Language Selection

பி.இரயாகரன் 2004-2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

book _3.jpgஇலங்கையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அடுத்து யுத்த நிறுத்தம் கடந்த இரண்டு வருடங்களாக அமுலில் உள்ளது. இந்த இரண்டு வருடங்களில் இலங்கையில் என்ன நடந்தது? உண்மையில் யாருக்கும் எதுவும் தெரியாது, சூனியம் நிலவுகின்றது. புலிகளும் அரசும் பேச்சுவார்த்தை ஊடாக நடத்திய இழுபறிகளையே, மக்களுக்குப் பொதுவாகக் காட்டப்படுகின்றது. ஆனால் உண்மை அதுவல்ல.


இதற்கு நேர்மாறாக யாரும் கற்பனை செய்ய முடியாத, ஒரு பாரிய மாற்றம் ஒன்று நடந்து முடிந்து விட்டது. உண்மையில் ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும், அதன் விளைவுகளையும்; யாரும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. உண்மையில் என்றைக்கும் இல்லாத ஒரு மாற்றம் நடந்து முடிந்துவிட்டது. இலங்கை அரசியல் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் எந்த சக்தியாலும், மீண்டு வரமுடியாத ஒரு மாற்றம் நடந்துவிட்டது. உதாரணமாக நாட்டில் பொது கக்கூஸ் கட்டக் கூட ஏகாதிபத்தியங்களின் உதவி அவசியமாகிவிட்டது. யுத்த சிதைவில் இருந்தது மீள உலகவங்கியின் அனுமதி ஒவ்வொருத் துறைக்கும் கெஞ்சிக் கேட்க வேண்டிய நிலையுள்ளது. வடக்கு - கிழக்கில் யுத்தம் சிதைத்த வீடுகளைப் புனரமைக்க நஷ்டஈடு கொடுப்பதற்காக, ஒரு வீட்டுக்கு 75 ஆயிரம் ரூபாவை உலகவங்கி வழங்க அனுமதித்தது. இது போதாது என்று கூறி உலக வங்கியிடம் கெஞ்சிய நிலையில், அதை 1,10,000; ரூபாவாக உயர்த்த உலக வங்கி இணக்கம் தெரிவித்ததை பெருமையாக அறிவிக்கின்றனர். இந்த வகையில் வடக்கு - கிழக்கில் மூன்று லட்சம் வீடுகளைப் புனரமைக்கும் திட்டம் ஒன்று, உலக வங்கியின் நிதியுடன் அனுமதி பெறப்பட்டுள்ளது. மார்ச் 2004-ல் வெளியான மற்றொரு அறிக்கையில் 2500 ரூபாவுக்கு குறைவான வருமானம் உடைய, 1983-க்கு பின் யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு வீடுகளை அமைத்து கொடுக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவை ஒன்றும் கற்பனை அல்ல.


இதில் உலக வங்கிக்கு என்ன சமூக அக்கறை? கடந்த இரண்டு வருடமாக சாதாரண பத்திரிக்கைச் செய்தியில் இருந்து, மிகக் குறைந்தபட்ச தரவுகளை அடிப்படையாக கொண்டு, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக ஆதாரமாக இந்த நூலின் முதல் பாகம் விவாதிக்க முற்படுகின்றது. ஒரு நாடு எப்படி மறுகாலனியாக்கத்தின் உள் சென்று விட்டது என்பதை, மறுக்க முடியாத ஆதாரத்துடன் உங்களுக்கு முன்வைக்கின்றது. அமைதி, சமாதானம் என்ற விரிந்த தளத்தில், இந்நூல் உங்களை சுயமாகச் சிந்திக்கத் தூண்டுகின்றது.


இந்த நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதி இலங்கையில் கடந்த இரண்டு வருடங்களில் என்ன நடந்தது என்பதை அடிப்படையாகக் கொண்டது. முதல் பகுதி ஒரு வருடத்துக்கு முன்பு எழுதப்பட்டது. சமாதான ஒப்பந்தத்தின் பின்னான முதல் வருடத்திய நிலையை ஆராய்கின்றது. இரண்டாம் பகுதி பிந்தைய வருடத்தை அடிப்படையாக கொண்டு முழுமையை ஆராய்ந்து அம்பலப்படுத்துகின்றது. மூன்றாம் பகுதி சம காலத்தில் நடந்த முக்கிய விடயங்கள் மற்றும் முக்கியமான பல கட்டுரைகளை உள்ளடக்கியது.


2004 தேர்தல் யூ.என்.பி வேட்பாளர் மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வுக்கு முதல் கண்டனத்தையும், மிரட்டலையும் அமெரிக்காவே புலிக்கு எதிராகவிடுத்தது. இந்தக் கொலையைச் சொந்தக் கட்சி (ய+.என்.பி) முதல் இலங்கையின் ஜனநாயகக் கட்சிகள் என்று சொல்லும் எந்தக் கட்சிகளும் கூட இதைக் கண்டிக்கவில்லை. ஏகாதிபத்தியமே இலங்கையை ஆட்சி செய்கின்றனர் என்பதையே இவை காட்டுகின்றன. இந்தக் கண்டனம் அமெரிக்கா வெளியுறவு அமைச்சில் வைத்து விடப்பட்டது. இது ஒவ்வொரு சிறிய சம்பவமும் அமெரிக்காவால் தீர்மானிக்கப்படுகின்றன என்பதையும், கண்காணிக்கப்படுகின்றது என்பதையும் உணர்த்தியது. புலிகளுக்கு எதிரான குறிப்பான மிரட்டல் என்பது, எதையும் அமெரிக்கா செய்யும் தயார் நிலையில் உள்ளது என்பதையும் கோடிட்டுக் காட்டியது.


பொதுவாக அமைதி, சமாதானம் நோக்கிய பயணங்கள், உலகெங்கும் அங்கும் இங்குமாக தொடர்கின்றது. இலங்கையை நோக்கி ஏகாதிபத்திய பிரதிநிதிகள் இடைவிடாத தொடர் பயணங்களை நடத்துகின்றனர். ஏகாதிபத்தியம் கடன், உதவி, முதலீடு என்ற பெயரில் நிதியை வெள்ளமாக இலங்கையை நோக்கி நகர்த்துகின்றனர். இலங்கையின் ஏற்றுமதி பெருக்கெடுத்துள்ளது. இறக்குமதி கட்டுக்கடங்காத வகையில் பெருகியுள்ளது. அன்னிய முதலீடுகள் பல மடங்காகியுள்ளது. தன்னார்வக் குழுக்களின் தங்குமிடமாக இலங்கை மாறிவிட்டது.


புலிகள் அன்னியப் பொருட்களை வாங்கி விற்கும் தரகு வர்த்தகத்தில் கால் பதித்துவிட்டனர். எதிர்கால முதலீட்டை நோக்கி அசையா சொத்துகள் வாங்கி குவிக்கப்படுகின்றது. உள்ளுர் உற்பத்திகள் மற்றும் சேவைத்துறையை புலிகள் படிப்படியாக தமது தனிப்பட்ட சொத்தாக்கி வருகின்றனர். புலிகள் புதிய முதலீட்டாளராக மாறிவிட்டனர். பல புதிய புலி முதலாளிகள் உருவாகி வருகின்றனர். அதற்கான நிதியை வரைமுறையற்ற வரி மூலம் திரட்டுகின்றனர். எங்கும் பணத்தை மையமாக வைத்த நடவடிக்கைகள், பெருகுகின்றது. பெரும் சொத்துக் குவிப்பின் ஊடாக, புதிய பணக்கார புலிகள் படிப்படியாக மிதக்கின்றனர். யாழ்குடா மேட்டுக்குடி சார்ந்த பிரான்ஸ் நகராகிவிட்டது. யாழ்நகரக் கடைகள் ஆடம்பரப் பொருட்களை விற்கும் தரகுச் சந்தையாகிவிட்டது. புலிகள் பல பத்து முதலீட்டை பல்வேறு வழிகளில் முதலீடு செய்துள்ளனர். பலவற்றை கட்டுப்படுத்தி பலாத்காரமாக அடிபணிய வைக்கின்றனர்.


மறு தளத்தில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கை மக்கள் என்றுமில்லாத ஏழைகளாகியுள்ளனர். வாழ வழியற்ற நிலையில் மக்கள் வெளிநாடு செல்வது கடந்த இரண்டு வருடத்தில் பெருகி வருகின்றது. உள்ளுர் சிறு உற்பத்திகள் அழிக்கப்பட்டு நலிந்து போய்விட்டது. வேலை இழப்பும், வருமானம் இன்மையும் பெருகிவருகின்றது. மக்களின் நுகர்வுகள் ஏற்றுமதியாகின்றன. இறக்குமதிகள் பெரும் பணக்காரர்களின் நலன்கள் சார்ந்து மாறிவிட்டது. வறுமை ஊடாக கல்வி மறுப்பு தேசிய கொள்கையாகிவிட்டது. மக்களின் சொத்தான அரசுத்துறைகளை அன்னியருக்கு தாரைவார்ப்பதன் மூலம் தனியார் மயமாகிவிட்டது. தேசிய உற்பத்திகள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றது. சமுதாயப் பிளவு விரிந்து அகலமாகிவிட்டது.


இந்த நூல் எழுதி அச்சுக்கு அனுப்ப இருந்த நேரத்தில் கருணா-பிரபாகரனின் பிளவு அரங்குக்கு வந்தது. இந்த நிலையில் இந்த நூல் இரண்டு பக்கத்திற்கும்; விதிவிலக்கின்றி பொருந்துகின்றது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் வேறுபாடற்ற இவர்கள், பிரதேசவாதிகளாகவே இரண்டு பகுதியிலும் அரங்கில் புகுந்துள்ளார்கள். மக்களைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை கிடையாது. ஏகாதிபத்தியத்தின் தொட்டில் தாலாட்டு பெறும்; உரிமையையே, தத்தம் தரப்பில் உரிமையாகக் கோருகின்றனர். இங்கு இரட்டைப்பிள்ளை தாலாட்டை கருணா கோர, பிரபாகரன் ஒரு குழந்தைதான் ஏகாதிபத்திய தாலாட்டில் வாழ முடியும் என்கின்றார். இதையொட்டி ஒரு கட்டுரை இந்த நூலில் இணைத்துள்ளேன்;. இக்கட்டுரை ஒரு சஞ்சிகையில் வெளிவருவதற்காக எழுதப்பட்டது. இக் கட்டுரையுடன் பின்னிணைப்பு அவசியம் கருதி இணைக்கப்பட்டுள்ளது. எதார்த்தத்தில் மக்களை மந்தை நிலைக்கு தாழ்த்தி, அறியாமையைத் தமது மூலதனமாக்குகின்றனர்.


ஒட்டு மொத்தமாக இவை அனைத்தையும் மக்கள் தெரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் மந்தை நிலைக்குள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தமிழ், சிங்களத் தலைவர்கள் விதிவிலக்கின்றி ஏகாதிபத்தியத்திடம் எப்படி நாட்டை விற்றுள்ளனர் என்பதை, இந்த நூல் ஆதாரத்துடன் நாட்டுப் பற்று உள்ளவர்களுக்குத் தெளிவுபடுத்துகின்றது. புலிகளும், துரோகக் கட்சிகளும்கூட தமது குறைந்தபட்ச அடையாளத்தை எப்படி தொலைத்து வருகின்றனர் என்பதை ஆராய்ந்தளிக்கின்றது. மேலும் சிங்களக் கட்சிக்கு இடையில் வேறுபாடுகள் மறைந்து விட்டதையும் ஆராய்ந்தளிக்கின்றது. நாட்டை ஏகாதிபத்தியத்திடம் விற்பதில், தமிழ் மற்றும் சிங்கள (முஸ்லீம், மலையக கட்சிகளும் கூட) கட்சிகள் அனைத்தும் ஒன்றுபட்டு நிற்பதை இக்கட்டுரை துல்லியமாக அம்பலப்படுத்துகின்றது. துரோகக் குழுக்களுக்கும் புலிகளுக்கும் எதிராக தம்மை அடையாளம் காட்டியவர்களும் எப்படி தம்மை அரசியல் ரீதியாக இனம் காட்ட முடியாது போயுள்ளனரோ, அது போல் புலிகளுக்கும் துரோகக் குழுக்களுக்கும் இடையில் அரசியல் வேறுபாடுகள் அற்றுப் போனதை இந்த நூல் தெளிவாக அம்பலப்படுத்துகின்றது. மக்களுக்கு எதிரான இவர்களின் துரோகத்தை இந்த நூல் அம்பலப்படுத்துகின்றது.


இலங்கையில் நடக்கும் ஒட்டு மொத்த காட்டிக் கொடுப்பை, இலங்கையில் யாரும் அம்பலப்படுத்தி போராட முன்வரவில்லை. அந்தப் பணியின் அங்கமாகவே இந்த நூல் உங்களுக்கு பல்வேறு தடைகளைக் கடந்து கிடைக்கின்றது. இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை தெரிந்த கொள்ள விரும்பும், சமூகத்தின் பால் அக்கறை உள்ள ஒவ்வொருவரையும் இந்த நூல் ஒன்றிணைய அறைகூவுகின்றது.