடிப்பதன் மூலம், தமது நாய் பிழைப்பையும் சாகசப் பிழைப்பையும் கூட நடத்துகின்றனர்.

 

மனிதநேயமற்ற மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டிகள், கொலையைக் காட்டியும் கொலையைப் பற்றி பேசியும், மக்களின் வயிற்றெரிச்சலையே கிளறுகின்றனர். சதா ஊளையிடலுக்கு அப்பால், கொலைகள் எப்படி பணம் சம்பாதிக்க உதவும் என்பதே சதா அவர்களின் அரசியல் கவலை.

 

மக்களின் இயல்புவாழ்வு சிதைந்து சின்னாபின்னமாகிப் போகின்றது. அச்சமும், பீதியும் கலந்து உறைந்து போகின்றது மனிதம். நாம் ஏன் எதற்காகக் கொல்லப்படுவோம் என்று தெரியாத பரிதவிப்பு. கொல்லப்பட்டவன் ஏன் கொல்லப்பட்டான் என்று கூற தெரியாத அரசியல் பீதி. பேயும் பிசாசுகளும் ஒன்றையொன்று எதிர்த்தபடி நடத்தும் நரை வேட்டையாடலில், நான் யாரால் ஏன் கொல்லப்பட்டேன் என்று தெரியாத ஆவிகள் நிறைந்த தேசியமாகிவிட்டது. தமிழ் மக்களை மீட்டு, இந்த ஆவிகளிடம் ஒப்படைப்பதாக தலைவர்கள் கூறிக் கொள்கின்றனர். மக்கள் எதுவும் செய்ய வழியற்று, எங்கும் எதிலும் அச்சமும் பீதியும் கலந்த மனித அவலங்களைக் கொண்ட வாழ்க்கை முறையே, வாழ்க்கையாகி விட்டது.

 

சிந்திக்கவும் செயலாற்றவும் முடியாத முடங்கிப் போகின்ற நிலைமையில், துப்பாக்கிகளின் ஆட்டம் நடக்கின்றது. மக்களை சுற்றிவர நிறுத்திய பின், அதை ரசிக்க கோருகின்றனர். ஒரு தரப்புக்கு ஆதரவாக கைதட்டக் கோருகின்றனர். மறுத்தால் மரணம், இதுவே எமது மக்களின் தலைவிதி. யாரும் இந்த மக்களுக்காக சிந்திப்பதில்லை. தமக்காக மட்டும், தமது வயிற்றைச் சுற்றி மட்டும் சிந்திக்கின்றனர். சாதாரண மக்கள் முதல் தம்மை அறிவாளிகளாகவும், சமூக அக்கறையாளராகவும் காட்டிக் கொள்ளும் அனைவரும் இந்த விதியை மீறிப் புலம்பவில்லை.

 

அமைதி சமாதானம், இயல்பு வாழ்வு என்று பேசிக் கொண்டே கொலைகள் அன்று முதல் இன்று வரை நடக்கின்றது. அமைதியின் பெயரிலான கடந்த நான்கு வருடங்களாக இவையின்றி நாட்கள் உருண்டதில்லை. ஒவ்வொரு நாளும் தமிழன், தமிழனாகவே தமிழன் என்பதற்காகவே கொல்லப்பட்டான்.

 

இந்தக் கொலைகள் பெருமளவில் புலிகளால் செய்யப்பட்டன. தங்களுடன் ஏதோ ஒரு விதத்தில் முரண்பட்டவர்களுக்கு, கொலைகளையே பரிசாக நாள்தோறும் வழங்கினர். இதைவிட சித்திரவதைக் கூடங்கள், 'இனம் தெரியாத" கடத்தல்கள், கொலைகளை அன்றாட நடத்தினர். இந்தப் பட்டியல் அனைவரும் அறிய சவப்பெட்டியில் புதைக்கப்படாது அறையப்பட்டு நடுவீதியில் கிடக்கினறது. அப்போது தமிழன் தமிழர்களால் சிங்கள பேரினவாதியின் துணையுடன் கொல்லப்படுவதை இட்டு, புலி மூச்சுக் கூட உறுமவில்லை. புலிகள் கோரிய இயல்பு வாழ்வில் அமைதியாக கொல்லப்பட்ட நிகழ்ச்சிகளை 'இனம்தெரியாத" கொலைகள் என்று ப+ச்சூட்டி அழகுபடுத்தி அதையும் சிங்காரித்துப் பார்த்தனர். இதை அவர்கள் அன்றாடம் தடைகளின்றி செய்வதைத் தான், அவர்கள் அரசியல் வேலை என்றனர்.

 

ஆனால் இந்தக் கொலைகளுடன் தாம் தொடர்புபடுத்தப் படுவதையே புலிகள் உறுமியபடி மறுத்தனர். அவர்கள் இதை மறுத்தால் இதை வசதியாக 'இனம் தெரியாத" கொலைகள் என, அனைவரும் கூறிக் கொண்டனர். கொலை செய்தவர் யாரென்று தெரியாது என்றனர். தாம் செய்யாத மற்றைய நேரங்களில், கொலையாளி யாரென்று இரத்தம் காயமுன்னமே, புலிகளும் அவர்களின் ஊதுகுழல்களும் கூறுவது தான் இதில் வேடிக்கை. கொல்லப்பட்டவர்கள் தமிழன் தான். ஆனால் தமிழன் கொல்லப்படுவதாக யாரும் மூச்சுக் கூடவிடவில்லை, ஏன் தமிழனுக்காக போராடுவதாக கூறுபவர்கள் கூட குரல் கொடுக்கவில்லை. உண்மையில் அந்த கொலைகளை அவர்கள் ஆதரித்தனர் அல்லது அதில் பங்காற்றினர்.

 

உண்மையில் இந்த மனித விரோத தமிழ் இனப் படுகொலைகளை இராணுவம் பேரினவாத உணர்வுடன் ஆதரித்தது. இராணுவத்தின் துணையுடன் அரசியல் செய்த புலிகள், அவர்களின் வழித்துணையுடன் கண்டுகொள்ளாத போக்குடன் இந்தக் கொலைகளை நடத்தினர். புலிகள் அரசியல் செய்வது என்பது, இந்த கொலைகளுடன் தொடர்புடையது. இது தான் அவர்களின் அரசியல். இதைவிட பண அறவீடு என்று பற்பல மனிதவிரோத செயல்கள்.

 

இந்த இனம் தெரியாத அரசியலுக்குள் ஏற்பட்ட நெருக்கடி கரணாமாக அது வாயைப் பிளந்த போது, கொலைகார அரசியல் பரிணாமம் பெற்று அகல வாயைத் திறந்துகொண்டது. கருணாவின் பிளவு அரங்கில் வந்தது. கருணா 'ஒழிந்தான்", அவன் வெறும் 'தனிமனிதன்", நாங்கள் அவனை 'ஒழித்துக் கட்டிவிட்டோம்" என்ற புலிகளால் மார்பு தட்டப்பட்ட விடையம், இன்று புலிகளின் அரசியல் இருப்பையே கேள்விக்குள்ளாக்கியுள்ளது. கருணா விவகாரத்தை புலிகள் கையாண்ட விதம், கொலையின் அரசியல் பங்கை ஒரு தரப்பிடமிருந்து பல தரப்பாக மாற்றிவிட்டது. கொலைகளை தாம் மட்டும் செய்ய உரித்துடையவர்கள் என்ற புலியின் ஏகபிரதிநிதித்துவக் கோட்பாடே, பேச்சுவார்த்தையில் பாரிய முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.

 

கருணாவும் பழிக்குப்பழி என்ற புலிகளின் வழியில், புலிகள் மேலான எதிர்தாக்குதலை நடத்திய போது, அதை எதிர்கொள்வதே புலிகளின் மைய அரசியலாகிவிட்டது. கருணா விடையத்தை இலகுவாக அரசியல் ரீதியாக அணுகி தீர்க்கக் கூடிய வழியிருந்தும், அதற்கு மாறாக புலிகள் கருணாவை பலாத்காரமாகவே எதிரி முகாமுக்குள் இட்டுச் சென்றனர். இது இயல்பாக இரண்டு கொலைகாரக் குழுவை சமகாலத்தில் உருவாக்கியது. என்னைக் கொன்றால், உன்னையும் அதே மாதிரி கொல்வேன் என்ற அடிப்படையில், ஒரே தலைமையிடம் ஒரேவிதமாக கற்ற அந்த கொலைகார அரசியலை ஆணையில் வைத்து கொலைகளை பரஸ்பரம் நடத்தினர், நடத்துகின்றனர். இத முடிவின்றி தொடருகின்றது, தொடரப்போகின்றது.

 

கருணா விவாகரத்தில் பேரினவாதிகள் தலையிடக் கூடாது என்று சொன்ன புலிகள், அதை தாமே அழிப்பதாக கூறியவர்கள், இராணுவத்தின் உதவியுடன் அதை அன்று செய்யத் தொடங்கினர். பாரிய ஒரு அரசியல் படுகொலை நடத்தப்பட்டு, கருணா குழு அகற்றப்பட்டது. ஆனால் அது உண்மையில் தன்னை தலைமறைவாக்கிக் கொண்டு, புலிக்கு தொல்லை தரும் குழுவாக மாறி புலிகளே அஞ்சும் அளவுக்கு புலிக்கு நிகராகவே அது ஆட்டம் போடுகின்றது.

அன்று புலிகள் அரசு அதில் தலையிடக் கூடாது என்று கூறி அழித்தவர்கள், இன்று அதை அழிக்க இலங்கை அரசை உதவக் கோருகின்றனர். இதையே பேச்சுவார்த்தையின் அரசியல் நிபந்தனையாக முன்வைக்கின்றனர். சமாதான பேச்சுவார்த்தையில் புலிகள் தமது அரசியலாக இதையே வைக்கின்றனர். இதை அரசு செய்ய மறுத்தால், இராணுவம் மீதான தாக்குதலை நடத்துவோம் என்பதே புலிகள் கொடுக்கும் அன்றாட அரசியல் செய்தி.

 

மறுபுறத்தில் அரசு இதை அமுல் நடத்தமுடியாத அளவுக்கு கருணா குழு கணிசமாக சுயாதீனமாகவும் இயங்குகின்றது. அத்துடன் இதன் பின்னணியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் அனுசரணையும் உள்ளது. பேரினவாதம் இதை பயன்படுத்தி கிழக்கை புலிகளிடம் இருந்து உடனடியாக விடுவிக்க முனைகின்றது. வன்னி நோக்கிய படையெடுப்புக்கு, கருணாவின் உதவி கிடைத்தால் புலிகளுக்கு பாரிய பின்னடைவுகளும் ஏற்படும் என்ற உண்மையை அரசு கவனத்தில் கொண்டுள்ளது.

 

இவைகளே புலிகளை பாரிய யுத்தத்தை நோக்கி நகர்வதை தடுக்கும் தடைக்கல்லாக உள்ளது. புலியின் அரசியல் எதிர்காலத்தையே நிர்ணயம் செய்யும் நிலையில், கருணா என்ற அரஜாகவாதக் குழுவின் செயற்பாடுகள் உள்ளது. உண்மையில் மீட்சியற்ற பாதையில் புலிகள் சிக்கியுள்ளனர். யுத்தததுக்கு செல்ல முடியாத ஒருபக்க நிலை. மறுபக்கம் அரசு கருணா குழுவை கூட்டாக அழிக்கும் புலியின் கோரிக்கைக்கு இணங்கிப் போகமறுக்கின்றது. புலிகள் யுத்தத்துக்கு செல்லாது சமாதான வழியை தக்க வைத்திருப்பதன் மூலம், அரசுக்கு அழுத்ததைக் கொடுத்து கூட்டாக கருணா குழுவை தேடியளிக்கும் தந்திரோபாயத்தையே புலிகள் விரும்புகின்றனர். இதுவே பாரிய ஒரு யுத்தத்தை மீண்டும் மீண்டும் தடுத்து நிறுத்துகின்றது.

 

அரசு இதைக் கருத்தில் கொண்டு, இந்த அழித்தொழிப்புக்கு துணை நிற்க மறுக்கின்றது. மாறாக புலிகளின் பதிலடியை எதிர்கொண்டு, யுத்தம் வராது என்று துணிந்து பதிலடியை நடத்துகின்றனர். இது பண்பு மாற்றத்தை அடைந்து நிற்கின்றது. புலிகள் யுத்தத்தை நடத்தினாலும் தமக்குத்தான் இலாபம், நடத்தாவிட்டாலும் தமக்குத் தான் இலாபம் என்பது அரசின் தெளிவான நிலை. புலிகள் சண்டையைத் தொடங்கினால் மட்டக்களப்பு மட்டுமல்ல திருகோணமலையைக் கூட மீட்க முடியும் என்பது அரசின் சரியான கணிப்பீடு. அதைவிட வன்னிக்குள் பாரிய தாக்குதலை நடத்த முடியும் என்ற நிலை. சண்டை இல்லையென்றால் புலிகளை மேலும் அரசியல் நெருக்கடியில் சிக்கவைத்து, அவர்களை நிர்ப்பந்திக்கும் வழியில் சீரழிப்பது. சமாதான காலத்தில் புலிக்கு எதிரான சர்வதேச ரீதியான தடைகள், நெருக்கடிகள் பெருகினவே ஒழிய அவை குறையவில்லை. மேலும் மேலும் புலிகள் ஆழமாக குறுகி சிறுத்துப் போகின்றார்கள். எதிரி பலமடங்காகியுள்ளது. தமிழ் மக்கள் பலத்த சொந்த அனுபவத்தை புலியிடம் பெற்று, அவர்கள் புலிக்கு எதிராக மாறியுள்ளனர். புலிகள் ஆயுதம், படைப்பலம், பணம் மீதான நம்பிக்கை வைத்து உறுமுகின்றனர்.

 

பேரினவாதத்தின் யுத்ததந்திரம், புலிகளின் பாசிச கண்ணோட்டத்தின் நெகிழ்ச்சியற்ற தன்மையை பயன்படுத்தி நெளிவு சுழிவாக கையாளுகின்றது. அரசு பேச்சவார்த்தை மேசையில் புலிகளை சந்திக்க தயாரான நிலையில், தனது எதிரியை தனிமைப்படுத்துவதில் வெற்றி பெறுகின்றது. புலிகள் மேசைக்கு செல்ல முடியாத நிலையில் அதைக் கண்டே அஞ்சுகின்றனர். புலிகள் பேச்சுவார்த்தை மேசையில் வைக்க கூடிய உயர்ந்தபட்ச கோரிக்கை அன்றாட சம்பவங்களின் நீட்சியில் இருந்து வருவதால், புலிகளை இலகுவாக தனிமைப்படுத்தி அவர்களை மேலும் அம்பலமாக்க அரசால் இலகுவாக முடிகின்றது.

 

அரசு சந்திக்கும் நெருக்கடி என்பது, சமாதானம் பேசியபடி புலிகள் நடத்தும் எதிர் தாக்குதல்கள் தான். பேரினவாத இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகள் நடத்தும் தாக்குதல்களை தடுத்து நிறுத்தினால், புலிகளை மேலும் ஆழமான அரசியல் நெருக்கடியில் இட்டுச் செல்ல முடியும் என்பதே அரசின் நிலை. அதாவது தாக்குதல் அற்ற நிலையில், இராணுவத்தின் அதிருப்தியைச் சரிக்கட்டி ஒரு திடமான அமைதிநிலை பேணவே அரசு விரும்புகின்றது. புலிகள் எல்லை மீறிய பாரிய தாக்குதல்கள் மூலம், சர்வதேச ரீதியாக புலிகளை தனிமைப்படுத்துவது அரசின் யுத்த தந்திரமாகவுள்ளது. இதற்கு பதிலடியை கொடுக்கும் அங்கீகாரத்தை சர்வதேசத்திடம் பெறுவதில் கூட அரசு வெற்றியும் பெறுகின்றது.

 

தம்மீது தனது கட்டுப்பாட்டு பிரதேசத்தில் நடக்கும் தாக்குதலை தடுக்கும் உத்தியை, அரசு புலிகளிடம் இருந்து கற்று அதை அவர்களுக்கு எதிராக அதே வழியில் அமுல் செய்யத் தொடங்கியுள்ளது. இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் புலிகளின் செயற்திறனை, தாக்குதல் திறனை ஒழித்துக்கட்டுதல் என்பதே அரசின் மையமான குறிப்பான திட்டமிடலாகும். மிக குறுகிய காலத்தில் அதை நிறைவேற்றிய பின், ஒரு இயல்பு நிலையை உருவாக்குவது பேரினவாதத்தின் உடனடி செயற்திட்டமாகும்.

 

இந்தவகையில் புலிச் சுத்திகரிப்பை நடத்துகின்றனர். உள்ளே இருப்பவர்களையும், உள்ளே வருபவர்களையும் மிகவும் திட்டமிட்ட வகையில் இனம்கண்டு ஒழித்துக் கட்டுகின்றனர். படுகொலைகள், காணாமல் போதல் என்ற வகையில் ஒரு புலிச் சுத்திகரிப்பே நிகழ்கின்றது. இவை புலிகள் வழியில், இனம் தெரியாத கொலைகளாக்கப்படுகின்றது. நபர்கள் அடையாளமின்றி போய்விடுகின்றனர். புலிகள் பாணியில் அதற்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்கின்றனர். புலிக்கு உதபுவர்கள், அவர்களின் தீவிர ஆதரவாளர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அச்சம் தரும் வகையில் படுகொலைகளை நடத்துகின்றனர். இதைவிட சந்தேகிக்கக் கூடியவர்களையும் கொன்றும் விடுகின்றனர். புலிகள் அச்சத்தை விதைக்க எந்த வழியை கையாளுகின்றனரோ, அதையே பேரினவாதிகள் புலிக்கு எதிராக செய்கின்றனர். யார் எதை ஏன் செய்கின்றனர் என்பதில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர். 1988-1989-1990 களில் ஜே.வி.பி ஒழிப்பில் நடந்த கொலைகள் போல், கொலைகள் வகைபிரிக்க முடியாத வகையில் போய்விடுகின்றது.

 

இந்த வகையில் நடக்கும் புலி சுத்திகரிப்பு, புலியின் இனத் தூய்மையாக்கல் வழியில் நடக்கின்றது. இன்றும் ஆங்காங்கே இராணுவம் மீதான தாக்குதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்க, இந்தச் சுத்திகரிப்பு அதை படிப்படியாக குறைத்து அதை அறவே இல்லாததாக்கி வருகின்றது. இது படிப்படியாக புலிகளை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தில் ஒழித்துக்கட்டிவிடும். இதன் பின்பாக சிங்கள பேரினவாத இராணுவம், அமைதியான நல்ல இராணுவமாக மாறிவிடும். இந்த உத்தியை பேரினவாதம் கையாளுகின்றது.

 

நடக்கும் ஒவ்வொரு கொலையையும் மக்கள் தெளிவாகவே புரிந்து கொள்கின்றனர். ஒவ்வொரு கொலையும் யார் ஏன் செய்தனர் என்தை மக்கள் தெளிவாகவே தெரிந்து கொள்கின்றனர். புத்திஜீவிகளும், பத்திரிகையும், உலக நாடுகளும் தெரிந்த கொள்ளாது, அடைமொழியில் அறிக்கைளையும் செய்திகளையும் தயாரிக்கும் போது, மக்கள் அதை தெரிந்தே உள்ளனர். மக்கள் இந்த நிலைமைக்கு ஈடுகொடுக்கும் வகையில் நெகிழ்சியடைகின்றனர். மக்கள் கொலைகள் மீதான தமது சொந்தக் கருத்தைக் கூட தெரிவிக்க முடியாத வகையில், இருதரப்பும் படுகொலைக் கண்ணோட்டத்தை திணித்துள்ளனர்.

 

இந்தநிலையில் புலிகள் புதிய அரசியல் நெருக்கடியில் சிக்கிவருகின்றனர். மீள வழியற்ற சூறாவளிக்குள் சுழலுகின்றனர். வழமையாக அமைதி நிலவும் காலங்களில், புலிகள் தமது எதிர்வினைகளையும் பதிலடியையும், கிழக்கில் நடத்துவது வழக்கம். குறிப்பாக முஸ்லீம் மக்கள் மேல் அது நடத்தப்படுவதே இயல்பான ஒன்று. புலிகள் வரலாறு முழுக்க இது காணப்படுகின்றது. ஆனால் கருணாவின் பிளவைத் தொடர்ந்து அதைச் செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது. அப்படி செய்தால் கிழக்கில் இருந்து மேலும் தனிமைப்பட்டு போகும் அபாயம். இந்த நிலையில் இந்த அரசியல் நெருக்கடியின் எதிர்வினை என்பது, பாரிய தாக்குதல் சார்ந்ததாகவும், பாரிய மக்கள் படுகொலைகள் நடக்கும் வாய்ப்பை தூண்டுகின்றது. சிங்கள கிராமங்கள் மீது படுகொலைகள் வடக்கில் இருந்து நடத்தப்படலாம். கடந்தகாலத்தில் கிழக்கில் இருந்த இந்த நிலைமை, வடக்கு நோக்கி நகர்வதற்கான சூழல் அதிகரித்துள்ளது. வடக்கு எல்லை ஒட்டிய சிங்கள கிராமங்கள் முதல், கொழும்பு போன்ற பிரதேசத்தில் மக்கள் மேலான குண்டுவெடிப்புகளாக மாறுகின்ற வாய்ப்பு அதிகரிக்கின்றது.

 

இனம் தெரியாத தாக்குதல் என்ற வழமையான காரணத்துடன் இதனையும் கூறிக் கொண்டாலும், சர்வதேச ரீதியான அழுத்தத்துடன் கூடிய தலையீடு மிக நெருக்கமாகவே அதிகரித்துள்ளது. அண்மையில் யப்பானிய பேச்சுவார்த்தையாளர் சர்வதேச அமைதிப்படை பற்றிய கூற்றும், இந்திய கடற்படைக் கப்பல் சிறிலங்கா இராணுவத்தைக் காப்பாற்றியதுடன் அன்றே விமானப்படை தலையிட இருந்தமையும், இதன் பின் இந்திய விமானப்படை விமானங்கள் இலங்கையில் தரையிறங்கிச் சென்ற நிலையில், எதுவும் எப்படியும் நடக்கலாம் என்ற நிலையை எதிர்வு கூறவைக்கின்றது. இதைவிட அமெரிக்காவின் புலிகளை ஐரோப்பா உடன் தடைசெய்ய வேண்டும் என்ற பகிரங்கமான வேண்டுகோள், சர்வதேச ரீதியான பண்பு மாற்றத்தையே காட்டுகின்றது.

 

தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் எந்த தரப்பிடமும் இருந்து கிடையாது. புலிக்கு தமிழ் மக்களிடம் கூட ஆதரவு கிடையாது. தமிழ் மக்கள் தாங்கள் என்ன விரும்புகின்றோம் என்பதை பற்றி கூறுவதை கேட்பதற்கு கூட, இன்று உலகில் யாரும் கிடையாது. இனத்தின் அழிவில் குளிர்காய்வது மட்டும் இன்று ஏற்ற இறக்கத்துடன் சிக்கலுக்குள்ளாகி, அதுவே விபச்சாரத்தை செய்கின்றது. இதைக் கொண்டு நாலு காசு சம்பாதிக்கலாம் என்று நம்புபவன் அங்குமிங்கும் ஒட்டிக்கொண்டு விபச்சார தரகனாக, தமிழ் மக்களை விபச்சாரம் செய்ய அழைத்துச் செல்லுகின்றான். இதுவே ஆதிக்கம் பெற்ற அரசியலாக, தலைமையாக, செய்தியாக நிற்கின்றது. இதில் இருந்து நாம் மீள்வது, தமிழ் மக்களை மீட்க போராடுவது மட்டும் தான், இன்று எம்முன்னுள்ள வரலாற்றுக் கடமையாகும்.

பி.இரயாகரன்
18.05.2006


பி.இரயாகரன் - சமர்