09292023வெ
Last updateபு, 02 மார் 2022 7pm

விமர்சனத்தின் மீது ஒரு பதிலுரை: பெண்ணாதிக்கச் சமூகத்தில் நிலவிய சமூகச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்ஆணாதிக்கச் சமூகத்தில்நிலவிய தனிச் சொத்துரிமையும் சமூக அடிப்படையும்

ஆணாதிக்க அமைப்பில் பெண்ணுக்கு எதிரானதாகக் காணப்படும் அனைத்தையும், எதிர்மறையில் புரிந்து மறுக்கும் ஒரு விமர்சனத்தை "ஆணாதிக்கமும் பெண்ணியமும்" (தொகுதி:1) என்ற என் நூல் மீது சேது என்பவர் முன்வைத்துள்ளார்.


இயற்கையின் வளர்ச்சி விதியையும் அதன் தேர்வையும் அதன் இயங்கியல் தன்மையையும் கூட மறுத்து விடுகின்றார். ஆணாதிக்கத்தை வெறுமனே ஒற்றைப் பரிணாமத்தில் புரிந்து, அதை வறட்டுத்தனமான ஆணாதிக்கத்தை முன்தள்ளுகின்றார்.


உதாரணமாகக் குழந்தை மீதான தாய்மையையும், தாயுரிமையையும் மறுக்கின்றார். இவற்றைப் பெண்கள் மீதான வன்முறை எதிர்ப்பு சிறப்பிதழாக வெளிவந்த "மனித உரிமைக் கங்காணி" என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார்.


ஒரே நூலாக எழுதி பின் நடைமுறையில் சில பிரச்சினைகள் ஏற்பட்டதால் தனித் தனி நூலாக வெளிவரும் என் நூலின் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் விமர்சகரின் பல்வேறு விடயங்களுக்குப் பதில் அளிக்கின்றது. அத்துடன் என் முதல் நூல் விமர்சகரின் கருத்துக்குப் பல தளங்களில் மறுத்துரைத்த போதும், அதை எடுத்து விமர்சிக்க முடியாத பரிதாப நிலைக்குச் சென்று, ஒற்றைப் பரிணாமத்தில் கருத்தை ஒருதலைபட்சமாகவே வைக்கின்றார். இருந்தும் விமர்சனம் தொடர்பாகக் குறிப்பாக ஆராய முற்படுகின்றேன்.


அவர் தனது விமர்சனத்தில் "....மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் துவங்கியவுடன் உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையை விடவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது என்று போகிற போக்கில் சொல்லப்படுவது அதிர்ச்சியளிக்கின்றது" (பக்கம் -46) என்று நான் எழுதியதாகக் கூறி மறுக்கின்றார்.


நான் எழுதியது என்ன? "மனிதன் இயற்கையைத் தனது உழைப்பைக் கொண்டு மாற்றத் தொடங்கியவுடன், உற்பத்தியின் வேறுபட்ட தன்மையுடன் கூடிய வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கைப் பிளவுகளும் வளர்ச்சி பெற்றது." (பக்கம் -027) என்றே எழுதியிருந்தேன்.


இது ஆழ்ந்த அர்த்தங்களைக் கொண்டவை. அதாவது வேலைப் பிரிவினையும், பிளவும், மனித வளர்ச்சியை ஒட்டிய இயற்கையான பிளவுகளும் கூட, இதை ஒட்டி வளர்ச்சி பெற்றது என்பதையே சுட்டிக் காட்டியிருந்தேன்.


உலகளாவிய மனிதப் பிளவுகள் (இனம், நிறம்,...) மட்டுமல்ல, அதன் வேறுபட்ட பண்பாட்டு கலாச்சார அடிப்படைக்கான கூறுகளையும் இது சுட்டிக் காட்டுகின்றது. உழைப்பு "பிரிவினையும் பிளவும்" மனித வளர்ச்சியுடன் கூடிய இயற்கை பிளவுகளுடன் வளர்ச்சி பெறுகின்றது என்றே எழுதப்பட்டுள்ளது. பெண்ணின் நிலை உழைப்பின் பிரிவுடனும் பிளவுடனும் எப்படி தரம் தாழ்ந்தது என்பதையும் விளக்குகின்றது. இதற்கு இயற்கையான பிளவும் மனித வளர்ச்சியுடன் எப்படி துணை போகின்றது என்பதை விளக்குகின்றது.


என் சொற்களான "பிரிவினையும் பிளவும்" என்பதைப் "பிரிவினையை விடவும்" என மாற்றிய விமர்சகர், என் கருத்தின் பெயரில் ஒன்றை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிடுவதன் மூலம், உள்ளடக்கத்தைத் திரித்துக் காட்டிவிடுகின்றார். தனிச் சொத்துரிமை உருவாக்கிய சமூக அடிமைத்தனத்தை, இயற்கையின் பிளவுகள் எப்படி உதவி செய்கின்றது என்பதும், இயற்கை சார்ந்த மனிதப் பிளவுகளுடன் எப்படி வளர்ச்சி பெறுகின்றது என்பதே என் விளக்கம். இதில் ஒன்றை உயர்ந்ததாகவும் மற்றதைத் தாழ்ந்ததாகவும் காட்டுவது என் கருத்து அல்ல.


அடுத்து விமர்சகர் என் கருத்தாகப் "பெண்ணின் வீட்டு உழைப்பு உபரியைத் தோற்றுவிக்கவில்லை" (பக்கம் -46) என எடுத்துக் காட்டி இதை மறுக்கின்றார்.


நான் என்ன எழுதினேன் எனப் பார்ப்போம். "பெண்ணைச் சமூக உழைப்பில் இருந்து புறக்கணிக்கப்பட்ட போக்கு (பெண்ணின் உழைப்பு மூலதனத்துக்கே உரிய உபரி பெறுமானத்தை இழந்தது.) என்பது, பெண்ணைச் சமூக வாழ்க்கையில் இருந்து படிப்படியாக அகற்றியதில் வெற்றி கண்டது. வீட்டுக் கடமை என்பது சமூகக் கடமையாக இருந்ததுடன் அது மதிப்புக்குரியதாக இருந்தது. தனிச் சொத்துரிமை உபரியை அடிப்படையாகக் கொள்ளத் தொடங்கிய நிலையில், பெண்ணின் வீட்டு உழைப்பு உபரியை உற்பத்தி செய்யவில்லை. ஆணின் உழைப்புக்குச் சமூகப் பெறுமானத்தை உபரியின் ஊடாகப் பெற்ற போது, பெண்ணின் உழைப்பு அந்த உபரியின் முன் சமூகப் பெறுமானத்தை இழந்தது. இந்த நிலையில் வீட்டு வேலையும், வீட்டு நிர்வாகமும் சமூகத் தன்மையை இழந்தது." (பக்கம்-017)


இந்த பக்கம் முழுவதும் இது பற்றி விபரமாக எழுதப்பட்டுள்ளது. என் கருத்தின் அடிப்படையான அரசியல் உள்ளடக்கத்தைப் புரிந்து கொள்ளத் தவறியதில் இருந்து, ஒருதலைபட்சமாகக் கருத்து வைப்பது நிகழ்கின்றது.


அதேநேரம் "பாலின வேலைப் பிரிவினையும் உபரியும் இதனைத் தொடர்ந்து தனிச்சொத்துடைமையும் உருவானதை ஆசிரியர் தெளிவாக விளக்கவில்லை" என்று கூறியதன் மூலம் புரிதலில் உள்ள முரண்பாடு தொடங்குகின்றது. பாலின வேலைப் பிரிவினையில் உபரி ஆண் சார்ந்து இருந்ததையும், பெண் உபரியை உற்பத்தி செய்யாத நிலையில் தான் ஆணாதிக்கச் தனிச்சொத்துரிமை அமைப்பு உருவாகின்றது. இதை மறுக்கும் விமர்சகர், இதை நான் விளக்கவில்லை என்று கூறுவது அவரின் இயங்கியலற்ற புரிதலுக்கு இசைவாக என்னை விளக்க கோருவது ஒரு வேடிக்கையான விடயம்.


பெண்ணின் சமூகத் தகுதி என்ன? என்ற கேள்வியில் இருந்தே, இந்த உபரி பற்றிய பிரச்சினையைப் புரிந்து கொள்ளமுடியும். பெண்ணின் உழைப்பு இயற்கையான வேலைப் பிரிவினையுடன் மனித முன்னேற்றம் சார்ந்து வேறுபடத் தொடங்குகின்றது. இந்த வேறுபட்ட உழைப்பு சார்ந்து உற்பத்தி உபரியை உருவாக்கிய போது (இங்கு சமூகத் தேவை மறுக்கப்படுவது உருவாகின்றது.), ஆணின் உழைப்பே அதை வழங்கியது. இந்தப் புள்ளியில் இருந்தே ஆண்வழிச் சமூகம் பரிணமிக்கின்றது. மூலதனத்தை உற்பத்தி செய்யும் சமூக உழைப்பில் உபரியை உற்பத்தி செய்ய முடியாத ஆணாதிக்கச் சமூக எல்லையில் தான், பெண்ணின் அடிமைத்தனத்தைச் சமூகம் உறுதி செய்கின்றது. பெண்ணின் உழைப்பு (குழந்தை பராமரிப்பு, வீட்டுவேலை, விவசாயம்) உபரியை (சமூகத் தேவையை மறுத்து இருப்பின்) உருவாக்கியிருப்பின், தனிச் சொத்துரிமை அமைப்பில் நிச்சயமாகச் சமூகத் தகுதி பெற்றிருக்கும். இதனால் பெண்ணின் அடிமைத்தனம் என்பது சாத்தியமில்லை.


வர்க்கச் சமுதாயத்தில் அடிமைத்தனம் என்பது எப்போதும் பொருளாதாரக் கட்டுமான ஆதிக்கம் யாரிடம் உள்ளது என்பதைப் பொறுத்து விடயமாகும். பொருளாதாரக் கட்டுமான ஆதிக்கம் பெண்ணிடம் இருந்தால் ஆண் அமைக்கின்ற அடிமைத்தனமும், ஆணிடம் இருந்தால் பெண் அடிமைத்தனமும் உருவாகும் என்பது அதன் அடிப்படை விதியாகும்.


பெண்ணின் தனிப்பட்ட உழைப்பு தனது தேவைக்கு அதிகமாக (இதை உபரியாக அழைப்பது தனிச் சொத்துரிமை கண்ணோட்டமாகும்.) உற்பத்தி செய்த போதும், அடிப்படைத் தேவையின் எல்லைக்குள் தான் (குழந்தை வளர்ப்பிலும், சமூகத் தேவையிலும்) அவை இருந்தன. இதை உபரி என்று சொல்லமுடியாது.


தாய் வழிச் சமூகத்தின் அடிப்படை தேவையைப் ப+ர்த்தி செய்வதை, உபரியாகக் கூறுவது தனிச்சொத்துரிமை கண்ணோட்டமாகும். தாய்வழிச் சமூகத்தின் சிறப்பே, உபரி (சமூகத் தேவை தனியுடைமையான உபரிக்கு எதிராக இருந்தது.) இல்லாமல் இருப்பதால்தான். அதனால்தான் முதல் சமூகம் ஆதி பொதுவுடைமைச் சமூகமாக இருந்ததை மார்க்சியம் எடுத்துக் காட்டுகின்றது. இங்கு ஆண் அச்சமூகத்தின் அங்கமே ஒழிய, ஆணைச் சார்ந்து அச்சமூகம் இருக்கவில்லை. ஆண் எந்த நேரமும் பெண்வழிச் சமூகத்தால் வெளியேற்றப்படக் கூடிய நிலையில்தான் இருந்தான். ஆண் பெண்வழிச் சமூகத்துக்குத் தன் உழைப்பை நல்கினான். இதில் இருந்து முற்றாக மாறுபட்டது ஆண்வழிச் சமூகம்.

 

பெண் இயற்கை சார்ந்து நிலையாக இருந்தாள். ஆண் அலைந்து திரிந்த வாழ்வியலில் ஆண் பலம் பெற்றான். அவன் உணவுப்பழக்கங்கள் பெண்ணில் இருந்து வேறுபடத் தொடங்கியது. வேட்டையைச் சார்ந்து புதிய கருவிகளையும், பல அறிவியில் கண்டு பிடிப்புகளையும் ஆண் பெற முடிந்தது. பெண்களை விட அதிக அளவுக்கு உண்ட இறைச்சியானது மூளை வளர்ச்சியையும் பலத்தையும் ஆணுக்கு வழங்குகின்றது. நீண்ட பயணங்கள் ஊடான உயிர் வாழ்தலுக்கான போராட்டங்களும், உணவுப் போராட்டங்களும் உடலை வலுவூட்டியது. அத்துடன் வேட்டை மற்றும் வேட்டையின் எல்லையோரப் போர்கள், ஆணின் அதிகாரத்துக்கான பொருளாதார மேன்மைக்கு அடிப்படையாகியது.


பெண் நிலையான தளத்தில் சூழல் சார்ந்தே கண்டுபிடிப்புகளையும், அறிவியலையும் கண்டறிய முடிந்தது. ஆனால் ஆண் சமூகத்துக்கு வெளியில் இருந்து கொண்டு வந்த பொருட்கள், அதன் மீதான மதிப்புக்கு அடிப்படையாகியது. இந்த மதிப்பு உபரிக்கான அடிப்படையாக மாறுகின்றது. ஆண் தொடர்ச்சியான புதிய அறிவியல் வளர்ச்சியில் மதிப்பைப் பெறுவதில் முனைப்பு பெறுகின்றது. தேவைக்கு அதிகமாக மதிப்பைப் படைப்பதில், அவனின் உழைப்பு வளர்ச்சி பெறுகின்றது. உழைப்புப் பிரிவினையால் ஏற்பட்ட ஆணின் அறிவியல், பெண்ணின் உழைப்பு எல்லைக்குள் செல்வாக்கு செலுத்த தொடங்கியது. இந்த இடைநிலைக் காலக்கட்டத்தில் ஆண் உழைப்பு மற்றும் அறிவியல் பெண்வழிச் சமூகத்தில் தவிர்க்க முடியாத மதிப்பை ஆணுக்கு வழங்குகின்றது.


ஆணின் உழைப்பும் அறிவியலும், சலுகைகளாகி படிப்படியாக அவனின் உரிமையாக, உழைப்பின் உபரி அவனைச் சாருகின்றது. அதே நேரம் மந்தை வளர்ப்பைப் பெண்ணின் கையில் இருந்து ஆண் அதைப் படிப்படியாகக் கைமாற்றுகின்றான். ஆண் பெண்வழிச் சமூகத்துக்கு வெளியில் இருந்து வருபவனாக இருந்ததால், அவன் சமூக உழைப்பில் பங்கு பெற வேண்டியிருந்தது. வேட்டையாடல் மனித வளர்ச்சியுடன் குறைய, ஆண் மிருகங்களை மேய்ப்பதற்காக கொண்டு செல்வது ஒரு போக்காக தொடங்குகின்றது. மந்தை வளர்ப்பு பிரதான உற்பத்தியாக மாற, ஆணின் உழைப்பு முன்னுக்கு வருகின்றது. மந்தை மீதான உரிமை, அதன் பாதுகாப்பு முதல் அதன் மீதான அறிவியலை ஆண் படிப்படியாகப் பெற்றுக் கொள்வது அதிகரிக்கின்றது.


பெண் சமூக வளர்ச்சியில் சமூகத் தேவையைப் ப+ர்த்தி செய்யும் தகுதியை, ஆணினுடைய உபரியின் முன் இழந்து விடுகின்றாள். ஆணைச் சார்ந்து பெண் சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் போது, தாய்மை என்ற சமூகப் பண்பற்ற ஆண் தனது உழைப்பை உபரியாக மாற்றுகின்றான். சமூகத் தேவையை மறுத்து உபரியைச் சந்தைப்படுத்துவதற்குப் பதில் மற்றவனுக்குக் (பெண்ணுக்குக்) கொடுக்கும் போது, தனக்குச் சேவை செய்யக் கோரும் ஓர் எதிர்பார்ப்பைக் கோரத் தொடங்கினான். தனது உபரியில் வாழ்பவர்களை அடிமைப்படுத்தும் கண்ணோட்டமே ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பாக உருவாகின்றது. தனது உபரிக்கு வாரிசு உரிமை என்ற அடிப்படையில், குழந்தையைப் பெற்றுப் போடும் பெண் என்ற அடிப்படையில், அவள் ஆணின் அடிமையானாள். இந்த அடிமை வாழ்வு ஆணின் உபரியை வீங்க (அதிகரிக்க) வைத்தது. ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை குடும்பத்துக்கு வெளியில், உபரி பரிமாறப்படும் விற்பனை வடிவம் உருவாகின்றது. உபரியை நுகரும் குடும்ப எல்லை ஆணாதிக்கமாகவும், சேவையைக் கோரும் அடிமைக் குடும்பமாகவும், உபரியின் விற்பனை தனிச்சொத்துரிமை சமூகமாகவும் பரிணமிக்கின்றது.


இவை பெண்ணின் அடிமை வாழ்வுக்கு வித்திட்ட ஆரம்பக் கால நிலையாகும். விமர்சகர் இன்றைய வரலாற்று நிலையுடன், பெண்வழிச் சமூகம் ஆண்வழிச் சமூகமாக மாறிய நிகழ்வைப் போட்டுக் குழப்பியடித்து விடுகின்றார். ஆணாதிக்கச் சமூகம் எப்படி பெண்ணை அடிமையாக்க முடிந்தது என்பதை விளக்கும் போது, தனிச் சொத்துரிமை அமைப்பு உருவான போது உபரி பற்றி ஆராய்வது அவசியமாகி விடுகின்றது. பெண்வழிச் சமூகத்தில் இருந்து பெண் அடிமைத்தனத்தை ஆராயும் அன்றைய காலக்கட்டத்தை, இன்றைய ஏகாதிபத்திய அமைப்பில் ஒப்பிட்டுக் கருத்து கூறமுடியாது.


உலகமயமாதல் தனிச் சொத்துரிமையைப் பரந்துபட்ட மக்களுக்கு ஒழித்து விடுகின்றது. இங்கு உபரி என்பது மூலதனத்தின் அதாவது மற்றொருவரின் சொத்தாகவே உள்ளது. பரந்துபட்ட உழைக்கும் மக்களிடம் தனிச்சொத்துரிமை இல்லாத போது, தனிமனித உபரி பற்றிய விவாதத்தை ஆண் - பெண் இடம் பேசுவது அவசியமற்றது. பெண்ணாதிக்கச் சமூகத்தில் இருந்து ஆணாதிக்கம் உருவாகிய காலத்தில் தனிப்பட்ட ஆணின் உபரியே தனிச்சொத்துரிமையை உருவாக்கியதுடன், ஆண் - பெண்ணின் குறிப்பான சமூக உறவாக்கங்களை உருவாக்கியது. ஆணாதிக்க அமைப்பில் பெண்ணை அடிமையாக்கிய போது, பெண்ணின் வீட்டுவேலை முதல் அவளின் உழைப்பும் சமூகப் பெறுமானத்தைப் பெறவில்லை. ஆணாதிக்க அமைப்பில் அவளுக்கு அது மறுக்கப்பட்டது. இங்கு உழைப்புக்கே மதிப்பில்லாத போது, உபரி பற்றி பேசுவதும் அர்த்தமற்றவை. பெண்ணின் உழைப்பு மதிப்பிழந்து, ஆணாதிக்க அமைப்பில் பெண் அடிமை வாழ்வுக்கு இதுவே அஸ்திவாரமாகும்.


பெண்ணின் உழைப்பை முதலாளித்துவம் வீட்டில் இருந்து வெளியில் கொண்டுவந்த போது, ஆணைப் போல் அந்தப் பெண்ணுக்குத் தனிச் சொத்துரிமையை அனுமதிக்கவில்லை. ஆனால் பெண்ணின் உழைப்பு, மூலதனத்துக்கு தேவைப்படட உபரியை வழங்கியது. ஆனால் தனிப்பட்ட பெண்ணுக்கு உபரியை வழங்கவில்லை. மூலதனத்துக்குப் பெண்ணின் உழைப்பு உபரியை வழங்கியதால், பெண்ணின் உழைப்புக்கு மதிப்பு ஏற்பட்டது. இந்த மதிப்பு பெண்ணுக்குக் கூலியை வழங்கியதன் மூலம், அவள் மூச்சுவிட முடிகின்றது. ஆனால் அவளின் மதிப்பு ஆணை விட கீழாகவே வைக்கப்பட்டது.


ஆணும் சரி, பெண்ணும் சரி இங்கு தனக்கான உபரியை உற்பத்தி செய்யவில்லை. மூலதனத்துக்கு உபரியை (இங்கு உபரி என்பது ஆண் - பெண்ணின் அடிப்படை தேவைக்கு மிஞ்சியதை மட்டும் எடுக்கவில்லை. தேவை மறுக்கப்பட்ட நிலையிலும் பெறப்படுகின்றது.) வழங்கியதன் மூலம், சொந்த அடிப்படை தேவையின் ஒரு பகுதியைத் தான் பெறமுடிந்தது, முடிகின்றது. ஆணும் சரி, பெண்ணும் சரி தேவையைக் கூலியாகப் பெறுவதை, உபரியாக மதிப்பிட முடியாது. இன்று உலகமயமாதல் விரிவாக்கத்தின் போது சிறுவிவசாயிகளின் உற்பத்தி உபரியை உற்பத்தி செய்வதில்லை. மாறாகத் தேவையைப் படைக்கின்றனர். ஆனால் பலர் இதில் கோட்பாட்டு ரீதியாக உபரியை உற்பத்தி செய்வதாகக் கூறி அவர்களை எதிரியாக்குகின்றனர்.


உபரி பற்றி அடிப்படை புரிதல் இன்மையில் இருந்தே விமர்சகர், பூர்சுவா மிதவாத ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை வெளிப்படுத்த முடிகின்றது. உபரி என்பது தனிச் சொத்துரிமைக்கே உரியது. சமூகத் தேவையை மறுக்கும் போது உருவாகின்றது. தேவை மறுக்கப்படும் போது, உபரி என்பது எதிர்மறையில் வளர்ச்சி பெறுகின்றது. இந்த அடிப்படை உள்ளடக்கத்தில் தான், தாய்வழிச் சமூகத்தில் பெண்ணின் உழைப்பு உபரியை உற்பத்தி செய்யவில்லை.


தாய்வழிச் சமூகம் சமூகத் தேவையை உற்பத்தி செய்த போது, அங்கு உபரி என்பது கற்பனையானது. அங்கு அன்றாடத் தேவையைத் தாண்டிய உற்பத்திகள் கூட, அச்சமூகத்தின் உபரியல்ல. நாளைய சமூகத்தின் தேவையை அடிப்படையாக கொண்டு சமூகத் தேவையாக இருந்த வரை, அவை உபரியல்ல. சமூகம் தனது தேவையை அடிப்படையாகக் கொண்டு உற்பத்தி செய்த வரை, அவை உபரியல்ல. தனது தேவையைப் பூர்த்தி செய்யும் பண்ட மாற்றத்தில் ஒன்று அல்லது பல உற்பத்தி சார்ந்து மற்ற சமூகங்களுடன் செய்த வரையும் கூட, அவை உபரியல்ல. தேவையை மறுத்து தான் உபரி உருவாகின்றது. அதாவது சமூகத் தேவை உள்ள போது, அதை மறுக்கும் அடிப்படை விதிதான் உபரியாகும். தேவை மறுக்கப்படும் ஒரு நிலையில் தான், உபரி நேர்விகிதத்தில் அதிகரிக்கின்றது. சமூகத் தேவைக்கு வெளியில் நுகர்வு விளம்பர வெறியாட்டம் கூட, உபரியை விரிவாக்குகின்றது. அதாவது இது மூலதன வடிவத்தில் செயற்கையாகக் கட்டமைக்கப்படுகின்றது.


பெண்வழிச் சமூகத்தில் அதாவது ஆதி பொதுவுடைமைச் சமூகத்தில் தேவையை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி, உபரியைப் படைக்கவில்லை. இதில் இருந்து ஆணாதிக்கச் சமூகம் உருவான போது, சமூகத் தேவையைப் பூர்த்தி செய்வது என்பது மறுக்கப்படுகின்றது. அதாவது சமூகத் தேவைக்குப் பதில் ஆணாதிக்கச் சமூக அமைப்பு, தனிமனிதன் சார்ந்த கண்ணோட்டம் தனிமனித உபரியை உருவாக்குகின்றது. இது சமூகத் தேவையை மறுக்கின்றது. தனிமனிதத் தேவையும் அதன் பூர்த்தியும் நிறைவுறும் போது, தனிமனித உற்பத்தி சார்ந்த உபரி உருவாகின்றது. (அதாவது உழைக்கும் தனிமனிதன் உழைக்க முடியாத சமூக உறுப்பினர்களின் தேவையை மறுப்பது உபரி உருவாவதற்கு அடிப்படையாகின்றது.) இதைவிட இயற்கை சார்ந்த தடைகள், உற்பத்தி திறன் மற்றும் தொழில் நுட்ப அடிப்படை சார்ந்தும் ஏற்படும். தேவைக்கு தனிமனித உழைப்பைப் பங்கிடுவதை மறுத்ததன் மூலம், தனிச் சொத்துரிமை அமைப்பு உபரியை உருவாக்குகின்றது. பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண் வழிச் சமூகம் உருவான வரலாற்றில், உபரி ஆணைச் சார்ந்தே இருந்தது.

 

பெண்கள் இக்காலத்தில் ஆண்களுக்கு நிகராக விதிவிலக்காகச் சில தனிநபர்கள் அபரிதமான உற்பத்தியைச் செய்திருந்தாலும், பெண்ணின் சமூகக் கண்ணோட்டம் சமூகம் சார்ந்து அது உபரியாகி விடவில்லை. பெண் தனது சொந்தக் குழந்தை முதல் சொந்தத் தாய் வழிச் சமூகத்தின் தேவை மீதான உணர்வுபூர்வமான பங்களிப்பு வரை இயற்கையாகவே உபரிக்கு எதிரானதாக இருந்தது. தனிச்சொத்துரிமை வழிவந்த ஆணாதிக்கச் சமூகம் உழைப்பையும் உற்பத்தியையும் தனிச் சொத்துடைமையாக்கிய போது, சமூகத் தேவை மறுக்கப்பட்டு உருவான உபரி தனி ஆணிடம் மையப்பட்டது. அந்த உபரிக்கே பெண் அடிமையானாள். அந்த அடிமை கூட தனிச் சொத்துரிமை வாரிசை உருவாக்கும் அடிப்படையில், ஆண் தனது இரத்த வழியை உறுதி செய்ய உருவானது. இதற்குப் பின் பெண்ணின் உபரி என்ற பேச்சுக்கே இடமற்ற, ஆணாதிக்கச் சமூகத்தின் அடிமையாகவே வாழ்ந்தாள், வாழ்கின்றாள்.


உழைப்புச் சந்தையில் பெண் பங்கு பற்றிய வௌவேறு காலத்திலும் கூட, பெண்ணின் உழைப்பு தேவைக்கு மிஞ்சிய உபரியைப் படைக்கவில்லை. பெண்ணின் தேவை மறுக்கப்பட்டுச் சுரண்டப்பட்ட உபரி என்பது, பெண்ணின் சொத்தாக இருக்கவில்லை. மாறி வந்த சமுதாயத்தின் ஆளும் வர்க்கங்களின் சொத்தாகவே (மூலதனமாகவே) இருந்தன. பெண் உபரியைப் படைக்கின்றாள் என்பது, உள்ளடக்கத்தில் அபத்தமானவை. அவளின் தேவை மறுக்கப்படும் போது, உபரி படைக்கின்றாள் என்பது கோட்பாட்டு ரீதியாகவே பெண்ணை இழிவுபடுத்துவதுதான். மாறாக அவளின் உழைப்பு வரைமுறையின்றி சுரண்டப்படுகின்றது. இங்கு அவளின் உபரியை மட்டும் மூலதனம் சுரண்டவில்லை, தேவையையே சுரண்டுகின்றது. இவை பாட்டாளி வர்க்க ஆணுக்கும் கூட விதிவிலக்கின்றி பொருந்தும்.


மூலதனம் உழைக்கும் ஆணின், பெண்ணின் தேவையை மறுத்து, உருவாக்கும் தேவை பற்றிய நிர்ணயமே உபரிக்கான அஸ்திவாரமாக உள்ளது. இந்த உபரியைப் படைக்க இங்கும் மேலதிக நேர உழைப்பை உருவாக்கும் வரையறையை அடிப்படையாகக் கொண்டு, உபரி உருவாக்கப்படுகின்றது. இந்த ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பு, தேவைக்குரிய உற்பத்தியைச் செய்யாத வரை, உபரி என்பது உழைக்கும் மக்களின் தேவையை மறுப்பதில் இருந்தே செயற்கையாக உருவாக்கப்படுகின்றது.


இன்று உலகளாவிய உணவு உற்பத்தியை எடுத்தால் உபரி என்பது வெற்றுச் சொல்தான். கோடிக்கணக்கான மக்களின் உணவுத் தேவை மறுக்கப்பட்டு அரைப்பட்டினி, முழுப்பட்டினி ஏற்படுத்தி, அதில் உபரி என்பது வெற்றுச் சொல்லாகும். மனிதத் தேவையை மறுத்து உருவாகும் உபரியான உலக உணவுக் கையிருப்பு ஒரு வருடத்துக்குக் கூட போதாது. இந்த உபரியும் கூட தேவையை மறுப்பதை அடிப்படையாகக் கொண்டது. அதாவது மக்களின் தேவை என்பதில் இருந்து, எதிர்கால சமூகத் தேவையை மறுக்கும் போதே உபரி உருவாகின்றது. இவை அனைத்தும் தேவையை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் உபரி பற்றிய புலம்பல் நிகழ்கின்றது.


உபரியை பெண் படைக்கவில்லை என்ற என் மையவாதம், மனிதச் சமுதாயத்தில் பெண் ஒருக்காலும் உபரியின் சொந்தக்காரியாக இருக்கவில்லை. அதாவது தனிச்சொத்துரிமையின் தலைமையை ஒருக்காலமும் அவள் அலங்கரிக்கவில்லை.


பெண்வழிச் சமூகத்தில் இருந்து உருவான ஆண்வழிச் சமூகத்தில், உபரியின் சொந்தக்காரனாக ஆண் மட்டுமே இருந்துள்ளான். அதுவே இன்றுவரை நீடிக்கும் ஆண்வழிச் சமூகமாகும். பெண்வழிச் சமூகத்தில் இருந்து ஆண்வழிச் சமூகம் உற்பத்தி சாhந்து உருவான போது, தனிச்சொத்துரிமையின் வாரிசாக ஆண் உருவாகின்றான். இந்த ஆண்வழிச் சமூகத்தில் தனிப்பட்ட ஆண் தனிச்சொத்துரிமையின் சொந்தக்காரனாக மாறிய போது, உபரி அவனின் கையில் கொழுவீற்று இருந்தது. தனிப்பட்ட எல்லா ஆண்களும் (விதிவிலக்குகள் சில இருந்தபோதும்) தனிச்சொத்துரிமையின் பிரதிநிதியான போது, உபரி அதன் மூலமாகியது. இந்த நிலையைப் பெண் ஒருக்காலும் (சில விதிவிலக்குகள் இருந்த போதும்) அடையவில்லை. இந்த தனிச்சொத்தின் உபரிக்குச் சொந்தக்காரனான தனிப்பட்ட ஆண்களின் சொத்துகள், மாறிவந்த உற்பத்தி மாற்றங்களுடன் பரந்துபட்ட மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு, சிலர் அதன் சொந்தக்காரர்கள் ஆனார்கள். இது உலகமயமாதலாக இன்று தொடர்கின்றது.

 

விமர்சகர் தொடர்கின்றார். "இதைவிட வேடிக்கையாக, தாய்மை உணர்வு என்பது ஆண் - பெண் இருவருக்குமே பொதுவானது" என்று கூறுகின்றார்.


தாய்மை உணர்வு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது என்ற என் கருத்தை வேடிக்கையாகவே எதிர்மறையில் நின்று மறுக்கின்றார். மறுக்கின்ற போது ஆணாதிக்கச் தனிச் சொத்துரிமை, பெண்ணின் மீது சுமத்தியுள்ள தாய்மையின் கடமைகளைப் பட்டியல் இட்டுக் காட்டுகின்றார். தாய்மை உணர்வு என்பது ஆணாதிக்கம் சொல்வதில் இருந்து புரிந்து கொண்டதால், இந்த அவலம் நிகழ்கின்றது.


மார்க்சியம் இயற்கையில் இருந்தே தாய்மையைப் புரிந்து கொண்டு அதைப் பாதுகாக்கின்றது. மூவாயிரம் ஆண்டுகளாக நிலவும் ஆணாதிக்க அமைப்புக்கு முன்பு நிலவிய தாயுரிமை சமூகத்தில், தாய்மை பெண்ணின் உரிமையாக, பெண்ணின் உணர்வாக, தாயுரிமையைப் பிரதிபலிக்கும் சின்னமாக இருந்தது. இதனால் தான் பெண் தலைமை தாங்கினாள். பெண்ணின் தலைமை என்பது பெண்ணின் தாய்மையினால் தாய்மை உணர்வினால் ஏற்பட்டது. இங்கு தாய்மை உணர்வு இருவருக்கும் பொதுவானதாக இருந்தால் ஆணும் - பெண்ணும் தலைமை தாங்கியிருப்பார்கள்.


தாய்மை என்பது ஆணாதிக்கச் சமூக எல்லைக்குள் நாம் புரிந்து கொள்வோமாயின், இது ஏகாதிபத்தியப் பெண்ணியத்தின் வக்கிர வெளிப்பாடுதான். குழந்தையைப் பெண் சுமக்கும் கணம் தொடங்கி அவற்றை ஆணாதிக்கக் கடமையாகச் சுமத்தப்பட்ட சமூக இழிவுகளுக்கு அப்பால், பெண் உணர்வுபூர்வமான தாய்மை உணர்வுகளை இயற்கையாகக் கொண்டே வாழ்கின்றாள்.


தனிச்சொத்துரிமை தனிமனித வக்கிரத்தில் உலகமயமாக்கி மனித உணர்வுகளை மலினப்படுத்தியுள்ளது. இருந்தபோதும் பெண்ணின் தாய்மை உணர்வு இயற்கை சார்ந்த சமூக உணர்வாக நீடிக்கும் பண்பு, ஆணாதிக்கத் தனிமனிதத் தனிச் சொத்துரிமை பண்புக்கு எதிரானது. தாய்மை உணர்வை ஆணுக்கும் சமமாக நிலை நாட்டிக் காட்டுவது, ஆணாதிக்க அமைப்பில் பெண்ணை வக்கிரப்பட வைப்பதாகும். இயற்கையில் நாம் எல்லா உயிரினத்திலும் ஆணின் சமூக உணர்வுகளை விட, பெண்ணின் சமூக உணர்வுகளைத் தாய்மைப் பண்பில் புரிந்து கொள்ளமுடியும். ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் தாய்மை உணர்வு, ஆண் தலைமை தாங்குதல் என்ற அடிப்படையில் இழிவாக்கப்பட்ட போது, அதை அப்படியே ஏகாதிபத்திய எல்லையில் பெண் புரிந்து கொண்டால் எது நிகழுமோ, அதை அப்படியே விமர்சகர் வெளிப்படுத்தி விடுகின்றார்.


பெண்வழிச் சமூகத்தில் குழந்தை வளர்ப்பில் சமூகப் பங்களிப்பு உயிரோட்டமாக இருந்தது. இதில் ஆண்கள் பெண்களுக்கு ஒத்துழைத்தனர். பெண் நிலைத்து வாழவும், ஆண் அலைந்து வேட்டையாடும் சமூகக் கண்ணோட்டம் வளர்ச்சி பெற்றது. பெண்வழிச் சமூகத்திற்குப் பெண்ணின் தலைமையும் இங்கு அஸ்திவாரமாக இருந்தது. எல்லாப் பெண்களும் எல்லாக் குழந்தைகளுக்கும் தாயாகவே இருந்தனர். தாய்மைப் பண்பின் சிறப்பு இது. இதுவே எல்லா ஆண்களும் கணவனாகவும், எல்லாப் பெண்களும் மனைவியாகவும் வாழ வழியமைத்தது. சமூகமே குழந்தை வளர்ப்பில் பொறுப்பான முக்கிய சமூகப் பங்கை வகித்தது. ஆணாதிக்க அமைப்பில் ஆணின் ஒத்துழைப்பைப் பெண் கோரும் போது, குடும்பம் என்ற சமூகக் கூட்டு எல்லைக்குள் பெண்ணின் ஜனநாயகக் கோரிக்கையாகவே உள்ளது. இந்த எல்லைக்குள் மட்டும் மார்க்சியம் ஆதரித்துப் போராடுகின்றது. தாய்மை உணர்வை ஆணுக்கு இடம் மாற்றும் ஏகாதிபத்தியப் பெண்ணியச் சீரழிவை எதிர்த்துப் போராடுகின்றது. அதே நேரம் மார்க்சியம் அதைவிட முன்னேறிய நிலையில், குழந்தை பராமரிப்பில் சமூகப் பங்களிப்பை முதன்மைப்படுத்துகின்றது. அதையே மார்க்சியம் தனது ஆணையில் வைக்கின்றது.
தொடர்கின்றார் விமர்சகர். உடல் சுதந்திரம் சார்ந்து "...சட்டப்பூர்வமாக வயதுக்கு வந்த ஒரு பெண் சுயாதீனமாகப் பூரண விருப்புடன் எவ்வித கட்டாயமும் இன்றி உறவு கொள்ளுதல், திருமணம் செய்து கொள்வது, அவள் விருப்பப்படி கருத்தரிப்பது, கருக்கலைப்பது, குழந்தை பெற்றுக் கொள்வது, குடும்பக் கட்டுப்பாடுச் சாதனங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டு மிக அதிகமான உள்ளடக்கியவை" (பக்கம்-48) என்று என் கருத்தின் மீதான விமர்சனமாக இதை வைக்கின்றார்.


என் நூலில் இறுதிக் கட்டுரையில் (பக்கம்-256-268) விரிவான அடிப்படையில் எழுதப்பட்ட இந்த விடயத்தை எடுத்து, ஒரு வரியில் கூட அதை மறுக்க முடியவில்லை. சட்டப்ப+ர்வமான வயது தடையை மட்டும் போட்டபடி, உரிமை பற்றிய விவாதத்தை முன் வைக்கின்றார். சட்டப்படியான வயது என்ற ஒன்றை யார்? எப்படி? எதன் அடிப்படையில் தீர்மானிப்பது?

 
பெண்ணின் உடல் சார்ந்த விடயங்களை அவள் தீர்மானிக்கும் உரிமையை இந்த ஆணாதிக்க அமைப்பில், ஆணிடம் இருந்து கோரும் ஜனநாயக எல்லைக்குள் மட்டும் இது சரியானவை. ஆனால் இந்தப் பெண்ணின் உடல் மீதான ஆணின் உரிமையும் சரி அல்லது பெண்ணின் உரிமையும் சரி ஆணாதிக்கச் சமூக அமைப்பே தீர்மானிக்கின்றது. இதன் அடிப்படையில் இந்த உரிமை பற்றிய ஆணாதிக்கக் கண்ணோட்டத்தை, அதன் எல்லா அம்சங்கள் மீதும் மார்க்சியம் எதிர்த்துப் போராடுகின்றது. இதைப் பெண் எதிர்த்துப் போராடாத வரை உடல் உரிமை என்பது எப்போதும், ஆணாதிக்க ஏகாதிபத்தியப் பண்பாட்டு எல்லைக்கு உட்பட்ட கோரிக்கையே. தனிச் சொத்துரிமை தனிமனிதன் சார்ந்த அனைத்தையும் தீர்மானிக்கும் சமூக அமைப்பில், அது பெண்ணுக்கு மறுப்பதையே மார்க்சியம் எதிர்த்து நிற்கின்றது. இதுவே ஜனநாயகக் கோரிக்கையாகின்றது. ஆனால் பெண் விடுதலைக்கு இது தீர்வை வழங்குவதில்லை. பெண்ணின் இக்கோரிக்கை இயல்பில் இந்த ஏகாதிபத்திய அமைப்பில் வாழ்ந்தபடி, அதன் எல்லைக்குள்ளான தீர்வாக முன்வைப்பதால் ஏகாதிபத்தியக் கோரிக்கையாக மாறிவிடுகின்றது. பெண்ணின் உடல் மீதான கட்டுப்பாடு அனைத்தும் ஏகாதிபத்தியச் சமூக எல்லைக்கு உட்பட்டதே. ஏகாதிபத்திய அமைப்பில் உடல் கட்டுப்பாடு என்பதும், பாட்டாளி வர்க்க அமைப்பில் பெண்ணின் உரிமை (உரிமை என்று எதுவும் இருப்பதில்லை.) என்பதும் முற்றிலும் தலைகீழானவை.


எவ்வித கட்டாயமும் இன்றி பெண் உறவு கொள்ளும் உரிமை, ஏகாதிபத்திய அமைப்பில் பூர்சுவா நுகர்வு விபச்சாரத்தைக் கோருவதே. ஆணாதிக்கமும் பெண்ணியமும் என்ற நூலின் இறுதிக் கட்டுரையில் காதலிக்க சுதந்திரம் வேண்டும் என்று கேட்ட போது, லெனின் எதைச் சொல்கின்றாரோ அது இதற்கும் மீளச் சிறப்பாகப் பொருந்துகின்றது. பெண் விடுதலையின் பெயரில் ஆண் எதை எல்லாம் செய்கின்றனோ, அதை எல்லாம் பெண் கோருவது என்பது ஏகாதிபத்தியக் கோட்பாட்டுக்குள் பெண், ஆண் மயமாகின்றாள் என்பதே அர்த்தம்.


ஆணாதிக்க அமைப்பில் பெண் புகைக்க இருக்கும் தடையை மறுத்து, பெண் புகைக்கும் உரிமை கோரப்படும் போது, ஜனநாயகக் கோரிக்கையின் எல்லைக்குள் மட்டுமே சரியானது. ஆனால் புகைப்பது பெண் விடுதலையின் ஒரு வடிவமாகக் கருதி புகைப்பின், அவற்றை நாம் எதிர்த்து நிற்கின்றோம். பாட்டாளி வர்க்கச் சமூகத்தில் உடல் மீதான உரிமை என்ற கோரிக்கை என்பது அதன் சுய அர்த்தத்தையே இழந்துவிடும். அதாவது அரசு, ஜனநாயகம், சுதந்திரம் எல்லாம் எப்படி அதன் அர்த்தத்தை இழந்து விடுகின்றதோ அதுவே இதற்கும் நிகழும். ஒரு பெண் உறவு கொள்ளும் உரிமையைக் கோரும் போது, விபச்சாரத்தின் உள்ளடக்கத்தை எதிர்த்தே கோரவேண்டும். இக்கோரிக்கைகள் இந்த ஆணாதிக்க அமைப்பில் இரண்டு எல்லைகளுக்குள் கோரப்படுகின்றது. ஒன்று ஜனநாயக கோரிக்கையாகவும் இரண்டாவது ஏகாதிபத்தியக் கோரிக்கையாகவும் உள்ளது. இதன் விலகல் கத்தி விளிம்பில் ஊசலாடுகின்றது. இது எல்லா ஜனநாயகக் கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.


நான் யாரைத் திருமணம் செய்வது என்பது நிலப்பிரபுத்துவ அமைப்பில் பெண்களுக்கு மறுக்கப்படுகின்றது. அதைப் பெண் கோரும் போது வர்க்கம், சாதி, நிறம், இனம், மதம் போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து கோரவேண்டும். ஆனால் இந்த உரிமையை பெற்றுவிடுவதால் பெண் விடுதலை அடைந்து விடுவதுமில்லை. இந்த ஏகாதிபத்திய அமைப்பில் அதன் எல்லைக்குள் தான் இந்த ஜனநாயகக் கோரிக்கை செயற்படுகின்றது. மேற்கத்திய சமூகங்களில் இவைகளைத் தெளிவாகவே எதார்த்தத்தில் காணமுடியும்.


கருத்தரிக்கும் உரிமை, குழந்தையைப் பெற்றுக் கொள்வது என்பது பெண் தனித்து எடுக்கும் உரிமை சார்ந்தவை அல்ல. சம்பந்தப்படும் இரண்டாவது நபருடன் தொடர்புடைய விடயமாக உள்ளது. இங்கு சமூகக் கூட்டுத் தன்மை முதன்மையானது. தனிச்சொத்துரிமைக் கண்ணோட்டத்தை உடல் மீது கோரும் பட்சத்தில், ஆணாதிக்கக் கண்ணோட்டமே அங்கு பிரதிபலிக்கின்றது.


கருக்கலைப்பது என்பது கூட சம்பந்தப்பட்ட இரண்டு நபருடன் தொடர்புடையதே. அத்துடன் குழந்தையின் அதாவது மூன்றாவது நபர் சம்பந்தபட்ட விடயமாகவும் உள்ளது. இந்தக் கரு அழிப்பிலும் ஏகாதிபத்தியக் கண்ணோட்டமே தீர்க்கமாகச் செயல்படுகின்றது. இங்கு சமூகக் கூட்டு இல்லாத நிலையில் மட்டும் பெண் முடிவு எடுக்க முடியும்.


ஆனால் இவை அனைத்தும் ஒட்டு மொத்தமாக இந்த ஏகாதிபத்தியச் சமூக அமைப்பின் எல்லைகளே தீர்மானிக்கின்றன. குழந்தை பேறு, யாருடன் உறவு கொள்வது, எப்படி உறவு கொள்வது, கரு அழிப்பது, எந்தக் கருத்தடையைப் பாவிப்பது என அனைத்தும் இந்த ஏகாதிபத்தியப் பண்பாட்டு - கலாச்சார நுகர்வுப் பொருளாதாரக் கூறுகளே பெண்ணுக்கும் சரி, ஆணுக்கும் சரி முடிவைக் கொடுக்கின்றது. ஏகாதிபத்தியப் பொருளாதார அமைப்பு எதை படைக்கின்றதோ, அதை நுகர்வதன் மூலம் மனிதச் சமூகத்தின் விளைவாகின்றது.


ஏகாதிபத்திய மூலதனம் எதைச் சந்தைப்படுத்த முடியுமோ, அதுவே சமூகத்தின் நடைமுறைத் தீர்வாக வாழ்வியலாக உள்ளது. இதை ஆணாதிக்க அமைப்பில் ஆணிடம் இருந்து பெண் கோரும் போது எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. பெண் ஆணிடம் உடல் கூறு சார்ந்து சில சலுகைகளைப் பெறுவதற்கு அப்பால், எதுவும் தலைகீழாகி விடுவதில்லை. பாட்டாளி வர்க்கம் இதில் உள்ள ஜனநாயகக் கோரிக்கைகளுக்கு அப்பால், மற்றவற்றை ஈவிரக்கமின்றி எதிர்க்கின்றது. பாட்டாளி வர்க்கம் இந்த ஏகாதிபத்தியத் தனிமனிதச் சமூக அமைப்புக்கு மாற்றான ஒரு சமூகத்தைக் கோருகின்றது. தனிமனிதத் தனிச் சொத்துரிமை சமூகக் கண்ணோட்டங்களையும், அது சார்ந்த பண்பாடுகளையும், கலாச்சாரங்களையும் தகர்த்தெறியக் கோருகின்றது. மாறாக இயற்கையின் பாதுகாப்புடன் கூடிய மனிதக் கூட்டுகளை அடிப்படையாகக் கொண்ட சமூகப் பண்பாட்டை, கலாச்சாரத்தைச் சமூகம் சார்ந்து கோருகின்றது.


மேலும் விமர்சகர் "செயற்கையாக உருவாக்கப்பட்ட இப்பாலினவாத வேலைப் பிரிவினையானது வன்முறையால் மட்டுமே நிலைநிறுத்தப்பட்டு வருகின்றது" என்ற வாதம் உண்மையில் தவறானவை.


பாலின வேலைப்பிரிவினை செயற்கையாக உருவானவையல்ல. மாறாக மனித வளர்ச்சியில் இயற்கையாக உருவானவை. அங்கு வன்முறை கையாளப்படவில்லை. ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமை உருவான போது இயற்கையின் தன்மை செயற்கையாக மாற்றப்பட்டது. அதாவது ஆணின் தேவையையும், கடமைகளையும் பூர்த்தி செய்யுமாறு ஆணாதிக்கச் சமூக ஒழுங்கு மாறத் தொடங்கியது. இது வன்முறையால் மட்டும் சாதிக்கப்படவில்லை. ஆணின் பொருளாதார ஆதிக்கத்தால், சமூகத் தன்மை அழிக்கப்பட்டுப் படிப்படியாக இயல்பாக மாறி வந்தது. இங்கு இந்த நிலை ஒரே நாளில் ஏற்படவில்லை. நீண்ட காலமாகப் பல படிநிலைகளைக் கடந்தே வளர்ச்சி பெறுகின்றது. ஆண் - பெண்ணுக்கு இடையிலான வேலைப் பிரிவினை நீடித்த பாதுகாப்பை, ஆணாதிக்கப் பொருளாதாரச் சமூகப் பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளே கட்டமைக்கப்படுகின்றது. இது மீறப்படும் போதே வன்முறை கையாளப்படுகின்றது.
அடுத்து டார்வினின் "மற்றொரு கோட்பாடான வலிமையுள்ளதே உயிர்வாழும் என்பது பெண்களுக்கும் மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் எதிரானதே இவ்விடயம் போகிற போக்கில்தான் சொல்லப்படுகின்றது."


இந்த விடயம் என் தலைப்புக்கு உட்பட்டவையல்ல. ஆனால் விமர்சகர் இது பெண்களுடன் தொடர்புடையது என்கின்றார். டார்வின் கோட்பாட்டை இயற்கைக்கு வெளியில் தனிச் சொத்துரிமை அமைப்பில் புரிந்து கொள்ளும் அனைவரும் இதே தவறு இழைக்கின்றனர்.


இயற்கையில் உயிரினங்களுக்கு இடையிலான உயிர்வாழ்தலுக்கான போராட்டம், வலிமையில் மட்டுமல்ல, பல்வேறு கூறுகளுடன் தொடர்புடையவை. அனைத்து இயற்கையையும் அழித்து அதில் உயிரினங்கள் தம்மை நிலைநிறுத்தியதில்லை. மனிதன் இயற்கையை அழிக்கின்றான் என்பதால், அதை டார்வின் கோட்பாடாகப் பொருத்துவது தவறானது. ஒரு சமூகம் தனக்குள் வலிமையைக் கொண்டு உயிர்வாழ்தலை டார்வின் குறிப்பிடவில்லை. அதே போல் இயற்கையை அழித்து உயிர்வாழ்தல் பற்றியும் டார்வின் குறிப்பிடவில்லை. அப்படி குறிப்பிட்டதாகச் சிலர் திரித்தனர் என்பதே உண்மை.


உயிரினங்களின் தோற்றம் பற்றி டார்வின் அடிப்படை ஆய்வில் வலிமை பற்றி பேசும் போது, குட்டியை விட வலிமையான தாய் - தந்தை மற்றும் சமூகத் தன்மையில் வலிமையாக இருந்தவைதான் அதற்காகக் குட்டியை அல்லது சொந்த இனத்தில் வலிமை குறைந்ததை அழித்து உயிர்வாழ்ந்ததாக டார்வின் நிறுவவில்லை. ஒரு சமூகத்தின் உள்ளான அழிப்பு என்பது உயிர்வாழ்தலுக்குத் தடையானவை என்பதை டார்வின் தெளிவாகப் புரிந்தே இருந்தார். மிருகங்கள் - பறவை இனங்கள் என எங்கும் தனது சொந்த இனத்தினுள் இந்த வலிமை விதியைக் கையாண்டது இல்லை. அது போல் வலிமையால் இயற்கையை அழித்து உயிர் வாழ்ந்தவையல்ல. இந்த வலிமையில் உயிர்வாழ்தலை உருவாக்கவில்லை என்ற உண்மையைப் புரிந்து கொள்ளாமல் டார்வின் இருந்து இருந்தால், அவர் ஒரு சமூக இயற்கை விஞ்ஞானியாக இருந்து இருக்கவே முடியாது.


உண்மையில் டார்வின் கோட்பாடுகள் தனிச் சொத்துரிமை கண்ணோட்டத்தில் திரிக்கப்பட்டன. தனிச் சொத்துரிமைவாதிகள் தமது சூறையாடலை நியாயப்படுத்த, டார்வினின் விதியை இயற்கைக்கு எதிராகத் திரித்து கேடாகவே பயன்படுத்தினர், பயன்படுத்துகின்றனர். இதில் இருந்து விமர்சகர் தன்னை விடுவிக்கத் தவறி, அதில் இருந்து இதை எதிர்மறையில் நிலை நிறுத்திவிடுகின்றார்.


சுற்றுச்சூழல் என்ற வார்த்தை பிரயோகத்தையும், அதன் தனிச் சொத்துரிமை பாதுகாப்பை உள்ளடக்கிய சொல்லாக இருப்பதாலும், மார்க்சியம் அதை மறுதலிக்கின்றது. இதற்குரிய சரியான சொல் கண்டறியப்பட வேண்டும். இதை வெளிவரவுள்ள "உலகமயமாதலும் சர்வதேசியமும்" என்ற என் நூலில் விரிவாக ஆராய்கின்றேன்.


அடுத்து என் விவாதத்தில் விமர்சித்தவைகள் எந்தப் பெண்ணியம் (எந்த வர்க்கம்) சார்ந்தது என்று குறிப்பிடவில்லை என்று குறிப்பிட்டு, அதைக் குறைபாடாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.


அதாவது கோட்பாடுகளை முதலாளித்துவத் தாராளவாதப் பெண்ணியமா? தீவிரப் பெண்ணியமா? அல்லது மார்க்சியப் பெண்ணியமா? என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும் என்கின்றார். நாம் நடுநிலைவாதிகள் அல்லர். மார்க்சியப் பெண்ணியத்தை உயர்த்துபவர்கள்.


இங்கு முதலாளித்துவத் தாராளவாதப் பெண்ணியத்தையும், தீவிரப் பெண்ணியத்தையும் ஒரே சித்தாந்த அடிப்படையாகவே மார்க்சியம் கருதுகின்றது. கோட்பாட்டு ரீதியாக இவை இரண்டும் முதலாளித்துவக் கண்ணோட்டம் சார்ந்த, ஆணாதிக்கத்தைத் தக்கவைப்பதே. மார்க்சியம் இரண்டையும் அதன் கோட்பாட்டு அடிப்படையில் வேர் அறுக்கும் போது, தனக்கு எதிரான வர்க்க அடிப்படையில் நிலை நிறுத்தி அம்பலம் செய்கின்றது. எனவே என் விமர்சனங்கள் அனைத்துமே இன்றைய முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ ஆணாதிக்கச் சிந்தனையை எதிர்த்து மார்க்சியத்தை முன்வைக்கின்றது. இதைப் படிப்பவர்கள் தெளிவாகவே எதார்த்தத்தில் புரிந்து கொள்வர்.


நடைமுறை யுத்தத்தந்திர ரீதியில் மட்டுமே இந்த வேறுபட்ட போக்கு பற்றிய தெளிவு அவசியமாகும். அவர்களின் ஜனநாயகக் கோரிக்கையை இனங்கண்டு கொள்ளவும், ஜக்கியப்பட்ட போராட்டத்துக்கு வழிகாட்டவும் மட்டுமே. சித்தாந்த ரீதியாக மார்க்சியம் அல்லாத பெண்ணியங்கள் அனைத்தும், எதிரி வர்க்கத்தைத் தெளிவாகப் பிரதிநிதித்துவம் செய்பவையே.


"தனிக் கொத்தடிமை" தகர்க்காமல் பெண் விடுதலை சாத்தியமில்லை என்று கூறும் எதையும் நான் சொல்லவில்லை. தனிச்சொத்துரிமையைத் தகர்க்காமல் பெண்விடுதலை சாத்தியமில்லை என்பதே என் கருத்து. என் மொழி பற்றிய என் கருத்தை முன்னுரையில் குறிப்பிட்டுள்ளேன்.


என்னைப் பற்றி தவறான விளக்கம் ஒன்று இதில் உள்ளது. என்னை இலங்கை மலையகத் தமிழர் என்று குறிப்பிட்டது தவறானது. நான் மலையகத்தில் பிறந்தவன். என் இளமைக் காலத்தில் (10 வருடங்கள்) அங்கு வாழ்ந்தவன். என் அப்பாவின் வேலை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து கிழக்கிலும், நீர்கொழும்பிலும் இறுதியாக யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்தவன். ஆனால் என் ப+ர்வ அடையாளம் மலையகத் தமிழன் என்று அடையாளப்படுத்தப்படும் இந்திய வம்சவழியல்ல.


பி.இரயாகரன் - சமர்