Language Selection

பி.இரயாகரன் 2001-2003
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளைக் கொச்சையாகப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதைப் பார்ப்போம்.


"தனக்கில்லாத பிள்ளைப்பேறு ஆற்றல் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆண் பொறாமையில் புழுங்கியிருப்பான். பெண்ணின் பேறு ஆற்றல் பற்றிய ஆணின் தாழ்வு மனப்பான்மையை ஃபிராய்ட் என்பவர் "குழந்தைப் பேறு பொறாமை" என விளக்குகின்றார். ஃபிராய்டின் சமகால உளப்பகுப்பாய்வாளர் தியோடர் ரெயிக், ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சடங்குகளைக் கள ஆய்வு செய்து அவர்களது சடங்கிற்கு விரிவான உளப்பகுப்பாய்வு விளக்கம் தந்துள்ளார்.


பேறு காலத்தில் பிள்ளைப் பேறு வலியில் பெண் அவதிப்படுவது போல், அப்பழங்குடி இனத்திலுள்ள ஆண், தானும் குழந்தைப் பேறு வலியால் அவதிப்படுவதாகப் பாவனைச் சடங்கு நிகழ்த்துவான். இதன் நனவு மனப்பொருள் அவளின் வலியை இவன் வாங்கிக் கொள்வதாகக் கருதப்படுகிறது.


பெண் மீதான ஆணின் இந்த அன்பு உணர்வுக்குள்ளே பகை உணர்ச்சி ஒளிந்துள்ளது."59 ஃபிராய்ட்டின் இந்த ஆய்வு மிகவும் விசித்திரமானது. பிரசவ வலியில் ஆண் பங்கு கொள்ளும் அன்பின் பின், பகைமை ஒளிந்திருப்பதாகக் கூறும் வக்கிரம், முதலாளித்துவத் தனிச் சொத்துரிமையின், சொந்த வர்க்கக் கண்ணோட்டமேயாகும். தாய்மை, தாய்மைப் பேறில் குழந்தையைப் பெற்றெடுத்து, பாலூட்டி அன்பைச் சொரிகின்ற (பொழிகின்ற) கூட்டு வாழ்வில், தாய்மை குழந்தை மீது பகைமையைப் பாராட்டுவதில்லை. அன்புக்குப் பின்னால் பகைமை, பொறாமை இருப்பதாகக் கூறி எடுக்கும் எடுகோள், எவ்வளவு பேடித்தனமாகத் தாய்க்கும் குழந்தைக்கும் இடையில் தகர்ந்து போவதை நாம் காணமுடியும்.


சடங்குகள், உழைப்பில் ஈடுபடுவதில் தொடங்கி பகிர்வதில் உருவாகின்றது. பெண்களின் தாய்மை உணர்ச்சிகள், அதன் விளைவுகளில் கூட்டு வாழ்வில் இருந்து ஆண் பங்கு பற்றுவதை (பெறுவதை) உள்ளடக்கிய சடங்குகள் பகைமை பாராட்ட, பொறாமையைத் தீர்த்துக் கொள்ள உருவானவையல்ல. மாறாகக் கூட்டு வாழ்வின் அடிப்படையான உள்ளடக்கமாகும்.

 
மூலதனத்துக்கே உரிய போலியான அன்பும், மறைமுகமான பகைமையும், சொந்த வர்க்கப் பொறாமையில் இருந்து உருவாகின்றது. இதை, அந்த உணர்ச்சிகள் ஊடுருவாத மக்களிடையே புகுத்திக் காட்டுவது, முதலாளித்துவ ஆய்வாளர்களின் வக்கரித்த பார்வையாகும். தனிச்சொத்துரிமை சுரண்டல் அமைப்பு வடிவில் உருவாக்கிய ஆணாதிக்க அமைப்பைப் பாதுகாக்க, பொறாமையை இயற்கையின் வரலாற்றுத் தொடர்ச்சியாகக் காலாகாலமாக இருப்பதாகக் காட்ட, குழந்தைப் பேற்றில் திரித்துக் காட்டுவது அவசியமாகிவிடுகின்றது.


இங்கு உளவியல் மனப்பாங்கு வானத்தில் இருந்தா! குதித்தெழுகின்றது. சமூகப் பொருளாதார அமைப்பில் இருந்தல்லவா உருவாகின்றது. அன்பு, பொறாமை, காதல்... போன்ற மனித உணர்ச்சிகள் தனிச் சொத்துரிமை சுரண்டல் அமைப்பின் வர்க்க வெளிப்பாடாகும். இதை மூடி மறைத்த விளக்கங்கள் ஆணாதிக்க அமைப்பைத் திரித்துக் காட்டுவதாகும்.


ஃபிராய்டின் ஆய்வு தொடர்பாக லெனின் கூறுவதைப் பார்ப்போம். "(பாலுறவுப் பிரச்சினை குறித்து) இந்தப் பிரசுரத்துக்கு விஞ்ஞான மேற்பூச்சுக் கொடுக்கும் பொருட்டு பிராய்டின் கருதுகோள் இதில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இது படுமோசமான அபத்தமே அன்றி வேறில்லை... ஃபிராய்டின் தத்துவம் தற்போது மிகுந்த மோஸ்தருடையதாகி (குயளாழைn) விட்டது. பல்வேறு கட்டுரைகளிலும். விஞ்ஞான ஆய்வுரைகளிலும், பிரசுரங்களிலும், பிறவற்றிலும் - சுருங்கக் கூறுமிடத்து முதலாளித்துவச் சமுதாயத்தின் குப்பை மேட்டில் அத்தனைச் செழிப்புடன் மண்டிவிட்ட அந்தத் தனிவகையான இலக்கியத்தில் எடுத்துரைக்கப்படும் பாலுறவுத் தத்துவங்களிடம் எனக்கு நம்பிக்கை கிடையாது. ஓயாமல் தனது உந்தியை (வயிறை) நினைத்துத் தியானம் புரியும் இந்திய ஆண்டியைப் போல எந்நேரமும் பாலுறவுப் பிரச்சிசனைகளிலேயே முழு நாட்டம் கொண்டுள்ள இவர்களை நான் நம்புவதில்லை. பெரும்பாலும் வெறும் கருதுகோள்களேயான, அதுவும் பல சந்தர்ப்பங்களில் தான் தோன்றித்தனமான ஊகங்களேயான, இந்தப் பாலுறவுத் தத்துவங்கள் அபரிமிதமாகியுள்ளதற்குச் சொந்த தேவைகளே காரணம் என்பதாகத் தோன்றுகிறது எனக்கு. முறைகேடான அல்லது மட்டு மீறிய தனது பாலுணர்ச்சிக்கு முதலாளித்துவ நெறியின் முன்னர் நியாயம் கற்பிக்க வேண்டும், கண்டிக்கப்படல் ஆகாதென வாதாட வேண்டுமென்ற விருப்பமே இந்தத் தத்துவங்களுக்குரிய மூல ஊற்றாகும்"60 என்று வக்கரித்த பாலியல் ஆய்வுகள், விளக்கங்கள் ஆகியவற்றை லெனின் மிகத் தெளிவாகவே அம்பலம் செய்துள்ளார்.


இது போன்ற அடுத்த சமூகத் திரிபைப் பார்ப்போம் "பெண்ணுடைய மனித மறு உற்பத்தி ஆற்றல் இயற்கையாக நடந்தால் அதைக் கட்டுப்படுத்த வழியற்றவனாக நெடுங்காலம் ஆண் தவித்திருப்பான். இவனது தாழ்வு மனப்பான்மை இவனை அவளுக்கு எதிரியாக்கி இருக்க வேண்டும."59


இப்படி ஆணாதிக்க வரலாற்றைத் திரித்தபடி, சொந்தச் சுரண்டல் அமைப்பைப் பாதுகாத்தபடி, ஆணாதிக்க அமைப்பை ஜோடித்துக் காட்டுகின்றனர். பெண் தலைமை தாங்கிய சமுதாயத்தில், எப்படி ஆணின் தாழ்வு மனப்பான்மை பெண்ணை ஆணுக்கு அடிமையாக்கியது? எப்படி, அதைச் சாதிக்க எந்த சக்தி ஆணுக்குக் கிட்டியது? என்ன சமூகப் பொருளாதார அதிகாரம், பெண்ணை மீறி ஆணுக்குக் கிட்டியது? எப்படி அது சாத்தியமானது? இதெல்லாம் பெண்ணின் மறுஉற்பத்தியில், அதை ஆண் கட்டுப்படுத்த முடியாத தாழ்வு மனப்பான்மையில் ஏற்பட்டதாக, ஆணாதிக்க அமைப்புக்கு விளக்கம் கொடுக்க முதலாளித்துவம் முனைகின்றது. முதலாளித்துவ அமைப்பின் அச்சாணி ஆணாதிக்கமாக இருக்க, அதைத் திசை திருப்புவது வர்க்க அமைப்பைப் பாதுகாக்குமல்லவா? இதில் இருந்தே பாட்டாளி வர்க்க ஆயுவுகளை மறுத்துரைக்க, எல்லாவிதமான விலகல்களையும் முன்வைப்பதில் முனைப்பாக முன்வைக்கின்றனர்.


பெண்ணின் மறு உற்பத்தி மீதான தாழ்வு மனப்பான்மை, ஆணைப் பெண்ணுக்கு எதிராக நிலை நிறுத்தியது எனின், அது தான் இன்று வரை பொது அடிப்படையா? அப்படியெனின் இன்று பெண்கள் குழந்தைகளைப் பெற மாட்டோம் என்று, தனிப்பட்ட ஆண் எதிர்ப்பில் (ஆணாதிக்க அமைப்பை அல்ல.) முதலாளித்துவப் பெண்ணியப் பிரகடனங்கள், எந்த வகைப்பட்டன? பெண்களின் உளவியல் பிரமை ஆணாதிக்க வழியில் சீரழிவாகின்றது அல்லவா!


பெண்ணின் தாய்மை சார்ந்த மறுஉற்பத்தி, சமுதாய ரீதியாகப் போற்றப்பட்ட நிலையைத் தகர்த்தது எல்லாம் இந்தத் தனிச்சொத்துரிமை சார்ந்த சுரண்டல் அமைப்பு தான். இந்த அமைப்புக்கே உரிய உணர்ச்சிகள் பெண்ணை இழிவுபடுத்தியதே ஒழிய, அடிமைப்படுத்தவில்லை. அடிமைப்படுத்தப்பட்ட பெண் மீது, உணர்ச்சிகளின் வேற்றுமைகள் மீது இழிவைப் புகுத்தியது.


இயற்கையின் உழைப்பு வடிவத்தைத் திரித்து முன்வைக்கப்படும் வாதத்தைப் பார்ப்போம். "புராணம் சடங்குக்கு முந்திய வடிவம்"59 என்கிற திரிபு, மனித உழைப்பைக் கருத்து முதல்வாதத்துக்குள் இட்டுச் செல்லுகின்றது. புராணம் உருவாகிய பின்பே சடங்கு தொடங்குகின்றது என்பது, பொருளை மறுக்கின்றது. புராணம் எப்படி உழைப்பை மீறி உருவாகியிருக்க முடியும்? உழைத்து அதைப் பகிர்ந்துண்ட மனிதன், தனது கூட்டுச் செயலை வெளிப்படுத்தும் நடைமுறையையே, சடங்காகச் செய்ய முனைகின்றான். உழைப்பினுடைய வெற்றி தோல்விகளின் விளைவுகளை இயற்கை மீதான அறியாமை மீது வெளிப்படுத்தும் போது, சடங்கு அதன் வடிவமாகின்றது. இந்தச் சடங்கில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்துக்கு விளக்கம் கொடுத்தோர், புல்லுருவியாக வளர்கின்ற போதே, கற்பனையான புராணமாகச் சடங்கு மாற்றப்படுகின்றது. இது மட்டுமே புல்லுருவியாக வாழ அடிப்படையைக் கொடுக்கின்றது.


இன்றைய நவீன மதங்களின் தோற்றங்கள், மதம் மூலம் மூலதனத்தைப் பாதுகாக்கும் உலகமயமாதல் நோக்கத்துக்கு அப்பால், புல்லுருவிகளாக வாழும் பிரிவுகள் மக்களின் உழைப்பை அற்புதங்களின் பின், கடவுளின் பின் சூறையாடி வாழ, மதங்களை முதலாளித்துவ விளம்பர வழியில் விளம்பரம் செய்வதைக் காணமுடிகின்றது. மனிதனின் இயற்கை மீதான வழிபாட்டைத் திசை திருப்பி, ஏதோ தாங்களே அதைச் சாதித்துத் தருவதாகக் காட்டும் புல்லுருவித்தனத்தில், வழிபாட்டையே கட்டமைக்கின்றனர். சடங்குகள் பல கற்பனையான நடத்தைகள் மீது கட்டமைக்கப்பட்ட போதும், அது கருத்துமுதல்வாதமாக விளக்கி விடமுடியாது. ஏனெனின் பொருள் சார்ந்த உழைப்பை வெளிப்படுத்தும் போது, இயற்கையான பொருள்முதல்வாதம் மீது சடங்கின் தன்மை பிறக்கின்றது. ஆனால் சடங்கில் இருந்து சமுதாயத்துக்கே புல்லுருவியான வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட புராணம், திட்டவட்டமாகக் கருத்துமுதல்வாதத் தன்மை கொண்டவை. புராணத்தின் பின்னால் சமுதாயம் ஒட்டு மொத்தமாகவே புல்லுருவித்தனத்துக்குள் சிதைக்கப்பட்ட போது, கருத்துமுதல்வாதப் புராணம் சடங்கை விளக்கி வழி காட்டிய வழியில், சடங்கு மேலும் இயற்கை பொருள்முதல்வாதத்தில் இருந்து அன்னியமாகி, கருத்துமுதல்வாதமாகச் சீரழிந்தது.


மக்களின் உழைப்பை, அதன் விளைவான உற்பத்திப் பொருளை, எப்படி மூலதனமாக்கி மக்களிடம் இருந்து அன்னியமாக்கி பின், இன்று மூலதனமே உழைப்பை உருவாக்கியதாகக் காட்டும், காணும் பாதையைப் போல் சடங்கும் புராணத்தின் பின்னால் சீரழிந்தது. இதில் இருந்து சடங்கைப் புராணத்துக்கு பிந்தியதாகக் காட்டுவதும், அதன் போக்கில் சமுதாய நடத்தைகளைத் திரித்தும் முன்வைக்கப்படுகின்றது. ஆணாதிக்க அமைப்பை நிரந்தரமாக காட்டுவதும், பெண் வழிச் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதும் நிகழ்கின்றது.


************


சிமோன்தெபோவா என்பவரை முன் வைத்து, இன்று பெண்ணியல் வாதிகளால் போற்றப்படும் வார்த்தையாக "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றார்"61 என்கின்றனர். இதை இரவிக்குமார், பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ் தமது நூலின் முன்னுரையில் எடுத்து விளக்கியே, தமது ஆணாதிக்கத்தை முன்வைக்கின்றனர்.


"ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை பெண்ணாக ஆக்கப்படுகின்றார்" என்ற வார்த்தையின் பின்னால், ஆணாதிக்க அமைப்பு பாதுகாக்கப்படுகின்றது. ஆணாதிக்கத்தைப் பெண் உறுப்பு மீதும், பெண்ணின் பிறப்பைத் தனிப்பட்ட வளர்ப்பில் ஏற்படுவதாக, இது விளக்கம் கொடுக்கின்றது. "ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை" என்ற வாதம் கருத்துமுதல்வாதமாகும். ஆணாதிக்கச் சமுதாயம் ஒன்று இருப்பதை மறுக்கின்றது.


பெண் பிறக்கும் முன்பே, ஏன் கருத்தரிக்கும் முன்பே, ஆணின் விந்து பெண்ணைத் தீர்மானிக்கும் முன்பே, பெண் பெண்ணாகவே இருக்கின்றாள். இங்கு பிறந்த பின் "பெண்ணாக ஆக்கப்படுவதில்லை. பெண்ணாகப் பிறப்பதில்லை என்ற வாதத்தின் பின், ஆக்கப்படுகின்றாள் எனின், பெண், பெண்ணாக ஆக்கப்படாமலும் போய்விடும் என்ற உள்ளடக்கத்தையும் இது கொண்டுள்ளது. இது அராஜகவாதப் பெண்ணியத்தின் கொச்சையான ஆணாதிக்க விளக்கமாகும். சமுதாயத்தில் இருந்து, அதற்குப் புறம்பாக யாரும், யாரையும் சுதந்திரமாக ஆக்க முடியாது.


ஒரு பெண், பெண்ணாகச் சமுதாயத்தில் அடையாளப்படுத்தப்பட்ட ஆணாதிக்கச் சமுதாயத்தில், பிறப்பிலோ, அதன் பின்போ பெண் வரையறுக்கப்படுவதில்லை. அதற்கு முன்பே அவை தீர்க்கமாக வரையறுக்கப்பட்டு விடுகின்றது. பிறப்பும், வளர்ப்பும் ஆணாதிக்க அமைப்பில் ஒரு சமூக நிகழ்வு மட்டுமே ஒழிய, புதிதாக ஒன்றைச் சமுதாயத்துக்குப் புறம்பாக உற்பத்தி செய்வதில்லை. பெண்ணாகப் பிறக்காமல் மாடாகப் பிறப்பதில்லை அல்லவா! அப்படியெனின் பெண்ணாகவே பிறக்கின்றாள்.


"ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை. பெண்ணாக ஆக்கப்படுகின்றார்" என்கின்ற போதே, ஏதோ புதியதைக் கற்பனையாகச் சமுதாயத்துக்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படுவதாகக் காட்டும், கருத்துமுதல்வாதம், அராஜக அரசியல் போக்கில் இட்டுக் கட்டப்படுகின்றது. பெண்ணின் பிறப்பு, பெண்ணின் வளர்ப்பை ஆணாதிக்கச் சமுதாயத்துக்குப் புறம்பாக, பெண் உறுப்பின் வெளியேற்றத்தில், உறுப்பின் வளர்ச்சியில் காட்டுவதன் மூலம், ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை அமைப்பின் அச்சாணி அசைவின்றி பாதுகாக்கப்படுகின்றது. பிறப்பும், வளர்ப்பும் ஆணாதிக்கத்தைத் தோற்றுவிக்கவில்லை. பெண்ணின் உழைப்பாற்றல் மறுக்கப்பட்ட தனிச் சொத்துரிமை அமைப்பே, பெண்ணின் பிறப்புக்கு முன்பே பெண்ணை அடிமையாக்கி விடுகின்றது.


பெண் சமுதாயத்தில் உருவாகும் முன்பே, பால் ரீதியான வேறுபாடு கொண்ட மனித உயிராகப் பெண் இருந்தாள். இங்கு பிறப்பும், ஆக்கப்படுதலும் ஏன் நிகழவில்லை? நிகழ்வுகள், பின்னால் ஆணாதிக்கச் சமுதாய மாற்றத்தில் நிகழுகின்றது. ஆணாதிக்கச் சமுதாய மாற்றம் தனிச் சொத்துரிமையில் உருவாகின்றது. தனிச் சொத்துரிமை அமைப்பு தான் பெண்ணை உருவாக்குகின்றதே ஒழிய, பிறப்போ, வளர்ப்போ உருவாக்குவதில்லை. அது பின்னால் தனிச் சொத்துரிமை அமைப்பின் மீது நிகழ்கின்றது. யாரும் இருக்கின்ற தனிச் சொத்துரிமை அமைப்புக்குப் புறம்பாகப் பிறக்கவோ, ஆக்கப்படவோ முடியாது. அப்படி முடியும் என்பது கற்பனையான ஆணாதிக்கத்தைப் பாதுகாக்கும் அப்பட்டமான விபச்சாரமாகும்.


தொடர்ந்து முன்னுரையில் "பெண்ணியம் என்கிற சொல் பொதுவாக எல்லாப் பெண்களாலும் ஆதரவான ஒன்றாகக் கருதப்பட வேண்டும். ஏனென்றால் அது பெண்களுக்கு ஒரு புதிய தன்னிலைத்துவத்தை வழங்குகின்றது."61 பெண்ணியம் எப்படி தன்னிலைவாதத்தைப் பெண் விடுதலையில் ஏற்படுத்தும் ஏகாதிபத்தியப் பெண்ணியவாதம், முதலாளித்துவப் பெண்ணியவாதம்... எப்படி தன்னிலைவாதத்தைக் குறைந்த பட்சம், தனது சொந்த வர்க்க எல்லைக்குள் ஏற்படுத்தும்? அதாவது இப்பெண்ணியம் எப்படி பெண்ணுக்கு ஆதரவானது. ஏகாதிபத்தியப் பெண்ணியம் போன்றன எந்தத் தளத்தில் பெண்ணை விடுவிக்கின்றது? பெண்ணை விபச்சாரியாக்குகின்றதே ஒழிய, வேறு எதையும் விட்டுச் செல்வதில்லை.


அடுத்து தன்னிலைவாதம் எப்படி பெண் விடுதலையைப் பெற்றுத்தரும்? தன்னிலைவாதம் பெண்ணுக்கு ஆணாதிக்க முகத்தை, அதன் போக்கில் ஏற்படுத்துகின்றது. தனிச்சொத்துரிமை அமைப்பில் அதற்குள் கோரும் தன்னிலை கண்ணோட்டம், ஆணாதிக்கத்தின் மறுவார்ப்பே. தன்னிலைவாதம் கோட்பாட்டுத் தளத்தில் அராஜகவாதத்தின் தனிமை வாதமாகும். சமூகத்தை எதிர்த்த தன்னிலைவாதம், உள்ளடக்கத்தில் தனிச் சொத்துரிமை சார்ந்து ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்தது. இதையே இந்த மார்க்சிய எதிர்ப்புக் கும்பல் தனது பெண்ணியமாக முன்நிறுத்துகின்றது.


இந்த எல்லையில் இவர்கள் "மார்க்சியத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து சென்றதில் தான் கோட்பாட்டளவில் பெண்ணியம் முதலான பிரச்சினைகளை விவாதிக்க வேண்டியதன் அவசியம் எங்களுக்குப் புரிந்தது. மார்க்சியத்தின் மீது எந்தெந்த திசைகளிலிருந்து விமர்சனங்கள் வைக்கப்பட்டன என்பதைத் தேடத் துவங்கிய.."61 எங்கெல்லாம் மார்க்சியத்தை எதிர்த்து முதலாளித்துவ எச்சில் சோற்றுக்குப் பிழைத்த கும்பல்களின் மலத்தில் இருந்து தான் இவர்கள் பெண்ணியம் பேசுகின்றனர்.


மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாட்டை மறுத்து நிறுவ முடியாத இந்தக் கும்பல்கள் மார்க்சிய நெருக்கடி பற்றி பிதற்றுகின்றனர். மார்க்சியம் ஒவ்வொரு விடயத்தையும், முரணற்ற வகையில் இயற்கை மீது நிறுவி வளரும் இயங்கியலாக உள்ளது. இதன் எந்த உள்ளடக்கத்தையும், இது வரை எந்தத் தத்துவமும் மறுத்து நிறுவ முடியவில்லை. இதில் இருந்தே மார்க்சியம் மீது காழ்ப்பு கொண்டு, விவாதத்தில் இருந்து விலகி, திரித்து விவாதிக்க முடிகின்றது. பெண் எப்படி அடிமையானாள்? என்பது முதல் அவளின் விடுதலை எப்படி வரும்? என்ற நடைமுறை பாதை வரை, மார்க்சியம் துல்லியமாக விளக்கிப் போராடி வருகின்றது. இதை மீறி எதையும் யாராலும் முன்வைக்க முடிந்ததில்லை, முடிவதில்லை.


இந்த இலட்சணத்தில் "... ஆயிரக்கணக்கான வருடங்களாக அடிமைத்தனத்தை அவன் ஏன் ஏற்றுக் கொண்டான்? என்ற கேள்விகள் விடையளிக்கப் படாமலேயே உள்ளது."61விடை தெரியாது நடிக்கும் இந்தக் கூட்டம் தான், அடிமையாக வாழும் பெண்ணுக்கு விளக்கம் தருகின்றது. ஆனால் ஆயிரம் ஆண்டுகள் அடிமை வாழ்க்கை முறை பெண்ணுக்கு எப்படி ஏற்பட்டது? என்பதற்கு மட்டும், பதில் தரவில்லை.


ஆனால் மார்க்ஸ் அதற்கு தெளிவாகப் பதிலளித்துள்ளார். ஆனால் அதை எடுத்து ஆராய்வோ, அதற்குப் பதில் தரவேண்டும் என்ற அரசியல் நேர்மையற்ற நிலையில் தான், பெண்ணிய அடிமை பற்றி புலம்புகின்றனர். தனிச்சொத்துரிமை அமைப்பில் மூலதனம் மக்களை அடிமைப்படுத்திய வரலாற்றில், எப்படி மக்கள் இழிந்து வாழ்கின்றனர் என்பதை, இயற்கை வரலாற்றில் புரிந்து கொள்வது சாதாரண பிழைப்புவாதத்தினால் சாத்தியமில்லை. யதார்த்த வாழ்க்கையில் மக்களை நடைமுறை ரீதியாக மூலதனம் எப்படி அடிமைப்படுத்தி சிதைக்கின்றது என்பதையும், இதை மறுக்கின்ற பிழைப்புவாத அறிவுத் துறையினர்கள் மூலதனத்துக்குக் கால் செருப்பாவதையும் மூடிமறைத்தபடி தான், எப்படி அடிமையானார்கள் என்று மூக்கை இழுக்கின்றனர்.


இப்படி இழுத்தபடி "பாலியல் மையம் என்பதே உளவியல் வாழ்வை முன்செலுத்துகிற விசையாக உள்ளது என்பதையும், இதனால் உயிரியல் எடுகோள்களும், வாழ்வின் சமூகக் காரணிகளும் மனத்தைக் கவிந்துள்ளன என்பதையும் நிரூபணம் செய்தது."61 வறுமையில் சிக்கி, எலும்பாகி நாயாக வாழும் ஒரு மனிதனின் உளவியல் என்பது பாலியல் விளைவாகின்றதா? ஆணாதிக்கச் சீதனம் மற்றும் அடக்குமுறையில் சிக்கி தவிக்கும் பெண்களின் உளவியல் எங்கு உருவாகின்றது? சிறுகுழந்தையில் உழைத்து களைத்து இயந்திரமான குழந்தையின் உளவியல் எங்கு உருவாகின்றது?


ஃபிராய்டின் பிதற்றல்களில் இருந்து பாலியலை மையமாக முன்வைத்த விளக்கமும், எந்த உளவியலும், இதற்குப் பதிலளிக்க முடியாது. மத்தியதர வர்க்கத்தின் ஊசலாட்டத்துக்கு ஆணாதிக்கத்தின் ஆதரவுடன், இவை தீனிபோட மட்டும் உதவும். சமுதாயத்தின் உளவியல் வெளிப்பாடுகள் எல்லாம் சமூகப் பொருளாதார விளைவுகளின் வெளிப்பாடாகும். இது நீண்ட சமுதாயப் பரப்பில் தனக்குள் மாறுபட்ட சமூகப் பொருளாதார விளைவுகளால் மேலும் துல்லியமாகப் பிரிகின்றது. விளம்பரம் முதல் இந்தச் சமுதாய ஏகாதிபத்தியக் கட்டமைப்பு ஈறாகப் பாலியலை முன் தள்ளி அதில் மூலதனச் சந்தை விரிவாகின்றது. இந்தப் பாலியல் மையம் ஆணாதிக்கத்தின் வக்கிரத்தில் கொப்பளிக்கின்றது. இதில் இருந்தே ஏகாதிபத்தியத் திசை வழியில், பாலியல் மையமாக, உளவியல் கூறாக அனைத்தையும் இதற்குள் கோடிட்டுக் காட்டுகின்றனர். இதில் இருந்தே "உயிரியல் எடுகோள்களும், வாழ்வின் சமூகக் காரணிகளும் மனத்தைக் கவிந்துள்ளன"61 என்று பிதற்ற முடிகின்றது. ஏகாதிபத்திய உலகமயமாதல் இதை முன்வைக்கின்ற போது, அதன் சீடர்கள் வேறு எதைத்தான் எமக்கு முன்வைக்கமுடியும், வழிகாட்டமுடியும்.
சமூகப் பொருளாதார விளைவுகளை மூடி மறைக்க "மனிதனின் ஒழுக்க நியதிகள் புனிதமாக உதித்தவை அல்ல. மாறாகப் பெற்றோர்களும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களும் கையாண்ட கல்வி முறைகளிலிருந்தே உருக்கொண்டவை. இது ஃபிராய்டின் முக்கியமான நான்காவது கண்டுபிடிப்பாகும்"61 என்று எடுத்து முன்வைக்கின்றனர். இதில் இருந்துதான் பிரான்சின் வலதுசாரிக் கட்சிகள் குழந்தைகளின் வன்முறைக்குக் காரணமாகப் பெற்றோர்களைக் குற்றவாளியாக்க முடிகின்றது. அவர்களுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோருகின்றன. நவீன அரசுகளின் சிறைகளில் நிரப்பப்படும் தனிமனிதர்களைக் குற்றவாளியாக்கி சிறையில் தள்ளுவது எது? தனிமனித - தனிப்பட்ட வளர்ப்பு விதிக்குள் (பெற்றோர், சுற்று வட்டாரம்) பெற்ற ஒழுக்கத்தை அடிப்படையாகக் கொண்டே, முதலாளித்துவ, நிலப்பிரபுத்துவச் சட்டங்கள் தண்டனையை அளிக்கின்றது. சமூக அவலங்கள், குற்றங்களைத் தனிமனிதன் சார்ந்து தண்டனையையும், தீர்வையும் வெளிப்படுத்துகின்றன. சினிமா தனிமனித வாதத்தில் மாற்றத்தைப் பிரகடனம் செய்கின்றன. இது ஃபிராய்டின் முதலாளித்துவச் சமூக விளக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தன்னை நிலை நிறுத்துகின்றது.


அடுத்து ஒழுக்கங்கள் புனிதமானவை அல்ல என்பதன் ஊடாக, ஒழுக்கம் என்ற ஒன்று இல்லை என்கின்றனர். அதாவது கருத்துமுதல்வாதத்தை முன்தள்ளுகின்றனர். இந்தச் சுரண்டல் ஆணாதிக்கச் சமுதாயத்தில் ஒழுக்கம் எப்போதும் புனிதமானவையல்லதான். ஆனால் சமுதாயத்தில் ஒழுக்கம் என்ற ஒன்று எப்போதும் மாறி வந்த வண்ணமுள்ளது. இது உழைப்பின் மீதான மனிதனின் கூட்டு உழைப்பு தொடங்கிய நாள் முதல் இது உருவாகி விடுகின்றது. எந்த ஒழுக்கமும் சமூகப் பொருளாதார மாற்றத்துடன் தன்னை மாற்றி வந்துள்ளது. இது இருக்கின்ற பொருளாதார எல்லைக்குள் தன்னைத் தொடர்ச்சியாகத் தகவமைக்கின்றது. ஒழுக்கமற்ற சமுதாயம் அராஜகவாதத்தின் காட்டுமிராண்டித்தனமாகும்.


இங்கு பெற்றோரினதும், சுற்றுவட்டாரத்தினதும் கல்வி முறையில் ஒழுக்கம் உருவாக்கப்படுகின்றது என்ற வாதம் அப்பட்டமான தனிச்சொத்துரிமைவாதமாகும். மூலதனம் தனது தனிமை வாதத்தில் நின்றபடி, சமூகத்தை மறுக்கும் எல்லைக்குள் ஒழுக்கத்தை, அதன் எல்லைக்குள் விளக்க, படைக்க தனது சமூகப் பொருளாதார வடிவத்தில் நின்று கூவுகின்றது. சமூகப் பொருளாதார ஆதிக்கத்தைச் சுரண்டல் வர்க்கம் கைப்பற்றியுள்ளதால், தொடர்ச்சியாகத் தனது நலன் சார்ந்து மாற்றிச் செல்லுகின்றது. இதன் எல்லையில் தனிமனிதச் சுதந்திரம், ஜனநாயகம் என்ற மூலதனக் கோட்பாட்டில் நின்று, ஒழுக்கம் தனிமைப்பட்டு இருப்பதாக நம்புகின்றது, காட்டுகின்றது.


ஒரு நாட்டில் ஒரே விதமான ஒழுக்கமும், சில நாடுகளில் ஆச்சரியப்படத்தக்க வகையில் ஒரே விதமாக இருக்க காரணம் என்ன? ஒவ்வொரு பெற்றோரும், ஒவ்வொரு சுற்றுவட்டாரமும் வேறுபட்ட ஒழுக்கத்தை ஏன் ஏற்படுத்தவில்லை? இது ஃபிராய்டின் கண்டுபிடிப்பைக் கேலி செய்கின்றது. நிலப்பிரபுத்துவ அமைப்பில் சிறு சுற்றுவட்டாரத்துக்குள் நிலவிய சமூகப் பொருளாதார வட்டத்துக்குள், வெற்றிகரமான வேறுபட்ட ஒழுக்கம் வெளிப்படுவதற்கான சமூகப் பொருளாதாரச் சூழல் காணப்பட்டது. விரிந்த சமூகப் பொருளாதார அரசுகள் மையப்பட்ட சந்தைகளை உருவாக்கிய எல்லா காலக் கட்டத்திலும் ஒழுக்கம் பொது வடிவமாக இருக்கின்றது. இங்கு பெற்றோரும் சுற்றுவட்டாரமும் சமூகப் பொருளாதார எல்லைகள் தான், குழந்தையின் ஒழுக்கம் மீது தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இவையல்லாது சுயேட்சையாக, சுதந்திரமாக வானத்தில் இருந்து புகுத்த முடியாது.
சமூகப் பொருளாதாரச் சமூக எல்லைக்குள் ஒழுக்கத்தைப் புகட்டும் போது, இதில் குறிப்பான முரண்பாடுகள், பெற்றோரின் பெற்றோர் விட்டுச் சென்ற பழைய ஒழுக்கத்துக்கும், யதார்த்த ஒழுக்கத்துக்கும், எதிர்கால ஒழுக்கத்துக்கும் இடையிலான மூன்று தலைமுறையில் மாறி வந்த சமூகப் பொருளாதார இடைவெளியால் ஏற்படுகின்றது. இதை மறுத்து, "குழந்தையின் விருப்பத்துக்கும் அதை ஒடுக்குகின்ற பெற்றோரின் செயலுக்கும் இடையிலான முரண்பாடே பிற்காலத்தில் ஒரே நபருக்குள் இயல்பு ஊக்கத்துக்கும் இடையிலான முரண்பாடாக மாற்றம் கொள்கிறது."61 நவீன முதலாளித்துவத்தின் சட்ட ஒழுக்க விதிகளை அடிப்படையாகக் கொண்டே இதை விளக்குகின்றனர். விருப்பங்கள் எங்கிருந்து உருவாகின்றன?


விருப்பங்கள் சமூகப் பொருளாதார அமைப்பில் வெளிப்படுகின்றன. சமூகப் பொருளாதாரத்தில் இருந்து அன்னியமான எல்லா நிலையிலும், மூலதனத்தின் அடிமையாக விருப்பங்கள் பிரதிபலிக்கின்றன. இதை மறுப்பது இன்றைய நவீன மூலதனத்தை மறுப்பதாகும். அதாவது ஒரு விளம்பரத்தை எடுப்பின் அதன் நோக்கத்தைத் திசை திருப்பி, விருப்பத்தைத் தனிப்பட்ட முரண்பாட்டில் மூடிக் கட்டுவதாகும்.


குழந்தைக்கும் பெற்றோருக்கும் இடையில் ஏற்படும் விருப்பம் சார்ந்த முரண்பாடு, மூலதனச் சந்தையின் வெளிப்பாட்டில் பிரதிபலிக்கின்றது. இதை மறுப்பது முதலாளித்துவ விளம்பரத்தையும், அதன் உள்ளடக்கத்தையும் கோட்பாட்டு ரீதியில் நீர்த்துப்போகச் செய்வதாகும்.


அதேநேரம் சமூகம் தான் ஒழுக்கத்தின் எல்லையையும், அதன் மாற்றத்தையும் நிர்ணயம் செய்கின்றது. இதைத் தாண்டி எந்த தனிமனிதனோ, மக்களில் இருந்து அன்னியமான சிறு குழுவோ, தனது வர்க்கச் சமூகப் பொருளாதார எல்லையைத் தாண்டி சுயேட்சையாக வெளிப்படுத்த முடியாது. ஒரே சமூகத்துக்குள்ளான வேறுபட்ட சில ஒழுக்கவிதிகள் வர்க்கம், இனம், பால், நிறம், சாதி என்ற பிளவில் ஏற்படும் உள்ளடக்கத்தில் கூட, சமூகப் பொருளாதார வடிவமே இதை நிர்ணயம் செய்கின்றது. இதைப் பிரதிபலித்தே வளர்ப்பு முறை நிர்ணயமாகின்றது. இதை மறுப்பது கற்பனையான வெற்றிடத்தில் ஒழுக்கம் தோன்றுவதாக விளக்குவது கருத்துமுதல்வாதமாகும்.


இந்தக் கருத்துமுதல்வாத எல்லையில் "பொருளியல் சூத்திரங்களிலோ இன்னும் சொன்னால் சமூகவியல் பகுப்பாய்வுகளிலோ உட்படாத மனதின் "காதல்" எனும் விசயத்துக்கு இவ்வளவு முக்கியத்துவம் தருவதும் அதை அடிப்படைக்கூறு என்பது போன்ற சித்தரிப்புகள் செய்வதும் மார்க்சியமற்ற செயல் இல்லையா? இதற்கான பதில், "இல்லை" என்பது தான் என்று ஏங்கெல்சைத் திரித்துப் புரட்டி வைக்கப்படுகின்றது. ஏங்கெல்ஸ் இணை மணக் காதல் முதல் ஒருதார மணக் காதல் ஈறாக, அதன் சமூகப் பொருளாதார ஆய்வு மீதே தனது விளக்க உரையை முன்வைக்கின்றார்.


இந்த காதலைப் பற்றி லெனின் "உங்களுக்கு நம் இளந்தோழர் பற்றி தெரியுமா? அவர் ஒரு அற்புதமான இளைஞர். மிகவும் திறமைசாலி. இருப்பினும் அவரிடமிருந்து எந்தவொரு நன்மையும் விளையாது என்று அஞ்சுகிறேன். அவர் ஒன்றுமாற்றி ஒரு காதல் உறவில் சிக்கித் திணறுகிறார். இது அரசியல் போராட்டத்துக்கோ, புரட்சிக்கோ ஏற்றதல்ல. தமது சொந்தக் காதலுறவுகளை அரசியலோடு சேர்த்துக் குழப்பிக் கொள்ளும் பெண்களின் நம்பகத்தன்மையின் மீதும் போராட்டத்தில் அவர்கள் ஊன்றி நிற்பதன் மீதும் நான் நம்பிக்கை வைக்கமாட்டேன். கண்ட பாவாடையின் பின்னே அலைகிற, ஒவ்வொரு இளம் பெண்ணின் வலையிலும் சிக்கிக் கொள்ளும் ஆண்களின் மீதும் நம்பிக்கை வைக்க மாட்டேன். இல்லை, இல்லை! அது புரட்சிக்குக் கொஞ்சமும் உடன்பாடாயிருக்காது."61


காதலைச் சமூகப் பொருளாதாரத் தொடர்பற்ற மனதளவிலான வெற்றுப் பிண்டம் என்று கூறும் போது, கருத்துமுதல்வாதம் அதன் உள்ளடக்கமாகின்றது. காதல் வெற்றிடத்தில் ஏற்படுகின்றதா? காதல் எதையும் சார்ந்திருப்பதில்லையா? அதன் உள்ளடக்கம் என்ன? ஏன் காதலை ஒருதார மணத்தில் பெண்கள் மட்டும் பின்பற்றுகின்றனர்? ஏன் தொடர்ச்சியாக ஆண்கள் காதலிப்பதில்லை? இணைமணத்தில் தோன்றிய காதல் ஏன் அதற்கு முன்பு இருந்த சமுதாயத்தில் (நீங்கள் கருதும் வெற்றிடத்தில்) உருவாகவில்லை? இணைமணத்தில் ஆண் - பெண்ணுக்கு முன் பரஸ்பரமாக இருந்த காதலில், ஏன் ஆண் அதைக் கைவிட்டான்? இந்தக் கேள்விகளுக்கான ஆய்வும், பதிலும் காதலின் உள்ளடக்கத்தை, அதன் வர்க்கத் தன்மையை, அதன் ஆணாதிக்கக் கூறை இனம் காணமுடியும்.


சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுக் கூறுகள் மாறி வந்த எல்லாக் கட்டத்திலும் காதலின் தன்மை மாறுபடுகின்றது ஏன்? எதற்காக? காதல் சுயேட்சையான இயங்கியல் அற்ற விதியா? அவை மாறி வரும் போது, அதன் உள்ளடக்கம் எதைச் சார்ந்து மாறி வருகின்றது? மனம் என்பது உள்ளடக்கத்தில் என்ன? எங்கிருந்து அது பிரதிபலிக்கின்றது? வெற்றிடத்திலா? அல்லது சமூகப் பொருளாதார உள்ளடக்கத்திலா? இறைக் கோட்பாடுகள் ஆத்மா என்ற வரையறையை முன்வைத்து அதைச் சுயேட்சையான, சொர்க்கத்தில் இருந்து யாரோ கட்டுப்படுத்துவதாகக் கூறுவது எவ்வளவு அபத்தமானதோ, அதுபோல் காதலைச் சுயேட்சையான மனம் தீர்மானிக்கின்றது என்பதும் உள்ளடக்கத்தில் இரண்டும் ஒன்று தான்.


முன்பு எல்லாம் அந்தச் சொர்க்கத்தின் ஆண்டவன், இன்று எல்லாம் அந்தக் காதலும் அதன் வெளிப்பாடான பாலியல் வக்கிரமும் என்ற நிலைக்குத் தடம்புரண்டு விடுகின்றது. ஆனால் பாதையை விட்டு நகரவில்லை. ஒரு மனிதன் காதல் செய்கின்றான் எனின் அவன் நிறம், இனம், சாதி, வர்க்கம், பொருளாதாரக் கட்டமைப்பு... என்ற வரலாற்று எல்லைக்குள் காதலிக்கின்றான். ஏன்? மனதின் சுயேட்சையாலா? சமூகப் பொருளாதார காரணத்திலா? இவையும் கூட ஆழமான சுற்றுச் சூழல் மற்றும் குறிப்பான நிகழ்ச்சிகள், சம்பவங்கள் சார்ந்து காதல் வெளிப்படுகின்றது. இங்கு பாலியல் அம்சம் எவ்வளவுக்கு எவ்வளவு வக்கரிக்கின்றதோ, அந்தளவுக்குக் காதல் விபச்சாரமாகின்றது.


ஏகாதிபத்திய உலகமயமாதல் காதலை விற்பனைப் பொருளாக்கியுள்ளது. இங்கு காதல் என்பது அர்த்தமற்ற (பார்க்கவும்: இந்தியாடுடே பிரதிபலிக்கும் மேட்டுக்குடியின் சில கட்டுரைகள்.) வகையில், அது தனிமனிதச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ஊடகமாகக் கருதுமளவுக்குச் சமுதாயச் சீரழிவுகள் வழிகாட்டுகின்றன. இன்று காதலை வெறும் பாலியல் ஊடகமாகக் கருதுவதும், பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் தனிமனிதச் சுதந்திர விபச்சாரம் விரிவாகி வளருகின்ற போது, காதலும் அதன் உள்ளடக்கத்தை இழந்து மறைந்து வருகின்றது. அதை மூன்றாம் உலக மேட்டுக்குடிகள் முதல் மேற்கு வரை பொதுவான பண்பாடாக உலகமயமாதல் மாற்றி வருகின்றது.


"பொருளியல் சூத்திரங்களிலோ இன்னும் சொன்னால் சமூகவியல் பகுப்பாய்வுகளிலோ உட்படாத மனத்தின் "காதல்"உலகமயமாதலில் எங்கு போய்விடுகின்றது? மனதில் உருவாகும் இயற்கையான ஒன்றாகக் காட்டப்படும் காதல், எப்படி உலகமயமாதல் முன் மண்டியிட்டு மறைந்து விடமுடியும்? வெற்றிடத்தில் பொருளோ, சிந்தனையோ உருவாக முடியாது. வெற்றிடம் அற்ற நிலையில் உருவாகும் பொருள் சார்ந்த சிந்தனை எப்படி தன்னிச்சையாகச் சுயேட்சையாக மறைய முடியும்? மறைகின்ற போதே அங்கு பொருளாதாரப் பண்பாட்டு மாற்றம் நிபந்தனையாகின்றது.

 

ஒருவன் அல்லது ஒருத்தி காதல் செய்கின்ற போது அழகு, நிறம், சாதி, அந்தஸ்து, கல்வி, தொழில், நுகர்வின் தன்மை, கலை ஆற்றல், ஆடம்பரம், ஏழ்மை, எளிமை என்று இது போன்ற ஏதாவது ஒரு கூறு அல்லது அதற்கு மேற்பட்ட கூறுகள் இணைந்து தான் காதலை ஏற்படுத்துகின்றது. இதை மறுத்து யாராலும் எதையும் சயேட்சையாக நிறுவிவிட முடியாது. இவை அனைத்தும் சமூகப் பொருளாதார உட்கூறு சார்ந்த சமுதாய விளைவாகின்றது. இதில் இருந்து பிறக்கும் காதல் சமுதாயத் தன்மை வாய்ந்தவை.


காதல் சமுதாயப் படிமானங்களில் அதன் தன்மை வேறுபடுகின்றது. சமுதாயப் பொருளாதாரப் பண்பாட்டுக் கூறில் வெறும் பாலியல் அம்சமாகவும், மற்றொரு தளத்தில் கூட்டுச் சமுதாயக் கண்ணோட்டம் கொண்ட வாழ்வாகவும் என வேறுபட்டும் காணப்படுகின்றது. இவை பொருளாதார உட்கூறுகளின் மீதான சமுதாயக் கண்ணோட்டத்தில் பிரிந்து வேறுபட்டுப் பிளவுபடுகின்றது. பெண்ணை உலகமயமாதலில் வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாக, அதன் உறுப்பாக விளக்குகின்ற போக்கில், அங்கு காதல் வெறும் பாலியல் கூறு மட்டுமன்றி, விபச்சாரத் தன்மை வாய்ந்தவையும் கூட.


இந்த உலகமயமாதல் சமுதாயத்துக்கு வெளியில் நீடிக்கின்ற காதல் மட்டுமே, ஆண் பெண்ணின் பரஸ்பரத் தேவையின் அடிப்படையிலான சமுதாயக் கூட்டுக் கண்ணோட்டம் விரிந்த தளத்தில் காணப்படுகின்றது. இந்த வேறுபட்ட சமுதாயப் பிளவை மறுத்துக் காதலைப் பொதுவான ஒன்றாக, மார்க்சியத் தலைவர்களின் பெயரில் திரித்துக் காட்டுவதன் மூலம், ஏகாதிபத்திய நுகர்வு காதல் விபச்சாரத்துக்குச் சமூக நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கவே, ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் தலைகீழாக நிற்கின்றனர்.


காதலைச் சமுதாயத்தில் இருந்து சுயேட்சையானதாகக் காட்ட ஏங்கெல்ஸ் எழுதிய "இருபாலாருக்கிடையிலான உறவென்பது அந்த இரு நபர்களுக்கு மட்டுமே தொடர்புடைய ஒரு தனிப்பட்ட விடயமாகும், இதில் தலையிட சமூகத்துக்கு எந்தவித வழியும் கிடையாது. அரசால் கட்டுப்படுத்தப்பட்ட தனிப்பட்ட காதல் - அதாவது மணஉறவு விதிகள் என்பவை யாவும் காதல் மற்றும் நட்பு பற்றிய நடைமுறைகளில் எவ்வித மாற்றத்தையும் உண்டாக்காமல் நாளை மறைந்து போய்விடும்."61 வரவிருக்கின்ற கம்யூனிசச் சமூகத்தில் காதல் எப்படி இருக்கும் என்பதையே ஏங்கெல்ஸ் தெளிவாக்குகின்றார்.


வர்க்கங்கள் அற்றுப் போகின்ற போது, வேறுபட்ட ஏற்றத் தாழ்வான சமூக அடித்தளம் வேறுபட்ட பொருளாதார அடிப்படையின்றி மாறுகின்ற போது, காதல் பற்றிய வேறுபட்ட அபிப்பிராயம் மறைந்து போய்விடுகின்றது. அது சம்பந்தப்பட்ட இருவரின் தனிப்பட்ட விடயமாகி விடுகின்றது. ஆனால் இன்று வேறுபட்ட ஏற்றத் தாழ்வான பொருளாதார வேற்றுமையினால், ஏற்படும் சமுதாய முரண்பாடுகள் காதல் பற்றிய எதிர்மறையான அபிப்பிராயத்தை உருவாக்குகின்றது. இதில் சமுதாயத்தை உறிஞ்சி உண்டு வாழும் ஒட்டுண்ணி பிரிவின் காதல், சமுதாய அலகாக வளர்ச்சி பெற்று ஆதிக்க உறவாக மாறுகின்ற போது, மனித உறவுகள் மலினப்படுகின்றன. சமுதாய நோக்கம் கொண்ட உறவுகள் இழிவாக்கப்படுகின்றது. காதல் சமுதாயப் பிளவு போல் பிளந்து விரிகின்றது. இதில் காதல் பற்றிய விமர்சனமும், வாழ்க்கைப் பிளவுகளும் நிரந்தரமாகி விடுகின்றது. வர்க்கச் சமுதாயப் பிளவுடன் அது ஒட்டி நகமும் சதையுமாகி விடுகின்றது. இதைத் திரித்து யாரும் காதலைச் சுதந்திரமானதாகவோ, ஜனநாயகம் பூத்துக் குலுங்குவதாகவோ விளக்கிவிட முடியாது.


தொடர்ந்து இந்தக் கும்பலின் சார்பாக அஸ்வகோஷ்சின் பிதற்றலைப் பார்ப்போம். "பெண்கள் மீதான ஒடுக்குமுறையில் மிகப் பிரதானமானது பாலுறவு ஒடுக்குமுறையே. பாலுறவு விடுதலை இல்லாமல் பெண் விடுதலை இல்லை"61 என்று சமுதாய மேல் கட்டுமானம் மீதே, ஆணாதிக்கத் தனிச்சொத்துரிமை சமுதாயத்தைக் குறுக்கிக் காட்டுவதன் மூலம், தமது சொந்த வக்கிரத்தை விபச்சாரமயமாக்குகின்றார்.


பாலுறவு ஒடுக்குமுறைக்கு முன்பே பெண் பாலியல் பண்டமாக இருப்பது இயங்கியல். பெண் பாலுறவு ஊடாக இழிவு படுத்தப்படும் போக்கு எங்கிருந்து, எப்படி தோற்றம் பெறுகின்றது. பெண் இழிந்து, நசிந்து வாழும் வாழ்க்கையில் இருந்தே பாலுறவில் ஒடுக்கப்படுகின்றாள். பெண் ஏன் எப்படி இந்த இழிநிலைக்கு மாற்றப்படுகின்றாள். சமுதாய வளர்ச்சியில் ஏற்பட்ட வேலைப் பிரிவினையூடாக, அவளின் உழைப்பு சமுதாய மதிப்பிழந்த போதே, தனிச்சொத்துரிமை அமைப்பில் பெண் வக்கற்றுப் போனாள்.


இந்த வக்கற்றுப்போன சமுதாயத்தில் பெண் அனைத்துத் தளத்திலும் சூறையாடப்பட்டாள். இங்கு பாலியல் சுரண்டல் என்பது அதில் ஒரு வடிவம் மட்டுமேயாகும். பெண் மீதான பல்வேறு ஒடுக்குமுறைகளில் பாலியல் ஒரு அம்சம் மட்டுமேயாகும். இங்கு பல்வேறு பெண் ஒடுக்குமுறைகளைக் கைவிட்டு ஒன்றைப் பிரதானப்படுத்துவதன் மூலம், உண்மையில் ஆணாதிக்க உள்ளடக்கத்தைப் பூசி மெழுகி பாதுகாப்பதாகும். பெண் எப்படி, எதனால் அடிமைப்படுத்தப்பட்டாள் என்ற வரலாற்று இயங்கியல் மீது, பெண் ஒடுக்குமுறையை இனங்கண்டு போராட வேண்டும்.


இதை மறுத்து, பலவற்றில் ஒன்றை முதன்மைப்படுத்தி காட்டுவதன் மூலம், ஆணாதிக்க அமைப்பில், பெண்ணைப் பொது விபச்சாரத் தளத்துக்கு அழைத்து வர வேண்டும் என்ற கனவு மட்டுமே நோக்கமாக உள்ளது. இதை உறுதி செய்வது போல் "ஓர் ஆண் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களைக் காதலிக்க முடியும் என்றால் ஒரு பெண்ணும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களைக் காதலிக்க முடியும்61 என்று தீர்வு ஆணாதிக்க விபச்சார வழியில் முன்வைப்பதன் மூலம், ஆணாதிக்க அமைப்பில் பெண்ணை நிர்வாணப்படுத்த சபதம் ஏற்கின்றார். ஆணாதிக்க அமைப்பில் ஆண் பலதார மணத்தில் பல பெண்களைச் சூறையாடும் பண்பாட்டுத் தளத்தில், பெண்ணையும் மாற்றவேண்டும் என்று ஏகாதிபத்தியக் கூச்சல்களாக இவை எழும்புகின்றது. ஆணாதிக்கம் தனது சொந்த வக்கிரத்தில் பெண்ணை நுகர்வதை விமர்சித்து அதை வேரறுக்க போராடுவதுக்குப் பதில், ஏகாதிபத்திய நுகர்வு விபச்சாரத்தைப் பெண்ணுக்கும் பூச்சூட்ட விரும்புகின்றார்.


இந்தப் பூச்சூட்டை நிறைவு செய்ய "குடும்ப வாழ்க்கை வெற்றிகரமானாலும் அது சிறைதான். சமூகத்திற்கு மட்டுமல்ல, தனிமனிதனின் படைப்புத் திறனையும் விலங்கிட்டுச் சிறையிடுகிறது"61 என்று கூறுவது ஏன்? பெண்ணைக் குடும்பம் சிறையிடுகின்றதா அல்லது தனிச்சொத்துரிமை அமைப்பு சிறையிடுகின்றதா? இங்கு குடும்பம் எதை அடிப்படையாகக் கொண்டு உருவாகின்றது? குடும்பத்தின் அடிப்படை என்ன? வெறும் பாலியல் தேவை மட்டும்தானா? இல்லை இதற்கு வெளியில் எதுவுமில்லையா? ஆணாதிக்க அமைப்பில் ஒருதாரமணத்தின் உள்ளடக்கம் என்ன? இவைகளை எல்லாம் ஏகாதிபத்தியப் பெண்ணியக் கோட்பாட்டில் நிராகரித்தபடி, குடும்பம் பெண்ணைச் சிறையிடுகின்றது. எனவே பெண்களை வெட்ட வெளியில், குடும்பத்துக்கு வெளியில் பொது விபச்சாரத்தில் ஈடுபட அழைப்பதே, இதன் அரசியல் உள்ளடக்கமாகும்.


இதன் மூலம், குடும்பம் பெண்ணின் சிறையாக இருக்க, அடிப்படையான தனிச் சொத்துரிமை அமைப்பை, சேதமின்றி மூடிப் பாதுகாப்பதாகும். இதைச் சாதிக்க "முழுமையான பாலுறவுச் சுதந்திரமும் அதற்கான சமூக அங்கீகாரமுமே பெண் விடுதலையைச் சாத்தியப்படுத்தும்"61 என்ற கூற்றின் ஊடாக, ஏகாதிபத்தியப் பெண்களின் பொதுவான டிஸ்கோ விபச்சாரத்தை முன்வைக்கின்றனர். பாலியல் சுதந்திரம் பெற்ற மேற்கத்தியப் பெண் ஆணாதிக்க அமைப்பில் இருந்து விடுதலை பெற்றுவிட்டாளா? இல்லை. அவள் ஆண்களின் நுகர்வுக்கு மாறாகத் திறந்த பதுமையாகியுள்ளாள். இதைத் தான் இந்தியக் கோட்பாட்டுத் தரகுகள் கோருகின்றனர். மார்க்சியப் பெண்ணியத்தை உள்ளடக்கம் மீது விமர்சிக்காது, செம்மறி ஆடுபோல் மேய்ந்து விமர்சிக்கும் இவர்கள், தமது கோட்பாடுகளை ஏகாதிபத்தியப் பெண்ணியத்தில் இருந்து வேறு பிரித்தறியவோ, விளக்கவோ முடியாதவர்கள்.


அடுத்து, பன்றித் தொழுவத்தில் புரண்டு எழுகின்ற சாரு நிவேதிதாவின் வக்கிரங்களைப் பார்ப்போம். "யோனி மைய வாதம் ஒதுக்கப்பட்டுப் புட்ட உறவு, வாய் உறவு எனப் பாலுறவின் ஏனைய கூறுகள் முக்கியத்துவம் பெற வேண்டும். புட்டம், வாய் போன்றவற்றிற்குச் சமமான முக்கியத்துவம் யோனிக்குத் தரப்படவேண்டும."61 இதன் மூலம் ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும் என்கின்றார். நீலப்படக் (புளுபிலிம்) காட்சிகளின் வக்கிரத்தில் மூலதனத்தைக் குவிக்கின்ற ஆணாதிக்கச் சந்தை மையத்தில் இருந்து, பொறுக்கி வைக்கின்றார். இயற்கை மீதான பாலியல் உறவு, வக்கிரமான நுகர்வுக் கவர்ச்சியால் கற்பழிக்கப்படும் போது, அதுவே நுகர்வின் எல்லையாகி விடுகின்றது. இந்த நுகர்வு பெண்களை இழி நிலையில் அலங்கோலப்படுத்தி சூறையாடுவதில் பின்நிற்பதில்லை.


பெண்ணின் இயற்கை உறுப்புகளின் செயற்பாடுகளை மறுக்கும் ஆணாதிக்கம், பெண்ணின் எல்லா உறுப்புகளையும் பாலியல் கவர்ச்சி அங்கமாக்குகின்றது. குழந்தைக்குப் பால் கொடுக்கும் பால் சுரப்பி (பெண்ணின் மார்பு) அதன் உள்ளடக்கம் இழந்து, ஆணின் கவர்ச்சிக்கான பாலியல் ஊடகமாக மாறியது போல், பெண்ணின் வாய், புட்டத்தையும் பாலியல் ஊடகமாக்க ஆணாதிக்கம் துடியாத் துடிக்கின்றது.


மனித உறுப்புகளின் இயற்கை சார்ந்த பரிணாமத் தேர்வைத் தனிச் சொத்துரிமை மறுத்து, தனிச்சொத்துரிமை ஆணாதிக்க வழியில் மூலதனத்துக்கு அடிமையாக்கியது போல், பெண்ணின் உறுப்புகள் அதன் போக்கில் ஆணின் பாலியல் உறுப்புகளாகிப் போனது. இதை மேலும் உலகமயமாதலில் விரிவாக்கி பெண்ணை, எல்லா உறுப்பு வழியாகவும் புணர்ந்து வக்கரிக்க ஆணாதிக்கம் கெக்கலிக்கின்றதன் விளைவே, நீலப்படம் (புளுபிலிம்) பாணியிலான கோட்பாடுகளின் கோரிக்கையாகும்.


இந்தக் கோரிக்கையை வைக்கும் மரமண்டை (சாருதான்) "சோசலிச உருவாக்கத்தில் வெற்றியடைந்துள்ள சீனாவில் குடும்பம் சிதறி பெண்கள் ஒடுக்குதலுக்குள்ளாகி இருப்பதும, சுவீடன் போன்ற முதலாளித்துவ நாடுகளில் குடும்பக் கட்டுகள் தளர்ந்து பெண் விடுதலை பெருமளவில் சாத்தியமாகி உள்ளதையும் ஒப்பு நோக்க வேண்டும."61 எனவே பெண்விடுதலை வேண்டும் என்று கூறி முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தை நக்க விரும்புகின்றனர்.


சீனாவில் பெண்களின் மீதான ஆணாதிக்க அடக்குமுறைகளை, புரட்சி தனது சொந்த வர்க்கப் போராட்டத்தின் ஊடாகத் தொடர்ச்சியாக எதிர்த்துப் போராடி வந்தது. எந்த மூன்றாம் உலக நாடுகளையும் விடவும், மேற்கில் ஆணாதிக்கப் பிடிப்பை விடவும் சீனா தனது பாதையில் முன்னேறி வந்தது. ஆனால் கி.பி. 1970-களின் இறுதியில் மீண்டும் முதலாளித்துவ சுரண்டும் வர்க்கம் ஆட்சியைப் பிடித்தது முதல், ஆணாதிக்கம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய வேதாளமாகியது. இதை எடுத்து சோசலிசம் என்று காட்டுவதும், பிதற்றுவதும் ஏகாதிபத்தியத்தின் எச்சில்கள் ஆகும். சோசலிசத்தின் உள்ளடக்கம் தெரியாத பாலியல் வக்கிரத்தை வைத்து புகழ் (!) பெற்று பிழைக்கும் ஆணாதிக்கவாதிகள், சீனாவைத் திரித்துக் காட்ட மட்டுமே முடியும்.


சுவீடன் போன்ற நாடுகளில் பெண் விடுதலையடைந்து விட்டாள் என்பது நகைப்புக்குரியது. பெண் பாலியலில் பெற்ற சுதந்திரம் உள்ளடக்கத்தில் ஆணாதிக்க வகைப்பட்டவை. ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமை சுதந்திரத்தில் பெண்ணை வரைமுறையின்றி பாலியல் ரீதியாக அனுபவிக்கும் உரிமையைப் பெற்றுக் கொள்ள, பெண்ணை விபச்சார நிலைக்கு ஆணாதிக்கமயப்படுத்தியது தான் நிகழ்ந்தது. மக்கள் சாதாரணமாகப் பயன்படுத்தும் பொருட்கள் முதல் பார்க்கும் தொலைக்காட்சி ஈறாகப் பெண் பாலியல் அங்கமாக வக்கிரப்படுத்தி காட்டப்படுகின்றான். இதில் இருந்தே, இந்தப் பெண் விடுதலையின் வக்கிரத்தைப் புரிந்து கொள்ளமுடியும்.


இங்கு குடும்பம் மீள புதிய வடிவில் இணைவது நிகழுகின்றது. பழைய புனித மதக் குடும்பங்கள் தகர்ந்து போக, இணைந்து வாழும் புதிய கூட்டுக் குடும்பங்கள் உருவாகின்றன. அவை கூட நீண்ட ஆயுள் கொண்டதாக இருப்பதுடன், அங்கும் ஆணாதிக்கச் சமூகக் கூறுகள் தொடர்ந்து நீடிக்கின்றன. பொருளாதாரக் கட்டமைப்பு தனிச்சொத்துரிமை சார்ந்த ஆணாதிக்கமாக உள்ளதால், மாறி வரும் குடும்பங்கள் கூட அதற்குள் சிக்கிவிடுவது தவிர்க்க முடியாததாகி விடுகின்றது. சமூகப் பொருளாதார வடிவங்கள் தான் குடும்பத்தின் பண்பைத் தீர்மானிக்கின்றது. மேற்கு நாடுகள் ஏகாதிபத்தியக் கட்டமைவில் ஆணாதிக்க வடிவமாக இருப்பதால், அங்கு வாழும் மக்கள் அதன் எல்லையின் விரிவாக்கத்துக்குள், தமது பாலியல் மற்றும் குடும்பப் பண்பாட்டைத் தீர்மானிக்கின்றனர்.


சாரு நிவேதிதா தனது பலதார வரைமுறையற்ற விபச்சாரப் பாலியலுக்குத் தடையான காரணத்தைப் புரிந்து கொள்ளும் வடிவத்தைப் பார்ப்போம். "யோனி என்பது இனப்பெருக்க மையமாக அமைந்து பெண்ணின் கர்ப்பம் குறித்த பயத்திற்கும் அடிப்படையாக உள்ளது. இந்தப் பயத்தின் அடிப்படையிலேயே ஆண் - பெண் உறவு கட்டமைக்கப்பட்டுக் குடும்ப வரையறை என்னும் அதிகாரத்திற்குள் ஒடுக்கப்படுகிறது"61 என்ற எடுகோள், ஏகாதிபத்திய வரைமுறையற்ற நுகர்வு எல்லையில் பெண்ணை நுகரும் ஆணாதிக்கக் கனவுகளாக உள்ளது.


கர்ப்பம் பற்றிய பயம் இல்லை என்றால் பெண்களை ஏமாற்றவும், பெண்களை இலகுவாகச் சோரம் போக அழைக்கவும் முடியும் என்ற ஆணாதிக்க நப்பாசை இப்படி புலப்படுகின்றது. உதாரணமாக இந்திய நாட்டிலுள்ள மேட்டுக் குடிகள் ஆண் பெண் வேறுபாடற்ற நிலையில், டிஸ்கோ கலாச்சாரத்தில் குடி மற்றும் கும்மாளமாகப் பாலியல் வக்கிரத்தில் ஈடுபடும் போது, கர்ப்பம் பற்றி அலட்டிக் கொள்வதில்லை. இந்த மேட்டுக்குடிகளில் ஏகாதிபத்திய நுகர்வு ஒட்டுண்ணித் தனத்தையே, இந்த ஏகாதிபத்தியக் கோட்பாட்டாளர்கள் பெண் விடுதலையாக முன்வைத்து, ஆணாதிக்கப் பலதார மணத்தை இலகுபடுத்த பார்ப்பனிய வழியில் சதிராட்டம் போடுகின்றனர்.


இந்தக் கும்பலைச் சேர்ந்த மாலதி என்பவர் பாலற்ற தன்மை விடுதலையின் நிபந்தனை என்றபடி "பாலற்ற நிலை தான் விடுதலையின் உச்சம் என்றாகும் போது ஓரினப் பால் புணர்வு இங்கு அதிகாரத்திற்கெதிரான செயல்பாடாக மாறும் போது உடல்களின் மீதான ஆதிக்கம் விலகும்."61 இதில் இயற்கையின் பால்த்தன்மையை மறுப்பது ஆணாதிக்க அம்சமாகும். இயற்கை இன்றி மனிதன் இல்லை. மனித வரலாற்றை இயற்கை வரலாறாகக் காண்பதும், விளக்குவதும் தொடரும் வரை, இயற்கையில் பால் வேறுபாட்டை மறுப்பது என்பது ஆணாதிக்கக் குணாம்சமாகும்.


இயற்கையான பாலியல் வேறுபாடு மறுக்கப்படும் எல்லா தனிச்சொத்துரிமை ஆணாதிக்கத் தன்மையில், மனித குல இழிவு காணப்படுகின்றது. இயற்கையான பாலியல் வேறுபாட்டை மறுத்து நலமடித்த ஆணாதிக்கம், பெண்ணின் இயற்கையான பாலியல் உணர்வுகளை இழிவாக்கி சிறுமைப்படுத்தியதை, மீண்டும் உறுதி செய்யவே, அதைத் தொடர்ந்து மறுக்க பிரகடனம் செய்கின்றனர். ஆணாதிக்கம் தனிச்சொத்துரிமை சார்ந்து இயற்கையான பாலியல் வேறுபாட்டை மறுத்து, பெண்ணை இயற்கை அல்லாத வழிகளில் அடிமையாக்கிய போது, இயற்கையான உணர்ச்சிகளைச் செயற்கையாகத் தீர்த்துக் கொள்வது புதிய வடிவமாகியது. செயற்கையான பாலியல் வடிவங்கள் அனைத்தும் இயற்கையான பாலியல் வேறுபாட்டை உள்ளடக்கமாகக் கொள்கின்றது. இது பால் வேறுபாட்டை மறுக்கின்ற போதே, ஆணாதிக்க வக்கிரம் கொப்பளிக்கின்றது. பாலற்ற தன்மையை ஒருக்காலும் உருவாக்க முடியாது. அது இயற்கையானது. இயற்கையான பால் வேறுபாட்டை, அங்கீகரிப்பதும், அதை இயற்கையாகப் பேணுவதும் ஆணாதிக்க ஒழிப்பின் முன் நிபந்தனையாகும்.


பால் வேறுபாட்டை மறுத்து அதை இழிவானதாகத் தனிச்சொத்துரிமை கண்ணோட்டத்தில் விளக்கிய போதே, பெண் பாலியல் ரீதியாக அடிமைப்படுத்தப்பட்டாள். இயற்கையான பால் வேறுபாட்டை மறுத்து முன்வைக்கும், பாலியல் மாற்றுகள் அனைத்தும் செயற்கையான ஆணாதிக்க வகை மாதிரிகளே. இது ஆணாதிக்கத்தைத் தக்க வைக்கும், அச்சமூகத்துக்கே உரிய பூர்சுவா நடைமுறைகள் மட்டுமே. இது போன்று இந்தக் கும்பலைச் சேர்ந்த, ஏகாதிபத்தியப் பெண்ணியத்தை முன்வைத்து மார்க்சியத்துக்கு எதிரானவர்கள், இந்த நூலில் எல்லையற்ற வகையில் ஆணாதிக்க அபத்தங்களைத் தமது வக்கிரத்துடன் அள்ளிக் கொட்டியுள்ளனர். அதற்குச் சில மாதிரிகளே இவையாகும்.


***********


"மார்க்சியம் - பெண்ணியம் உறவும் முரணும்" என்ற நூலில் இருந்து கெய்டி கார்ட்மன் "மார்க்சியத்தையும் பெண்ணியத்தையும் இணைக்க அண்மையில் எடுக்கப்பட்ட சில முயற்சிகள் பெண்ணியர்கள் என்ற முறையில் எமக்கு நிறைவளிப்பதாய் இல்லை. காரணம், முதலாளியத்துக்கு எதிரான "பெரும்" போராட்டத்துக்குக் கீழ்ப்பட்டதாகவே அவை பெண்ணியப் போராட்டத்தை முன்வைக்கின்றனர். முன்னர் சொன்ன உவமையிலேயே சொல்வதானால், எமக்குத் தேவை ஓர் ஆரோக்கியமான திருமணமே. அவ்வாறு இல்லையெனில் மணவிலக்கே எமக்குத் தேவைப்படுகிறது."62


மார்க்சியம் என்றால் என்ன? சமுதாயத்தின் அனைத்து முரண்பாடுகளையும் விலக்க மார்க்சியம் இருக்க முடியுமா? மார்க்சியம் பெண்ணியத்தையிட்டு அலட்டிக் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு ஒருபுறம். மறுபுறம் இணைப்பதாக ஒப்பாரி. இரண்டும் பாட்டாளி வர்க்கம் மீது அவதூறுகளை அடிப்படையாகக் கொண்டவை. பெண்ணியத்துடன் மார்க்சியம் திருமணம் செய்ய, மார்க்சியம் ஆணாதிக்கத் தன்மை கொண்டவையா?


மார்க்சியம் இனம், நிறம், பால், சாதி வேறுபாடற்ற ஒரு வர்க்கப் போராட்டக் கோட்பாடாகும். மார்க்சியம் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானவை அல்ல. சமுதாயத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் விடுவிக்கும் பாட்டாளி வர்க்கத் தத்துவமாகும். இது நிறம், மதம், பால், சாதி கடந்து ஆண் - பெண்களின் போராட்ட மார்க்கத்தை வழிகாட்டுவதாகும். இதை மறுத்து ஆண்களின் போராட்ட மார்க்கமாக மார்க்சியத்தைக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்கம் கொண்டதாக மறைமுகமாகக் காட்டுவதன் நோக்கம்தான் என்ன?


மார்க்சியத்தை எதிரிடையாக நிறுத்தி நிற்கும் பெண்ணியத்தின் முதலாளித்துவ நாற்றத்தை "சென்ட்" (வாசனைத் திரவியம்) இட்டு மூடி மறைப்பதாகும். வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும் பெண்ணை அதில் இருந்து பிரிக்க முனையும் நோக்கம் திட்டவட்டமாக ஏகாதிபத்திய நோக்கம் கொண்டவை. பெண் அடிமைப்பட்ட வரலாற்றில் பெண் தனித்து நின்று எப்படி தன்னை விடுவிக்க முடியும்? சமூகப் பொருளாதார அமைப்பில் சமுதாய மயமாகியுள்ள ஆணாதிக்கம் எப்படி, தனித்து நின்று சமுதாயத்தில் இருந்து ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும்? ஆணாதிக்கம் சமுதாயத்தில் இருந்து தனித்துவமானதா? பெண்கள் சமுதாயத்தில் இருந்து தனித்துவமானவர்களா? இப்படித் தான் ஆணாதிக்கம் விளக்குகின்றது. இதைத் தான் பூர்சுவா பெண்ணியமும் மீள ஒப்புவிக்கின்றது. ஆணாதிக்கம் தனிச் சொத்துரிமையின் நாற்றம் கண்ட சீழ் என்பதை மறுப்பது, தனிச் சொத்துரிமை கண்ணோட்டம் கொண்ட பெண்ணியத்தின் அரசியல் விபச்சாரமாகும். இதில் இருந்தே மார்க்சியத்திடம் இருந்து விவாகரத்தை வர்க்க அடிப்படையில் கோருவது உள்ளடக்கமாகின்றது.


இதை நியாயப்படுத்தும் வகையில் "தொழிலாளி வர்க்கத்தை அது பிளவுபடுத்துகிறது"62 என்று மார்க்சியம் கருதுவதால், நாம் பிரிந்து இருக்க வேண்டும் என்கின்றனர். அதாவது தொழிலாளி பெண்ணும், முதலாளித்துவப் பெண்ணும் ஐக்கியமாக எப்படி ஆணாதிக்கத்தை ஒழிக்க முடியும்? தெரிந்தால் சொல்லுங்கள். ஆணாதிக்கம் எப்படி தனிச் சொத்துரிமை அமைப்புக்குப் புறம்பாக உயிர் வாழ்கின்றது. தொழிலாளி வர்க்கப் போராட்டத்தைப் பூர்சுவா பெண்ணியம் வேட்டு வைக்க கனவு காண்கின்றது. அதில் இருந்து தான் இதை உபதேசிக்க முனைகின்றார்.


தொடர்ந்து தமது ப+ர்சுவா வர்க்க நலனைத் தக்க வைக்க "பெண்கள், பெண்கள் என்ற முறையில் ஒடுக்கப்படுவதற்கு மூலதனமும் தனிச் சொத்தும் மட்டுமே காரணமாக இல்லை. ஆகவே, அழிவினால் மட்டுமே பெண்களுக்கு விடுதலை கிட்டிவிடாது"62 என்று தமது பூர்சுவா வர்க்க நலனில் இருந்து முன் வைக்கும் போது, எவை ஆணாதிக்கத்தை ஒழிக்கும் என முன்வைக்க தவறி விடுகின்றனர். பெண் மூலதனம் சார்ந்த தனிச் சொத்துரிமையால் அடிமைப்படுத்தப்பட்டாள் என்ற அடிப்படைக் காரணத்தை மறப்பதில், மறுப்பதில் இருந்து, இது உருவாகின்றது.


பெண்ணின் உழைப்பு மூலதனத்துக்கு முன்னால் சமூகப் பெறுமானம் இழந்த நிகழ்ச்சியே, பெண்ணை அடிமையாக்கியது. இதை மறுத்து நிற்கும் பூர்சுவா பெண்ணியம், எப்படி பெண் அடிமையானாள் என்பதையிட்டு அலட்டிக் கொள்வதில்லை. தனிச்சொத்துரிமை அழிகின்ற போது, அரசு அழிவது போல் ஆணாதிக்கமும் அழிந்து போகும். அழிந்து போகாது எனில், எப்படி என்றல்லவா விளக்க வேண்டும்?


சோசலிசப் புரட்சி நடந்த நாடுகளில் சட்டப்படி தனிச் சொத்துரிமை அமைப்பு தகர்க்கப்பட்ட போதும், உள்ளடக்கத்தில் அங்கு இரண்டு வர்க்கத்துக்கிடையில் போராட்டம் தொடர்ச்சியாக இருப்பதால் தான், அது சோசலிசச் சமூகமாக இருந்ததே ஒழிய கம்யூனிசச் சமூகமாக இருக்கவில்லை. இதில் இருந்தே அங்கு முதலாளித்துவ மீட்சி நிகழ்ந்தது. புரட்சி முடிந்தவுடன் எல்லாம் மாறிவிட்டது அல்லது மாறிவிட வேண்டும் என்ற அராஜகவாதக் கோட்பாட்டை, பூர்சுவா பெண்ணியம் எடுத்து, அதில் இருந்து மார்க்சியம் மீது சேறடிப்பதில் அர்த்தமில்லை.
ஆண் பெண்ணின் அடிப்படையான ஆணாதிக்கப் பிளவுக்கு "..பிரிவினைக்கு முதலாளியமே காரணம் என இட்டுக்கட்டப்பட்டது"62 என்று கூறி இதை மறுக்கின்றார். ஆண் பெண் பிளவுக்குச் சுரண்டும் வர்க்கமே காரணம் என்பதை எந்தப் பூர்சுவா பெண்ணியமும் ஏற்றுக் கொள்வதில்லை. பூர்சுவா பெண்ணியம் எப்போதும் அனைத்து ஆண்கள் - பெண்கள் மீது ஜனநாயகத்தைக் கட்டமைத்துள்ளதாக உருவாக்கியுள்ள பிரமையை இது தகர்த்துவிடும் என்ற ஒரே கோணத்தில் இதை மறுக்கின்றனர். இதில் இருந்தே வர்க்கம் கடந்த பெண்ணியத்தை முன்வைப்பதும், பாட்டாளி வர்க்கத்தை எதிராக வைத்து விவாகரத்தை முன்நிறுத்துவதும் நடக்கின்றன. ஆண் - பெண்ணின் பிளவு சுரண்டும் வர்க்கத்தின் தனிச்சொத்துரிமை உள்ளடக்கமாகும். இது காலத்துக்குக் காலம் மாறிவந்த பொருளாதார வளர்ச்சியைப் பிரதிபலித்து, சுரண்டும் வர்க்கத்தின் மாறி வந்த வௌவேறு வரலாற்று வர்க்கப் பிரதிநிதிகள் பிளவைத் தீவிரமாக்கினர். ஆணாதிக்கம் இதன் ஊடாக விகாரமாகி வந்ததைத் தவிர, வேறு எதையும் ஆண் - பெண் உறவில் மனிதக் குலத்துக்குச் சுரண்டும் வர்க்கம் தந்துவிடவில்லை.


"...பெண்கள் மட்டும் வீட்டு வேலையிலும் ஆண்கள் தொழிலிலும் ஈடுபட நேர்ந்தது ஏன்? பெண்களின் மீது ஒழுங்கு முறைப்படி அமைந்த ஆண்களின் மேலாதிக்கம் என்ற ஆணாதிக்க முறைமையுடன் தொடர்புபடுத்தாமல் நாம் இதை விளக்க முடியாது"62 என்று பூர்சுவா பெண்ணியத்தின் அலட்டல் புலம்பலாகப் பிரதிபலிக்கின்றது. ஆண்களின் மேலாதிக்கம் எப்படி உருவானது? வானத்தில் இருந்து குதித்து எழுந்ததா? ஆணாதிக்கம் ஆண்களின் மேலாண்மை சார்ந்த சுயேட்சையா?


ஆணின் அடக்குமுறை என்பது தனிச் சொத்துரிமை மீதான ஆதிக்கத்தில் இருந்து உருவானது. அது உபரியைத் திரட்டியதில் இருந்து வெளிப்படுகின்றது. இந்த உபரி ஆணுக்குப் பெண்ணை விட அதிகமான சமுதாய உரிமையைக் கொடுத்தது. பெண் வீட்டுக் கடமையில் தன்னை நிறுத்தி விடவில்லை. மாறாக விவசாயம், மிருக வளர்ப்பு போன்ற பல துறைகளில் முற்றாக ஆதிக்கம் பெற்று உழைப்பைச் சமுதாயத்துக்கு வழங்கினாள். ஆனால் சமுதாயத்தில் உபரி சில துறைகளில் ஏற்பட, உபரி மனிதனை அடிமைப்படுத்த, உபரி முழுமையாக அனைத்துச் செல்வத்தையும் தனக்கு அடிமைப்படுத்தியது. பெண் உபரியை உற்பத்தி செய்யும் வகையில், தனது உற்பத்தியை உருவாக்கும் தன்மை, அவளின் வேலைப் பிரிவினை தடையாக்கியது. பெண் இதன் போக்கில் உபரி அற்ற நிலையில், உபரியைத் திரட்டியும் ஆண்களின் அடிமையானாள். இந்த அடிமைத்தனம் ஆணுக்குச் சேவை செய்வதை நிபந்தனையாக்கியது.


இன்று மூன்றாம் உலக நாடுகளின் கிராமப்புற விவசாயம், தேசிய முதலாளித்துவம் உபரியை உற்பத்தி செய்ய முடியாத வகையில், அதன் உற்பத்திப் பெறுமானம் மூலதனத்துக்கு முன் தகுதி இழக்கின்ற போது, மேற்கின் முன் அடிமையாக அடிமைப்பட்டுக் கூனிக் குறுகி வாழ்வது எப்படி சாத்தியமானதோ, அதுவே இன்று பொதுவான ஆணாதிக்க உருவாக்கமாகும்.


கூலி உழைப்பாளி இயந்திரத்தின் உறுப்பாக மாற்றப்பட்ட நிலையில், அதன் அடிமையாக வாழ எப்படி கற்றுக் கொள்கின்றானோ, அதுவே பெண்ணுக்கும் நிகழ்ந்தது. பெண் தனிப்பட்ட ஆணின் அடிமையல்ல. மாறாக ஆணாதிக்கச் சமூகத்தின் அடிமையாக அல்லவா, இருக்கின்றாள். தனிப்பட்ட பெண் இந்த ஆணாதிக்கச் சமூகத்தில் இருந்து சுதந்திரமாக இருப்பதாகப் பாசங்கு செய்யப் முடியுமே ஒழிய, விடுதலை பெற முடியாது. சமூகப் பொருளாதார அமைப்பே இதைத் தீர்க்கமாக வரையறை செய்கின்றது. இது தான் பின்னால் வேலைப் பிரிவினையை மேலும் மேலும் துல்லியமாக்கியது.


இதை மறுக்கும் வாதம் "முதலாளித்துவச் சமூக உறவுகள் முழுச் சமூகத்தையும் தழுவும்போது, பெண்கள் அதிகரித்த அளவில் சுயமாகச் சம்பாதிப்பவர்களாக மாறியிருப்பர். அதனால் குடும்பத்தில் ஆண்களுக்கு அடங்கிப் போக மறுப்பர். குடும்பமானது குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் ஒடுக்கி வருவதால், குடும்பத்துக்கு வெளியே சுதந்திரமாக வாழமுடியும் என்ற ஒரு சூழலில் குடும்பம் ஒழிந்துவிடும்"62 என்று பூர்சுவா பெண்ணியம் விளக்குகின்றது.


ஆணாதிக்கத்தைத் தனிப்பட ஆணுக்கு அடங்கிப் போகும் குடும்ப எல்லைக்குள் மட்டும், குறுக்கிக் காட்டும் குருட்டுத் தனத்தில் இது பிரதிபலிக்கின்றது. பெண்கள் வீட்டில் வாழ்ந்த போது மிருக வளர்ப்பு மற்றும் விவசாய உழைப்பில் ஈடுபட்டாள். ஆனால் சமூக அங்கீகாரம் பெற்ற உபரியைத் திரட்டும் உற்பத்தியில் பங்குபெறுவது மறுக்கப்பட்டது. ஆனால் முதலாளித்துவம் உபரியை அதிகம் திரட்ட, பெண்ணின் மலிவுவான கூலி மற்றும் தொழிலாளர் படையின் எண்ணிக்கை அடிப்படையில் பெண்ணை உழைப்பில் ஈடுபடுத்தியது. இந்த முதலாளித்துவ வளர்ச்சி மக்களின் பெரும் பகுதியின், தனிச் சொத்துரிமையைக் கைப்பற்றி குவித்து வரும் போது, ஆண் தனிச் சொத்துரிமையின் கூலியாக்கப்பட்டான். இது தனிச்சொத்துரிமை சார்ந்த குடும்ப அமைப்பைச் சிதறப் பண்ணியது.


கூலி என்பது வாழ்வதற்கே முடியாத வறுமையாகின்ற போது, பெண் உழைப்பில் ஈடுபடுவது நிபந்தனையானது. இங்கு கூலி வாழ்வதற்கு அடிப்படை உள்ளடக்கமாக உள்ளதாலும், தனிச் சொத்துரிமையைத் திரட்ட முடியாத நிலையிலும், பாரம்பரியக் குடும்ப அமைப்பு சிதைந்தது. இது சமூக மயமாகின்ற போது, மூலதனத்தின் பிரதிநிதிகள் தமது குடும்ப அமைப்புக்கும், உள்ள+ர வேட்டு வைப்பது அவர்களை மீறியது.


அதாவது முதலாளித்துவம் எப்படி பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கித் தனக்குத் தானே வேட்டு வைக்கின்றதோ, அதுவே குடும்பத்துக்கும் நிகழ்கின்றது.


இங்கு மேற்கு முதலாளித்துவக் குடும்பங்களில் பெண்ணின் உழைப்பு கூட, மூன்றாம் உலகமக்களின் மீதான அடிமைத்தனத்தில் இருந்து பெறப்படும், கொள்ளை உபரி மூலமாகவே, தன்னைச் சுதந்திரமான பூர்சுவா பெண்ணாகப் பிரகடனம் செய்கின்றாள். இது மற்ற நாட்டு உழைப்பாளர்களின் இரத்தத்தை உறிஞ்சுவதை அங்கீகரித்தே, சுதந்திரம் பற்றி பிதற்ற முடிகின்றது. ஆனால் ஆணாதிக்கம் குடும்பம் சார்ந்ததா? இல்லை, அது தனிச்சொத்துரிமை சார்ந்தது. இது குடும்பத்துக்கு வெளியிலும் ஆணாதிக்கத்தைச் சமூகத் தன்மையாக்கியுள்ளது. சுதந்திரமாக ஆணைப் போல் பெண்ணும் உழைக்கும் நாடுகளில், குடும்பம் சிதைந்த நிலையில், ஆணாதிக்கம் அற்றுவிட்டதா? இல்லையெனின் அதன் ஊற்று மூலம் என்ன? குடும்பச் சிதைவு தனிச் சொத்துரிமை சிதைவால், பரந்து பட்ட மக்களிடையேயான சிதைவில் ஏற்பட்டு வருகின்றது. ஆனால் குடும்பச் சிதைவு ஆணாதிக்கத்தை ஒழித்துவிடவில்லை. ஆணாதிக்கம் முதலாளித்துவத்தின் உள்ளடக்கமாக உள்ளது.


"காலப் போக்கில் முதலாளியம் ஆணாதிக்கத்தைச் சகித்துக் கொள்ளாது"62 என்ற பூர்சுவா பிதற்றல்கள், ஏகாதிபத்திய நாட்டில் கால் தூசுக்குச் சமமானதாக இருக்கின்றது. குடும்பத்துக்கு வெளியில் காணப்படும் கேவலமான, விகாரமான ஆணாதிக்கம், குடும்பத்துக்குள் குடும்பம் சார்ந்த பழைய ஒடுக்குமுறையில் இருப்பதில்லை. குடும்பம் சார்ந்த ஆணாதிக்கம், குடும்பத்தில் தனிச் சொத்துரிமையைச் சிதைத்து அதே தனிச் சொத்துரிமையின் கூலியானதால், அங்கு குடும்பம் சார்ந்த வன்முறை குறைந்து போனது. ஆனால் தனிச் சொத்துரிமை ஜனநாயகம் சமூக மயமாகி மூலதனம் குவிவதால், சமூகம் சார்ந்த ஆணாதிக்கம் மிக தீவிரமாக வக்கரித்து விரிவாகின்றது.


மூலதனத்தின் புனிதத்தைப் பாதுகாக்க பூர்சுவா பெண்ணியம் "மூலதனம் குடும்பத்தை அழித்துவிடும் என்ற வாதமானது, குடும்ப வாழ்க்கையை ஈர்ப்பு மிக்கதாக்கும் சமூகச் சக்திகளை அலட்சியப்படுத்துகிறது"62 என்று கூறுவதன் மூலம், மூலதனத்தின் குவிப்பை மூடி மறைப்பதன் மூலம், தனிப்பட்ட பரந்துபட்ட மக்களின் குடும்பத்தின் சிறு மூலதனம் அழிக்கப்படுவதை, மூடிமறைக்க பிரயத்தனம் செய்கின்றார். மூலதனக் குவிப்பு எங்கிருந்து பறித்தெடுத்து குவிக்கப்படுகின்றதோ, அங்கே தனிச் சொத்துரிமை சிதைகின்றது. இதனால் தனிச் சொத்துரிமை சார்ந்து நீடித்த குடும்பங்கள், பாரம்பரியம் மிக்க குடும்பத் தன்மையை, பொருளாதார வடிவில் சிதைந்துத் விடுகின்றது. இதை யாரும் அலட்சியப்படுத்தவில்லை, மாறாக மூலதனம் குடும்பத்தின் தனிச் சொத்துரிமையை அலட்சியப்படுத்தி, குடும்பத்தைத் தனது மூலதன வளர்ச்சியில் சிதைக்கின்றது.


முதலாளித்துவம் எப்படி பாட்டாளி வர்க்கத்தை உருவாக்கி தனக்கே வேட்டு வைக்க முயல்கின்றதோ, அதுவே மூலதனத்தின் பின் குடும்பத்துக்கும் நிகழ்கின்றது. ஆனால் மக்கள் புதிய இணைக் குடும்பத்தை மூலதனத்துக்கு வெளியில் தேர்ந்து, சேர்ந்து வாழ்வது அதிகரிக்கின்றது. இதுவும் தனிச் சொத்துரிமையின் சமூகப் போக்கில் கறைபடிந்த போதும், முன்னேற்றகரமான புதிய குடும்பங்களாக உருவாகின்றது. இது தனிச் சொத்துரிமை வாரிசு கண்ணோட்டத்தை இட்டு அலட்டிக் கொள்வதில்லை? இதனால் பெண் ஆணுக்கு வாரிசு பிள்ளையைப் பெத்துப் போடும் இயந்திரமாக இருப்பதில்லை. உழைப்பு சமூக மயமாகி கூலியாவதால், வீட்டுக் கடமையும் சமூகமயமாகி மூலதனத்துக்கு அடிமையாகின்றது. உணவு தயாரித்தல் மற்றும் பல வீட்டுக் கடமைகள், மூலதனத்தைத் திரட்டும் சமூக மூலதனமாவதால், அதைப் பெண்ணிடம் இருந்து மூலதனம் அபகரித்து விடுவதால், பெண்ணின் இரட்டைச் சுமை குறைந்து வருகின்றது.

 

ஒட்டு மொத்தத்தில் மக்கள் ஆணாதிக்க மூலதனத்தின் கூலி இயந்திரப் பாகமாகச் சார்ந்து நிற்கும் வகையில் சமூகமயமாகின்றது. இங்கும் தனிச்சொத்துரிமை குடும்பம் சிதைகின்றது. ஆகவே மூலதனக் குவிப்பு குடும்பத்தைச் சிதைக்கின்றது. இது புதிய குடும்பத்தை உருவாக்குகின்றது. அதே நேரம் மூலதனக் குவிப்பு ஆணாதிக்கத்தை நுகர்வுப் பண்பாட்டுத் தளத்தில் விரிவாக்குகின்றது. பெண்ணைச் சுதந்திரமான விபச்சாரியாக மாற்றுகின்றது.


பூர்சுவா பெண்ணியம் மார்க்சியம் பற்றி விளக்குவதைப் பார்ப்போம். "பெண்ணியத்தின் மீது மார்க்சியம் ஆதிக்கம் செய்து வருவதற்கு, மார்க்சிய ஆய்வுத்திறனும், கட்சிக்குள் ஆண்களின் ஆதிக்கமும் காரணமாய் இருக்கின்றன."62
இதைவிட வெட்கக் கேடான புலம்பல் வேறு ஏதுவும் இருக்க முடியாது. மார்க்சியம் ஆண்களின் சொத்துரிமையல்ல. அது சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட அனைத்துப் பிரிவு மக்களின் போராடும் நடைமுறைத் தத்துவமாகும். அதிலும் சுரண்டும் - ஒடுக்கும் ஆண்கள் - பெண்கள் யாரும் மார்க்சியத்தை நெருங்க முடியாது. மார்க்சியம் சமுதாயத்தில் ஒவ்வொரு சமூக இழிவுகளையும் களைகின்ற பொதுக் கோட்பாடாகும். மார்க்சியம் இதைத் தவிர்த்த எதையும் தனித்துவமாகக் கொண்டிருப்பதில்லை, விளக்குவதில்லை.


மார்க்சியத்தை வெறுக்கின்ற பூர்சுவா பிரிவுகள் தொழிற் சங்கத்தைப் பொருளாதாரக் கோரிக்கைக்குள்ளாக்கி, மார்க்சியத்திடம் சொந்த ஆணாதிக்கச் சுரண்டல் வக்கிரத்தில் விவாகரத்தைக் கோருகின்றது. இது போல் சாதி, இனம், மதம், பால் என்று அனைவரும் இதை முன்வைக்கின்றனர். மார்க்சியம் இயற்கை வாழ்வை மெய்யாகக் கண்டறியவும், அதை அடிப்படையாகக் கொண்டு போராடி இயற்கையை மீட்கவும் உள்ள போராடும் ஒரே தத்துவம் என்பதால், பூர்சுவா கோட்பாட்டாளர்கள் பலவிதமாக மார்க்சியத்தைக் கொச்சைப்படுத்துகின்றனர்.


அடுத்து மார்க்சியத்தின் ஆய்வுத் திறன் காரணமாக மார்க்சியத்துடன் பெண்ணியம் இணைய முடியாது என்று திறமை மீது குற்றம் சாட்டி, அதனால் தனித்துவமாகப் போராட வேண்டும் என்கின்றனர். ஆய்வுத் திறனை அறிவியல் பூர்வமாக மறுக்க முடியாத நிலையில், பூர்சுவா அற்பத்தனத்தை நியாயப்படுத்த ஆய்வற்ற கண்மூடித்தனத்தில் காலத்தை ஓட்ட அழைப்பதன் மூலம், உண்மையில் சுரண்டல் அமைப்பையும் அதைச் சார்ந்து ஒட்டுண்ணியாக உள்ள ஆணாதிக்கச் சமூகத்தையும் பாதுகாக்க சபதம் ஏற்கின்றனர். ஆய்வற்ற புரட்சி பேச, தன்னியல்பான கும்பல் செயல்களைப் புரட்சியாகக் காட்டுவது, இதன் அரசியல் உள்ளடக்கமாகும். இது இந்த ஆணாதிக்கச் சமூக அமைப்பை சிதைவின்றி பாதுகாக்கும்.


கட்சியில் ஆண்களின் ஆதிக்கம் காரணம் என்பது, வர்க்கத்தின் உறுதியான வர்க்க தலைமையைக் குறித்த சேறடிப்பதாகும். பெண்கள் கூட மார்க்சியத்தின் தலைமை வழிகாட்டியாக இருப்பதை மார்க்சியம் என்றும் மறுத்ததில்லை. யாரும் ஆணா? பெண்ணா? சாதியா? இனமா? மதமா? என்று அடையாளம் கண்டு மறுக்க முடியாது. கட்சி தனது வர்க்கக் கடமையை பூர்த்தி செய்ய தனக்கான தகுதியுள்ள முன்னணி தலைமையை உருவாக்குகின்ற போது, இங்கு ஆண் - பெண் உள்ளிட்ட எந்த வேறுபாட்டையும் காட்டுவதில்லை. சமூகத்தில் இயல்பான பெண்ணின் பின்தங்கிய நிலை, பெண்களின் எண்ணிக்கையைக் குறைவானதாக ஆக்குகின்றதே ஒழிய, இதை மார்க்சியம் வில்லங்கமாக வேண்டுமென்றே உருவாக்குவதில்லை. மார்க்சியம் மேலும் மேலும் பின்தங்கிய பிரிவுகளைக் கல்வியூடாக, முன்னிலைக்குக் கொண்டுவர போராடுவதை ஓர் அரசியல் பணியாகவே கொள்கின்றது. இதை எந்தப் பூர்சுவா பெண்ணியமும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் அவர்கள் மார்க்சியத்தை வெறுப்பது யதார்த்த நடைமுறையாக, கோட்பாடாக உள்ளது.


இதில் இருந்து "பெண்கள் தங்களது நிலைகுறித்து ஒரு சுதந்திரமான விளக்கத்தை வளர்வதைக் கைவிட்டுவிட்டு இடதுசாரி விளக்கத்தை ஏற்றுக் கொள்ளும்படி பெண்களைத் தூண்டுகிறார்கள்"62 என்று தமது பாட்டாளி வர்க்க எதிர்ப்பைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். பெண்கள் சுதந்திரமான சிந்தனையைச் சமூகத்துக்கு வெளியில் எப்படி? பூர்சுவா எல்லையில் பெறமுடியும். மதங்கள் பெண்ணின் அடிமை நிலையையும், முதலாளித்துவம் சுதந்திரமான சந்தையில் பெண்ணின் விபச்சாரத்தைப் பற்றியெல்லாம் முன்வைக்கும் பல்வேறுபட்ட கருத்துகளுக்கு, வெளியில் சுயேட்சையாக எப்படி பெண்கள் சுதந்திரமான முடிவை வந்தடைய முடியும்? ஆணாதிக்க ஒடுக்குமுறையை நடைமுறை ரீதியாக உணர்பவர்கள் கூட, இதற்குள் அல்லவா முடிவை வந்தடைய முடியும். ஆணாதிக்கம் பற்றிய வர்க்க ஆய்வுத் திறன் இன்றி, இயற்கையான பெண்ணின் வாழ்வை வந்தடைய முடியாது.


எந்தப் பெண்ணியமும், சிந்தனையும் அவை சுதந்திரமாக இருப்பதாகக் கற்பனை செய்யினும், ஒரு வர்க்கக் கோட்பாட்டைச் சார்ந்து தான் தன்னை வெளிப்படுத்த முடியும். இது போன்று எண்ணற்ற மார்க்சிய எதிர்ப்பை இந்த நூல் வெளிப்படுத்தியுள்ளது.


***********


அடுத்து ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, போராட்டக் கடமையைப் பெண்களிடம் கைவிட்டுச் செல்லும் பிதற்றலைப் பார்ப்போம். " .. ஆணாதிக்க முறைமையின் குறிப்பான போராட்டங்களைப் பெண்களே தலைமை தாங்கி நடத்தவேண்டும்."63 என்கின்றனர். பெண்களை அடிமைப்படுத்தியது ஆண்களா? அல்லது ஆணாதிக்கமா? இந்தியாவின் சாதிக் கொடுமைகளையும், மத அடக்குமுறைகளையும் ஒழிக்க யாரை எதிர்த்துப் போராட வேண்டும் பார்ப்பானையா? அல்லது பார்ப்பனியத் தத்துவத்தையா? ஒரு சமூகப் போக்கினை மாற்ற தனி மனிதர்கள், ஒரு பிரிவு மக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அல்லது ஒரு தனி மனிதன், ஒரு பிரிவு மக்கள் கூட்டம் போராடுவதன் மூலம் மாற்றிவிட முடியும் என்ற கோட்பாடு முன்வைக்கப்படுகின்றது. அதாவது மனிதர்களை மாற்றுவது என்ற அரசியலை முன்வைப்பது கருத்துமுதல் வாதமாகும். தனிமனிதர்கள் மாறுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. இது போல் தனி மனிதன் போராடுவதால் சமூகம் மாறிவிடுவதில்லை. தனி மனிதர்கள் சமூக இயக்கத்தில் பங்களிப்பு வழங்குபவர்களாகவே இருக்கின்றனர்.


சமூக இயக்கமும் அதன் பிரதிபலிப்பும் பொருளாதார அடிக்கட்டுமானம் மீது உருவாகின்றது. ஆணாதிக்கத்தை எடுப்பின் அது தனிச் சொத்துரிமை அமைப்பின் ஒட்டுண்ணியாகும். இதைப் பெண்கள் வர்க்கம் கடந்து போராடுவதன் மூலம் ஒழித்துவிடமுடியாது. அதுபோல் பெண்கள் தனித்து, வர்க்கத் தன்மை கொண்டு போராடுவதாலும் ஒழித்துவிட முடியாது. சமுதாயம் என்பது பெண்களை மட்டும் கொண்டவையல்ல. அது போல் ஆணாதிக்கம் பொருளாதார அமைப்புக்கு வெளியில் சுயேட்சையானதும் அல்ல. ஆணாதிக்கம் ஆண்கள் மற்றும் சமூகப் பொருளாதார விளைவுகளில் இருந்து தனித்துவமானவையோ, சுயேட்சையானவையோ அல்ல. சுயேட்சையற்ற ஆணாதிக்க இயக்கம் எதனுடன் பின்னிப் பிணைந்துள்ளதோ, அவற்றுடன் இணைத்தே, ஆணாதிக்கத்தை வேர் அறுக்கமுடியும். அடிமைப்படுத்திய வடிவங்களில் இருந்து தனித்துவமாக, அதற்குப் புறம்பாகக் கோரும் மாற்றங்கள், உண்மையில் ஆணாதிக்கத்துக்கு நிகரான வகையில், பெண் ஆணாதிக்கத் தன்மையை அடைவதாகும்.


ஆணாதிக்கத்துக்கு எதிரான குறிப்பான போராட்டத்தைப் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் முன்னெடுக்க முடியும். இதைப் பெண்களுக்குக் குத்தகைக்கு வழங்குவது என்பது, வழங்குபவர்களும், வழங்க விளக்குபவர்களும், வழங்க கோருபவர்களும் தமது ஆணாதிக்க வடிவத்தைப் பாதுகாத்துக் கொள்ளவே செய்கின்றனர். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட முடியும். அது போல் ஆண்கள் மட்டும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்துவதில்லை பெண்களும் வெளிப்படுத்துகின்றனர். எனவே போராட்டம் ஆணாதிக்கத்தை எதிர்த்து, பால்வேறுபாடு கடந்து போராட வேண்டும்.


பெண்கள் தனித்துவமாகத் தம் மீதான ஒடுக்குமுறைகளை விவாதிப்பது, போராடுவது எல்லாம், பாட்டாளி வர்க்கத் தலைமையில் (இங்கு பாட்டாளி வர்க்கத் தலைமை என்பது ஆண் - பெண் வேற்றுமையைக் கடந்தது.) போராட்டத்தை விரிவாக்கி, பரந்த தளத்துக்கு எடுத்துச் செல்வது வெகுஜன நடைமுறை அரசியல் வழிகாட்டலுக்காகவே ஒழிய, ஆணில் இருந்தும் சமூகப் பொருளாதார விளைவுகளில் இருந்தும் விலகியிருப்பதற்க்கல்ல.


இடம் இன்மை மற்றும் முன் கூட்டியே பல இடங்களில் இவைகளை விவாதித்திருப்பதால், முக்கியமானதை மட்டும் இவ்விவாதத்தில் எடுத்து அம்பலப்படுத்த முனைந்தேன்.