க டந்த இரண்டு வருடத்துக்கு மேலாக யுத்தமற்ற ஒரு அமைதி புகைந்து கொண்டிருக்கின்றது. மக்கள் விரோத நடத்தைகள் ஜனநாயகப் பூர்வமான சமூக ஒழுக்கமாகி, புதிய பரிணாமம் பெற்று வருகின்றது. இந்தச் சூழல் பலதரப்பட்ட பிரிவுகளுக்குச் சாதகமானதும், பாதகமானதுமான பல மக்கள் விரோத அம்சங்களை உருவாக்கியுள்ளது. மறுதளத்தில் நாடு அடகு வைக்கப்படுவதும், ஏலம் விடப்படுவதும் என்றும் இல்லாத வேகத்தில் நடந்து வருகின்றது. மக்கள் தமது சொந்தத் தேசிய வாழ்வியல் இருப்புகள் அனைத்தையும் வேகமாக இழந்து வருகின்றனர். உலகமயமாதல் நடைமுறைகள், இலங்கையில் கரைபுரண்டோடுகின்றது. இதுவே அமைதி மற்றும் சமாதானத்தின் தலைவிதியாகியுள்ளது.


யுத்தம் மக்களை நேரடியாகவே ஒரு பதற்ற நிலையில் வைத்து இழிவாடி சூறையாடியது என்றால், அமைதியானது, நாகரீகமாகவும் பண்பாகவும் சூறையாடுகின்றது. யுத்தம் மக்களை ஆயுத முனையில் நிறுத்தி, யுத்த வெறிய+ட்டி அறியாமையைச் சமூகமயமாக்கி மந்தையாக்கியது. அமைதியுடன் கூடிய சமாதானமோ, அதையே நாகரிகமாக வழ்வியலை ஆடம்பரமாக்கி நுகர்வை வக்கிரமாக்கி சிந்தனைச் சுதந்திரத்தை அழித்து, பண்பாட்டு கலாச்சார வழிகளில் சாதிக்கின்றது. சமுதாயத்தை இழிவாக்கி அடிமைப்படுத்தும் நோக்கத்தை, யுத்தத்தைத் தொடர்ந்து அமைதியும் வெற்றிகரமாக செய்கின்றது. எங்கும் பதற்றம், அறியாமை, சூனியம், மிரட்டல், பீதி, ஆடம்பரம், சீரழிவு, மூடத்தனம், வக்கிரம், வறுமை, இயலாமை, இன்மை, வரி, சூறையாடல், நீதியின்மை, கொலை பயமுறுத்தல், ஊழல், நுகர்வு வெறி, கவர்ச்சி, சோம்பேறி, அதிருப்தி, மன உளைச்சல், பண்பாட்டுச் சிதைவு, கலாச்சார சீரழிவு எனத் தொடரும் சமுதாயத்தின் அழிவு, சமூகத் தலைவிதியாகியுள்ளது. இது இனம் கடந்து, இலங்கை எங்கும் ஒரு சமூகப் பண்பாடாக ஊடுருவி சமூகமயமாகின்றது. சமூக நலன், மக்கள் நலன் என்ற உயாந்த மனிதப் பண்புகள் இழிவாடப்படுகின்றது. தனிமனித வாதமும், குறுகிய வக்கிரத்துடன் கூடிய சமூக விரோதப் பண்பும் போற்றப்படுகின்றது. சமூக அறியாமையை அத்திவாரமாக கொண்டு, உலகமயமாதல் என்ற தேசிய விரோத மக்கள் விரோத அமைப்பு இலங்கையில் வான் உயர கட்டப்படுகின்றது. இந்த மனித விரோத செயல்களை பல்வேறு சமூகத் தளங்களில் விரிவாக ஆராய்வோம்.