தொ குப்பாக, இந்த ஆய்வு இயற்கையை ஆதாரமாகக் கொள்கின்றது. சமுதாயத்தின் பல்வேறு மனித அவலங்களை நாம் இனம் கண்டு கொள்ளவும், அவைகளை ஒழித்துக் கட்டவும் மார்க்சியம் சகல விடயங்கள் மீதும் தன்னை உறுதியாக இணைத்துப் போராடுகின்றது.


மார்க்சியம் என்பது அனைத்துச் சமூக அவலங்களையும் இனங்கண்டு ஆய்வு செய்யும் ஒரு முறை மட்டுமின்றி, அதை மாற்ற நடைமுறையாக வழிகாட்டும் ஒரு போர்த் தந்திரப் புரட்சிகர அரசியல் வழியாகும். இத்தத்துவம் சமுதாயத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டுவதுடன், அதைப் பாட்டாளி வர்க்கம் தனது தலைமையில் முன்னெடுத்து வழிநடத்துகின்றது.


இந்தத் தத்துவம் எந்தச் சாதிக்கோ, இனத்துக்கோ, பாலுக்கோ (ஆண்பால் - பெண்பால்), நிறத்துக்கோ, மதத்துக்கோ உரிமையானதல்ல. இது உலகளாவிய ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு வழிகாட்டும் பாட்டாளி வர்க்கத் தத்துவமாகும். இது உலகமயமாதலுக்கும், ஏகாதிபத்தியத்துக்கும், நிலப்பிரபுத்துவத்துக்கும், மதவாதத்துக்கும், நிறவாதத்துக்கும், இனவாதத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும் என மனிதனை அடிமைப்படுத்தும் அனைத்துக்கும் எதிரானது.
இந்த வகையில் ஆணாதிக்கம் மீதான ஆய்வுகளை, மார்க்சியம் அதன் இயற்கை சார்ந்து அடையாளம் கண்டு, அதை வேரறுக்கப் போராடுகின்றது. இதனால் மார்க்சியம் அல்லாத மற்ற வர்க்கப் பெண்ணியங்கள் கடுமையான எதிர்ப்பை முன் வைக்கின்றனர். ஆனால் பல்வேறு துறை சார்ந்து ஆய்வு மற்றும் விமர்சனங்களைச் சமுதாய விடுதலை நோக்கி முன்வைப்பதன் மூலம், வர்க்கப் போராட்டத்தின் அரசியல் பாதையை உறுதி செய்கின்றது. பல்வேறு முதலாளித்துவப் பெண்ணிய ஆய்வுகளின் பின்னால் உள்ள ஆணாதிக்கத்தை, விபச்சாரத்தை, சோரம் போதலை அம்பலமாக்குகின்றது.


பொதுவாகப் பலர் ஆணாதிக்கத்தைப் பெண்ணின் உறுப்பு மற்றும் பாலியல் நடத்தை ஊடாகவே அடையாளம் காட்ட முனைகின்றனர். இன்றைய விளம்பர உத்திகளின் வழியில் இதைப் பொதுவாகக் கையாள எல்லா விதமான முயற்சியையும் செய்கின்றனர்.


இதையொட்டி லெனின் "பாலுறவு திருமணம் பிரச்சினைகள் யாவும் சமுதாயப் பிரச்சினையைச் சேர்ந்த கூறுகளே ஆகும் என்பதே மறந்து விடப்படும் ஒரு நிலைக்கு இது இட்டுச் செல்லும். இதற்கு பதிலாய், மாபெரும் சமுதாயப் பிரச்சினையே பாலுறவுப் பிரச்சினையின் கூறாக அதன் வாலாகக் கருதப்படத் தொடங்கிவிடும். பிரதான அம்சம் இரண்டாந்தர நிலைக்கு உரியதாக்கப்பட்டுப் பின்னிலைக்குத் தள்ளி ஒதுக்கப்படுகிறது."60


பெண்ணின் மீதான ஆணாதிக்க இழிவுகள், ஆணாதிக்க விடுதலைகள், பெண்ணை நசிந்து அடிமையாக வாழவும், கவர்ச்சி காட்டி சுதந்திரமாக வாழவும் வழிகாட்டுகின்றது. பெண்ணைப் பாலியல் அங்கம் ஊடாக இனம் காட்டவும், பெண் அப்படி காட்டி வாழவும் பழக்கப்படுத்தபட்டுள்ளாள். இந்த இரு போக்கிலும் இரு எதிர் நிலைக் கோட்பாடுகள் கட்டமைக்கப்படுகின்றன. எதிர் பிரிவை அடிமையாக அடக்கப்படுவதாகக் காட்டி சுதந்திரமாக இருப்பதாகப் பிதற்றவும், சுதந்திரமாக இருப்பதை விபச்சாரமாகக் காட்டி அடிமையாக இருக்க, எதிர்நிலைக் கோட்பாடுகள் சமூக வடிவமாகின்றன. இவை பலவிதமான ஆணாதிக்கக் கோட்பாடுகளை, பெண் விடுதலை சார்ந்து உற்பத்தி செய்கின்றது.


இந்த நிலையில் பெண் மேலும் மேலும் நுகர்வின் கவர்ச்சி பண்டமாக மாறும் பாதையை, சுதந்திரமானதும் ஜனநாயகத்தின் தெரிவாகக் காட்டுவதும், இன்றைய உலகமயமாதலின் உலகக் கண்ணோட்டமாகும். இதில் இருந்து பாலியல் விடுதலை பற்றிய பிரமைகள் ஊட்டப்படுகின்றன.


பெண் பண்பாட்டு ரீதியாகத் திறந்த விபச்சார உலகுக்குள் அழைத்து வரப்படுகின்றாள். இங்கு ஆண்கள் பலதார மணத்தின் வரைமுறையற்ற ஆணாதிக்கப் பாலியல் கனவுகள் பூர்த்தியாவது பண்பாடாகின்றது. பெண் வரைமுறையற்ற ஆணாதிக்கத் தேவையைப் பூர்த்தி செய்யும் விபச்சாரப் பாலியலை வந்தடைய, ஆணின் வரைமுறையற்ற பாலியல் தேவையைப் பூர்த்தியாக்குவதை, ஆணாதிக்கப் பூர்சுவா பெண்ணியம் கொடிப் பிடித்து அழைத்துச் செல்லுகின்றது.


உலகமயமாதல் மூலதனத்தைக் குவித்துச் செல்வதால், சொத்திழப்பு தீவிரமடைகின்றது. சொத்திழந்த மக்கள் கூட்டம் பாரம்பரிய வாரிசு குடும்ப அமைப்பை விட்டு சுதந்திரமாகின்றனர். இதனால் குடும்பச் சிதைவும், புதிய குடும்ப உருவாக்கமும் நிகழ்கின்றது. இந்தக் குடும்பம் பரஸ்பர இணைவை முன்வைத்து இணைக் குடும்பங்களாக மாறுகின்றன. ஆனால் ஆணாதிக்க அமைப்பில் தொடர்ந்து இருப்பதால் அவை தொடர்ச்சியாகக் கறைபடிகின்றது.


சொத்திழந்து செல்லும் மக்கள் கூட்டத்தில் பெண்கள் நிலை மேலும் கடினமாகின்றது. பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேறுவதன் மூலம், ஆணாதிக்கக் கட்டுகளை விட்டு வெளியில் வரமுடியும் என்ற பூர்சுவா வாதங்கள், யதார்த்தத்தில் பொய்யான பிம்பங்களாகின்றன. ஏனெனின் பெண் உலகமயமாதலின் மூலதனக் குவிப்பால் சொத்திழப்பின் அங்கமாக இருக்கும் போது, எப்படி பொருளாதார முன்னேற்றத்தை வந்தடைய முடியும்.


பூர்சுவா பொருளாதார முன்னேற்றம்? ஆணாதிக்கத்தை ஒழிக்கும் என்ற வாதங்களை நடைமுறை புள்ளிவிபரங்கள், தகர்த்துவிடுகின்றன.


ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமையின் ஒட்டுண்ணி என்பதால், தனிச் சொத்துரிமை ஒழிக்கப்படும் போதே பெண்ணின் விடுதலை சாத்தியமாகும். இதில் சலுகைகள் என்பது ஆணாதிக்கத்துக்கு உட்பட்ட ஆணாதிக்கச் சமூக அமைப்பைப் பாதுகாக்கும் ஒரு கடிவாளமாகக் கடமையைச் செய்வனவாகும்.


பெண்ணியம் என்பது சமுதாயத்தை அதன் இயற்கையின் இயங்கியல் வளர்ச்சியூடாக ஆராய்ந்து, ஆணாதிக்கத்தைத் தகர்க்கப் போராடுவதில் சார்ந்துள்ளது. சமுதாயத்தை விஞ்ஞானப் பூர்வமாக, பொருள்முதல்வாத நோக்கில் ஆராய மறுத்து, வைக்கின்ற தீர்வுகள் எல்லாம் ஆணாதிக்கத்துக்கு உட்பட்டவையே. இவை மார்க்சியப் பெண்ணியத்துக்குத் திருத்தத்தை முன்வைப்பதன் மூலம், ஆணாதிக்க ஒழிப்பைப் பின்போட (தள்ளிப் போட) கனவு காண்கின்றது. ஆனால் மார்க்சியப் பெண்ணியம் ஆணாதிக்க ஒழிப்பைத் தனது வர்க்கப் போராட்ட கடமையாக, அங்கமாகக் கொள்வதுடன், அதன் பாதையில் தொடர்ச்சியான தியாக வரலாற்றைப் புரட்சிகரமான போராட்டமாகக் கொண்டு போராடி வருகின்றது.


அந்தப் பாதையை முன்னெடுப்பதில் இவ்வாய்வு மேலும் ஓர் ஆயுதமாகின்றது. சுரண்டும் வர்க்கத்தை ஒழிக்கும் போராட்டத்தில், அதன் ஒட்டுண்ணியான ஆணாதிக்கத்தை இந்த மண்ணில் இருந்து அகற்றி, இந்த மண்ணில் ஒரு சொர்க்கத்தைப் படைக்க, பாட்டாளி வர்க்கப் புரட்சிகர அரசியல் போராட்டத்தில் பங்குகொள்வோம். வாருங்கள். அணிதிரளுங்கள். புரட்சிகரமான சமூகத்தைப் படைத்திடுவோம். இது தான் ஒவ்வொரு மனிதனின் சமூகக் கடமையாகும்.